|
தலித் அரசியலின் வெளிப்பாடு வீச்சாகப் புறப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்களின்
வீட்டில் அகல் விளக்குகளாய் மாறிப்போய்விட்ட அதிர்ச்சியை தலித் மக்கள் கண்டு
வருகிறார்கள். தமிழகத்தில் சாதிய சமூக அடுக்குகளில் சிக்கி மனித உரிமைகளை இழந்து
அன்றாடம் பல இழிவுகளைச் சந்தித்துவரும் தலித் மக்களின் விடுதலைக்காகவே கருக்கொண்டது
எங்கள் அமைப்பு எனப் புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற
அமைப்பினர் மேற்கண்ட கொடுமைகளை ஒழிப்பதற்கு மனசாட்சியுடன் செயல்படாத, அவை தொடர
உதவிவருகிற திமுக, அதிமுக கட்சிகளுடன் நெருக்கமாக உலாவருவதற்குத் தயங்கிடவே இல்லை.
தலித் மக்கள் திரளின் சக்தியால் இவர்கள்மீது மீடியாக்களின் வெளிச்சம்பட்டுத்
தலைவர்கள் எனும் அந்தஸ்தைப் பெற்றதும் அரசியல் போதை தந்த மயக்கத்தில் அவர்களின்
வாழ்வியலை மாற்றிட மறந்து தன் கூட்டாளிகளுக்கு எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்காக
தலித்துகளின் இருப்பை இப் படியே இருத்தி வைக்க நினைக்கும் எதிரிகளுடன்கூடக்
குலாவிடத் தயாராகிவிட்டார்கள். தலித் மக்களின் விடுதலையைப் பெறுவதற்கு தலித்
அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதையோ பிற அமைப்புகளில் தமக்கு எதிரிகள் யார்?
நண்பர்கள் யார்? என்பதையோ பகுத்தாராய்ந்து பயன்படுத்திக் கொள்ளவோ இவர்கள் தயாராக
இல்லை. அடிமைத்தளையிலிருந்து மீள நினைக்கும் விளிம்புநிலை மக்களிடம் அதிகாரக்
கனவுகளை வலையாக வீசி இவர்கள் பதவிகளைப் பெற்று இவர்கள் ஆடம்பரமாய் பவனி வருகிறார்கள்.
ஆனால் அம்மக்களின் விடுதலைக் கனவு வீதியில் கிடந்து மிதிபடுகிறது. இதை தலித்
அரசியலின் (தமிழகத்தில்) தோல்வியாகவே அறிய முடிகிறது.
முகவை புனிதன்
இராமநாதபுரம
தலையங்கம் தற்கால தலித் அரசியலின் பின்னடைவை அற்புதமாய் வெளிப்படுத்தியிருந்தது.
ப. சிவகாமியின் நேர்காணல், ஒரு படைப்பாளி என்கிற முறையில் தலித் மக்களின் வாழ்வியல்
நிலத்துடன் இணைந்தது என்பதைச் சமூகப் பார்வையுடன் முன்வைத்தது. ஆனால் பெண்களுக்கு
மட்டுமான அரசியல் கட்சி என்கிற முன்மொழிவு எதார்த்தமான தாய் இல்லை. மேலும் தற்போது
அவர் அடையாளம் கண்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்துச் சிலாகித்து
உரையாடியது அவர் அரசியல்வாதியாகிவிட்டார் என்பதை உணர்த்தியது.
1992இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான்
கமிஷன் தனது விசாரணையை 16 ஆண்டுகள் நடத்தி மசூதி இடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள்
யார் என்பதைப் பகிரங்கமான சாட்சிகளோடு வெளிப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாத அரசியல் கோழைத்தனத்தால்தான் பிஜேபி மீண்டும் ராமர் கோவில் என்ற தனது
மதவெறிப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்துள்ளது. மசூதி என்னும் பெயரில் மதச் சார்பின்மை
உடைத்தெறியப்பட்ட போது உறங்கிய அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாரிசுகளாய் இன்னும்
ஒரிசா கலவரம், மலோகாவ், கர்நாடகா போன்ற வன்முறை மதவெறி அரசியலை எதிர்கொள்ளும்
திராணியின்றியே காங்கிரஸ் தொடர்கிறது. இதில் மதச்சார்பற்ற கட்சி எனத் தனக்குத்தானே
பெயரும் வைத்துக்கொள்வது அவமானம்.
நா. கலையரசன்
மங்களக்குடி
எழுத்தாளர் சிவகாமியின் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரவேசம் என்னைப்
போன்றவர்களுக்குத் தொடக்கத்தில் மிகுந்த ஆச்சரியத்தை உருவாக்கியிருந்தது.
‘புதிய கோடாங்கி’ இதழ் செயல்பாடு தலித் இலக்கியத்திற்குப் பெரும் வரவாய்
அமைந்தது. வீழ்ந்துகிடந்த ‘கோடாங்கி’ பத்திரிகையைப் ‘புதிய கோடங்கி’யாக இன்றும்
தொடர்ந்து கொண்டிருக்கிறார் சிவகாமி. தலித்துகள், பழங்குடிகள், அரவாணிகள் மாநாடு
நடத்தித் தனிப்பெரும் கவனத்தைப் பெண்கள் ஐக்கியப் பேரவை மாநாடு போலவே அரசின்
கவனத்திற்குக் கொண்டுவந்தவர்.
எந்தவொரு எழுத்திற்குப் பின்னாலும் அரசியல் உள்ளது போலவே இவரது எழுத்திற்குப்
பின்னாலும் அரசியல் இருந்தது. இலக்கியவாதியாய், தலித்துகளின் குரலாய் வலம் வந்த
சிவகாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமாவளவன், கிருஷ்ணசாமி, அதியமான் ஆகியோரை
ஒன்றிணைத்து மாநாடு நடத்தி ஒற்றுமைக்கு முன்மொழிந்தவர்.
தலித்துகளின் அன்றாடப் பிரச் சினைகளை இன்றும் சமூகத்தில் ஒழிக்க முடியவில்லை.
அதிலும் தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நிறைய அறிந்தவர் சிவகாமி.
தலித் சமூகம் அடிப்படை அரசியல் அறிவுபெற்று கிளர்ந்தெழுந்து கல்வி, பொருளாதார
ரீதியாக உயர்வடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமெனத் திட்டங்கள் தீட்டி வழிகாட்ட
வேண்டியுள்ளது.
மாறாக அரசியல் களத்தில் ‘உயர்சாதி ஏழைகளை’ மையப்படுத்துவது தலித்துகளுக்கும்
தலித் சமுதாயத்திற்கும் ஏமாற்றத்தைத் தரலாம். மாயாவதி அவர்கள் ஓட்டு அரசியலுக்காக
உயர் சாதி ஏழைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, தலித்துக்கான விடுதலை என்பது
சாதியிலிருந்தா வர்க்கத்திலிருந்தா என்பதை ஆராய்ந்து கட்ட மைத்துக்கொண்டால் நல்லது.
மாயாவதியின் கொள்கையைக் கொண்டு தமிழகத்தில் சிவகாமி பின்பற்றுவது அவரது கடந்தகாலச்
செயல்பாடுகளை மறுமதிப்பீடு செய்யவைக்கிறது.
விழி. பா. இதயவேந்தன்
விழுப்புரம்
பெருமாள்முருகனின் கட்டுரை அரசுப் பள்ளிகளின் பணியைப் போற்றும் வகையில் அமைந்தது
பாராட்டத்தக்கது. பாடச்சுமை குழு, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வுக் குழு, சமச்சீர்கல்விக்
குழு ஆகியவற்றில் உறுப்பினராகப் பல பள்ளிகளுக்கும் செல்லும் வாய்ப்புப் பெற்றேன்.
தற் பொழுதும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகியோரோடு
தொடர்பு கொண்டுள்ளேன்.
ஒரு சில ஆங்கிலவழிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சுமார் 40% பள்ளிகள்
மட்டும் குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகள் கொண்டுள்ளன. ஏறக்குறைய 70% ஆசிரியர்கள்
பயிற்சி பெறாதோர். கற்பித்தல் கிடையாது, தேர்விற்கு ஆயத்தப்படுத்தல் என்பதே
செயல்முறை. ஒரு மூத்த இ.ஆ.ப அதிகாரியின் மனைவியும் மருத்துவராக உள்ள அவர்
சகோதரியும் ஒரு குழுவிடம் வாக்கு மூலம் கொடுக்கும்பொழுது “எங்கள் குழந்தைகள்
பிரபலமான பள்ளியில் படிக்கின்றார்கள். பாடங்களை முறையாகக் கற்பிப்பது இல்லை.
மாணவர்க்குப் புரியாத மொழியில் எழுதப்பட்ட பாடநூலில் உள்ள வினாக்களுக்குப்
பாடநூலில் உள்ள விடைகளை மனப்பாடம் செய்வது என்பதே நடைமுறை. கருத்துகளைவிட வாயில்
நுழையாத சொற்களைப் படிக்கின்றார்கள். வீட்டுப் பாடம் மிக அதிகம். இரவு எட்டு மணிவரை
அதற்கே நேரம் ஆகிறது. காலையில் நான்கு மணிக்கு எழுந்தால் தான் குறித்த நேரத்தில்
பள்ளிக்கு அனுப்ப முடிகின்றது” என்றெல்லாம் கூறினார்கள். “முதல்வரிடம் இவற்றைக்
கூறலாமே” என்றபொழுது “எங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமோ” என்றனர்.
பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் உள்ள இடைவெளி தெரிந்தது. அச்சம் நிறைந்த
சூழ்நிலையில் கற்றல் எவ்வாறு நடைபெறும்? இதுதான் கல்வியா? ஆங்கிலவழிப் பள்ளிகளில்
அளிக்கப்படுவது தரமான கல்வியல்ல, தவறான கல்வியே.
எஸ்.எஸ்.ஏ திட்டம் அரசுப் பள்ளிகளுக்குப் போதுமான கட்டடங்கள், கற்பித்தல்
கருவிகள் ஆகியவற்றை வழங்கியதோடு ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள்
அளிக்கப்படவும் வகை செய்துள்ளது. செயல்வழிக் கற்றல் முறை ஆசிரியர்-மாணவர் இடைவெளியை
நீக்கியுள்ளது. வகுப்பறைகளில் மகிழ்ச்சி காணப்படுகின்றது. ஆசிரியர் எண்ணங்களைத்
தெரிவிக்கச் சிறிது இடம் கொடுத்து இத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக்க வேண்டும்.
வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்னும் அடிப்படையில் பாடத்திட்டங்கள்
வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே உள்ளனர்.
ஓராசிரியர் பள்ளிகளும் பல இருக்கின்றன. ஆனால் ஆங்கிலவழிப் பள்ளிகளில் வகுப்பிற்கு
ஓர் ஆசிரியர் இருக்கின்றார். அவர் பயிற்சி பெறாதவராக இருப்பினும் வந்த குழந்தைகளைப்
பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்கின்றாரென்றே பெற்றோர் நினைத்து அப்பள்ளிகளுக்குத்
தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர். ஆங்கில மோகம் மட்டும் காரணமல்ல.
நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லை.
இவ்வாறு கல்வியில் இருவகை இருப்பது நாட்டிற்கு நல்லதா, அரசியல் சட்டம் தந்துள்ள
சமத்துவம், சமநீதிக் கோட்பாடுகளுக்கு உட் பட்டதா எனச் சிந்திக்க வேண்டும். நமது
வரிப் பணத்தில் நடைபெறும் பள்ளிகள் தரமான கல்வி அளிப்பதை உறுதிசெய்யும் கடமையும்
பொறுப்பும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. எல்லா நாடுகளிலும்
பள்ளிக்கல்வி அளிக்கும் பொறுப்பை அரசுகள்தான் ஏற்றுள்ளன. நம்மாலும் முடியும்.
எஸ். எஸ். இராஜகோபாலன்
சென்னை
கண்காணிப்பும் சுதந்திரமும் கட்டுரை, அரசுப் பள்ளிகள் குறித்தும் மக்களின்
மனங்களில் அது பற்றிய கருத்து குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறது. ஆசிரியர்,
மாணவர்கள் தங்கள் சுதந்திரத்தை அபாயகர மாய் மாற்றி, கீழான எண்ணத்தால் பள்ளிகளுக்கு
அவப்பெயர் தேடித் தரும் சம்பவங்களும் இருக்கின்றன. இருந்தும் பிள்ளைகளைப் பணம்
காய்க்கும் மரமாய் எண்ணும் பெற்றோருக்கு இக்கட்டுரை சரியான சவுக்கடி.
சு. வேதாராமன்
சேந்தமங்கலம்
தனியார் பள்ளி - அரசுப் பள்ளிகள் குறித்த நுண்ணிய வேறுபாடுகளைக் கண்காணிப்பும்
சுதந்திரமும் கட்டுரையில் பெருமாள்முருகன் அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அவரது வாதங்களில் உண்மை தெற்றனவே நமக்குப் புலப்படும் அதே நேரத்தில், தனியார் கல்வி
நிலையங்களுக்கு இவ்வளவு ‘மவுசு’ கூடியதன் காரணம் என்ன என்பதையும் நாம் யோசிக்க
வேண்டும்.
அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி, பொது ஒழுக்கம்
குறித்த அக்கறையின்மை, ஈடுபாடு இன்மை போன்றவை அதிகரித்ததன் பின்னணியில்தான் தனியார்
கல்வி நிறுவனங்கள் தங்கள் கடையைப் பரப்ப ஆரம்பித்தன. இன்றும் ஒரு சட்டக் கல்லூரி
விவகாரம் ஒரு அரசு சார்ந்த நிறுவன அமைப்பில்தானே நடந்தேறுகிறது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்விதச் சமூகப் பொறுப்பின்றி, எதையும்
எதிர் கொள்ளத் தைரியமற்று, ஒருவிதமான ‘பாதுகாப்புக் கூண்டு’க்குள் பம்மிப்
பதுங்குவதை வெளிப்படையாகவே காண முடிகிறது. அங்கு அவர்களுக்கு வெறும் மதிப்பெண்கள்
பெறக்கூடிய சக்கையான கல்விதான் ஊட்டப்படுகிறதே தவிர, நல்ல மனிதனை -சமூகப்
பொறுப்புள்ள மனிதனை- உருவாக்கும் முயற்சி எதுவும் நடைபெறுவதுமில்லை. அதற்கான
அவசியமும் அவர்களுக்கு இல்லை. மதிப்பெண்கள் அதிகமாகப் பெற்றுத்தரக்கூடிய
‘மிஷின்’களை உருவாக்குவதே அவர்களது நோக்கம்!
கல்வி என்பது பள்ளி, கல்லூரிகளோடு முடிந்துபோவதல்ல. அது மனிதன் சாகும்வரை உடன்
பயணிப்பது. இந்தப் புரிதல்கள் நம் சமூகத்தின் எந்த மட்டத்திலும் காணப்படவில்லை.
மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்குவது மட்டும்தான் நமது கல்வியின்
தலையாய பொறுப்பு என நம் பெற்றோர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு
உருவாக்கித் தருவது தங்களது பொறுப்பு எனத் தனியார் கல்வி நிறுவனங்கள் இடை
புகுகின்றன. சமூகத்தின் இது போன்ற பொதுப்புத்தி சார்ந்த சிந்தனைகளை
ஒழித்துக்கட்டுவது பெரும் சிரமம். படித்தவர்களே இப்படி இருக்கும்போது பாமரர்களைப்
பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையையும் உலகையும் புரிந்துகொள்ளத்தான்
கல்வியே தவிர, பிழைப்பதற்கல்ல. பிழைப்பு என்பது இரண்டாம் பட்சம்தான் என்ற சிந்தனை
நம் சமூக மனசாட்சியில் பட்டுத் தெறிக்கும்வரை தனியாரின் இறுக்கமும் அராஜகமும்
தொடரவே செய்யும்.
கே. எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்
ஒரு போராளி துரோகியான கதையைப் படித்துப்பார்க்கும் வாய்ப்பு கருணாவுக்குக்
கிட்டினால் அவர் தற்கொலைசெய்துகொள்ள நேரிடலாம்.
சமகாலத்தில் ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டே உரிய
செயல்களில் ஈடுபட வேண்டியதை மிகவும் சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்டு வருவோர்
துரோகிகளைவிட மோசமானவர்கள்.
புறநானூற்று வீரத்தைப் பேசியே இளைஞர் நெஞ்சில் உணர்ச்சியூட்டி இந்தி எதிர்ப்புக்
கிளர்ச்சியின் அறுவடையாக ஆட்சியைப் பிடித்த தலைவர்களுக்கு, வாய்ச் சொல்லே
மூலதனமாகக் கொண்டவர்களுக்கு இன்றைய போராளித் தமிழன் வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல்,
பீரங்கி, செயற்கைக்கோள் தொடர்பு சாதனம் ஆகியவற்றை வைத்திருப் பதைப் பெருமையும்
பெருமிதமும் பொங்கப் பாராட்டி மகிழக்கூடப் பயந்துகொண்டு தில்லியின் காலடியில்
கிடப்பது கேவலமாகத் தோன்றவில்லையா?
துரோகத்தின் பரிசாகப் பெற்ற பதவிகளைக் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதிலேயே
குறியாக உள்ள தலைவர்களின் பின்னால் கொடி தூக்கிக்கொண்டு அலைய எத்தனை துரோகிகள்.
பிடல் காஸ்ட்ரோவையும் சே குவேராவையும் புரட்சியாளர்களாகப் போற்றிப் புகழும்
தமிழர்கள் சிலருக்குப் புலிகளென்றால் ஒவ்வாமை. செம்மொழித் தமிழுக்கு நாடொன்று
கிடைக்கட்டும் தமிழீழத்தின் மூலமாகவெனில், ஈழம் தனி நாடானால் கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணம் செல்லக் கடவுச் சீட்டு பெற வேண்டுமே எனக் கவலைப்படுகிறார் இங்குள்ள
தமிழர் ஒருவர்.
முத்துக்குமாரின் தியாகத்தால் எழுந்த மாபெரும் எழுச்சியை, அற்பப் பதவி
சுகத்துக்காக அடக்கி ஒடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் முனைந்த தமிழர்கள் யாவரும்
துரோகிகளே. கருணா மட்டுமே துரோகியன்று; தமிழ்நாட்டிலும் பல கருணாக்கள் உள்ளனர்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
தேவிபாரதியின் சிறுகதை (மார்ச் 2009) அபத்தம். அருவருப்பாக இருந்தது. பக்கங்களை
வீணடித்து உள்ளீர்கள்.
ம. கலியமூர்த்தி,
சென்னை
112வது காலச்சுவடு இதழில் ப்ரவாஹனின் ‘பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்’
எதிர்வினை குறித்து.
பிரஞ்சு ஆய்வாளர் ஆபி டியூபா (Abbe J.A. Tubois) தனது Hindu Manners Customs and
Ceremonies என்ற ஆய்வு நூலில்
ஆரியர்கள் குணங்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ள சொற்களைக் கொண்டே அறிஞர் அண்ணா
(சி. என். அண்ணாதுரை) ஒரு போற்றிப் பாசுரத்தைத் தீட்டியுள்ளார். “பேராசைப்
பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி!” எனத் தொடங்குகிறது அந்தப்
பாசுரம். ஆபி டியூபா எழுதியதை அண்ணா வழிமொழிந்துள்ளார். மகாகவி பாரதியாரும் இதனை
வழிமொழிந்திருப்பது அண்ணாவின் ‘ஆரிய மாயை’க் கருத்தாக்கத்திற்கு வலு சேர்ப்பதாகும்.
ஆபி டியூபா ஒரு பிரஞ்சு பாதிரி. அவர் முப்பதாண்டுகளாக இந்தியா முழுவதும்
சுற்றிவந்து, மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, அறிந்தவற்றை நூலில்
எழுதினார்.
‘பேராசை என்பது பார்ப்பன இனத்தவர் இயல்பு. எனவே அவர்கள் வேதாந்திகள் போன்று
விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை’ என்ற ஆபி டியூபாவின் வாசகத்தைக் குறிப்பிட்டு,
‘மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள் பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும் தானே
நடக்கிறது’ என்று அண்ணா கூறுகிறார்.
‘ஆரியர் -திராவிடர் வேற்றுமையே இல்லை என்கிறார் எதிர்வினையாளர். ஆரியர் -
திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில், புராணங்களில், வேத ஸ்மிருதிகளில், நாட்டுப்
பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இது இல்லை என்று
யார் மறுக்க முடியும்?’
நான்கு வருணங்களாக மனிதர்களை வகைப்படுத்தியதும் பஞ்சமர் என்று பாட்டாளி மக்களைத்
தீண்டத்தகாதவர்கள் என்று தனிமைப்படுத்தியதும் மனு தர்மம் செய்திட்ட மாபெருந்
தவறல்லவா? திராவிட இயக்கம் இந்த மனு தர்மத்தை முழுமையாக மறுக்கிறது. அதற்காகப்
பார்ப்பனர்களைக் கீழானவர்கள் என்று கற்பிப்பதாகச் சொல்வது தவறு.
பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனுதர்மத்தைப் போற்றிப் பாதுகாக்கும்
பிராமணர்கள் அதை முற்றிலுமாக மறுக்கின்ற திராவிட இயக்கத்தில் எப்படி இடம்பெற
முடியும்? வி. பி. இராமன் இடம் பெற்றது தவறுதான்.
12,000 பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் ஒரு நாற்பது பாடல்களை எடுத்துக்காட்டி,
ஆபாசக் களஞ்சியம் என வர்ணிக்கலாமா என்று கேட்கப்படுகிறது. ஒரு பானை சோற்றில் சில
துளிகளே நஞ்சு கலந்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாமா?
சேர சோழ பாண்டியர்கள் பார்ப்பனர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டனர் என்பது
புறநானூற்றுப் பாடல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. ஆம்,
‘ஆரிய மாயை’க்கு அவர்கள் ஆட்பட்டவர்களானார்கள். விஜயநகரம் ‘மகாராஜா கல்லூரியில்’
சரித்திரப் பண்டிதர் எம். எஸ். இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள ‘மதுரை ஜில்லா பூவருணனை’
நூலில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
“ஆதிக் காலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.
பின்பு ஆரியர் திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப்
பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான்
தமிழ்நாட்டில் ஆரிய நாகரிகம் பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும்
ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டன”.
வரலாற்று ஆசிரியர் பி. டி. சீனிவாச ஐயங்கார் தமது “இந்திய சரித்திம்” என்னும்
நூலில், இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியரின் செல்வாக்கு எப்போது எவ்வாறு வேரூன்றத்
தொடங்கியது என்று விவரிக்கிறார். ‘கி. மு. 320 வரையிலான காலகட்டத்தில்தான் கொஞ்சம்
கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில் பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள்.
பிராமணர்களின்யாக முறையில் ஆசை பிறந்தவுடன் அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய அரச
வம்சத்தில் தங்களையும் சம்பந்தப்படுத்திக்கொள்ளும் வேட்கை மன்னர்கள் மனத்தில்
பிறந்தது’ என்று பி. டி. சீனிவாச ஐயங்கார் எழுதியிருக்கிறார்.
திராவிடக் கருத்தியல் பற்றி ராபர்ட் கால்டுவெல் கூறியிருப்பதை எதிர்வினையாளர்
முன்வைக்கிறார். அத்துடன் பி. டி. சீனிவாச ஐயங்கார், ஆபி டியூபா போன்றவர்களின்
கருத்துகளையும் சேர்த்து நாம் கருதிப் பார்க்கலாம் அல்லவா?
‘மனுதர்மம் பார்ப்பானை உயர்ந்தவன் எனக் கற்பித்தால், திராவிட இயக்கம் அவனைக்
கீழானவன் என்கிறது’ என்றும், ‘பிறப்பைக் கொண்டு தகுதியை நிர்ணயிக்கிற பணியை மனு
செய்ததாகச் சொல்லிக்கொண்ட அதே பணியைத் திராவிட இயக்கமும் செய்கிறது என்றும்
சொல்கிறார் ப்ரவாஹன். மனிதர்களிடையே ஏற்றதாழ்வைக் கற்பிக்கிற மனு தர்மத்தைக்
கைவிடப் பிராமணர்கள் முன்வந்தால், அதன் எதிர்வினை என்பது தானாகவே மறைந்து விடும்
அல்லவா?
மாறாநிலைக் கோட்பாடு பிராமணர்களிடம் உள்ளது. அவர்களிடம் வேரூன்றியுள்ள உயர்வு
மனப்பான்மை, உடல் உழைப்பாளிகளைத் தாழ்வுபடுத்துகின்ற மனுதர்மத்தை இறுக்கமாகப்
பற்றிக்கொண்டிருத்தல், தாய்த் தமிழ் மொழியைவிடத் தமக்குத் தெரியாத சமஸ்கிருத
மொழியை உயர்த்திப் பிடித்தல் போன்ற நடைமுறைகளைப் பிராமணர்கள் கைவிட முன்வந்தால்,
ஆரியர்-திராவிடர் என்ற இன வேற்றுமை மங்கி மறைந்துவிடும். இதைத் தெரிவிப்பதற்காகவே
அண்ணா ‘ஆரிய மாயை’யை வெளியிட்டார். அறிஞர் அண்ணா பிராமணியத்துக்கு மட்டுமே எதிரானவர்;
ஒருபோதும் அவர் பிராமணர்களுக்கு எதிராக இருந்ததில்லை.
க. சி. அகமுடைநம்பி
மதுரை |