|
‘நான் கடவுள்’ திரைப்படத்தைக் கருத்து ரீதியில் மட்டுமே அணுகியிருக்கும் ராமசாமி
விவாதிக்காமல் விட்டுப்போன சில பகுதிகளை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.
பார்வையாளனுக்குப் புதிதாக இருக்கும் என்று தான் கருதக்கூடிய ஒன்றை
அறிமுகப்படுத்தி, அதிரவைத்து அல்லது ஆச்சரியப்படுத்தி மயக்குவது சினிமாவின் மிக
மிகச் சாதாரணமான உத்திகளில் ஒன்று. அதாவது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஜப்பான்
எக்ஸ்போவில் எடுப்பது மாதிரி. இந்தப் படமும் கிட்டத்தட்ட அந்த உத்தியின்
பின்னணியிலேயே இயங்குகிறது. காசி நகரத்தைப் படத்தின் துவக்கத்தில் காட்டும்போது,
பிணம் எரியும் காட்சிகளையே தொடர்ந்து அடுக்குவதன் மூலமாக எப்போதும் பிணப் புகை
சூழ்ந்த ஒரு நகரத்தைக் கண்டுபிடித்ததான பாவனையில் படம் துவங்குகிறது. காசியின்
வெவ்வேறு தோற்றங்களைக் காட்டாமல் இருப்பது, அவை படத்திற்குத் தேவையில்லை
என்பதற்காக அல்ல. ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி குறைந்துவிடக் கூடாது
என்பதற்காகத் தான். இதே பாணி படம் முழுக்கத் தென்படுகிறது.
காசி நகரத்தைக் காட்டி ஆச்சரியப்படுத்தும் அதே உத்தியுடன் பிச்சை எடுப்பவர்களின்
உலகமும் படத்தில் சித்தரிக்கப்படுகிறது. அதிரவைக்கும், ஆச்சரியப்படவைக்கும்
தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் மூலமாகப் பிச்சைக்காரர்களின் உலகத்தை
முன்வைக்கிறார் பாலா. யாரும் காட்டாத உலகை, நாம் பார்க்காத உலகைக் காட்டிவிட்டாரே,
ஆகா, அற்புதம் என்ற ஆச்சரியத்தைத்தான் பார்வையாளனிடமிருந்து கோருகிறார் பாலா. இந்த
வலையில் நம் அறிவுஜீவிகள் விழுந்து மாட்டிக்கொண்ட அளவுக்கு “பாமர, முட்டாள்”
ரசிகர்கள் சிக்கிக்கொள்ளவில்லை என்பது ஒரு ஆறுதல்.
வசனங்களில் ஆங்காங்கே சில தெரிப்புகள் இருந்தாலும் அபத்த வசனங்களுக்குப் பஞ்சமே
கிடையாது. மகன் வீட்டுக்கு வர மறுத்து, திட்டி அனுப்பியதும் ருத்ரனின் தாய், தன்
மகளிடம் சொல்லும் “அவன் சுயம்புடி” என்ற வசனத்திற்கு என்ன அர்த்தம்?
ஒரு நீதிமன்றக் காட்சி. அதில் கறுப்பு நிறமுள்ள காவல் துறை அதிகாரி ஆங்கிலத்தைத்
தப்பும் தவறுமாகப் பேசுகிறார். பிராமண நீதிபதி அதைக் கண்டித்துத் திருத்துகிறார்.
இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நம் அறிவுஜீவிகளுக்குத் தெரியாதா என்ன?
பிரதிக்குள்ளிருந்து பிரதி தன்னைத் தானே பகடி செய்துகொள்கிறது என்று
சந்தோஷப்படுகிறார்கள்.
அதேபோல, அகோரி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களும் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று
தம்மைக் கடவுளாக நினைக்கும் அத்வைதிகளும் வேறு என்று பாலாவுக்குத் தெரியாதா? (அல்லது
வசனம் எழுதிய ஜெயமோகனுக்குத் தெரியாதா?) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக்
குழப்புகிறார் பாலா.
இடைவேளைக்குப் பிறகு படத்தில் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. குரூரமான முகத்தைக்
கொண்ட ஒருவன் பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் காட்சிகளே
பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன. படம் முடிவை நெருங்கும்போது, பார்வையற்ற அம்சவல்லி
ஒரு கிறிஸ்தவக் கன்னியாஸ்திரியிடம் அடைக்கலமாகிறார். சட்டென அடுத்த காட்சியில்
மீண்டும் தாண்டவனிடமே இருக்கிறார். என்ன, ஏது என்று விளங்காத அறிவிலிகளுக்காக இதைத்
தன் வலைப்பதிவில் விளக்குகிறார் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன்: “அம்சவல்லி
மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளைக்
கொடுக்கும்படி கோர ‘முப்பது வெள்ளிக் காசுக்குக் காட்டிக்கொடுக்க நாங்கள் ஒன்றும்
யூதாஸ் கூட்டம் இல்லை’ என்று கன்னியாஸ்திரி சொல்ல ‘அப்படியானால் முப்பதாயிரம்
வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்த காட்சி அவனிடத்தில் இருக்கும் அம்சவல்லி.
அது படத்தில் இல்லை.” அதாவது கிறிஸ்தவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு
கைவிட்டுவிடுகிறார்கள். இது ரொம்ப வலுவான காட்சியாம். இதேபோல அல்லாவும்
அம்சவல்லியைக் கைவிட்டுவிட (இது வசனத்தின் மூலமாகச் சொல்லப்படுகிறது), கடைசியில்
இந்து மதத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த அகோரி, அவளுக்கு முக்தி அளிக்கிறான்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் இந்தப் படத்தில் இன்றைய நிறைவின்மையோ
சிக்கலோ உணரப்படாது என்கிறார் ஜெயமோகன். காத்திருக்க வேண்டியதுதான். வேறு என்ன
செய்ய?
|