Google   www kalachuvadu.com

கடிதங்கள்

‘எல்லாம் முடிந்துவிட்டது’ தலையங்கம் பாராட்டுக்குரியது. தோல்வியைச் சந்திக்கத் துணிச்சலற்றவர்களே வன்முறையைக் கையிலெடுப்பார்கள். மக்கள் செல்வாக்கை இழந்துவரும் கட்சி சனநாயக நெறிமுறைகளைக் கைவிட்டு வன்முறையை நோக்கிப் பயணிக்கிறது. இவர்களிடம் எப்படி சனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். தலைவனைப் போலவே தொண்டனும் சுயநலமாக மாறுகிறான்.

இலங்கையில் மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம் பறிப்பு, இன அழித் தொழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை உலகம் வேடிக்கை பார்க்கிறது. ஐநாவும் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருப்பது வேதனை. நம்மூர் ஊடகச் செயல்பாட்டாளர்கள் லசந்தாவின் கட்டுரையை வாசித்த பிறகாவது தங்கள் மனசாட்சியின் குரலை நேர்மையாகப் பதிவுசெய்ய முன்வர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் அவலத்தை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறலைத் தி. மயூரனின் ‘கண்ணீர் தேசம்’ சிறுகதை சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

புத்தகச் சந்தையின் வளர்ச்சியும் அதிகரித்துவரும் புத்தக விற்பனையும் புத்தகங்கள் மனிதர்களை மாற்றும், மனிதர்கள் சமூகத்தை மாற்றுவார்கள் என்னும் நம்பிக்கையைத் தருகின்றன.

சா. ரு. மணிவில்லன்
சென்னை

‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்னும் தலைப்பில் கண பொருத்தமாக எழுதியிருக்கிறீர். இதையெல்லாம் எழுதும்போது ஆட்சியாளரின் கொடூரப் பார்வை தங்கள் இதழ்மேல் பாயும். நியாயத்தைத் தலைநிமிர்ந்து எழுதுங்கள். ‘நாலு வார்த்தை பேச விடு, எழுத விடு’ கட்டுரை மிகவும் சிறப்பு. இலங்கையில் நடக்கும் கொடுமைகளை மனித குலம் கண்டித்து நாளைக் கழித்துவிட்டது. ‘பிரசுரித்துப் பாழாய்ப் போனவர்கள்’ கட்டுரையைப் படிக்கும்போது உலகத்தில் எந்நாட்டிலும் இல்லாத கொடுமையை இலங்கை அரசு செய்துவருவது புரிந்தது. எத்தனை மாமனிதர்கள் மறைந்துள்ளனர். இதற்கு விடை எங்கே கிடைக்கப் போகிறது. ‘எகிப்துப் பயணக் கட்டுரை’ எகிப்தை நேரில் பார்ப்பது போல் இருந்தது. சிறுகதைகளும் சிறப்பாக இருந்தன.

இரா. சண்முகவேல்
கீழக்கலங்கல்

ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், ஐக்கிய நாடுகள் அமைப்பினர் போர்ப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்து மௌனமாக இருப்பது ஏனெனப் புரியவில்லை. இந்நிகழ்வுகள் தமிழினத்தை அழிக்க முடிவுகட்டி விட்டார் இலங்கை அதிபர் ராஜ பக்சே என்பதைக் காட்டுகின்றன. புனிதமான புத்த சமயம் சார்ந்தோர் செய்யும் செயல்கள் அவர்களது கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. ஓரினத்தை அழித்து ஓரினம் வாழ முடியுமா? அது நடக்காது. பத்திரிகையாளர் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் இலங்கைச் சூழலின் பயங்கர நிலையைச் சொல்கின்றன.

ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்

லசந்த விக்ரமதுங்கவின் எழுத்து துஷ்டர்களைத் தோலுரித்துக் காட்டியது. ‘கண்ணீர் தேசம்’ சிறுகதை அவலத்தின் சாட்சியைக் கண்முன் நிறுத்தியது. எகிப்துப் பயணக் கட்டுரை அறிந்து உணர்ந்து பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வரலாற்றுப் பெட்டகம். பி. ஏ. கிருஷ்ணனின் அரிய முயற்சியும் கடின உழைப்பும் மனநிறைவைத் தந்து கட்டுரைக்குப் பெருமை சேர்த்தன.

கா. இர. குப்புதாசு
செஞ்சி

விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் வேறுபடுத்திக் காட்டும் முயற்சியில் தமிழ்நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ஈழத் தமிழர்கள் “இந்தப் பொடியன்களை” (விடுதலைப் புலிகள்) விட்டால் எங்களுக்கு ஆரிருக்கா என்று கூறியது இன்றுவரை நீடித்துவருகிறது.

இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜனநாயகப் படுகொலை செய்யவும் தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தரக் குடிமக்க ளாக நடத்தவும் ஒருபோதும் தயங்கியதில்லை.

ஈழத்தில் போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த எத்தனை மண்டியிடல்கள்.

தமிழகச் சட்டமன்றத் தீர்மானம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு, முதல்வர் தலைமையில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தில்லிப் பயணம்.

இவை போதாதென்று இடை யிடையே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள், சாலை, இருப்புப் பாதை மறியல்கள், மனிதச் சங்கிலிகள், வேலை புறக்கணிப்புகள், தீக்குளிப்புகள்.

மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அந்தோணி, சிவசங்கர மேனன் அனைவருக்குமே ஒரே குறிக்கோள் ஈழத் தமிழர்களை ஒழித்துக்கட்டுவதுதான்.

ராஜபக்சேயிடம் மனுக் கொடுத்துக்கொண்டு அவன் ஊற்றுகிற நாய்க் கஞ்சியைக் குடித்துக் கொண்டு நாளையும் பொழுதையும் ஓட்டாமல், நம்முடைய அரசியல் பிழைப்பையும் நடத்தவிடாமல் கெடுக்கிறார்களே ஈழத் தமிழர்கள் என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் சிலவற்றுக்குக் கடுப்பாக உள்ளது.

ஈழப் பிரச்சினையை அவை ஊறுகாயாக மட்டுமே கருதுகின்றன; ஊறுகாயே சாப்பாடாக முடியுமா என்ற கேள்வி வேறு.

தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ் காந்தி கொலை ஒன்று போதும், வாய்ச்சவடால் அடித்துக்கொள்ள.

அடிமைகளாகவே வாழ்ந்து பழகியவர்களுக்குச் சுதந்திரம் என்பது கசப்பாகத்தான் தோன்றும்.

தெ. சுந்தரமகாலிங்கம்,
வத்திராயிருப்பு

கல்விப்புலம் சார்ந்த பெருமாள் முருகன் எழுதிய ‘பாடத்திட்ட நத்தை‘ கட்டுரை கூடுதல் கவனம் பெறத்தக்கது. தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ‘காலச்சுவடு’ அதைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறது. வயிற்றுப் பிழைப்பையும் இருண்ட கண்ணோட்டத்தையும் தம் இருகண்களாகக் கொண்ட ‘தமிழறிஞர்கள்’ (?) தமிழகக் கல்வித் துறையில் இருக்கும்வரை இது போன்ற ‘நகைச்சுவை’க் காட்சிகள் தொடரும்.

‘ஆபாசம்’ எது என்பதை உணராதவர்களும் மனித உறுப்புகளின் பயன்பாட்டை அறியாதவர்களுமல்லர் மாணவர்கள். இதைக் கற்றுக்கொடுத்துதான் அறிய வேண்டுமென்ற நிலையில் அவர்கள் இல்லை.

மிகவும் அருவருக்கத்தக்க சொற்களில் எழுதப்பட்டு, மாணவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் நூல்கள் எதுவும் இன்றைய பாடத்திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக மாணவர்களைத் தூங்கச்செய்யும் நூல்கள் நிறைய இருக்கின்றன. அதை எழுதிய பேராசிரியர்களும் அதிகம். நான் பழைய புத்தகக் கடைகளை மேயும் பழக்கமுள்ளவன். அங்கே கட்டுக்கட்டாகக் கல்லூரி மாணவர்களின் பாடப் புத்தகங்களே பெரிதும் குவிந்துகிடக்கின்றன. எல்லாமே நமது ‘இலக்கியப் பேராசிரியர்கள்’ எழுதிக்குவித்தவைதான். பாடம் தொடர்பாக அடிக்கோடிட்டது போக, ஒருசிலர் அதில் தங்கள் விமர்சனத்தையும் புத்தகங்களில் ஆங்காங்கே எழுதியிருப்பார்கள். அதில் குறும்பும் நகைச்சுவையும் மட்டுமல்ல உண்மையும் மிளிரும்.

அவர்களுக்கு ‘முலை’யோ ‘தனங்களோ’ தெரியாத விஷயங்களன்று. நத்தை முன்னகர்ந்து தமிழண்ணல் வரைக்கும் வந்துவிட்ட தாகப் பெருமாள்முருகன் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார். அது பின்னகர்ந்து ‘பிரதாப முதலியார் சரித்திர’ காலத்திற்குப் போகாமல் இருந்ததே என்பதற்காக நாம் எல்லோரும் ஆறுதல் அடையலாம்.

கே. எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

‘காலச்சுவடு’ என்ற தங்கள் இதழின் பெயர் கட்டுரைகள், தலையங்கங்கள், எதிர்வினைகள் போன்றவற்றில் ‘காலச்சுவடை’, ‘காலச்சுவடின்’, ‘காலச்சுவடுக்கு’ என்று தவறாகப் பயன்படுத்தப்படுவதை(ச்) சில இதழ்களாகவே பார்த்து வருகிறேன். ஓரிரு சமயங்களில் உடம்படுமெய் சேர்த்து(க்) ‘காலச்சுவடுக்கு’ என்றும் எழுதப்படுகிறது.

காடு, உதடு, சோறு, வயிறு போன்ற டு, று-வில் முடியும் நெடில் தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியின்போது காட்டின், உதட்டை, சோற்றுக்கு, வயிற்றின் என்றே வரும். தொல்காப்பியம் (411) கூறுவது இதுதான். 13 நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த நன்னூலாரும் இவ்வாறே சொன்னார். இதன்படி காலச்சுவடு என்ற சொல்லும் ‘காலச்சுவட்டை’, ‘காலச்சுவட்டில்’, ‘காலச்சுவட்டுக்கு’ என்றே வர வேண்டும்.

இதுபோல் இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும்போது பண்டிதத்தனம் என்று முகம் சுளிப்பதும் பழமைவாதம் என்று ஒதுக்குவதும் மேலோட்டமான போக்குகளாகும். எழுதப் படிக்கவே தெரியாதவர்கள்கூட நாட்டை, வூட்டுக்கு (வீட்டிற்கு), வயித்துப்பாடு (வயிற்றுப்பாடு) என்றே பேசுகிறார்கள். டு, று- வில் முடியும் குற்றியலுகரங்களின் வேற்றுமைப் புணர்ச்சி விதிகளின்படியே ‘ரோடு’ என்ற ஆங்கிலச் சொல்லும் ‘ரோட்டில்’, ‘ரோட்டுக்கு’ என்று தமிழ்ச் சொல் போலவே மக்களால் பயன்படுத்தப்படுகிறது. (தொ.ப.வின் பண்பாட்டு அசைவுகள்.)

சு. சரவண மணியன்
சேலம்

இந்திய ஜனநாயகத்தின் மீது போலியான மரியாதை வைத்துக்கொண்டு பதவியில் இருக்கும்வரை மக்கள் மனங்களில் சர்ச்சையின் நாயகன்களாகக் காலந்தள்ளுவது அரசியல் தலைவர்களுக்கு இன்று கைவந்த கலை. சுயநலமும் வன்மமும் ஜோடி சேர, அடித்தவரை லாபம் என்ற நிலைப்பாடே இவர்களது குண விசேஷம். கண்ணியமான கொள்கைகள் காணாமல் போய்விட்டன. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற முக்கியக் காரணம் பணபலம் மட்டுமல்ல, அதிகார வர்க்கத்திடம் கொண்ட பயமும்தான் எனத் தலையங்கம் கோடிட்டுக் காட்டியிருந்தது. மக்களின் அமோக ஆதரவு திமுகவுக்கு என்று அஞ்சா நெஞ்சன் மு.க. அழகிரி மார்தட்டிக்கொள்ளலாம். நடந்ததென்னவோ வாக்குகளை வழிப்பறி செய்தாற்போல ஒரு தேர்தல். அசம்பாவிதம் நிகழ்ந்ததை, நாணயமான, நேர்மையான நியாய நீதி நெறிகளுக்கு ஜனநாயகத்தில் இனி இடமில்லை ‘எல்லாம் முடிந்துவிட்டது’ எனத் திருமங்கலத்தை உதாரணம் காட்டி எழுதியிருந்தது நன்று. உத்தமமான எண்ணங்கள் மேலிருந்த ஆத்திரத்தை அரசியல் தில்லுமுல்லுகளாக மாற்றிவருவது அதிர்ச்சியளிக்கும் உண்மை. இலங்கைப் பிரச்சினையிலும் பொய்களைத் தயாரித்து வீசுகிற வில்லங்க ஆட்சி இருப்பது ஒரு உண்மைதான். சிங்கள வெறியர்கள் கயிறு திரிக்கிறபோதும் காலம் சிதைக்க முடியாத உண்மை ஈழத் தமிழகம் உருவாகக் கைகொடுக்குமென்பதைக் ‘காலச்சுவடு’ உறுதிப்படுத்தியிருந்தது.

சாமி
திருவண்ணாமலை

தமிழ் இலக்கணப்படி ‘மரம் + இல் = மரத்தில்’, ‘சுவடு + இல் = சுவட்டில்’ என்பவை சரி. இந்த விதி பொதுவான சொற்களுக்குப் பொருந்தும். ஆனால் ‘காலச்சுவடு’ என்பதைத் தனிப்பெயராகக் கருதி, அதன் வடிவம் மாறாதவாறு (சிதையாத வாறு) ‘காலச்சுவடில்’, ‘காலச் சுவடுக்கு’ என எடுத்தாள்கிறோம். இதை ‘உறழ்ச்சி’யாகக் கருதலாம். இந்த இதழில் கண்ணன் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பில் ‘அடிச் சுவட்டில்’ என உள்ளதைக் கவனிக்க.

இது போன்ற கேள்விகள் ‘காலச்சுவடை’ நோக்கி மட்டும் கேட்கப்படுவது உவகையளிக்கிறது.

- ஆசிரியர் குழு

பிழை திருத்தம்

இதழ் 110, மாயா ஏஞ்சலோ பற்றிய குறிப்பில் அவர் திரைக்கதை எழுதி இசையமைத்த படத்தின் பெயர் ஜியார்ஜியோ. கானாவில் நண்பரானவர் மால்கம் ஜ். கவிதை யின் தலைப்பு ‘இருந்தும் நான் எழுகிறேன்’ என இருந்திருக்க வேண்டும். அவை முறையே ஜியார்ஜிரோ, மால்கம் ஐ, இருந்தும் நான் எழுதுகிறேன் என்று பிரசுர மாகியிருந்தன. பிழைகளுக்கு வருந்துகிறோம்.

வாசகர்கள் கவனத்திற்கு

கவிஞர் சுகந்தி குறித்து எழுத்தாளர் அம்பை எழுதிய அஞ்சலிக் குறிப்பு இவ்விதழில் (பக்கம் - 71) இடம் பெற்றுள்ளது. சுகந்தியின் புகைப்படம் கிடைக்கப் பெறாததால் இக்குறிப்பு அவரது புகைப்படமின்றியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

- பொறுப்பாசிரியர்

உள்ளடக்கம்