|
டெல்லியில் இருந்தபோது தி. ஜானகிராமன் என்னிடம் மிகவும் சிலாகித்துப் பேசிய
எழுத்தாளர் கிருத்திகா. தன் படைப்புலகம் பற்றி மிகவும் தெளிவாக இருந்தவர். அவரை நான்
படிக்க முற்பட்டபோது ஓர் ஆச்சரியம் கலந்த உணர்வு ஏற்பட்டது. அரசியல் பற்றியும் நாடு
பற்றியும் இந்தக் கட்டமைப்பில் உருவாகும் உறவுகள் பற்றியும் வித்தியாசமான நடையில்
அங்கதம், நகைச் சுவை, மனோதத்துவம் இவை கலந்து எழுதிய இலக்கியவாதி அவர்.
பத்தினி என்பவளை மனோதத்துவரீதியில் அவர் தன் மனதிலே ஒரு மறு என்ற நாடகத்
தொகுப்பில் பார்க்கிறார். ஒரு பத்தினி தன் பத்தினித்தன்மையைத் தனக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது, அதனால் இயற்கையை மாற்ற
முயலும்போது அவள் அடைவது தோல்விதான் என்ற நோக்கில் நாடகம் எழுதினார்.
காப்பியங்களிலிருந்து அவர் இதற்காகத் தேர்ந்தெடுத்த பத்தினிகள் சாவித்திரியும்
கண்ணகியும். சாவித்திரி தன் பத்தினி எனும் சாதுரியத்தால் விதியை மாற்ற முயல்கிறாள்.
கணவன் உயிர் காப்பாற்றப்பட்டுவிடுகிறது ஆனால் அவளுக்கு நன்றிக்கடன் பட்டதால் தன்
சுயம் பறிபோனது போல் அவன் உணர்கிறான். கடைசியில் யமனை அழைத்து தலைவிதியின்படி தான்
நடப்பதாகவும் கணவன் உயிரைப் பறிக்கும்படியும் கூறுகிறாள். அவர் தேர்ந்தெடுத்த
இன்னொரு பத்தினி கண்ணகி. கோவலன் மீண்டும் உயிர்பெற வேண்டுமென்று அவள் விரும்புவது
அவனைக் காதலித்ததால் அல்ல; தன் பத்தினித்தன்மையில் அவனைக் கட்டிப்போடத்தான் என்று
போகும் கதை. கடைசியில் கோவலன் தன் சுயத்தை இழப்பதைவிட சாவதே மேல் என்று திரும்பும்.
இரண்டு நாடகங்களிலும் ஆணின் அகந்தை முக்கியமான ஒன்றாக இருந்ததாக எனக்குப் பட்டது.
அது என் நோக்கு. கிருத்திகாவைப் பொறுத்தவரை இயற்கையின் நியதிகளை மீற நினைக்கும்
எவரும் விபரீதங்களையே சந்திக்க நேரும் என்ற நோக்கில் எழுதியிருக்கலாம். பண்பாட்டுத்
தளங்களையும் வேர்களையும் முற்றிலும் களைந்துவிட்டு ஒரு புது உலகத்தை உருவாக்க
முடியாது என்று அவர் தீவிரமாக நம்பினார்.
மகாபாரத அரசியலை ஆதாரமாக்கி எழுதிய அவரது தர்மக்ஷேத்ரே நாவலில் ஒரு முற்றும்
துறந்த ஞானி அரசியல் தலைவராகும்போதுதான் நாடு ஊழல், லஞ்சம் போன்ற
விஷயங்களிலிருந்து விடுபட முடியும் என்று ஒரு கற்பனை நாட்டை உருவாக்கிக் கூறினார்.
மிகவும் வித்தியாசமான காட்சிகளுடன் உருவாகிக்கொண்டு போகும் நாவல் அது. ஒரு
கட்டத்தில் திகம்பரசாமிகள் தெருவில் போராட்ட ஊர்வலம் போவார்கள். அவர்களைப்
பார்க்கக் கூட்டம் கூடும். “பார்ப்பதற்கு விசேஷமாக ஒன்றுமில்லை. பீமசேனனை யொத்த
நல்ல ஆஜானுபாகுவான மனிதர்கள். தலையில் மாத்திரம் அல்லாமல் எங்கும் ரோமம். வீசிவீசி
நடக்கும்போது அவர்களுடைய மகத்தான ஜனனேந்திரியங்கள் தொங்கத்தொங்க ஆடின...” என்று
வெகு இயல்பாக விவரித்துக்கொண்டு முன்போகும் நாவல். 1969இல் இப்படி அரசியலை ஒரு
காப்பியம் கலந்த கற்பனையாக உருவாக்கியவர்கள் வெகு சிலரே.
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் முடியும், 1971இல் எழுதப்பட்ட ‘புதிய கோணங்கி’,
கிருத்திகாவின் அரசியல் எதிர்காலம் பற்றிய கற்பனையின் முடிவு எனலாம். ஆன்மிகத்தில்
மிக உயர்ந்த நிலையை எட்டியவர்கள் மட்டுமே பல முரண்பாடுகளைக் கடந்து ஒரு நாட்டை
உண்டாக்க முடியும் என்ற முடிவு இந்த நாவலில் வந்துவிடும். இந்த நம்பிக்கையைக்
கிருத்திகா கடைசிவரை இழக்கவில்லை. காரணம் அவருடைய வாஸவேச்வரம் நாவலின் இரண்டாம்
பதிப்பில் மீண்டும் இத்தகைய நம்பிக்கையை வலியுறுத்துகிறார்:
“வாழ்க்கையையும் சடங்குகளையும் இணைக்க முடியாமல் போய்விட்டால் நம் இளைஞர்கள்
வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் சுயகௌரவத்தையும் தேடி எங்கேதான் போக முடியும்?
அழகியல்ரீதியான இவ்வியக்கத்தின் மூலம் புதியதோர் ஆன்மாவின் வளர்ச்சி, நமக்கான
புதியதோர் ஆளுமையின் அடையாளம் சாத்தியப்பட முடியும் ... மனித இருப்பின் நிஜமான
அர்த்தத்தை எட்டிப்பிடிக்கும் புனிதமான, மகிழ்ச்சிகரமான செயலில் மீண்டும் ஈடுபட
நம்மால் முடியும்.”
புதிய கோணங்கியை நமக்குக் காட்டிவிட்டுத் தன் தொண்ணூற்று மூன்றாம் வயதில்,
பிப்ரவரி 13ஆம் தேதி காலமானார் கிருத்திகா. மீள்பிரசுரம் செய்யப்பட வேண்டிய எழுத்து
அவருடையது. காலம் கடந்தபின் அதைச் செய்யாமல் உடன் செய்வோமானால் இலக்கியத்தின் ஒரு
கண்ணியை விடுபட்டுப்போகாமல் நாம் காப்பாற்றலாம். |