|
சேலம் ‘அற்றைத் திங்க’ளின் நவம்பர் மாத நிகழ்வு 16.11.08 அன்று நடந்தது.
க.வை. பழனிசாமி சிறப்பு விருந்தினரான ஓவியர் மருதுவை அறிமுகப்படுத்தினார்.
தன்னுடைய ஓவியம் மற்றும் கலை இயக்கம் தொடர்பாகத் பேச்சைத் தொடங்கிய மருது அனிமேஷன்
பற்றிக் கூறியபோது அதன் ஆரம்பப் புள்ளியான காமிக்ஸ் குறித்த தகவல்களையும்
பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அவருடைய பேச்சில் மிகுதியாக வெளிப்பட்டது அனிமேஷன் துறை குறித்த செய்திகளே.
அனிமேஷனில் தொடக்ககாலத்தில் ஒரு அசைவை வெளிப்படுத்தப் பல நூறு ஓவியங்களைத்
தொடர்ச்சியாக வரைய வேண்டியிருந்த சிரமத்தை விவரித்த அவர், பின்பு அதுவே வளர்ந்து
நவீனக் கண்டுபிடிப்புகளின் முக்கிய விளைவான கணிப்பொறியின் வழி அசுர
வளர்ச்சியடைந்ததையும் தற்போதைய சூழலில் நாம் அனிமேஷனுக்காகக் கையாளும் முறையையும்
எடுத்துக் கூறினார்.
இன்று அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைக்கும் இளைய சமுதாயத்தினருக்குக்
கிடைக்கக்கூடிய வரவேற்பையும் அவர்களுக்குக் கிட்டியிருக்கும் சகலவிதமான மென்பொருள்
வசதியையும் வெகு சுவாரஸ்யத்தோடு பகிர்ந்துகொண்டார்.
கணிப்பொறியைத்தான் கையாளத் துவங்கியபோது சந்தித்த சிக்கல்களையும் பின்னர் வேகமாகத்
தனக்கு அது வசப்பட்டுவிட்டதையும் விவரித்தபோது சுவாரஸ்யமாக இருந்தது.
அன்று நிகழ்ந்த உரையாடலில் நவீன ஓவியம் குறித்தும், ஓவியர்கள், ஓவியத் துறையின்
சமகாலச் சூழல் குறித்தும் எவ்விதத்திலும் பதிவுசெய்யாதது கொஞ்சம் ஏமாற்றத்தையே
அளித்தது.
எதிர்காலத்தில் அனிமேஷன் துறை பெருவளர்ச்சிகொள்ளும் என்றும் தகவல்
தொழில்நுட்பத்தில் அது சகல சாத்தியங்களையும் நிகழ்த்தும் என்றும் நம்பிக்கையுடன்
தெரிவித்தார்.
வெகுசன சினிமாவில் கலை இயக்குநராக ஓவியர் மருது தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருந்தபோதிலும், அவற்றைக் குறித்தும் எந்தவிதமான கருத்துகளையும்
வெளிப்படுத்தவில்லை.
தொடர்ந்து அனிமேஷன் துறையையும் அதன் வீரியத்தையும் தற்போதைய சூழலின் பின்னணியில்
விளக்கிக்கொண்டிருந்தார். பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளில் சிலவற்றைத்
தேர்ந்தெடுத்து காலச்சுவடு கண்ணன் கேட்க, அவற்றிற்கு ஓவியர் மருது விரிவாகப்
பதிலளித்தார். இறுதியாக மேடையில் இருந்து இறங்கிவந்து பார்வையாளர்களின் இடத்தில்
வைக்கப் பட்டிருந்த பலகையின் வெண்தாளில் சில நிமிடங்களிலேயே பறக்கும் குதிரையை
நீர்வண்ண ஓவியமாக்கியது அற்புதமாக இருந்தது.
‘பறக்கும் குதிரை’ என்ற படிமத்தின் மூலமும் பேச்சினிடையே விவரித்த காமிக்ஸ்
புத்தகத்தின் மீதான ஈர்ப்பைப் பார்க்கையில் மருது இன்னும் தன்னுடைய பால்ய காலத்தைத்
தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிந்தது. ஒரு படைப்பாளியை இவ்விதமான
தக்கவைத்தலே தொடர்ந்து தூண்டுகிறது.
மொத்தத்தில் முந்தைய கூட்டத்தைப் போலவே இக்கூட்டமும் சேலம் வாசகர்களுக்கும் பிற
பார்வையாளர்களுக்கும் சிறந்த அனுபவமாகவே இருந்தது.
|