|
நான்காண்டுகள் காலகட்டத்தில் வெளிவரும் அலறியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.
முன்னர் வெளிவந்துள்ள ‘பூமிக்கடியில் வானம்’, ‘பறவை போல சிறகடிக்கும் கடல்’
தொகுப்புகளுடன் சேர்த்துப் படிக்கும் போது, அலறியின் கவிதையமைப்பிலும்
பார்வையிலும் மொழிநடையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துவருவதை, கவிதையமைப்பில்
தெளிவாகவும் பார்வை வெளிப்பாட்டில் நுட்பமாகவும், காண முடியும்.
|
எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் (கவிதைகள்)
அலறி
 பக். : 52 விலை: ரூ. 130 (இலங்கை)
முதற்பதிப்பு: பிப்ரவரி 2008
வெளியீடு:
புதுப்புனைவு இலக்கிய வட்டம்,
339, மக்காமடி வீதி,
மருதமுனை - 32314,
இலங்கை. |
முதல் தொகுப்பிலுள்ள கவிதைகள் நெகிழ்ச்சியான அமைப்பினைக் கொண்டவை. இரண்டாவது
தொகுப்பிலுள்ளவை செறிவான அமைப்பும் சிக்கனமான வார்த்தைகளும் கூடிவந்தவை.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் இரண்டாவது தொகுப்பிலுள்ளவை போன்ற அமைப்பினைக்
கொண்டிருப்பினும், அலறியின் பார்வைக் கோணத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்தையும்
கவனமாக வாசிப்பில் நாம் புரிந்துகொள்ள முடியும்.
அலறியின் முதலிரு தொகுப்புகளிலும், அரச பயங்கரவாதத்தினாலும் சகோதர இன
மோதல்களாலும் நாளும் அச்சமூட்டும் சூழலில் அமைதியிழந்து வாழும் பிரதேசத்தின்
மனக்குரலாய் ஒலிக்கும் சமூகப் பிரக்ஞையுடன் கூடிய கவிதைகளே எண்ணிக்கையில் அதிகம்.
இத்தொகுப்பில் அத்தகைய கவிதைகள் அபூர்வமே. ‘யுத்தக் குறிப்புகள்-மிமிமி’ என்னும்
தலைப்பிலான - யுத்தம் குறித்த பொதுவான - கவிதை மற்றும் எஸ். போஸ் நினைவாக எழுதிய
‘கொலைகள்’ குறுங்கவிதை தவிர்த்துப் பெரும்பான்மையும் இயற்கைச் சூழல்மீதான ஈர்ப்பின்
பரவசத்தில் வெளிப்படும் அகம் சார்ந்த கவிதைகளே.
அலறிக்கு, “பறவைகள் கலவரப்படாத பறத்தலும், மனிதர்கள் அஞ்சாத மரணமும் நிகழும் சாதாரண
நிலை தேவை” என்று ‘பறவைபோல சிறகடிக்கும் குரல்’ தொகுப்பின் முன்னுரையில் கருணாகரன்
குறிப்பிட்டிருந்தார். முந்தைய தொகுப்பிலுள்ள கவிதைகளை விடவும் இந்தத்
தொகுப்பிலுள்ளவை அத்தகையதொரு சூழலில் - மனத்தளவிலான சூழலில் -
வெளிப்பட்டிருக்கின்றன எனலாம்.
இத்தொகுப்பிலுள்ள குறுங்கவிதைகள் அலறியின் இரண்டாவது தொகுப்பிலுள்ள
குறுங்கவிதைகளின் தொடர்ச்சியாகவே வெளிப்பட்டுள்ளன. ‘இருக்கலாம்’, ‘சுகந்தம்’
போன்ற குறுங்க விதைகளின் சாராம்சம் அல்லது கருத்துருவங்கள் ஏற்கெனவே தமிழில்
சொல்லப்பட்டவைதான். வடிவ அமைதியும் மொழியுமே வேறானவையாகத் தோற்றம் கொள்கின்றன.
அதே சமயம், தமிழகத்தில் எழுதிக் குவிக்கப்படும் ஹைகூ வகைமையிலான துணுக்குகளை விடவும்
கவித்துவம் நிரம்பியவை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
குறுங்கவிதைகளைப் பொறுத்தவரையில், ‘காற்றின் திணறல்’ என்னும் தலைப்பிலானதைக்
குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது.
புல்லாய் குழல் இசையில்
நதி உறங்க
மீன்கள் துள்ள
பூக்கள் கண்ணயர
காற்று மட்டும்
மூச்சுத் திணறி வெளியேறுகிறது (பக். 09)
என்னும் அந்தக் கவிதை பல்வேறு புரிதல்களுக்கு வாசகனை இட்டுச் செல்லும் வகையில்
பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
‘பூ(ம்) பறவை 01’, ‘பூ(ம்) பறவை 02’, பூக்களின் அகாலம்’, ‘தனிமைத் துணை’,
‘புத்தகங்களின் மூன்று வாசிப்பு’, ‘பறவைகளை விட’, ‘அது அது’, ‘யாருமில்லா இடம்’,
‘உன்னில்’ போன்ற கவிதைகளையே அலறியின் கவிதை மனம் தொடர்ந்து தன்னைப் புதுப்
பித்துக்கொள்ளும் எத்தனத்தின் கலை வெளிப்பாடுகளாகச் சொல்லத் தோன்றுகிறது. மேலே
குறிப்பிட்டவற்றுள், ‘அது அது’ ஒரு வித்தியாசமான கவிதை. தனது வீட்டை விஸ்தரிக்கும்
யோசனையிலிருப்பவனுக்கு ஒரு குழப்பம். ஏதேனும் ஓரறையை விரிவாக்கினால் இன்னொரு அறை
குறுகிவிடும். அவ்வாறு நேராமல் வீட்டை விஸ்தரிப்பது எப்படி? பின்வரும் திட்டத்தில்
அதைச் சாத்தியமாக்குகிறான்:
உள்ளது உள்ளபடி இருக்க
அறையொன்றை தூக்கி
வெளியில் வைத்தான்
தானாய் அகண்டது வீடு (பக். 38)
ஒரு லட்சியத்தை அல்லது விருப்பத்தை அடையும் முயற்சியில் ஒருவன் சிறிய இழப்புகளைச்
சந்தித்தேயாக வேண்டும். இது தவிர்க்க முடியாதது என்பது யாவரும் அறிந்தது தான். ஆனால்
இந்தக் கருத்துருவம் ஓரனுபவத்தின் சாராம்சமாக வாசக மனத்தில் பதியவைக்கப்படுவதனாலேயே
இது கவிதையாகிறது.
என்றபோதிலும், அலறியின் இரண்டாவது தொகுப்பிலுள்ள ‘ஒருவன் கொல்லப்படும்போது’
என்னும் தலைப்பிலான கவிதையளவில் இந்தத் தொகுப்பில் எதனையும் என்னால் குறிப்பிட்டுச்
சொல்லத் தோன்றவில்லை. இதன் காரணம், மனிதனின் துக்கத்தைக் கலைத்துவமாகச் சொல்வதே
மேலான கவிதை - கலை என்ற என் இலக்கியப் பார்வை சார்ந்ததாகவும் இருக்கலாம்.
முதல் தொகுப்பிலிருந்து வெகுதூரம் முன்னகர்ந்த கவிதைகளைக் கொண்டவை அலறியின்
இரண்டாவது தொகுப்பு என்று சொன்னால், அதிலிருந்தும் சற்றே முன்னகரும் வித்தியாசமான
கவிதைகளடங்கியது இந்தத் தொகுப்பு எனலாம். பாம்பு சட்டையுரிப்பது போல, காலந்தோறும்
தன்னைப் புதுப்பித்துக்கொள்பவனே கலைஞன். அவ்வகையில், குறுகிய காலத்துக்குள்ளாகவே
மொழியிலும் பார்வையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு
வரும் அலறியிடம் இன்னும் மேலான கவிதைகளை எதிர்பார்க்கலாம். |