|
மார்ச் மாதம் ஆறாம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகிலுள்ள
செந்தட்டி கிராமத்தில் கோயில் உரிமை தொடர்பான போராட்டத்தையொட்டி இரண்டு
தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஈழப் பிரச்சினை, அதைத் தின்னும் தேர்தல் எனத்
தமிழகமே வேறுதிசையில் இருக்கும்போது, தொடர்ந்துகொண்டிருக்கும் பிரச்சினையாகச்
சாதி வன்முறை தொடர்கிறது. ஒரு பிரச்சினையின் தீவிரம் அடுத்த பிரச்சினை வரும்
வரையில்தான் உணரப்படுகிறது. ஆனால் தீவிரம் தீர்ந்துபோகாமல் சாதி தனித்து நிற்கிறது.
செந்தட்டி கிராமத்திலுள்ள முப்பிடாதியம்மன் கோயிலில் கோனார், செட்டியார்,
தலித்துகளில் தேவேந்திர குல வேளாளர் ஆகிய வகுப்பினர் இதுவரை கூட்டாக வழிபட்டு
வந்துள்ளனர். சிறியதாக இருந்த இக்கோயில் மூன்று வகுப்பினராலும் பணம் சேர்த்து
விரிவாகக் கட்டப்பட்டது. கோயில் பெரிதாகிறபோது அதன் அதிகாரமும் விரிவடைகிறது.
அதுவரையில் பங்கேற்ற தலித்துகளின் உரிமையில் இப்போது சில கட்டுப்பாடுகள்
கொணரப்படுகின்றன. அவற்றால் ஏற்பட்ட முரண்பாட்டால் கோயிலுக்கென்று வசூலிக்கப்பட்ட
பணத்தை ஒவ்வொரு சாதியினரும் தங்களிடமே வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் 2008
ஆகஸ்ட் 30இல் கோயில் திருவிழா வந்தபோது தலித் மக்களைப் புறக்கணித்துவிட்டுத்
திருவிழாவை நடத்த மற்ற சாதியினர் முயன்றுள்ளனர். இதனால் சின்னக்கோவிலான்குளம் காவல்
நிலையத்தில் 27.09.2008 அன்று தலித் மக்கள் புகார் தந்துள்ளனர்.
தலித் மகளிர் மட்டும் வழிபடும் மாடசாமி கோவில் திருவிழாவின்போது சாதி
இந்துக்கள் தாக்குதலில் ஈடுபட்டு மின்சாரத்தைத் துண்டித்தனர். இது குறித்துக் காவல்
நிலையத்தில் புகார் தரப்பட்டது. தலித் மக்கள் புகார் தரும்போது மட்டும் நடவடிக்கை
எடுப்பதை விடுத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வட்டார நிர்வாகத் துறையினரும்
காவல் துறையினரும் இப்போதும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை யெடுக்காமல்
இருந்தனர். இம்முரண்பாடுகளின் தொடர்ச்சியாகக் கோனார் சமூகத்தவரான குருவம்மாளின்
வீட்டு வழியே வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரிய மாடசாமியை (38) என்பவரை நோக்கி
‘கோவிலில் உரிமை கேட்பவன் என் வீட்டின் வழியாகச் செல்லக் கூடாது’ என்று சொன்னதால்
ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிக் குருவம்மாள் குடும்பத்தினர் பெரிய மாடசாமியின்
வீட்டிற்குச் சென்று அவர் குடும்பத்தினரைத் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் பெரிய
மாடசாமியின் தாயார் கருப்பாயி காயமடைந்துள்ளார். சங்கரன்கோவில் அரசு
மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டு இரவு வீடு திரும்பிய கருப்பாயியின் கணவர்
ஈஸ்வரன் (53), உதவிக்காக வந்த சுரேஷ் (25) ஆகிய இருவரையும் வழிமறித்து முருகன்
என்னும் சாதி இந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கியும் இருக்கிறா£¢. பின்பு
அவரோடு வந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களைக் கொல்ல முயன்றது. அதில் சுரேஷ்
தப்பிவிட ஈஸ்வரன் வெட்டிக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்குச¢ சற்று நேரத்திற்கு
முன்பு இதே கும்பல் பரமசிவம் (25) என்னும் தலித் சமூகத்தவரையும் வெட்டிக்
கொன்றுள்ளது. இக்கொலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. தலித்துகளைத்
தாக்குவதற்கும் கொல்வதற்கும் சாதி இந்துக்களுக்கு ஒரு சிறிய காரணமே போதுமானதாக
இருக்கிறது. ஆனால் தலித்துகளுக்குப் பெரும் நெருக்கடி கொடுத்தாலும் அதைச்
சகித்துக்கொள்ளச் சொல்லப்படுகிறது. கொல்லப்பட்ட தலித் குடும்பத்தினருக்கு
உதவித்தொகை வழங்கிய அரசு, இக்கொலைகளுக்காகத் தலித் மக்கள் தந்த புகார்மீது உரிய
நடவடிக்கை எடுக்கவில்லை.
கொலைக் குற்றம்சாட்டப்பட்டோர் சம்பவத்தன்று திருச்செந்தூரில் இருந்ததாகக்
கூறியதை ஏற்றுக்கொண்ட காவல் துறை குற்றவாளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது.
தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் கோவில் வழிபாடு, வரிப்பணம் தொடர்பாக ஒரு
வருடமாகப் பிரச்சினை இருந்துவந்துள்ளது. முரண்பாடு தொடர்பாகக் காவல் நிலையத்தில்
புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஐந்துமுறை இரண்டு தரப்பினரையும் வைத்துப்
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பிரச்சினை தொடர்ந்துள்ளது.
இக்கொலைகளுக்குப் பிறகு, உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சில நாள்கள்
கழித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டம் நடத்தியுள்ளன. அரசும்
கட்சிகளும் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டாலும் இப்பிரச்சினை தொடரப்போகிறது.
ஏனெனில் இதன் பரிணாமம் அத்தகையது.
தலித்துகளின் பிரச்சினை கோயில் நுழைவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது கோயிலின்
உரிமை தொடர்பானதாகவும் இருக்கிறது. திருவிழாவில் மரியாதை, வழிபாட்டில் உரிமை என்று
செந்தட்டி கிராமத்தில் எழுந்த பிரச்சினை அவ்வுரிமை தொடர்பானதுதான். பொதுவாகவே
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலித் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் நெல்லை மாவட்டம் முத்தா நதியில் ஒருவர் கொல்லப்பட்டார். கடலூர், சிவகங்கை
மாவட்டங்களில் வன்முறைகள் அதிகரித்திருப்பதாக மதுரையிலுள்ள மனித உரிமை அமைப்புகள்
ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு அதிகரிப்பதன் பின்னணியாகத் தலித்
அமைப்புகளின் மழுங்கிப்போன எதிர்வினை, மார்க்சிஸ்ட் கட்சியினரது ஈடுபாட்டின் வரையறை,
மற்ற கட்சிகளின் மௌனம் போன்ற யாவும் விவாதிக்கப்பட வேண்டும்.
அண்மைக் காலமாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கோயில் உரிமை தொடர்பான
போராட்டங்கள் எழுந்துள்ளன. சேலம் கந்தம்பட்டி, உத்தப்புரம், நெல்லை பாந்தப்புலி
போன்ற ஊர்கள் இதற்கு உதாரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தம் ஊர்களில்
நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்களும் உண்டு.
கோயில் தொடர்பான முரண்பாடுகளின்போது தலித்துகள் தாக்கப்படுகின்றனர். அது
இயலாதபோது சாதி இந்துக்கள் அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் ஊரைவிட்டு வெளியேறும்
போராட்டங்கள் நடத்தி வெற்றிபெறுகின்றனர். செந்தட்டியில் கொலை நடந்துள்ளது.
இக்கோயில்கள் யாவும் கிராமக் கோயில்கள் என்பதும் இங்கு இருப்பவர்கள் பிராமணரல்லாத
இடைநிலைச் சாதியினர் என்பதும் கவனிக்கத்தக்கது. இச்சாதியினர் கொடும் வன்முறையோடு
சாதியைப் பாதுகாக்கின்றனர். இவர்களைப் “பயன்படுத்தப்படும் சக்தி”களென்றே
நம்பச்செய்கிறது நம்முடைய வைதீக எதிர்ப்பு மூளை. உண்மையில் சாதிய எதிர்ப்பு
இதற்குரிய பரிணாமங்களோடு இங்கு அணுகப்பட வேண்டும். |