|
சமீபத்தில் அரசியல் என்னும் சொல்லாடல் இலக்கியச் சூழலில் அதிகளவில்
பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லை மையப்படுத்திப் பத்து நூல்கள் வெளிவந்துள்ளன.
‘கங்கு’ (சிறு வெளியீடு புத்தகப் பரப்பலுக்கான வெளி) வரிசை என்னும் குறிப்போடு
பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூல்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள் இங்கு
இடம்பெறுகின்றன.
இருபதாம்
நூற்றாண்டின் சமூக, மானிடவியல் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பியர் பூர்தியு.
தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம், கல்வித் துறை மாந்தர், உலகின் ஏழ்மை, தனித்தன்மை:
சுவைநயம் பற்றிய மதிப்பீடு குறித்த ஒரு சமூக விமர்சனம், எதிர்ப்பு நடவடிக்கைகள்
முதலான நூல்கள் முக்கியமானவை. 1930களில் பிரான்சில் தென் கிழக்குப் பகுதியிலுள்ள
பெஅர்ன் பிரதேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பூர்தியுவின் தொடக்க காலப்
படைப்புகளில் அமைப்பியலின் வலுவான தாக்கம் காணப்பட்டபோதிலும் லெவிஸ்ட்ராஸ்,
அல்தூஸ்ஸர் போன்றவர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு விஷயத்தைத் தன் ஆய்வுகளில்
இடம்பெறச் செய்தார் என விமர்சகர்கள் மத்தியில் ஒரு கருத்து இருப்பதாகக் குறிப்பிடும்
எஸ்.வி. ராஜதுரை, அவரது அரசியல் ஈடுபாடு 1981இல் தொடங்கி உலகமயமாக்கல், தாராளவாதக்
கருத்தியலுக்கு எதிரான தீவிரச் செயல்பாடு, பூர்த்தியுவும் அவரது சகாக்களும் பிரெஞ்சு
அரசு பற்றிக் கூறிய விமர்சனங்கள், வலதுசாரி - போலி இடதுசாரிச் சிந்தனையாளர்களின்
கண்டனங்களைச் சந்தித்தது உட்படப் பலவற்றைக் குறிப்பிடுகிறார்.
கல்வியமைப்பின் முக்கியப் பணிகளிலொன்றான ‘கழித்துக் கட்டுதல்’ என்னும் சமூகச்
செயல்பாடு, காலம் பற்றிய கருத்தாக்கம், இருத்தலியலுக்கும் அமைப்பியலுக்குமான அவரது
எதிர்வினைகள் போன்றவற்றை மார்க்சியக் கண்ணோட்டத்துடன் விவரித்துள்ளார் எஸ்.வி.ஆர்.
தலித்தியம்
தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தினாலும் அது சந்திக்கும் எதிர்ப்புகள் அதிகம்.
கி.பி.12 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே தமிழகத்தில் சாதியப் படிநிலையில் கீழிருக்கும்
சாதிகள் சாதிய மேம்பாட்டுப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளன. சாதி
ஒழிப்பே தலித்திய அரசியலின் மையம் என்னும் நோக்குடன் அவை சாதி ஒழிப்பு அரசியலில்
தீவிரங்காட்டின. தலித் விடுதலை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சமூக விடுதலை,
சமத்துவமான சமூக அமைப்பு, ஒழுக்கம், அறிவுவிருத்தி என்பதுடன் சாதி ஒழிப்பின்
அவசியத்தை வலியுறுத்தி ‘இந்து’ என்ற அடையாளத்தை அயோத்திதாசரும் அம்பேத்கரும்
மறுத்தார்கள்.
வரலாற்றுரீதியில் சாதி ஒழிப்புக் காகப் போராடிய பௌத்தம் போன்ற சக்திகள்
அழிக்கப்பட்டு, இந்தியாவை விட்டே துரத்தப்பட்டது, சாதி ஒழிப்புக்காகக் குரல்
கொடுத்த இராமலிங்க சுவாமிகள், நாராயண குரு போன்றோர் எரிக்கப்படல், புலே இயக்கம்
வீழ்ச்சி, அம்பேத்கருக்கு எதிராக காந்தி அரிசன சேவா சங்கம் தோன்றல் முதலான பல
தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார் ராஜ்கவுதமன்.
பௌத்த - சித்தர் மரபை ஏற்ற அயோத்திதாசர், சாருவாகம் என்ற லோகாயத மரபினை ஏற்ற
பெரியார், அம்பேத்கர் மூவரும் தத்தம் நோக்கு நிலையிலிருந்து பிராமணியத்தை (இந்து
மதம் + சாதி) எதிர்த்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் தரவுகள் அடங்கிய நூலாக இது
விளங்குகிறது.
வைதீகம்,
அவைதீகம் என இந்தியத் தத்துவங்களை நாம் இரண்டாக வகைப்படுத்தலாம். பண்டைய இந்தியாவில்
உருவான தத்துவ மொழியிலான சிந்தனைகளைப் பக்தி மரபுகள் மறுதலித்தன. கி.பி.1 முதல்
17,18 நூற்றாண்டுவரை கருத்தியல் களம் சார்ந்து பக்தி இயக்கம் உருவாவதற்கு இம்மரபுகள்
காரணமாக இருந்தன. பக்தி தென்னாட்டில்தான் முதன்முதலில் தோன்றியது என்பதை பவிஷ்ய
புராணம், பிரும்மாண்ட புராணம் முதலிய சமஸ்கிருத நூல்கள் சுட்டுகின்றன. சைவ, வைணவ
பக்தி மரபுகள் சமண பௌத்தத்தைப் பின்னுக்குத் தள்ளி முன்வந்தன. தாய்த் தெய்வ வழிபாடு,
சமண- பௌத்தத்தின் முக்கிய அடிப்படைக் கோட்பாடான கருணை என்னும் கருத்தாக்கம்,
வினைக் கோட்பாடு, மிகப் பழமையான பிராமண எதிர்ப்புத் தத்துவமான ‘சாருவாகம்’,
சிந்துவெளி நாகரிகமான ‘சிராமண மரபு’, வட இந்திய பக்திக் கதை மரபு, வேத- வேதாந்த
எதிர்ப்பு போன்றவற்றை ந.முத்துமோகன் தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலில்
பட்டியலிட்டுள்ளார்.
சமயங்களின் அரசியல்
தமிழக
வரலாற்றில் நிறுவனமயமாக்கப்பட்ட முதல் இயக்கம் பக்தி இயக்கம். இந்து மத இயக்கங்களின்
தலைமை துறவிகளிடமும் நகரத்தை மையமாகக் கொண்ட பெரு வணிகர்கள் இம்மதங்களின்
புரவலர்களாகவும் பழங் காலத்தில் சமண-பௌத்தத் துறவிகள் வாழ்விடங்களுக்குப் புறம்பான
இடங்களில் பள்ளிகள், பாழிகள் அமைத்து இருந்ததைக் காணலாம். சைவம் என்னும் நெறி ஒரு
சித்தாந்தமாக காஷ்மீரத்தில் ஸ்ரீகண்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பண்பாட்டுத்
தளத்தின் ஆணாதிக்க உணர்வுடைய துறவு நெறி, பெண்களின் உணர்வுகள் குடும்ப அமைப்பு என
முன்னிறுத்திப் பக்தி இலக்கியம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. கோயில் பண்பாட்டு
வளர்ச்சியின் மற்றொரு நிகழ்வு கருவறை எனும் வெளி. தமிழகத்தில் கி.பி. 7ஆம்
நூற்றாண்டில் உருவான ‘அரசு’ என்னும் சொல்லிற்குப் பொருத்தமான ஒற்றை அரசுகள்
தோன்றின. தமிழகத்தின் வடக்குப் பகுதியில் பல்லவர்களும் தென்பகுதியில்
பாண்டியர்களும் முறையே கற்கட்டுமானக் கோயில்-குடவறைக் கோயில்களை உருவாக்கினர்.
இதில் குடைவரைக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்படாதது. வடமொழியில் ‘மூல பரிஷத்’ என
அழைக்கப்பட்ட கிராமம், மங்கலம், பிரம்மதேசம், பார்ப்பனக் குடியிருப்பு நிர்வாகம்
முதலானவை உருவாகின. அரசு உருவாக்கத்திற்குத் துணைநின்ற சைவ-வைணவ நெறிகள் கி.பி.7ஆம்
நூற்றாண்டுக்கு முன் சமண- பௌத்த மதங்களுக்கு எதிரான தாக்கு தலைத் தொடங்கின.
இத்தகைய தகவல்கள் அடங்கிய நூல் தொ.பரமசிவனின் சமயங்களின் அரசியல்.
ஒரு
குறிப்பிட்ட கால அரசியலையும் சுரண்டலையும் வெளிப்படுத்தி நிற்கும் நாட்டார்
வழக்காறுகள் பண்டைச் சமூகத்தின் எச்சங்களைச் சுமந்துகொண்டிருக்கும் ஃபாசில் அல்ல
அது உயிர்த்துடிப்புள்ளது, புதிது புதிதாகத் தோன்றும் தன்மையது. இன்று இது போன்று
புதிதாக உருவாக்கி அவற்றின் வாயிலாக அரசியல் உணர்வை ஊட்டும் போக்கு நடந்து வருகிறது.
பாரம்பரிய நாட்டார் கதைப் பாடலைத் தழுவி யட்சகானம் என்னும் நாடகத்தை உருவாக்கி
எழுத்தறிவின் முக்கியத்துவம், எழுத்தறிவற்ற மக்களிடம் உணர்த்தப்பட்டுள்ளது என்பதை
விவரிக்கும்
ஆ. சிவசுப்பிரமணியன், நாட்டார் வழக்காறுகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதில் இரு
போக்குகள் நிலவுகின்றன என்கிறார்.
குறுகிய உணர்வு, இன உணர்வு ஆகியவற்றால் ஆதிக்க அரசியலை ஹிட்லர், முசோலினி
போன்றோர் நிறுவினர். ஆரிய இனத் தூய்மைவாதத்தைப் பரப்பவும் மேலாண்மையை
வலியுறுத்தவும் நாஜிகள் இவ்வழக்காறுகளைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
கங்கு வெளியீடு
வெளியீட்டாளர்:
சிவ. செந்தில்நாதன்
1, இந்தியன் வங்கி காலனி
வள்ளலார் தெரு,
பத்மநாபா நகர்
சூளைமேடு, சென்னை- 94
செல்: 93828 53646 |
அடித்தள மக்களிடம் ஆழமாக வேறூன்றியுள்ள நாட்டார் வழக்காற்றுக் கூறுகளைப்
பண்பாட்டு அடையாளத்தைச் சிதைக்கும் வழிமுறைகளில் ஒன்றாக மேட்டிமையோர் காண்கின்றனர்.
அடித்தள மக்களாக இருந்து ஆதிக்க சாதியினரை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த
மதுரைவீரன், காத்தவராயன், ஒண்டி வீரன், சின்னத்தம்பி முதலானோர் மாண்டு தெய்வங்களாக
வழிபடப்படுகின்றனர். நாட்டார் தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடுதல் முக்கியமானது. ஆனால்
வள்ளலார், மறைமலை அடிகள், ஆறுமுக நாவலர் போன்றோர் இதற்கு எதிர்க்குரல்
தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆர்.எஸ். எஸ்.சின் ஓர் அங்கமான விஷ்வ இந்து பரிஷத்,
‘இந்துக்கள்’ என்ற பொது அடையாளத்துக்குள் அனைவரையும் கொண்டுவர முயல்வதும் ஒருவகை
அரசியல்தான்.
|