|
பிரான்சிஸ் ஜெயபதி (1948) தத்துவவியல், இறையியல் படிப்பின் ஊடாக மானுடவியலில்
ஈடுபாடு கொண்டு தில்லிப் பல்கலைக்கழகத்திலும் இலண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸிலும்
மானுடவியலை முறையாகப் பயின்றவர். “காணிக்காரர் சமூகம்” பற்றிய ஆய்வுகளும் மானுடவியல்
அறிஞர் கிரிஸ் புல்லர் மேற்பார்வையில் “கன்னியாகுமரி கடற்கரை மக்கள்” குறித்து இவர்
மேற்கொண்ட ஆய்வுகளும் குறிப்பிடத்தக்கவை. சென்னை லயோலா கல்லூரி கல்ச்சர் அண்ட்
கம்யுனிகேசன், பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை
ஆகியவை ஜெயபதியால் முன்னெடுக்கப்பட்டுத் தமிழ்க் கல்விப்புலத்திலும் பண்பாட்டுச்
செயல்பாடுகளிலும் முறையான அறிவையும் அக்கறையையும் உருவாக்கியவை. சுனாமிக்குப்
பிந்தைய பணிக்களத்தில் சேசுசபை சுனாமிக் குழுவில் இடம்பெற்றுக் கடற்புர மக்கள்,
கடல்சார் பண்பாடு குறித்து ஜெயபதி முன்வைத்த பார்வைகள் தனித்துவமானவை. போதை நோய்
பணிக்குழுவின் மூலம் கடந்த நான்காண்டுகளாகக் குடிநோயாளி, நோயாளியின் குடும்பம்,
சமூகமெனக் குடிநோய் சார்ந்து அவர் பணியாற்றும் விதம் தமிழ்ச் சூழலில் புதிதாக
அறியப்படுவது.

தமிழ்ச் சமூக - பண்பாட்டுத் தளத்தில் கடந்த முப்பதாண்டுகளாக
முக்கியப் பங்களிப்பாற்றி வரும் ஜெயபதி அவர்கள் பண்பாடு தொடர்பான பணிகளைத்
திட்டமிடுதலிலும் அதை மக்கள்மயமானதாகச் செயல்படுத்துவதிலும் ‘குழு’வை
முன்னிலைப்படுத்தி இயங்கும் அணுகுமுறையைக் கடைபிடிப்பவர்.
“நிறுவனத் திருச்சபையையும் கட்டமைக்கப்பட்ட உலகத்தையும் தாண்டிய ‘மனிதம்’ என்கிற
பொருண்மைதான் எனக்கு முக்கியம். கண்களுக்குப் புலப்படாத இந்த மனிதத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கும் அனைத்து சக்திகளுடனும் இணைந்து செயல்பட நான் விழைகிறேன்.
நான் எந்த இடத்திலும் எந்தத் தருணத்திலும் அவற்றை அடையாளம் காணும் தேடலில்
இருக்கிறேன். திருச்சபையின் விளிம்பில், இயேசுவின் இறையரசும் உலகமும் சந்திக்கும்
இடத்தில் எப்போதும் என்னை இருத்திக்கொள்ள முயல்கிறேன்” எனக் கூறும் அருட்தந்தை
பிரான்சிஸ் ஜெயபதி அவர்களுக்கு 12.4.2009 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மணிவிழாவில்
அவரது முழுமையான நேர்காணல் நூலான சால் வெளியிடப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.
குடும்பம், இளமைப் பருவம், கல்வி, சேசுசபை, கிறித்தவம், பண்பாடு, நாட்டார்
வழக்காறுகள். கடல்புர மக்கள், குடிநோய், ஆன்மிகம் எனப் பல்வேறு பகுதிகளாக விரியும்
இந்நேர்காணலில் குடிநோய் பற்றிய தேர்ந்தெடுத்த பகுதி மட்டும் இவ்விதழில்
பிரசுரமாகிறது.
குடி ஒரு நோய் என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொண்டதைப் பற்றிக் கூறுங்கள்.
“எல்லாருக்கும் தெரிந்த பரம ரகசியங்களில் ஒன்று உன்னுடைய குடி” என்று சில
வருடங்களுக்கு முன் என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு எழுதியிருந்தார்.
15 ஆண்டுகளாக நான் குடிநோயால் சீரழிந்திருக்கிறேன். என்னுடைய குடியைப் பற்றிப்
பலருக்கும் தெரியும். இந்தக் குடிப் பிரச்சினைக்காக நான் ஐந்து முறை
மருத்துவத்திற்குச் சென்றுள்ளேன். ஆனால் 2006 மார்ச் மாதம் மங்களூரில் உள்ள
Friendship Houseக்குக் குடிநோய்க்கான மருத்துவத்திற்காகச் சென்றபோதுதான்
முதல்முறையாகக் ‘குடி’ ஒரு ‘நோய்’ என்பதைப் புரிந்துகொண்டேன்.
இதற்கு முன்னால் மருத்துவத்திற்குச் சென்றபோது ‘மற்றவர்கள் எனது குடியை
விமர்சிக்கிறார்கள்’; ‘குடியை நான் நிறுத்த வேண்டும்’; ‘குடியை நான்
கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம்’ என்பவை என் எண்ணங்களாயிருந்தன.
அக்காலகட்டத்தில் ‘குடி ஒரு நோய்’ என்னும் கருத்து எனக்குத் தெளிவாகவில்லை.
எப்போது குடி ஒரு நோய் என்று தெரிந்துகொண்டேனோ அன்றிலிருந்து இந்தக் குடியைத்
தவிர்த்து வாழும் வழிகளையும் கற்றுக்கொண்டு, மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் குடியைத்
தவிர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் குடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உங்களுடைய நண்பர்கள்
குடிப்பதற்கும் நீங்கள் குடிப்பதற்கும் வித்தியாசம் இருந்ததா?
நான் குடியை ரசித்து, அனுபவித்துக் குடித்தேன். என்னால் அதிகம் குடிக்க முடியும்
என்ற திராணியும் தெம்பும் இருந்ததாக நினைத்தேன்.
அந்த எண்ணங்கள் எல்லாம் குடிநோய் சார்ந்தவை என்ற விவரமே எனக்குப் பின்னர்தான்
தெரியவந்தது. நான் குடிக்க வேண்டாமென்று இருந்தாலும், குடிப்பது இந்தச் சூழலுக்குப்
பொருந்தாது என்று இருந்தாலும் அல்லது கொஞ்சமாகக் குடிப்போம் என்று இருந்தாலும்,
குடிக்க ஆரம்பித்துவிட்டால் என் குடியை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
குடித்தால்தான் காரியங்கள் செய்ய முடியும் என்ற நிலைக்கு நான் வந்துவிட்டேன். அந்த
நிலைக்கு வந்த பிறகுதான், ஏதோ ஒருவிதத்தில் இது எனக்குத் தொந்தரவாக உள்ளது; இதற்கு
ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று நான் உணர்ந்தேன். சொல்லப்போனால்
மேலதிகாரிகளின் வற்புறுத்தலில்தான் நான் மருத்துவத்திற்குச் சென்றேன்.
குடியையும் குடிநோயையும் எப்படிப் பிரித்துப் பார்க்கிறீர்கள்?
முன்னால் எனக்குக் குடிப்பழக்கமிருந்தது. அதனால் என்னுடைய வேலைகளோ உணர்வுகளோ
தன்னம்பிக்கையோ எதுவும் பாதிக்கப்படவில்லை. அப்போது குடித்தால்தான் வேலைசெய்ய
முடியும் என்ற கட்டாயம் வரவில்லை. என்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காகக்
குடிக்க வேண்டுமென்ற எண்ணம் வரவில்லை. கிடைக்கிற நேரத்தில் குடிப்பேன். மற்ற
நேரங்களில் இது ஒரு பிரச்சினையாகத் தோன்றவில்லை.
எப்பொழுது குடி அத்தியாவசியத் தேவையாக மாறுகிறதோ அப்போது குடி ஒரு நோயாக
மாறுகிறது. குடித்தால்தான் காலையில் எழ முடியும்; குடித்தால்தான் சாப்பிட முடியும்;
குடித்தால்தான் எந்த வேலையையும் செய்ய முடியும் என்ற நிலை.
நீங்கள் குடிநோயிலிருந்து விடுபட்டதைப் பற்றி விவரமாகச் சொல்லுங்களேன்?
நான் மங்களூரில் உள்ள Friendship Houseக்குச் சென்றபோது என்னுடைய பார்வையும்
என்னுடைய சூழலும் வித்தியாசப்பட்டன. அதுவரைக்கும் குடி நோயாளிகள் அல்லாதவர்கள்
மத்தியில் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், என்மீது அக்கறை கொண்டவர்களாக
இருந்தாலும் அவர்களிடமிருந்து நான் வித்தியாசப்பட்டிருந்ததாக எண்ணினேன். ஆனால் இங்கு
எல்லோருமே குடிநோயாளிகள்; எல்லோருக்கும் ஒரே பிரச்சினை. அந்தப் பிரச்சினையை
மனம்விட்டுப் பேசுவதற்கான ஒரு சூழல். யாரும் யாரையும் குறை கூறுவதோ வித்தியாசமாகப்
பார்ப்பதோ இல்லை. ஒவ்வொருத்தரும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள்,
நெருக்கடிகள், அவதிகள், இழந்த வாய்ப்புகள், சந்தித்த தோல்விகள் ஆகியவற்றைப்
பேசியபோது ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டது.
இந்த அன்னியோன்யமே குடிநோய் மருத்துவத்தின் முதல் அம்சம். It’s a place where
I belonged. நான் அந்நியப்பட்டதாக நினைக்கவில்லை. அதனால் எனக்குத் தன்னம்பிக்கையும்
என்னுடைய குடிநோயைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கான கால அவகாசமும் கிடைத்தன. மேலும்
குடியின் மீது எனக்கு ஏற்பட்ட வெறியை என்னால் கட்டுப்படுத்த முடியாது; எனக்கு மீறிய
ஒரு சக்தியால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன்.
குடியை நானாகவே கட்டுப்படுத்த முயன்ற ஒவ்வொருமுறையும் அது அதிகரித்ததே தவிர
அதைவிட முடியவில்லை. குடி எனக்கு அடிப்படைத் தேவையாக மாறியது. இது இயல்பு அல்ல என்று
எனக்குத் தென்பட்டது. பல மருத்துவர்கள் இதை நோய் என்றே அறுதியிட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக, குடிநோயிலிருந்து வெளிவந்து, அதற்கு மாற்று வழிகாட்டியாக இருந்த Bill
Wilson, Bob Smith இவர்களுடைய Alcoholic Anonymous புத்தகமும் கிகி இயக்கத்தின்
செயல்பாட்டுத் திட்டங்களும், குடி ஒரு நோய், உடல் சார்ந்த நோய்; மனம் சார்ந்த
நோய்; உறவு சார்ந்த நோய்; ஆன்மா சார்ந்த நோய்; ஒட்டுமொத்தமாக மனிதனுடைய எல்லாப்
பரிணாமங்களையும் ஒரே நேரத்தில் தொட்டுப் பாழ்படுத்தும் நோய் என்பதைத்
தெரியப்படுத்துகின்றன. Friendship Houseஇன் மருத்துவத்தில் முக்கிய அம்சம்,
வாரத்தில் 4 நாட்கள் Alcoholic Anonymous கூட்டத்தில் பங்கேற்று மற்ற
குடிநோயாளிகளின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களுடைய கதைகளைக் கேட்பதும்.
சொல்லுதல், கேட்டல் இரண்டின் மூலமாகவே நலமடைய முடியும் என்பதை நான் உணர்ந்தேன்.
இது மனம் சார்ந்த நோய் மட்டுமல்ல, உடல் சார்ந்த நோய் என்பது பில் வில்சன்,
டாக்டர். சில்க்வொர்த் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயம். 1982இல் 23 பேர்
கொண்ட குழு, குடி ஒரு நோயா என்பதை ஆராய்ந்து திட்டவட்ட முடிவைத் தெரியப்படுத்தியது.
குடி ஒரு நோய் என்று அவர்கள் கொடுத்த வரையறை மிகத் தெளிவானது. அதில், “குடி பல
காரணிகளால் - முக்கியமாக மரபணுக் காரணி, சமூகச் சூழல் காரணி, மனநிலைக் காரணி,
தொழில் காரணிகளால் - வளர்த்தெடுக்கப்படும் பிரதானமான நீண்டகாலம் தீராத ஒரு நோய்.
இதற்கு மருத்துவம் உண்டு. ஆனால் ஒரேயடியாகக் குணப்படுத்த முடியாது; இது ஒரு வளரும்
நோய். இந்த நோயின் தன்மையிலேயே மிக முக்கியமான அம்சம், நோயாளிக்கே இது நோய்
என்று தெரியாமல் குடிக்க வேண்டுமென்ற வெறி; அவனுக்கு இது ஒரு பிரச்சினை என்பதையே
மறுக்கவைக்கும் தன்மையுடைய நோய்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அம்சங்கள் அனைத்தையுமே அவர்கள் ஒரு வரையறையாகக் கொடுத்தார்கள். கீபிளி
(World Health Organization) மற்றும் பல்நாட்டு மருத்துவக் கழகங்களும்
நோய்ப்பட்டியலில் ‘குடிநோய்’ என்ற ஒன்றைச் சேர்த்திருக்கின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹைரோடோடஸ் (Herodotus) குடி
ஒரு நோய் என்னும் கருத்தை முன்வைத்துள்ளார். அதற்குப் பின்னால் வந்த அறிஞர்கள்
ஆங்காங்கே இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். Trotter போன்ற அறிஞர்கள்
19ஆம் நூற்றாண்டில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
குடிப்பவர்கள் எல்லோரையுமே ஒரே கூடையில் போட்டு எல்லோரும் குடிகாரர்கள்;
எல்லோரும் மோசமானவர்கள்; தீயவர்கள்; பலவீனமானவர்கள்; தன்னிச்சை படைத்தவர்கள்;
ஒழுக்கம் கெட்டவர்கள்; பாவம் செய்கின்றவர்கள் என்பது ஒழுக்கச் சிந்தனை சார்ந்தது.
இது மதம் சார்ந்த கருத்தும்கூட.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், திருவள்ளுவர் கொடுத்த 10 குறள்களிலும் (கள்ளுண்ணாமை)
இக்கருத்து தான் மேலோங்கி இருக்கிறது. குடிப்பவன் மனிதனல்ல; அவன் ஒரு ஜடம் என்னும்
அளவில் அவர் எழுதியிருக்கிறார். இது ஒரு நோய் என்ற புரிதல் திருவள்ளுவர் காலத்தில்
கிடையாது. அன்றிலிருந்து இன்றுவரை பொதுவாக மக்களிடம் -குடிநோயாளிகள் உட்பட -இக்கருத்துதான்
பரவியுள்ளது.
குடிப்பவர்கள் பலவிதம் என்ற உண்மையை மக்கள் உணரவில்லை. ஆல்கஹால் ஒவ்வொரு
மனிதனுடைய உடலிலும் மனத்திலும் ஏற்படுத்தும் விளைவுகள் வித்தியாசமானவை.
குடிப்பவர்களை கீபிளி நான்கு விதமாகப் பிரித்துப் பார்க்கிறது. அவை:
1. சாதாரணமாகக் குடிப்பவர்கள்.
2. குடிப்பதால் பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் (Harmful Drinkers).
3. குடிப்பதால் நெருக்கடிகளைச் சந்திப்பவர்கள் (Hazardous Drinkers).
4. குடிநோயாளிகள் (Dependent Drinkers).
மூளையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில்
இது ஒரு ‘மூளை நோய்’ என்பது தெளிவாகியுள்ளது. Dr. Ohlms, Dr. Amen, Dr. Morse, Dr.
Leshner போன்ற பல அறிஞர்கள் இதை ஒரு மூளை நோய் என்று சொல்லியிருக்கிறார்கள். மூளை
நோய் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
சாதாரணமாகத் தினமும் குடித்துக் கொண்டு வேலைக்குச்
சென்றுகொண்டிருப்பவர்களுக்கும் குடிநோய் வரும் வாய்ப்பு இருக்கிறதா?
குடித்தால்தான் குடிநோய் வரும். யார் குடிநோயாளியாக மாறுவர் என்று எளிதில்
முன்வரையறை செய்ய இயலாது. யாருடைய மரபணுக்கள் குடிநோய்க்குச் சாதகமாக
(susceptibility) இருக்கின்றனவோ அவர்கள் குடிநோயாளிகளாக மாறுவார்கள்.
குடிநோயாளிகளுடைய மூளைச் செயல்பாடுகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. முக்கியமாக,
Dopamine, Serotinine என்ற Necrotransmitter ஆகிய இரண்டும் உணர்ச்சிகளை மகிழ்ச்சி,
உற்சாகம், சோகம், சோர்வு எனப் பரிமாற்றம் செய்பவை. மேலும் இவை உணர்ச்சிகளை
ஊக்குவிக்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன. குடியால் இவற்றில் மாற்றம்
ஏற்படுகின்றது. முக்கியமாக ஆல்கஹால், ஏன் caffeine, nicotine, கஞ்சா போன்ற எல்லாப்
பொருட்களுமே ‘டோபமைன்’ என்கின்ற Neuro Transmitterஇன் உற்பத்தியையோ அல்லது அதன்
செயல்பாடுகளை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்கின்றன. நல்ல காட்சியைப் பார்க்கும்போது
நாம் புளகாங்கிதம் அடைகிறோம் என்றால் அப்போது ‘டோபமைன்’ அதிகமாகச் சுரக்கிறது.
ஆல்கஹால் மூளையைச் சென்றடைந்தவுடன் ‘டோபமைன்’ வேகமாகச் சுரந்து, பின் சுரப்பதே
சுணங்கிப்போகிறது. குடித்தவுடன் ஏற்படும் உடனடி உற்சாகமும் பிறகு சோர்வும்
ஏற்படுவது இதனால்தான் என்று Dr. Ohlms சொல்கிறார்.
ஆல்கஹால் மூளையைச் சென்றடைந்தவுடன் குடிநோயாளிக்கு ‘டோபமைன்’ சுரப்பதைத் தடை
செய்துவிட்டு மூளையிலேயே ஜிமினி (Tetra hydro Iso Quinone) என்னும் வேதிப் பொருளாக
மாறி ‘டோபமைன்’ செய்த வேலையைச் செய்கிறது. குடிநோயாளிக்கு மட்டும்தான் இப்படி
நடைபெறுகிறது. ஆனால் குடிக்கும் மற்றவர்களுக்கு ‘டோபமைன்’ உற்பத்தி ஆவதைக் கூட்டவோ
குறைக்கவோ செய்யும்; உற்பத்தியாவதைத் தடுப்பதில்லை. அதனால்தான் குடிநோயாளிக்குக்
குடித்தால்தான் வேலைசெய்ய முடியும்; உற்சாகம் பெற முடியும் என்னும் நிலை. அவனுக்கு
ஜிமினி மூளையில் உற்பத்தியாக வேண்டுமானால் அதற்கு அவன் குடித்துத்தான் ஆக வேண்டும்.
குடியைவிட்டு விலகிவரும் காலகட்டத்தில் குடி நோயாளிக்கு ஜிமினி உருவாகும்
மூலப்பொருள் மூளைக்குக் கிடைப்பதில்லை. தானாகச் சுரப்பதற்கு நாளாகும். ஆகையால்தான்
குடிநோயிலிருந்து நலம் பெறுவது நாள்பட்ட விஷயம். இந்தத் தொடர்மருத்துவத்தைச்
செயல்படுத்துவதற்குத்தான் Alcoholic Anonymous கூட்டம் பெரிதும் துணைபுரிகின்றது.
Alcoholic Anonymous (AA) என்பதை விவரித்துச் சொல்லுங்களேன்?
Alcoholic Anonymous என்பது இரண்டு பெருங் குடிகாரர்கள் (Bill Wilson, Bob
Smith) தொடங்கியது. தங்கள் கதையை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும்போது தாங்கள்
குடியைத் தவிர்த்து வாழ முடியும் என்பதை இவர்கள் கண்டுகொண்டார்கள். தாங்கள்
எப்படியிருந்தோம்; என்ன நடந்தது, இன்று எப்படி இருக்கிறோம் என்று தொடர்ந்து
பேசிக்கொண்டிருந்த காலகட்டங்களில் அவர்கள் குடியைத் தவிர்த்து ஒரு நிறைவான,
மகிழ்ச்சியான, நிம்மதியான, பயனுள்ள வாழ்க்கை வாழ முடிகிறது என்பதைக்
கற்றுக்கொண்டார்கள். அவர்களது சந்திப்புதான் ‘ஆல்கஹாலிக் அனானிம’ஸின் தொடக்கம்.
Alcoholic Anonymousஐ ஒரு ஆன்மிக வழி என்று சொல்லலாம். ஏனென்றால் தன்னைவிட வலிமை
பொருந்திய ஒரு சக்திதான் தன்னைக் குணப்படுத்த முடியும் என்பது இதனுடைய அஸ்திவாரம்.
இதுதான் தொடக்கப்புள்ளியும்கூட. முதலில் தான், தனது, என்னும் சுயவட்டத்திலிருந்து
மாறி ‘நாம்’ என்ற தோழமைக்கு வருகிறோம். இந்தத் தோழமை வளர்வதற்குத் தேவையான நேர்மை,
பணிவு, நம்பிக்கை இதில் கிடைக்கிறது. இந்தக் குழுவில் நலம் பெறுதல் நடைபெறுகிறது
என்பதைப் பல ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
Dr. Leshner தன்னுடைய ஆராய்ச்சியில், “ஒரு வேதிப் பொருளால் மூளையில் மாற்றங்கள்
ஏற்படுவதைப் போல AA போன்ற குழுக்களில் பங்கேற்கும்போதும் மூளையில் மாற்றங்கள்
நிகழ்கிறது” எனக் கூறுகிறார்.
Alcoholic Anonymous தவிர குடிநோய்க்கு வேறு ஏதேனும் மருத்துவமுறைகள்
இருக்கின்றனவா?
பல மருத்துவமுறைகள் இருக்கின்றன; மருந்துகள் இல்லை. மற்ற நோய்களுக்கு மருந்து
கொடுத்து ஒரு உடல்கூறைச் சரிப்படுத்துவதுபோல, குடி மூளையில் ஏற்படுத்தும்
பாதிப்புகளைத் தடுப்பதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில
மருந்துகள் பரிசோதனையில் உள்ளன (Alcomprosate, etc). ஆனால் குடியினால் ஈரல், நரம்பு
மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள், மனச்சோர்வுகளுக்கான மருந்துகள் உண்டு.
குடிநோயை விட்டு விலகி வாழும் குடிநோயாளிக்கு எவ்வளவு காலம் இந்தக் குடிநோயின்
தீவிரம் இருக்கும்?
ஆய்வுகளின்படி கடைசிக் குடியிலிருந்து முதல் 72 மணிநேரம் ‘வடிநேரத்து அறிகுறிகள்’
(withdrawal symptoms) மிகக் கொடூரமாக இருக்கும். கை கால் நடுக்கம், அதிகப்படியான
வியர்வை, மனக்குழப்பம், மாயக் கற்பனைகள், மனச்சிதைவு, கோபம், தூக்கமின்மை,
பசியின்மை போன்ற ஒட்டுமொத்தப் பிரச்சினைகள் வருகின்ற நேரம் இது. இந்த நேரத்தில்
நச்சு வெளியேற்றம் (Detox) தேவைப்படுகிறது. தூக்க மருந்துகள், ஊட்டச்சத்து
மருந்துகள் வடிநேரத்து அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
அடுத்த ஏழு நாட்கள் அவர்களது மனக்குழப்பங்கள், கனவுகள், கற்பனைகள், கோபம்,
உணர்ச்சிகளின் ஊசலாட்டம் ஓங்கி நிற்கும். அடுத்த 14 நாட்கள் உடல் பாதிப்புகள்
வெளித்தெரிய ஆரம்பிக்கும். குடியால் பாதிக்கப்பட்ட கல்லீரல், கணையம் செயல்படவும்
சுரப்பதற்கும் நாளாகும். சரியாக மீஸீக்ஷ்ஹ்னீமீகள் உற்பத்தியாக ஆறு மாதங்கள் ஆகலாம்.
இந்தக் காலகட்டத்தில்தான் உடல் பயிற்சி, மனத்தைச் சாந்தப்படுத்தும் பயிற்சிகள்,
குழுவில் கலந்து பேசுவது இந்தப் பாதிப்புகளைச் சமாளிக்க உதவும். குடிநோய்ச்
சிகிச்சையில் ஒருவர் ஓராண்டிற்குப் பிறகுதான் உறுதியான தெளிந்த நிலைக்கு வருவார்
எனக் கூறலாம்.
Dr. Amen, SPECT (Single Photo Emission Computerized Tomography) என்ற முறையில்
பாதிக்கப்பட்டவரின் மூளையைப் படம்பிடித்திருக்கிறார். அதில் பல பகுதிகள் செயல்படாமல்,
செல்கள் ‘மரத்து’ இருக்கின்றன. அதே நபருடைய மூளையை அவர் குடியைத் தவிர்த்த ஒரு வருட
காலத்திற்குப் பிறகு படமெடுத்ததில் 90% சதவீதப் பாதிக்கப்பட்ட பகுதிகள் வேலைசெய்வது
தெரிந்தது. அவருடைய பரிந்துரைப்படி இக்காலகட்டத்தில் மூளைக்காகச் சிறுசிறு வேலைகள்
கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிர்களுக்கு விடை காண்பது, கணக்குகள்
போடுவது, புது மொழியையோ புது விஷயங்களையோ கற்றுக்கொள்வது, புதிதாகப் பழக்கங்களை
(பிராணி வளர்ப்பு, தோட்டக் கலை) ஏற்படுத்திக்கொள்வது போன்றவை மூளையின்
பாதிக்கப்பட்ட பகுதிகளை உசுப்பிவிடுகின்றன.
குடிநோயாளி குடியிலிருந்து வெளிவரும்போது, அவருடைய குடும்பத்தினருடைய பங்கு
என்னவாக இருக்கும்?
குடி ஒரு விசித்திரமான நோய். இது குடிப்பவரை மட்டுமல்லாது அவருடைய நெருங்கிய
வட்டத்தையே பாதிக்கிறது. குடும்பத்தை, நண்பர்களை, தொழில் செய்யும் இடத்தை
எல்லாவற்றையுமே பாதிக்கிறது. ஒரு தொழிற்சாலையில் குடிநோயாளி வேலைசெய்கிறாரென்றால்
அவர் வேலைசெய்வது (அ) செய்யாமலிருப்பது போன்ற அவருடைய நிச்சயமற்ற தன்மை எல்லாத்
தொழிலாளர்களையும் பாதிக்கிறது. குடிநோயாளியின் வாழ்க்கை பாட்டிலை மையமாகவைத்து
நடைபெறுகிறதென்றால், குடிநோயாளியின் குடும்பத்தினர் வாழ்க்கை குடிநோயாளியை
மையமாகவைத்து, அவன் மூலமாக அதே பாட்டிலை மையமாகவைத்துத்தான் நடைபெறுகிறது.
‘எப்போது குடித்துவிட்டு வருவானோ? என்ன செய்வானோ? என்ன சொல்வானோ’ என்ற
கேள்விகள், குடித்துவிட்டு ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய எண்ணங்கள் குடும்பத்தினரைக்
கவலைக்குள்ளாக்கும். குடும்பத்தினர் குடிநோயாளியின் எண்ணங்களையே சார்ந்து
வாழ்கிறார்கள். இவர்களும் நோயாளிகளாக வாழ்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை
co-dependency எனக் கூறுவார்கள்.
குடிநோயாளி குடியைச் சார்ந்து வாழ்கின்றார். மற்றவர்கள் இவருடைய குடிக்குத்
தங்கள் வாழ்க்கையை adjust செய்து வாழ்கிறார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி, உடல், ஆன்மா,
உறவு அனைத்தும் பாதிப்படைகின்றன. ஆகவேதான் குடிநோயாளியின் குடும்பத்தினரைச்
சகநோயாளிகள் எனக் கூறுகின்றோம்.
குடிநோயாளிகளுக்கு AA அமைப்புகள் இருப்பதுபோலச் சகநோயாளிகளுக்கு ஏதாவது
மருத்துவமுறைகள் உள்ளனவா?
Bill Wilsonனுடைய மனைவி Lois தலைமையில் குடி நோயாளியின் குடும்பத்தினருக்கு (சக
நோயாளிகள்) A1-Anon என்ற அமைப்பு உருவாகியது. Alcoholic Amonymous எந்தச் செயல்
திட்டங்களை நிறைவேற்றியதோ அதே செயல் திட்டத்தைத்தான் அவர்களும் வைத்திருக்கிறார்கள்.
குடிநோயாளிகளுக்கு எந்த மாதிரியான குணக்கோளாறுகள் இருக்கின்றனவோ அதே குணக்
கோளாறுகளான கோபம், பொறுப்பற்ற தன்மை, ஏமாற்றுதல், சமாளிப்பு இவையெல்லாம்
சகநோயாளிகளிடமும் காணப்படுகின்றன. இதிலிருந்து இவர்கள் விடுபடுவதற்கான முயற்சிகளை
அமைப்புகளில் மேற்கொள்கிறார்கள். இவர்களும் நலம் பெறுகிறார்கள்.
தற்போது நீங்கள் நடத்திக்கொண்டிருக்கும் ‘இயேசு சபை போதை நோய்ப் பணிக்குழு’
உருவாகிச் செயல்படும் விதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...
எனக்கு மிகவும் பரிச்சயப்பட்ட கடற்கரை மக்களிடையே குடி ஒரு மிகப் பெரிய
பிரச்சினையாக இருந்துவருகிறது. சுனாமி காலத்தில் பெற்ற நிதித் தொகையைப் பெருமளவில்,
குடியில் வீணடித்ததாகச் செய்திகள் வந்தபோது, குடி இவர்கள் மத்தியில் எவ்வளவு
பரவலாக இருக்கிறது என்பது அறியப்பட்டது. இந்நேரத்தில் C- Dot என்னும் தன்னார்வக்
குழு சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிடையே குடியைப் பற்றிய ஓர் ஆய்வை
மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி கடற்கரை மக்களில் 74.06% பேர் குடிக்கிறார்கள்
என்றும் அதில் 52.8% பேர் குடிநோயாளிகள் என்றும் தெரியவந்தது.
இச்சமூகத்தில் ‘குடி’யை மிகப் பெரிய பிரச்சினையாகக் கருதிச் செயல்படாவிட்டால்
நிவாரணப் பணிகள் முழுமைபெறாது. அதன் அடிப்படையில் சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடிநோய்க்கு வேண்டிய மருத்துவ உதவி வேண்டுமென
எண்ணினோம்.
‘நிகழ்’ நாடகக் குழுவின் உதவியுடன் குடியைப் பற்றிய மனதைத் தொடும் செய்திகளுக்கு
என ஒரு மணி நேர நாடகம் ஒன்றை உருவாக்கினோம். ‘தொட்டாபுடி சாமி’ என்னும் அந்த
நாடகம் அருமையாக அமைந்துவிட்டது. இந்தக் குழு ஒவ்வொரு ஊருக்கும் சென்று குடிநோயைப்
பற்றியும் அதற்குரிய மருத்துவத்தைப் பற்றியும் நாடகம் மூலம் செய்திகளைப் பரப்பியது.
சில கடற்கரை ஊர்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிலுள்ள பங்குக் குழுக்களிடம்
குடிநோயைப் பற்றி அறிவியல்பூர்வமாக எடுத்துக்கூறிக் குடிநோயாளிகளுக்காகக் குளச்சல்
புதுவாழ்வு இல்லம், கன்னியாகுமரி Pillar Hospital ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள்
நடத்தினோம். ஓராண்டு காலம் தொடர் பயிற்சியாக AA, A1 Anon, A1 Areen கூட்டங்கள்
நடத்திவருகிறோம்.
இதுவரைக்கும் அப்படி எத்தனை முகாம்கள் நடத்தியிருக்கிறீர்கள்?
இதுவரை 12 முகாம்கள் நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முகாமிலும் சராசரியாக 25 பேர்
பங்கெடுக்கிறார்கள். இந்த முகாம்களில் குடிநோயாளி, அவர் குடும்பத்தினர், மனைவி,
குழந்தைகள் என எல்லோருக்கும் தனித்தனிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு
மாதமும் இவர்களுக்கு மாதாந்திரத் தொடர் பயிற்சிக் கூட்டமும் நடைபெறுகிறது.
போதை நோய்ப் பணியில் சந்தித்த சவால்கள் என்னென்ன...?
நம் சமூகத்தில் குடிநோய் என ஒன்று இருப்பதையே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
குடிப்பவர்கள் அவர்களுடைய திமிராலும் வேண்டுமென்றே குடிக்கிறார்கள் என்றும் அவர்களை
அடித்தோ அல்லது அறிவுரை கூறியோதான் திருத்த வேண்டுமென்றும் மக்கள் எண்ணுகிறார்கள்.
இந்த நோய்க்கு மருத்துவம் உண்டு என்றோ இதற்கான சிகிச்சை முறைகள்
நெறிப்படுத்தப்பட்டுள்ளன என்றோ தெரிந்திருக்கவில்லை.
இரண்டாவதாக, அரசு ஒரு பக்கம் மதுவிலக்கு என சாசனத்தில் எழுதிவைத்துக்கொண்டு
மறுபக்கம் கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறோம் என்று கூறி ‘டாஸ்மாக்’ கடைகளை நடத்துகிறது.
இந்த டாஸ்மாக் கடைகளில் 90% ஆல்கஹால் குவாட்டர் பாட்டில்களிலேயே விற்பனைக்கு
வருகிறது. குவாட்டர் பாட்டில்களை ஏழைகள், கூலிகள், கீழ்த்தட்டு மக்களே அதிக அளவில்
வாங்குகிறார்கள். அவர்கள் தரும் வரியில் 10,000-15,000 கோடி ரூபாய் லாபம்
பார்த்துக்கொண்டிருக்கும் அரசு இந்தப் பணிக்கான முயற்சியை மேற்கொள்ளும் என
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
ஆரம்பத்தில் குடிநோய் என்பதை மக்களுக்குப் புரியவைப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள்
இருந்தன. ‘குடி’யை நினைத்தால் நிறுத்த இயலாதா என்ற கேள்வியை, குடிநோயாளிகளும்
அவர்களது குடும்பத்தினரும் மனத்தில் வைத்துக்கொண்டே இருந்தார்கள். குடி -நோய்
என்பதையும் இதற்கு மருத்துவம் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்ளவைப்பது கடினமாக
இருந்தது. குடிநோயாளிக்கு மருத்துவம் தேவை என்பதைப் படித்தவர்களோ, குடிநோயாளி
சார்ந்திருக்கும் நிறுவனத்தில் இருப்பவர்களோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எப்போது குடி என்பது நோய் என்னும் கருத்து எல்லோரையும் சென்றடைகிறதோ அன்றுதான்
இந்நிலை மாறும்.
குடிநோய் மருத்துவத்திற்குப் பின் குடியை நிறுத்திவிடுவார் என்று வாக்குக்
கொடுக்க இயலாது. இதுவும் இன்னொரு சவாலாக இருந்தது.
நான் 2007 மே மாதம் இந்த முகாம் திட்டத்தைத் தொடங்கினேன். அன்று குடிநோயாளிகளை
முகாம்களுக்கு அழைத்து வருவது மிகக் கடினமாக இருந்தது. ஆனால் இன்று காத்திருப்போர்
எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இந்தச் சவால் முறியடிக்கப்பட்டு வருகிறது.
பெரிய சாதனை என்னவென்றால் போதை நோய்ப் பணியை முக்கியப் பணியாக
ஏற்றுக்கொள்பவர்கள் பெருகி வருகிறார்கள். இன்றைய காலகட்டத்திற்கு இது மிக
முக்கியமான பணியாக மாறுவதைச் சபைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டு தமிழ்
நாட்டில் ஆங்காங்கே பல அமைப்புகள் இப்பணியை எடுத்து நடத்த முன்வந்து எங்களிடம்
ஆலோசனை பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இயேசு சபை போதை நோய்ப் பணிக் குழுவின் எதிர்காலத் திட்டங்களாக எதை
எடுத்துச்செல்ல வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
முதலில் குடி - நோய் என்ற கருத்து எல்லோருக்கும் சேர வேண்டும். பல தளங்களில் -பள்ளிகள்,
கல்லூரிகள், ஊடகங்களில் -இக்கருத்து பரவ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதற்கான
பணிகளை-புத்தகங்கள், கருத்தரங்குகள், குறும்படங்கள், நாடகங்கள் - மேற்கொள்ள
வேண்டும்.
இரண்டாவதாக, குடிநோய்க்கு மருத்துவம் உண்டு என்பதை நடைமுறையில் செய்துகாட்டி
அவர்கள் கண்கூடாகப் பார்க்க வழிசெய்ய வேண்டும்.
முகாமில் (இராமேஸ்வரம், திரேஸ்புரம்...) பங்குபெற்ற நோயாளிகளின் குடியற்ற
வாழ்க்கையைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தற்போது முகாம்களில்
சேர்வதற்குப் போட்டிபோட்டு ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் முகாமில் 25 பேரை மட்டுமே சேர்த்துக்கொள்ள இயலும் எனக் கூறி நாங்கள்
அவர்களை நிறுத்த வேண்டியுள்ளது. இப்போது முகாம்களுக்குக் காத்திருப்போர்
பட்டியல்கள் நீண்டவை.
மூன்றாவதாக, இந்தப் பணியில் ஈடுபட்ட காலத்திலிருந்து, Alcoholic Anonymous
கூட்டங்களுக்கான வழிமுறைகளைச் செயல்படுத்தியபோதுதான் ஆன்மிகத்தைப் பற்றிய தெளிவான
செயல்பாட்டுச் சிந்தனை எனக்குக் கிடைத்தது. நான் படித்த, பெற்ற, செய்த ஆன்மிகப்
பயிற்சிகளுக்கெல்லாம் ஒரு மணி மகுடமாக Alcoholic Anonymous இருக்கின்றது. எந்த
மதத்தையும் சாராத ஒரு ஆன்மீக விழிப்பை உண்டாக்குவது இதன் இறுதி இலக்கு எனக் கூறலாம்.
போதை நோய்ப் பணியில் கலாச்சாரக் கூறுகளையும் ஆய்ந்து வருகிறோம். போதை நோய்க்
கலாச்சாரத்திலிருந்து போதை நோயற்ற கலாச்சாரம் உருவாக வேண்டுமென்றால் அதற்கான
கூறுகளை ஆராய வேண்டும். உதாரணமாக, கடற்கரைச் சமூகம், துப்புரவுத் தொழிலாளர்கள்,
ராணுவம், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், கலைஞர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பொதுவாக
அன்றாடக் கூலிகளின் மத்தியில் இருக்கும் கலாச்சாரம், போதை நோயை வளர்க்கும் ஒரு
கலாச் சாரமாகத்தான் இருக்கிறது. திருச்செந்தூரில் துப்புரவுத் தொழிலாளர்கள் வாழும்
மாவீரன் நகரை ஆய்வுக்காகவும் போதை நோய்ப் பணிக்காகவும் தேர்ந் தெடுத்துள்ளோம்.
குடித்தால்தான் தங்களுடைய துப்புரவுத் தொழிலைச் செய்ய இயலும் என்றும்
குடிக்காவிட்டால் தொழில் செய்ய இயலாது என்ற அடிப்படையிலும் வாழ்கின்ற மக்கள்
இவர்கள்.
இங்கே குடிநோயும் அதிகம், இதனால் ஏற்படும் பாதிப்புகளும் பொருளாதாரச்
சிக்கல்களும் உடல்நலக் கேடுகளும் சமூக அவலங்களும் சாவுகளும் அதிகம். இச்சமுதாய
மக்கள் குடியற்ற வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் இவர்களது கலாச்சாரம் ஒட்டு மொத்தமாக
மாறினால்தான் முடியும். இது ஓரிரு நாள் பணி அல்ல. நெடுநாள் பணி. இதை ஒரு சவாலாக
எடுத்துப் பணியாற்றி வருகிறோம்.
அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் குடிநோய்க்கான மருத்துவப் பிரிவு இருக்க
வேண்டுமென்பது, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்
அது செயல்பாட்டில் இல்லை. மேலும் மதுவின் மேல் விதிக்கப்படும் வரியில் பெருமளவு
குடிநோய்க்கான மருத்துவத்திற்குச் செயல்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.
அதுவும் இன்று செயல்பாட்டில் இல்லை.
இன்று எனக்கு நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான நிதி இல்லை. இந்தப்
பணிக்குச் செலவிடும் பணம் விரயமாகிறது என்னும் எண்ணம் நிதி நிறுவனங்கள் மத்தியில்
மேலோங்கி நிற்கிறது.
இன்றைய இளம் சமுதாயத்தினரிடம் குடி வேகமாகப் பரவி வருகிறது. இந்த வேகத்தை எவ்வாறு
கட்டுப்படுத்த இயலும்?
என்னுடைய இயேசு சபையின் மாநில அதிபர் அருட்பணி. தேவதாஸ் இன்று சமூகத்தில் போதை
நோய் வேகமாகப் பரவிவரும் ஒன்று என்றும் அதைக் கட்டுப்படுத்த அடித்தளத்தை இடுவதுதான்
என்னுடைய பணிகளில் முதன்மையானது எனப் பணித்தார்.
2000ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி குடிக்கத் தொடங்குபவர்களின் சராசரி வயது
17ஆக இருந்தது. ஆனால் இன்று அது வெகு விரைவாகக் குறைந்து 13 ஆகிவிட்டது. சராசரியாக
13 வயதில் இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இவர்கள் குடியைத் தவிர நிக்கோட்டின் (சிகரெட், புகையிலை), பாக்கு, கஞ்சா, அபின்
போன்றவற்றையும் பெத்தடின், மார்ஃபின் போன்ற மருந்து வகைகளையும் பயன்படுத்தி
வருகிறார்கள்.
அரசு சார்பில் மதுவிலக்கு கொண்டுவந்தால் இந்த நிலையைச் சரிசெய்ய இயலும் என
நீங்கள் நினைக்கிறீர்களா?
முழு மதுவிலக்கு என்னும் சட்டத்தை அமல்படுத்திய எந்த நாடும் மதுவைத்
தவிர்த்துவிட்டதாகச் சரித்திரம் கிடையாது. (குஜராத்தில் மதுவிலக்கு இருந்தாலும்
அங்கும் மது எளிதாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.) மது குடிப்பதற்கு மட்டுமன்றி,
சமயச் சடங்குகளிலும் மருத்துவத் துறையிலும் உணவுகளிலும் கொண்டாட்டங்களிலும்
பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.
மதுவை ஒட்டுமொத்தமாக விலக்குவோம் என்பது இயலாத காரியம். மதுவிலக்கு ஒரு பூரணக்
கொள்கையும் அல்ல. மதுவைப் பற்றிய விழிப்புணர்வும் மருத்துவமும் தான் நிரந்தரத்
தீர்வாக இருக்க இயலும்.
குடிநோயாளியையும் தாண்டிச் சமூக அளவில் உங்கள் பணிகள், உங்கள் பார்வை
பரவியிருப்பதைப் பற்றி?
நான் படித்தது மானுடவியல். என் பணிகள் எல்லாமே கலாச்சாரத்தை ஒட்டியே இருந்தன.
ஆகவே, குடிநோய்க்கான பணிகள் ஆரம்பித்த நேரத்தில் நான் கற்றுக்கொண்ட மானுடவியல்,
உளவியல், மருத்துவம், மனித உடல் பற்றிய அறிவு இவையனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு
பணித்திட்டம் உருப்பெற்றது. குடிநோயை ஒரு தனிமனிதப் பிரச்சினையாகக் கருத இயலவில்லை.
இதை ஒரு கலாச்சாரப் பிரச்சினையாகவே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். |