|
பாரதி படைப்புகளிலிருந்து துவங்கிய நாட்டுடமையாக்கம் எனும் தமிழக மரபு பற்பல பயன்களை
ஈட்டியுள்ளதை மறுப்பதற்கில்லை. பொதுவாகத் தமிழ்ப் பதிப்பாளர்களின் கொடுங்கனவு
எழுத்தாளர்களுக்குக் காப்புரிமை வழங்குவது பற்றியது. எனவே நாட்டுடமையாக்கம்
மறைந்துபோன படைப்புகளின் மறுபதிப்புகள் வெளிவர உதவுகிறது. சில நேரங்களில்
வாரிசுதாரரைத் தேடிப் பிடிக்கும் சிக்கலிலிருந்தும் அவர்தம் குடும்பப்
பிரச்சனைகளிலிருந்தும் படைப்புகளை விடுவிக்கிறது. இருப்பினும் காப்புரிமை பற்றித்
தமிழக அரசுக்கும் பதிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் போதிய
தெளிவு இல்லை. ஒரு எழுத்தாளர் மறைந்து அறுபது ஆண்டுகள் ஆனதும் அவரது படைப்புகள்
பொதுவுடைமை ஆகிவிடுகின்றன. ஆனால் தமிழக அரசு தொடர்ச்சியாகப் பொதுவுடைமையாகி
விட்ட எழுத்தாளர்களின் வாரிசுகளுக்குப் பணம் வழங்கி அவற்றை நாட்டுடமையாக்கி வருகிறது.
உதாரணத்திற்கு இந்த ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் பட்டியலில் மு.
சு. பூரணலிங்கம் பிள்ளை, வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோரின் பெயர்களும் உண்டு.
இவர்கள் முறையே 1947இலும், 1942இலும் மறைந்தவர்கள். இவர்கள் படைப்புகள் முறையே
2007இலும், 2002இலும் பொதுவுடைமையாகிவிட்டன. இவற்றை 2009இல் அரசு நாட்டுடமையாக்க
வேண்டிய அவசியமே இல்லை. நலிந்த நிலையிலிருக்கும் எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு உதவ
அரசு தனித் திட்டம் வகுப்பது நலம். நாட்டுடமைத் திட்டத்தை இதற்குப் பயன்படுத்துவது
காப்புரிமை பற்றிய குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது.
பிப்ரவரி 17 அன்று சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு 28
படைப்பாளிகளின் படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக அறிவித்தது. அதில் ஒரு எழுத்தாளர்
சுந்தர ராமசாமி. இதற்காக சு.ரா. குடும்பத்தின் அனுமதி பெறப்படவில்லை. அத்தகைய முன்
அனுமதி பெறும் வழக்கம் அரசுக்கு இல்லை என்பது இதை ஒட்டி எழுந்த சர்ச்சையின் வழி
தெரியவந்துள்ளது. இவ்வாறு சட்டமன்றத்தில் அறிவிப்பது சட்டவிரோதமானது. எந்த
எழுத்தாளரின்/குடும்பத்தினரின் காப்புரிமையையும் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.
அவர்கள் அனுமதியுடன் அதை வாங்கி நாட்டுடமையாக்கும் அதிகாரம் மட்டுமே அரசுக்கு உண்டு.
காப்புரிமை தொடர்பான தம் அதிகாரத்தின் வரையறை பற்றிய தெளிவு தமிழக அரசு
அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இல்லைபோலும்.
நாட்டுடமையாக்கத்தை எழுத்தாளர்/குடும்பத்தினர் ஒப்புதல் பெற்றுவிட்டு அவர்களுக்கு
உரிய மதிப்பூதியம் வழங்கிவிட்டு அறிவிப்பதே முறை. அதிரடியான அறிவிப்புகள் எழுத்தாளர்/குடும்பத்தினரை
அவமதிப்பதாகவே உள்ளன. அவர்களுக்கு உரியதை ஒப்புதல் வாங்காமல் நாட்டுடமையாக்குவது
அரசின் ஆணவத்தின் வெளிப்பாடாக உள்ளது. இந்த ஆணவம் அறியாமையிலிருந்து பிறப்பது.
குடும்பத்திற்கு விருப்பம் இல்லையெனில் நாட்டுடமையாக்கமாட்டோம் என்ற
பெரும்போக்கான அறிவிப்புகளும் அபத்தமானவை. குடும்பம் ஏற்காதவரை அரச அறிவிப்பு
சட்டப்படிச் செல்லாது. இந்த அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் தனிச் சொத்துக்களை
அவர்கள் அனுமதியின்றி நாட்டுடமையாக்கிவிட்டு நட்ட ஈடு வழங்குவதாக அறிவித்தால்
இத்தகைய அறிவிப்புகளின் வன்மமும் தாக்கமும் அவர்களுக்கு விளங்கிவிடும்.
மேற்படி அறிவிப்பில் அரசு எழுத்தாளர்கள் நூல்களின் எண்ணிக்கை, சமூகத் தாக்கம்,
பெருமை ஆகிய அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூல் எண்ணிக்கை ஒரு சீரிய அளவீடு அல்ல. சிறிய நூல்கள், பெரிய நூல்கள் என முரண்பாடு
ஏற்படக்கூடும். எனவே எடைபோட்டுப் பார்ப்பது சாலச் சிறந்தது எனப் பரிந்துரைக்கிறோம்.
சமூகத் தாக்கம், நூலின் பெருமை போன்றவற்றை அளவிட இப்பூவுலகில் கருவிகள் எதுவும்
இல்லை. கருத்துக்கணிப்பு நடத்துவார்களோ? கொலைபாதகத்தில் முடிந்துவிடாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
சு.ரா. படைப்புகளைப் பொறுத்தவரை என்ன தொகையை அரசு வழங்க உள்ளது என்பதைக்
கணக்கில் கொள்ளாமல் உடனடியாக மறுப்பது என முடிவெடுத்து விட்டோம். காரணம் சு.ரா.
மீதுள்ள மரியாதை காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று நினைக்க முடியவில்லை.
அவர் எழுதிப் பங்களித்த அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட காலத்தில் அவர் இருப்பைத்
தமிழக அரசு அங்கீகரித்ததில்லை. குறிப்பாகத் தமிழ் மீதும் எழுத்தாளர் மீதும் தனிப்
‘பற்று’ கொண்டுள்ள தி.மு.க. திட்டமிட்ட முறையில் அவரைப் புறக்கணித்தது. வாழ்ந்த
காலத்தில் மட்டுமல்ல, மரணமடைந்தபோதும் இந்தப் புறக்கணிப்பு தொடர்ந்தது. அரசு
சார்பாக இரங்கல் செய்தி வரவில்லை. அரசுப் பிரதிநிதிகள் யாரும் அஞ்சலி செலுத்தவும்
இல்லை. சு.ரா.வுக்கு நிகராகப் பங்களித்த வேறு எந்த இந்திய மொழி எழுத்தாளரையும் ஓர்
அரசு இவ்வாறு புறக்கணித்திருக்கும் என்று தோன்றவில்லை.
கனிமொழி கருணாநிதியால் ஓர் இலக்கியப் பிதாமகராகக் கொண்டாடப்படும் சுஜாதா
போன்ற வெகுஜன எழுத்தாளர்களை விட்டுவிட்டு, சு.ரா.வின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கியிருப்பது இதிலுள்ள அழித்தொழிப்பு அரசியலைத் தெளிவாக வெளிப்படுத்தி
விடுகிறது. ‘காலச்சுவடு’ முன்வைக்கும் ஆதாரபூர்வமான விமர்சனங்களை
எதிர்கொள்ளமாட்டாமல், சகிக்கவும் முடியாமல், நூலகங்களில் அதைத் தடைசெய்திருக்கும்
தமிழக அரசு, சுந்தர ராமசாமியின் காப்புரிமையைப் பறித்து, ‘காலச்சுவ’டைப்
பலவீனப்படுத்த நினைக்கும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கை இது. ஏற்கனவே புதுமைப்பித்தன்
படைப்புகளைக் ‘காலச்சுவடு’ தொகுத்து வழங்கும் பணியைத் துவக்கியதும் ஒரு சாதி வெறிக்
கும்பல் அவர் படைப்புகளை நாட்டுடமையாக்கும் பணியை முன்னெடுத்தது. அதனால்
‘காலச்சுவ’டின் வளர்ச்சி தடைபடும் எனக் கனவுகண்டது. இச் சதிவேலைகளைப் புறக்கணித்து,
பு.பி.யின் நாட்டுடமையாக்கத்தைக் காலம் தாழ்ந்த அங்கீகாரமாக வரவேற்ற ‘காலச்சுவடு’,
பு.பி. பதிப்புப் பணியை இன்றுவரை முன்னெடுத்துவருகிறது. பு.பி. படைப்புகளின்
‘காலச்சுவடு’ பதிப்புகள் ஈடு இணையற்ற வாசக ஆதரவைப் பெற்றுவருகின்றன. இன்று அந்த
நாசகாரக் கும்பல் தி.மு.க. அரசில் இணைந்திருக்கிறது.
நாட்டுடமையாக்கத்தினால் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் சில பாதிப்புகளுக்குக் காரணம்
தமிழரிடம் காணப்படும் எழுத்தின் மீதான அறவுரிமை (Moral right) பற்றிய
போதிய புரிதலின்மை. நாட்டுடமையாக்கம் ஒரு எழுத்தாளனின் படைப்புகளைப்
பொதுவுடைமையாக மாற்றுகிறது. பொதுவுடைமையாக்கம் யாரும் காப்புரிமை வழங்காமல் அந்த
எழுத்தாளர் படைப்புகளைப் பிரசுரிக்க வழிசெய்கிறது. ஆனால் இந்த உரிமை எழுத்தாளரின்
படைப்புகளின் முழுமையைச் சிதைக்கவோ திருத்தவோ சுருக்கவோ பிழைபட வெளியிடவோ
அளிக்கப்படும் உரிமை அல்ல. படைப்பின் மீதான அறவுரிமை என்பது பண்பாட்டுத் தளத்தில்
இயங்கும் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய கூட்டுப் பொறுப்பு. தமிழில்
நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகள், திருத்தப்படுவது, பத்திகள் நீக்கப்படுவது என
மனம்போன போக்கில் வெளியிடப்படுவதைக் கண்காணிக்க, விமர்சிக்கப் போதிய
விழிப்புணர்வு இங்கு இல்லை. இந்நிலை அகன்றால்தான் நாட்டுடமையாக்கம் முழுமைபெறும்.
இந்த ஆண்டு மேற்கொண்ட நாட்டுடமையாக்கத்திற்கு எதிர்வினையாக, அரசு, பெரியார்
எழுத்துக்களை நாட்டுடமை ஆக்காதிருப்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
எழுத்தாளர்களின் குடும்பங்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து அனுமதி பெறாமல்
சட்டமன்றத்தில் அறிவிக்கும் அரசு, கி. வீரமணியின் உணர்வுகளை மதித்துப் பெரியார்
விஷயத்தில் மௌனம் சாதிப்பது நாட்டுடமையாக்கத்தின் அரசியலை அம்பலப்படுத்திவிடுவது
உண்மைதான். ஆனால் உணரப்பட வேண்டிய செய்தி பெரியார் படைப்புகளைத் தன்னிச்சையாக
நாட்டுடமையாக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்பதுதான். அரசு விரும்பினால் பெரியார்
படைப்புகளின் காப்புரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கலாம், உயரிய தொகையளித்து
அவர்தம் காப்புரிமையை வாங்கிட முயலலாம். அவ்வளவுதான். இந்தப் புரிதல் அறிஞர்களுக்கு
இருப்பது அவசியம்.
சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு சில மணிநேரத்தில் ‘காலச்சுவ’டின் மறுப்பு
அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து கண்ணதாசன், மு.வ., லக்ஷ்மி
ஆகியோரின் குடும்பத்தினரும் தங்களைக் கலந்தாலோசிக்காத அரசு மேற்கொண்ட
நாட்டுடமையாக்கத்திற்கு உடன்பட மறுத்துள்ளனர். மறுநாள் தமிழக அரசு கீழ்க்கண்ட
செய்திக் குறிப்பை வெளியிட்டது.
அரசு செய்திக் குறிப்பு - 18.2.2009
இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவிதச் சிரமமுமின்றி எளிய
முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும்
திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசின்
விருப்புரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.
நாட்டுடமையாக்கப்படுவதற்குச் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் - அவர்களுக்குக்
கிடைத்துவரும் “ராயல்டி” தொகை கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக ஒப்புதல்
தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டுவிடுவதை அரசு வழக்கமாய்ப்
பின்பற்றி வருகிறது. உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி
சுத்தானந்த பாரதியார், கிருபானந்த வாரியார் ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிடக்
கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு - பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள்
நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. எனவே
தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள
பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையர், அவர்களின் நூல்களை
நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப் பட்ட நடைமுறை
இப்போதும் பொருந்தும்.
மேற்படி குறிப்பில் விவாதத்திற்குரிய சில செய்திகள் உள்ளன. ஒன்று, பல
எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவதாக அறிவித்த பின்னர் அவர்கள்
காப்புரிமையாளர்கள் மறுத்ததும் அது கைவிடப்பட்டதாகவும் குறிப்பிடும் அரசு, தனது
முறைமையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்பது கண்டனத்திற்குரியது. அதாவது, அரசு
தனக்கு உரிமை இல்லாத பொருளை நாட்டுடமையாக்குவதாக அறிவிக்கும். சம்பந்தப்பட்டவர்கள்
பதறிப்போய் மறுத்தால் விட்டுவிடும். இதனால் ஏற்படும் இழப்புகள் பற்றியோ பதற்றங்கள்
பற்றியோ புண்படும் மனங்கள் பற்றியோ அரசே சட்டம் மீறுவது பற்றியோ அதற்குக் கவலை
இல்லை. அரசின் சட்டமன்ற அறிவிப்பையும் தினசரி செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு
பல பதிப்பாளர்கள் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களை வெளியிட்டுவிடுகின்றனர். பின்னர்
குடும்பம் மறுப்பதும் அரசு நாட்டுடமையாக்கத்தைக் கைவிடுவதும் வழக்கமாக போதிய கவனம்
பெறுவதில்லை. இது பதிப்பாளர் இடையே மனக்கசப்புக்கும் பொருள் இழப்பிற்கும் நீதிமன்ற
நடவடிக்கைக்கும் இட்டுச்செல்லும். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருபானந்த வாரியாரின்
பதிப்பாளர் ஒவ்வொரு பதிப்பாளருக்கும் கடிதம் எழுதி நாட்டுடமையாக்கம் ஏற்கப்படவில்லை
என்பதைத் தெரிவித்தார். முன் அனுமதி பெறாமல் அறிவித்து இத்தகைய பிரச்சனைகளுக்கு
வழிவகுக்கும் அரசின் ஆணவம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம்.
பொதுச் சொத்தைச் சுரண்டித் தனிச் சொத்தாக மாற்றிவரும் ஆளும் வர்க்க
மனப்பான்மையின் நீட்சி, தனது கைக்கு எட்டாத தனிச் சொத்துக்களைப் பொதுச் சொத்தாக
மாற்ற முயல்வது.
நாட்டுடமையாக்கத்தை ஏற்காதவர்களை ‘ராயல்டி கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக’
மறுக்கும் சுயநலமுடையவர்களாக அரசு செய்தி குறிப்புணர்த்துகிறது. குடும்பத்தினர்
மறுப்பிற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அரசு உரிய முறையில் காப்புரிமையாளர்களை
மதிக்காமல் தன்னிச்சையாக அறிவிப்பதால் மனம் புண்பட்டு மறுக்கலாம். படைப்புகளின்
அறவுரிமை மீறப்பட்டு, படைப்பாளி சீரழிக்கப்படுவாரோ என அஞ்சி மறுக்கலாம் அல்லது
காப்புரிமைத் தொகையை இழக்க நேரிடுமே எனக் கருதியும் மறுக்கலாம். காப்புரிமைத்
தொகையை எண்ணி மறுப்பதில் எந்தப் பிழையும் இல்லை. காப்புரிமையாளர்கள் நமது ஆளும்
வர்க்கத்தைப் போலப் பொதுச் சொத்துக்களை அபகரிக்க விரும்பவில்லை. தமக்கு உரியதைத்
தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். படைப்பாளியின் பங்களிப்பு பண்பாட்டின்
பொதுச் சொத்து. ஆனால் அப்படைப்புகளின் காப்புரிமை 60 ஆண்டுகளுக்கு
காப்புரிமையாளர்களுக்கே உரியது. தானே படைத்த பொருளுக்கு படைப்பாளிக்கும்
வாரிசுகளுக்கும் கிடைக்கும் இந்த உரிமை மிக யோக்கியமானது. தனிச் சொத்தை மறுத்த
பொதுவுடைமை நாடுகள்கூடப் படைப்பாளிக்குக் காப்புரிமையை மறுக்கவில்லை.
நிறப்பிரிகையின் முழு வீச்சிலும் வண்ணங்களிலும் ஊழல் செய்து மக்களைச் சுரண்டிப்
பிழைக்கும் அதிகார வர்க்கத்திற்குக் காப்புரிமையாளர்களைக் குத்திக்காட்டும்
யோக்கியதை இல்லை. |