|
சுகந்தி பிப்ரவரி பனிரெண்டாம் தேதி காலையில் உறக்கத்திலேயே இறந்துவிட்டாள் என்பது
செய்தி. நாற்பத்திரெண்டு வயதுதான் சுகந்திக்கு. இறக்கும் வயதல்ல. இருந்தும் மனப்
பிறழ்வுக்காக அவள் தொடர்ந்து உட்கொண்ட மருந்துகள் அவள் உயிரைக் குடித்துவிட்டன
என்று கூறுகிறார்கள்.
சுகந்தியும் நானும் மிக நெருங்கிய தோழிகளாய் இருந்தோம். கடிதம் மூலம்தான்
தொடர்பு. நேரில் சந்தித்த பிறகு என்னை அம்மா என்று அழைக்கத் தொடங்கினாள். அவள்
கவிதைகளையும் அவள் பலதும் கிறுக்கிய நோட்டுப் புஸ்தகத்தையும் அவளுடன் ஒரு நாள்
முழுவதும் கழித்தபோது என்னிடம் காட்டியிருக்கிறாள். அவள் கணவர்
சுப்ரபாரதிமணியனுக்கு எங்கள் நட்பு பிடித்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஒரே
ஒருமுறை எனக்கு மிகவும் வருத்தத்துடன் எழுதியிருந்தார். மும்பாயிலிருந்துகொண்டு
சுகந்தியை உசுப்பிவிட வேண்டாமென்றும் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதென்றும்
எழுதியிருந்தார். ஒருவர் வாழ்க்கையில் புக எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று
அவளுக்கு எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அஞ்சலட்டையில் தன்னைக் காப்பாற்றும் படி
மன்றாடியிருந்தாள். நண்பர்கள் கோபிகிருஷ்ணன், அமரந்தா மற்றும் லதா ராமகிருஷ்ணன்
இவர்கள் மூலமாக அவளைத் தேடத் துவங்கினேன். கீழ்ப்பாக்கத்தில், மனநல மருத்துவமனையில்
அவளைக் கண்டுபிடித்தோம். மும்பாயிலிருந்து நான் கிளம்பிவந்தேன். கஷ்டப்பட்டு அவளைக்
காண அனுமதி பெற்றேன். என்னை அணைத்துக்கொண்டு “அம்மாஆஆஆ” என்று ஓலமிட்டபடி “என்னை
இங்கேயிருந்து விடுவியுங்கள்” என்று அவள் கதறியது இன்னும் என் காதில் ஒலித்தவண்ணம்
இருக்கிறது.
தன் வாழ்க்கை பற்றி பெரும் அதிர்ச்சிதரும் தகவல்களை அவள் என்னிடம்
கூறியிருக்கிறாள். அவை உண்மை என்று நிரூபிக்கத் தன்னிடம் சாட்சிகள் உண்டு என்பாள்.
அவள் கூறிய அத்தனை திடுக்கிடும் தகவல்களும் மனப்பிறழ்வால் ஏற்பட்ட அதீதக் கற்பனைகள்
என்று அவள் கணவர் கூறுகிறார். இருக்கலாம். அவள் அன்னை கணவனைவிட்டு இன்னொரு வருடன்
வாழ்ந்தவர். இதனாலேயே பாட்டியால் மிகவும் வன்முறை கலந்த கண்டிப்புடன்
வளர்க்கப்பட்டவள். அதன் பிறகு வன்முறை அவள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிப்போயிற்று.
அவள் வீட்டில் ஒரு தூண் உண்டாம். அதில் சாய்ந்துகொண்டு படிப்பாளாம். அந்தத்
தூண்தான் அவளுக்கு உற்ற தோழியென்றும் தெருவில் போகும்போது காணும் மரங்களும்
அவற்றின் நிழல்களும்தான் தன் மற்ற தோழிகள் என்றும் ஒருமுறை எனக்கு எழுதியிருந்தாள்.
அவள் ஒரு நல்ல மனைவியாகவோ ஒரு நல்ல தாயாகவோ இருந்தாளா என்று எனக்குத் தெரியாது.
அவள் வதைபட்ட பெண். கவிதை அவளுக்கு வடிகாலாக இருந்திருக்கலாம். சொற்களைப்
பற்றிக்கொண்டு கரையேற அவள் முயன்றிருக்கலாம்.
ஓர் இரவு என்னுடன் தங்கியபோது என்னை இறுக அணைத்துக்கொண்டு படுத்தாள். தனக்குத்
தூக்கமே வருவதில்லை என்றாள். உறக்கமே வராமல் தவித்தவள் அவள். உறக்கத்தில்
இறந்துவிட்டாள். இறப்பதற்காகவே உறங்கினாளோ என்னவோ, யாருக்குத் தெரியும்? |