|
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஊர்களாகிய நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு
ஆகிய நகரங்களில் மே மாதத்தின் இறுதி முதல் ஜூன் மாதம் முடிய விடுதிகளில் இடம்
கிடைக்காது. உணவகங்கள் பரபரப்பாகச் செயல்படும். நுகர்வுப் பொருள்களின் விற்பனை
அதிகரிக்கும். அத்தோடு போக்குவரத்து நெரிசலும் மிகுதியாக இருக்கும். இவற்றுக்கு
என்ன காரணம்? பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதுதான். நாமக்கல் மாவட்டம்
லாரி, லாரிப் பட்டறைகள், ஆழ்துளைக் கிணறு தோண்டும் ரிக் சர்வீஸ், விசைத்தறி,
கோழிப்பண்ணை ஆகிய தொழில்களில் முன்னணி இடம்பெற்றிருப்பது பலரும் அறிந்ததுதான்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கல்வித் தொழிலிலும் இம்மாவட்டம் முன்னணி இடம்
வகிக்கிறது.

தனியார் பள்ளிகளின் வானளாவிய கட்டடங்கள் எண்திசைகளிலும் உயர்ந்தோங்கி நிற்கும்
காட்சிகள் இங்கு சாதாரணம். அளவற்ற தனியார் பள்ளிகள் இருக்கின்றன. தொடர்ந்து
உருவாகிக்கொண்டே உள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று எனக் கிளைத்து அவை பெருமரமாக வேர்
பரப்பி நிற்கின்றன. தேர்வு முடிவுகளில் மாநில அளவில் முதலிடம், இரண்டாமிடம்
போன்றவற்றை இம்மாவட்டப் பள்ளிகளே பெரும்பாலும் பெறுகின்றன. பிற மாவட்டப் பள்ளிகள்
ஏதாவது ஓரிடம் பெற்றுவிட்டால் அது வியப்புக்குரிய செய்தியாகிவிடுகிறது. மருத்துவம்,
பொறியியல் படிப்புகளில் கணிசமான நல்ல இடங்களை இம்மாவட்டப் பள்ளி மாணவர்கள்
பெறுகின்றனர். அதனால் இங்குள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கத் தமிழகம் முழுவதும்
இருந்து பெற்றோர்கள் வந்து குழுமுகின்றனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு முன்தினம் முதல் இந்த வருகை
பெருமளவு நிகழ்கிறது. தேர்வு முடிவு வெளியான அந்தக் கணத்திலேயே பதினொன்றாம்
வகுப்புக்கான மாணவர் சேர்க்கை எல்லாப் பள்ளிகளிலும் தொடங்கிவிடுகிறது. மாணவர்களின்
மதிப்பெண் அடிப்படையில் நன்கொடைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான
பள்ளிகளில் 480க்கு மேல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லாமலே
இடம் கிடைக்கும். 450க்கு மேல் மதிப்பெண் என்றால் நன்கொடை இவ்வளவு, 425க்கு மேல்
என்றால் இவ்வளவு என நிர்ணயம் இருக்கும். மதிப்பெண் குறையக் குறைய நன்கொடைக்
கட்டணத்தின் அளவு அதிகரித்துக்கொண்டேயிருக்கும். ஆனால் பெற்றோர்கள் எவ்வளவு பணம்
கொடுத்தும் இடம் வாங்கிவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு வரையிலும் தங்கள் ஊரிலேயே படிக்கவைக்கும் பெற்றோர் பதினொன்று,
பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு நாமக்கல்லை நாடி வருகிறார்கள். தங்கள் ஊரிலிருக்கும்
தனியார் அல்லது அரசுப் பள்ளியில் படித்து 450க்கு மேல் மதிப்பெண் வாங்கும்
மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அதே தனியார் அல்லது அரசுப் பள்ளியில்
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பும் படித்து நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்று
ஏன் தோன்றுவதில்லை? மதிப்பெண்வாங்கி மாணவர்களைத் தனியார் பள்ளிகளுக்குத்
தாரைவார்த்துவிட்டுப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவின்போது அரசுப் பள்ளிகள்
தடுமாறும் நிலைமை நாமக்கல் மாவட்டத்திலேயே உண்டு. தனியார் பள்ளிகள் சிறந்தவை என்னும்
கருத்துக்கு அவ்வளவு வலு.
நாமக்கல் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் தம் பிள்ளைகள் எப்படியும் நல்ல மதிப்பெண்
வாங்கிவிடுவார்கள் என்னும் கருத்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கிறது. சென்னை
தொடங்கிக் குமரிவரைக்கும் நாமக்கல் பள்ளிகளின் மதிப்பெண் புகழ் கோலோச்சுகிறது.
ஒரு பள்ளி அதிகபட்சம் இத்தனை பேரைத்தான் சேர்த்துக்கொள்ளலாம் என்னும் வரையறை
எதுவும் இல்லை. ஆகவே மதிப்பெண் புகழ் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்
பதினொன்றாம் வகுப்பில் சேர்கிறார்கள். இரண்டு ஆண்டுப் படிப்புக்கு லட்சக்கணக்கில்
பணம் செலவாகிறது. பணத்திற்குக் கவலைப்படாத பணக்காரப் பெற்றோர் கணிசமாக உண்டு. ஆனால்
நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் இந்த நாமக்கல் மோகத்தில் சிக்கி மிகவும்
துயரப்படுகிறார்கள். நாமக்கல் பள்ளிகளின் வியாபாரச் சூத்திரம் பெற்றோர்களுக்குப்
புரிவதில்லை. புரிந்தாலும் மனம் ஏற்றுக்கொள்வதில்லை. அந்தச் சூத்திரம் மிகவும்
எளிதானது.
பத்தாம் வகுப்பில் 450க்கு மேல் வாங்கிய மாணவர்களை மட்டும் தனிவகுப்பாகப்
பிரித்துவிடுவார்கள். சில பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன்
மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு ஒன்று நடத்துகிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படும்
மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் முன்னரே ஏப்ரல்
மாதத்திலேயே பதினொன்றாம் வகுப்பு நடைபெறத் தொடங்கிவிடுகிறது. ஒரு பள்ளியில் ஆயிரம்
மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேர்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை
ஐம்பது ஐம்பதாகப் பிரித்து வகுப்புகளை உருவாக்க வேண்டுமானால் என்ன செய்வது? எல்லா
வகையான மாணவர்களும் கலந்திருக்கும்படி வகுப்புப் பிரிப்பு செய்வது பழைய கால முறை.
இன்றைய கல்வி வணிகத்தில் புதிய முறை கடைபிடிக்கப்படுகிறது. இது நவீன வருணாசிரம முறை.
மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் இடம் வாங்குவார்கள் என்று கருதப்படும், அதாவது
1200க்கு 1180க்கு மேல் மதிப்பெண் பெற்றுவிடுவார்கள் என்னும் நம்பிக்கை தரும்,
மாணவர்கள் தனி வகுப்பு. அந்த வகுப்புக்குப் பெயர் ஜிஷீஜீஜீமீக்ஷீs நீறீணீss. அதற்கு
அடுத்த நிலையில் உள்ளவர்கள் suஜீமீக்ஷீ தீக்ஷீவீறீறீவீணீஸீt நீறீணீss. அதற்கு
அடுத்தது தீக்ஷீவீறீறீவீணீஸீt நீறீணீss. இவர்களுக்குப் பின் உள்ள அனைவரும்
ஷீக்ஷீபீவீஸீணீக்ஷீஹ் நீறீணீss. பெருவாரியான மாணவர்கள் இருப்பது கடைசித் தரம் என்று
சொல்லப்படுகிற ஷீக்ஷீபீவீஸீணீக்ஷீஹ் நீறீணீssஇல் தான். வருணாசிரம பேதம், வர்க்க
பேதம் எல்லாம் துலக்கமாகத் தெரியும் இடம் இது.
சாதாரண வகுப்புகளைப் பற்றிப் பள்ளி நிர்வாகம் அலட்டிக்கொள்வது கிடையாது.
அம்மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்துவிட்டால் போதும். ஆனால் tஷீஜீஜீமீக்ஷீ,
suஜீமீக்ஷீ தீக்ஷீவீறீறீவீணீஸீt, தீக்ஷீவீறீறீவீணீஸீt ஆகிய வகுப்புகளில் உள்ள
மாணவர்கள் மிகவும் முக்கியம். தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறார்களோ இல்லையோ
பள்ளியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் அவர்கள்தான். மாநில அளவிலும் மாவட்ட
அளவிலும் இடங்கள் பெற்றுக் கொடுத்துப் பள்ளியின் பெயரை ஊடகங்களில்
பிரபலப்படுத்துபவர்கள் அவர்கள். 1150க்கு மேல் இத்தனை பேர், 1100க்கு மேல் இத்தனை
பேர் என்று கணக்குக் காட்ட, நிழற்படத்துடன் விளம்பரம் கொடுக்க உதவுபவர்கள் அவர்கள்.
இப்படிப்பட்ட கணக்குகளில் அந்தப் பள்ளியில் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் எத்தனை
பேர் என்னும் விவரம் இருக்காது. அதைக் கொடுக்க நிர்வாகம் மறந்துவிடும்.
பெற்றோர்களும் அதைப் பற்றி யோசிப்பதில்லை.
ஆகப் பள்ளியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்ற இந்த மதிப்பெண்வாங்கிகளின்
வகுப்புகளுக்குத்தான் பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல் முழுவதுமாக அர்ப்பணம்
செய்யப்படுகிறது. நம் கல்வி முறையில் கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் இரண்டு
முறைகள் உள்ளன. இவற்றில் மதிப்பெண் வாங்குவதற்கு உதவுவது பயிற்றுவித்தல்தான்.
பயிற்றுவித்தல் என்பது மாணவர்களை மதிப்பெண் வாங்குவதற்கு ஏற்ற வகையில் தினந்தோறும்
தேர்வு எழுதவைத்துப் பயிற்சி அளித்தல். பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம்
வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்குக் கோடை விடுமுறை என்பதே கிடையாது.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண் புகழ் பள்ளி ஒன்றில் நுழைவுத்
தேர்வு எழுதிப் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்துவிடும் மாணவர்களுக்குக் கோடை
விடுமுறை என்பது எட்டாம் வகுப்போடு சரி. தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குக் கோடை
விடுமுறையே இல்லை. எல்லாச் சனிக்கிழமைகளிலும் பள்ளி உண்டு. சிலசமயம் ஞாயிறுகளிலும்
வகுப்புகள் உண்டு.
இப்படி ஆண்டுக்கணக்கில் விடுமுறையே இல்லாமல் தொடர்ந்து பள்ளி, பாடம், தேர்வு
என்றிருக்கும் மாணவர்களின் மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
கோடை விடுமுறை தொடக்கத்திற்குப் பொதுவான நாள் ஒன்றை அறிவித்து அந்த நாளுக்குப்
பின் எந்தப் பள்ளியும் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் கோடை விடுமுறைக்
காலத்தில் பள்ளி வாகனங்கள் எதுவும் ஓடக் கூடாது என்றும் குறிப்பிட்ட நாளில்தான்
எல்லாப் பள்ளிகளும் திறக்க வேண்டும் என்றும் ஒரு சமச்சீர் முறையை அரசு ஏன்
நடைமுறைப்படுத்தக் கூடாது? கல்விமுறையில் மட்டுமல்ல பள்ளி நடைமுறைகளிலும் சமச்சீர்
தேவை.
இந்த மதிப்பெண் புகழ் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் அரையாண்டுத் தேர்வு
முடிந்தவுடன் பத்தாம் வகுப்புப் பாடத்தைத் தொடங்கிவிடுவார்கள். பதினொன்றாம்
வகுப்பு மாணவர்களுக்குப் பன்னிரண்டாம் வகுப்புப் பாடமும் அப்படியே. கோடை விடுமுறை
மாதங்களாகிய ஏப்ரல், மே மாதங்களிலும் வகுப்புகள் தொடர்ந்து பாடப்பகுதிகள் நடத்தி
முடிக்கப்பட்டுவிடும். பதினொன்றாம் வகுப்பு மாணவனுக்கு அவன் பன்னிரண்டாம் வகுப்பில்
காலடி எடுத்துவைக்கும் முன்பே அந்த வகுப்புக்கான பாடங்கள் அனைத்தும்
முடிந்துவிடுகின்றன. ஓராண்டு முழுக்க அந்த மாணவர்களுக்கு என்ன வேலை? விடைகளை
மனப்பாடம் செய்வதும் தினசரி தேர்வு எழுதுவதும்தான் வேலை. விடைத்தாள்களைத் திருத்திக்
கொடுத்து மதிப்பெண்ணை முழுமையாகப் பெற இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று
ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருப்பதுதான் ஆசிரியர்களின் வேலை.
இந்தப் பயிற்றுவித்தல் முறையில் மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் வார்த்தை
வார்த்தையாக, எழுத்து எழுத்தாக விழுங்கி மனப்பாடம் செய்துவிடுகிறார்கள். தேர்வு
எழுதுவது என்பது அவர்களுக்குப் பழகிப்போன விஷயமாகிவிடுகிறது. அந்த மாணவர்களைப்
பொறுத்தவரை ஒரு பாடத்தில் 99 மதிப்பெண் வாங்கினால் அதற்காகச் சந்தோஷப்படக் கூடாது.
ஒரு மதிப்பெண் எப்படிக் குறைந்தது என்றுதான் யோசிக்க வேண்டும். அதற்குப்
பழக்கப்படுத்துவதுதான் இந்தப் பயிற்றுவித்தல் முறை. மதிப்பெண் வாங்குவதில் திறன்
பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை முந்தைய
வகுப்பிலேயே நடத்தி முடித்துவிட்டு, ஓராண்டு முழுக்கத் தேர்வு எழுதும் பயிற்சி
பெறும் இந்தப் பள்ளி மாணவர்களோடு அதே பள்ளியில் படிக்கும் சாதாரண மாணவர்களே
போட்டியிட முடியாதபோது பிற மாவட்டத் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி மாணவர்கள்
எப்படிப் போட்டியிட முடியும்? பள்ளிக் கல்விக்கு அரசு ஏராளமாகச் செலவிட்டபோதும்
அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த tஷீஜீஜீமீக்ஷீ வகையறாக்களோடு போட்டியிட
முடியாமைக்குக் காரணம் அந்தப் பள்ளிகள் கடைபிடிக்கும் பயிற்றுவித்தல் முறைதான். உயர்
வகுப்புக்கு உரிய பாடங்களை முந்தைய வகுப்பிலேயே கற்பித்தலைத் தடுக்கத் தேவையான
நடவடிக்கை எதுவும் இல்லை.
சரி, இந்த மதிப்பெண் புகழ் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றால் போதும் என்றிருக்கும்
சாதாரணமாகிய அந்தப் பெரும்பான்மை மாணவர்கள் எதற்கு? அவர்களும் பள்ளியின்
எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவர்களே. அல்ல, உண்மையில் அவர்கள்தான் பள்ளியின்
எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். பள்ளிக்குப் பணத்தைக் கொட்டிக்
கொடுப்பவர்கள் அவர்கள்தான். மதிப்பெண்வாங்கி மாணவர்களின் புகழால் பள்ளியைப் பற்றித்
தெரிந்துகொள்ளும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்தப் பள்ளியில்தான் சேர்த்தாக
வேண்டும் என்று பிடிவாதம் கொள்கிறார்கள். பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாகப்
பெற்றிருந்தாலும் அந்தப் பள்ளிகளில் எவ்வளவு பணம் கொடுத்தேனும் சேர்த்துவிட்டால்
போதும். தம் பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் 1100க்கு மேல் மதிப்பெண்
வாங்கிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களின்
பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பேரம்பேசி அதிகத் தொகையைக் கறக்க முடியும். பெறும்
நன்கொடை எதற்கும் ரசீது கிடையாது. மாணவர் சேர்க்கை தொடர்பாகப் பெற்றோருக்குக்
கிடைக்கும் ஆவணம், தொகை எதுவும் குறிப்பிடப்படாத ஒற்றைத் துண்டுச்சீட்டுத்தான்.
பத்தாம் வகுப்பில் முந்நூறு மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை
லட்சம்வரை நன்கொடை கொடுத்து மதிப்பெண் புகழ் பள்ளிகளில் சேர்த்துவிட்டுப்
பெற்றோர் பெருமூச்சுவிடுகிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் தம் பிள்ளை நல்ல
மதிப்பெண் பெற்று அண்ணாப் பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கிவிடும் என்னும் நம்பிக்கை
வந்துவிடுகிறது. பணம் உள்ள கனவான்களுக்குத் தம் பிள்ளை இப்படிப் புகழ்பெற்ற
பள்ளியில் படிப்பதும் படிப்புக்காக லட்சக்கணக்கில் செலவுசெய்வதும் கௌரவம் சார்ந்த
விஷயம். ஆனால் நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு இது பெரும்சுமை. தம் பிள்ளைகளின்
படிப்புத் திறன், மதிப்பெண் பெறும் ஆற்றல் ஆகியவற்றை மதிப்பிடாமல் பள்ளியின் மீது
பெரும் நம்பிக்கைவைத்துப் பள்ளிக் கல்விக்குத் தம் தகுதியை மீறி மிகுதியாகச் செலவு
செய்கிறார்கள். ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துத் தம் பிள்ளைகள் வெளிவரும்போது
மதிப்பெண்ணைப் பார்த்துக் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள். ஏற்கனவே பத்தாம்
வகுப்பு வரை படித்த அதே பள்ளியில் படித்திருந்தாலே இந்த மதிப்பெண் வாங்கியிருக்க
முடியும் என்பதும் அனா வசியமாக லட்சக்கணக்கில் பணத்தை வீணடித்துவிட்டது மடமை
என்பதும் புரிகிறது. ஆனால் பள்ளிகளுக்கு மட்டும் பாதிப்பில்லை. அடுத்த மாணவர்களின்
பெற்றோர் பணப்பையுடனும் அலைபாயும் மனத்துடனும் வாசலில் நிற்கத்
தொடங்கிவிடுகிறார்கள்.
கல்வித் தொழில் இப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் வெற்றி நடை
போட்டுக்கொண்டிருக்கிறது. |