Google   www kalachuvadu.com

தலையங்கம்
குருதி தோய்ந்த ஒரு கொடி
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாட்டை முழுமையாக மீட்டெடுத்துவிட்டதாகவும் மார்தட்டிக்கொள்ளும் ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கையில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. தன் ஜோர்டான் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு அவசரஅவசரமாக இலங்கைக்குத் திரும்பிய அதிபர் ராஜபக்சே விமான நிலையத்தில் இறங்கியவுடன் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட கொழும்பு மண்ணை முத்தமிட்டு மக்களுக்கு அந்த வெற்றிச் செய்தியை அறிவித்தார். ராணுவத்தினருக்குப் பால் சோறு ஊட்டியும் வீடுகளில் இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றியும் இந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ‘மக்கள்’.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது தேசியக் கொடியில் சிங்க உருவத்துடன் பெரும்பான்மைச் சிங்கள மக்களைக் குறிக்கும் கருஞ்சிவப்பு வர்ணப் பட்டை, இஸ்லாமியர்களை அடையாளப்படுத்தும் பச்சை நிறப்பட்டை ஆகியவற்றுடன் தமிழர்களை அடையாளப்படுத்தும் இளஞ்சிவப்பு வர்ணப் பட்டை என மூவர்ணப் பட்டைகள் இடம் பெற்றிருந்தன. வெற்றிக் கொண்டாட்டங்களின்போது உயர்த்திப் பிடிக்கப்பட்ட தேசியக் கொடியில் வர்ணங்கள் மாறியிருந்தன. இளஞ்சிவப்பு நிறப்பட்டையின் நிறம் கருஞ்சிவப்பாக (குருதியோ?) மாறியிருந்தது. ஒரே நாடு, ஒரே இனம், ஒரே அடையாளம் என்னும் ராஜபக்சேவின் முழக்கத்திற்குப் பின்னால் உள்ள நோக்கங்களைப் பிரதிபலிப்பதாகவே இந்நிற மாற்றம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

கொண்டாட்டங்களில் ஈடுபட்ட சிங்களர்கள் அங்கு வாழும் தமிழர்களை அதில் பங்குபெற வற்புறுத்தியதோடு தமிழர்களின் வீடுகளில் புதிய சிங்களக் கொடியைப் பறக்கவிடுமாறும் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். கொண்டாட்டச் செலவுகளுக்குப் பணம் தருமாறு தமிழர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பங்கேற்க மறுத்த தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். போரால் அனாதைகளாக்கப்பட்டு உள்நாட்டிலும் புலம்பெயர்ந்து அயல்நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலம் குறித்து நிலவிவரும் அச்ச உணர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன சிங்களர்களின் இந்தக் கொண்டாட்டங்கள். இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள், அதைவிடப் பல மடங்கு எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாவும் ஊனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சர்வதேசச் சமுதாயத்தின் கவலைகளையும் கண்டனங்களையும் முற்றாகப் புறக்கணித்துவிட்டு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ஒரு கொடூரமான இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது சிங்கள ராணுவம்.

ராணுவத்தின் அழைப்பை ஏற்றுப் பாதுகாப்புப் பகுதியிலிருந்து வெளியேறிவந்த லட்சக்கணக்கான தமிழர்கள், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான குறைந்தபட்ச ஏற்பாடுகளும்கூடச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த வாரம், இலங்கைக்கு வந்த ஐநா சிறப்புத் தூதர், மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களே வன்னிப் பகுதியில் தென்படவில்லை எனச் சொல்லியிருக்கிறார். ஹெலிகாப்டரில் அவருடன் பயணித்த பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்கள் போரில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியிருக்கின்றன. கடந்த மாதம் 10ஆம் தேதி போர்நிறுத்தம் வேண்டி தமிழக முதல்வர் நடத்திய ‘உண்ணாநிலை’ப் போராட்டத்தையடுத்து போர்நிறுத்த அறிவிப்புச் செய்துவிட்டதாகவும் போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை எனவும் சிங்கள அரசு அறிக்கை வெளியிட்டதாகச் சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளும் இலங்கை அதிபர் மனித உரிமை மீறல் குற்றங்களையும் போர்க் குற்றங்களையும் இழைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்குச் சில போலியான வாக்குறுதிகளை அளித்துள்ளார் ராஜபக்சே. இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சம உரிமை அளிக்கப்படும் எனவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அளித்துள்ள வாக்குறுதிகளை இந்தியாவைத் தவிர வேறு யாருமே நம்பவில்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதமும் இனவெறித் தாக்குதல்களும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக மறைந்துவிடும் எனவும் தோன்றவில்லை. இலங்கை அரசு போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள விதமும் இலங்கை ராணுவம் கடைபிடித்த போர் நெறிமுறைகளும் அந்தக் காயங்களை மேலும் ஆழப்படுத்தியிருக்கின்றன.

போராளிகளும் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களும் கொல்லப்பட்டதால் சோகத்தில் மூழ்கியிருக்கும் புகலிடத் தமிழர்கள் இலங்கை அரசின் மீதான தம் அவநம்பிக்கையையும் நிராதரவான நிலையையும் தொடர்ந்த கிளர்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்திவருகிறார்கள். இம்மக்களில் பெரும்பகுதியினர் புலிகளின் அரசியலோடும் வழிமுறைகளோடும் முரண்பட்டவர்கள் அல்லது அவற்றின்மீது கடும் விமர்சனம் கொண்டவர்கள். சிங்கள ராணுவத்தின் பாசிசப் போக்கு இப்போது அவர்களில் பெரும்பான்மையோரைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாற்றியுள்ளது. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என அவர்களுக்கு இருந்த சிறிதளவு நம்பிக்கையையும் ராணுவம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் தாய்நாட்டிற்குத் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கையை முற்றாக இழந்திருக்கும் புகலிடத் தமிழர்கள் தம் மண்ணை மீட்பதற்கான மாற்றுவழிகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையில் முன்பைவிடக் கூர்மையடைந்திருக்கும் சிங்கள இனவெறியின் காரணமாகத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் போராட்டத்திற்கான மாற்றுவழி என்பது என்னவாக இருக்கும் என்பதற்கு வருங்காலமே விடையளிக்கும்.

புலிகளின் தலைமையில் நடைபெற்றுவந்த போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் தமிழர்களின் மனத்தில் உருவாகியுள்ள அச்ச உணர்வு இனச் சிக்கலை மேலும் கூர்மைப்படுத்துவதற்கே வழிவகுக்கும். இலங்கையில் பயங்கரவாதம் யூகிக்க முடியாத புதிய அடையாளங்களுடன் வன்மத்தோடும் பழியோடும் மீட்டெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பொறுப்பு முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்தும் சிங்கள ராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் குறித்தும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டுக் குற்றம் இழைத்தவர்கள்மீது சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநாவின் மேற்பார்வையில் தமிழ் மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

போரால் காயமுற்ற மக்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பவர்கள் உடனடியாகத் தம் வாழ்விடங்களுக்குத் திருப்பியனுப்பப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்குச் சம உரிமை அளிக்கப்படுவதற்கேற்ப அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தவிர, தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கேற்ப சிவில் உரிமைகளைக் கறாராக நடைமுறைப்படுத்துவதற்கேற்ற முறையில் அரசின் காவல், நீதி அமைப்புகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். சிவில் சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ராணுவத்தின் தலையீடு இல்லாத வகையில் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படுவது மிக அவசியம். எல்லாவற்றையும்விட ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மீட்டெடுப்பதற்கான அறிவுத் துறை விவாதங்களும் பண்பாட்டு நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, இலங்கை ராணுவத்திடமிருந்தோ பேரினவாத அரசிடமிருந்தோ இயல்பாக வெளிப்படாது என்பதைச் சர்வதேசச் சமூகங்கள் உணர வேண்டும். சர்வதேசச் சமூகங்கள் அத்தகையதொரு தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தத் தவறினால் உலகுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு இலங்கை பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளடக்கம்