Google   www kalachuvadu.com

மதிப்புரை

வாழ்வின் கோலங்கள்

பாவண்ணன்

சிங்கப்பூரில் வாழும் பெண் எழுத்தாளர்களின் இருபது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பட்டம்பெற்று சிங்கப்பூரில் குடியேறியவர்கள், சிங்கப்பூரையே தாயகமாகக் கொண்டவர்கள் என இப்படைப்பாளிகளை இரு பிரிவினராகக் காணலாம்.

வேறொரு மனவெளி

சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்
பாலு மணிமறன்

பக். : 240 விலை: ரூ. 150
முதற்பதிப்பு: டிசம்பர் 2007
வெளியீடு
தங்கமீன் பதிப்பகம்
சி-54, முதல் தளம். அண்ணா நகர் பிளாசா,
அண்ணா நகர்,
சென்னை-40.

இத்தொகுப்பில் சூரிய ரத்னாவின் முகமூடி சிறுகதையையும் ரம்யா நாகேஸ்வரனின் முகவரிப் புத்தகம் சிறுகதையையும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி உரையாடுவதையும் பழகுவதையும் பண்பாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருத்தியின் பார்வையில் சிறுகதை விரிகிறது. வகுப்பு இல்லாததால் தன் தோழியோடு திரைப்படத்துக்குச் செல்வதாகத் தாயிடம் சொல்லிவிட்டுப் புறப்படும் மாணவி, அதே திரையரங்கில் முன் வரிசையில் தன் தந்தை வேறொரு இளம் பெண்ணோடு நெருக்கமான நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள். இந்த விஷயம் தனக்கு ஏற்கனவே தெரிந்ததுதானென்றும் ஒரு போதும் தந்தையிடம் இதைப் பற்றிப் பேசி முறையிட்டுப் பிரச்சினையைப் பெரிதாக்கிவிடக் கூடாது என்றும் சொல்லிவிட்டுக் கண்கலங்கும் தாயின் சொற்கள் அவளை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. மகளும் கணவனும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்துத் தன் காதலனை ரகசியமாகத் தொலைபேசியில் அழைத்துத் தம் உறவை யார் கண்ணும்பட்டுவிடாமல் கவனமுடன் பேண வேண்டும் என எச்சரிக்கிற உரையாடல் வாசகனின் அதிர்ச்சியை இன்னும் பல மடங்காக மாற்றுகிறது. ஒளிவுமறைவு இன்றிப் பேசவும் பழகவும் மகளுக்குப் பயிற்றுவிக்கும் தாயும் தந்தையும் தனித்தனி மறைவு வாழ்க்கை வாழ்கின்றனர். இச்சையின் வலிமையையும் மானுடர்களின் இயலாமையையும் முன்வைக்கும் இந்த முரண் இச்சிறுகதைக்கு அழகு சேர்க்கிறது.

பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் முகவரிப் புத்தகத்தில் உள்ள எல்லா முகவரிகளையும் புதிய புத்தகத்தில் மாற்றி எழுத உட்காரும் ஒரு பெரியவரின் சித்திரத்தைக் காட்டுகிறது முகவரிப் புத்தகம் சிறுகதை. சுவடியில் உள்ள பெயர்கள் பெரியவருடைய நெஞ்சில் பல முகங்களையும் அவர்களோடு தொடர்புள்ள பல நிகழ்ச்சிகளையும் மலரவைக்கின்றன. மரணம் அழைத்துச் சென்றுவிட்டதால் சில முகவரிகள் தேவைப்படாமல் போகின்றன. நெருக்கமும் பழக்கமும் குறைந்து அருக மேலும் சில முகவரிகளும் தேவைப்படாமல் போகின்றன. இறுதியில் புதிய புத்தகத்தில் ஒரு சில முகவரிகள் மட்டுமே இடம்பெறுகின்றன. வாசிக்கும் போக்கில் நம் மனம் வாழ்க்கையின் நிரந்தரமின்மையை ஒரு கணம் உணர்ந்து மௌனமாகிறது. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுக் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறது வாழ்க்கை.

பிதாமகன், பொழப்பு ஆகிய இரண்டு சிறுகதைகளும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வாய்ப்புள்ள சிறுகதைகள். பிதாமகன் சிறுகதையில் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்ட தந்தை எதிர்பாராதவிதமாக மரணடைந்துவிடும் சம்பவமும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. மரணம் தர வேண்டிய ஆழ்ந்த துக்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, அந்த நடவடிக்கைகள் மனிதர்கள் தத்தம் ஆதங்கங்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக மாறிவிடும் அபத்தத்தைச் சித்தரிக்கின்றது. இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வந்த கணம்முதல் மரணத்தைத் தழுவுவதுவரை ஒருமுறைகூடத் தன் பெயரைச் சொல்லி அவர் அழைத்ததேயில்லை என்று சொல்லும் தாயாரின் வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதல் மனைவியின் பெயரைச் சொல்லி இரண்டாம் மனைவியை அழைக்க விரும்பிய அவர் விருப்பத்தையும் அதைச் சகித்துக்கொள்ள இயலாமல் ஒருநாள் தடுத்தபிறகு பெயர்சொல்லி அழைப்பதே இல்லை என்று வெளிப்படும் மனக்குமுறல் முக்கியமான ஒரு பதிவு. இத்திசையில் சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனக் குடும்பம் மற்றும் சமூக உறுப்பினர்களின் குரல்களையும் ஒருசேர தொகுத்தபடி நகர வேண்டிய சிறுகதை, மரணச் சடங்குகளை வேகவேகமாகச் செய்வதில் ஈடுபாடின்றி அவர்கள் காட்டும் அவசரத்தைப் படம்பிடிக்கும் திசையில் இறங்கிவிடுகிறது.

பொழப்பு சிறுகதையில் ஒரு வைர வியாபாரியின் வீட்டில் பணிப்பெண்களாகக் குடியேறும் இரண்டு பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் குரலாகவே கதை ஒலிப்பதால் இன்னொரு பெண்ணின் சித்திரத்தை அவள் வழியாகவே நாம் அறிய வேண்டியிருக்கிறது. அக்குடும்பத்தலைவனைத் தன் ஆசை வலையில் விழவைத்துத் தன் தங்கும் இடத்தை உறுதிசெய்து கொள்ள விழையும் பெண் சில நாட்களில் பழிசுமத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறாள். ஓயாமல் உழைப்பவள் என்றாலும் எந்தப் புகாரும் இல்லையென்றாலும் குடும்ப உண்மையை அறிந்துகொண்டவள் என்கிற ஒரே காரணத்துக்காகவே மற்றொருத்தியும் வெளியேற்றப்படுகிறாள். வாழ்வின் அபத்தத்தை முன்வைக்க விழையும் இச் சிறுகதை கச்சிதமின்மையின் காரணமாகச் சற்றே சிதைந்த கோலத்தை அடைந்து விடுகிறது. மற்ற சிறுகதைகள் பார்வையின் காரணமாகவும் கதையமைப்பின் காரணமாகவும் மனத்தில் பதிய மறுக்கின்றன.

தொகுப்பாசிரியரான பாலு மணி மாறன், “இந்தத் தொகுப்பின் கதைகள் தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிங்கப்பூரில் இருக்கிற அத்தனை பெண் எழுத்தாளர்களையும் அடையாளப்படுத்துகிற, ஆவணப்படுத்துகிற ஒரு தொகுப்பாகத்தான் இது செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லும் கூற்று (பக்கம்-227) முக்கியமான ஒன்று. இந்த அளவுகோல் இத்தொகுப்பை இருவிதங்களில் பாதித் திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு புறம் மிகச்சிறந்த தொகுப்பாக இது மலர முடியாமல் போவதற்கான தடையாக இந்தப் பார்வையே அமைந்துவிட்டது. இன்னொருபுறம், “சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் தொகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டிருக்கும் முனைவர் எம்.எஸ்.லஷ்மியின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் மிகச்சிறந்த ஆவணமாகவும் மலர முடியாத குறை நேரவும் வழிவகுத்துவிட்டன.

e-mail: paavannan@hotmail.com

உள்ளடக்கம்