|
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவரும் ஈழ
விடுதலைப் போர் ஒரு மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. வன்னிப் பகுதியில் பத்து
சதுரக் கிலோ மீட்டர் பரப்பில் சிக்கித் தவிக்கும் விடுதலைப் புலிகளையும் இரண்டு
லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களையும் ராஜபக்சேயின் தலைமையிலான சிங்களப்
பேரினவாத அரசு ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து வருகிறது. தாக்குதல்
பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள ‘பாதுகாப்பு’
முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் சொல்லொணாச்
சித்திரவதைகளுக்குள்ளாகியிருப்பதாக ராணுவத் தணிக்கையையும் மீறி அங்கிருந்து
வந்துகொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான்
அங்கே போக வேண்டியிருந்தது’ எனச் சொல்கிறார் ஓரிரு வாரங்களுக்கு முன்னால் அங்கு
போயிருந்த இந்தியாவின் ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர். ஈழத் தமிழர்களைக்
காப்பாற்றத் தவறியது இந்திய அரசின் மிகப் பெரிய தவறு எனச் சொல்லியிருக்கும்
ரவிசங்கர் சர்வதேசச் சமுதாயங்களின் மீதும் அதே குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகக் கட்டமைப்பதில் வெற்றிபெற்றிருக்கும்
இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இந்த இன
அழிப்புக்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இந்த அங்கீகாரத்தைப்
பெற்றுத்தந்ததில் இந்திய அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. ராஜீவ்காந்தியின்
படுகொலைக்காக ஈழத் தமிழர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ராஜபக்சே அரசுக்கு மறைமுகமாகவும்
நேரடியாகவும் செய்துவரும் ராணுவ உதவிகள் இலங்கை ராணுவத்தின் அழித்தொழிப்பு
நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றன.
சென்ற ஜூலையில் வன்னிப் பகுதியில் வாழும் தமிழர்கள்மீதான தாக்குதலை இலங்கை ராணுவம்
தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு பொருட்படுத்தவே இல்லை.
இந்த இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும் தாக்குதலைக் கைவிட்டு இனப்
பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் இலங்கையை நிர்பந்திக்கக் கோரி காங்கிரசின்
கூட்டணிக் கட்சிகளும் ஈழத் தமிழருக்கு ஆதரவான பல்வேறு அமைப்புகளும் குரல்கொடுத்த
போது மத்திய அரசு அதை அலட்சியம் செய்தது. முத்துக்குமார் தற்கொலையைத் தொடர்ந்து
தமிழகத்தில் உருவான பரவலான எழுச்சியையுங்கூட அரசு பொருட்படுத்தவில்லை. படுகொலையைத்
தடுத்து நிறுத்துமாறும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுமாறும் கோரிய பலர் அரசின்
அடக்குமுறைக்குள்ளாகியிருக்கின்றனர். வைகோ, நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி,
இயக்குநர் சீமான் உள்ளிட்ட பலரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ததன்
மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ் மண்ணில் எழுந்துள்ள குரல்களை நசுக்க
இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குத் துணைபோய்க்கொண்டிருக்கிறது
‘தமிழினத் தலைவர்’ கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. பாதிக்கப்பட்ட தமிழர்களைப்
படுகொலையாளர்களால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடைக்கலம் புகுமாறு கூச்சமில்லாமல்
அறிவுறுத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர்.
காங்கிரசோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணியையும் முதல்வர்
நாற்காலியையும் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு வரலாற்றுக் கடமையைக்
கைகழுவிவிட்டிருக்கிறார் கருணாநிதி. மக்களவைத் தேர்தலின் மையப் புள்ளியாக ஈழத்
தமிழர் பிரச்சினை இருக்கும் என்பதால் சில ‘போராட்டங்க’ளை அறிவிக்க வேண்டிய
நிர்பந்தங்களுக்குள்ளாகியிருக்கும் முதல்வர், ‘அன்னை’ சோனியாவின் கோபப் பார்வையைச்
சந்திக்க நேரும்பொழுதெல்லாம் அவற்றிலிருந்து பின்வாங்கி ‘நாட்டின் இறையாண்மை’யைக்
காப்பாற்றக் களம் புகுந்துவிடுகிறார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எந்தவொரு அரசியல்
செயல்பாடும் காங்கிரசின் விருப்பங்களுக்கு எதிரானதாகவே இருக்க முடியும் என்னும்
எளிய உண்மையைத் தந்திரமாகப் புறக்கணித்துவிட்டுத் தன் கட்சி நடத்தும்
போராட்டங்களுக்குக் காங்கிரசின் அங்கீகாரத்தைக் கோரி
மண்டியிட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்காகப் போராடிய அவரது
முன்னாள் கூட்டாளிகளில் பலர் இப்போது அவரது அரசியல் எதிரியான ஜெயலலிதாவுடன் தேர்தல்
கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளது அவரைப் பெரும் பதற்றத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஜெயலலிதாகூட
இப்போது அவர்களுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதைக் கண்டு அவர்
அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும்.
அரியணையைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரசின் ஆதரவை விட்டால் வேறு கதியில்லை என்னும்
அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட கருணாநிதி காங்கிரசைச் சமாதானப்படுத்துவதற்காக
எடுத்துவரும் நடவடிக்கைகள் அருவருப்பானவை. சமீபத்தில் பிரபாகரனைக் குறித்து ஆங்கிலத்
தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதற்குச் சரியான உதாரணம். பேட்டி
வெளியானவுடன் காங்கிரசிடமிருந்து வந்த எதிர்ப்பைக் கண்டு வெலவெலத்துப்போய் வாரிசு
கனிமொழியின் உதவியுடன்அதற்கு ‘விளக்கம்’ வேறு அளித்தார். ஏப்ரல் மூன்றாவது
வாரத்தில் ஈழத்தில் நிலைமை மோசமடைந்தபோது சோனியாவுக்கும் மன்மோகனுக்கும்
தந்திகள் அனுப்பிய கருணாநிதி மைய அரசின் கவனத்தை ஈர்க்கவும் ராஜபக்சே அரசுக்கு
‘எச்சரிக்கை’ விடுக்கவும் 23ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். வெறும்
கண்துடைப்பு நாடகம் என இதை விமர்சித்துள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் இனப்படுகொலையைத்
தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை
வற்புறுத்தித் தமது போராட்டங்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியக் கூட்டாளியான கருணாநிதிக்கு மத்திய
அரசை நிர்பந்திப்பதற்குப் பல்வேறு வாய்ப்புகள் உள்ள நிலையில் பாலுக்கும் காவல்,
பூனைக்கும் தோழன் என நாள்தோறும் ஒரு மலினமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக்
கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சரவையிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவது,
தன் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைப்பது உள்ளிட்ட பல
உறுதியான வாய்ப்புகள் உள்ள நிலையில் அவற்றைப் புறக்கணித்துவிட்டுத் தந்தி
அனுப்பிக்கொண்டிருக்கும் கருணாநிதியின் ‘கையறுநிலை’க்கு அவரது அதிகாரப் பித்து
தவிர வேறு காரணம் இருக்க முடியும் எனத் தோன்றவில்லை. ராஜபக்சே விரும்புவது போல்
ஒரு சில நாட்களுக்குள்-தமிழகத்தில் வாக்குப் பதிவு நடக்க உள்ள மே 13ஆம் தேதிக்குள்-
புலிகள் முறியடிக்கப்படுவார்களேயானால், பிரபாகரனை உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசின்
கைகளில் ஒப்படைப்பது இலங்கை அரசுக்குச் சாத்தியமானால் திமுக-காங்கிரஸ் கூட்டணி
மக்களவைத் தேர்தலில் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டியிருக்கும் என்பதுதான்
கருணாநிதியின் பதற்றத்துக்குக் காரணம்.
கருணாநிதியின் விருப்பப்படி பிரபாகரனை மாமன்னன் போரஸைப் போல் நடத்துவதற்கு
மன்மோகனோ ராஜபக்சேவோ முன்வந்தாலுங்கூடக் காயப்பட்டிருக்கும் தமிழ் மக்களின்
மனங்களைச் சமாதானப்படுத்துவதற்கு அது உதவாது என்பதை அறியாத அளவுக்குக் கருணாநிதி
பேதை அல்ல. ஆனால் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு அது போன்ற பாவனைகள் உதவும் என அவர்
நம்பியிருக்கக்கூடும். தமிழினத் தலைவர் என்னும் ஏற்கனவே பறிபோய்விட்டபட்டத்தை
பாவனைகளால் மீட்டெடுக்க முடியாது என்பதைக் கருணாநிதி உணர வேண்டும். குடும்ப அரசியல்,
அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்ற காரணங்களால் ஆளும் திமுகவின் மீது
அதிருப்தியுற்றிருக்கும் வாக்காளர்கள் மாற்றுகளைக் குறித்துச் சிந்திக்கக்கூடும்.
அரசியல் சாணக்கியத்தனங்களோ தொலைநோக்குப் பார்வையோ அற்ற விஜயகாந்தைப் போன்ற
ஒருவரின் தலைமையிலான புதிய கட்சி மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவருவதுகூட அதற்கான
ஆதாரம்தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற திராவிட இயக்கத்தின் மாபெரும்
தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம் இப்போது சீரழிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் அடிப்படைகளற்ற ரௌடிகளும் அதிகார வெறிபிடித்த சுயநலமிகளும் கட்சியைக்
கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தன் போர்க்குணத்தை முற்றாக இழந்து அரசியல் சூதாடிகளின் கும்பலாகச் சிறுத்துப்
போய்விட்ட ஒரு கட்சியால் இனி ஒருபோதும் தமிழர்களின் போர்வாளாக இருக்க முடியாது.
கடந்த சில வருடங்களில் பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் செல்வாக்குப்
பெற்றுவருவது தற்செயலானதல்ல. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் தக்க
வைத்துக்கொள்வதற்கும் கருணாநிதியின் வாரிசுகள் வேண்டுமானால் பண பலத்தையும்
ரௌடியிசத்தையும் நம்பலாம். திருமங் கலத்தில் நிகழ்ந்தது போலச் சில தருணங்களில் அவை
வெற்றியடையவும் செய்யலாம். ஆனால் வரலாறு தன் கணக்கைத் தீர்க்கும் தருணங்களை
எதிர்கொள்வதிலிருந்து திமுகவை அவை எந்த விதத்திலும் பாதுகாக்கப் போவதில்லை.
1975இல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து, ஜனநாயக
உரிமைகளைப் பறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரைச் சிறையில் தள்ளியபோது யாரோ
சொன்ன வாசகங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன.
சிலரைச் சில காலம் முட்டாளாக்கலாம்
பலரைப் பல காலம் முட்டாளாக்கலாம்
ஆனால், எல்லோரையும் எல்லாக் காலங்களிலும்
முட்டாள்களாக்கிக்கொண்டிருக்க முடியாது.
அவசரநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவருக்கு அதே வாசகங்களை வேறு
யாரோ நினைவூட்ட வேண்டியிருப்பதுதான் வேடிக்கை. |