Google   www kalachuvadu.com

பதிவு
இருளர்களின் திருவிழா
ஓவியர் கு. கலைச்செல்வன்

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குலதெய்வத்தை கன்னியம்மா பூசை மூலம் வணங்குகிறார்கள்.

காடும் காடு சார்ந்த இடங்களையும் வாழ்விடமாகக் கொண்ட இருளர், கடலுக்குள் இருக்கும் கன்னியம்மனை வணங்குவது அவர்களைப் பற்றிச் சொல்லும் கதையின்படி தங்கள் முன்னோர் மாமல்லபுரப் பகுதியில் சந்தித்த கடற்கோளின் பாதிப்பாகவும் இருக்கலாம். கன்னியம்மாவை ஆயம்மா என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆழி என்பதுகூட ஆயி எனத் திரிந்து ஆயம்மாவாக ஆகியிருக்கலாம். கன்னியம்மாவின் தங்கைகள் எனக் கூறும் தெய்வங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் மாரி, செல்லி, நீலி என்னும் தெய்வங்களாக இருப்பது இருளர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒரு இறுக்கமான முடிச்சையும் உருவாக்குகிறது. பெரும்பாலான கிராமத்துத் தெய்வங்கள் அந்தச் சமூகத்தில் அகால மரணமடைந்த அல்லது அவர்களைக் காக்க உறு துணையாகயிருந்த உயிர் நீத்த மனிதர்களாக இருப்பதுபோலவே கன்னியம்மனும் இருளர் மத்தியில் வாழ்ந்த ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் தெய்வங்களைக் கன்னியம்மனின் சகோதரிகள் எனச் சொன்னாலும் இருளர்கள் முதன்மையாக முன்னிறுத்துவது கன்னியம்மனைத்தான்.

இருளர்களின் இன்னொரு மொழி இசை. இவர்களது ஆடல், பாடல்களில் காதல் ரசம் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. நாகரிக மனிதர்களைக் காட்டிலும் பாலின சமத்துவம் இவர்களிடம் மிக உச்சத்திலிருக்கிறது. பெண்களுக்கு நிகராக ஆண்களும் சமையல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆண்களுக்கு இருப்பது போன்ற பாலுணர்வு சுதந்திரம் பெண்களுக்கும் உண்டு. திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலே சேர்ந்து வாழ்கிறார்கள். பின் அவர்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லையென்றால் திருமணம் நடைபெறுகிறது. பிடிக்கவில்லையென்றால் இருவருமே வேறு நபரைத் திருமணம் செய்துகொள்ளலாம். விபச்சாரம் என்கிற வார்த்தை இருளர் மத்தியில் எந்த மட்டத்திலும் இல்லை.

பாம்பு பிடிப்பதில் இருளர்கள் கைதேர்ந்தவர்கள். பாம்பு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முதலில் நாடுவது இவர்களைத்தான். மூலிகை மருத்துவத்தில் தனி நிபுணத்துவம் பெற்ற இருளர்களின் பிரதான உணவு வரப்பெலி. சிறுவர்கள் முதல் வயதானவர்கள்வரை வரப்பெலி வேட்டையில் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

காடு சார்ந்து வாழ்ந்த இவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்ட பின்பு சமவெளி மக்களை அண்டி வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் சமவெளி மக்களிடம் கொத்தடிமைகளாகவே உள்ளனர்.

பெரும்பாலான இளைஞர்கள் நகர்ப் புறங்களில் ரைஸ் மில்களிலும் கிராமப் புறங்களில் நிலச்சுவான்தாரிடத்திலும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். காலப்போக்கில் தற்போதைய சந்ததியினருக்குப் பாம்பைக் கண்டால் ஓட்டம் பிடிக்கும் அளவுக்குத் தங்கள் பாரம்பரியத் திறமை மறந்துபோகவும் கூடும். தாங்கள் தமிழகத்தின் பழங்குடியினர்தான் எனச் சொல்லிக்கொள்வதற்குக் கன்னியம்மா பூசையையும் வரப்பெலி வேட்டையையும் தவிர, சொல்லிக்கொள்ள மிச்சசொச்சங்கள் எதுவுமிருக்கமாட்டா. தமிழினம் எனச் சொல்லிக்கொண்டே எல்லா அடையாளங்களையும் இழந்துவரும் நாம். இருளர்களின் அடையாளங்களையும் சேர்த்தே அழித்தபடிதான் போய்க்கொண்டிருக்கிறோம்.

நிகழ்ச்சி நடந்த மார்ச் 8, 9, 10 மூன்று நாட்களும் இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு (ITWWS) என்னும் நிறுவனம் இந்த விழாவுக்கு மின்னொளியில் மேடை அமைத்துக் கொண்டாடியது. மாவட்ட ஆட்சியரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து இருளர் பிரச்சினைகளை முன்வைத்தார்கள். மேலும் இருளர்களின் மேம்பாட்டுக்காகத் தாங்கள் ஆற்றி வரும் ஆற்றப்போகும் பணிகளை வரிசைப்படுத்தினார்கள். இவர்களது பாடல்களைத் திரட்டிக் குறுந்தகடுகளாக வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இசைக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். எல்லோருமே பாடுகிறவர்கள், ஆடுகிறவர்கள். அவர்களுக்கு எதற்கு மேடை. அந்த மின்னொளி நடுநிசியில் வெளிப்படும் அந்தத் தெய்வீகத்தை இம்சிப்பதாகவே உள்ளது. இதை விடுத்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். ஏதோ தேர்த் திருவிழாவிற்கு வருவதுபோல இருளர் அல்லாத சமூக விரோதிகள் சிலரும் கூட்டத்திற்குள் புகுந்து காலித்தனம் செய்கிறார்கள். அவர்களை இனங்கண்டு அவ்விடத்தைவிட்டு அப்புறப்படுத்தும் பணியைச் செய்யலாம். போதாக்குறைக்கு ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ என்ற நரிக்குறவர் வேட சினிமாப் பாடலுக்கு இருளர் இனக் குழந்தைகளை மேடையில் ஆடவிட்டது கலாச்சாரச் சீரழிப்பு. இருளர்களின் முன்னோர்கள் பாடிய பாடல்களைத் திரட்டி இப்போதிருக்கும் டிரெண்டிற்கேற்பக் குறுந்தகடாகக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதைய சந்ததியினர் தங்கள் சொந்தத் திறமையை முடக்கிவைத்துக் குறுந் தகடுகளாய் இருக்கும் பாடல்களைப் பாடிப் பழகுகிறார்கள். இது அவர்களது கற்பனைத் திறனை மழுங்கடிப்பதாகாதா? ஏதோ ஒரு வகையில் நிதியைப் பெற்று இருளர் சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் என்னும் பெயரில் இம்மக்களின் சுய அடையாளங்களையும் தன்மானத்தையும் அநீதியைக் கண்டு எழும் இயல்பான கோபத்தையும் மழுங்கடிக்கச் செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியே கன்னியம்மா பூஜையில் வண்ண விளக்குகளுடன் பிரகாசித்த மேடைத் திருவிழா.

உள்ளடக்கம்