சமகால ஈழப் பிரச்சினையைப் பற்றி எழுதும்போது 19ஆம் நூற்றாண்டு காலனிய இலங்கையில்
நடந்த ஒரு சம்பவம் இடைமறிக்கிறது. கண்டியின் கடைசி அரசனான சிரி இராஜசிங்கன் தனக்கு
இணக்கமானவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு ஆட்சியை இழக்கிறான். அதிகாரம் தங்கள்
கையில் வரும் என்று எதிர்பார்த்த சிங்கள மேட்டுக்குடியினருக்கு ஏமாற்றமாகவே இருந்தது.
ஆங்கிலேயர் கிரீடம் இழந்த மன்னனின் இடத்தைப் பிடித்துக் கொண்டது மட்டுமல்ல தங்களின்
நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர். பொறுமை இழந்த சிங்கள அதிகாரிகள்
ஆங்கிலேய காலனியவாதிகளுக்குச் சொன்னது: ‘அரசனை அகற்றிவிட்டீர்கள். நீங்கள் இனி
எங்களுக்குத் தேவை இல்லை. ஆகையால் நீங்கள் இனி இங்கிருந்து போய்விடுங்கள்.’ பழைய
ஏகாதிபத்தியத்துக்கு உள்நாட்டவர்கள் சொன்ன அதே வார்த்தைகள் இன்றைய புதிய சிங்கள
ஏகாதிபத்தியத்துக்கும் பொருந்தும்.
இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இனக்கொலைகளுக்கு எதிராக லண்டனில் நடைபெறும்
எதிர்ப்பும் உண்ணாவிரதமும் தொடங்கி ஒரு வாரமாகிறது. இதை முன்னின்று நடத்துகிறவர்கள்
இரண்டாம் தலைமுறை ஈழத் தமிழர்கள் என்பது முக்கியக் கவனத்திற்குரியது. இவர்களில்
பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள். ஆங்கிலக் கலாச்சாரத்தில் கரைந்துபோனவர்கள்.
இவர்கள் மீள்கண்டுபிடித்த நாட்டுப்பற்று ஈழப் பிரச்சினையை மீண்டும் பொதுவெளியில்
கொண்டுவந்துள்ளது. ஊடகத்தை - முக்கியமாக மின்னஞ்சல், வலைப்பதிவுகளை ஆக்கபூர்வமாகப்
பாவித்து முடங்கிப்போயிருந்த ஈழத் தமிழர் பிரச்சினையை இவர்கள் முன்னுரிமை
ஆக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய ஆர்ப்பாட்டங்களால் anti- Tamilism இன்று anti-Semiticism
ஆக அரசியல் கூறுமுறையில் புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் இந்த இனம்
பற்றிய புதிய நேசம் ஈழப் பிரச்சினையின் முக்கிய நோக்கிலிருந்து கவனம்
திரும்பிவிடுமோ என்னும் பயம் இருக்கிறது. இனப் பிரச்சினை சார்ந்த ஈழ அரசியல் அறம்
சார்ந்த தனி நபர் பிரச்சினையாக மாறிவிடுமோ என்ற கவலையும் வரவே செய்கிறது. இவர்கள்
கொடுத்த ஊடகப் பேட்டிகளில் அவர்கள் விட்டுவந்த உறவினர்கள், சகோதரர்கள், நண்பர்கள்,
தெரிந்தவர்கள் கொல்லப்பட்டதையும் அபகரிக்கப்பட்டதையும் கைதிகளாக்கப்பட்டதையும்
அவர்களது பரிதாப வாழ்க்கையையும் கஷ்டங்களையுமே முன்னிலைப்படுத்துகிறார்கள்.
தனிமனிதத் துயரமும் தனிமனித அவலமும் முக்கியமானவை. அவற்றை ஆவணப்படுத்துவதும்
ஒருவிதத்தில் சரியானதும்கூட. ஆனால் ஈழத்தில் நடப்பது தனியார் சம்பந்தப்பட்டாலும் ஒரு
சனத்தின் பிரச்சினை. ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் பிரச்சினை.
ஆங்கிலேய மையநீரோட்ட ஊடகங்களிலிருந்து இந்த எதிர்ப்பு சற்று
புறந்தள்ளப்பட்டாலும் போராட்டத்தின் அழுத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்துகொள்ள
வலையத்தைப் பாருங்கள். பின்–ஊடக நாட்களில் வலையம் என்ற இணைய வெளியில்தான் தீவிரப்
பிரச்சாரமும் சர்ச்சையும் நடைபெறுகின்றன. சிங்களவர்களும் சளைக்காமல் இணையதளத்தைப்
பயன்படுத்துகிறார்கள். போராளிகளும் அவர்களின் எதிராளிகளின் சொல்லாடல்களின்
வெற்றியும் தோல்வியும் வலைப்பதிவுகளில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த
மின்தளங்களை மேயும்போது மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது நன்கு பாவித்துத் தேய்ந்து
போன அந்த வாசகம்: எந்தப் போரிலும் முதலில் காயப்படுவது உண்மை.
ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசச் சமூகத்தின் மீது நம்பிக்கையில்லை. தென்னிந்திய
திராவிடத் தலைவர்களின் நடத்தைகள் ஊக்கம் தருவதாயும் இல்லை. அரசியல் விஷயங்களை சும்மா
ஓரத்தில் இருந்து பார்ப்பவர்கள் கூடத் தென்னிந்திய அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான,
சில வேலைகளில் விஷமத்தனமான சேட்டைகளை அவதானித்திருப்பார்கள். இந்திய மைய அரசின்
உதவியை எதிர்பார்ப்பது தீயைக் கொளுத்துவோரையே தீயணைப்பு அதிகாரியாக நியமிப்பதைப்
போன்றது. உலகில் நடக்கும் அரசியல் சர்ச்சைகளில் இலங்கைத் தீவின் பிரச்சினைகளுக்கு
விடைதேட நித்திரையின்றி உருளத் தேவையில்லை. தீர்வு எல்லோருக்கும் தெரியும். நான்
இப்போது சொல்லப் போவது அப்படி ஒன்றும் புதிதல்ல. பலமுறையும் பல கட்டங்களிலும்
பேசப்பட்டதுதான். ஒற்றை ஆட்சியை மீளமைத்து மாவட்டங்களுக்கு அதிகாரப் பகிர்வளித்தல்.
இதை அமலாக்குவதற்கு அரசியல் துணிச்சலும் மனோபலமும் இல்லை.
சிலருடன் இங்கே பேசியபோது திரும்பத் திரும்பக் கேட்ட அரிய செய்தி: இயக்கத்திலும்
சில பிழைகள் நடந்திருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தப் பேச்சே வந்திருக்காது.
இயக்கம் என்பதை எல்டிடி என மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு
மேற்கொண்டிருக்கும் இறுதித் தீர்வுக்கான போரில் புலிகளின் படை பலம்
குறைந்திருக்கலாம். அவர்களுடைய ஆட்சியின் பூலோக எல்லையும்
கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்களின் வினைமுறைத் திறன்கள் பற்றிப் பலருக்கும்
கடுமையான விமர்சனங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் போராடக் காரண மாயிருந்த
தமிழ் மக்களின் கோரிக்கைகள் மங்கவில்லை. மாறாக இன்று மேற்குலக நாடுகளில் நடைபெறும்
எதிர்ப்பு ஈழத் தமிழரின் கோரிக்கைகளுக்குப் புதிய வேகத்தையும் வீச்சையும்
புலப்பதிவையும் கொடுத்திருக்கிறது.
விடுதலை இயக்கங்களுக்கு இது செழுமையான காலம் அல்ல. 9/11க்குப் பிறகு தேசியப்
பாதுகாப்பு தெய்வீக ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. விடுதலை, சுயநிர்ணயம், சுயாட்சி
போன்ற கோரிக்கைகளை எழுப்பும் குரல்கள் அனைத்தும் தேசம் என்னும் கட்டமைப்பைச்
சிதறடிக்கும் தீவிரவாதக் குழுக்களாக வர்ணம் பூசப்பட்டிருக்கின்றன. இந்தக்
கண்ணோட்டத்தில்தான் எல்டிடியின் சரிவை மேற்கு நாடுகள் வரவேற்கின்றன. தமிழ் விடுதலை
இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்கள் அல்ல. அவை தமிழ் இன மீட்பு இயக்கங்கள். சில
தருணங்களில் பீதியுறவையும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கைபிடித்திருக்கின்றன.
இலங்கைப் பிரச்சினை ஒரு பின் - காலனியப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டாலும்,
சிங்கள தேசிய அரசு இதனை ஒரு காலனிய விரிவாக்கமாகவே மாற்றியிருக்கிறது. நடக்கும்
போரில் பல காலனியச் சமாந்திரங்களையும் சாயல்களையும் மறுகண்டுபிடிப்புச் செய்யலாம்.
காலனியவதிகள் அமுக்கிவைக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் சொல்லும் ஆறுதலான
வார்த்தைகள் ‘நான் உங்களை மீட்க வந்திருக்கிறேன்’. இதைத்தான் ராஜபக்சவும் அவருடைய
இராணுவமும் அவரை ஆதரிக்கும் ஊடகமும் வடபகுதியில் அடைபட்டுக்கிடக்கும் தமிழருக்கு
அறிவிக்கின்றன. காலனியாதிக்கத்துக்குக் கைவந்த இன்னொரு கலை எதிரிகளைப் பிரித்து
அரசாள்வது. முக்கியமாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடம் தருவது. கருணாவை இந்த
அரசாங்கம் தேசியத் தலைவராகப் பவனிவரச் செய்வது இதற்கு உன்னத உதாரணம்.
கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரங்களை அமைத்து இன வாரியாக மக்களைப் பிரித்துச்
சிறைப்படுத்துவது மற்றொரு செயல். இன்று சிங்கள அரசு ஏற்படுத்திய பாதுகாப்பு
மண்டிலங்கள் இதைத் தான் சாதிக்கின்றன. காலனியத்தின் வேறொரு - ஆனால் முக்கியமான -
சாதனை எதிரிகளைச் சாறுபடுத்துதல் (essentialize). இதற்கு எடுத்துக்காட்டு எல்லாத்
தமிழருமே புலிகள் என்னும் சிங்கள அரசின் பரப்புரை.
கடைசியாக, காலனியவாதிகளின் ஆவேசப் பிடிவாதம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலப்பரப்பை
முற்றுமாக அழித்துவிடுவதுதான். இலங்கையைத் தன்னுடமையாக்க ஆங்கிலேயக் காலனியப் படைகள்
போர் தொடுத்தபோது எழுப்பிய முழக்கத்தின் வரிகள்: ‘We’ll track the savage to his
den with famine, sword and flame. இதைத்தான் இன்றைய இனவாதச் சிங்கள இராணுவம்
வடபகுதியில் சாதித்துக்கொண்டிருக்கிறது.
மதத்துக்கும் அரசியலுக்கும் உள்ள அணுக்கம் பற்றிப் பேசும்போது இஸ்லாம்தான்
நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியலில் பின்னிப் பிணைந்து
விசாலப் பார்வைகொண்ட அந்த மதத்தை ஒரு இருண்ட, குறுகிய, கருணையற்றதாக மாற்றிவருவது
பொதுச்சொல்லாடலில் நமக்குப் பரிச்சயமாக இருக்கிறது. இதே உருமாற்றம் சாந்தத்தைப்
போதிக்கும் பௌத்த மதத்திற்கும் நடைபெற்று வருகிறது. இன்றைய சிங்கள தேசிய
இனவாதத்துக்கு உறுதுணையாக இருப்பது வலதுசாரி எண்ண இயல்களால் திரிக்கப்பட்ட பௌத்தமே.
எழுபதுகளில் வியட்நாமில் ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான Engaged Buddhism என்னும்
பெயரில் ஓரப்படுத்தப்பட்டவர்களின் ஆக்கபூர்வக் கருவியாக, முற்போக்கு மதமாக பௌத்தம்
செயல்பட்டது. இதற்கு எதிர்மாறாக இன்று இலங்கையில் பௌத்தம் மேலாதிக்க வலது பாசிச
இனவாதத்தின் உபகரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பின் புலமாக நிற்பது 19ஆம்
நூற்றாண்டில் சமயச் சீர்திருத்தர் அனாகரிக தர்மபாலா (1864-1933) உருவாக்கிய
புனைதலான, தரப்படுத்தப்பட்ட பௌத்தமே. இவர் சாதித்த விளக்கவியல் பணி அன்றைய
கிறிஸ்தவ மிசனரிமாரின் சாக்கியமுனியின் போதனைகளுக்கெதிரான சாடுதலுக்கும்
அவமதிப்புக்கும் பதில் கொடுக்க ஒரு யௌவனமான பௌத்த மதத்தைக் கட்டுமானப்படுத்தியதே.
கீழைத்தேய வல்லுநர்கள் மீள்கண்டுபிடிப்பு செய்த பண்டைய பிரதிகள் இவருக்கு ஒரு
பிரகாசமான, சீர்திருத்தப்பட்ட, ஒற்றைக் குணங்கள் கொண்ட பௌத்த மதத்தை மீண்டும்
பதிவுசெய்ய அனுசரணை யாக இருந்தன. இவர் பரப்புரை செய்த எண்ணங்களின் சாரம்: இலங்கையின்
பொற்கால பௌத்த நாட்களை நினைவுபடுத்தியது; மற்ற மதங்களால் புத்தரின் நற்செய்தி
அழிந்துபோகும் எனப் பீதியை ஏற்படுத்தியது; இலங்கை நிலப் பரப்பில் மட்டுந்தான்
சுத்தமான பௌத்தம் தழைக்க முடியும் என்னும் அதீத மனப் பிரக்ஞையை ஏற்படுத்தியது;
பௌத்தத்தின் மீட்பு ஆரிய - சிங்ளவரின் கையில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையைச்
சிங்களவரின் மனத்தில் வித்திட்டது. இதே காலனிய, மிசனரி சூழ்நிலையில்தான்
ஆறுமுகநாவலரின் தமிழ்த் தேசியவாதமும் உருவாகியது என்பதை இணைத்துப் பார்க்க வேண்டும்.
அன்று தர்மபாலா அடிக்கோடிட்ட வைராக்கியமான இனவாதத்தை ஒரு சமகாலச் சிங்கள
அரசியல்வாதி மீண்டும் பிரதிபலிப்பதை இங்கே தருகிறேன்: ‘சிங்களவர்கள் மட்டுமே இந்த
நாட்டின் குடிமக்கள். மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகளே. பௌத்தத்தின் அடிப்படைக்
கருத்தான கருணை காரணமாகத்தான் இவர்களின் வருகையை நாங்கள் எதிர்க்கவில்லை. நாங்கள்
காட்டும் இந்தக் கருணை நிரந்தரமானது என அவர்கள் நினைக்கக் கூடாது. வர்த்தகம்
செய்வதற்காகவே முஸ்லிம்களுக்கு எங்கள் அரசர்கள் அனுமதி கொடுத்ததால்தான் அவர்கள்
இங்கே வரவேற்கப்பட்டார்கள். மொகலாயப் படையெடுப்புக்குப் பயந்து தமிழர்கள் இங்கே
புகலிடம் அடைந்தனர். இவர்கள் இன்று நன்றி மறந்து இருக்கிறார்கள்.’ இந்த
வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் பௌத்த பிக்குகளின் கட்சி சார்புடைய சம்பிக்க ரணவகெ.
இன்று ராஜபக்சேவை துட்ட கைமூணுவுடன் ஒப்பிட்டுச் சுவரொட்டிகள் ஒட்டுவதும் தர்மபாலா
மறுகண்டு பிடிப்பு செய்த ஆரிய- சிங்கள இனவாதத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கே.
பிரபாகரன் ஏதோ ஒரு நேர்காணலில் சொல்லிய வசனம் இந்தப் பத்தியை முடிக்க உதவுமென
நினைக்கிறேன். இந்த வாசகத்தை எங்கே சொன்னார் என்று என்னிடம் சான்றாதாரம் இல்லை.
ஆனாலும் தருகிறேன்: ‘ஜெ. ஆர். ஜெயவர்தனா ஒரு நல்ல பௌத்தராயிருந்திருந்தால் நான்
துப்பாக்கி தூக்கியிருக்கமாட்டேன்.’
சப்பாத்துகள் கண்டனக் கருவியாகிய கதை
இதுவரை அரசியல்வாதிகள் எதிர்ப்பின் அடையாளமாக முட்டைகள், அழுகிய பழங்கள், சாணம்
போன்றவற்றைச் சந்தித்ததுண்டு. இப்போது துப்பாக்கி, குண்டுகளைவிடக் காலணிகள்
வலுவான மறுத்துரைப்புச் சின்னமாக உருவாகிவருகின்றன. பத்திரிகையாளர்களுக்கும்
எழுத்தாளர்களுக்கும் ஆக்கபூர்வமான கருவியாகப் பேனா இருந்தது. இத்துடன் காலணிகளும்
மிகக் கூர்மையான எதிரிக்கை ஆயுதமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. முண்டஸர்
அல்-சைதி Muntazar al Zaidi என்னும் ஈராக் ஊடகவியலாளர் தொடங்கிய இந்த எதிர்ப்புப்
பணியை இன்னுமொரு ஊடகவியலாளரான ஜானைல் சிங் என்ற சீக்கியர் இந்தியாவில்
செயல்படுத்தியிருக்கிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்க்குக் கிடைத்த பிரிவு
உபச்சார அன்பளிப்பு இப்போது உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் கிடைத்திருக்கிறது.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது அத்வானிக்குக்கூடச் செருப்பு எறியப்பட்டதாக
வாசித்தேன்.
இந்தச் சப்பாத்து எறிதலுக்கும் மத்தியக் கிழக்கு அரசியலுக்கும் நெருங்கிய
தொடர்பு உண்டு. முதன்முதலாக 13ஆம் நூற்றாண்டில் பழிவாங்கும் சின்னமாகச் செருப்பு
உபயோகிக்கப்பட்டிருக்கிறது எனப் பாதரட்சைகள் கண்டனக் கருவியாகப் பாவிக்கப்பட்ட
வரலாற்றைப் பற்றிய பாண்டித்தியமான தன்னுடைய கட்டுரையில் Mohamed Abdu Hassanein
குறிப்பிட்டிருக்கிறார். வெட்கக்கேடான ஆயுதமாக முதலில் பாவித்தவர் ஊம் அலி.
எகிப்திய மல்மூக் சுல்தான் Ezz Al Din Aybakä அவருடைய மனைவிகளில் ஒருத்தியான Shajar
Al-Durr கொலைசெய்தபோது அதற்குப் பழிவாங்க இன்னொரு மனைவியான ஊம் அலியும் அவரது
அந்தப்புரப் பெண் பணியாளர்களும் சுல்தானைச் செருப்பால் அடித்ததாக வரலாற்றில்
ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் நம் கண்களுக்கு முன் பிரபலமானது சதாம்
ஹுசெயின் சிலைக்குக் கிடைத்த செருப்படி. ஏப்ரல் 9, 2003 ஈராக்கை அமெரிக்கத்
துருப்புகள் ஆக்கிரமித்துக்கொண்ட சில மணித்தியாலங்களில் அவரது உருவச் சிலையைத்
தரைமட்டமாக்கிய போது கோபம் கொண்ட ஈராக்கியர்கள், வீழ்ச்சியடைந்த தலைவரைத்
தாறுமாறாக விளாசித் தள்ளியதைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். இதில் ஒரு
நகைமுரண் இருக்கிறது. 1991 வளைகுடாப் போருக்குப்பின் ஆத்திரமடைந்த சதாம் சித்திர
வேலைப்பாடமைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சீனியரின் உருவத்தை Al Rahid Hotel
வாசலில் செதுக்கி George Bush the Criminal என்றும் எழுதிவைத்திருந்தார்.
போகிறவர்களும் வருகிறவர்களும் அந்த உயிரற்ற உருவத்தைத் தங்கள் காலணி அணிந்த
கால்களால் நன்றாக மிதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்.
மேற்குலகக் கலாச்சாரத்தில் காலணிகளுக்கு வேறுபட்ட முக்கியத்துவம் உண்டு.
வெட்கக்கேட்டின் சின்னமாக அல்ல, ஆனால் ஒரு ராசியான வஸ்துவாகக் கருதப்படுகிறது.
பண்டைய நாட்களில் திருமணத்திற்குப் பின் புதிய தம்பதிகள் வீட்டைவிட்டுப்
போகும்போது அவர்களுடைய வாழ்வு செழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பழைய
காலணிகளை வீசுவது வழக்கமாக இருந்தது. இந்த வழக்கம் இன்றும் நீடிக்கிறது.
எறிவதுக்குப் பதிலாக மணமக்களின் வாகனத்தில் பழைய சப்பாத்துகளைக் கட்டிவிடுவதுண்டு.
1886இல் எழுதப்பட்ட கவிதை வரிகள் காலணிகள் தரும் அதிர்ஷ்டம் பற்றி இப்படிக்
கூறுகின்றன: ‘Old shoes are enough, if properly thrown , to bring good luck to
all creatures known.
ஆனால் இந்தப் படிமம் மாறிவருகிறது. இது பற்றிக் கீழே வரும் பத்தியில் காணலாம்.
முண்டஸர் அல்-சைதி பழைய அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்குப் பிரியாவிடைப் பரிசாக
எறிந்த அந்தச் சப்பாத்துகள் இப்பொழுது கலாச்சார சம்மதத்தையும் தார்மீக மதிப்பையும்
பெற்றிருக்கின்றன. Model 271 என்று 1991இல் இந்த அணிகள் வியாபாரப்படுத்தப்பட்டன.
இதைத் தயாரித்தவர் Ramazan Baydan. இவரது தொழிற்சாலை இஸ்தான்புல்லுக்கு அருகே
உள்ளது. அந்த மார்கழி விடையனுப்பு விழாவிற்குப் பிறகு Bye Bye Bush என்னும் புதிய
வர்த்தகக் குறி கொண்ட நாமத்துடன் இதே காலணிகள் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 20,000 ஜதைகள் மட்டுமே விற்பனையான இந்தப் பாதரட்சைகள் இப்பொழுது
4,75,000 வரை உயர்ந்திருக்கின்றன. விலைகூட அதிகரித்திருக்கிறது.
சப்பாத்தை அவமான, எதிர்வினைக் கருவியாக உபயோகிப்பது உணர்ச்சிவசப்பட்ட மத்தியக்
கிழக்கு மக்களுக்கு மட்டுமே கைவந்த செயல்திறன் அல்ல. சரித்திரத்தில் மற்றவர்களும்
தங்கள் வெறுப்பை, ஆத்திரத்தைச் சப்பாத்துகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். எனக்கு
ஞாபகத்தில் வரும் சம்பவம் 1960இல் ருஷ்யத் தலைவர் Nikta Krushchev ஐக்கிய நாட்டு
ஆலோசனைச் சபையில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு உரையின்போது தன்னுடைய
சப்பாத்துகளைச் செம்மையாக மேசையில் ஓங்கி அடித்தது. தொலைக் காட்சி, வலையம் இல்லாத
அந்த நாட்களில் இந்தப் படத்தை சிலோன் Daily Newsஇல் அரசியல் கபடமற்ற சிறுவனாக
இருந்த நாட்களில் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்த இரண்டு
சம்பவங்களை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஒன்று காசாவில் இஸ்ரேலிய
ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் நடந்த எதிர்ப்பு ஊர்வலம்
பிரித்தானியப் பிரதமர் வசிக்கும் No.10 இல்லத்திற்குச் சப்பாத்துகள் பறந்ததுடன்
முடிவுற்றது. புரட்சியாளர்கள் எழுப்பிய முழக்கம்: Shame on you, Have my shoe.
மற்றது சீனப் பிரதமருக்கு Cambridge University இல் வீசி எறியப்பட்டது. காலணி ஓர்
இனத்துக்குரிய வெட்கக்கேடான ஆயுதம் அல்ல. சம வாய்ப்புள்ள சகலருக்கும் இழிவான, சக்தி
சார்ந்த, உணர்ச்சி வாய்ந்த கருவியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆக்கினை தாங்காமல்
ஓரப்படுத்தப்பட்டவர்களின் ஆத்திரமிக்க எதிரான எள்ளல் தொனியாகப் பாதரட்சைகள்
உருப்பெற்றிருக்கின்றன. இராணுவக் கவச வாகனங்கள், ஏவுதளங்கள் நிறைந்த இந்த நாட்களில்
காலணிகள் அதியற்புதப் பின்–படையணி (post-military) எதிர்ப்புக் கருவிகளென எனக்குத்
தோன்றுகிறது.
கடைசியாக, காலணிகள் ஆயுதமாவதைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி வலையத்தில்
பதிவுசெய்தபோது ஒரு குறளைத் திருத்தி எழுதியிருந்ததைப் பார்த்தேன். அவர் மீள்பதியல்
செய்த குறள் இப்படி அமைந்திருந்தது:
வில்லோர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
காலணி கொண்டார் பகை.
கடைசி வரி ‘சொல்லேர் உழவர் பகை’ என்று இருந்திருக்க வேண்டும். திருமறைகளை மாற்ற
வேண்டிய அவசியமே இல்லை. வேதப் புத்தகங்களில் காலணி எறிவதற்கு ஆணை உண்டு. காலணி
வினைமுறை கருவியாகப் புதிய பரிமாணம் அடைந்தது முண்டஸர் அல்-சைதியின் செய்கையால்
அல்ல. மறுத்துரைப்புக் கருவியாகப் பாவிக்கலாம் என்று கிறிஸ்தவ நற்செய்தியில்
கூறப்பட்டிருக்கிறது. தன்னுடைய சிஷ்யர்களை இயேசு மதப் பிரச்சாரத்திற்கு அனுப்பும்
போது வழிப்பயணத்திற்கு ஆகாரம், பை, கச்சையில் காசு ஒன்றையும் கொண்டுபோக வேண்டாம்
என்றும் பாதரட்சைகளை மட்டுமே போட்டுக்கொள்ளச் சொன்னார். அதே காட்சியில் இயேசு
இன்னொன்றையும் கூறினார். சிஷ்யர்கள் தங்கியிருந்த ஊரில் அவர்களை
ஏற்றுக்கொள்ளாமலும் அவர்கள் சொல்வதைக் கேளாமலும் போனால், அவர்கள்
அவ்விடம்விட்டுப் போகும்போது, அவர்கள் இருந்த ஊருக்குச் சாட்சியாக அவர்களின்
கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். இது இயேசுவே கூறியது. இது மாற்கு
நற்செய்தி ஆறாம் அத்தியாயத்தில் வரும். நம்முடைய சாஸ்திரங்கள் சாதுவானவை அல்ல.
|