மையநீரோட்ட ஊடகங்களின் புனிதங்களைத் தொடர்ந்து கட்டுடைக்கும் கண்ணன் இலங்கைத்
தமிழர் பிரச்சினையில் தி ஹிண்டு நாளிதழின் தமிழர் விரோதப் போக்கை மிகக் கடுமையாக
விமர்சித்திருப்பது நியாயமே. இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்ட இயக்கங்கள், சோனியா
காந்தி மற்றும் பிரணாப் முகர்ஜி உருவப் படங்களை எரித்தபோது தி ஹிண்டு நாளிதழையும்
சேர்த்து எரித்திருக்க வேண்டும்.இஸ்லாம் மற்றும் மேலைப் பண்பாட்டுக்கு இடையான
வரலாற்றுரீதியான பகையுணர்வு, இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையில் கூடுதல் பரிமாணம்.
யூத, கிறித்துவ தேவதூதர் பாரம்பரியத்தில் அதே மண்ணில் உருவான உலகு தழுவிய மதம்
இஸ்லாம். ஐரோப்பிய வகைப்பட்டதாக இல்லாத உலகு தழுவிய மதம் இஸ்லாம். தனக்கான
அச்சுறுத்தலாக இஸ்லாமை மேலை உலகு கொண்டுள்ளது. ஐ.நா அமைப்பை இன்னும்
ஜனநாயகப்படுத்துவது அல்லது புதிய உலக நீதி அமைப்பை உருவாக்குவது, வலுவான பிராந்தியக்
கூட்டுகள் போன்றவை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வல்லரசுகளின் அநீதிகளை எதிர்க்க
உதவும்.
ஸ்ரீ. கௌதமன், மயிலாடுதுறை
‘உயிர் நீத்தலின் அரசியல்’ தலையங்கம் மிகவும் துணிச்சலானது. ஈழத் தமிழர்
பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை அவர்களின் சுயநல அரசியலையே
காட்டுகிறது. முத்துக்குமாரின் உயிர்நீத்தல் மக்கள் இயக்கம் உருவாக அடித்தளமிட்டதை
மிகச் சரியாகப் பதிவுசெய்த இதழ் காலச்சுவடு மட்டுமே. இந்துவின் ராஜ விசுவாசத்தையும்
மூடத்தனத்தையும் பதிவுசெய்தது சிறப்பு. மாணவர்கள் போராட்டம், வழக்கறிஞர்கள்
போராட்டம் என எல்லாவற்றையும் திசைமாற்றுவது தான் கலைஞரின் சாணக்கியத்தனம் போலும்.
காப்புரிமை குறித்த அரசின் தெளிவின்மை மிகவும் வேதனைக்குரியது.
‘அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம்’ கட்டுரையால் பாலஸ்தீன மக்களின் அறுபது
ஆண்டுகாலத் துயரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. ஜனநாயக நாடாகப் பெருமை கொள்ளும்
அமெரிக்கா, பாலஸ்தீன மக்களின் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது.
பாலாவின் திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்முறைகள் விவாதத்திற்கு உரியவை.
அவரது கருத்தியல் குறித்த அ. ராமசாமியின் கருத்துகள் வரவேற்கத்தக்கவை.
அயல்நாட்டு விருது, தனியார் விருது பெற்றவர்கள் எனப் பல படைப்பாளிகளின்
அங்கீகாரத்தைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது காலச்சுவடு. ஆனால் சாகித்திய
அகாதெமி விருது அறிவித்த பிறகு, மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. சாகித்திய அகாதெமி
விருது பெற்ற படைப்பு பற்றியோ படைப்பாளி பற்றியோ பதிவே இல்லாதது வருத்தமாக உள்ளது.
சா. ரு. மணிவில்லன், சென்னை
‘உயிர் விடுவேன் - உயிர்விடுவேன்’ என்று உசுப்பிவிடுவோரெல்லாம் உயிரினும்
மேலாகப் பதவியைத்தான் பற்றி இருப்பர் என்பதும் தமிழ் உணர்வு தன்னலமற்ற சாமானியனின்
இரத்தத்தில் ஊறியது என்பதும் உலகுக்கு உணர்த்தப்பட்டுவிட்டது.
‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ சிறுகதை இதயத்தில் ஒரு கனத்தை
ஏற்படுத்தியது. பிருந்தா கவிதையில் வாழ்க்கையை உணர்ந்தாலும் எழுதாத பக்கங்களில்
நெருடும் மௌனம் என்னை ஆட்கொண்டது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஏழைகளின் அவலத்தையும்
அந்த அவலமும் அள்ளிக் கொடுக்கும் கற்பக விருட்சம் என்பதையும் வெளிக்காட்டியுள்ளது.
இந்த அவலத்தின் சோகத்திலும் ஒரு சுகத்தை உணரச்செய்யும் திறமை ஏ. ஆர். ரஹ்மானிடம்
இருந்ததை உலகம் உணர்ந்துள்ளது.
அகோரியின் வன்முறை நியாயம் தானா? இயலாத்திறனுடையோரை இல்லாமல் செய்வதுதான்
நியாயம் என்ற நிலை உணர்த்தப்படுகிறதா? அவலத்தை வெளிப்படுத்துவது என் பணி அதை எந்த
வகையில் ஏற்று ஜீரணிப்பது என்பது படம் பார்ப்போரின் கவலை. என்பதுதான் பாலாவின்
எண்ணமா?
கா. இர. குப்புதாசு, சென்னை
ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக, கடலூர் மாவட்டத்தில் சாமான்ய மக்களின் மனநிலை
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை எவ்விதம் எதிர்நோக்குகிறது என்னும்
கருத்துக்கணிப்புச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பலருக்குத் தங்கள்
தொகுதி எம்.பி. யாரென்றே தெரியவில்லை. இலவசத் தொலைக் காட்சி கிடைக்காதது பலரது
மனக்குறை. அறியாமையும் அவ நம்பிக்கையும் மலிந்துகிடந்தாலும், அனைவரும் ஒரே
விஷயத்தில் தங்கள் தெளிவான ஆதங்கத்தை முன்வைத்தனர். அது ஈழத் தமிழர் பிரச்சினையில்
நம் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை. வரவிருக்கும் தேர்தலில் முத்துக்குமாரின்
தியாகத்துக்கான காப்பிரைட் தங்களுக்கே சொந்தம் என எல்லாக் கட்சிகளும் வேட்டியைக்
கிழித்துக்கொள்ளப்போகின்றன. பொதுமக்களோ எரியும் கொள்ளியில் எது சிறப்பு எனத்
தேர்வுசெய்ய வேண்டிய கையறுநிலையில் உள்ளனர். ஈழத் தமிழருக்காக எழுத்தாளர்கள்
திரண்டது ஆச்சரியம், அதே நேரம் நான் போராளிகள் என நம்பிய பல எழுத்தாளர்களைக்
காணவில்லை. தேர்தல் முடியும் வரை பல்சுவை வார இதழ்களும் நம்பர் ஒன் புலனாய்வு
இதழ்களும் ஈழத் தமிழர் பற்றி வாயே திறக்கப் போவதில்லை. நம்மிடம்
மிஞ்சியிருப்பதெல்லாம் குரல் மட்டுமே. “கொல்லாதே” என ஒற்றுமையாகக் குரல் கொடுக்க
இன்று எது தடையாக இருக்கிறதோ அதுதான் நாளை நாம் கொல்லப்படும்போது சூழும்
அமைதியின் காரணியாக இருக்கும்.
சீனு, கடலூர
‘நாட்டுடமையாக்கம் சேவை பாதி, சதி பாதி’ கண்ணோட்டம் நூறு சதவிகிதம் சரியானதே.
தனிமனிதச் சொத்துகளை மட்டுமன்றி, இறைவழி பாட்டுத் தலங்களின் அசையும், அசையாச்
சொத்துகள்மீதும் ஆளும் வர்க்க நீட்சி தொடர்கிறது. இதற்கு இவர்கள் போர்த்தும்
பம்மாத்துப் போர்வை ‘சமூக சேவை’- ‘சமூக நீதி’.
நாகேஷ் அஞ்சலிக் கட்டுரை இன்னும் அழுத்தமாக, உணர்வு பூர்வமாக இருந்திருக்கலாமோ
என்னும் எண்ணம் எழுந்தது.
சாவித்திரி, சென்னை
‘ஸ்ரீராம சேனையின் அடிச்சுவட்டில்’ கட்டுரை ஆங்கில ஊடகங்களின் பொறுப்பற்ற
தன்மையை அம்பலப்படுத்தியது. பெருவாரியான மக்கள் ஆங்கில ஊடகங்களைப் படிப்பதில்லை,
பார்ப்பதில்லை. எனினும், நாட்டை வழிநடத்திச் செல்லும் மேல்மட்ட அரசியல்வாதிகள்,
அதிகாரிகள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆங்கில ஊடகங்களின் மூலமாகவே நிகழ்வுகளை
அவதானிக்கின்றனர் என்பதால், கண்ணன் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.
ஸ்ரீராம சேனையினருக்கு மட்டுமே பரிசாக அனுப்பிய ‘பிங்க்’ நிற ஜட்டிகளை, இந்த
ஆங்கில ஊடகங்களுக்கும் சேர்த்து அனுப்பியிருக்கலாம் பெண்கள்.
சல்மான் ருஷ்டிமீதான பட்டுவா பற்றிய சுகிர்தராஜாவின் கட்டுரை கண்டேன். ‘ஃபத்வா’
(திணீtஷ்ணீ) என்பதே அதன் சரியான உச்சரிப்பு முறை. ‘பத்வா’ எனத் தவறான முறையில்
பயன்படுத்தப்படுகிறது. மதத் தலைவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு விடுக்கும் அறிக்கைகள்
எல்லாம் ‘பத்வா’க்கள் அல்ல.
சிக்கலான மதப் பிரச்சினைகளில் அல்லது மதம்சார் சட்ட நுணுக்கங்களில், மதம்
சார்ந்த சிக்கலான செயல்பாடுகளில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு பிரிவுகளோ பல
பிரிவுகளோ உருவாகி அது சம்பந்தமான சரியான நிலை எது என மார்க்க அறிஞர்களிடம்
தீர்வுக்கு விடப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்ந்து, அறிந்து அவர்கள் சொல் லும்
தீர்ப்புதான் ‘ஃபத்வா’.
இந்தத் தீர்ப்பு சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்வது
‘பத்வா’தான். பத்வாக்கள் என்பதன் உண்மையான செயல்பாடுகள் இவ்வாறிருக்க இஸ்லாமியத்
தலைவர் ஒருவர் அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப விடும் அறிக்கைகள்,
எச்சரிக்கைகள், காரசாரமான பேச்சுகள், பேட்டிகள், இவையெல்லாம் பத்வாக்கள் என
ஒருபோதும் அழைக்கப்படமாட்டா.
ருஷ்டி விஷயத்தில் உலக முஸ்லிம்களின் ஒட்டுமொத்த உணர்ச்சியும் அவருக்கு எதிராகவே
இருந்ததால், இது யாராலும் சரியாகக் கண்டு கொள்ளப்படவில்லை.
‘காஃபிர் ஜிகாத்’ போன்ற தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இஸ்லாமியச்
சொல்லாடல்களில் ஒன்றாக, ‘பத்வா’வும் ஆகிவிடக் கூடாது என்பதே நம் விருப்பம்.
கே. எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்
ஸ்ரீ ராம சேனையின் ‘பப்’ தாக்குதல் அனுமனின் இலங்கை எரியூட்டலைப் போல ஒரே நாளில்
அந்த இயக்கத்தைப் பரவலாக அறியச் செய்வதற்கான முயற்சியே. ஊடகங்களின் ஒத்துழைப்புதான்
வருத்தத்திற்குரியது.
எப்போதாவது எழுதப்பட்டாலும் தேவிபாரதியின் சிறுகதை தனிக்கவனம் பெறவே செய்கிறது.
சிக்கலான தருணங்களில் ஏற்படுகின்ற மனஅழுத்தமும் அதன் விளைவாய் உண்டாகும் மனப்
போக்குகளையும் சிறுகதை நன்கு காட்சிப்படுத்தியிருக்கிறது. காலத்தின் முன்னும்
பின்னும் ஊடாகவும் பயணம் செய்கிற சசியின் பயணம் புதிது. நாகேஷ் குறித்த
அசோகமித்திரனின் அஞ்சலி இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம். அறிஞர் அண்ணா
பற்றிய எதிர்வினை மறுக்க இயலாத ஆதாரங்களோடு சரியாகவே எழுதப்பட்டிருக்கிறது.
தென்றல் கோ. சண்முகசுந்தரம்
நத்தக்காடையூர்
ஸ்ரீ ராம சேனை அமைப்பு இந்துத் தீவிரவாத அமைப்பு என்னும் பார்வையோடு கட்டுரையைத்
தொடங்கியுள்ளீர்கள். கட்டுரையில் தொடர்ந்து இந்துத் தீவிரவாத அமைப்பு என்னும்
வார்த்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பயன்படுத்தியுள்ளீர்கள். தீவிரவாதம் என்ற
வார்த்தையைப் பயன்படுத்த ஏதுவாக இதற்குமுன் (பப்’இல்) இவர்கள் செய்த தீவிரவாதச்
செயல்கள் என்ன? ‘பப்’ நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு இது ஒரு பெரிய தீவிரவாத
அமைப்பென்றும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் சித்தரித்துள்ளீர்கள்.
கட்டுரையின் நோக்கம் ஊடகங்களின் அத்துமீறல்களையும் பொறுப்பற்ற தன்மையையும் சாடுவது
என்றாலும் அதனுடன் சேர்த்து சேனையின் செயல் ‘தீவிரவாதம்’ என்று சொல்வதுதான்
மிகையானது. இந்துத் தீவிரவாதம் என்னும் வார்த்தைக்குப் பதிலாக இந்து ரௌடிக் கும்பல்,
இந்துப் பொறுக்கிகள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தால் பொருத்தமாக
இருந்திருக்கும். ஏனென்றால் காலச்சுவடு வார்த்தைகளை மிகவும் சரியாகப் பயன்படுத்தும்
என்பது என் நம்பிக்கை.
ஆர். பாண்டி சுபா, பரமக்குடி
‘உயிர் நீத்தலின் அரசியல்’ தலையங்கம் உணர்த்தும் உண்மை, சந்தர்ப்பவாதிகளுக்கு
விருப்பமில்லாததாக இருக்கும். ஆனால் முத்துக்குமாரின் மரணம் ஏற்படுத்தியுள்ள
விளைவுகள், தேர்தல் அரசியல் வித்தகர்களுக்குக் கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
வாக்காளர்கள், தங்களது வாக்குச் சீட்டில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது,
ஆரவாரங்கள் அடங்கிவிடும். அதேபோல் காவலர்-வழக்குரைஞர் இடையேயான மோதல், இங்கே
பூதாகரமான பிரச்சினையாக உருவாகிவிட்டது. தமது தோல்விகளை ஒப்புக்கொண்டு, சுய
விமர்சனம் செய்துகொள்ளும் தலைமைப் பண்பு இல்லாத தலைவர்கள் இல்லாமல்போனது நமது
துரதிஷ்டமன்றி வேறென்ன?
நூல்களை அரசுடமையாக்கும் விஷயத்தில், ஒளிந்துள்ள ரகசியங்களைக் கண்ணன் தெளிவாக
விளக்கியிருந்தார். கவிச் சிற்றரசுகள், கவி வித்தகர்கள் படைப்புகளையெல்லாம்
நாட்டுடமையாக்கினால் ஒத்துக்கொள்ளுவார்களா? தங்கள் எழுத்துக்களைக் காசாக்குகிற
வித்தைகள் அறிந்ததனால்தான் அவர்கள் ஆட்சியாளர்களுக்குச் சாமரம் வீசுகின்றார்கள்.
அமைச்சர்களுக்குத் தாங்கள் நெருக்கமானவர்கள் எனப் பொதுமேடைகளில், தங்கள்மீது
வெளிச்சம் பாய்ச்சிக்கொள்ளுகின்றனர். தனிப்பட்ட உரிமைகளில் தலையிடும் வகையில்,
நாட்டு டைமை ஆக்கப்படும் விஷயத்தில் நடந்துகொள்ளும் போக்கினை மாற்றிக்கொள்ள
வேண்டும். அறிவுசார் உலகம் இதற்கான வற்புறுத்தலை உருவாக்க வேண்டும். எழுத்தாளர்களைக்
கையேந்திகளாகக் கருதக் கூடாது. அவர்களது படைப்புகள் அறிவின் கருவூலம். அதற்கான
கவுரவத்தையும் மதிப்பினையும் நாம் வழங்க வேண்டும். அதுவே ஒரு மொழியும் சமூகமும்
தலைநிமிர்வதற்கான வழி.
‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ சிறுகதையை வாசிக்கத் தொடங்கும்போது,
மொழி பெயர்ப்புக் கதையொன்றைப் படிக்கின்ற உணர்வு ஏற்பட்டது. ஆண் பெண் உறவில்
ஏற்படுகின்ற சிக்கல்களும் அதன் மூலம் உருவாகின்ற மூர்க்கம் நிறைந்த சிந்தனைகளும்
விநோதமானவை மட்டுமல்ல, விபரீதமான முடிவுகளை நோக்கியவை. காதலில் உலகை மறந்து,
இன்பம் துய்க்கும் காலங்கள் கனவினைப் போல மறந்து, ஒருவரை ஒருவர் அடிமையாய் அடக்கி
ஆளுகின்ற, சுரண்டல் மனநிலையைப் பெற்றுவிடுகின்றனர். நம் சமூகத்தின் கண்ணாடிச்
சுவர்களில், இத்தகைய கதாபாத்திரங்களின் பிம்பங்கள் பிரதிபலிப்பதை நாம் காண்பது
சிரமமல்ல.
மீளாத மன நெருக்கடிகளிலிருந்து உருவாகும் சிந்தனைகள் நமது விருப்பத்துக்கு
மாறாகவே இருக்கின்றன. “ஒன்றுமில்லாததிலிருந்து, ஒன்றுமில்லாததை நோக்கி...” எனக்
கதையில் இடம்பெறும் வாசகம் பெரிய உண்மையை உணர்த்தும் சொற்றொடராகச் சுடர்கின்றது.
தேவிபாரதியின் முந்தைய படைப்புகள் சிலவற்றின், குறிப்பாக, ‘பலி’ மற்றும் ‘சில
சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்’ ஆகிய சிறுகதைகளின் நீட்சியாகவே இக்கதையையும்
காண்கின்றேன். விடுதலைத் தேடி அலையும் ஆன்மாவின் குரல் தொடர்ந்து ஒலிக்கின்றது.
கே. ரவிச்சந்திரன், ஈரோடு
அறிவியல், ஆன்மிகம், உளவியல், தத்துவம் என மனித வாழ்வின் அறிவுநிலைகளில்
தொழிற்பட்டிருக்கிறது தேவிபாரதியின் கதை. காலத்தின் கதி எப்படிப்பட்டதாயினும்
வாழ்வின் மாறாத கோலத்தைக் காட்டுகிறது இப்படைப்பு. காமத்தை வென்றவர்கள் என்று
எவரும் இருந்திடமாட்டார்கள். மனிதன் மேலதிகமான புரிதலோடு வாழ்வைச் சந்திப்பவனாக
இருக்க வேண்டுமென்ற நோக்கிலேயே சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் நமக்குக்
காதலையும் காமத்தையும் கற்பிக்கின்றன. பிறப்பின் இரகசியங்களை இதுவரை அனுமானிக்க
மட்டுமே இயன்றிருக்கும் வேளையில் காலத்தைத் திருப்பிச் சுற்றி, வாழ்வைத் தலைகீழாக்கி,
கல்லறைவாசிகளை மறுஉயிர்ப்பெடுக்க வைத்து, பிறப்பின் தீராத இரகசியங்களைத் துருவித்
துருவித் தெரிந்துகொள்ளும் பெரும் முனைப்பினைத் தருகிறார் தேவிபாரதி.
இர. வெள்ளியங்கிரி, சிவகிரி
‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ சிறுகதை வெகு சிறப்பு. ஒரு பெண் செய்யும்
கொலையையும் அதற்குப் பிறகு அவளது மன நிலையையும் ஆசிரியர் திறமையாக
வெளிப்படுத்தியிருக்கிறார். எண்ணங்களும் சூழ்நிலைகளும் தத்துவ நோக்கும் கொண்டு
அருமையாக உள்ளது கதை. நாகேஷ் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரை நன்று. க.
திருநாவுக்கரசு எழுதியுள்ள இஸ்ரேல் கட்டுரை, அங்குள்ள சூழலைப் புரியச்செய்தது.
‘உயிர் நீத்தலின் அரசியல்’ தலையங்கம் கவனத்துடன் எழுதப்பெற்றுள்ளது.
எஸ். எஸ். ஆர். லிங்கம்
திருவில்லிபுத்தூர்
காலம் பற்றிய நுட்பமான கேள்விகளோடு தொடங்குகிறது தேவிபாரதியின் கதை. அநேகமாக
நான் படித்தவரை தமிழில் புனையப்பட்ட ‘பாலியல்’ கதைகளில் தனிப்பட்ட முறையில்
படைப்பாளியின் ‘ஆண்’ உணர்வு மேலோங்கிப் பெண்ணுக்கு எதிரான ஒரு சொல்லோ கருத்தோ
நுட்பமாகக் கட்டப்பட்டு இருக்கும். இந்தக் கதையில். மூன்று பாத்திரங்களும் அவற்றின்
செயல்களும் இருவேறு முரண்களால் அறுந்து விழுகின்றன.
ஒரு கொலையைச் செய்வது எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாகவும் சுதந்திரமான
இருத்தலின்மீது கட்டப்பட்டும் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதாகவும்
விவரணைகள் மிக அழகாகக் காட்சிப்படுத்துகின்றன. நாம் தினந்தோறும் தினசரிகளில்
வாசிக்கும் கள்ள உறவுக் காதல்கள் பற்றிய செய்திகளை விவாதிக்கும்போதுகூடப் பெண்
குறித்து ஒரு தலைப்பட்சமான முடிவுக்கே வந்துவிடுகிறோம். ஆனால் இக்கதை அதை மறுத்து
ஒரு பொதுவான விமர்சனத்துக்கு அழைக்கிறது, கொலை நிகழ்வதைக்கூட நுட்பமாக
உளவியல்ரீதியில் புதிய அழகியலோடு முன்வைக்கிறது.
குழப்பமில்லாத தெளிந்த நடையில் உள்ளீடான பாசாங்கும் உள் குறுக்கீடும்,
பின்வாங்கலும் இல்லாமல் பெண்ணின் பாலியல் வாழ்க்கையை மிகச் சிறப்பாகக்
காட்டியிருக்கிறது தேவிபாரதியின் ஈவு இரக்கமற்ற மொழி. காலத்தின் மீது மனிதர்கள்
கொள்ளும் தீராத இச்சையே கதையின் உள்ளீடான உண்மையாக மேலெழும்புகிறது. இருப்பைத்
தற்காத்துக்கொள்ள சசி எடுக்கும் முடிவு கதையைப் புதிய இடத்துக்கு அழைத்துச்
செல்கிறது. சசி காத்திருப்பது ஒரு தரிசனத்துக்காக என்பதை வாசக மனம் தெளியும்போது
இந்தக் கதை காத்திரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. சமீப காலங்களில் தமிழில் இது
போன்ற சிறந்த கதை வரவில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
சிவக்குமார் முத்தய்யா
குளிக்கரை- திருவாரூர்
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பற்றிய பத்தியை வாசிக்கும்போது , சேரிகள் இந்திய(£வின்)க்
கலாச்சாரத்தின் ஒன்றிணைந்த அம்சம் அல்ல என்பதிலும் திரைப்படம் இந்தியாவின் கொடூர,
இருண்ட, ஒரு பக்கத்தை மட்டுமே படம் பிடித்திருக்கிறது மற்றொரு பக்கத்தைப்
படமாக்கவில்லை என்பதிலும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா அதிர்ச்சியடைவதை வெளிப்படையாகக்
காண முடிகிறது.
இந்த இரண்டு அதிர்ச்சிகளுமே (இந்திய) இந்துக் கலாச்சாரத்தோடு தொடர்புடையவை.
திரைப்படத்தில் காண்பித்திருப்பது போல மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களின்
சேரிகள் வேண்டுமானால் பொருளாதார சமத்துவமற்ற சூழலின் விளைவாகயிருக்கலாம். ஆனால்
இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் சாதியமைப்பின் முதுகெலும்பாய்க் காட்சிதரும்
தலித்துகளின் வாழிடம் இந்தியக் கலாச்சாரத்தின் ஒன்றிணைந்த அம்சந்தான். உலகமயம்,
தாராளச் சந்தை, பன்னாட்டு வர்த்தக ஒழுங்கமைப்பின் விளைவில் சேரிகள் உருவாயின எனில்
உலகமயம், தாராளச் சந்தைக்கு முன்பு சேரிகள் இல்லையா எனும் கேள்வி இயல்பாக எழுகின்றது.
சேரிகளில் அனைத்துச் சாதி, சமயத்தவரும் வாழ்ந்துவருகிறார்கள் எனினும் ‘சேரி’ என்னும்
சொல்லைக் கேட்டதும் பொதுப் புத்தியில் நம்முன் விழும் பிம்பங்கள் எவை? அவை எந்தச்
சமூகம் சார்ந்தவை?
இரண்டாவதாக இந்தியாவின் கொடூர, இருண்ட பக்கங்களுக்குப் பின்புறம் பன்மைத் தன்மை,
ஜனநாயகம் இருக்கிறது என்கிறார் கட்டுரையாளர். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று போலி
இந்தியாவை இந்து அடிப்படைவாதிகள் காண்பிக்க முனைந்தபோது நாம் ‘இந்தியா நாறுகிறது’
என்றோம். நாற்றமெடுத்த இந்தியாவைத் திரைப்படத்தில் காண்பிக்கும்போது (கதை பற்றி
நான் பேசவில்லை) இதுவல்ல இந்தியா, ஜனநாயக, பன்மை இந்தியாதான் நம்முடையது என்கிறார்
சுகிர்தராஜா.
சமத்துவம், மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை எனக் கூறிக்கொண்டே
தலித்துகளையும் சிறுபான்மையினரையும் பழங் குடியினரையும் நசுக்கிவரும் பாசிசப்
போக்குகளின் தீவிரச் சூழலில் இந்தியாவின் பன்மை ஜனநாயகம் பற்றிப் பேசுவது இல்லாத
ஒன்றைக் கூறும் கட்டுக்கதையாகவே இருக்கும்.
பா. பிரபாகரன், முசிறி
இந்திய நாட்டின் தோல்விகளை ஸ்லம்டாக் மில்லியனரைவிட Q&A நாவல் வேதனையுடனும்
அழுத்தத்துடனும் சித்திரிக்கிறது. சொல்லப்போனால், Q&A நாவலின் ஒரு
காயடிக்கப்பட்ட வடிவமே ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. நானும் ஒரு காட்சியை ஒப்பிட்டுக்
காட்டுகிறேன். கதையின் முதற்காட்சியில் போலீஸ் லாக்கப்பில் சித்திரவதையின் உச்சமாக
மிளகாய்ப்பொடி தடவப்பட்ட லத்தி கதாநாயகனின் குதத்தில் சொருகப்படுகிறது. ஆனால்
படத்தில் இது இல்லை.
பரிமளம் (மின்னஞ்சலில்) |