அமெரிக்காவில்
வசித்துவரும் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், நவீனத் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவருகிறார். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் தொகுத்து, எடிட் செய்த சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு (கோமதி நாராயணன், ஆ.இரா. வேங்கடாசலபதி உதவியுடன்) Waves என்னும் பெயரில்
வெளிவந்துள்ளது. அம்பை, பாமா, இமையம், ந. முத்துசாமி, மௌனி, புதுமைப்பித்தன்
ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். சு.ரா.வின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
669, கே.பி. சாலை
நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 04652 - 223169
20.10.01
அன்புள்ள லக்ஷ்மி,
உங்கள் கடிதம் கிடைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடுத்தடுத்து வரும் வேலைகளால்
பதில் எழுத முடியாமல் போய்விட்டது. திட்டம் போட்டுப் பணியாற்றுவது சிரமமாக
இருக்கிறது. குறிப்பிட்ட தேதிகளில் முடித்துத் தர வேண்டிய வேலைகள் திட்டத்தைக்
குலைத்து முன்னுரிமையைப் பெற்றுக்கொண்டுவிடுகின்றன.
பத்மநாப ஐயர் முன்னின்று நடத்திய இலக்கியக் கருத்தரங்கம் பற்றி நீங்கள் விரிவாக
எழுதியது மகிழ்ச்சியைத் தந்தது. இல்லையென்றால் இது போன்ற செய்திகள் என்னை வந்தடைய
நீண்ட காலமாகிவிடும். சமீபத்தில் அந்தக் கருத்தரங்கம் பற்றிய கட்டுரை ஒன்றைப் (‘காலச்சுவ’டில்
பின்னால் சேர்க்க இருப்பது) படித்தேன். அதில் பிற விபரங்களுடன் நீங்கள் ஆற்றிய
சிறப்பான பங்கு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வன்முறையைத் தூண்டும் கவிதையை நீங்கள் படிக்க மறுத்ததை வரவேற்கிறேன். இதன் மூலம்
உங்கள் பார்வையை அங்கு பலரும் தெரிந்துகொண்டிருப்பார்கள். ஒருவர் அவர் பார்வையின்
அடிப்படையில் உறுதியாக இருப்பது இன்று அபூர்வமாகிவிட்டது. லட்சியவாதிகள் என்று
கருதப்படும் எழுத்தாளர்கள் செய்துகொள்ளும் சமரசங்களைத் தமிழ்நாட்டளவில்
பார்த்தாலும்கூட நம்மை மிகவும் சோர்வடையச் செய்கின்றன. அனைவரையும்
திருப்திப்படுத்தி ஆதாயங்களைப் பெற முண்டுபவர்களால் தங்கள் பார்வைகளைத்
தக்கவைத்துக்கொள்ள முடியாது.
ஆனால் துரதிருஷ்டவசமாக வன்முறையை ஆதரிக்கும் மக்கள்தான் உலக அளவில் அதிக வலிமை
பெற்றுவருகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அறிவுவாதிகளில் - அல்லது அவ்வாறு
நாம் எண்ணிக் கொண்டிருப்பவர்களில் - பலரும் வன்முறையை நியாயப்படுத்தத்
தொடங்கிவிட்டார்கள். வரலாற்றில், எந்தக் காலத்திலும் வன்முறையை ஆதரித்து
நின்றவர்கள் கணிசமான மக்களின் தலைவிதியை நிர்ணயித்து வந்திருக்கிறார்கள்.
வன்முறையால் உருக்குலைந்துபோன மக்கள்கூட மீண்டும் மீண்டும் வன்முறையால்
தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். வன்முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக்
கற்று அவற்றை மனதார ஏற்க இன்னும் நாம் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்ற
கேள்விக்கு இன்று விடையில்லை. சமீபத்திய உலக நிகழ்ச்சிகள் மிகுந்த சோர்வை
ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. இவை பற்றியெல்லாம் நீங்களும் மார்க்கும்
என்னென்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாகவேனும் எனக்கு எழுதுங்கள்.
இலங்கைத் தமிழ்ப் படைப்புகள் பெரிய அளவில் நம் மனங்களைக் கவருவதில்லை. நல்ல
சிறுகதைகளும் நல்ல நாவல்களும் இருக்கின்றன என்றாலும்கூடப் பெரிய படைப்புகள் இன்னும்
தோன்றவில்லை. இப்போது அவர்களது வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருக்கும் போர்
உலகமெங்கும் வேறுபட்ட தேசங்களையும் வேறுபட்ட கலாச்சாரப் பின்னணிகளையும் ஏற்க அவர்களை
நிர்ப்பந்தித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் அவர்களைப் போல் துன்பப்பட்டவர்கள்
வேறு எவரும் இல்லை. இப்பின்னணி சார்ந்த துயரம், அவலம், சீரழிவுகள் மிகப் பெரிய
வீச்சுக் கொண்ட நாவல்களை உருவாக்கத் தூண்டுபவையாகும். ஆனால் இந்த அனுபவங்களை
உள்வாங்கிப் பெரிய படைப்புகளை உருவாக்க அவர்களால் முடியவில்லை. பிரச்சினைகள்
மட்டுப்பட்டு சுயமண்ணுக்குத் திரும்ப ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அப்போது ஏற்படும்
காலத்தின் இடைவெளி மூலமே அனுபவித்த துக்கத்தின் ஓர்மையை அவர்களால் பெரிய நாவல்களாக
உருவாக்க முடியுமோ என்னவோ.
யுத்தம் சார்ந்த பின்னணியில் எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒருசில
நன்றாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் போர் என்பது குண்டுவெடிப்பு மட்டும் அல்ல.
போர் அடுக்கடுக்காக எண்ணற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றது. நம்மால் கற்பனை செய்து
பார்க்க முடியாத விஷ விதைகளை அவை தூவிவிட்டுப் போய்விடுகின்றன. ஹிரோஷிமா இன்றும்
நோயுற்றே இருக்கிறது. யுத்தம் தரும் கொடுமைகளை நேரடியாக வர்ணிக்கும் கவிதைகளைத்
தாண்டி அக்கொடுமைகள் வாழ்க்கையை ஊடுருவும் எண்ணற்ற தளங்கள் சார்ந்த கவிதைகள்
அவர்களிடம் குறைவாகவே பார்க்கக் கிடைக்கின்றன.
இலங்கை வாசகர்கள் தமிழக வாசகர்களைவிட அதிகப் புத்தக ஆர்வம் கொண்டவர்கள். தமிழக
எழுத்தாளர்களை ஐரோப்பாவிலும் உலகின் பிற இடங்களிலும் புரிந்துகொண்டு
கௌரவிப்பவர்கள் அவர்களே. ஐந்தாறு தேசங்களுக்காவது நான் அவர்களது அழைப்பின் பேரில்
போயிருக்கிறேன். அப்போது நான் பெற்றுள்ள நெகிழ்ச்சி விவரிப்புக்கு உட்பட்டது அல்ல.
தமிழக வாசகர்களைவிட நுட்பமாக அவர்கள் நம் படைப்புகளைப் படித்திருக்கிறார்கள். மிகக்
குறைவான வருமானத்தில் மிச்சம் பிடித்துப் புத்தகங்களை வாங்குகிறார்கள். என் மொத்தப்
பயணங்களில் அமெரிக்கா நீங்கலான வெளிநாடுகளில் தமிழ்நாட்டுத் தமிழர்களாக நான் இரண்டு
வாசகர்களைத்தான் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் இரண்டு வாசகர்கள்
இருக்கிறார்கள். உங்களையும் சேர்த்துக்கொண்டு சொல்லும்போது உலக உருண்டையில்
ஐந்துபேர். (அவ்வளவு மோசமா என்ன!) இந்த வகையில் இலங்கை வாசகர்களின் மேன்மை நம்
நெஞ்சை நிறைக்கக்கூடியது.
மொழிபெயர்ப்புப் பற்றி நீங்கள் தந்துள்ள தகவல்கள் ருசிகரமானவை. நான் வாசிக்க
நேர்ந்த கட்டுரையிலும் நீங்கள் ராமானுஜத்தின் ‘யாயும் யாயும் யாரா கியரோ’
மொழிபெயர்ப்பை வியந்து பாராட்டியிருக்கிறீர்கள். அமெரிக்காவில் இருந்த நேரங்களில்
தமிழை ஆங்கிலத்தில் ஆக்கும் திறன் கொண்ட அமெரிக்க அறிஞர்கள் ஒரு சிலருடன் பேச
எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. மூலத்தைக் கவித்துவமாக மாற்றுவதில்
ராமானுஜம் காட்டும் திறன், மூலத்தின் பொருள் சார்ந்த நுட்பங்களை இழக்காது
பிடித்துக்கொள்வதில் அவருக்கு இல்லை என்று சொன்னார்கள். அத்துடன் அவருக்கு
ஆங்கிலத்தின் மீது இருக்கும் ஆட்சி - முக்கியமாக இன்று உயிர்ப்புடன் வாழும் நவீன
ஆங்கிலம் சார்ந்து - பண்டைத் தமிழ் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதில் இல்லை என்றும்
சொன்னார்கள். என் கவிதை ஒன்றையும் என் சிறுகதை ஒன்றையும் அவர்
மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றை மிகச் சிறப்பான மொழிபெயர்ப்புகள் என்றுதான்
சொல்ல வேண்டும். இதற்கு மேலும் அவர் எனது படைப்புகள் ஒருசிலவற்றை மொழிபெயர்த்து
இருப்பதாக, எங்களுக்குப் பொதுவான ஒரு நண்பர் தெரிவித்தார் என்றாலும் அவற்றை நான்
பார்த்ததில்லை. நான் நடத்திய ‘காலச்சுவடு’ இதழில் அவர் ஆங்கிலத்தில எழுதியுள்ள
எந்தக் கவிதையையும் மொழிபெயர்த்துப் போட்டுக்கொள்ளலாம் என்றும் பெரியதாகவோ
அல்லது சிறியதாகவோ ஒரு கட்டுரையை இதழ் தோறும் அனுப்பிவைப்பதாகவும் எழுதியிருந்தார்.
ஆனால் அவரது மிகுதியான அலுவல்கள் அவரைச் செய்யவிடவில்லை. நான் சற்று நீண்ட கவிதை
ஒன்றை நுஃமானின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டேன். என் மனதைக் கவர்ந்த அவரது பல
கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்ற தாகம் எனக்கு இன்றும் இருக்கிறது. இனிமேலேனும்
அதைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
பிற மொழிகளைச் சேர்ந்த எழுத்துக்களைத் தமிழில் கொண்டுவருபவர்களின் இயலாமையும்
கவனக்குறைவுகளும் சொல்லத் தரமன்று. அவர்கள் மொழிபெயர்த்த புத்தகங்களின், சிறப்பான
மொழிபெயர்ப்பு ஒன்று வருவதையும் அவர்களது மோசமான மொழிபெயர்ப்பு மூலம்
தடுத்துவிடுகிறார்கள். எல்லாச் சமூகங்களிலும் விதிவிலக்குகள் இருப்பார்கள். தமிழில்
த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, ரகுநாதன், கு. அழகிரிசாமி, எம். சித்தலிங்கய்யா
போன்ற சிலர் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்த ஆண்டுத்
தொடக்கத்தில் கலிஃபோர்னியாவில் இருந்தபோது இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர்
ஆர். பார்த்தசாரதி மொழிபெயர்த்துள்ள சிலப்பதிகாரம் படித்தேன். என்னளவில் நல்ல
அபிப்பிராயம் ஏற்பட்டது. பன்னிரண்டு வருடங்கள் உழைத்து இந்த மொழி பெயர்ப்பை
முடித்திருக்கிறார் அவர். ஆனால் உலகளவில் ஆங்கில வாசகர்களின் கவனிப்புக்கு இந்தப்
படைப்பு வந்ததாகவே தெரியவில்லை. நான் அங்கிருந்த போது ஒரு மதிப்புரைகூடப் பார்க்கக்
கிடைக்கவில்லை. இந்திய இலக்கியங்கள் என்றாலே மேற்கில் ஒரு அசிரத்தை இருக்கிறது.
மூன்றாம் உலக நாடுகள்மீது இவர்கள் கொண்டுள்ள அசிரத்தை மட்டுமல்ல இது. ஆப்பிரிக்க,
மெக்சிக்க இலக்கியங்களுக்கு அவர்கள் மிகுந்த கவனம் தந்திருக்கிறார்கள். அவர்களது
இரண்டாம்பட்சமான புத்தகங்கள்கூட இவர்களுக்கு முதல்பட்சமாகத் தெரிகிறது. அமெரிக்க,
ஆங்கிலப் பேராசிரியர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் படைக்காத Jorge Luis Borges
பெற்றிருக்கும் பெருமதிப்பு ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது. ஷேக்ஸ்பியருடன் அவரை
ஒப்பிட்டுப் பேச வேண்டியதுதான் இனி பாக்கி. இந்தியாவிலும் மிகச் சிறந்த படைப்புகள்
உருவாக்கப்பட்டுள்ளன. தாராசிங்கர் பானர்ஜி எழுதியுள்ள ‘ஆரோக்கிய நிகேதன்’ என்ற
நாவலை நான் ஐந்தாறுமுறையாவது தமிழ் மொழிபெயர்ப்பிலும் மலையாள மொழிபெயர்ப்பிலும்
படித்திருப்பேன். அற்புதமான நாவல். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் பார்த்ததில்லை.
வெளிவந்தும் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்திய மொழிகள் எதுவும் தெரியாத
Salman Rushdie, ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் இந்திய எழுத்தாளர்கள்தான் சிறப்பான
படைப்புகளை உருவாக்கியிருப்பதாக எழுதியிருக்கிறார். இது ஒரு அபத்தமான கருத்தாகும்.
இவர்களது விமர்சனம் பிராந்திய மொழிகளைச் சேர்ந்த படைப்புகள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்படுவதை மேலும் பின்னகர்த்திவிடுகிறது. பாரதியைக்கூட நம்மால் உலக
வாசகர்களிடம் கொண்டுபோக முடியவில்லை. அப்படிக் கொண்டுபோனாலும் அவர்கள் கவனத்தைக்
கவர முடியாத நிலைதான் இன்று இருக்கிறது. வி.எஸ். நைப்பால் இன்றுவரையிலும்
எழுதியுள்ள புத்தகங்களை இந்திய மொழிகள் எவற்றிலாவது எழுதியிருந்தால், நோபல் பரிசை
அவரால் கனவில்கூடக் காண முடியாது.
ஈழத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒருசில தமிழ் எழுத்தாளர்களும்
வாசகர்களும் இருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தைப் பற்றி நன்கு அறிந்த ஈழத் தமிழர்களோ
பலர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் ஆக்கபூர்வமான விமர்சனத்தைப் பகிர்ந்துகொள்ளும்
உறவு இன்னும் வலுவாக உருவாக வேண்டும். பத்மநாப ஐயர் இந்தக் கண்ணோட்டம்
கொண்டவர்தான். தமிழகத்திலிருந்து ஒருவரை அழைக்கும்போது போக்குவரத்துச் செலவு
மிகுதியாகிவிடுகிறது. பல பல்கலைக் கழகங்கள் மிகத் தாராளமாக நிதி ஒதுக்கி இது போன்ற
உறவுகள் வலுப்பட உதவுகின்றன. ஆனால் தமிழர்களால் அவற்றின் பக்கம்கூடப் போக
முடிவதில்லை.
மாதவய்யாவின் ‘க்ளாரிந்தா’ நாவலை ஆங்கிலத்தில் நான் படித்ததில்லை. தமிழில்தான்
படித்திருக்கிறேன். (ஆங்கிலத்திலிருந்து மிகச் சிறப்பாக இந்நாவலை
மொழிபெயர்த்திருப்பவர் திருமதி சரோஜினி பாக்கியமுத்து.) அவருடைய படைப்புகளில்
சமூகம் சார்ந்த அவரது புரட்சிகர எண்ணங்கள் வெகுவாகத் துருத்திக்கொண்டிருக்கின்றன.
கலையாற்றலால் இக்கருத்துகளை அனுபவங்களாக மாற்றுவதில் அவர் போதிய வெற்றிபெறவில்லையோ
என்று தோன்றுகிறது.
சாவி, ராது இருவரும் அவர்களது கணவர்களுடனும் குழந்தைகளுடனும் வந்தது மிகுந்த
மகிழ்ச்சியை உங்களுக்கு அளித்திருக்கும். ஆனந்தின் பேச்சுத்திறன் இப்போது
வளர்ந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு வயதாகும் எனது பேரன் அளவுக்கு
மீறிய புத்திசாலித்தனத்தைக் காட்டும்போதும் பேச்சு அவனுக்கு மட்டாகவே வருகிறது.
ஆனால் ஊமை பாஷையில் எல்லாவற்றையும் புரிய வைத்துவிடுவதில் நிபுணன். நாம் செந்தமிழில்
பேசினாலும் அவனுக்குப் புரியும். பெரியவர்கள் செய்யும் பணிகளில் குழந்தைகள்
இணைந்துகொண்டு சுறுசுறுப்பாக இயங்குவது மிகுந்த சந்தோஷம் தரும் காட்சியாகும்.
நீங்கள் இந்தியாவுக்கு எப்போது வருகிறீர்கள்? நாகர்கோவிலுக்கு எப்போது வர
முடியும் என்று நினைக்கிறீர்கள்? நீங்களும் மார்க்கும் சேர்ந்து வந்தால் அது அதிக
மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும்.
இங்கு நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். அமெரிக்காவில் வசிக்கும்
தைலாவிடமிருந்தும் தங்குவிடமிருந்தும் அடிக்கடி போன் வருகிறது. இப்போதைக்குப்
பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் கவலைப்பட வேண்டிய சூழல்தான்.
பிரச்சினை மோசமாகிவிட்டால் இங்கு வந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால்
அமெரிக்கா அவர்களை லேசில் விடாது.
கண்ணனும் மைதிலியும் கோவா போயிருக்கிறார்கள். ஒரு மாற்றத்திற்காக. கமலா, கண்ணன்,
மைதிலி, குழந்தைகள் சாரங்கன், முகுந்தன் எல்லோரும் சுகம். எனக்கு இருதயம்
சம்பந்தமாகச் சிறு உபாதைகள் இருந்தன. இடது கால் பாதத்தில் சிறிய வலி ஏற்பட்டதில்
ஐந்தாறு வாரங்களாக நடக்கப் போகவும் முடியவில்லை. இது மிகுந்த மனச்சோர்வை
ஏற்படுத்துகிறது. மீண்டும் நடக்கக் கிடைக்கும் அளவுக்கு உடல்நிலை ஏற்படும் என்று
நினைக்கிறேன். இருதயத்தைச் சோதனை செய்த டாக்டர்கள் கவலைப்படும்படி எதுவுமில்லை
என்று சொல்லிவிட்டார்கள். என் டாக்டர் dietricianஐப் பார்த்து உணவை ஒழுங்கு
செய்துகொள்ளச் சொன்னார். நாலாண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற இரு பெண்மணிகள் வந்து
என்னை விசாரித்து எனது குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரையிலும் எழுபதாண்டுகளின்
வரலாற்றை எனது பழக்கவழக்கங்கள், உணவு, நோய் நொடிகள் சார்ந்து குறித்துக்
கொண்டுபோய் வேறு dietricianகளை அழைத்து, ஒரு கருத்தரங்கு கூட்டி, இனி நான் உண்ண
வேண்டிய உணவு பற்றி எழுதிக்கொண்டு வந்தார்கள். எனக்குப் பிடிக்கும் உணவு வகைகளைப்
பற்றி ரகசியமாக யார் அவர்களுக்குச் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஈவிரக்க
மில்லாமல் எல்லாவற்றையும் ‘கட்’ செய்துவிட்டார்கள். அதிர்ச்சியிலிருந்து
தப்பித்துக்கொள்ள விளையாட்டாக நான் எத்தனை பஜ்ஜி சாப்பிடலாம் என்று கேட்டேன்.
உங்களுக்கு உணவுத் தடையே இல்லை; எது வேண்டுமென்றாலும் நீங்கள் சாப்பிடலாம்; மூன்று
மாதத்திற்கு ஒரு பஜ்ஜி சாப்பிடுங்கள் என்றார்கள். நான் வருடத்திற்கு நாலு பஜ்ஜியா
என்று கேட்டேன். தாராளமாக ஐந்து சாப்பிடுங்கள் என்றார்கள். இவ்வளவு கருணைகொண்ட
பெண்மணிகளை நான் பார்த்ததேயில்லை. தண்ணீர், காற்று, மழை, இயற்கைக் காட்சிகள், அருவி,
பறவைகள் ஆகிய கடவுளின் இலவச அன்பளிப்புகளை நான் உண்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்
என்பது தெரிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நிறைய வேலை செய்கிறேன் - வாசிப்பும் எழுத்தும் ஒரு
வேலை என்றால்.
எல்லோருக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.
மிக்க அன்புடன்,
அன்புள்ள லக்ஷ்மி, 16.01.02
ஜனவரி முதல் தேதியில் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதியதில் விவரிக்க முடியாத ஒரு
சந்தோஷத்தை அடைந்தேன். உங்கள் புத்தாண்டு வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதில் நாங்கள்
எல்லோரும் சந்தோஷம் அடைந்தோம்.
வசதியாக நார்விச் போய்ச் சேர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மார்க்
வந்துசேர்ந்துவிட்டாரா? அவர் எப்போது வந்தார்? அவரைப் பார்க்க முடியாமல் போனது
ஏமாற்றம்தான். நானும் அவரும் எங்கள் வீட்டுப் பக்கத்திலிருக்கும் எஸ்.எல்.பி.
பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் படிக்கட்டில் உட்கார்ந்து - அப்போது காற்று வெகு
இதமாக இருந்தது - பேசிக்கொண்டிருந்தது இப்போதும் நினைவிருக்கிறது. முதலில்
பேசியபோதே பலமுறை பழகியவரிடம் பேசியதுபோலவே இருந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
உங்களையும் சுபஸ்ரீயையும் கீதா கிருஷ்ணன் குட்டியையும் சென்னையில் பார்க்க
முடிந்தது எனக்கும் கமலாவுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. பிரிட்டிஷ்
கவுன்சில் நிகழ்ச்சியும் கனகச்சிதமாக அமைந்தது. கதை வாசிப்பு மிகவும் நன்றாக
இருந்தது. ஒரு பிசிறு இல்லை. டைரக்டர் எல்லோரையும் கடுமையாக வேலை
வாங்கியிருக்கிறார். ‘காகங்கள்’ கதையை பிரசன்னா ராமசுவாமி வாசித்ததும் என் மனதைத்
தொட்டது. அவரைக் கொண்டு மீண்டும் வாசிக்கச்செய்து நாடாவில் பதிவுசெய்து
வைத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறேன். ‘இந்தியன் எக்ஸ்பிர’ஸில் அசோகமித்திரன்
பிரிட்டிஷ் கவுன்சில் கூட்டத்தைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்.
சென்னையில் Book Fair நடந்துகொண்டிருக்கிறது. ‘காலச்சுவடு’ம் அங்கு விற்பனை
நிலையம் எடுத்திருக்கிறது. காலச்சுவடு புத்தகங்களுக்கு வாசகர்களிடம் மிக நல்ல
வரவேற்பு இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டுப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கு
வாசகர்களிடமிருந்து நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது.
நாலைந்து வருடங்களாகத் தமிழில் நல்ல புத்தகங்களின் விற்பனை கூடிக்கொண்டே
போகிறது. உலகெங்கும் சுமார் ஏழு கோடித் தமிழர்கள் இருப்பதற்கு ஒரு நல்ல
எழுத்தாளனின் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் முதல் பதிப்பாக அச்சிடப்பட வேண்டும்.
உலகத்தில் பல தேசங்களில் இந்த எண்ணிக்கையில்தான் காரியங்கள்
நடந்துகொண்டிருக்கின்றன. தமிழில் ஆயிரம் பிரதிகளிலிருந்து இரண்டாயிரம் பிரதிகளுக்கு
வந்துவிட்டோம்!
‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை நீங்கள் மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டது
என்னை ரொம்பவும் ஊக்குவிக்கிறது. நிறைய எழுத வேண்டும் என்ற என் கனவுகள் மேலும்
தூண்டப்படுகின்றன.
‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலைக் கடந்த ஆறு மாதங்களில் மூன்றுமுறை படித்துச்
சிறிய திருத்தங்கள் செய்திருக்கிறேன். அந்தத் திருத்தங்கள் எண்ணிக்கையில் நிறைய
இருக்கும், அரைப்புள்ளியைக் கால்புள்ளியாக மாற்றுவது, ஆச்சரியக் குறிகளை வெளியே
தள்ளுவது, பாராக்களை ஒழுங்கு செய்வது, சில வரிகளை எடுப்பது என்று. இந்த வருடம்
இரண்டாவது பதிப்பு கொண்டுவரும்போது இம்மாற்றங்கள் எல்லாம் அமலாகிவிடும். நீங்கள்
மொழிபெயர்ப்புச் செய்து கொண்டிருக்கும்போதே இந்தப் புதிய பதிப்பையும்
அனுப்பிவிடுவேன். ஏற்கனவே மொழிபெயர்த்துவிட்ட பக்கங்களில் திருத்தங்கள் செய்வது
உங்களுக்கு ஒரு கடினமான வேலையாக இராது. பிரதி சார்ந்து பெரிய மாற்றங்கள் இல்லை.
இப்போது மொழிபெயர்ப்புப் பகுதிகளை நூறு பக்கங்கள் வாக்கில் முடிந்ததும் எனக்கு
அனுப்பிவையுங்கள். எங்கள் கம்ப்யூட்டரில் இப்போது ஈமெயில் சரியாகவே வேலை
செய்யவில்லை. அதனால் நீங்கள் தபாலில் அனுப்புவதுதான் நல்லது என்று எனக்குப்படுகிறது.
மலையாளத்தில் விமலசேனன் நாயர் என்பவர் ஒருவருடமாகக் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’
நாவலை மொழிபெயர்த்து வருகிறார். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் மிகப் பொறுப்பான
பணியில் இருந்துகொண்டிருப்பதால் அவ்வளவாக மொழிபெயர்ப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஆனால் இப்போது லீவுபோட்டுவிட்டு மொழிபெயர்ப்பை முடித்து விடலாம் என்ற எண்ணததில்
பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
நேற்று இமையம் இங்கு வந்திருந்தார். அப்போது நீங்கள் மொழிபெயர்த்திருக்கும்
Beasts of Burdenஐக் கொண்டு வந்தார். புத்தகத்தின் மேலட்டையும் அச்சும் அமைப்பும்
மிகவும் நன்றாக இருக்கின்றன.
இப்போது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மொழிபெயர்ப்பைத் தவிர வேறு என்ன பணி
செய்துகொண்டிருக்கிறீர்கள்?
உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகளையும்
பேரக்குழந்தைகளையும் பார்க்கும் போதே நமக்கு ஒரு தெம்பு வந்துவிடுகிறது. எனக்கு
எழுதுவது, படிப்பது ஆகிய சகல வேலைகளையும் விட்டுவிட்டு முகுந்தனுடனேயே நேரத்தைக்
கழிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் ஐந்தாறு மாதங்கள் ஆகிவிட்டால் அவன்
வேறுமாதிரி ஆகிவிடுவான். கோமாளித்தனம் குறைந்து மூளை தர்க்கரீதியாக வேலைசெய்யத்
தொடங்கிவிடும். அதன்பின் குதூகலம் குறைவுதான்.
எங்கள் குடும்பத்தினர் சார்பாக உங்கள் எல்லோருக்கும் எங்கள் புத்தாண்டு
வாழ்த்துகளும், பொங்கல் வாழ்த்துகளும்.
அன்புடன்,
அன்புள்ள லக்ஷ்மி, 02.03.02
உங்கள் 04.02.02 கடிதம் கிடைத்தது. உங்கள் நாட்கள் மார்க்குடனும் பெண்களுடனும்
குழந்தைகளுடனும் மிகவும் சந்தோஷமாகக் கழிந்துகொண்டிருப்பது எனக்கு மனநிறைவைத்
தருகிறது.
உங்கள் வாழ்க்கை முரண்பாடுகளும் புதிர்களும் நிறைந்தவை என்று
எழுதியிருக்கிறீர்கள். யோசித்துப் பார்க்கும்போது எல்லோருடைய வாழ்க்கையும்
ஏறத்தாழ அப்படித்தான் என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்களுடைய கலாச்சார - மொழிப்
பிரச்சினைகளைப் பற்றி என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தது
எனக்கு மட்டற்ற சந்தோஷத்தைத் தந்தது.
சிறு வயதில் நீங்கள் சென்னையில் இருந்தீர்கள் என்றால் பல விஷயங்கள் வேறு மாதிரியே
நடந்திருக்கும். சென்னையிலிருந்து இப்படி நடந்ததென்றால் அபூர்வமான விதிவிலக்குதான்
அது. முதலில் நீங்கள் தமிழ்ப் பள்ளிக்குப் போனது. எல்லா விஷயங்களையும் தமிழில்
படித்தது. குடும்பச் சூழலால் இரு மொழிக் கலாச்சாரத்திற்குள் இளம்பருவத்தில் போக
நேர்வது இதெல்லாம் தமிழ்நாட்டில் சர்வசாதாரணம். சென்னையிலிருக்கும் படித்த தமிழர்கள்
வீட்டு மொழியாக ஆங்கிலத்தை வைத்துக்கொள்வதையே விரும்புகிறார்கள். தமிழ்
அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகவே இருக்கிறது.
ஷேக்ஸ்பியரைப் படித்ததன் மூலம் ஒருவருக்கு இங்கிலீஷின் மீது காதல் ஏற்பட்டது
என்றால் அது போன்ற இயற்கையானதும் மேலானதுமான காரியம் எதுவுமே கிடையாது.
ஷேக்ஸ்பியருக்கு மனதில் எழுப்பிக்கொண்ட நினைவு மண்டபம் என்று இதைச் சொல்லலாம்.
இலக்கியம் சார்ந்த பொதுப்பார்வைகள் நிறையவே உள்ளன. இந்தப் பார்வையில்
தேர்ச்சிபெற்றவர்கள் விமர்சனமே படைப்பின் அடிப்படையைத் தேடிப்போகும். மேலோட்டமான
ஜாலங்களை இரண்டாம் பட்சமாகக் கருதும். ஷேக்ஸ்பியரின் எழுத்துக்கள்மீது ஆழ்ந்த
அனுபவங்கொண்ட ஒருவருக்கு உலகத்தில் இன்றுவரையிலும் எழுதப்பட்டுள்ள எந்தக் கவிதையும்
அந்நியமாகத் தெரியாது. டால்ஸ்தோயையும், தஸ்தாயேவஸ்கியையும் அந்தோன் செகாவையையும்
ஆழ்ந்து படித்தவர்களுக்கு எந்த மொழி நாவலைப் பற்றியும் சிறுகதைகள் பற்றியும் சில
அடிப்படையான விஷயங்களைச் சொல்ல முடியும். சிறிது போதாமை எங்கு வருகிறது என்றால்
கலாச்சாரப் பரிச்சயம் கொள்ளச் சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பதில்தான். ‘கோவேறு
கழுதை’களில், நாவலின் அடிப்படையான கூறுகளும் ஒரு மண்ணைச் சார்ந்த கலாச்சாரக்
கூறுகளும் இருக்கின்றன. அடிப்படைக் கூறுகள் மட்டுமே அறிந்தவர்களுக்கு ஒரு இழப்பு
உண்டு என்றுதான் நினைக்கிறேன். (‘கோவேறு கழுதைகள்’ ஆங்கில மொழி பெயர்ப்புக்
கிடைத்தது. இனித்தான் நான் படிக்க வேண்டும். அதுபோல் ‘தண்ணீர்’ மொழிபெயர்ப்பும்
என்னிடம் இருக்கிறது. இந்த இரு மொழிபெயர்ப்புகள் பற்றியும் பரவலாக விசாரித்தேன்.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் படைப்புகள் போக வேண்டுமென்று விருப்பம் கொண்ட பல
எழுத்தாளர்களும் உங்கள் மொழி பெயர்ப்பு மிகச் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள்.
பிரபல எழுத்தாளரான சக்கரியா எழுதிய முன்னுரை ஒன்றில் ‘தண்ணீ’ரை ஆங்கிலத்தில் படித்து
மிகுந்த இலக்கியப் பாதிப்புக்கு ஆளானதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் செய்திகள்
எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தன.)
நீங்கள் மேற்கொண்டுள்ள இலக்கியப் பயணம் - தமிழிலிருந்து ஆங்கில இலக்கியம், பின்
இந்திய இலக்கியம், அதன்பின் தற்காலத் தமிழ் இலக்கியம் - மிகுந்த இலக்கியச் செழுமையை
உங்களுக்குத் தந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஒரே கலாச்சாரத்திற்குள் அது
மட்டுமே உலகத்தில் மேம்பட்டது என்ற கிணற்றுத் தவளைப் புத்திக்கு ஆளாகாமல் கலாச்சாரம்
என்பது உலக மக்களுடைய சொத்து என்பதை அறிந்துகொள்வது உங்களுக்குச் சுலபமாகவே
இருக்கும். போகப் போக நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் பயணப் பெட்டி பெரிதாகவும்
அதிக கனம் கொண்டதாகவும் மாறிக்கொண்டே போகும் என்றுதான் நினைக்கிறேன்.
‘கிளாரிந்தா’வுக்கு நீங்கள் விமர்சனரீதியான ஒரு முன்னுரை எழுத நேர்ந்தால் அதை
எனக்கு அனுப்பிவையுங்கள். சாகித்திய அக்காதமிக்கு மறுப்பு இல்லையென்றால் அந்த
முன்னுரையைத் தமிழில் மொழி பெயர்த்துக் ‘காலச்சுவ’டில் கொண்டு வரலாம். பாமாவின்
‘சங்கதி’ சிறிய நாவல் என்பதால் அதிக வேலை வாங்காது. (தமிழிலேயே இன்று மொழிபெயர்க்க
மிகக் கடினமான நாவல் ‘கோவேறு கழுதைகள்’ என்றுதான் சொல்வேன். அந்தக் கிணற்றைத்
தாண்டியபின் இந்த வாய்க்காலைத் தாண்டுவது சுலபமாகவே இருக்க வேண்டும்.) ‘குழந்தைகள்
பெண்கள் ஆண்கள்’ நாவலின் மொழிபெயர்ப்புப் பகுதிகளை நீங்கள் அனுப்பிவைத்தால்
எம்.எஸ்.ஐக் கொண்டு படிக்கச் சொல்வேன். அவருடன் நீங்கள் ஈமெயில் தொடர்பும்
வைத்துக் கொள்ளலாம்.
தங்களைக் கலைஞர்களாகக் கற்பனை செய்துகொள்ளும் பலரும் குடும்ப உறவைச் சற்றுப்
பின்தள்ளி வைத்துக்கொள்கிறார்கள். இது சிறந்த விஷயமாக எனக்குப் படவில்லை. நாம்
வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதே குடும்பத்தினர் வழியாக - முக்கியமாகக் குழந்தைகள்
வழியாக - என்றுதான் நான் கருதுகிறேன். அப்படிப் பார்க்கும்போது உங்களுக்குக்
குடும்பத்தின் பேரில் இருக்கும் பாசம் - மோகம் என்றுகூடச் சொல்லலாமா? - என் மனதை
வெகுவாகக் கவருகிறது. இந்தக் கடிதத்தில் மார்க் பற்றியும் பேரக் குழந்தைகள்
பற்றியும் - முக்கியமாக மரியம் பற்றியும் - சாவி பற்றியும் நீங்கள் எழுதியிருக்கும்
வரிகள்தான் எனக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தன.
அடுத்த தடவை மார்க் வரும்போது அவரைச் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று
நினைக்கிறேன். பிரிட்டிஷ் கவுன்சில் கூட்டம் எனக்கும், கமலாவுக்கும், நண்பர்களுக்
கும் மிகுந்த மனநிறைவைத் தந்த கூட்டம். ரொம்ப நாட்களாக நான் பார்க்க
ஆசைப்பட்டுக்கொண்டிருந்த கீதா கிருஷ்ணன் குட்டியைப் பார்த்தது உங்கள் வழியாகக்
கிடைத்த ஒரு போனஸ்!
இந்திய இலக்கிய விழாவுக்கு வந்துவிட்டுப் போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
சலபதியும் அதற்குப் போகப்போவதாகச் சொன்னார். சந்தித்தீர்களோ என்னவோ. நடுவில்
சலபதிக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தது. இப்போது நன்றாகிவிட்டார்.
நான் புதுதில்லி போயிருந்தேன். இரண்டு பணிகளுக்காக என்னை அழைத்திருந்தார்கள்.
இவ்வாறு என்னை அழைப்பது இதுதான் முதல் தடவை. பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் இந்தத்
‘தொழில்’ முப்பத்தைந்து நாற்பது வயதிலேயே ஆரம்பமாகிவிடுகிறது.
1. ஆகாசவாணியில் நாடகங்களைத் தேர்வு செய்வது. 2. முதிய எழுத்தாளர்களுக்கும், இளம்
எழுத்தாளர்களுக்கும் இரண்டு வருஷத்துக்கு உதவிப் பணம் அளிப்பது. இரண்டு பணிகளையும்
திருப்திகரமாகச் செய்ய முடிந்தது. இந்தியாவில் எல்லா அலுவலகங்களும்
அழுகிப்போய்விட்டன என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படியில்லை. இந்த இரண்டு
பணிகளை மேற்கொள்ளும்போதும் காரியங்கள் அங்கு சுறுசுறுப்பாக நடக்கின்றன என்ற
எண்ணம்தான் வந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் எங்களுக்கும் முழுச்சுதந்திரம்
அளித்தார்கள். அதிகாரிகளிடமிருந்தோ எழுத்தாளர்களிடமிருந்தோ சிபாரிசு எதுவும்
வரவில்லை. கடைசி நாள் ஒரு அதிகாரியிடம் சிறிது சண்டை போட்டுக்
கொள்ளும்படியாகிவிட்டது. அதனால் அடுத்த தடவை அழைப்பார்களோ என்னவோ! என் உடம்பும்
அவ்வளவு ஆரோக்கியமாக இல்லையே.
தேவை சார்ந்து விருப்பத்துடனேயே சில கட்டுரைகளும் நிர்ப்பந்தத்தினால் சில ‘சண்டை
சச்சரவு’க் கடிதங்களும் எழுதிக்கொண்டிருக்கிறேன். என் படைப்பு சார்ந்த
விமர்சனங்களுக்கு நான் இன்றுவரையிலும் பதில் சொன்னதேயில்லை. ஆனால் தனிப்பட்ட
முறையில் என்னைத் தாக்கித் தவறான தகவலை வாசகர்களிடம் கொடுக்கும்போது என் தரப்பை
வாசகர்களிடம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது போன்ற சச்சரவுகளில்
ஈடுபட்டால் காலம் வீணாவதைத் தெரிந்துகொண்டு ஒரு விளையாட்டுபோல் இதைச்
செய்துவருகிறேன். மார்ச் மாதம் கடைசிவரையிலும் இப்படியே நாட்கள் போகலாம். ஏப்ரல்
மாதம் முதல் வாரம் நானும் கமலாவும் கலிஃபோர்னியா போகிறோம். இந்தத் தடவை எங்களுடன்
மைதிலியும் சாரங்கனும் முகுந்தனும் வருகிறார்கள். கண்ணனுக்குச் சாவகாசம் இல்லை. அவன்
சென்னையில் ஒரு அலுவலகத்தைத் திறந்து ‘காலச்சுவ’டை மாத இதழாக மாற்றப்போகிறான்.
அதோடு ஒரு இன்டர்நெட் இதழையும் ‘உலகத் தமிழ்’ என்ற பெயரில் கொண்டுவர இருக்கிறான்.
முகுந்தன் இப்போது விளையாட்டுப் பள்ளிக்குப் போகிறான். இரண்டு மணி நேரம்தான்.
ஆனால் ஒரே சந்தோஷமாகப் போகிறான். அங்கு போனவுடன் பள்ளிக்கூட வாசலிலேயே அவனுக்கு
ஒரு சாக்லெட் கிடைக்கும்!
அங்கு எல்லோருக்கும் என் அன்பு.
வாழ்த்துகளுடன்,
மார்க் - கணவர்
கீதா கிருஷ்ணன்குட்டி - மொழிபெயர்ப்பாளர் - மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு.
Beasts of Burden - ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் ஆங்கில
மொழிபெயர்ப்பு. |