Google   www kalachuvadu.com

தலையங்கம்
தலித் அரசியலின் திசைவழி
20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று தலித் எழுச்சி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதலே தலித்துகள் அமைப்பாகச் செயல்பட்டது தொடர்பான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. என்றபோதிலும் 1990களில் ஏற்பட்ட எழுச்சி புதிய உள்ளடக்கத்தோடு வெளிப்பட்டது. தலித் அடையாளம் என்பது அரசியல் எல்லைகளைத் தாண்டிச் சமூகப் பண்பாட்டு அடையாளமாகவும் மாறியது. கண்ணுக்குப் புலப்படும் ஆதிக்கத்தையும் கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கத்தையும் துல்லியமாக அது கண்டு கொண்டது. அதுவரையிலும் தலித் அரசியல் முழக்கங்களாகவும் நடைமுறைகளாகவும் கருதப்பட்டுவந்த பழைய அரசியலை மறுத்து எழுந்த புதிய தலைமுறையினரின் ஆவேசம், 1990களில் தலித் அரசியலாகக் கூர்மை பெற்றது. தலித் அடையாளம் அறிவுத் துறையில் உருவாக்கிய கேள்விகளும் விளைவுகளும் முக்கியமானவை.

எவ்விதப் பொருட்படுத்தலுமின்றிச் சமூகத்தின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த அம்மக்களுக்காக உருவாகியுள்ள தலித் அமைப்புகள் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருப்பதோடு உளவியல் பலத்தையும் வழங்கியிருக்கின்றன. தலித் அடையாளத்தின்கீழ் பெரும் திரட்சியை இந்த அமைப்புகள் சாத்தியப்படுத்தியுள்ளன. இந்தத் திரட்சிக்குப் பிறகே தலித் பிரச்சினைகளைப் பிற கட்சியினர் தங்கள் ‘பொது’ அடையாளங்களுக்குப் பாதகமில்லாமல் பேசத் துவங்கியுள்ளனர். புதிய நம்பிக்கையோடு புறப்பட்ட அவ்வமைப்புகளுக்கு இன்றைய அரசியல் சூழல் தரும் எதிர்வினையும் அதை அவ்வமைப்புகள் எதிர்கொள்ளும் விதமும் விவாதிக்க வேண்டியவை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவற்றின் இடம் என்ன? 20 ஆண்டு கால உழைப்பிற்குப்பின் ஒன்று அல்லது இரண்டு தேர்தல் இடங்கள் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. புதிய தமிழகத்தின் இருப்பைத் தேட வேண்டியுள்ளது. சிறு சிறுஅமைப்புகள் வட்டாரரீதியாகப் பெரிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு நின்றுகொள்கின்றன. உண்மையிலேயே தலித் அரசியல் விரும்பிய மாற்றம் இதுவல்ல.

தலித் அமைப்புகள் ஏற்படுத்திய சவால்களை ஏற்கனவே இருந்துவந்த கட்சிகள் வெற்றிகரமாகச் சமாளிக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பேசாமலும் எதிர்வினை புரியாமலும் சில சரிக்கட்டுதல்களை மேற்கொண்டுவிட்டன. மறுபுறம் அவற்றின் தனித்துவம் வெளிப்படாவண்ணம் அரவணைக்கவும் தெரிந்துள்ளன. இதை தலித் அமைப்புகள் எந்தளவுக்குப் புரிந்துகொண்டுள்ளன எனத் தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ள தலித் அமைப்புகள் இப்போது பொது அடையாளம் நோக்கி நகர்ந்துள்ளன. இவ்வமைப்புகள் பொது அடையாளம் பற்றிப் பேசுவது சரியானதாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவை கொடுக்கும் விலை என்னவாக இருக்கிறது என்பதே நம் கவனத்திற்குரியது. தலித் பிரச்சினையைப் பேசாதிருப்பது அல்லது அழுத்தம் தராத வகையில் பேசுவது, சாதியைப் பற்றிப் பேசுவதுதான் பொதுப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதாகும் என்று மாற்றுவதற்குப் பதிலாகத் தங்களைச் சாதிக் கட்சி இல்லையென்று ‘தூய்மை’ப்படுத்திக்கொள்வது சரியானதல்ல. தலித் அடையாளத்தை வெறும் தேர்தல் அரசியல் சார்ந்து மட்டுமே புரிந்துகொள்வதால் வரும் சிக்கல் இது. தலித் பிரச்சினைகளை நோக்கி எல்லோரையும் பேசவைப்பதே இன்றைய தேவை. அடையாள அரசியலிலிருந்து அதிகார அரசியலுக்குச் சென்ற பின்பு தலித்துகளின் அடிப்படையான தேவைகள் பற்றியும் அவர்களது வாழ்வுரிமை பற்றியும் பேசப்பட்டிருக்க வேண்டும். தலித் மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, நல்வாழ்வு, நிலவுரிமை போன்று அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதில் இன்றைய அரசுகளுக்கு அக்கறையில்லை. அவற்றை நோக்கித் தீர்வு ஏற்படும் வரையிலும் தொடர்ச்சியான போராட்டங்களும் இல்லாமல் போய்விட்டன. 1990களில் தலித் அமைப்புகள் மேலவளவு, கொடியங்குளம் போன்ற பிரச்சினைகளுக்காகப் போராடியதோடு, திராவிட இயக்க அதிகாரம் தந்த ஏமாற்றத்தை ஒட்டியும்தான் உருவாகி வந்தன. அந்தப் போராட்ட மரபு இன்றைக்கும் தலித் இயக்கங்களை அழுத்தக் குழுக்களாக மாற்ற முடியும் என்பதே அனுபவம் உணர்த்தும் உண்மை.

பிரச்சினைகளை ஒட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் முக்கியமானவை என்றாலும் எல்லா வேளைகளிலும் அவ்வாறே பயணிக்க முடியாது. தலித் மக்களுக்கான தேவைகளைக் கண்டறிந்து முன்செல்லும் போக்கு எழ வேண்டும். 1990களில் தலித் அமைப்புகளில் சில மட்டும் தமிழக அளவிலான பெரும் கட்சிகளாக மாறின. பிரபலமாக இருந்த சிறு அமைப்புகளும் பெரும் கட்சிகளோடு ஒன்றாகி மறைந்தன. இப்போது வட்டார அளவில் ஏற்படும் பிரச்சினைகளை இப்பெரும் அமைப்புகள் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் மாநிலம் தழுவிய பிரபலமான பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்துபவையாக அவை மாறியுள்ளன.

1990களில் கூர்மையடைந்த தலித் அடையாளம் சாதி, சாதி எதிர்ப்பு குறித்துப் புதிய பார்வைகளைத் தந்தது. அதில் அறிவுத் துறையினரின் பங்கு முக்கியமானது. அதன் தாக்கமோ தலித் இயக்க வரலாற்றின் அனுபவத்திரட்சியோ எந்தளவிற்கு இன்றைய தலித் இயக்கத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் கேள்வியாகவே உள்ளது. தலித் இயக்கங்கள் தமக்குள்ள வரலாற்றுக் கடமையைச் சரியாக நிறைவேற்றுவது ஒரு வகையில் பொதுச்சமூகத்தை அதன் பழமைவாத, சாதியத் தளைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய புரட்சிகரமான செயல்தான். தலித் இயக்கங்களுக்குத் தாம் மையநீரோட்ட அரசியல் கூட்டணிகளின் ஓட்டு வங்கிகளாக மாற்றப்பட்டுவிடும் அபாயம் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.

உள்ளடக்கம்