இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் 1918இல் தோன்றிய சென்னைத் தொழிலாளர் சங்கம்.
இச்செய்தி இடம்பெறாத வரலாற்று நூல்கள் இருக்காது. ஆனால் இதற்குமேல் சென்னைத்
தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம், அதன் போராட்டங்கள் பற்றிய நம்பகமான வரலாறு
பலகாலம் இல்லாமலிருந்தது. அக்குறையைப் போக்கியது தே. வீரராகவனின் ‘சென்னைப்
பெருநகர(த்) தொழிற்சங்க வரலாறு’ (அலைகள் வெளியீட்டகம், 2003). இந்நூல் வீரராகவனின்
முனைவர் பட்ட ஆய்வேட்டின் தமிழ் வடிவம்.அக்காலத்து அரசாங்க ஆவணங்கள், அறிக்கைகள்,
காவல் துறைக் குறிப்புகள் மட்டுமல்லாமல் தேசபக்தன், நவசக்தி, ஜனசக்தி, நியூ இந்தியா,
ஹிந்து முதலான இதழ்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்திருந்தன. தொழிலாளர்
இயக்கத்துக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட ஈ.எல். அய்யரை ஆசிரியராகக்கொண்ட சுதர்மா
என்ற ஆங்கில இதழை இந்த ஆராய்ச்சியின் பொழுது வீரராகவன் கண்டெடுத்தார். இவற்றோடு
நில்லாமல் சென்னைத் தொழிலாளர் இயக்கத்தின் மூலவர் எனத்தக்க கோ. செல்வபதி
செட்டியார் முதல் ஸி.எஸ். சுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி, கே. முருகேசன், ஏ.எஸ்.கே.
ஐய்யங்கார், கஜபதி முதலான இயக்கத் தலைவர்களையும் நேரில் கண்டு தகவல்கள் திரட்டினார்.
பி. ஆர். கே. சர்மா, ஈ. எல். அய்யர் போன்ற தலைவர்களின் குடும்பங்களைச் சந்தித்துப்
பல ஆவணங்களைப் பெற்றார். இந்த ஆராய்ச்சிக்காகச் சென்னையிலுள்ள நூலகங்கள்
மட்டுமல்லாமல் புது தில்லியிலிருக்கும் நேரு நினைவு நூலகம், தேசிய ஆவணக்காப்பகம்,
பி.சி. ஜோஷி ஆவணக்காப்பகம் போன்றவற்றையும் வீரராகவன் பயன்கொண்டார்.
ஆதாரங்களை-அரைகுறையாகவோ முழுமையாகவோ-திரட்டுவதே ஆராய்ச்சி என்னும் பாமரத்தனமான
கருத்து தமிழுலகில் நிலவுகிறது. தரவுகளைத் திரட்டுவது மட்டுமல்ல, அவற்றை விரிவான
பின் புலத்தில், வரலாற்றியல் கோட்பாடுகளின் புரிதலோடு, ஒரு வாதத்தை முன்வைப்பதே
வரலாறாகும். மார்க்சிய வரலாற்று நெறியில் நன்கு பயற்சி பெற்றிருந்த வீரராகவன் அதுவரை
உலக அளவில் நடந்தேறியிருந்த தொழிலாளர் வரலாற்று ஆய்வுப் (labour history) பின்புலத்தில் தன் ஆய்வை அமைத்திருந்தார்.
சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம்
உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றுமுன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக
முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற்
சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்கால கட்டத்தில் தேசிய இயக்கத்தோடு
தொழிற்சங்கங்கள் கொண்ட ஊடாட்டத்தையும் பகுத்தாய்ந்தார் வீரராகவன். வீறார்ந்த
போராட்டங்கள் நடந்தபின் ஒரு பத்தாண்டு கால இடைவெளியும் விழுகிறது. உலகப்
பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்கள் மீண்டும்
தலையெடுக்கின்றன. இடதுசாரி சக்திகளும் தொழிற்சங்கங்களில் தலைமையேற்கத்
தொடங்குகின்றன. பெருநம்பிக்கையைத் தொடக்கத்தில் கொடுத்த முதல் காங்கிரஸ்
அமைச்சரவையின் தொழிலாளர் விரோத நிலைப்பாடுகள் ஏமாற்றம் தந்து, இரண்டாம் உலகப்
போர் வெடிக்கும் தருணத்தில் வீரராகவனின் நூல் முடிகிறது.
அடர்த்தியான செய்திகளோடு செறிவாக எழுதப்பட்ட இந்த ஆய்வை ஓர் இரங்கலுரையில்
சுருக்குதல் இயலாது. தமிழுலகத்தின் அளவுகோல்களின்படி ‘சென்னைப் பெருநகர(த்)
தொழிற்சங்க வரலாறு’ ஒரு பெரிய சாதனை என அடித்துச் சொல்லலாம். தே. வீரராகவன்
எழுதியிருக்கக்கூடிய ஆய்வுகளைக் கருதும்பொழுது அப்படிச் சொல்ல முடியாது.
வீரராகவன் மிகக் குறைவாக எழுதினார். 24 வயதில் எம். பில். பட்டத்திற்காக
இராஜாஜியின் ‘குலக் கல்வித் திட்ட’த்தைப் (1952-1954) பற்றி எழுதிய ஆய்வேடு மிகவும்
முதிர்ச்சியோடு எழுதப்பட்டதாகும். கல்வி பற்றிய இந்திய தேசியக் கருத்தாடல்கள்,
காங்கிரஸ் அமைப்பின் உட்கட்சி அரசியல், மொழிவாரி மாநிலப் பிரிவினை, திராவிட
இயக்கங்களின் செயல்பாடு, இராஜாஜியின் வாழ்க்கை-கருத்தியல் ஆகியவற்றின் பின்னணியில்
இராஜாஜியின் கல்வித் திட்டத்தை வீரராகவன் விமரிசனப்பூர்வமாக ஆராய்ந்திருக்கிறார்.
நூலாக்கம் பெற வேண்டிய ஆய்வு இது.
இதைத் தவிர வேறு இரண்டொரு ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே வீரராகவன்
வெளியிட்டிருக்கிறார். சென்னைத் தொழிலாளர் இயக்கம் பற்றி அவருடைய ஆய்வு நெறியாளரின்
பெயரில் Indo- British Review என்ற ஆய்விதழில் வெளிவந்த
கட்டுரையினையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
வீரராகவனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது காரல் மார்க்ஸ் நூலகத் தோழர் ச.சீ.
கண்ணன் வழியாக. 1984இல் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் முதல் முறையாக நுழைந்தபொழுது
ஆய்வுக்கூடத்தின் ஒரு மூலையில் வீரராகவன் அரசு ஆவணங்களுக்கிடையில் அமர்ந்திருந்தார்.
அது ஓர் உற்சாகமான காலகட்டம். காலனிய ஆவணங்களைப் படிப்பதில் ஏற்பட்ட கிளர்ச்சிக்குச்
சமமாக ஆய்வுக்கூடத்திற்கு வெளியே தேநீர் பருகியவாறு நடத்திய விவாதங்கள் இருக்கும்.
எழுபத்தைந்து வயதில் எம். பி. டி. ஆச்சார்யா பற்றி ஆராய்ந்துவந்த கம்யூனிஸ்ட்
கட்சியின் தொடக்க காலத் தலைவர் ஸி.எஸ். சுப்பிரமணியம் முதல் பல பேராசிரியர்களும்
மாணவர்களுமாக ஆவணக் காப்பகம் களைகட்டியிருக்கும். மாணவர்களில் முக்கியமான ஒரு பகுதி
சென்னை ஐ. ஐ. டியின் வாழ்வியல், சமூக அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள். அனைவரும் இரு
உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத் (1918-1939) தமிழகம் பற்றியே ஆராய்ந்துவந்தது
வியப்பாக இருந்தது. ஓர் இருபதாண்டுக் காலம் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும்
பணியாற்றிவிட்டு ஐ. ஐ. டியில் பேராசிரியராக அமர்ந்திருந்த அம்பிராஜன் இதன்
பின்னணியில் இருந்தார். அப்பொழுது பல மேலை ஆய்வாளர்களின் கவனம் இரு உலகப்
போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் குவிந்திருந்தது. அவர்களின் பார்வை
ஏகாதிபத்தியச் சார்பாக இருந்தது என்று கருதிய அம்பிராஜன் தம் துறை மாணவர்களைக்
கொண்டு ஒரு மாற்றை முன்வைக்க விழைந்தார்.
ஆய்வுக்கூடத்துக்கு வெளியே நடக்கும் தேநீர் விவாதங்களில் வீரராகவன்
கலந்துகொள்ளமாட்டார். ஆவணங்களையும் நூல்களையும் வாசித்துக் காட்டவும்
குறிப்பெடுக்கவும் அவர் உதவியாளரை அமர்த்தியிருந்தார். சம்பளம் கொடுத்து
அமர்த்தியிருந்த உதவியாளர் உடனிருக்கும்போது வெளியே வந்து விவாதிப்பது வீண் என்று
அவர் கருதியதில் நியாயமில்லாமலில்லை. வீரராகவனுக்குக் கண் பார்வை கிடையாது.
தமிழ்நாட்டில் பிஎச். டி. பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற மாணவர் வீரராகவன். இது
வெறும் தகவல் மட்டுமே. உடற்குறையை முன்னிட்ட சலுகைகளை அவர் கடுமையாக மறுத்தார். (உரிமைகளுக்கான
போராட்டங்களில் முன்நின்றது வேறு.) வீரராகவனின் செயல்பாடுகளை மதிப்பிடும்போது
எந்தச் சலுகையும் காட்ட வேண்டியதேயில்லை. எந்த அளவுகோலாலும் அவரைக் குறைத்து
மதிப்பிட முடியாது.
வீரராகவனின் வாசிப்பு மிக விரிவானது. தமிழகக் கல்லூரி, பல்கலைக்கழக வரலாற்றுப்
பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து படித்ததைவிட இவர் அதிகம் படித்தார் என்று சொல்வது
அவரது வாசிப்பைக் குறைத்துச் சொல்வதாகாது.
1958இல் கும்பகோணத்தில் ஒரு வடகலை வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் வீரராகவன்.
மிக நெருங்கிய உறவில் மணம் புரிந்துகொள்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும்
retinitis pigmentosa என்னும் பார்வை இழப்பு நோயின் அறிகுறிகள்
சிறுவயதில் தென்பட்டன. மருந்தில்லா நோய் இது. மெல்ல மெல்ல மங்கிய பார்வை, பள்ளி
இறுதி அளவில் முழுவதுமாகப் போய்விட்டது. நெய்வேலியில் இடை, மேல்நிலைப் பள்ளிக்
கல்வியைப் பெற்ற வீரராகவன் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் புகுமுகமும் இளங்கலையும்
(வரலாறு) படித்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பச்சையப்பன்
கல்லூரியில் எம்.பில். பட்டமும் பெற்றார். 1982-1987இல் ஐ. ஐ. டியில் முனைவர் பட்ட
ஆய்வு மேற்கொண்டார். 1988 முதல் அவர் ஆய்வுசெய்த துறையிலேயே ஆசிரியராகப்
பணியாற்றினார்.
கல்லூரியில் படிக்கும்பொழுது சி.பி.எம். கட்சித் தொடர்பு ஏற்பட்டது. கட்சியின்
அன்றைய, இன்றைய மூத்த தலைவர்களின் அன்புக்குரியவராகவும் வீரராகவன் இருந்தார்.
தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ராமமூர்த்தி முதல் பிரகாஷ் காரட்வரை இவருக்குத்
தொடர்பிருந்தது. மார்க்சியத் தத்துவ நூல்களை ஆழமாகவும் விரிவாகவும் அவர்
கற்றிருந்தார். பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றியல் கோட்பாடுகளும் எழுத்தாக்கங்களும்
மார்க்சியத்தின் வளமான பகுதிகளாகும். இவற்றை வீரராகவன் தளபாடமாகக் கற்றிருந்தார்.
இருப்பினும் தம் ஆய்வுக்குப் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் சீனத்
தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சிகளை ஆராய்ந்தவருமான ழான் செஸ்நோவையே
முன்மாதிரியாகக் கொண்டார். வீரராகவனிடம் ஸ்டாலினியம் ஆழக் குடிகொண்டிருந்தது.
எங்கள் இருவருக்குமான உரையாடல்கள் பெரிதும் விவாதங்களாகவே அமைந்தன.
திராவிட இயக்கம் பற்றிய இடதுசாரிகளின் எதிர்மறைக் கண்ணோட்டத்தையே வீரராகவனும்
கொண்டிருந்தார். சோவியத் ஒன்றிய உடைவு, மண்டல்- மஸ்ஜித் ஆகியவற்றின் விளைவாகக்
கம்யூனிஸ்ட் கட்சிகள் திராவிட இயக்கம் பற்றிய பார்வையைத் தந்திரோபாயமாக
மாற்றிக்கொண்டது. இவருக்கு உவப்பளிக்கவில்லை.
புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் - அங்கு சென்று நான் மேற்படிப்புப்
பெற வேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் வீரராகவனும் ஒருவர் - படித்தபொழுது,
அறிவுஜீவிகளை சி. பி. எம். கட்சி வாலாயமாகக் கவர்வது தமிழகத்திலிருந்து சென்ற
எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. (இந்த வட்டாரம் வீரராகவனுக்குப் பரிச்சயமானது.)
1964இல் கட்சி பிளவுண்டபொழுது தமிழகத்தின் இடதுசாரி அறிவாளர்களெல்லாம் சி. பி. ஐ.
பக்கம் சென்று விட்டனர். நா. வானமாமலை உருவாக்கிய நெல்லை ஆய்வுக் குழுவையொத்த ஒரு
அறிவாளர் குழு சி. பி. எம்முக்கு அமையவில்லை. திண்டுக்கல் லியோனி போன்றவர்களையே
ஈர்க்கக்கூடிய ஒரு வெகுசன முன்னணி அமைப்பாக நின்றுவிட்டது த.மு.ச.எ. காத்திரமான ஒரு
கட்சி அமைப்பு வீரராகவனை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்க முடியும். அதன்வழி
அவரும் முழு மலர்ச்சி பெற்றிருக்கலாம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும் வீரராகவன் பங்கு பற்றினார். சூழலியல் பற்றி
அவர் கட்சியிடம் வேறுபாடு கொண்டிருந்தார் எனவும், இதன் விளைவாகக் கட்சியிடமிருந்து
விலகல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஐ.ஐ.டியில் பயிலும் தொழில்நுட்ப மாணவர்கள்
பொதுவாகச் சமூக அறிவியல் துறை ஆசிரியர்களை அதிகம் மதிக்கமாட்டார்கள். வீரராகவன்
அவர்களின் நன்மதிப்பை எளிதில் பெற்றார். இவர் தொடர்பால் தம் வாழ்க்கைப் போக்கை
மாற்றிக்கொண்டவர்களும் உண்டு. பி.டெக். படித்து அயல்நாடு சென்று பொருளீட்டிய
மாணவர்கள் இவர்வழி ஏராளமான கல்வி நன்கொடை வழங்கினார்கள். சென்ற பத்துப் பதினைந்து
ஆண்டுகளில் இது ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
வீரராகவன் என்றதும் ச.சீ. கண்ணன் நினைவுக்கு வருவார். அவரோடு கொண்ட தொடர்பு
வீரராகவனின் வளர்ச்சிக்குத் தூணாக இருந்தது. காரல் மார்க்ஸ் நூலகத்தின் கணிசமான
பகுதி வீரராகவன் படிப்பதற்கென்றே வாங்கிச்சேர்க்கப்பட்டது. இத்தொகுப்பால்
பயன்பெற்றவன் என்ற முறையில் அதன் வளத்துக்கு நானே சாட்சி. வீரராகவனுக்கு
எல்லாவகையிலும் துணை நின்றவர் ச.சீ. கண்ணன். வீரராகவனின் ஆய்வேடுகளில் அவருடைய பங்கு
ஆணிவேர் போன்றது. தமிழகத் தொழிலாளர் இயக்க வரலாறு வீரராகவன் மூலம் முழுமையாக
எழுதப்பெறும் என்னும் பெருங்கனவை அவர் கொண்டிருந்தார். வீரராகவனின் ஆய்வேட்டை
1989ஆம் ஆண்டளவிலேயே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அவர் முயன்று முதல் மூன்று
இயல்களை மொழி பெயர்த்தும்விட்டார். அப்பொழுது முதல் இயலை நான் மேற்பார்த்தேன்.
மூப்பின் காரணமாகப் பணி தடைப்பட்டது. பின்னர் புதுவை ஞானம் எஞ்சிய பகுதியை
மொழிபெயர்த்து, 2003இல் நூல் வெளிவந்தது. தமிழாக்கத்தில் ஆதாரக் குறிப்புகள்,
சான்றுப் பட்டியல் முதலானவை இல்லை. ஆங்கில மூலத்தின் நடைச்சிறப்பும் தமிழாக்கத்தில்
காணப்படவில்லை. ஆங்கில நூலும் வெளிப்பட்டால் நன்றாயிருக்கும்.
வீரராகவனின் ஆய்வேடு 1939இல் நிற்கிறது. 1940கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும்
வீரராகவன் திரட்டிவைத்திருந்தார். அவற்றின் அடிப்படையில் அடுத்த பகுதி வரலாறு
எழுதப்படவில்லையே என்ற ஆறாத குறை தோழர் ச.சீ. கண்ணனுக்கு.
கர்நாடக இசையில் வீரராகவனுக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. (வீரராகவன் ஒரு தேர்ந்த
வரலாற்றாசிரியர் என்பது இசையுலகில் பலருக்குத் தெரியாது என்று ஒருமுறை இசை
வரலாற்றாளர் வி. ஸ்ரீராம் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது.) கர்நாடக இசையின்
சமூக வரலாற்றை எழுத வேண்டும் எனப் பலமுறை அவரிடம் வற்புறுத்தியுள்ளேன்.
இளமையிலேயே அவருக்கு மூட்டுநோய் (rheumatoid arthritis) வந்துவிட்டது. ஏற்கெனவே பூஞ்சையான உடம்பு. அடிக்கடி தாக்கும் நோய்கள். சரியாகச்
சாப்பிடும் பழக்கம் இல்லை. கூடவே உறக்கமின்மையும். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில்
துறவறத்தை இயல்பாகவோ இலக்காகவோ கொண்ட ஒரு மரபிழை உண்டு. வீரராகவன் அதில் சேர்த்தி.
வேண்டுமென்றே உடலை வருத்திக்கொள்கிறாரோ என்று தோன்றும் அளவுக்குப் பல சமயங்களில்
அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். கார் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வருமானமும்
குடும்பச் சூழலும் இருந்தாலும் விடாப்பிடியாக 5ணி பேருந்தில் பயணிப்பார். ஒருமுறை
அவரை மாடு முட்டிவிட்டது. உடம்பார் அழியின் உயிரார் அழிவர். கடைசியில் குலை
நோயுற்றது. பெருங்குடலில் காசநோய் என்ற மருத்துவர்கள் கடைசியில் புற்று நோய்
என்று தம் முடிவை மாற்றிக் கொண்டார்கள். புற்றுநோய்க்கான வன்மருந்துகளைத் தாங்கும்
ஆற்றல் வீரராகவனின் உடலுக்கு இருக்கவில்லை. கடைசி மாதங்களில் உணவும் நீரும்
செல்லவில்லை.
வீரராகவனைப் பற்றிய இரங்கலுரை பேராசிரியர் வி.ஆர். முரளிதரன் பற்றிக் குறிப்பிடாமல்
நிறைவுபெறாது. இருபத்தாறு ஆண்டுகள் - ஒருசாலை மாணாக்கராகத் தொடங்கி, சக ஆசிரியரென
- உற்ற துணைவராக விளங்கியவர் முரளி. செக்கும் சிவலிங்கமுமாக இருந்த இருவரையும்
இணைத்த கண்ணி எது என்று எனக்குப் புலப்பட்டதேயில்லை. கடைசியில் ஊழ் வென்றது; ஆனால்
அன்பு தோற்கவில்லை.
கண்ணுடையவர் என்பவர் . . . |