Google   www kalachuvadu.com

விவாதம்
நாட்டுடமையாக்கம் எனும் சொட்டு மருந்து
கண்ணன்
பல விஷயங்களில் நாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டாலும் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் சிறிய உறுத்தல் ஒன்று - செருப்பிற்குள் மாட்டிக்கொள்ளும் மண்துகள்போல - இருந்துகொண்டிருக்கும். சு.ரா. நாட்டுடமையாக்கத்தை மறுத்த பின்னர், சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் அரச கௌரவத்தை மறுக்க வேண்டுமா என வினவியபோது, மனத்தில் ஏற்பட்டிருந்த தெளிவில் சில சலனங்கள். அப்போதுதான் அ. மார்க்ஸ் அரசுக்கு ஆதரவாகக் (ஜூ.வி., பிப். 25, 2009) கருத்து கூறியிருக்கும் செய்தி கிடைத்தது. உறுத்தல் மறைந்தது.

அ. மார்க்ஸ் ஆதரிக்கிறார் என்றால் நடைபெற்றது காலச்சுவடுக்கு எதிரான ஒரு சதிமுயற்சி என்பதில் சந்தேகமே இல்லை - பெரும்பான்மையான சதி முயற்சிகளைப் போல இதுவும் சதியை உருட்டியவர்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்ற போதிலும்.

ஜூ.வியில் அ. மார்க்சிடம் கருத்துக் கேட்டிருந்த பரக்கத் அலி, சம்பந்தப்பட்ட காப்புரிமையாளர்கள், பதிப்பாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை. இருபக்கக் கருத்தை அறியும் அடிப்படையான இதழியல்நெறி பேணப்படவில்லை. அ. மார்க்சை நெருங்கும் போதே இது போன்ற சகிப்பின்மை வந்து ஒட்டிக்கொண்டுவிடுமோ தெரியவில்லை. அ. மார்க்ஸ் வேண்டுவது கருத்துப் பரவல் - செயல்படுத்துவதோ எப்போதும் கருத்து மறுப்பு.

காப்புரிமை விஷயத்தில் அ. மார்க்சிடம் எப்போதும் ஒரு நிலைப்பாடு இருந்ததில்லை. சுயநலம் பாடுதல் உண்டு.

‘தீராநதி’யில் தன் பத்தியில் அ. மார்க்ஸ் காப்புரிமை பற்றி எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. (செப். 2008). சில மேற்கோள்கள்:

“படைப்பாளிகளின் படைப்புரிமையைக் காக்க, சென்ற மாதத்தில் சென்னையில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களின் ஓவியமெனப் போலி ஒன்றை சென்னை கண்காட்சிக் கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றதைக் கண்டித்து இக்கூட்டம் நடைபெற்றது. நான் உள்ளூரில் இல்லாததால் இதில் கலந்துகொள்ள இயலவில்லை. இருந்திருந்தால் நிச்சயம் பங்கு பெற்றிருப்பேன்.”

“ஆசிரியர்க்கு ‘காப்பி ரைட்’ உரிமையுள்ள ஒரு நூலைப் பழைய தேதியிட்டு அச்சிடுவது, அவருக்குத் தெரியாமல் அதை விற்பது என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. இது அந்த ஆசிரியரின் உழைப்பைச் சுரண்டுகிற ஒரு விவகாரம் மட்டுமல்ல, அவரது சுயமரியாதையையே கேள்விக்குள்ளாக்கும் மூலதனத் திமிரையும் உள்ளடக்கியுள்ளது. இதை எப்படிச் சகித்துக்கொள்வது.”

“இந்த மாதிரியான மோசடி அம்பலப்பட்டுப்போகும்போது அதை ஈடுகட்ட வேண்டி, மோசடியாளர் அந்த எழுத்தாளர் குறித்து அவதூறுகளைப் பரப்ப நேரிடுகிறது.”

“எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நாம் கூடிப் பேச வேண்டும். பிற நாடுகளில் உள்ளதுபோல எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னரே நூலை வெளியிட உரிமை அளிப்பது என்கிற நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.”

அமரர் ஆதிமூலம் அவர்கள் பற்றிய கூட்டத்தில் அ. மார்க்ஸ் கலந்துகொள்ளும் அவலம் ஏற்படாதது குறித்து மகிழ்ச்சி. தமிழ் அறிவுத்தளத்தில் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றிருந்த ஆதிமூலம் அவர்களை இந்துத்துவவாதி அது இது என்று அவதூறு செய்த ஒரே நபர் அ. மார்க்ஸ். தனது சுயநலத்திற்காக, எந்தக் கூட்டத்திலும் மேடை ஏறி ‘முழங்க’ அ. மார்க்ஸ் தயங்கமாட்டார். எனினும் உறவுகளைத் தேர்ந்து மேற்கொண்டவர் ஆதிமூலம் அவர்கள் என்பது முக்கியம்.

பிறநாட்டு மோகம் வாட்டும்

அ. மார்க்ஸ் எதிர்பார்க்கும் எழுத்தாளர்களுடனான ஒப்பந்தம் செய்தலை காலச்சுவடு ஆரம்பம் முதல் பின்பற்றி வருகிறது. எமக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ‘வாசகர் வட்டம்’ காப்புரிமையைச் சிறப்பித்து செயல்பட்டது. காலச்சுவடு வெளியிட்ட முதல் இரண்டு மூன்று நூல்கள் சு.ரா.வினுடையவை. 1997இல் வெளியிட்ட ஜி. நாகராஜன் படைப்புகளுக்கு அவர் மனைவி நாகலட்சுமி அவர்களுடன் உடன்படிக்கை செய்து முறைப்படி காப்புரிமை வழங்கினோம். புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத / பிரசுரம் பெறாத படைப்புகளை வெளியிட அவர் மனைவியார் கமலா விருத்தாசலம் அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டோம். பின்னர் முழுத்தொகுதிகளை வெளியிட அவர் மகள் தினகரி சொக்கலிங்கத்திடம் உடன்படிக்கை செய்துகொண்டோம். அவர்கள் முன்னர் பதிப்பாளர்களிடமிருந்து கண்டிராத தொகையைக் காப்புரிமையாக வழங்கினோம். நமது காப்புரிமைப் போராளி அப்போது என்ன செய்தார்? புதிய தலைமுறை இதை அறிய வேண்டும்.

திருட்டுக் கவிதைக்குப் பெயர்போன இளையபாரதி என்ற நபர் 1994இல் புதுமைப்பித்தன் தன் மனைவியார் கமலாவுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து வெளியிடும் ஓர் உருப்படியான பணியைச் செய்தார். வழக்கம்போல ஏதோ முன்தொகை கொடுத்து அனுமதிபெற்று நூலை வெளியிட்டு விட்டுப் பின்னர் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை. உடன்படிக்கை எதுவும் கையெழுத்தாகவில்லை. இந்நூல் வெளியீட்டிற்குத் தமிழ் வளர்ச்சித்துறை உதவிசெய்தது. அதன் இயக்குனருக்குக் கமலா அவர்கள் எழுதிய அனுமதி கடிதத்தைக் கைவசம் வைத்துக்கொண்டார் இளையபாரதி. பின்னர் புத்தாயிரத்தில் அந்நூலை மீண்டும் வெளியிடப்போவதாக அறிவித்தார். அ. மார்க்ஸ் வேண்டும் உடன்படிக்கை மூலம் - பு.பி.யின் முழுமையான படைப்புகளை வெளியிட - காலச்சுவடு உரிமை பெற்றிருந்ததால் இளையபாரதிக்கு ஒரு மடல் எழுதினோம். அவர் தமுஎச தலைவர் வழக்குரைஞர் செந்தில்நாதன் வழி வக்கீல் நோட்டீஸ் அனுப்ப, பிரச்சனை ஏற்பட்டது. அன்று கமலா எழுதிய கடிதம் இளையபாரதிக்குத் தரப்பட்ட நிரந்தர அனுமதி என்றார் வழக்குரைஞர். தமிழக முற்போக்கு அறிவிஜீவிகள் கூடிநின்று ‘ததாஸ்து’ என்றனர். அ. மார்க்ஸ் என்ன செய்திருக்க வேண்டும்? இன்று எழுப்பும் கேள்விகளை அன்று இளையபாரதியிடம் கேட்டிருக்க வேண்டும். உடன்படிக்கை செய்தாயா? காப்புரிமை கொடுத்தாயா? என்று. கேட்டாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆனால் ஒன்று செய்தார். இப்பிரச்சனையில் இளையபாரதியுடன் அணிசேர்ந்தார். பு.பி. குடும்பத்தின் காப்புரிமைக்கு எதிராக இயங்கினார். அவர் வார்த்தைகளில் சொல்வ தென்றால், ‘இந்த மாதிரியான மோசடி அம்பலப்பட்டபோது அதை ஈடுகட்ட முறைப்படி பதிப்புத்தொழிலில் ஈடுபட்டு செம்பதிப்பாக பு.பி. கதைகளை வெளியிட்ட காலச்சுவடுமீது அவதூறு பரப்ப நேரிட்டது அவருக்கு.’

இன்று அதே மோசடி நோக்கத்தோடு இப்போது சுந்தர ராமசாமியை ‘நல்ல எழுத்தாளர், சிந்தனையாளர்’ என மெச்சுகிறார். அவர் எழுத்தை நாட்டுடமையாக்குவது அரசின் ‘சமூகப் பணி’யாக அ.மார்க்சுக்கு இன்று தெரிகிறது. பதிப்பாளர் உரிமையின்றி வெளியிட்டால் அது ‘மூலதனத்திமிர்’. காப்புரிமையைப் பிடுங்க அரசு முயன்றால் அது அதிகாரத்திமிர் அல்ல, ‘சமூகப்பணி’! சு.ரா. வின் எழுத்தின் உரிமை ‘யாரோ சில’ரிடம் இருப்பதாகவும் சு.ரா. புகழ் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் அவரின் பிம்பத்தை வைத்துச் சம்பாதிக்க நினைப்பதாகவும் வருந்துகிறார் அ.மார்க்ஸ்.

சு.ரா. வின் புகழ் பரப்ப அ. மார்க்ஸ் இன்று துடிப்பதைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது எனினும் வாழும் காலத்தில் சு.ரா. வை எங்ஙனம் அவர் எதிர்கொண்டார் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்வோம். சிறு ஆதாரமுமின்றி சாதிய உணர்வோடு சு.ரா. வை சாதி மத அடிப்படையில் அவதூறு செய்துவந்தார். மாற்றுக் கருத்துடையோருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை சு.ரா. வுக்கு மட்டுமல்ல எவருக்கும் மார்க்ஸ் கொடுத்ததில்லை. அவர் மேடைகளில், இதழ்களில் மாற்றுக் கருத்துடையோருக்கு எப்போதும் எந்த இடமும் இருந்ததில்லை. மாற்றுக் கருத்துகளை வெளியிடும் இதழ்களை அவதூறுசெய்வது, அவற்றிற்கு எதிராகச் சதி வேலைகள்செய்வது, அவற்றில் எழுதக் கூடாது எனக் கூட்டு இயக்கம் நடத்துவது, பொது அரங்குகளில் விவாதங்கள் ஏற்படாமல் தடை செய்வது - இவையே மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளும் அவரது நடை முறைகள். சு.ரா.வின் எழுத்துக்கும் கருத்துக்கும் இத்தகைய தடைகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர் செயல்பட்டது சமகால வரலாறு. கருத்துரிமைக்காகவும் எழுத்தாளரின் உரிமைக்காகவும் தமிழகத்தில் அவர் எப்போதும் குரல் கொடுத்ததே இல்லை. மாறாக இவற்றிற்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த நூற்றாண்டில் இரண்டு உதாரணங்கள். ஒன்று ஏற்கனவே குறிப்பிட்ட பு.பி. காப்புரிமைப் பிரச்சனை. இரண்டாவது ஞாநியின் கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்குகொண்டு அவர் பேசியவை. தமிழ் அறிவுலகம் சமகாலத்தில் சந்தித்திருக்கும் கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் தனிநபர் இயக்கமாகவும் அ. மார்க்ஸ் பார்க்கப்பட வேண்டும்.

பாரதி படைப்புகளை நாட்டுடமையாக்கிய பெருமையை அ. மார்க்ஸ் மேற்படி ஜூ.வி. பதிவில் காமராசருக்கு வழங்குகிறார். இந்தப் பார்வை பிழையானது. முதுமையில் ‘சமூகப் பற்று’ மிஞ்சிவிடாமல் ‘பாரதி ஆய்வாளர்’ மார்க்ஸ் எச்சரிக்கையோடு இருப்பது நலம். (பாரதி நாட்டுடமையாக்கம் பற்றிய ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆய்வுக்கட்டுரை விரைவில் காலச்சுவடில் பிரசுரிக்கப்படும்.)

சு.ரா. நாட்டுடமையாக்கப் பிரச்சனையில் அ. மார்க்சின் நிலைப்பாடு அரச நிலைப்பாட்டோடு பொருந்திப் போவது இயல்பு. காலச்சுவடுக்கு எதிரான அரசின் அழித்தொழிப்பு முயற்சியில் அ. மார்க்சுக்கு முழுமையான உடன்பாடு உண்டு. காலச்சுவடின் கருத்துப்பரவல் செயல்பாட்டிற்கு எதிரான அரசின் நூலகத் தடைக்கும் அவரது உடன்பாடு உண்டு. இதற்கு முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த எழுத்தாளர்/ஆளுமையின் படைப்பையும் நாட்டுடமையாக்க அவர் கோரிக்கை வைத்ததில்லை. இதற்கு முன்னர் பெரியார் எழுத்தை நாட்டுடமையாக்க வேண்டியதுமில்லை.

கலகம், அனார்கிஸம் எல்லாம் பேசிவிட்டு இன்று எமது காப்புரிமையில், உலகக் காப்புரிமை நடைமுறைக்கு மாறாகவும் இந்தியக் காப்புரிமைச் சட்டத்திற்கு விரோதமாகவும் கைவைக்கும் அரச முயற்சிக்கு ஆதரவளிப்பது இழிவு. இந்த விஷயத்திலும் ‘பிறநாடு’களின் முன்உதாரணத்தைப் பார்க்க வேண்டாமா? முன்அனுமதி பெறாமல் நாற்பது சொற்களுக்கு மேல் மேற்கோள்கூடக் காட்ட முடியாது அங்கு. எழுத்தாளரின் காப்புரிமையைப் பறிக்க அரசு முயற்சிப்பதெல்லாம் அடிப்படையான மனித உரிமைகளின் மீறலாக அங்குக் கணிக்கப்படும்.

‘புரட்சி’வாதியின் சீரழிவுபோல வேறில்லை என்பார்கள். ஓய்வுபெற்ற பின்னரும் அரச விசுவாசியாக அ.மார்க்ஸ் இயங்குவதை என்னவென்பது?

சு.ரா. நாட்டுடமையாக்கத்தை மறுத்தது ஏன்?

1. சு.ரா. அவருடைய காப்புரிமையைத் திருமதி கமலா ராமசாமிக்கு விட்டுச் சென்றிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சு.ரா.வுடன் வாழ்ந்து எழுத்துப் பணிக்கு ஆதரவும் மாறாத அன்பும் அளித்ததற்கான பொருத்தமான கைமாறாக இதைக் கொள்ளலாம். அவரால் துவக்கப்பட்ட, தமிழில் முதல் முறையாக அவர் படைப்புகள் அனைத்தும் வாசகருக்குக் கிடைக்க வழிகோலிய, காலச்சுவடு பதிப்பகத்திடம் அவர் படைப்புகளின் வெளியீட்டு உரிமை உள்ளது. காலச்சுவடின் வளர்ச்சிக்கு சு.ரா. படைப்புகளின் பிரசுர உரிமை முக்கிய அடிப்படையாக உள்ளது. இதில் மறுக்கவோ மறைக்கவோ எதுவும் இல்லை. தமிழக அரசு சு.ரா. படைப்புகளை நாட்டுடமையாக்க விரும்பினால் திருமதி கமலா ராமசாமியைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அவருக்கு உரியதை அவரது அனுமதியின்றி, நாட்டுடமையாக்கப்பட்டதாகச் சட்டத்திற்குப் புறம்பாகச் சட்டமன்றத்தில் அறிவித்த அரசு, சட்டமன்றத்தையும் கமலா ராமசாமியையும் அவமதித்திருக்கிறது. அவமதிக்கும் அரசின் பரிவும் தேவையில்லை; அவர்கள் அளிக்கும் ‘பரிவுத்தொகை’யும் எங்களுக்குத் தேவையில்லை. எழுத்தாளர் குடும்பங்களுக்கு அரசு அளிப்பது அவர்களுக்குரிய உரிமைத் தொகை. ‘பரிவுத்தொகை’ என்ற சொற் சேர்க்கையே அவமானகரமானது.

2. சு.ரா.வை வாழ்ந்த காலத்திலும் மரணத்திலும் தமிழக அரசு அங்கீகரித்ததில்லை. 55 ஆண்டுகள் தமிழுக்குப் பங்களித்துத் தமிழ் இலக்கியத்தைப் பெருமளவிற்கு இந்திய அரங்கிலும் கணிசமான அளவிற்கு உலக அரங்கிலும் அடையாளப்படுத்திய ஒரு படைப்பாளியின் மரணத்தைக்கூடத் தமிழக அரசு முழுமையாகப் புறக்கணித்தது. இத்தகைய புறக்கணிப்பை எந்த ஒர் இந்திய இலக்கிய ஆளுமையும் எதிர்கொண்டதில்லை. அவர் நிறுவிய ‘காலச்சுவடு’ இதழை நூலகங்களில் தமிழக அரசு தடை செய்திருக்கிறது. இப்போது ஏன் இந்தத் திடீர்க் கரிசனம்? என்ன காரணம்?

3. சு.ரா. படைப்புகளை நாட்டுடமையாக்குவதன் மூலம் ‘காலச்சுவ’டைப் பலவீனப்படுத்திவிடலாம் என, ‘காலச்சுவ’டால் ஆதாரபூர்வமாக விமர்சிக்கப்பட்டுள்ள தி.மு.க.வின் பண்பாட்டுப் படை திட்டம் தீட்டியது என்று கருதுகிறோம். அரசை இன்று ஆதரிப்பவர்களும் இதே நோக்கத்தைக் கொண்டுள்ளனர். எதிரிகளின் திட்டத்திற்கு உடந்தையாகும் நல்லெண்ணம் எங்களிடம் இல்லை!

4. சு.ரா.வின் படைப்புகளைப் பரந்துபட்ட தளத்திற்கு எடுத்துப்போகக் ‘காலச்சுவடு’ எப்போதும் தடையாக இருந்ததில்லை. சு.ரா. படைப்புகளைப் பிரசுரிக்க முன்வைக்கப்பட்ட எந்தக் கோரிக்கையையும் மறுத்ததில்லை. இரண்டு உதாரணங்கள் மட்டும்:

(1) கலைஞன் பதிப்பகம் சு.ரா. படைப்புகளின் ‘ரீடர்’ பதிப்பை வெளியிட விரும்பியபோது உடனடியாக ஒப்புதல் அளித்தோம்.

(2) ‘ஒரு புளியமரத்தின் கதை’ மலிவுப் பதிப்பாகக் ‘குடும்ப நாவ’லில் வெளியிடக் கேட்ட போது படைப்பு முழுமையாகப் பிழையின்றி வெளி வர வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உடன் அனுமதி அளித்தோம்.

5. நாட்டுடமையாக்கம் என்பது இந்தியாவிலும் உலகிலும் வேறு எங்கும் இல்லாத தமிழகத்திற்கே உரிய தனித்துவமான மரபு. ஒரு படைப்பாளியின் படைப்புகள் பரவலாவதற்கு நாட்டுடமையாக்கம் தான் வழி என்ற கருத்து பகுத்தறிவுக்குப் புறம்பானது. பிற இந்திய மொழிப் படைப்புகளும் உலகப் படைப்புகளும் நாட்டுடமை செய்யப்படாமலேயே உலகப் புகழ் பெற்றுள்ளன. காந்தியின் படைப்புகள் கடந்த டிசம்பர் 31 வரை நவஜீவன் டிரஸ்டின் உரிமையாகவே இருந்தன. அவர் முழுப் படைப்புகளையும் தொகுத்து வெளியிட்ட அந்த அமைப்பு காந்தி படைப்புகளைப் பிறர் முன்அனுமதிபெற்று வெளியிடத் தடையாக இருந்ததில்லை. எனவே காந்தி நாட்டுடமையாக்கக் கோரிக்கை எழுந்ததில்லை.

6. சு.ரா. படைப்புகளை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்லும் கடும்முயற்சியில் ‘காலச்சுவடு’ ஈடுபட்டுவருகிறது. ஜெர்மன், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் இப்போது அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அம்முயற்சிக்கு உலகப் பதிப்பாளர்களுடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திடும் உரிமை எங்களுக்கு மிக அவசியம். இங்குக் காப்புரிமை அவர் படைப்புகளின் பரவலாக்கத்திற்கு இன்றியமையாத தேவையாக உள்ளது.

அ. மார்க்ஸ் தனது பிம்பத்தை வைத்து தானே சம்பாதிக்காமல், தனது கருத்துப்பரவலுக்குத் தானே தடையாக நிற்காமல் அரசுக்கு இறைஞ்சும் கடிதம் எழுதிக் காப்புரிமையை விட்டுக்கொடுத்து ‘பரிவுத் தொகை’யைப் பெற்றுக்கொள்ளட்டும். மறுப்பில்லை. எங்களுக்கு சுயமரியாதை முக்கியம்.

2

பாரதி பதிப்பகம் நாகராஜன் ‘குமுதம்’ 11.03.09 இதழில் நாட்டுடமையாக்கம் பற்றித் தன் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். ‘அரசு செய்தது சரிதான்’ என்பது அவர் முதல் கருத்து. இது இன்றைய சூழலில் நாட்டுடமையாக்கத்தை மட்டும் குறிப்பதாக இல்லை. தன்னிச்சையாகக் காப்புரிமையாளர்களின் அனுமதியைப் பெறாமல் அரசு சட்டத்திற்குப் புறம்பாக நாட்டுடமையாக்கத்தைச் சட்டசபையில் அறிவிப்பதையும் இதனால் காப்புரிமையாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள கேடுகளையும் ஆதரிப்பதாக பொருள்படுகிறது. வாரிசுகளிடம் பேசி முடிவுசெய்ய வேண்டும் என அவர் பின்னர் குறிப்பிடுவது இதற்கு முரணாகவும் அமைகிறது. நமது முக்கியமான கோரிக்கையே அரசு காப்புரிமையாளர்களுடன் பேசி முடிவுசெய்ய வேண்டும் என்பதுதானே! பிரச்சனை காப்புரிமைத் தொகை அல்ல. நாட்டுடமையாக்கத்தை அரசு முன்னெடுக்கும் முறைமை, அதில் வெளிப்படும் ஆணவம், இதுவே முக்கியப் பிரச்சனை. நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகளின் அறவுரிமை தொடர்ந்து பல பதிப்பாளர்களால் மீறப் படுவதையும் மலிவுப் பதிப்புகள் பல சமயங்களில் தயாரிப்புத் தரத்தில் மட்டுமல்ல, பதிப்புத் தரத்தில் மலிவானவையாக அமைந்துவிடுவதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

நாகராஜன் குறிப்பிடுகிறார்:

“காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் பொது மக்களுக்காகத்தான் எழுதினார்கள். இவர்கள் எழுத்துக்களை காப்புரிமை என்ற பெயரில் பரவாமல் முடக்குவது அறிவைத் தடை செய்வதுபோல்தான். லெனின், ஸ்டாலின் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எழுத்துக்களுக்குக் காப்புரிமை கிடையாது; யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் உலக நடைமுறை.”

காப்புரிமை பற்றிய புரிதலைக் குழப்புவதாகவும் பிழையான தகவல்களையும் அனுமானங்களையும் கொண்டதாகவும் இக்கருத்து அமைந்துள்ளது. காந்தியின் படைப்புகள் பற்றி முன்னர் பார்த்தோம். அம்பேத்கர் படைப்புகளை உரிமைப் பதிவாகவே இந்திய அரசு வெளியிட்டு வருகிறது. அம்பேத்கர் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.

சோவியத் ரஷ்யாவில் காப்புரிமை எழுத்தாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சோவியத் ரஷ்யா உலகக் காப்புரிமையை நடைமுறைப்படுத்திய கூட்டறிக்கைகளில் 1973 வரை கையெழுத்திடவில்லை. சோவியத் அரசு ரஷ்யாவில் ஏற்பட்ட பின்னர் 1919இல் எல்லா நூல்களும் அங்கு அரசுடமையாக்கப்பட்டன. பிரசுரம்பெறாத எல்லாக் கையெழுத்துப் பிரதிகளும்கூட அரசுடமையாயின. எல்லாத் தனியார் பிரசுர நிறுவனங்களும் ஒழித்துக்கட்டப்பட்டன. பிற நாட்டு எழுத்தாளர்களை ருஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கும் உரிமைகூட அரசுக்கு மட்டுமே இருந்தது. 1973இல் சோவியத் ரஷ்யா காப்புரிமைக் கொள்கையை மாற்றிக்கொண்டது. காப்புரிமையாளர் அனுமதியின்றி பிறநாட்டுப் படைப்புகளை மொழிபெயர்க்கும் உரிமை நீக்கப்பட்டது. ஆனால் புதிய சட்டம் 1973க்குப் பிறகு எழுதப்பட்ட பிரதிகளுக்கு மட்டுமே என முடிவுசெய்யப்பட்டது.

1973க்கு முன்னர் பிறநாட்டு எழுத்தாளர்களுக்கு சோவியத் யூனியனில் அவர்கள் படைப்புகளை மொழி பெயர்த்து வெளியிட்டபோது காப்புரிமை தரவில்லை. எனவே தனது எழுத்தாளர்களுக்குப் பிற நாடுகளில் காப்புரிமை கோர முடியவில்லை. ஆகவேதான் லெனின், ஸ்டாலின் படைப்புகளுக்குக் காப்புரிமை இருக்கவில்லை. (தனது கருத்தியலுக்கு உடன்பாடானவர்களின் படைப்புகளை ரஷ்யாவின் மொழிகளில் மொழிபெயர்க்கும்போது காப்புரிமைத் தொகையை சோவியத் அரசு அளித்தது.)

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட மார்க்ஸ் - ஏங்கல்ஸ் தொகுப்புகளுக்கான (விணிசிகீ) பதிப்புரிமையை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியன் உடையும்வரை கைவசம் வைத்திருந்தது. இன்றும் கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் படைப்புகள் பொதுவுடமையாகிவிட்டன என்றபோதிலும் பலவிதமான பதிப்புரிமைகள், மொழிபெயர்ப்பு உரிமைகளுக்கு உட்பட்டே அவை உள்ளன. இந்தியாவில் நாகராஜன் சார்ந்திருக்கும் சி.பி.எம். ஆட்சியிலிருக்கும் கேரளா, வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் எந்த எழுத்தாளரின் படைப்புகளையும் நாட்டுடமையாக்கவில்லை. கடந்த அறுபது ஆண்டுகளில் மறைந்த எந்தக் கம்யூனிசத் தலைவரின் கருத்துகளும் நாட்டுடமையல்ல. கேரளத்தில் இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் போன்றவர்களுடைய உரிமை கட்சிவசம் இருக்கிறது. கட்சிப் பதிப்பகமான தேசாபிமானியின் ‘சிந்தா’ மட்டுமே அவர்களுடைய எழுத்துக்களை வெளியிட்டு வருகிறது.

காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் கருத்துப்பரவலுக்குக் காப்புரிமை தடையாக இல்லை. எனவே அவர்களுடைய எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இல்லை. ஏனெனில் அவர்கள் படைப்புகள் முழுமையாகப் பிரசரிக்கப்படவும் பரவலாகவும் அவர்களின் காப்புரிமையாளர்கள் ஒழுங்கு செய்துள்ளனர். இங்கு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பாரதியின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட, பரவலாக்கம் செய்ய அவரது காப்புரிமையாளர்களால் முடியவில்லை. பாரதி படைப்புகளின் பரவலாக்கத்திற்கு அவர்கள் தடையாக உணரப்பட்டனர். எனவே அவர் படைப்புகளை நாட்டுடமையாக்கும் கோரிக்கை எழுந்தது. இன்று பெரியாரின் படைப்புகள் முழுமையாக வெளிவரத் தடையாக அவரது காப்புரிமையாளர்கள் இருக்கும் நிலையில் மீண்டும் பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.

எழுத்தாளர்களில் சம்பத் குடும்பத்தினர் அவர் எழுத்துக்களை வெளியிடத் தடையாக இருந்து வருகின்றனர். அரசின் தலையீடு பெரியாருக்கும் சம்பத்துக்கும் பயனளிக்கக்கூடும்.

திரு. நாகராஜன் சிரமேற்கொண்டிருக்கும் கருத்துப்பரவல் கொள்கைக்கு மகுடமாக பாரதி புத்தகாலயம் வெளியீட்டகமும் விற்பனை நிலையங்களும் செயல்பட வாழ்த்துவோம்.

நமது பார்வையில் நாட்டுடமையாக்கம் என்பது தேவை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அறுவை சிகிச்சை; எல்லா எழுத்தாளர்களுக்கும் புகட்ட வேண்டிய சொட்டு மருந்து அல்ல.

உள்ளடக்கம்