|
அம்பையின் ‘சுகந்தி அஞ்சலி’ படித்தேன். என்னைப் பற்றியும் என்னைச் சுற்றியுள்ளவர்கள்
பற்றியும் பொய்யான, தவறான, துஷ்பிரயோகத் தகவல்களை அம்பை அள்ளித் தெளித்திருந்தார்.
இதைக் காலச்சுவடு வெளியிட்டது துரதிஷ்டமானது. சுகந்தி 11.02.09 அன்று காலமானார்.
14.02.09 அன்று அம்பை என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதன் பதிவு
என்னிடமுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டதன் ஒரு பகுதி: “உங்களைப் பற்றிப் பல
விஷயங்களில் நான் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதை வெகுதாமதமாக உணர்கிறேன்.
சுகந்தியால் நீங்கள் நீண்ட நெடும்காலம் கஷ்டப்பட்டுள்ளீர்கள். இனிமேலாவது உங்கள்
வாழ்க்கை நிம்மதியானதாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என் தவறான
புரிதல்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.” அவரது தொலைபேசி உரையாடல் இப்படியிருக்க
அஞ்சலி ‘அர்ச்சனை’ காலச்சுவட்டில் வேறுவிதமாய் இருப்பது அதிர்ச்சி தந்தது.
சுகந்தியின் நோய் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் நான் எழுத்தில்
பதிவுசெய்து வெளிப்படுத்த வேண்டுமெனப் பல எழுத்தாளர்கள், நண்பர்கள் பல சமயங்களில்
குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது என் குடும்ப வாழ்க்கையோடானது என்பதால்
தவிர்த்து வந்திருக்கிறேன். அவரின் நோய்த் தன்மையிலிருந்து விடுபட, சிகிச்சை
முறையாகவே எழுத்தையும் அவர் எழுதியதை நான் ஊக்குவித்துப் பயிற்சியாகவும்
மேற்கொள்ளச் செய்தேன். இலக்கிய வாசிப்பையும் அப்படித்தான் ஊக்குவித்தேன். (சாதாரண
கிராமத்துப் பெண் அவர். +1 படித்தவர். இலக்கிய வாசிப்பு எதுவும் இல்லாத சாதாரண
குடும்பம். 1984இல் திருமணம்.) ஆனால் நாளாக நாளாக நோயின் தன்மை வெகுதீவிரமடைந்து
தொடர்ந்து கடுமையான மருத்துவ சிசிச்சைக்கு அவரை உட்படுத்தியது. கவிதையெழுதும்
வெளிப்பாட்டுப் பயிற்சிமுறை பற்றியோ 17 ஆண்டுகளுக்கு மேலாக எனது சேமிப்பின் பெரும்
பகுதியை அவரின் சிகிச்சைக்கென்று செலவழித்துவந்தது பற்றியோ என் இரு பெண் குழந்தைகள்
மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்ந்து, இயல்பான குழந்தைப் பருவத்தை இழந்தது பற்றியோ
நல்ல கல்விச் சூழல் அவர்களுக்கு அமையாதது பற்றியோ என் வாழ்க்கையின் மிக முக்கியமான
நீண்ட காலம் துயரத்தால் நிரம்பியது பற்றியோ நான் எங்கும் எழுத்தில்
வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் அரைகுறைத் தகவல்களைக் கொண்டும் பிறரது
பிதற்றல்களைக் கொண்டும் அம்பை அஞ்சலியை எழுதியுள்ளார்.
அஞ்சலியில் புகைப்படம் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள காலச்சுவடு அம்பையின்
தவறான தகவல்களைப் பிரசுரித்ததற்கு வருத்தம் கொள்ளவில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்
சுகந்தி ‘கவிஞர் மீரா’ விருது பெற்றபோது அவரின் ஏற்புரை + கவிதைகளைக் காலச்சுவடு
வெளியிட்டுக் கௌரவப்படுத்தியதற்குப் பிராயச்சித்தமாக மரணமடைந்தபோது
‘அர்ச்சனை’யைக் கொட்டியது.
சுகந்திக்கு அஞ்சலியாகப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் என்ற வகையில் நண்பர்
ஜெயமோகன் அவரின் வலைப்பூவில் (Jeyamohan. in) பிப்ரவரி 13 தேதியிலேயே
எழுதியிருப்பதை வாசகர்கள் படித்து அம்பை கூறியுள்ளவற்றுக்கு விளக்கம்
பெற்றுக்கொள்ளலாம். (அம்பை என்னுடன் தொலைபேசியில் பேசியது பிப்ரவரி 14). மாலதி
மைத்ரி, லீனாமணிமேகலை, சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து 28.02.09
அன்று சென்னையில் நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் அசோகமித்திரன் அவர்கள் பேசியதைக்
கேட்டறிந்து கொள்ளலாம். (அக்கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. அசோகமித்திரன்
அவர்கள், அவரின் கூட்டப் பேச்சு பற்றி அடுத்த நாள் தொலைபேசியில் என்னுடன்
பகிர்ந்துகொண்டார்.)
17 வருடங்களுக்கு மேலாக நோயுடன் போராடி மிகுந்த சிரமங்களை ஏற்றுக்கொண்டு
வாழ்ந்த சுகந்தி, மாரடைப்பு மூலம் “விடுதலை” பெற்றுவிட்டாரெனத் தோன்றுகிறது. ஆனால்
அம்பை போன்றோர் அள்ளித் தெளிக்கும் அவதூறு நோய்க்கிருமியிலிருந்து நான் எப்போது
விடுதலை பெறுவேன் எனத் தெரியவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இது என்னையும் என்
மகள்களையும் என் உறவினர்களையும் அலைக்கழித்து அவர்களையும் சிகிச்சைக்கு உட்படுத்த
நேருமோ என்னும் பயம் என்னை நிலைகுலைய வைக்கிறது.
|