Google   www kalachuvadu.com

கவிதைகள்
உடைந்த முத்தங்களைச் சேகரிக்கும் சிறுமி
நக்கீரன்
கரைமணலில் காலொப்பமிட்டு ஒரு பிரிவு நிகழ்கிறது
உடைந்த முத்தங்களைச் சேகரிக்கும் சிறுமியொருத்தி
எதிர்த் திசையிலிருந்து வருகிறாள்
உன்னுள் வீழ்ந்த எரிமீன்களையெல்லாம்
உடுமீன்களாக எப்படி நீ மாற்றுகிறாய்
அற்புதக் கடலே அற்புதக் கடலே
சேகரித்துக் கடக்கின்ற அச்சிறுமியிடம்
தூய துணுக்கொன்றை வேண்டுகிறேன்
பிஞ்சுவிரல் விரிய உதிர்ந்த முத்தங்களனைத்தும்
திசையெங்கும் சிதறிப் பறக்கின்றன வண்ணத்துப்பூச்சிகளாய்
அவளோ குறுஞ்சிரிப்பொன்றைப் பூக்கச் செய்கிறாள்
மகரந்தத் தடயம் ஏதுமற்ற
இதே போன்றதொரு பூவில்தான் சென்றமரக்கூடும்
இவ்வண்ணத்துப்பூச்சிகளுள் ஒன்று

டினோசரின் பசி

கலைக்களஞ்சியத்திலிருந்து குதித்த டினோசர்
அவனுடன் சற்று தங்கிச் செல்வதாகச் சொன்னது
முதலில் நாளிகைகளை வாசித்த அது
பிறகு தொலைக்காட்சியை முடுக்கிப் பார்த்தது
வெகுநேரம் இணையத்தில் மேய்ந்துவிட்டு
தனக்குப் பசிப்பதாகச் சொன்னபோது
தன் உணவைப் பகிர முன்வந்தான் அவன்
முட்டாளே என்று சீறிய டினோசர்
தனக்கான உணவைத் தானே உண்டுமுடித்து
மீண்டும் கலைக்களஞ்சியத்துள் புகுந்துகொண்டதாக
அதன் அடுத்த பதிப்பில் இப்போது
கூடுதலாக ஒரு விவரம் இணைக்கப்பட்டுள்ளது

உள்ளடக்கம்