‘நாடகவெளி’ என்பதை வெளி. ரங்கராஜன் பிரபலப்படுத்தியிருக்கிறார். நாடகவெளியைப் பற்றி
மட்டுமல்ல வெளி, இடம் என்பதற்கு வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் குணம் இருப்பதை
எனக்கு அறிமுகப்படுத்தியவர் சி. மணி. இவ்விதமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக
அவர் அறிமுகப்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. சில மனிதர்களையும் சில
புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியபோதும் இது நேர்ந்தது. நடிப்பிடத்தை நான் நன்றாகப்
புரிந்துகொண்டேன். நடிகனை உத்வேகப்படுத்தும் குணம் அதற்கு இருப்பது எனக்குத் தெரிய
வந்தது. அப்புறம் பலவாறாக இதை நான் விரிவுபடுத்திக்கொண்டேன்.இடத்திலும்
காலத்திலும் அறிவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும் அது பக்குவமானவர்களை அடைந்து
அறிவுறுத்திவிட்டு மீண்டும் பயணப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறதென்றும் குருஜீஃப்
சொன்னது எப்போதும் என் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது. இன்னவிதமாக இதே
சொற்களில் அவர் சொல்லியிருக்க வேண்டியதில்லை. என்னுடைய புரிந்துகொள்ளும்
திறனுக்கும் நினைவில் தங்கியிருக்கும் அளவுக்கும் நான் உணர்ந்துகொள்வது அமைகிறது.
நான் விருப்பு வெறுப்புகளோடு இருக்கிறேன். அதுவும் எனக்கு மிகவும் நன்றாகவே
தெரியும். என்னுடைய விருப்பு வெறுப்புகள் அப்படியே இருந்துகொண்டிருப்பதில்லை. அது
மாறுகிறது. மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது. மீண்டும் மாறுகிறது. பெரிய விளையாட்டை
என் மனவெளியில் அது விளையாடுகிறது. அதனால்தான் நான் சடங்குகளை வெறுக்கவும்
செய்கிறேன். அதே சடங்கை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். இதெல்லாம்
மணியின் நட்பால் எனக்குக் கிடைத்த அனுகூலங்கள். ஒரே விஷயத்தை அவர் ஒரு விதமாகவும்
நான் ஒரு விதமாகவும் புரிந்துகொண்டிருக்கலாம்.
நான் இடத்தில் இருக்கும் சிறப்பு அம்சங்களைப் புரிந்துகொண்டபோது நம்மேல் அதன்
சிறப்புகள் ஏற வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் காரியங்களைப் புரிந்துகொண்டேன்.
கோயில் பிரகாரத்தில் அடிப் பிரதக்ஷிணம் செய்வதும் அங்கப்பிரதக்ஷிணம் செய்வதும்
அந்த வெளியின் உத்வேகம் நம்மேல் ஏற வேண்டும் என்பதற்காகத்தான் என்பது நான்
புரிந்துகொண்டவற்றுள் ஒன்று. இது பின்னாளில். சிறுவனாக இருந்தபோது கலியப்பெருமாள்
கோயில் பிரகாரத்தில் என்னை அங்கப்பிரதக்ஷிணம் செய்யச்சொன்னபோது நான் வேண்டா
வெறுப்பாகத் தொடங்கி முடிக்காமல் பாதியில் எழுந்து ஓடிவந்துவிட்டேன். இது எங்கள்
தாத்தாவுக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்தது. இப்போது என்னை அடிப்பிரதக்ஷிணமோ
அங்கப்பிரதக்ஷிணமோ செய்யச் சொன்னால் செய்வேனா? ஏன்? என் மனோதத்துவத்தில் நேர்வது
எல்லாம் எனக்குத் தெரிகிறது. பிறருக்கு முன்னால் செய்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்.
அதில் நம்பிக்கையுள்ளவர்கள் முன்னால்தான் செய்யப்போகிறேன் என்றாலும் நான் செய்வதைப்
பார்த்துக்கொண்டிராத வெளியில் உள்ள நம்பிக்கையில்லாதவர்களைக் கண்டு நான்
பயப்படுகிறேன். என்னைப் பிற்போக்குவாதி என்றும் மூட நம்பிக்கை உள்ளவனென்றும்
நினைத்து விடுவார்கள் என்றும் எனக்குப் பயமாக இருக்கிறது. ஆனால், அங்கப்பிரதக்ஷிணமோ
அடிப்பிரதக்ஷிணமோ செய்யாமல் வெறும் பிரதக்ஷிணம் செய்யும்போதே அந்த வெளியின்
ஆதிக்கம் என்மேல் ஏறுவதை நான் உணர்கிறேனே! கோயிலுக்குள் நுழைந்ததற்கே நான்
வெட்கப்பட்டிருக்க வேண்டுமே! அந்த ஊரில் அனைத்து மக்களையும் உட்கொள்ளக்கூடிய
அளவுதான் பிரகாரத்தின் அளவு என்று மரபு சொல்லும் போது கோயிலுக்குள்
அனுமதிக்கப்படாத ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள் என்னும்போது அதற்குத்தான்
வெட்கப்பட வேண்டும். எப்படி இருந்தாலும் இடத்துக்கு நம்மை உத்வேகப்படுத்தும் குணம்
இருந்துகொண்டிருக்கிறது.
நாங்கள் வேலைசெய்யும் இடத்தில் எங்களை உத்வேகப்படுத்தும் சக்தியைப் பெறுவதற்காக
நாங்கள் வேலை செய்கிறோம். நாங்கள் செய்கிற எல்லா வேலைகளும் அந்தச் சக்தியைக்
கொடுத்துவிடுகின்றன. இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் நெ.1, வைகாசித்தெருவில்
உள்ள இடத்திற்கு எங்களை உத்வேகப்படுத்தும் சக்தி இருந்து கொண்டிருக்கிறது.
பக்கத்தில் நாறும் ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கும்போதும் மாலை நேரங்களில்
கொசுக்களின் தொல்லை அளவுக்கு அதிகமாகவே இருந்துகொண்டிருக்கும்போதும் கூரையின்
‘ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்’ வெயிலைவாங்கி மேல் அடிக்கும்போதும் அந்த இடத்திற்கு எங்களை
உத்வேகப்படுத்தும் திறன் இருந்து கொண்டிருக்கிறது. அதன்மேல் அதை ஏற்றியவர்கள்
நாங்கள்தான். எங்கள் குரல் எதிரொலிக்காமல் ஓரளவு பெரிதுபடுத்திக் கேட்க அந்த இடம்,
இடம் கொடுக்கிறது. உயர்ந்த கூரையில் இருந்து நிகழ்ச்சியின்மீது ஒளிவீசும்போது அது
கண்ணைக் குத்துவதில்லை. தரையைக்கூட அது மண்ணாக இருந்ததைச் சதுர ஓடுகளைப் பதித்துச்
செம்மைப்படுத்திவிட்டோம். பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கும் படிக்கட்டுகளை
அமைக்க வேண்டிய ஸ்லாடட் ஆங்கிள்களும் ஃபிளைவுட் பலகைகளும் போதுமான அளவு கைவசம்
இருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து இடத்தின் அகல நீளத்தால் அதற்கு உத்வேகப்படுத்தும்
சக்தியைக் கொடுத்துவிட்டன. நல்ல பயிற்சிகளைத் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச்
சொல்லிக்கொடுக்கத் தொடர்ச்சி அறாத நீட்சியுடன் இருந்துகொண்டிருக்கிறது. எல்லா
விதமான- முற்றிலும் எல்லாவிதமான- பயிற்சிகளும் ஒரு முழுநடிகனை உருவாக்குவதற்கு
வேண்டியவை என எங்களுக்குத் தெரியும். பணம் இல்லாவிட்டால்கூட “ஐயோ பணமில்லையே” என்ற
அளவுக்கு இல்லை. இதெல்லாம் தான் அந்த இடத்திற்கு உத்வேகப்படுத்தும் சக்தியைக்
கொடுத்திருக்கின்றன. சுவர்கள் நெருங்கிவந்து அழுவதில்லை. மேற்கூரை மேலே
இறங்கிவிடுவதில்லை. எங்கள் சப்தத்திற்குத் தெருவில் உள்ளவர்கள் ஆரம்பத்தில்
எதிர்ப்புத் தெரிவித்தாலும் இப்போது நட்புணர்வோடு இருக்கிறார்கள். இது
எல்லாவற்றையும் மீறி எங்களை அழுத்தும் ஓர் இடத்தைப் போரிட்டு எப்படி
வணக்கிக்கொண்டுவருவது என்பதை நாங்கள் கற்றிருக்கிறோம். இப்படியெல்லாம் ஓர்
இடத்துக்கு சக்தி ஏற்றுவதற்கு எல்லாம் அப்பால் இடத்துக்கு சக்தி
இருந்துகொண்டிருப்பதைத் தெரிந்துகொள்வதற்கு நாம் தயாராய் இருந்தால் அது தெரியவரும்.
மணி எனக்கு ஒரு சைக்கிளைக் கொடுத்திருந்தார். அவர் சைதாப்பேட்டை ஆசிரியர்
பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது அது அவரிடம் இருந்தது. அதை அவருடைய
தந்தை அவருக்குப் பள்ளிக்கூடம் போவதற்காக வாங்கிக்கொடுத்திருந்தார். மிகவும்
பழையதான அது மிக நன்றாகவே உருண்டுகொண்டிருந்தது. ஆங்கிலத்தைப் போதிப்பதில் பயிற்சி
பெறுவதற்காக அவரை செகண்டராபாதில் உள்ள இன்ஸ்டிடியூட்டுக்கு அரசாங்கம் அனுப்பிவைத்தது.
அப்போது அவர் அதை என்னிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அதற்கு 100 ரூபாய்
கொடுங்கள் என்றும் அந்த நூறு ரூபாயை மாதம் பத்து ரூபாயாகக் கொடுங்கள் என்றும்
கொடுத்துவிட்டுப்போனார். ஆனால் நான் அந்தப் பணத்தை அவருக்குக் கொடுக்கவே இல்லை.
அந்த சைக்கிளில் நான் சென்னையில் போய்வந்துகொண்டிருந்தேன். அதன் ஸீட்டை மட்டும்
மாற்றி வேறு ஸீட் போட்டேன். ஆனால் அது அதன் தேய்மானங்களை எல்லாம் தாண்டி ஒரு
நேரத்தில் ஒரு இடத்தில் எப்போதும் மிகவும் பொருத்தமான உறுப்புகளால்
பொருந்தியிருப்பதைப் போல ஓடத் தொடங்கியதை நான் புரிந்துகொண்டேன். அதாவது அது
அந்த இடத்தில் போவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தபோது அது அதைச் செய்தது. அப்போது
நான் வாலாஜாரோடு வீட்டுக்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அலையன்ஸ் ஃபிரான்ஸாய்ஸூக்குப்
போய்விட்டு வீடுதிரும்புகிறபோது கமாண்டர் இன்சீப் ரோட்டைத் தாண்டி இடதுபுறம்
திரும்பிப் பெண்களுக்கான அரசாங்க ஆர்ட்ஸ் காலேஜின் முன்னால் வரும்போது அந்த
சைக்கிள் மிகவும் அற்புதமானதாகிவிடும். அது அந்த இடத்தைக் கடந்து கொஞ்சதூரம்
சென்றதும் பழைய இயல்புகள் அதற்குத் திரும்பிவிடும். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல,
தினமும். அந்த வழியாகத்தான் நான் பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது அது அந்த ஒழுங்கை அடைந்துகொண்டிருந்தது.
ஒருமுறை நான் இதை சுந்தர ராமசாமியிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் எனக்குத் தன்
அனுபவம் ஒன்றையும் சொன்னார். அவர் தன்னுடைய காரில் நாகர்கோயிலிலிருந்து
கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் இப்படி நேரும் என்று சொல்லியிருக்கிறார்.
அவ்வளவு பொருத்தமான அலைன்மெண்டில் கார் போகும்.
இப்போது நான் அந்த வழியில் போகிறபோது அது நேர்கிறதா என்று நான் பார்க்கவில்லை.
உணரும் சக்தியை நான் இழந்திருக்கலாம். அதாவது அந்த இடத்துக்கு அந்த சக்தி இருப்பதை
என்னுடைய உணரும் சக்திக்கு சக்தி இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் தினமும் வேலை
செய்யும் எங்கள் இடத்துக்கு உத்வேகப்படுத்தும் சக்தி இருந்துகொண்டிருப்பதை நான்
உணர்கிறேன். அங்கே பலவிதமான பயிற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எந்தப்
பயிற்சிக்கும் இடம்கொடுக்கும் இடமுள்ள இடம் அது. குட்டிக்கரணம்போடுவது
முதற்கொண்டு கூரையில் ஏறுவதுவரை எத்தனையோ பயிற்சிகள். ‘ரூத்’ என்னும் இஸ்ரேலில்
இருந்து வந்து எங்களோடு பயிற்சிகளை மேற்கொண்ட டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில்
தியேட்டர் போதிக்கும் ஒருவர் ஒவ்வொருமுறை வரும் போதும் ஒவ்வொருவிதப் பயிற்சியை
மேற்கொண்டிருக்கிறார். ஒருமுறை உருளைகள்மீது உள்ளங்கால்கள் வைத்து நிதானம் பண்ணி
நடக்கின்ற பயிற்சியை மேற்கொண்டார். நீர்ப் பந்துகளில் முதுகை வைத்து உருளுவதும்
வயிறு, மார்புகளை வைத்து உருளுவதும் ஆகிய பயிற்சிகள். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப்
போலப் பூமியில் கிடந்து உடம்பு எடுத்துக்கொள்ளும் வடிவங்களையும் பல உணர்வுகளையும்
அதன் மூலம் உணர முடிந்தது. அவர் இன்னொருமுறை வந்தபோது கூழாங்கற்களை உடம்பின் பல
பகுதிகளில் வைத்துச் சில பயிற்சிகளை மேற்கொண்டார். அதன்மூலம் நடிகன் பூரண உணர்வைப்
பெற முடியும் என்று எனக்குத் தோன்றிற்று. இவையெல்லாம் உடல் மட்டுமல்ல உள்ளமும்
சம்பந்தப்பட்ட பயிற்சிகள். இப்படியெல்லாம் நான் முழு உணர்வையும் பெறுகிறபோது,
நடிகன் முழு உணர்வையும் பெறுகிறபோது ஒரு பாத்திரத்தின் தன்மைகள், குணநலன்கள்
எல்லாவற்றையும் மொத்தமாக வெளிக்கொண்டுவர முடிகிறது. நாங்கள் ஒவ்வொரு கட்டத்திலும்
உணர்ந்தோம். என்ன உணர்ந்தோம் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறோம். எங்களுக்குத்
தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் உணர்வுகளைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு
வருகிறோம். கூட்டு முயற்சியில் செய்கிறபோது பல விஷயங்களைக்
கண்டுபிடித்துக்கொள்வது சாத்தியமாகிறது.
இவை எல்லாவற்றோடும் மணிக்குத் தொடர்பிருக்கிறது. கி. அ. சச்சிதானந்தத்திற்குத்
தொடர்பிருக்கிறது. எங்கள் நடிகர்களில் பலர் விபாசனா தியானத்தில் பயிற்சி
பெற்றிருக்கிறார்கள். பலமுறை மேற்கொண்டிருக்கிறார்கள். சிலர் விபாசனாவை முடித்து
சதிபதனாவுக்கும் போய்வந்திருக்கிறார்கள். அவர் முகங்களில் ஏறியிருக்கும் தேஜஸை நான்
பார்க்கிறேன்.
சி. மணி எனக்கு அறிமுகப்படுத்திய கார்லோஸ் காஸ்டனாடாவின் டான்ஜூவான் போதனைகளின்
மூலம் நான் கண்டுபிடித்துக்கொண்ட இடத்தின் மகிமைதான் எங்கள் நடிப்பிடத்திற்குப்
பெரிய மேன்மையைக் கொடுத்திருக்கிறது. எங்கள் நண்பரும் தியேட்டர்காரருமான அன்மோல்
வெலானியிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நம்முடன் உறவுகொள்ள மறுக்கும்
நடிப்பிடத்தை என்ன செய்வது? அதைப் போராடித்தான் வெற்றிகொள்ள வேண்டும். அது நம்மைப்
பிடித்துக்கொள்ளும் பிடிப்புகளிலிருந்தெல்லாம் உதறிக்கொண்டு வெளிவரும்போது
நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சுதந்திரம் எங்கும் இருந்துகொண்டிருக்கிறது.
அதை நாம் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும். |