|
‘மீண்டும் காகங்கள்’ சிறப்புக் கூட்டத்தில் (25.11.2008) அம்பை தயாரித்த ‘தேகம்’
ஆவணப்படம் திரையிடப்பட்டது. பொதுவாக, ஆவணப் படங்கள் உணர்வுகளைத் தூண்டி, படத்தின்
கருப்பொருளோடு ஒன்றச் செய்யும். இந்த ஆவணப்படம் மிகையில்லாமல் அறிவுபூர்வமாக,
திருநங்கை யரின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டிருந்தது. காட்சி
களும் உரையாடல் வழி வெளிப்பட்ட கருத்துகளும் சமமாக இணைந்து சென்றன. திருநங்கையரின்
ஆழ்மனம் தெரிந்தது. உடலும் உள்ளமும் பெண்மையால் நிறைந்திருக்கும்போது, ஆணின்
உடையும் பணியும் அவர்களுக்குப் பொருத்தமற்றதாகிவிடுகிறது. அவர்களால் பிற ஆண்களை
நேசிக்கமுடிகிறது. ஆண்கள்மேல் வெறுப்பில்லை. திருநங்கையர் தங்களிடமிருக்கும் ஆண்
அடையாளங்களை மட்டுமே வெறுக்கிறார்கள். திருநங்கையரிடையே இருக்கும் அன்பும் பாசமும்
புரிதலும் வியக்கவைக்கின்றன. அவர்களுக்கிடையே நிலவும் குடும்ப உறவு முறை இந்தியாவில்
மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார்கள். பெரும்பான்மையான திருநங்கையர் தங்களை ஆண்
தன்மையிலிருந்து விடுவிக்கப் பெற்றோர்களிடம் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.
இதனால்தான் பலர் மும்பைக்கு ஓடிவிடுகின்றனர். பாலியல் தொழிலில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். படித்தவர்களால் மட்டுமே சமூகத்தை எதிர்கொண்டு மேலான ஒரு
வாழ்க் கையை அடைய முடிகிறது. சிலர் கலைஞர்களாக உருவெடுக்கின்றனர். சமூக நோய்கள் (கிமிஞிஷி)
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை வேறு சிலர் மேற்கொள்கின்றனர்.
திருநங்கையர் தங்களை மூன்றாம் பாலினம் எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றனர். பெற்றோரும் சமூகமும் தங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு பெண்ணாக
வாழ ஆதரவு தர வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அனைவரும் ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழ
ஆசைப்பட்டவர்களாக இருந்தனர். திருநங்கை நர்த்தகி நடராஜின் நடன நிகழ்ச்சி அழகியல்
கூறுகளுடன் ஆவணப்படத்தின் நோக்கத்தோடு இணைந்திருந்தது. இறுதியில் இடம்பெற்ற
‘கண்ணாடி’ கலைக்குழுவினரின் நிகழ்ச்சி வலுவின்றி இருந்தது.
ஆவணப்படத்தின் முடிவில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அம்பை விரிவாகப்
பதிலளித்தார். |