காலச்சுவடு நவம்பர் 2008 இதழில் வெளியாகியிருந்த பழுப்புக் காலை (மத்தா ப்ரோ -
MATIN BRUN) சிறுகதையை வாசித்து முடித்ததும் கதாசிரியரான பிரெஞ்சு
எழுத்தாளர் ஃப்ராங்க் பாவ்லாஃபை நேரில் சந்தித்துப் பேசிய தருணம் ஞாபகத்தில்
படர்ந்தது.பிரெஞ்சுக் கலாச்சார மையம் அல்லையான்ஸ் பிரான்சேஸின் திருவனந்தபுரம்
பிரிவு பழுப்புக் காலை மலையாள மொழிபெயர்ப்பின் வெளியீட்டை முக்கியத்துவம் நிறைந்த
நிகழ்ச்சியாக அறிவித்திருந்தது. அல்லையான்ஸ் பிரான்சேஸ், கேரளப் பல்கலைக்கழகத்தின்
ஆங்கில மொழிப் பயிலகம், மலையாளப் பதிப்பகம் டி. சி. புக்ஸ் மூன்றும் இணைந்து 2007
ஏப்ரல் மூன்றாம் தேதி அந்நிகழ்ச்சியை நடத்தின. மலையாள எழுத்தாளர் சக்கரியா சிறப்புரை
நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் கதை வாசிப்பு. பாவ்லாஃப், பழுப்புக்
காலை கதையின் மூல மொழியான பிரெஞ்சிலும் மொழிபெயர்ப்பாளர் லீனா சந்திரன்
மலையாளத்திலும் கதையை வாசித்தார்கள். இரண்டு வெவ்வேறு மொழிகளில் வாசித்துக்
கேட்டபோதும் கதை ஒரே உணர்வைத் தந்தது. ஆங்கிலம்வழிச் செய்யப்பட்டிருந்த தமிழாக்கம்
அவ்வளவு செறிவானதாகத் தென்படவில்லை. படைப்புத் தொனியற்ற ஓர் உரைநடையில்
மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனக் கருதுகிறேன். எனினும் ஏற்கனவே
கேட்டுத் தெரிந்த கதை என்பதால் மொழியாக்கத்தின் குறையைக் கடந்து அதன் ஆதார உணர்வை
அனுபவிக்க முடிந்தது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட கதை வாசிப்பு, தொடர்ந்து படித்த மலையாள
மொழிபெயர்ப்பு - இரண்டுக்குப் பிறகு தமிழாக்கத்தை வாசித்தபோதும் அந்த உணர்வு
மனத்தின் அடியிலிருந்து எழும்பியது.
“யாரோ கதவை வலுவாகத் தட்டுகிறார்கள். பொழுது விடியவில்லை. இந்த அகாலத்தில்
யாராக இருக்கும்? இந்த நேரத்தில் யாரும் வருவதில்லையே? எனக்கென்னவோ பயமாக
இருக்கிறது. இன்னும் விடியவில்லை. வெளியில் இப்போதும் பழுப்பு நிறம். நிறுத்துங்கள்.
எதற்காக இந்த ஆர்ப்பாட்டம். நான் இதோ வருகிறேன்” என்னும் இறுதி வரிகளில்
விரவிக்கிடந்த பயத்தை எந்த மொழியிலிருந்து பெற்றேன் என்று விளங்கவில்லை.
குறையுடையதாகத் தோன்றிய தமிழாக்கம்கூட அந்தப் பயத்தைக் கொடுக்கத் தவறவில்லை.
பாவ்லாஃப் கதையின் ஆதாரத் தொனியே அரசதிகாரம் சாமானிய மனிதனின் வாழ்க்கையில்
ஏற்படுத்தும் அச்சத்தைக் குறித்ததுதான். பிரெஞ்சு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அது
போன்ற அச்சமூட்டக்கூடிய சூழல் நிலவியதாகவும் அதுதான் கதைக்கான தூண்டுதல் என்றும்
பின்னர் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டார் பாவ்லாஃப்.
பிரெஞ்சு இலக்கியத்தைத் தொடர்ந்து கவனிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்தும்
முக்கியமான எழுத்தாளர்கள் பற்றிய சில விவரங்களையாவது தெரிந்துவைத்திருப்பது வழக்கம்.
அதில் ஃப்ராங்க் பாவ்லாஃப் என்னும் பெயர் நிச்சயமாக இருக்கவில்லை. எனக்கு
மட்டுமல்ல, பாவ்லாஃபுடனான சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த இலக்கிய ஆர்வலர்களில்
பெரும்பான்மையினருக்கும் அவர் அறிமுகமற்றவராகவே இருந்தார். ஒரு புது எழுத்தாளரைச்
சந்திக்கும் மனநிலைதான் எல்லாருக்கும் இருந்தது. இந்திய மொழிப் பகுதிக்கு வருவதும்
ஓர் இந்திய மொழியில் தன்னுடைய படைப்பு மொழியாக்கம் செய்யப்படுவதும்
பாவ்லாஃபுக்கும் புது அனுபவமாகவே இருந்தது. இந்த அந்நியத் தன்மையை இரு தரப்பினரும்
அசௌகரியமாகவே உணர்ந்திருந்தோம். பாவ்லாஃபின் ஆங்கிலமும் புரிந்துகொள்ளக்
கடினமானதாக இருந்தது. ஒரு மௌனப் பனி இரு தரப்பினருக்கும் இடையில் உறைந்திருந்தது.
அல்லையான்ஸ் ப்ரான்சேஸ் திருவனந்தபுரம் பிரிவின் அப்போதைய இயக்குநராக இருந்த ஜோசே
மாரி கோர்தெஸ் துணைக்கு வந்தார்.
பாவ்லாஃப் கிட்டத்தட்ட இருபது நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அவை அனைத்தும்
புகழ்பெற்ற பிரெஞ்சுப் பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் பிரெஞ்சு
மொழியைத் தாண்டி அறிமுகமாகாதவராகவே இருந்திருக்கிறார். உள்நாட்டிலும் பழுப்புக்
காலை வெளியாகும்வரை சாதாரண எழுத்தாளராகவே கருதப்பட்டுவந்திருக்கிறார். உளவியல்
நிபுணராகவும் சிறார் இலக்கியக்காரராகவும் சமுதாய வளர்ச்சித் திட்டங்களில் தீவிரமாகப்
பணியாற்றுபவராகவும் மட்டுமே அறியப்பட்டிருந்திருக்கிறார். பழுப்புக் காலை வெளியான
பின்னர் முன்னணி எழுத்தாளராகத் தெரியவந்திருக்கிறார். ‘ஒரே ஒரு சிறுகதையின் மூலம்
உலகப் பிரசித்தி பெற்றவராக ஃப்ராங்க் பாவ்லாஃப் கொண்டாடப்பட்டது கொஞ்சம்
அபூர்வமான சங்கதி. ‘உங்கள் அருந்ததி ராய் ஒரே ஒரு நாவல் எழுதி உலகப்
பிரசித்திபெற்றதுபோல’ என்று சொல்லியிருந்தார் கோர்தெஸ். இது வெளியீடு தொடர்பான
செயல். பழுப்புக் காலையை ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றியவை அது எழுதப்பட்ட அரசியல்
பின்னணியும் கதையில் வெளிப்படும் எளிமையும் எல்லா இடத்துக்கும் பொருந்தக்கூடிய
பொதுத்தன்மையுமே. பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தக் கதை இதுவரை முப்பது
மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ பத்து லட்சம் படிகள்
விற்பனையாகியிருக்கின்றன.
1998இல் பிரான்சில் நடைபெற்ற தேர்தல் காலச் சூழலில் பாவ்லாஃப் இந்தக் கதையை
எழுதியிருக்கிறார். பொதுவாக ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மரியாதை கற்பிக்கும் பிரெஞ்சு
அரசியல் சூழலில் பதிற்றாண்டுகளாக வலதுசாரிக் கருத்துகளைப் பரப்புவதன் மூலம் நேஷனல்
ஃப்ரண்ட் கட்சி தனிமனித சுதந்திரத்துக்கும் மக்களாட்சி நடைமுறைகளுக்கும்
அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. ழான் மாரி லூபென் என்னும் அரசியல்வாதியின்
தலைமையில் இயங்கிய இந்தக் கட்சி தேசியவாதத்தை முன்னிறுத்தியும் குடியேறியவர்களை
அச்சுறுத்தியும் செயல்பட்டு வந்திருக்கிறது. தொண்ணூற்றி எட்டாம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலின்போதுதான் பிரான்சிலுள்ள முன்னணிக் கட்சிகள்கூட நேஷனல் ஃப்ரண்ட் கட்சியுடன்
இணைந்து அரசியல் பண்ணியிருப்பது தெரியவந்தது. ‘அது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஒரு சோஷலிஸ்டான என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வலதுசாரி
மனோபாவத்துக்கு எதிராக நடத்திய ஒரு கருத்தரங்கில் வாசிப்பதற்காக நான் எழுதிய
கதைதான் பழுப்புக் காலை. பிறகு ஷேன் என்னும் கவிதைப் பதிப்பாளர்கள் அதைப் புத்தகமாக
வெளியிட்டார்கள். பிரபல பிரெஞ்சுக் கார்ட்டூனிஸ்ட் என்கி பிலால் கதைக்கான படங்களை
உருவாக்கினார்’ என நேர்ப் பேச்சில் குறிப்பிட்டார் பாவ்லாஃப்.]
சிறார்களுக்கு எழுதப்பட்ட கதையை நினைவூட்டும் விதத்தில் எழுதப்பட்ட பழுப்புக்
காலையை. நாட்டார் வழக்கில் எழுதியதாகச் சொன்னார் பாவ்லாஃப். மிக எளிய கதையும்கூட.
ஆனால் அந்த உருவத்தை மீறிப் பெரும் கதையாடலுக்கான இயல்பைக் கதை கொண்டிருக்கிறது.
பாசிச நடைமுறை மிகச் சாதாரணமெனத் தோன்றும் அன்றாடச் செயல்களிலும் ஊடுருவுகிறது. அதை
ஆரம்பத்திலேயே பொருட்படுத்தி எதிர்வினையாற்றாமல் விட்டால் அது வெற்றிபெறும். அந்த
வெற்றி அதிகாரமாக மாறும். அந்த அதிகாரம் மானுட சுதந்திரத்தை இல்லாமலாக்கி விடும்.
எல்லாவற்றையும் பழுப்பாக மாற்றும் சாதாரணமான செயல் கடைசியில் பழுப்பு நிறமில்லாத
எதையும் வாழ அனுமதிக்காது என்பது தான் பாவ்லாஃபின் கதையில் நிகழும் அரசியல். ‘இது
எங்களூருக்கும் பொருந்தும் போல இருக்கிறதே?’ என்றதும் ‘ஆமாம், பழுப்பு
நிறத்துக்குப் பதிலாக வேறு நிறமிருக்கும். அதைத் தவிர பெரிய வித்தியாச மிருக்காது.
அதுதான் இந்தக் கதைக்கு உலகளாவிய அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது என்று நினைக்கிறேன்’
எனப் பதிலளித்தார் பாவ்லாஃப். கதையை வாசிக்கும்போது அது சரி என்றுதான் படுகிறது.
தொடர்ந்து அவர் சொன்ன வாசகம்தான் உரையாடலுக்கு வழியமைத்தது.
‘தீவிரவாதம் வேரூன்றுவதற்கு நீங்களும் நானும் நாமெல்லாரும் பொறுப்பு. ஏனென்றால்
நாம் இதற்கு எந்த எதிர்வினையும் செய்வதில்லை.’
‘அப்படியென்றால் எழுத்து ஒரு ஆக்டிவிசமா?’
‘தெரியாது. ஆனால் எழுத்து ஓர் எதிர்வினை. என்னுடைய பணியின் பிரிக்கவியலாத கூறாகவே
எழுத்தையும் பார்க்கிறேன். ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, ஆசியாக் கண்டங்களைச்
சேர்ந்த நாடுகளில் தங்கிப் பணியாற்றியிருக்கிறேன். அந்த மக்கள் சமூகங்களுக்கிடையில்
நிலவும் பண்பாட்டு வேற்றுமைகளை மனித குலத்துக்குக் கிடைத்த கொடையென்றே நம்புகிறேன்.
ஆனால் அப்படிப்பட்ட வேற்றுமைகளை, பன்முகத் தன்மையை ஏற்றுக் கொள்ளத் தீவிரவாதம்
மறுக்கிறது. அதிலிருந்துதான் நிறம், மதம், இனம் போன்ற அடிப்படைகளில் பிரிவினைகள்
உருவாகின்றன. அவை ஒரு கோட்பாடாக மாறுகின்றன. அதைத்தான் நான் கேள்விக்குட்படுத்த
விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் விமர்சிக்கவில்லை.
கோட்பாட்டுரீதியிலான இந்தச் சகிப்பின்மை விளைவிக்கக் கூடிய அபாயங்களைப் பற்றிச்
சுட்டிக்காட்ட முனைகிறேன். என்னைப் பொறுத்தவரை அதற்கு எதிர்வினையாற்றப்
பொருத்தமான ஊடகம் எழுத்துதான். அது ஆக்டிவிசமா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்’.
‘தொண்ணூற்றி எட்டாம் ஆண்டு நடந்த தேர்தலின்போது இந்தக் கதையை எழுதியதாகச்
சொன்னீர்கள். அந்தத் தேர்தலில் நேஷனல் ஃபிரண்ட் பதினெட்டு சதவீத வாக்குகளைப்
பெற்றதாகக் கோர்தெஸ் சொன்னார். அப்படியானால் பிரான்சிலும் நிலைமை மோசம்தானா?’
‘எல்லா இடத்திலும் பாசிசத்தின் இயல்பு ஒரே மாதிரியானதுதான். தேர்தல் சமயத்தில்
தீவிரமான அரசியல் விவாதங்கள் நடந்தன. தீவிரவாதக் கோட்பாடுகளின் மறைமுகத் திட்டங்கள்
வெகுளித்தனமான தோற்றத்தில் முன்வைக்கப்பட்டன. ஒரு விசேஷமான புன்னகையுடன் அவை
முன்வைக்கப்பட்டன. அந்த வெகுளித்தனத்தையும் சிரிப்பையும் பார்த்து எல்லாரும்
வசீகரிக்கப்பட்டார்கள். அவர்கள் சொல்லுவதை ஒப்புக்கொள்ளாமல் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டியிருந்தது. இந்தக் கதை ஓர் எச்சரிக்கை - அன்றைக்கும் என்றைக்கும்.’
‘பத்துப் பக்கச் சிறுகதையால் பாசிசத்தை எதிர்கொள்ள முடியுமென்று நிஜமாகவே
நம்பினீர்களா?’
‘ஓர் எதிர்வினைக்கு எத்தனை பக்கக் கதை தேவைப்படுமென நீங்கள்தான் சொல்லுங்களேன். ஒரு
தீக்குச்சியால் பெரிய காட்டை அழிக்க முடியுமே. என்னுடைய கதையை ஒரு சின்னத்
தீக்குச்சியாக உருவகப்படுத்துவதை நீங்கள் தவறென்று சொல்ல முடியுமா?’
இனியும் கேள்விகள் இருக்கின்றனவா என்னும் பாவனையில் உட்கார்ந்திருந்தார்
பாவ்லாஃப். பார்வையாளர்களாக அமர்ந்திருந்த எல்லார் மனத்திலும் கதை வாசிப்பு மீண்டும்
நிகழ்ந்துகொண்டிருந்தது. பழுப்பு நிறமல்லாத பூனைகளும் நாய்களும் அரசாங்க ஆணைப்படி
கொல்லப்பட்டுக்கொண்டிருந்தன. மொழியின் நிறம் பழுப்பாக மாறிக்கொண்டிருந்தது.
சீருடைகளின் வண்ணம் பழுப்பாகிக்கொண்டிருந்தது. பொழுதுகள் பழுப்பு நிறத்தில்
நகர்ந்தன. விடியலும் பழுப்பு நிறத்திலிருந்தது.
ஃப்ராங்க் பாவ்லாஃபின் கதையில் இடம் குறிப்பிடப்படவில்லை. கதாபாத்திரத்தின் இனம்
குறிப்பிடப்படவில்லை. எழுத்தாளர் தெரிந்தே செய்ததாக இருக்கலாமோ? ‘ஆம்’ என்றார்
பாவ்லாஃப். கதையின் தமிழாக்கத்தை இப்போது வாசிக்கும்போது அந்த ஒப்புதல்
வாக்குமூலம் சரி என்று படுகிறது. ‘பழுப்பு நிறக் காலை’யின் களம் நம்முடைய நாடாகவும்
இருக்கலாம். பழுப்பு நிறச் சீருடை அணிந்த சிப்பாய்களால் கைதுசெய்யப்படும் சார்லி
நம்மில் யாராவது ஒருவராக இருக்கலாம். பழுப்புக் காலையில் வலுவாகத் தட்டப்படும் கதவு
நம்முடையதாகவும் இருக்கலாம்.
e-mail: nsukumaran@gmail.com
|