|
பள்ளிகளுக்கு விளம்பரப் பருவம் இது. செய்தித்தாள்களின் பக்கங்கள் தனியார் பள்ளி
விளம்பரங்களால் நிறைந்து வழிகின்றன. சில நாள்கள் சிறப்புப் பகுதி வெளியிட்டு
விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவற்றிற்கு நேர்கின்றன. பெரும்பாலான
விளம்பர வாசகங்கள் பொய் சொல்பவை. சாதாரணப் பொய், பெரும்பொய், மாபெரும்பொய்
என்று அதிலும் பல வகைகள் உண்டு. விளம்பர வாசகங்கள் மனிதர்களை நுகர்வோராக மாற்றி
அவர்களை மந்தைகளாகக் கருதி அவர்களின் மனோபாவங்களைக் குறிவைத்து வடிவமைக்கப்படுபவை.
நுகர்வோர் மந்தையும் எதையும் தர்க்கரீதியாக யோசிப்பதில்லை. பள்ளிகளின்
விளம்பரங்களில் இத்தகைய வாசகங்கள் பல உண்டு.
எல்லாப் பள்ளிகளின் விளம்பரங்களிலும் ‘ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனி விடுதி
வசதி உண்டு’ என்னும் வாசகம் கட்டாயம் இடம்பெறுகிறது. இது அந்தப் பள்ளியின்
தனித்தன்மையில் ஒன்றாம்! எந்தப் பள்ளியில் இருபாலாருக்கும் ஒரே விடுதி வசதி
இருக்கிறது? விடுதி வசதி உண்டு என்றாலே போதும். நுகர்வோருக்குத் தெளிவு தர
வேண்டும் என்று கருதினால் ‘ஆண் பெண் இருபாலாருக்கும் விடுதி வசதி உண்டு’ என்று
போடலாம். அது என்ன தனித்தனி விடுதி? நம் சமூகத்தில் இருபாலாருக்கும் ஒரே விடுதி
வசதி எங்கே இருக்கிறது? குழந்தைகளிலேயே ஆண், பெண் எனப் பாகுபடுத்தித் தனித்தனிப்
பகுதியில் இடம் ஒதுக்கி உட்காரவைக்கும் வகுப்பறை அமைப்பு நம்முடையது. ஆணும் பெண்ணும்
பேசக் கூடாது என்னும் கட்டுப்பாட்டைச் சிறுவயதிலேயே கடுமையாக அமலாக்கும் பள்ளிகள்
அனேகம். சிறுவயதில் பிரித்துவிட்டால் பதின்வயதில் ஏற்படும் ‘ஒழுக்கக் கேடுகளை’
முன்கூட்டியே தடுத்துவிடலாம் என்பது கணக்கு. ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனி
விடுதி என்பதன் நோக்கமும் இதைத்தான் மையமாகக் கொண்டிருக்கிறது.
காதலில் ஈடுபட்டு ஓடிப்போய்விடுமோ என்று குழந்தையைப் பிறந்ததிலிருந்தே
அச்சத்துடனும் நம்பிக்கையற்றும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை
பெற்றோர்களுக்கு. இந்தச் சூழலில் கல்விக்கூடங்கள்தாம் ‘ஒழுக்கக் கேடு’ நடப்பதற்கு
வாய்ப்பான இடம் என்பது பெற்றோரின் எண்ணம். ஆகவே பள்ளிகள் பெற்றோர்களுக்கு
நம்பிக்கையூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ‘இருபாலாருக்கும் தனித்தனி’
என்னும் வாசகம் அந்த நம்பிக்கையைப் பெற்றோருக்குக் கொடுக்கின்றது. உங்கள் பையனோ
பெண்ணோ ‘ஒழுக்கக்கேட்டில்’ ஈடுபடாமல் நாங்கள் காக்கிறோம் எனப் பெற்றோருக்கு
அளிக்கும் உறுதி இந்த வாசகத்தில் புதைந்திக்கிறது. நம் சமூகத்தில் நிலவும் ஆண் பெண்
நட்பு பற்றிய மதிப்பீட்டை மனத்தில் கொண்ட வாசகம் இது. தர்க்கரீதியாக இந்த வாசகத்தை
யோசித்தால் அபத்தமாகப்படும். ஆனால் பெற்றோ ருக்கு இந்த வாசகம் நிறுவனம் தரும்
நம்பிக்கையாக விளங்குகிறது.
இதேபோலப் பள்ளிகளின் விளம்பரங்களில் இடம்பெறும் இன்னொரு வாசகம் ‘நூறு சதவீதத்
தேர்ச்சி’ என்பது. ஏற்கனவே நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்று
அறிவிக்கிறார்களா, இனி நூறு சதவீதத் தேர்ச்சிக்கு உத்தரவாதம் என்று சொல்கிறார்களா
என்பது பற்றிய தெளிவு விளம்பரத்தில் கிடையாது. ‘இருபாலாருக்கும் தனித்தனி விடுதி’
என்பதில் இருக்கும் தெளிவு இதில் இல்லை. சில இடங்களில் தெளிவு தர மொழியும் ஒற்றை
வாசிப்பும் சில இடங்களில் வெவ்வேறு பொருள்கொள்ள வாய்ப்பளிக்கும் பன்முக வாசிப்பும்
என விளம்பரங்கள் எல்லாவகை உத்திகளையும் கையாள்கின்றன. நூறு சதவீதத் தேர்ச்சி என்று
விளம்பரங்களில் கொடுப்பதோடு நிற்காமல் பள்ளிகள் உண்மையாகவே அதற்குக் கடுமையான
முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அப்படி அவை மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் பற்றிச்
சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
நீலகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் எட்டு மாணவர்களைப் பள்ளியில்
இருந்து கடைசி நேரத்தில் நீக்கிவிட்டார்கள். தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதச் சொல்லி
அனுப்பியிருக்கிறார்கள். ஏதோ ஒன்றிரண்டு விவரமான பெற்றோரால் அந்த விஷயம்
ஊடகங்களில் வெளியாகிவிட்டது. பள்ளியின் தலைமையாசிரியர்மீது நடவடிக்கையும்
எடுக்கப்பட்டிருக்கிறது. நூறு சதவீதத் தேர்ச்சிக்காகப் பள்ளிகள் மேற்கொள்ளும் முதல்
முயற்சி இதுதான். இது பல பரிமாணங்கள் கொண்டது. தேர்ச்சி பெறுவது கடினம் என்னும்
கணிப்புக்கு ஆட்படும் மாணவரை முடிந்த அளவு ஒன்பதாம் வகுப்பிலேயே நிறுத்திக்
கொள்வார்கள். ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறச் செய்துவிட்டு மாற்றுச் சான்றிதழைக்
கொடுத்து அனுப்பிவிடுவதும் உண்டு. பெற்றோர் அதிகப் பணம் செலவழித்து வேறொரு
பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்க்க வேண்டும். அப்படியும் பத்தாம் வகுப்பில் பள்ளி
மாணவராக இல்லாமல் தனித்தேர்வராகவே தேர்வெழுத நேரும். இல்லாவிட்டால் அரசுப் பள்ளி
எதிலாவது சேர்க்க வேண்டும். எந்த மாணவரையும் சேர்த்துக்கொள்ள முடியாது எனப்
புறக்கணித்து ஒதுக்காதவை அரசுப் பள்ளிகள்தாம்.
படிப்பில் ஆர்வம் இல்லாத அல்லது குறைவான மதிப்பெண் வாங்கும் மாணவருக்குக் கண்டம்
ஒன்பதாம் வகுப்புத் தான். அந்தக் கண்டத்தை எப்படியேனும் கடந்து வந்துவிட்டால்
பத்தாம் வகுப்பில் நூறு சதத் தேர்ச்சி என்னும் பூதம் அந்த மாணவர்களை அலைக் கழிக்கும்.
ஆண்டு முழுவதும் நடைமுறையில் அந்தப் பள்ளி மாணவராகவே தொடரலாம். ஆனால்
அதிகாரபூர்வமாக அவர் அந்தப் பள்ளி மாணவர் அல்ல. வகுப்புக்கு அவர் வரலாம்; பள்ளி
நடத்தும் மாதிரித் தேர்வுகள் எல்லாவற்றையும் எழுதலாம்; ஆனால் அந்தப் பள்ளி மாணவராகத்
தேர்வு எழுத முடியாது. பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கும்போது தனித்தேர்வராக
விண்ணப்பித்துக்கொள்ளப் பள்ளி எல்லாவிதமான உதவிகளையும் செய்யும். என்னே பெருந்தன்மை!
நீலகிரிப் பள்ளிக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதவில்லை. முன்கூட்டியே பெற்றோரிடம்
பேசி ஒப்புதல் வாங்கித் தனித்தேர்வராகத் தேர்வெழுத எல்லாவித உதவிகளையும்
செய்திருந்தால் பிரச்சினை இல்லை. கடைசி நேரத்தில் அந்த முடிவை எடுத்ததால் விஷயம்
வெளியே கசிந்துவிட்டது. அரசுப் பள்ளிகள் தவிரப் பெரும்பாலான பள்ளிகளில் நடப்பதுதான்
இது. சாமர்த்தியத்தோடும் எச்சரிக்கையோடும் இதைச் செய்வதால் விஷயம் வெளியே
வருவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதும் மாணவர்களின்
எண்ணிக்கை, அவர்களின் பின்னணி ஆகியவற்றைப் பற்றி யாரேனும் புள்ளிவிவரங்கள்
சேகரித்தால் நிச்சயம் 90 சதத் தனித்தேர்வர்கள் பள்ளி மாணவர்களாகவே இருப்பர் என்று
நம்புகிறேன். பள்ளிக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் பள்ளியிலிருந்து இடைநின்று வயது
கூடியவர்களுக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுத வாய்ப்பை
வழங்க வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில் நீண்டகாலமாக இருக்கும் இந்தத்
தனித்தேர்வர் முறையைத் தனியார் பள்ளிகள் தங்கள் ‘நூறு சதத் தேர்ச்சி’ச் சாதனைக்கு
முறைகேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
நூறு சதத் தேர்ச்சிக்காகப் பள்ளிகள் எடுக்கும் இன்னொரு முயற்சி கொஞ்சம்
ஆபத்தானது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்
பள்ளியில் நடந்த விஷயம் ஒன்று நீதிமன்றம்வரை சென்றிருக்கிறது. (தினமணி, 26.03.09)
ஒரு மாணவருக்குத் தேர்வெழுத ஹால் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டது பள்ளி நிர்வாகம்.
‘எங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவது பாதிக்கப்படும் என்பதாலேயே ஹால்
டிக்கெட் வழங்கவில்லை’ என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக மாணவரின் தந்தை
கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, ‘என் மகனின் எதிர் காலம் பாதிக்கப்படும்’ என்றதற்கு
‘பள்ளியின் எதிர்காலமே எங்களுக்கு முக்கியம்’ என்று நிர்வாகம் கூறிவிட்டதாம். நூறு
சதத் தேர்ச்சியில்தான் பள்ளியின் எதிர்காலம் அடங்கியிருக்கிறதாம். அந்த மாணவரின்
தந்தை நீதிமன்றத்திற்குப் போய்த் தேர்வுக்கு முதல்நாள் இரவு ஹால் டிக்கெட்
வாங்கும்படி நேர்ந்திருக்கிறது. ஒரு மாணவரைத் தேர்வுக்கு அனுப்பாமல் தவிர்க்கப்
பள்ளி நிர்வாகம் கடைசிவரை போராடியிருக்கிறது. இந்த நூறு சதத் தேர்ச்சிக்கு எதற்கு
இத்தனை முக்கியத்துவம்?
தேர்வு முடிவுகள் வெளியானவுடன் அரசு தரும் புள்ளிவிவரச் செய்தியில் தங்கள்
பள்ளியின் பெயரும் இடம்பெற வேண்டும் என்பதும் தங்கள் பள்ளியின் சாதனை குறித்துத்
தனிச் செய்தி கொடுக்க முடியும் என்பதும்தான் காரணம். தொழில் அபிவிருத்திக்கு
இந்தப் புள்ளிவிவரச் செய்தி அவசியம். அரசுக்கும் எப்போதுமே புள்ளிவிவரங்கள்தாம்
முக்கியம். ஆண்டுதோறும் நூறு சதத் தேர்ச்சி பெற்றவை இத்தனை பள்ளிகள் என்று
கணக்குக்காட்டுவது சாதனைப் பட்டியலில் அடங்கும். இந்த இரண்டு வகை முயற்சிகளில் முதல்
வகையைத்தான் எல்லாப் பள்ளிகளும் பின்பற்றுகின்றன. பத்தாண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள்
ஒரு பள்ளியில் படித்துவிட்டு அந்தப் பள்ளி மாணவராகத் தேர்வெழுத முடியாமல்போவது
அம்மாணவருக்கு எத்தகைய மனநிலை பாதிப்பை உண்டாக்கும் என்பதைப் பற்றித் தொழில் தர்மம்
யோசிக்க விடுவதில்லை. சக மாணவர்களிலிருந்து அந்நியப்படுத்தும் இந்தச் செயல்
அம்மாணவரைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவது போலத்தான். தனித்தேர்வராகத்
தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று வந்தால் மதிப்பெண்ணுக்குத் தகுந்த அளவு பணம் பெற்றுக்
கொண்டு அதே பள்ளி அம்மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும். பன்னிரண்டாம் வகுப்புத்
தேர்வின்போது மறுபடியும் பழைய கதையே தொடரும்.
இரண்டு வகை முயற்சிகளும் அல்லாமல் மாணவரைத் தேர்ச்சி பெறவைப்பதையே தங்கள்
இலக்காகக் கொண்டு செயல்படும் ‘நல்ல’ பள்ளிகளும் இருக்கின்றன. அங்கே
சேர்த்துவிட்டால் எப்பேர்ப்பட்ட ‘மக்கு’ம் தேர்ச்சி பெற்றுவிடுமாம். ஒருவேளை
மந்திரக்கயிறு கொண்ட பள்ளிகளோ? அவை என்ன செய்கின்றன என்பதை அவற்றின் வளாகச்
சுற்றுச் சுவர்கள் சொல்லும். படிக்கும் ஆற்றல் குறைந்த மாணவர்களைப் படிக்கவைக்க
அவர்கள் கையாளும் வழிமுறை அடி உதைதான். பலம் வாய்ந்த, வலுவான உடல் கொண்ட
ஆசிரியர்களையே அங்கே பணிக்கு அமர்த்துவார்கள். வகுப்பறையில் பகல் பூசை. இரவில்
விடுதிப் பூசை. சகட்டுமேனிக்குப் பூசை கொடுத்தால் கல்வித்தாய் அந்த மாணவர்களுக்குத்
தேர்ச்சி வரத்தைத் தந்தேதான் தீர வேண்டும். மாணவர் ஏறிக் குதித்துத் தப்பி ஓடிவிடக்
கூடாது என்பதற்காக மிக உயர்ந்த மதில் சுவர். இன்னும் அகழிகள் வரவில்லை. அறைகளில்
மின்விசிறி இல்லாத விடுதிகளும் உண்டு என்கிறார்கள். தற்கொலை வாய்ப்புள்ள எல்லா
வழிகளையும் அடைத்துவிடுதல் முக்கியம். அப்படியும் கைக்குக் கிடைக்கும் பெனாயில்
போன்றவற்றைக் குடித்து எதிர்க்கும் மாணவக் கண்மணிகள் உண்டு. உடல்நிலை சரியில்லை
எனப் பொய்ப் பேசிப் பெற்றோரை வரவழைக்கும் அறிவாற்றல் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் என்ன செய்ய?
பள்ளியில் மாணவரைக் கொண்டுவந்து சேர்க்கும் போதே பெற்றோர் ‘என்ன செய்வீங்களோ
ஏது செய்வீங்களோ தெரியாது. பையன் பாஸ் பண்ணனும். நெறையா மார்க் வாங்கோணும்’ என்று
சொல்லித்தான் சேர்க்கிறார்கள். வானுயர்ந்த மதில் சுவருக்குள் நடக்கும்
சித்திரவதைக்குப் பெற்றோர் முழு உடந்தை. ஒரு சமூகத்தில் எல்லாரும் ஒரேவகையான அறிவு
பெற்றவர்களாக இருக்க முடியுமா? சிலருக்குப் படிப்பில் ஆர்வம் இருக்கக்கூடும். வேறு
சிலருக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கலாம். கலைத்திறன்களில் ஈடுபாடு காட்டுபவர்கள்
உண்டு. மாணவர்களை ஒற்றை வார்ப்பில் உருவாக்கிவிடும் முயற்சிகள்தாம் இன்றைய கல்வித்
துறையில் நடக்கின்றன. எல்லா மாணவர்களும் முதல் தரவரிசை பெறுபவர்களாக இருந்துவிட்டால்
எப்படி இருக்கும்? பன்னாட்டு நிறுவனம் ஒன்று உலகம் முழுக்க விநியோகிக்கும்
பொம்மைகளை அடுக்கிவைத்திருக்கும் கடைதான் கற்பனையில் விரிகிறது. பொம்மைகள் மட்டுமே
வசிக்கும் உலகில் எப்படி வாழ்வது?
நூறு சதத் தேர்ச்சிச் சாதனைக்காக அரசு எடுக்கும் முயற்சிகளும் அனேகம். ஓரிரு
ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மறுதேர்வு முறை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனியார்
பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கும் மாணவ
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு மேற்கொள்ளும் முயற்சி இது என்று
ஒருபக்கம் விமர்சிக்கப்பட்டாலும் வேறு பல காரணங்களால் இதை வரவேற்க வேண்டியுள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் கல்வித் தகுதி தேவை என்னும் நிலை இருக்கும்போது
மாணவர் தேர்ச்சி பெற அரசு பலவகைகளில் உதவுவது நல்லதுதான். நூறு சதத் தேர்ச்சி
என்னும் சாதனை மாயை தனியார் பள்ளிகளின் வணிக நோக்கத்திற்கு மட்டுமே பயன்படக்
கூடியது. இதை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் இதற்குரிய முக்கியத்துவத்தைக்
குறைக்க முயலலாம்
இப்போது நூற்றுக்கு முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்றிருப்பதை
இருபத்தைந்து என்று குறைக்கலாம். பணம் கொண்டவர்களுக்கே உயர்கல்வி என்றிருக்கும்
நிலையில் அத்தகையவர்களுக்கு இதனால் பாதிப்பு ஒன்றும் நேரப்போவதில்லை. கற்றல் திறன்
குறைந்த மாணவர்களுக்கான சித்திரவதை இதனால் குறையக்கூடும். உயர்ந்த மதில் சுவர்
தேவைப்படாது. வலு குறைந்தவர்களுக்கும் ஆசிரியப் பணி கிடைக்கும். தனித்தேர்வர்களின்
எண்ணிக்கை கணிசமாகக் குறையும். நூறு சதவீதத் தேர்ச்சி என்பதை இயல்பானதாக்க முடியும்.
மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.
ஆனால் விளம்பர மதிப்புள்ள ஒன்றை இழக்கத் தொழில் கனவான்கள் விரும்புவார்களா? |