எம்.எஸ்.சார் என இலக்கிய அன்பர்களால் மரியாதையுடனும் நட்புணர்வுடனும் அழைக்கப்படும்
எம். சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு எண்பது வயதாகிறது. வயதுதான் எண்பதே தவிர,
இப்போதும் ஓர் இளைஞனைப் போலச் சுறுசுறுப்புடன் செயலாற்றும் அதிசய மனிதர் அவர்.
உரத்துப் பேச அறியாதவர். எல்லோருடனும் நட்புணர்வோடு பழகக்கூடியவர். மாற்றுக்
கருத்துகளையும் புன்முறுவலுடன் மென்மையான குரலில் வெளிப்படுத்துகிறவர்.
வனமாலிகையின் சதங்கை இதழின் தொடக்க காலத்திலிருந்தே அதற்குச் சகலவிதங்களிலும்
பங்களிப்புச் செய்தவர். சுந்தர ராமசாமியுடனான எம்.எஸ்.ஸின் நட்பு
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நெருடலும் இல்லாமல் தொடர்ந்தது. சுந்தர
ராமசாமியின் படைப்புகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே படித்து, தேவையான ஆலோசனைகள்
வழங்கியவர். தனது நூல்களின் முன்னுரைகளில் இதை நன்றியுடன் சுந்தர ராமசாமி
நினைவுகூர்ந்துள்ளார். அவருக்கு மட்டுமல்ல நீல. பத்மனாபன், ஆ. மாதவன், பொன்னீலன்,
தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன், அம்பை, சல்மா போன்ற பல எழுத்தாளர்களுக்கு
அவர்கள் பிரதியைச் செப்பனிட உதவியவர் அவர். சு.ரா. நடத்திய காலச்சுவடு எட்டு
இதழ்களுக்கும் எம்.எஸ்.ஸின் பங்களிப்பு கணிசமானது. “முதல் இதழிலிருந்து காலச்சுவடைப்
பதிப்பிக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் என் நெடுநாளைய
நண்பர் எம். சிவசுப்பிரமணியன்” எனக் ‘காலச்சுவடு ஆண்டு மல’ரின் முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார் சுந்தர ராமசாமி. அவர் மறைவுக்குப் பின்னும் ‘காலச்சுவடு’ இதழ்
மற்றும் பதிப்பகத்துக்குத் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுத்துவருகிறார் எம்.எஸ்.
தமிழுடன் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மொழிகளையும் நன்கறிந்தவர். தீவிரமான வாசகர்.
புத்தகங்களின் மீதான அவரது ஆர்வம் இன்றளவும் சற்றும் குறைந்துவிடவில்லை. அரிய
நூல்களைச் சேகரித்து வைப்பதிலும் ஆர்வம் கொண்டவர். வாசிப்பிலுள்ள ஈடுபாட்டை அவர்
எழுதுவதில் வெளிப்படுத்தாத போதிலும், தொடர்ந்து மலையாளம், ஆங்கிலத்திலிருந்து
மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறார்.
எம்.எஸ். மொழிபெயர்த்த எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் (நாவல்), ஸ்பானிஷ்
எழுத்தாளர் ஃபெர்னான்டோ ஸோரென்டினோவின் ஆட்டுக் குட்டிகள் அளிக்கும் தண்டனை (சிறுகதைகள்),
பாஸ்கரனின் ஜானு (வாழ்க்கை வரலாறு), பேபி ஹால்தாரின் விடியலை நோக்கி (சுய வரலாறு),
மரியா ஸ்ரெஸ்ஸின் ஆதியில் பெண் இருந்தாள் (ஆதிவாசிக் கதைகள்) ஆகிய நூல்களைக்
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், அதேசமயம் மூல நூலின் தனித்துவம்
சிறிதும் குன்றாமல், சிறுசிறு வாக்கியங்களில், நெருடலில்லாத நடையில் மொழி
பெயர்க்கக்கூடியவர் எம்.எஸ். அவ்வகையில் இவர் க.நா.சு.வின் மொழிபெயர்ப்புப்
பாணியைப் பின்பற்றுகிறவர் எனலாம்.
மொழிபெயர்ப்பதுபோலவே பிரதிகளை எடிட் செய்வதிலும் மெய்ப்புப் பார்ப்பதிலும்
திறமையாளர். காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமல்லாமல் உயிர்மை, அடையாளம் போன்ற
பதிப்பகங்களுக்கும் பல்வேறு சிற்றிதழ்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுத்து
வருகிறவர் எம்.எஸ். மொழிபெயர்ப்பதிலும் மெய்ப்புப் பார்ப்பதிலும் எடிட்செய்வதிலும்
யார் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் சிரத்தையுடன் செய்துகொடுப்பவர்.
எம்.எஸ் அவர்கள் நூறாண்டுகள் கடந்தும் வாழ்ந்து தனது பணியைச் சிறப்பாகத் தொடர
வேண்டும் என்று நூறு இதழ்களைத் தாண்டி இயங்கிவரும் காலச்சுவடு தனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறது. |