‘மீண்டும் காகங்கள்’ சிறப்புக் கூட்டத்தில் கலைமாமணி சரஸ்வதி குழுவினரின் வில்லிசை
நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கியப் பாடகரான சரஸ்வதி வில்லை இசைத்தார். துணைப் பாடகி
மாலதி, கடம் டி. தர்மலிங்கம், உடுக்கு டி. ரவிக்குமார், தபேலா ராமு, ஆர்மோனியம்
டி. நல்லபெருமாள், தாளம் அய்யாத்துரை.தென் தமிழகத்தின் நாட்டார் தெய்வக்
கோவில்களில் நிகழும் கொடை விழாக்களில் வில்லிசை நிகழ்த்துக் கலை முக்கியமாக நிகழ
வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இக்கலை 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு
முக்கூடற்பள்ளு, விறலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியங்களில் சான்றுகள் உண்டு. பழைய
மரபின்படி இக்கலைக்குரிய இசைக் கருவிகள் வில், குடம், உடுக்கு, தாளம் ஆகியன மட்டுமே.
இப்போது ஆர்மோனியம் உட்பட பல நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இக்கலைக்குரிய பாடுபொருள் கிராமத்துத் தெய்வங்களின் கதைகளும், இராமாயண, பாரத
இதிகாசங்களும்தான்.
காகங்கள் நிகழ்ச்சியில் ‘ராமர் அஸ்வமேதயாகக் கதை’ பாடப்பட்டது. இக்கதை
கம்பராமாயணம் உத்தர காண்டத்திலிருந்து சற்று வேறுபட்டது. சீதை தன் பணிப்பெண்
கேட்டுக்கொண்டபடி ராவணனின் வடிவத்தைத் தன் தோழியிடம் இரகசியமாக வரைந்து காட்டினாள்.
இதைத் தற்செயலாகப் பார்த்த இராமன், அவளைக் காட்டில் கொண்டுபோய் வெட்டிவிடும்படி
லட்சுமணனிடம் கட்டளையிடுகிறான். லட்சுமணன் அவளை வெட்டாமல் காட்டில் விடுகிறான்.
அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த சீதையை ஒரு முனிவர் பாதுகாத்தார்;
சீதைக்கு அசலவன் என்ற மகன் பிறந்தான்; இன்னொரு மகனை முனிவர் தர்ப்பைப் புல்லால்
உருவாக்கினார். அவன் குசலவன் எனப்பட்டான். இவர்கள், ஒருமுறை இராமனின்
அசுவமேதயாகத்தின்போது யாகக் குதிரையைக் கட்டிவைத்தனர். இதனால் இராமனின்
வீரர்களையும் லட்சுமணன் முதலிய வீரர்களையும் சந்தித்துச் சண்டையிட்டனர். இறுதியில்
இராமனும் சீதையும் இணைகின்றனர். இந்தக் கதையையே வில்லிசையில் பாடுகின்றனர்.
சரஸ்வதியின் ஒரு மணிநேர நிகழ்ச்சி பாட்டு, விளக்கம் என்ற வகையில் கொஞ்சம்கூட
அலுப்பில்லாமல் இருந்தது. பொதுவாக வில்லிசை நிகழ்ச்சியில் மூலப்பாடல்கள்
எழுதப்பட்ட நோட்டை மடியில் வைத்துக்கொண்டு சாமர்த்தியமாகப் பார்த்துப் பாடுவது
என்ற நடைமுறை சரஸ்வதியிடம் இல்லை. இவர் பாடிய பாடல்களில் முகாரி போன்ற கர்நாடக
இராகங்கள் இருந்தாலும் பெரும்பாலான பாடல்கள் நாட்டார் இசை வடிவம் சார்ந்தே இருந்தன.
இந்நிகழ்வைப் பேரா. அ.கா. பெருமாள் ஒருங்கிணைத்தார். |