Google   www kalachuvadu.com

கட்டுரை
லெவி ஸ்ட்றோஸின் வரலாற்றுப் பின்புலம்
சமூக அறிவியலும் சமுதாயமும்
வி. சுஜாதா

டிசம்பர் 2008 காலச்சுவடு இதழில் வெளிவந்த லெவி ஸ்ட்றோஸ் பற்றிய கட்டுரை அவரது நூற்றாண்டைக் குறிப்பதாகவும் நயமானதாகவும் இருந்தது. என்றாலும் சிந்தனையாளர்களைத் தனிப்பட்ட ஒரு மேதாவியைப் போலச் சித்தரிக்காமல் அவரது கால, தேச, வரலாற்றுச் செய்திகளுடன் விமர்சனக் கண்ணோட்டத்தில் எழுதுவது ஆரோக்கியமானதாக இருக்கும். மானுடவியல், சமூகவியல், தத்துவயியல் போன்ற துறைகளுக்கு (disciplines) வரலாற்றுப் பின்னணி உள்ளது; இது சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களைப் பெரிதும் வரையறுக்கிறது. எனவே, அவர்களது கருத்துகளை விவரிக்கும்பொழுது அவர்தம் துறையின் சமூகப் பின்னணி, அவர்தம் தேடல்களின் நோக்கம் அத்தேடல்களுக்கு அவர்கள் தரும் விளக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்பலாம்.

லெவி ஸ்ட்றோஸ் கட்டுரையைச் சாக்காக வைத்துக்கொண்டு சமூக அறிவியல்களுக்கும் சமுதாயத்திற்குமுள்ள தொடர்பு பற்றிச் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.

லெவி ஸ்ட்றோஸ், மானுடவியல், பழங்குடியினர் - தொடர்பு என்ன?

மானுடவியல் என்னும் துறை ஐரோப்பியாவின் காலனிய ஆதிக்கத்தை முழுமைப்படுத்த எழுந்ததாகும். மானுடவியலின் வரலாற்றைத் தெரிந்தவர்கள் யாவரும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் பசிபிக் தீவுகளில் வசித்துவந்த பழங்குடியினரைக் கொன்று குவித்து, அவரது நிலப்பகுதிகளை அபகரித்தது காலனியத்தின் ஒரு பக்கமென்றால், அழிவின் வாயிலில் நிற்கும் அவர்களின் கலைக் குறியீடுகளைப் பதிவுசெய்ய விழைந்த மானுடவியல் அதன் மறுபக்கமாகும். தம்மையும் தமது சமுதாயத்தையும் ஆராய சமூகவியலையும் பிற்பட்ட சமுதாயங்களைத் தெரிந்துகொள்ள மானுடவியலையும் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தினர். தனது தொடக்க காலச் சுவடுகளிலிருந்து மாற முயன்றாலும் இன்றளவும் மேலை நாடுகளில் மானுடவியலும் சமூகவியலும் தனித்தனித் துறைகளாகவே உள்ளன. தவிர, பழங்குடியினர் மானுடவியலாளர்களுக்குக் கருத்துப் பொருளானதேன் என்பது கேள்வியாகவே உள்ளது.

மற்ற மானுடவியலாளர்களைப் போல லெவி ஸ்ட்றோஸ் பழங்குடிகளை இழிவாகப் பார்க்கவில்லை தான்; பழங்குடிகளின் சமூக, கலை அறிவின் சிறப்பை அவர் எடுத்துக்காட்டினார் என்பதும் உண்மைதான். எனினும் அவரது அமைப்பியல்வாதம் பழங்குடிகள் பற்றிய ஐரோப்பிய மையச் சிந்தனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதல்ல. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1. குழுக்களாக அமைந்த பழங்குடியினரின் கலாச்சாரத்திற்கும் நவீனமயமான தமது கலாச் சாரத்திற்குமுள்ள வேறுபாட்டை அலசிய ஐரோப்பிய மானுடவியல், பல நூற்றாண்டுப் பழமையுள்ள சீன அறிவியலையும் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய மருத்துவத்தையும் எங்கு நிறுத்தும் ‘விலங்கு’ மனதிலா, ‘நவீன அறிவியல்’ மனதிலா? உலகின் எல்லாச் சிந்தனை முறைகளையும் இவ்விரண்டு பாகுபாட்டிற்குள் (dichotomy) அடக்க முயன்றது மானுடவியலின் மிகப் பெரிய குறைபாடாகும். இரு நூறு ஆண்டுகளாகச் சமூக அறிவியல்களில் இது போல உற்பத்திசெய்யப்பட்ட பாகுபாடுகள் பல. கலை-அறிவியல், புராணச் சிந்தனை-பகுத்தறிவுச் சிந்தனை, உவமைகளையொட்டி எழும் சிந்தனை- தர்க்கரீதியானச் சிந்தனை (metaphoric thinking-logical thinking), பெண் போக்குச் சிந்தனை- ஆண்போக்குச் சிந்தனை, பழமை-நவீனம் (tradition-modernity) என்று பட்டியலிடலாம். இந்த இருதலைப் பிரிவுகள் யாவிலும் ஒரு ஒருமைப்பாடு என்னவென்றால் ஒரு பிரிவு ஐரோப்பிய நவீனமயச் சிந்தனையைக் குறிக்கும். அதாவது தம்மை மையமாக வைத்துப் பிறரை வரையறுத்தல் மேற்கத்தியச் சமூக அறிவியல்களின் குறிப்பாக மானுடவியலின் போக்காகும். லெவி ஸ்ட்றோஸ் போல மற்றொரு பிரிவை உயர்வாகக் கருதினாலும் இப்படிபட்ட இருதலைப் பிரிவுகள் பழங்குடியினரை மட்டுமன்றி மேற்கத்தியக் கலாச்சாரத்தையும் ஒரே வார்ப்புக்குள் (stereotype) உட்படுத்துவதாக உள்ளது. ஒருதலைப்பட்சமான, நுண்மையற்ற இந்த வார்ப்புகள் பலதிறப்பட்ட சமூகக் கலாச்சார நுணுக்கங்களை உணரவிடாமல் தடுக்கின்றன. இதனால் ஐரோப்பியச் சிந்தனையோடன்றி வேறு சிந்தனை முறைகளை ஒப்பிட்டு அறியவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாகரிகத்துக்கும் சீனக் கலாச்சாரத்திற்கும் ஒப்பீடு ஆராய்ச்சி ஏதும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

2. ‘விலங்கு மனதின்’ செயல்பாட்டை விவரித்த லெவி ஸ்ட்றோஸ், காட்சிகளை (precepts/images) ஏற்கனவேயுள்ள கருத்தாக்கங்களுக்குள் (concepts) புகுத்த அமைக்கப்படுவது புராணக் கதை என்று விளக்கினார். மாறாக, ஒவ்வொரு புதிய காட்சிக்கும் ஏற்ற புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவது நவீனமய அறிவியல்பூர்வமானச் சிந்தனையாகும் என்று காட்டினார். முன்னதை ‘பிரிக்கொலாஜ்’ (bricolage) என்றும் பெயரிட்டார். பிரிக்கொலாஜ் சிந்தனை, பல காலங்களாக வழங்கிவரும் சில கருத்தமைப்புகளில் புதுப்புதுக் காட்சிகளை எப்படித் திறம்படப் புனைகிறது என்று காட்டினார். அறிவியல்பூர்வமானச் சிந்தனையோ புதிய தகவல்கள், செயல்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான கருவிகளையும் கோட்பாடுகளையும் ஏற்படுத்துவதால் மாற்றத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது என்று முடிவுசெய்தார்.

இந்த ஆய்வில், பழங்குடியினர் சிந்தனை முதலாளிய சமூக அமைப்புடன் பிணைந்த நவீன அறிவியலுடன் ஒப்பிடத் தகுந்ததுதானா என்பது ஒரு கேள்வி. அமைப்புகளை அறிய வரலாறு தேவையில்லை என்ற அமைப்பியல் கூற்று இதற்குப் பதிலாக்கப்படும். இதுயிருக்க, பழங்குடிகள் மற்றும் பழமை சார்ந்த சிந்தனை (traditions) மாற்றத்திற்கு எதிரானது என்ற முடிவு மைய மானுடவியல் மற்றும் சமூகவியல் சிந்தனையை வலுவூட்டியது. ஆப்பிரிக்கச் சிந்தனையைப் படித்த ஆர்டன் (Horton), நவீனமயக் கோட்பாட்டாளர் ஆபர்மாஸ் (Habermas) போன்றவர்கள் நவீன சமுதாயத்தின் உயர்வைக் காட்டுவதாக லெவி ஸ்ட்றோஸின் இந்த முடிவைச் சுட்டினார்கள். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அமெரிக்கா, ஐரோப்பியா அல்லாத எல்லாச் சமூகங்களுமே, மாற முடியாத பழமையில் மூழ்கியிருப்பது போல நவீனச் சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர். பழமை-நவீனம் என்பது காலத்தைக் (time) குறித்ததா, இடத்தைக் (space) குறித்ததா, சிந்தனை சம்பந்தப்பட்டதா, செயல் சம்பந்தப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு விடை தேடப்படவேயில்லை. காலம் இடம் சிந்தனை, செயல் இவற்றுக்கான தொடர்பு பற்றிய எந்த ஒரு பெரிய சமூக அறிவியல் கோட்பாடும் நிலைபெறவேயில்லை.

3. ‘விலங்கு மனம்’, பழங்குடிகள் போன்ற குழுசார்ந்த அமைப்புகளின் பழமைக்கெதிராகத் தமது நவீனத்தைச் சமூக அறிவியல்கள் வடிவமைத்து வந்ததைப் பார்த்தோம். இந்த வேறுபாட்டிற்குச் சமூக அறிவியல்கள் தரும் விளக்கமும் இன்றியமையாதது. லெவி ஸ்ட்றோஸ் போன்ற மானுடவியலாளர்கள் பழங்குடிகளை ஆராய்ந்ததன் மூலம் கண்டது என்னவென்றால், ‘அவர்களை அறிந்துகொள்வதால் நம்மை நாம் சிறப்பாக அறிய முடிகிறது’ என்றனர். இதைத்தான் லெவி ஸ்ட்றோஸ் பற்றிய கட்டுரையாளரும் ‘ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணம்’ என்று காட்டியுள்ளார். ஆனால் இத்தகைய வாய்ப்பு அவரால் படிக்கப்பட்ட பழங்குடியினருக்கு உண்டா? ‘உண்மை மறைந்திருக்கும்’ என்று கூறும் அமைப்பியல்வாதம் அந்த உண்மை இருபதாம் நூற்றாண்டு மானுடவியலாளர்களுக்கு மட்டும் ஏன் புலப்படும் என்பதற்கு என்ன விளக்கம் தருகிறது? தனது சிந்தனையின் ஆழ்மன அமைப்பைப் பழங்குடிகள் தாமே அரிய முடியாததால்தான் மானுடவியலாளர்கள் அதைக் கண்டுணர்ந்து, தமது சிந்தனையின் அடிப்படையும் அறிந்து எழுத முடிந்தது என்பது முடிவு.

இது என்னுடைய முடிவல்ல. சமூக அறிவியல்கள் ஐரோப்பியாவில் மட்டும் தோன்றக் காரணமென்ன என்ற கேள்விக்குக் கொடுக்கப்படும் விளக்கம் இதுதான். மானுடவியலின் தேடல்களை இத்தகைய சுயவிளக்கங்களோடு பொருத்திப் பார்ப்பது நமது கண்ணோட்டத்தை விரிவடையச்செய்யும்.

சமூக அறிவியலும் சமுதாயமும்

19ஆம் நூற்றாண்டு ஐரோப்பியாவில், மதமும் மதம் சார்ந்த அமைப்புகளும் வலுவிழந்ததால் அங்கு பகுத்தறிவுமயமாதல் (rationalisation) ஏற்பட்டது என்றும் இதற்குப் புதிதாகத் தோன்றிய புரொடஸ்டெண்ட் மதத்தின் வீச்சு காரணம் என்றும் மாக்ஸ் வெபர் (Max Weber) சமூகவியலாளர் சொன்னார். இதை நிரூபிக்க உலகின் மற்ற ஆறு மதங்களின் சில அம்சங்களை மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் மூலம் இருந்த இடத்திலேயே வெபர் ஆய்வுசெய்தார். வேறு நவீன சமூகத்தின் தனித்தன்மையை விளக்க முற்பட்ட கார்ல் மான்ஹைம் (Karl Mannheim) என்ற சமூகவியலாளர், நம் வாழ்வின் அனுபவப் போக்கில் ஆழ்ந்திருந்து சிந்திப்பது கலை, இலக்கியம் போன்ற படைப்புகளைத் தரும் என்றும் அனுபவப் போக்கிலிருந்து எட்ட நின்று மேற்கூறியவற்றைக் கருத்துப் பொருளாக்கிச் சிந்திப்பது தத்துவவியலாகும் என்றும் சொன்னார். இவை யாவுமே பண்டைய சமுதாயங்களில் இருந்தன, ஆனால் மதம் சார்ந்ததாக, தமது அனுபவ வட்டத்தைக் கடக்காததாக இருந்தன என்றார்.

நவீன ஐரோப்பியச் சமூகத்தில்தான் தேடல்கள் பரந்து தமது சமூக வட்டங்களைக் கடந்தது என்றும் இதனால் சமூக நிலையாமையை (relativism) அவை அறிய முடிந்தது என்றும் இதன் விளைவே சமூக அறிவியல்களின் தோற்றம் என்றும் மான்ஹைம் கூறினார்.

இவரது கருத்தில் பல நூற்றாண்டுகளாகச் சமூகங்களில் நிகழ்ந்துவந்த கலாச்சாரப் பரிமாற்றங்கள், கடவுளை ஒப்புக்கொள்ளாத மதங்கள், சமூக நிலையாமையை வலியுறுத்திய சித்தாந்தங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு ஏதுமில்லை. மேற்கூறிய நவீனமயக் கோட்பாடுகளைப் பார்த்தால் மைய அல்லது பூஷ்வா ஐரோப்பிய அனுபவ வட்டத்திற்கு வெளியே இருப்பதை எல்லாம் ஒரே வார்ப்பில் சித்தரிக்கும் நிலையைத்தான் பார்க்கிறோம். சமூக அறிவியல்களை பூஷ்வா சிந்தனை என்று சாடிய கார்ல் மார்க்ஸும் (Karl Marx) 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய மாற்றங்களை உலக சமுதாயங்கள் யாவற்றுக்கும் முன்மாதிரியாகக் கருதினார். 19ஆம் நூற்றாண்டு பூஷ்வா வர்க்கத்தினர் காபிக் கடைகளில் செய்த விவாதங்கள் சிந்தனை வடிவெடுத்துப் பிற்காலச் சமூக அறிவியல்கள் என்றும் விவரிக்கப்படுகின்றன. வேறுபட்ட கருத்துடைய சிந்தனையாளர்களும் சமூக அறிவியல்களின் தோற்றம் பற்றிய பொதுவான நிலைப்பாடாக இதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, சமூக அறிவியல் ஐரோப்பிய சமுதாயத்தில் பரவலாகவும் பொதுவாகவும் ஏற்பட்ட பகுத்தறிவு விழிப்புணர்வின் வெளிப்பாடு என்பதுதான் மேற்கூறிய கூற்றுகளின் சாராம்சமாகும். இந்த மாற்றம் அங்கிருந்த கருப்பர்கள், முன்னாள் அடிமைகள், பழங்குடியினர், இன்னபிற சிறுபான்மையர் மற்றும் நாடோடிகளுக்கு ஏற்படவில்லையா? ஏற்பட்டதென்றால் அவர்களுள் உலகம் பேசும் தத்துவயியல் சிந்தனையாளர் ஒருவரை ஏன் கண்டெடுக்க முடியவில்லை?

பகுத்தறிவுமயமாதல் என்ற இந்த சுய விளக்கங்களில் விடுபட்ட செய்திகளைச் சுட்டிக்காட்டிய பூஃக்கோ 19ஆம் நூற்றாண்டு, கடவுளில்லா உலகத்தைக் கண்ட (ஐரோப்ப) மனிதனிடம் அவன் தன்னைப் பற்றிக் கருதியிருந்த நிலைப்பாட்டில் பெரிய மாறுதலை உண்டாக்கியது என்று கூறினார். தன்னையறிதலில் ஏற்பட்ட இம்மாற்றத்தால், நிகழ்வுகள் யாவற்றிக்கும் தன்னையே காரணியாக மனிதன் நினைத்தான். இதன் விளைவாகப் பகுத்தறிவிற்கு உட்படாதவர்களைப் பைத்தியங்களென மருத்துவமனைகளிலும் சிறைச்சாலைகளிலும் பிரித்துவைத்தான். இந்தப் பாகுபாடுகளிலிருந்து தான் பல சமூக அறிவியல் துறைகள் எழுந்தன. இவர்களைக் கருத்துப் பொருளாக்கிப் படிக்க மனோதத்துவவியல், உளவியல், சமூகவியல் போன்ற துறைகளும் வேற்றுச் சமூகத்தினரைக் கருத்துப் பொருளாக்க மானுடவியலும் தோன்றின என்று பூஃக்கோ விளக்கினார். காலனியம் மற்றும் அடிமைகள் வியாபாரம் போன்ற செயல்பாடுகளை ஆராயாமல் முழுக்க முழுக்க ஐரோப்பியாவினுள்ளே நடந்தவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும் பூஃக்கோவின் ஆய்வு பகுத்தறிவுமயமாதல் என்ற கூற்றின் மறுபக்கத்தைக் காட்டியது.

சமூக சமநிலை, பகுத்தறிவுமயமாதல், சுயவிழிப்புணர்வு என நவீனத்துவக் கோட்பாடுகள் தம்மைச் சித்தரித்துக்கொள்வதில் சிக்கல் உள்ளது. ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவினுள் இருந்த வேறுபட்ட கலாச்சாரச் சுவடுகளையும் அதைச் சுமந்திருந்த இனத்தவர்களையும் நீக்கி, வைத்தியம் பார்த்த பெண்களைச் சூனியக்காரர்கள் என்று கொன்றுவிட்டு எழுந்ததுதான் இந்த ஒருதலைப்பட்ட நவீனச் சிந்தனையாகும். இன்றளவும் இந்தப் பிரச்சினை வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வுகளில் வெளிப்படுகிறது. பிரான்சு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சமூக அறிவியல் துறைகளில், மேட்டுக்குடிக் கலாச்சாரப் பழக்கமில்லாத கீழ் வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது கட்டுரைகளுக்குப் பெரும் மதிப்பெண்களையும் விமர்சனங்களையும் பேராசிரியர் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த வீட்டுப் பிள்ளைகள் பெறுபவற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார் போர்தியூ (Bordieu) என்னும் சமூகவியல் ஆய்வாளர். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கருத்துப் பொருளாகப் படிக்கும் சமூக அறிவியல்கள் எப்படித் தமது செயல்பாடுகளில் அதே முரண்பாடுகளை உருவாக்குகின்றன என்பதைக் காட்டியுள்ளார். எனவே சமூக அறிவியல்களுக்கும் சமுதாயத்திற்கும் மைய சிந்தனையாளர்களால் காட்டப்படும் தொடர்பு, சில வரலாறுகளை மறந்தும் மறைத்தும் புனைந்ததாகும்.

பின்-நவீனத்துவம் (postmodernism) ஒருதலைப்பட்சமான உலக வரலாற்றை மறுக்கிறது. பலதிறப்பட்ட சிந்தனைகளை ஆதரிப்பதாகவும் வித்தியாசத்தைக் கொண்டாடுவதாகவும் சொல்கிறது. ஆனால் ‘எதுவும் சரி’ என்ற அதன் சாராம்சம் கலாச்சாரப் பரிமாற்றங்களின் தோற்றத்தை மட்டுமே கொண்டு எழுந்துள்ளது. கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள படைப்புகளின் வித்தியாசத்தைக் கவனித்துச் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக இருக்கிறது. மேலும் பின்-நவீனத்துவம் என்றும் தொழில்மயமாதலைக் கடந்த சமூகம் (post industrial) என்றும் தற்காலச் சமூகங்களைக் கூறுவதில் பிரச்சினை உள்ளது என்று அரி சிட்டாஸ் (Ari Sitas) என்னும் தென்னாப்பிரிக்கச் சமூகவியல் அறிஞர் கூறுகிறார். உலகமயமாதலால் உற்பத்தி நிறுவனங்கள் யாவும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற, அலுவலகங்கள் மட்டும் முதலாம் உலகில் அமைந்துள்ளது. மூன்றாம் உலக நாடுகள் இப்போது முன்னேறிய நாடுகளின் தொழிற்சாலைகளாய், உலகின் 80% உற்பத்தி நிகழும் இடங்களாய் இருக்கின்றன. இங்கு தொழிலாளர்கள், குறிப்பாக, நிறுவனம் சாராத, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவருகிறது. தொழில்மயமாதலைக் கடந்துவிட்டோம் என்று நம்புவதாலோ என்னவோ தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள்கூடச் சரிவர இல்லை. இந்நிலையில் பின்-நவீனத்துவம் தொழில்மயமாதலைக் கடந்த சமூகம் என்ற கோட்பாடுகளை எப்படி ஏற்பது என்று அவர் கேட்கிறார். ஆகவே நவீனத்துவத்தை விமர்சித்த பின்-நவீனத்துவம் சிலர் படிக்கவும் வகுப்புகளில் பயிற்றுவிக்கவும் வாதப் பிரதிவாதங்களை அவிழ்க்கவும் (deconstruct) தாக்கவும் பயன்படும் ஒரு தர்க்க முறையாகயுள்ளது. இது ஐரோப்பிய, அமெரிக்க அனுபவத்தையொட்டி எழுந்ததோடு, பிறரைக் கருத்துப் பொருளாக்கி அறியும் மைய சமூக அறிவியல்களினின்றும் பெரிதும் மாறுபடவில்லை.

இன்றைய நிலையிலும் சமூக அறிவியல் கோட்பாடுகள் பலமுகப்பட்ட சமூகங்களின் நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. மேட்டுக்குடித் தத்துவவியல் சமூகத்தில் மலிந்திருந்த சாதீயக் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தன என்று இங்குள்ள பாரம்பரியத்திலிருந்து மாறுபடும் நாம் சமூக அறிவியல் கோட்பாடுகளை மேலை நாடுகளிலிருந்து அப்படியே இறக்குமதி செய்வது நவீனப் பார்ப்பனியத்தை வளர்ப்பதாகும். பாரம்பரிய அறிவுத் துறைகளிலாவது நாட்டார் வழக்குகள் எழுத்து வடிவிலிருந்த நூலறிவுக்குச் சரியான சமயங்களில் மேலான நிலை பெற்றிருந்தன. ஆனால் இன்றைய சமூக அறிவியல் மையக் கோட்பாடுகள் வாய்வழிச் சமூகச் சிந்தனைகளைக் கருத்துப் பொருளாக்கிப் படிக்குமேயன்றி, அறிதலின் ஒரு தகுந்த முறையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு பிரதேசத்தில் தோன்றிய அறிவுத் துறைகள் (disciplines) அப்படியே உலகெங்கிலும் மறுபிறப்பாக வேண்டும் என்ற நம்பிக்கைதான், அவர்களைப் போல் நாமும் ஏன் சமூக அறிவியல் கோட்பாடுகளை உருவாக்க முடியவில்லை என்ற கேள்விக்குக் காரணம். ஆனால் கேள்வி அதுவல்ல. காலனியத்திற்குள்ளான, பன்முகப்பட்ட சமூகங்கள் எதிலும் ஏன் வேரூன்ற முடிவில்லை என்று சமூக அறிவியல்களை நோக்கித்தான் கேட்க வேண்டும்.

சமூக அறிவியல்களின் உருவாக்கத் திறன் அது பொதுசன சமூகச் சிந்தனைகளுடன் கொண்ட உறவைப் பொறுத்தது. பலமுகப்பட்ட, பல மொழிகள் வழங்கும் சமுதாயத்தில் இந்த உறவு ஏற்படுவது, காட்சி, மொழி, சிந்தனை ஆகியவற்றை இணைக்கும் சில அடிப்படைக் கூறுகள் அமைவதைப் பொறுத்தது. ஐரோப்பியச் சமுதாயத்தில் இந்நிலை ஏற்பட்டது என்ற கூற்று வேறுபாடுகளைச் சுமந்தவர்களை அழித்தும் ஒடுக்கியும் ஏற்பட்டது என்று முன்னமே குறிப்பிட்டோம். இம்முறைகளால் அடித்தளங்களை நிறுவியபின்தான் ஜனநாயக முறைகளைப் பற்றிப் பேச முடிந்தது.

மொழி, சமூகச் சிந்தனை (social thought) மற்றும் சமூக அறிவியல்.

மொழிக்கும் சிந்தனைக்குமுள்ள உறவு மிகவும் அடிப்படையானது, பிரிக்க முடியாதது. சமூக வாழ்வின் அனுபவங்களைக் கருத்துப் பொருளாக்கிக் கோட்பாடுகளை வரைவது சமூக அறிவியல் என்றால், இது யாரால், யாருக்காக, எந்த மொழியில் வரையப்படுகிறது என்பது மிக முக்கியமான கேள்வியாகும். இந்தியா போன்ற பல தேசங்களில், பல்கலைக் கழகங்களின் சமூக அறிவியல் துறைக்கும் பிராந்திய மொழிச் சிந்தனையாளர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. பல்கலைக் கழக சமூக அறிவியல் பாடத்திட்டம் பெரிதும் ஆங்கில மொழிப் பழக்கத்தைச் சார்ந்ததாகவும் ஐரோப்பிய-அமெரிக்கச் சிந்தனைகளின் ஆதிக்கம் வலுத்ததாகவும் அமைந்துள்ளது. உலகப் பொதுச் சிந்தனையோடு தொடர்பு இருக்க வேண்டும் மற்றும் வேலைவாய்ப்பு, மேல்நாட்டுப் படிப்பு ஆகியவற்றுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற காரணங்களாலும் இந்நிலை மாறவில்லை. மேலும் பல மொழிகள் வழங்குவதால் ஆங்கிலம் பொதுவானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, பிராந்திய மொழி வரலாறுகள் மற்றும் செய்திகளை ஆய்வுசெய்து வேறு ஒரு பார்வையாளருக்கு, அதாவது, அவர்தம் துறையின் நிபுணர்களுக்கு ஆங்கில மொழியில் அதைக் கருத்துப் பொருளாக வைக்கிறார்கள். இங்கு கருத்து உருவாக்கம் ஓரிடத்திலும் கருத்துப் பொருளாக்கம் வேறிடத்திலும் இருக்கிறது. எனவே ஜெர்னல் (academic journal) முறையில் வளரும் சமூக அறிவியல்கள் அறிபவர், அறிவு, மொழி மற்றும் அறியப்படுவது இவற்றுக்கிடையே பெரிய முரண்பாட்டை ஏற்படுத்துகின்றன.

எனவே காட்சி, மொழி, சிந்தனை இவற்றிற்கான தொடர்பே ஏற்படுத்தாத சமூகவியலைத்தான் நாம் இங்குப் பயிற்றுவிக்க முடிகிறது. நாம் சமூகவியல் கற்பது ஒரு மொழியில், நிகழ்வுகளைக் காண்பதும் உறவுகளை வளர்ப்பதும் நமது பிராந்திய மொழியில்: இது போன்ற குழப்பங்களினால் ‘இரட்டை பிரக்ஞை’ (double consciousness) ஏற்படுகிறது என்கிறார் மிக்னோலோ (Mignolo) என்னும் லத்தீன் அமெரிக்கச் சிந்தனையாளர். இது போன்ற விரிசல்கள் பற்றி சையது அலடஸ் (Syed Alatas) என்னும் தென்னாசிய சமூகவியலாளரும் பேசியுள்ளார். சமூக அறிவியலில் ஆங்கிலப் படைப்புகள் மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்துள்ளன. ஆனால் மேற்கூறிய காரணங்களால் காட்சி, மொழி, சிந்தனை முரண் பாடுகள் தொடர்கின்றன. பல்கலைக் கழகத் துறை சார்ந்த அறிவிற்கும் மொழி வாழ்வு சார்ந்த பிராந்தியப் படைப்புகளுக்கும் உறவு வலுப்பட இன்னும் சில காலமாகலாம். ஆனால் பத்திரிகைத் துறையில் இது போன்ற நிர்பந்தங்களைக் கடக்க இன்று வாய்ப்புள்ளது. பூத்திரிலாத் (Baudrillard), லெவி ஸ்ட்ற்றோஸ் தவிர முடிம்பெ (Mudimbe) போன்ற ஆப்பிரிக்க, இதர ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கச் சிந்தனையாளர்களைப் பற்றியும் எழுதலாம். நாட்டுப்புற மருத்துவம் முதல் பழமொழிகள் மற்றும் வாய்வழி வரலாறுகளை அலசலாம், புராதனம் என்று ஒதுக்கப்பட்ட அறிவுத் துறைகளை ஆராய்ந்து விமர்சிக்கலாம்.

பிராந்தியப் படைப்புகள் பிராந்திய அடையாங்களைக் கடக்க முடியாது என்பதல்ல இதன் பொருள். எல்லாக் கருத்தும் பொருளும் பிராந்தியம் சார்ந்தது தான். அவற்றின் தாக்கத்தையும் பரவலையும் நிர்ணயிப்பது நிறுவன முறைகளே. பன்னாட்டு நிறுவனங்கள் இன்று இங்குள்ள சுக்குக் கஷாயத்தையும் ஓமத்திராவகத்தையும் உலகச் சந்தையில் இயற்கை மருந்தாக நிறுத்தி விற்பனையைப் பெருக்கியுள்ளன. இந்தப் ‘பிராந்திய’ மருந்துகள் அமெரிக்காவிலும் வேலை செய்யும் என்று நிச்சயமாகிவிட்டது. ஆனால் இதை மானுடவியலாளரும் பன்னாட்டு நிறுவனமும் செய்தால் கருத்துப் பொருளும் சந்தைப் பொருளும் அங்கு விளையும். இங்குள்ள வைத்தியனும் ஊர்க்காரனும் சிந்தனையாளரும் அவரவர் பிராந்தியத்தில் செய்தால் கருத்தும் பொருளும் இங்கு விளையும்.

o

புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் இணை பேராசிரியராகப் பணிபுரிகிறார். sujathav@mail.jnu.ac.in

உள்ளடக்கம்