Google   www kalachuvadu.com

சிறுகதை
ஓளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்
தேவிபாரதி
எதிர்த் திசையில் பின்னோக்கிச் சுழன்றுகொண்டிருந்தன கடிகார முட்கள். அவள் ஒரு பௌதீக மாணவி என்பதால் அதைக் காலத்தின் பின்னோக்கிய பயணமாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டுமென்பதில்லை. கடிகாரத்தின் மின்னணுத் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்டுவிட்ட விசித்திரமான கோளாறின் விளைவே அது. ஆனால் இதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. காலத்தைக் கணக்கிடுவதற்குக் கடிகாரத்தைவிட்டால் வேறு கதியே இல்லையா என்ன? விஸ்வம் அவளிடம் மன்னிப்புக் கேட்டபொழுது நேரம் மிகத்துல்லியமாகப் பின்னிரவு பதினொரு மணி ஆறு நிமிடங்கள் முப்பத்திரண்டு நொடிகளாயிருந்தது. அநேகமாக அந்தக் கணத்தில்தான் அவனுடைய சரித்திரமும் முற்றுப்பெற்றிருக்க வேண்டும்.

அது தன் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான தருணம் எனக் கருதியதால்தான் அப்போது அவள் கடிகாரத்தைப் பார்த்தாள்; மனத்திற்குள் அந்தக் கணத்தைக் குறித்துக்கொண்டாள்; பிறகு அருணுக்காகவும் தனக்காகவும் தேநீர் தயாரிக்கும் பொருட்டுச் சமையலறைக்குள் போனாள். அவள் தயாரித்த தேநீரை இருவருமாகச் சேர்ந்து பருகினார்கள். பிறகு இருவரும், ரத்தத்தால் நனைந்துபோயிருந்த தங்கள் உடல்களைக் கழுவிக்கொள்வதற்காகக் குளியலறைக்குப் போனார்கள். அது அவர்களுக்குத் தங்கள் வழக்கமான தருணங்களில் ஒன்றாகவே தென்பட்டது. அன்றைய முன்னிரவின் எல்லாவற்றையும் தற்காலிகமாகவேனும் மறந்துவிடுவதற்கு அவர்களுக்கு எந்த முயற்சியும் தேவைப்பட்டிருக்கவில்லை. அருணுடைய நகைச்சுவை உணர்வோ அவளுடைய விளையாட்டுத்தனங்களோ சிறிதளவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கவில்லை. காதலாலும் காமத்தாலும் போதையூட்டப்பட்ட சொற்களைப் பரிமாறிக்கொள்வதற்குக்கூட அவர்கள் தயங்கவில்லை. ஆனால் பிறகு, முன்னெப்போதும் நடந்திராதபடி சீக்கிரமாகவே உச்சத்தை எட்டிவிட்டான் அருண். அது இயல்பானதுதான் எனவும் இடமாற்றத்தின் காரணமாக - கட்டிலில் விஸ்வத்தின் சடலம் கிடந்ததால் அவர்கள் வரவேற்பறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்-அப்படி நடந்திருக்கலாம் என அப்போது அவள் சொன்னது எவ்விதத்திலும் அவனுக்கு ஆறுதலளிக்கவில்லை.

பிறகு அவசர அவசரமாகப் புறப்பட்டான். துண்டு துண்டான சொற்களால் அவளை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுவதாக வாக்களிக்கவும் செய்தான். கதவைத் திறந்து வெளியே காலடி எடுத்துவைத்தவன் எதையோ மறந்து வைத்துவிட்டதைப் போலப் பதற்றத்துடன் திரும்பிக் கதவைத் தாளிட்டான். அவள் தீராத குழப்பத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டு கதவருகிலேயே நின்றாள். முத்தமிட விரும்புபவனைப் போல அவளை நெருங்கி, “பயப்படாத, நா சீக்கிரமா வந்துருவேன்” எனத் தணிந்த குரலில் சொல்லிவிட்டு வெளியேறுவதற்கு மாறாக விஸ்வத்தின் சடலம் கிடந்த அவர்களுடைய படுக்கையறையை நோக்கி வேகமாக நடந்தான். கலவரத்துடன் அவள் பின்தொடர்ந்தாள். கட்டிலை நெருங்கி ஓரடி தள்ளி நின்றபடி அவனது உடலைப் பார்த்து எதையோ முணுமுணுத்தான். பிறகு ஒரு போர் வீரனுக்குரிய அசைவுகளுடன் விறைப்பாக நடந்து வெளியே வந்தான். பின் தொடர்ந்து கிட்டத்தட்ட ஓடிவந்து அவனுக்கு முன்னால் நின்றவளைப் பற்றி இழுத்து அதுவே கடைசியானது என்பதைப் போல் ஆவேசமான முத்தமொன்றைத் தந்துவிட்டு வெளியேறினான்.

காமத்தின் ஈரம் படர்ந்த உடலைக் கழுவிக¢கொண்டு வந்தவள் தாறுமாறாகக் குலைந்துகிடந்த கேசத்தை ஒழுங்குபடுத்திக்கொள்வதற்காக நிலைக்கண்ணாடியின் முன்பாக வந்து நின்றபோது கடிகாரத்தில் நேரம் பதினொரு மணி பதினெட்டு நிமிடங்கள் மூன்று நொடிகளாக இருந்ததைக் கவனித்தாள். இவ்வளவுக்கும் பத்துப் பனிரெண்டு நிமிடங்கள்கூடத் தேவைப்பட்டிருக்கவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிச்சயமாகக் கடிகாரம் பழுதடைந்துவிட்டது எனத் தீர்மானித்துக் கொண்டவளாய்க் கூந்தலை ஒழுங்குபடுத்துவதில் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபோதுதான் மிகத் தற்செயலாகக் கடிகாரத்தின் நொடிமுள் பின்னோக்கி எதிர்த்திசையில் சுழன்றுகொண்டிருந்ததைக் கவனித்தாள்.

முதலில் அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அது பிரமையோ என நினைத்தாள். மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு கூர்ந்து கவனித்தபொழுது, மீண்டுமொரு முறை பின்னோக்கிச் சுழன்று தன் பழைய இடத்திற்கு வந்திருந்தது சிவப்பு நிற முனையையுடைய மிக மெலிந்த நொடி முள். அதன் இயக்கத்திற்கு ஒத்திசைவாக அதைவிடச் சற்றுத் தடித்த நிமிட முள் டக்கென்று ஒரு நிமிடம் பின்னோக்கிச் சரிந்தது. அவளுக்கு ரத்தம் உறைந்து போய்விட்டது. காலம் தன் கதியைத் தலைகீழாக மாற்றிக்கொண்டு விட்டதோ என்னும் கற்பனை முதன்முதலாக அவளுக்குள் உருவானதும் அப்போதுதான். அந்தக் கற்பனையின் விளைவான அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத வளாகக் கடிகாரப் பரப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் சிவப்புநிற முனையுடைய அந்த நொடி முள் ஏழுமுறை தலைகீழாகச் சுற்றி வருவதற்குள்ளாகவே அவள் சுதாரித்துக்கொண்டாள். அதாவது ஏழு நிமிடங்களுக்குள். இது போன்ற தருணங்களில் உருவாகும் திகிலூட்டும் உணர்வு தரும் போதையில் மூழ்குவதற்கு அவகாசமில்லை. செய்து தீர வேண்டியவை நிறைய இருக்கின்றன.

அவள் எதிர்கொள்ள வேண்டியிருந்த முதல் சிக்கல் காலத்தைக் கணக்கிடுவது பற்றியதுதான்.

உண்மையில் காலத்தைக் கணக்கிடுவதற்கு இப்போது எதிர்த்திசையில் சுழன்றுகொண்டிருக்கும் பழுதடைந்த அந்தச் சுவர்க்கடிகாரத்தைத் தவிர அவர்களிடம் மூன்று கைக்கடிகாரங்களும் இரண்டு கைபேசிகளும் இருந்தன. கொடிய சாபமொன்று பலித்ததைப் போல எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக இழந்திருந்தாள். அவர்களுடைய முதலாவது திருமணநாளின்போது விஸ்வம் அவளுக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்திருந்தான். அதைத் தவிர ஏழு மாதங்களுக்கு முன்னர் அவளுடைய பிறந்தநாளின்போது அருண் பரிசளித்திருந்த மற்றொரு கைக்கடிகாரமும் அவளிடம் இருந்தது. சிட்டுக்குருவியின் அலகைப் போன்ற முத்து வண்ணத் தோற்றம் கொண்ட மிகச் சிறிய கடிகாரம். விஸ்வத்திற்குத் தெரியாமல் மிக ரகசியமாக அவள் அதைச் சமையலறையில், குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட சாக்லெட் டப்பாவின் ஏழு சிற்றறைகளில் ஒன்றினுள் ஒளித்துவைத்திருந்தாள். விஸ்வம் வீட்டிலிருந்த எந்தத் தருணத்திலும் அவள் அதை வெளியில் எடுத்ததில்லை. அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றபின் அதைத் தன் மணிக்கட்டில் அணிந்துகொள்வாள். பிறகொரு நாள் விஸ்வம் அதைக் கண்டுபிடித்து விட்டான்.

அநேகமாக அதுதான் அருணுடனான அவளுடைய ரகசியக் காதலை அறிந்துகொள்ள விஸ்வத்துக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பமாயிருக்க வேண்டும்.

அப்போதைய சண்டையில் அவள்மீது பிரயோகிக் கப்பட்ட வசைகளின் குரூரம் தாளாமல் அவளே அவர்களுடைய ரகசியக் காதலின், ரகசியமான அந்தச் சின்னத்தை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட்டாள். கடிகாரத்தைத் தூக்கி எறிந்தது போல் அருணின் காதலையும் தூக்கியெறிந்திருப்பாள் எனத் தீர்மானித்துக்கொண்டவனைப் போல் பிறகு விஸ்வம் அமைதியானான். செய்தித்தாளை விரித்து மடியில் வைத்துக்கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவள்மீதான தன் வெற்றியை அவனால் அப்படித் தான் வெளிப்படுத்த முடிந்திருந்தது என நினைத்தாள் அவள். ஏதாவதொரு வகையில் அவனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டாயிற்று அவளுக்கு. தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் இருந்த, அவர்களது திருமணநாளின்போது விஸ்வம் அவளுக்குப் பரிசளித்திருந்த, கைக்கடிகாரத்தை அவள் தன் கையில் எடுத்துக்கொண்டதைப் பார்த்தபோது அவன் பதற்றமடைவதை அவள் கவனித்தாள். அவள் அதைத் தன் மணிக்கட்டில் அணிந்துகொள்ளப் போகிறாள் என முட்டாள்தனமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் திடீரென அவள் அதை அருணின் கைக்கடிகாரத்தைத் தூக்கி எறிந்ததைப் போலவே அதே ஜன்னல் வழியாக வீசி எறிந்தாள். மூன்றாவது மாடியிலிருந்து விஷ்ஷெனக் காற்றைக் கிழித்துக்கொண்டு கீழிறங்கித் தரையில் விழுந்து அது நொறுங்கும் துல்லியமான சப்தத்தைக் கேட்டு அவன் திடுக்கிட்டுப் போனான். ஜன்னலை அடைத்துவிட்டு அவள் திரும்பிப் பார்த்தபோது விஸ்வத்தின் முகம் வெளிறிப் போயிருந்தது.

அவன் அத்தோடு அந்தப் பிரச்சினையை விட்டு விடுவான் என அவள் கொஞ்சங்கூடக் கற்பனை செய்துகொள்ளவில்லை. அவனது எதிர்வினை என்னவாக இருக்கப்போகிறது எனத் தீராத ஆவலுடன் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு மெல்ல நிமர்ந்தான் அவன். அவள் அங்கிருப்பதைப் பொருட்படுத்தாத பாவனையுடன் மணிக்கட்டிலிருந்த தன் கைக்கடிகாரத்தைக் கழற்றி அதை மிக நுட்பமாக ஆராய்ந்தான். அவர்களுடைய திருமணத்தின்போது அவளுடைய தந்தை அவனுக்காக வாங்கிக் கொடுத்திருந்த அந்தக் கைக்கடிகாரத்தை அவளை அவமானப்படுத்தும் பொருட்டு, சில நிமிடங்களுக்கு முன்னால் தான் செய்ததைப் போலவே ஜன்னல் வழியாகத் தூக்கி எறியப்போகிறான் எனச் சரியாகவே யூகித்தாள். ஆனால் அதைப் பார்ப்பதற்காக அவள் பத்து நிமிடங்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. அவள் எப்படி எதிர்பார்த்தாளோ அப்படியே அதை, அதே ஜன்னலின் வழியாக வீசிவிட்டுப் பழி நிரம்பிய கண்களால் அவளை நேருக்கு நேர் பார்க்க முயன்றான். அவள் அவனது பார்வையைத் தவிர்க்க முயலவில்லை. அசைவற்ற விழிகளால் அவனது பார்வையை எதிர்த்து நின்றவள் பிறகு அவனது கண்களைப் பார்த்து மிக மெலிதாகப் புன்னகைக்கவும் செய்தாள். அதுவே போதுமானதாக இருந்தது அவனுக்கு. ஆத்திரம் கொண்டவனாக அவள்மீது பாய்ந்து கூந்தலை வளைத்துப் பிடித்து முதுகில் ஓங்கி அறைந்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான். ஆறு மாதங்களுக்கு முந்தைய ஒரு சாயங்காலத்தில் நடந்த பழி நிரம்பிய ஒரு நாடகத்தின் மிக உணர்ச்சிகரமான காட்சியைப் போல் தென்படும் அந்த நிகழ்வைப் பிறகு அவளால் ஒருபோதும் மறந்துவிட முடிந்ததில்லை.

அதற்குப் பிறகு அவள் காலத்தைக் கணக்கிடு வதற்குத் தன் கைபேசிக் கருவியைத்தான் பயன்படுத்தி வந்தாள். காலத்தைக் கணக்கிடுவதற்கும் அருணோடு தொடர்புகொள்வதற்கும். விதியின் விளையாட்டுப் போல மற்றொரு தருணத்தில் நடைபெற்ற சண்டையில் அதையுங்கூட அவள் இழக்க வேண்டியதாகிவிட்டது. முன்னிரவில் உயிரைக் காத்துக்கொள்ள அவளோடும் அருணோடும் நடத்திய போராட்டத்தில் தன் கைபேசிக் கருவியை விஸ்வம் ஒரு தற்காப்புக் கருவியாகப் பயன்படுத்தியதில் உடைந்து படுக்கைக்குக் கீழே செயலிழந்து கிடந்தது அது. விஸ்வத்தின் உடலோடு சேர்த்து அதையும் அப்புறப்படுத்திவிட வேண்டும் எனச் சொல்லிவிட்டுப் போயிருந்தான் அருண். அவனிடமும் ஒரு கைபேசி இருந்தது. போகும்பொழுது அதைக் கையோடு எடுத்துச்சென்று விட்டிருந்தான். ஆட்களைத் தொடர்புகொள்வதற்கு அது அவசியம் தேவை என்று அவனுக்கு அவள்தான் நினைவூட்டியிருந்தாள்.

ஆகக் காலத்தைக் கணக்கிடுவதற்கென இருந்த கருவிகளில் ஒன்றுகூட இப்பொழுது இல்லை. மீதமிருப்பது பழுதடைந்து தலைகீழான கதியில் பின்னோக்கி நகரும் முட்களைக்கொண்ட ஒரு கடிகாரமும் அப்புறப்படுத்தப்படுவதற்காக வைக்கப் பட்டிருக்கும் ஒரு சடலமும்தாம்.

கட்டிலில் மல்லார்ந்து கிடந்தான் விஸ்வம். முதுகலையில் சரித்திரம் படித்த, நகரின் லீடிங் கிரிமினல் லாயர். லாயர் என்பதைவிடவும் சரித்திரம் படித்தவன் எனச் சொல்லிக்கொள்வதில் அதிகப் பெருமைகொண்டிருந்தவனின் சரித்திரம் இப்போது முற்றுப்பெற்றுவிட்டது. நாளையோ நாளை மறுநாளோ அவனது வாழ்வின் பெருமைகளைப் பார் கௌன்சில் அலசும். முதுகலையில் சரித்திரம் படித்த நகரின் லீடிங் கிரிமினல் லாயர் அவனது காதல் மனைவியால் கொல்லப்பட்டுவிட்ட சரித்திரம் மட்டும் அவர்களுக்குத் தெரியுமானால்? ஆனால் யாராலும் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாதபடி அந்தச் சரித்திரத்தைக் காலத்தின் கருந்துளையினுள் வீசிவிடுவான் அருண். பிறகு என்றாவது ஒரு நாள் கண்டுபிடிக்கப்படும்பொழுது போஸ்ட்மார்ட்டம் நடத்தக்கூட முடியாதபடி சரித்திரம் உருக்குலைந்திருக்கும்.

அலங்கோலமாகக் கிடந்தது வீடு. உடைந்து நொறுங்கிய கண்ணாடிக் குடுவைகளின் சிதறல்களை மிதித்துவிடாதபடி மிக எச்சரிக்கையாக அடிவைத்து அலமாரியை அடைந்தாள். அறையெங்கும் புத்தம் புதிதான மரணத்தின் வீச்சம். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. ஏனென்றால் அந்த அறையில் புத்தம் புதிதாக ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. நிகழ்ந்து ஒரிரு மணி நேரமாவது கழிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

பழுதடைந்து, பின்னோக்கிச் சுழன்றுகொண்டிருக்கும் முட்களையுடைய ஒரு கடிகாரம் காட்டும் நேரத்தைப் பார்த்து எந்தவொரு தீர்மானத்திற்கும் வந்துவிட முடியாது. ஆனால் நேரத்தைக் கணக்கிடுவதற்குத் தனக்கு வேறுசில வழிகள் இருப்பதைக் கண்டுபிடித்திருந்தாள் அவள். தலைகீழானதே என்றாலும் காலத்தின் பயணம் மிகத் துல்லியமானதாக இருந்தது. நொடி முள்ளின் பின்னோக்கிய சுழற்சியைக் கூர்ந்து கவனித்தவாறே விரல்களால் சொடக்குப் போட்டுப் பார்த்தாள். காலத்தைக் கணக்கிடுவதற்கு ஆரம்பப் பள்ளியில் சொல்லிக்கொடுத்திருந்த பாடம் அது. சரியாக அறுபதாவது சொடக்கில் நிமிட முள் டக்கென்று பின்வாங்கிக் காலத்தின் கணக்கில் ஒரு நிமிடத்தைக் கழித்துக் காட்டியது. கடிகாரம் தான் காட்டும் காலத்தின் கணக்கை ஒரு நிமிடம் கழித்துக்காட்டும்போது நாம் அசலான காலத்துடன் ஒரு நிமிடத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். அடிப்படை அலகாகக் கொள்வதற்குரிய ஒரு சரியான நேரத்தை மட்டும் கண்டறிந்துவிட்டால் போதுமானது. அவள் கடைசியாகக் கடிகாரத்தைப் பார்த்திருந்த தருணத்திற்குப் பிறகு நிகழ்ந்திருப்பவை ஒவ்வொன்றையும் குறித்த நேரக்கணக்கீடு அதற்கு உதவக்கூடும்.

கொலை செய்த பிறகு அவர்கள் சில காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாகத் தேநீர் பருகுவதைக் குறிப்பிடலாம். பருகி முடித்தவுடன் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஒருவர் தோராயமாக ஐந்து நிமிடங்களைச் செலவிட்டிருக்கலாம். முன்னதாக அதைப் பருகுவதற்கு ஐந்து நிமிடங்கள்; அதற்கும் முன்பாக அதை ஆறவைப்பதற்கு இரண்டு நிமிடங்களும் தயாரிப்பதற்கு ஆறு முதல் எட்டு நிமிடங்களும் என வைத்துக்கொண்டால் ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து தேநீர் பருகுவதற்கு அதிகபட்சம் இருபது நிமிடங்களைச் செலவிட்டிருப்பார்கள் என்னும் முடிவுக்கு வரலாம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் அதை மேற்கொள்வதற்குத் தேவைப்பட்ட தோராயமான நேரத்தையும் கணக்கிட வேண்டும். அது அவ்வளவு துல்லியமானதாக இருக்காது என்றாலும்கூட வேறு வழியில்லாமல் போகும்போது, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கடிகாரம் பழுதுபட்ட தருணங்களில் அல்லது விநோதமான முறையில் அதன் முட்கள் பின்னோக்கித் தலைகீழாக நகர்வதைப் பார்க்க நேர்கையில் இந்த முறையை உபயோகிக்கலாம்.

ஆனால் அங்கு ஒரு கொலையையும் கொஞ்சம் தேநீர் அருந்தியதையும் தவிரப் பெரிதாக ஒன்றும் நடந்திருப்பதாகச் சொல்ல முடியாது என்று நினைத்துக்கொண்டாள் அவள். கொலைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு இருவரும் தேநீர் அருந்தினார்கள். முத்தமிட்டுக்கொண்டதும்கூட நினைவிருக்கிறது. ஆனால் அது தேநீர் அருந்தியதற்கும் கொன்றதற்கும் முன்பாகவா? திட்டம் எதிர்பார்த்ததைப் போலச் சுலபமாக நிறைவேறவில்லை. அதிகமாகப் போராட வேண்டியிருந்தது. கழுத்தில் கயிற்றைச் சுருக்கிடும்வரை விஸ்வத்திடம் எந்த அசைவும் தென்படவில்லைதான். ஆனால் சுருக்கு இறுகத் தொடங்கியதும் விழித்துக்கொண்டான். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் முழுப் பிரக்ஞையும் வந்திருந்தது அவனுக்கு. நடந்துகொண்டிருந்தது என்ன என்பதை உடனடியாக யூகித்துவிட்டான். உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போராடினான். மிகவும் ஆபாசமான வசைச் சொற்களால் அவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினான். அது அவளை மேலும் மூர்க்கமடையச் செய்தது. பொதுவாகச் சில வசைச் சொற்கள் நம்மீது பிரயோகிக்கப்படும்போது நாம் நம்மை அறியாமலேயேகூட மூர்க்கமடைந்துவிடுவோம் இல்லையா? உதாரணமாக ‘தேவடியா’ என்பது போன்ற ஒரு சொல். அது உங்களுக்குள் வன்மத்தை மூளச்செய்யும். அதைக் கேட்ட பிறகுதான் அவள் கயிற்றின் மற்றொரு முனையைப் பற்றினாள். கயிறு அறுந்தபொழுது சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துவந்ததும்கூட அவள்தான். அப்பொழுது அவளுங்கூட அவன்மீது வசைமாரி பொழிந்தாள். குறிப்பாக அவை என்ன மாதிரியான வசைச் சொற்கள் என்பது அவளுக்கு நினைவில்லை. ‘பொட்டப் பயலே, யாருடா தேவடியா? என்னப் பாத்தாடா தேவடியாங்கறே? உன் வாயக் கிழிக்கலேன்னா எம் பேரு சசி இல்லடா...’ என்பதுபோல எதையாவது சொல்லியிருக்கலாம், இல்லையா? ஏனென்றால் அவனுடைய கன்னங்களைக் கீறிப் பிளந்தது அவள்தான். அப்பொழுது பீய்ச்சியடித்த ரத்தத்தால் அவளுடைய முலைகள் நனைந்துவிட்டிருந்தன. அப்பொழுது அவள் அதைக் குறித்துப் போதிய கவனமில்லாதவளாகவே இருந்திருக்க வேண்டும். பற்றிச் சுவைத்தபொழுது முலைகளில் ரத்தத்தின்வாடை அடிப்பதாகச் சொன்னான் இல்லையா அருண்? அது நடந்தது குளியலறையிலா? இல்லை, குளியலறையிலிருந்து படுக்கையறைக்குப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் படுக்கையறையின் கதவுக்குப் பின்னாலிருந்து வந்து பின்புறமாக அவளை அணைத்தான் அருண். தான் திமிறியதும்கூட அவளுக்கு நினைவிருக்கிறது. ஆனால் அப்போது அருண் சொன்ன ஏதோ ஒரு வாக்கியம் தான் அந்த மோசமான தருணத்திலும் அவனுடைய காமத்துக்கு மதிப்பளிக்க அவளைத் தூண்டியிருக்க வேண்டும். ஒருவேளை அருண் அவளிடம், ‘சசி, ப்ளீஸ் சசி, ஒரு தடவை... ஒருவேள இதுவே கடைசியாகவு மிருக்கலாம். நாம இனி சந்திச்சுக்கவே முடியாமக்கூடப் போயிரலாம்’ என்பதைப்போல் ஏதாவது சொல்லியிருக்கலாம். அப்பொழுது அவளுடைய கையில் தேநீர்க் குவளை இருந்தது. அதற்கு முன்னால் குளியலறைக்குப் போய் அவசர அவசரமாக உடலைக் கழுவிக்கொண்டது நினைவிருக்கிறது. ஆனால் அது உடலில் தெறித்திருந்த ரத்தத்தைக் கழுவிக்கொள்வதற்காகவா? அப்பொழுது அருண்கூட அவளுடன் இருந்தான் இல்லையா? அவனது உடலிலும் ரத்தம் தெறித்திருந்தது. அவனது உடைகள் ரத்தத்தால் சொதசொதவென நனைந்து போயிருந்தன. அந்த உடைகளோடுதான் போயிருக்கிறானா என்ன? அது குறித்து எச்சரிப்பதற்குக்கூட இப்பொழுது அவளுக்கு வழியில்லை.

விஸ்வத்தின் சடலம் முன்பு பார்த்த அதே நிலையில்தான் கிடந்தது. கைகளிரண்டும் விரிந்துகிடந்தன. அகன்று கிடந்த கண்களிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

ஒருவேளை அது அவனது கபாலத்திலிருந்து பெருகி வழிந்ததாகவுமிருக்கலாம். ஆணி அறைவதற்காக முன்னெப்போதோ வாங்கிவைத்திருந்த சிறிய சுத்தியலைக் கொண்டு அவள்தான் அவனது கபாலத்தைப் பிளந்தாள். அந்தத் தருணத்தில் அவன் மிக இழிவான முறையில் அருணின் காலடியில் முழந்தாளிட்டிருந்தான். ‘அருண், உனக்குச் சசிதானே வேணும்? எடுத்துக்கோ, என்ன விட்டுடு அருண்... ப்ளீஸ் என்னக் கொன்னுடாத அருண்’ எனவும் அதைவிட வெட்கங்கெட்ட முறையிலுங்கூட எதையோ சொல்லிப் பிதற்றிக்கொண்டிருந்தது அவளுக்கு ஞாபகமிருந்தது. உயிரை இழக்குமுன் அவன் அவளது கண்களை நேராகச் சந்திக்க முயன்றதாக அவள் கற்பனை செய்துகொண்டிருந்தாள். அருணின் முத்தங்களை ஏற்றுக் கீழே சரிந்தபோது அவனது கண்கள் தங்களைக் கண்காணிப்பதாக முணுமுணுத்தான் அருண். அவள் அவனிடமிருந்து விலகி இமைகளை இழுத்து அந்தக் கண்களை மூட முயன்றாள். ஆனால் இமைகள் மூட மறுத்தன. பார்த்துக்கொண்டிருந்த அருண் உதவிக்கு வந்தான். இருவருமாகச் சேர்ந்து மாறி மாறி முயன்றுங்கூட அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. அருண் சீக்கிரமே களைத்துப்போனான். பிறகு அவள் ஒரு எளிய யோசனை சொன்னாள். அதைக் கேட்டு ஆச்சரியமுற்றவனாக விஸ்வத்தின் முகத்தை ஒரு டவலால் மூடிவிட்டு எழுந்தான் அருண். பிறகுதான் வரவேற்பறைக்கு வந்தார்கள்.

பௌதீக மாணவியான அவளுக்கு இவையெல்லாவற்றுக்குமான நேரத்தைக் கணக்கிடுவது பெரிய சவால் அல்ல. அநேகமாக ஒன்றரை மணி நேரம். விஸ்வம் அவளிடம் மன்னிப்புக் கேட்டபோது பதினொரு மணி ஆறு நிமிடம் என்றால் ஒன்றரை மணி நேரம் கழித்து இப்பொழுது நேரம் குறைந்தபட்சம் பனிரெண்டு மணி முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்களாயிருக்க வேண்டும். ஆனால் கடிகாரமோ ஏறத்தாழ ஒரு மணி நேரத்தைக் குறைத்துக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அது தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டிருக்கும் என்றால்கூடக் குழப்பத்திற்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும். ஆனால் விநோதமான முறையில் அதன் முட்கள் எதிர்த்திசையில் பின்னோக்கிச் சுழல்வதால்தான் வேறுவிதமான கணக்கீடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் கடிகாரத்தின் மின்னணுக்கட்டமைப்பில் நேர்ந்துள்ள விநோதமான இக்கோளாறுகூட ஒரு திட்டவட்டமான இயல்பியல் விதிக்குட்பட்டதாயிருக்க வேண்டுமென நினைத்தாள். அநேகமாக நள்ளிரவு பனிரெண்டு மணிக்குப் பிறகே கடிகாரம் தன் கதியை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் பதினொன்று ஆறுக்குப் பிறகு ஐம்பத்து நான்கு நிமிடங்கள் முன்னோக்கித் தம் வழக்கமான கதியில் நகர்ந்துசென்ற கடிகார முட்கள் நள்ளிரவு பனிரெண்டு மணிக்குப் பிறகு பூஜ்ஜியத்திலிருந்து தலைகீழான பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். தலைகீழான ஓட்டத்தில் இருபத்தைந்து நிமிடங்கள் கழிந்திருக்கின்றன. இனி நேரத்தைக் கணக்கு வைத்துக்கொள்வது அவ்வளவு கடினமல்ல. கடிகாரத்தில் ஒரு நிமிடம் குறையும் பொழுது காலத்தில் ஒரு நிமிடத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். கடிகாரத்தில் பதினொன்று முப்பத்து மூன்று என்றால் நிஜத்தில் பனிரெண்டு இருபத்தாறு. வெகு சுலபம்.

ஆனால் இப்பொழுது யோசிக்க வேண்டியது அதைப் பற்றியல்ல. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் விஸ்வத்தின் உடலை அப்புறப்படுத்தியாக வேண்டும். அருண் எப்பொழுது திரும்பிவருவான் என்பது நிச்சயமற்ற நிலையில் திட்டவட்டமாக அதைக் குறித்து முடிவெடுத்துவிட முடியாதுதான். விடியற்காலை ஐந்து, ஐந்தரைக்கெல்லாம் குடியிருப்புவாசிகளில் சிலர், குறிப்பாக வாக்கிங் போகிறவர்கள் எழுந்துவிடுவார்கள். வேலைக்காரிகளும் நடுத்தர வயதுடைய சில குடும்பத் தலைவிகளும் கீரை, மீன் வியாபாரிகளும் நடமாடத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு முன்னதாக இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்வது நல்லது. அந்த நேரத்தில் செக்யூரிட்டிகள் தேநீர் பருகுவதற்காக இங்கிருந்து அரைக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மேம்பாலத்திற்குக் கீழே ஆட்டோ ஓட்டுநர்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் பேக்கரிக்குச் சென்றுவிடுவார்கள். அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் திரும்பிவந்தாக வேண்டிய நிர்பந்தத்தை அருண் உணர்ந்திருக்கிறானா என்று தெரியவில்லை.

ஆனால் இது போன்ற யூகங்களுக்கும் கணக்கீடுகளுக்கும் தான் அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பதாக நினைத்தாள். தான் இயற்பியல் மாணவி என்பதை அவள் தேவையானபோது மறந்துவிடுகிறாள் அல்லது தேவையில்லாதபோது நினைவூட்டிக் கொண்டுவிடுகிறாள். அதுதான் பிரச்சினை. முதலில் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என நினைத்தாள். எல்லாவற்றையும் அவற்றின் பழைய நிலைகளுக்குக் கொண்டுபோக வேண்டும். அதிகமாகச் சீர்குலைந்து போயிருந்தவை படுக்கையறையும் கூடமும்தான்.

ஒரு கட்டத்தில் விஸ்வத்தால் தன்னை அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ள முடிந்திருந்தது. ஏதோவொரு கனமான பொருளால் அருணின் செவிட்டில் அறைந்து விட்டுத் தப்பி ஓட முற்பட்டிருந்தான். அவர்கள் சுதாரித்துக்கொள்ளாமலிருந்திருந்திருந்தால் கதவைத் திறந்துகொண்டு படிகளில் இறங்கியிருப்பான். பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கவுங்கூட அவனால் முடிந்திருக்கும். அப்போது சமயோசிதமாகச் செயல்பட்டது அவள்தான். அவளுடைய கண்களுக்கு அந்தச் சுத்தியல் தென்பட்டதைத் தற்செயலானது என்றுகூடச் சொல்லலாம். ஸ்டோர் ரூமில் கழித்துக் கட்டப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்களுக்குள் மறைந்து கிடந்த அதை இரண்டு நாட்களுக்கு முன்புதான் தன்னுடைய ஏதோவொரு தேவைக்காகத் தேடியெடுத்திருந்தான் விஸ்வம். உபயோகப்படுத்திவிட்டு டேபிளின் மேல் போட்டுவிட்டுப் போயிருந்தான். பிறகு அது பேப்பர் வெயிட்டாகப் பயன்பட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் சமையலறையின் ஒழுங்கைச் சிதைத்த பொறுப்பு அவளுக்கும் அருணுக்குமுரியது.

தேநீர் பருகிக்கொண்டிருந்தபொழுது அவளுக்கு அருணின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது. தேநீர்க் கோப்பையை விசிறி அடித்துவிட்டுச் சமையறைக்குள் நுழைந்து அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியின் மீது முதுகைச் சாய்த்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். பின்தொடர்ந்து வந்திருந்த அருண் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். அவளது சிகையை வருடி, கன்னத்தைத் தடவி, கழுத்தில் முத்தமிட்டு அவளைத் தேற்ற முயன்றான். அவள் சப்தமிட்டு அழுதாள். அப்பொழுது அருண் அவளது முலைகளைப் பற்றினான். அவள் திமிறி விடுவித்துக்கொண்டாள். மிக மோசமான வசைச் சொல் ஒன்றைச் சொல்லி அவனைச் சபித்துவிட்டுப் பக்கத்திலிருந்த ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை எடுத்து அவனைத் தாக்க முற்பட்டாள். அவன் தலையைக் குனிந்துகொண்டான். அவள் மற்றொரு பாத்திரத்தை எடுத்து அவன்மீது வீசினாள். இப்படித்தான் சமையல் கூடத்தின் ஒழுங்கு குலைந்தது. பிறகு உடலுறவின்போது அவள் தன் செயலுக்காக அவனிடம் வருத்தம் தெரிவித்தாள்.

பாத்திரங்களை அலசி அவற்றின் பழைய நிலையில் வைக்க அவளுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. தரையிலும் சுவரிலும் தெறித்திருந்த ரத்தத் துளிகளை அகற்றுவதற்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. அவற்றை அடையாளம் காண்பது அகற்றுவதைவிடவும் சிரமமானதாயிருந்ததாக நினைத்தாள். உதாரணமாக மிக்சியின் ஒரு ஜாருக்குள் ஒரு அவுன்ஸ் ரத்தம் தேங்கியிருந்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா என்ன? ஆனால் அதற்கும் விஸ்வத்துக்கும் நேரடியான தொடர்பு இல்லை.

சாயந்திரம் ஆறு ஆறரை மணிக்கு அவள் கொஞ்சம் சட்னி அரைத்துவிட்டு ஜாரின் ஆழத்தில் பிளேடுக்குக் கீழே சிக்கிக்கிடந்த தேங்காய்த் துண்டொன்றை அகற்ற முற்பட்டுக்கொண்டிருந்தபொழுது பின்புறமிருந்து அவளைத் தாக்கிவிட்டான் விஸ்வம். கூந்தலைக் கொத்தாக வளைத்துக்கொண்டபோது அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. காயம் ஏற்படாதவாறு விரல்களை விடுவித்துக்கொள்ளவும் அவளால் முடியவில்லை. இது கண்டுபிடிக்கப்படுமானால் தொலைக்காட்சிகளுக்குக் கொண்டாட்டமாயிருக்கும். அவளைக் ‘கணவனின் ரத்தத்தை மிக்சியில் அடித்துக் குடிக்கும் ரத்தக்காட்டேரி’யாகச் சித்தரித்திருப்பார்கள். மிக்சியைக் கழுவி அதை அதன் பழைய இடத்தில், பழைய நிலையில் வைத்தபோதுதான், தன் செயல் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் இழப்பைக் குறித்தும் ஒருவேளை தான் கைதுசெய்யப்பட்டால் தன் வழக்கறிஞருக்குத் தன் சார்பில் தற்காப்பு வாதம் புரிவதற்கான ஒரு அரிய தடயத்தைத் தானே அழித்துவிட்டது குறித்தும் அவளால் யோசிக்க முடிந்திருந்தது.

பிறகு விஸ்வத்தின் உடல் கிடந்த அவர்களது படுக்கையறை. மிக மோசமாக உருக்குலைந்து கிடந்தது அதுதான். சிதறிக் கிடந்த பொருட்களில் முதலில் அவளுடையதும் அவனுடைதும் அருணுடையதுமான ரத்தம் தெறித்த உடைகளைப் பொறுக்கித் தனியாக ஒரு பாலிதீன் கவரில் சேகரித்துக்கொண்டாள். அதற்குப் பிறகு அறை ஒழுங்குபடுத்துவதற்கு அவ்வளவு கடினமானதாகத் தென்படவில்லை. இறைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கிவிட்டால் பிறகு விஸ்வத்தின் உடலை ஒழுங்குபடுத்துவது மட்டும்தான் எஞ்சியுள்ள ஒரே வேலையாயிருக்கும். புத்தகங்களைச் சிதறவிட்டது முட்டாள்தனம் என்று தோன்றியது.

பல புத்தகங்களில் ரத்தத் திட்டுகள். சில உபயோகிக்க முடியாத அளவுக்கு நனைந்து கிடந்தன. புத்தக அலமாரியைப் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்திருந்ததுதான் பெரிய தவறு. அவர்களிருவரையும் தாக்குவதற்குப் புத்தகங்களையே ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு விஸ்வத்துக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டத் தவறு அது. தடித்த, பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் அவனுடைய நோக்கத்துக்கு நன்றாக ஒத்துழைத்தன. அவனுக்கு அந்த அலமாரியின் மீது தீராத வன்மம் இருந்தது. ஒருமுறை அவள் வீட்டிலில்லாதபோது அவற்றில் பெரும்பாலானவற்றைப் பழைய புத்தகக்காரனிடம் எடைக்குப் போட்டுவிட்டான். அவற்றைப் படித்துப் படித்து அவள் கெட்டுப்போய்விட்டாள் என்பது அவனுடைய தீர்மானம். அதற்காக நடந்த சண்டையில் அவள், அவனை மிக மோசமாக அவமானப்படுத்தியிருந்தாள். சமாதானத் தூதுவராக வந்திருந்த அவனுடைய மேலாளர் அவன் செய்த காரியத்தை மிகக் கடுமையாக விமர்சித்ததோடு அதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்கவும் வைத்தான்.

பிறகு அவள் அந்தப் புத்தகங்களைத் தேடி நகரிலிருந்த பழைய புத்தகக் கடைகளுக்கு அலைந்தாள். சிலவற்றை மறுபடியும் புதிதாக வாங்கிக்கொள்ள முடிந்தது என்றாலும் பல மறுபதிப்புக் காணாதவை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மயிலாப்பூர் பிளாட் பாரத்தில் உள்ள பழைய புத்தகக் கடையில் அவை தோன்றியிருந்தன. புத்தக வியாபாரியிடம் அவை தன்னுடைய புத்தகங்கள் என்பதையும் அவை எப்படி அவனுடைய கடைக்கு வந்து சேர்ந்தன என்பதையும் ஒரு கதைபோல விவரித்தாள். அவன் அவளுக்காகப் பரிதாபப்பட்டாலும் புத்தகங்களைத் தர மறுத்துவிட்டான். அவை பல கைகள் மாறித் தன்னை வந்து சேர்ந்திருப்பதாகவும் ஒவ்வொன்றுக்கும் ஒரு நியாயமான விலை நிர்ணயித்திருப்பதாகவும் சொன்னவன், நிர்ணயிக்கப்பட்ட விலையில் பத்து சதவீதத்தை அவளுக்காகக் குறைத்துக்கொள்ளவும் சம்மதித்தான்.

மறுபேச்சுப் பேசாமல் அவன் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் ஒரு ஆட்டோவில் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்துசேர்ந்தாள். இப்போது அவற்றில் பலவற்றை எரிக்க வேண்டியிருக்கும். அல்லது அவர்களுடைய திட்டப்படி ரத்தம் தோய்ந்த பல பொருட்களோடு அவற்றையும் சேர்த்துக் கூவத்தில் கொட்ட வேண்டியிருக்கும்.

உடைகளையும் புத்தகங்களையும் அப்புறப்படுத்தித் தனித் தனிப் பாலிதீன் கவர்களில் கட்டி வைத்த பின் அறையைப் பார்த்தபோது கிட்டத்தட்ட ஒழுங்காக இருந்தது. தண்ணீர் பாட்டில்கள், காஸ்மட்டிக் டப்பாக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி-கீழே விழுந்ததில் அது உடைந்திருந்தது, நல்ல வேளையாகப் பிரேமுக்கு வெளியே சிதறவில்லை-அயர்ன் பாக்ஸ், தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட் கருவி, அதன்மேல் வைக்கப்பட்டிருந்த குரங்குப் பொம்மை போன்றவை ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அவற்றில் எதுவுமே திரும்ப உபயோகப்படுத்தப்படும் நிலையில் இல்லாததால் எல்லாவற்றையும் பாலிதீன் கவருக்குள் போட்டுவிட்டாள். இனிப் படுக்கையும் அதன்மேல் கிடக்கும் விஸ்வத்தின் உடலும் மட்டுமே எஞ்சியிருந்தவை. அவனை அப்புறப்படுத்திய பின் கையோடு படுக்கை விரிப்புகளையும் அப்புறப்படுத்திவிடலாம். ஆனால் அவனது உடலை, அப்புறப்படுத்தப்படும்வரை அப்படியே கிடக்கும்படி விட்டுவிடுவதா என அவள் தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அருணுடன் வரும் ஆட்கள் விஸ்வத்தை அங்கிருந்து எப்படி ரகசியமாக அப்புறப்படுத்தி எங்கே கொண்டுபோய் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றி அவளுக்கு எந்த அனுமானமும் இல்லை.

அருண் எல்லாவற்றையும் திட்டமிட்டிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. முந்தைய இரவு வந்த பொழுது சில கோணிப்பைகளையும் பாலிதீன் கவர்களையும் கொண்டுவந்திருந்தான். பல மீட்டர் நீளம்கொண்ட நைலான் கயிற்றுச் சுருள் ஒன்றுடன் கூர்மையான கத்திகள் வைக்கப்பட்டிருந்த ஒரு ப்ரீப் கேஸும் இருந்தது. முதலில் அதில் மது பாட்டில்கள் இருக்கும் என நினைத்தாள். தங்களுடைய திட்டத்தை தடுமாற்றமில்லாமல் செயல்படுத்துவதற்கு மதுவின் துணை அவசியம் என அவன் கருதுவது இயல்பானதுதான் இல்லையா? விஸ்வத்தைக் கொல்வதற்குக் கத்தியைப் பயன்படுத்தப்போகிறோமா என்று கேட்டதற்குத் தலையாட்டி மறுத்தான். பிறகு அவள் ஒன்றும் கேட்கவில்லை.

எது எப்படி நடப்பதாயிருந்தாலும் இந்த அறையை அப்படியே விட்டுவிடுவது அநாகரிகமானது என நினைத்தாள். சற்றுச் சிரமமெடுத்துக்கொண்டு செயல்பட்டால் ரத்தம் தோய்ந்த படுக்கை விரிப்பையும்கூட மாற்றிவிட முடியும். அவகாசமிருந்தால் உடலைக்கூடத் துடைத்துச் சுத்தமாக்கிவிடலாம். வருபவர்கள் பதற்றமில்லாமல் விரைவாகக் காரியங்களை முடித்துக் கொண்டு புறப்படுவதற்குச் சௌகரியமாக இருக்கும். தனியொரு ஆளாக அதைச் செய்வதற்குத் தைரியத்தைவிட ஒரு பொறியாளருக்குரிய நுட்பம் அவசியமென நினைத்தாள். தாகமாக இருந்தது. குளிர்பதனப் பெட்டியிலிருந்து எலுமிச்சைச் சாறுள்ள ஒரு பாட்டிலையும் ஒரு கண்ணாடித் தம்ளரையும் எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

அவனது உடலிலிருந்து அருவருப்பூட்டும் நெடி வீசத் தொடங்கியிருந்தது. ரத்தத்தின் நெடியல்ல, கிழிந்த குடலிலிருந்து வெளியேறிய மலத்தின் நெடி. பாட்டிலை எடுத்துக்கொண்டு துப்புரவாக்கப்பட்ட சமையல் கூடத்திற்கு வந்து அங்கிருந்த பாலிமர் நாற்காலியில் அமர்ந்தபடி எலுமிச்சைச் சாற்றை இரண்டே மடக்குகளில் குடித்துத் தீர்த்தாள். பிறகு டவல் ஒன்றினால் நாசித்துவாரங்களையும் வாயையும் மூடி இறுகக் கட்டிக்கொண்டாள். டாய்லெட்டிலிருந்த டெட்டால் பாட்டிலையும் பினால் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு கட்டிலுக்குத் திரும்பினாள்.

அவனது உடல் விறைத்திருந்தது. நீண்டு கிடந்த கை கால்களை மடக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும்கூடக் கழுத்தை நேராகத் திருப்ப முடியவில்லை. பிறகு அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு டவலைக்கொண்டு டெட்டால் கலந்த தண்ணீரால் உடல் முழுவதையும் துடைத்துச் சுத்தம் செய்தாள். வயிற்றிலும் பின் கழுத்திலும் மண்டையிலும் ஏற்பட்டிருந்த காயங்களிலிருந்து இன்னும் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. முதலில் அதை நிறுத்த வேண்டும் என நினைத்தாள். ஸ்டோர் ரூமில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு முதலுதவிப் பெட்டி இருந்தது நல்ல வேளையாக அப்போது அவளது நினைவுக்கு வந்தது. அதிகச் சேதாரமடையாத நிலையில் பத்து மீட்டர் நீளமுள்ள காஸ் பீஸும் காட்டனும் டிங்சர் அயோடினும் பாண்ட் எய்டுகளும் அதற்குள் இருந்தன. அவை போதுமானவை அல்ல என்பது நிச்சயமாகத் தெரிந்ததால் அவள் தன் காட்டன் புடவை ஒன்றைத் துண்டுகளாகக் கிழித்துக் கொண்டாள். முன்யோசனையுடன் அருண் வாங்கி வந்திருந்த யூடிகோலன் டின்களை எடுத்துக் கொண்டாள். மருத்துவ உதவிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றுடன் சில காலம் தொடர்பு வைத்திருந்ததால் அதிலிருந்து பெற்ற அனுபவம் அப்போது அவளுக்குக் கைகொடுத்தது. காயங்களைக் கழுவி அவற்றுக்குள் காட்டன் புடவையின் துண்டுகளை ரத்தக் கசிவு நிற்கும்வரை திணித்துக் காஸ் பீஸையும் பாண்ட் எய்டுகளையும் கொண்டு மிகத் திருத்தமாகக் கட்டினாள். பிறகு ஒவ்வொன்றின் மீதும் யூடிகோலனை அடித்ததும் ரத்தத்தின் வீச்சம் ஓரளவுக்குத் தணிந்தது. கடைசியாக ரூம் பிரஷ்னரைக் கொண்டு நறுமணத்தால் கமழச் செய்தாள்.

பிறகு அவளுக்கு அற்புதமான ஒரு யோசனை தோன்றியது.

வரவேற்பறையிலிருந்த பிளாஸ்டிக் பூஜாடிகளில் சிலவற்றைக் கொண்டுவந்து அந்த அறையின் மிகப் பொருத்தமான இடங்களில் வைத்தாள். ஷோ கேஸிலிருந்த புத்தம் புதிதான இரண்டு நாய் பொம்மைகளைத் தொலைக்காட்சிப் பெட்டியின் உச்சியில் எதிரெதிராக நிற்கச் செய்தவுடன் அவர்களுடைய அந்த வீடு அப்போதைய உருக்குலைவுகளிலிருந்து முற்றிலுமாக மீண்டெழுந்து தன் பழைய பொலிவைப் பெற்றுக்கொண்டுவிட்டதாக அவளுக்குத் தோன்றியது. அது குறித்துப் பெருமிதம் கொள்ளவுங்கூட அவளால் முடிந்திருந்தது. பிறகு அவள் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வதுபோல அவர்களது துணிமணிகள் வைக்கப்பட்டிருந்த கப் போர்டைத் திறந்து, அதிலிருந்து அவனுக்கு மிகப் பொருத்தமானது எனத் தான் கருதியிருந்த ஆடைகளில் ஒரு ஜதையைத் தேர்ந்தெடுத்தாள். அவனுடைய உடலின் விறைப்பு இப்பொழுது தளரத் தொடங்கியிருந்ததால் அவற்றை அணிவிப்பது அவளுக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. தாறுமாறாகக் கலைந்து கிடந்த கேசக் கற்றைகளை ஒழுங்குபடுத்திப் படிய வாரிவிட்டாள். இருளடர்ந்து சுண்டிக்கிடந்த முகத்துக்குக் கிரீம் தடவிப் பவுடரை அடர்த்தியாகப் பூசி, தூங்கும்போது கைகளை அவன் எப்படி மடக்கி வைத்திருப்பானோ அப்படி-இடது கையை வயிற்றின் மீது குறுக்காக வைத்தும் வலது கையை மடக்கித் தலைக்கு அடியில் முட்டுக்கொடுத்தும்-படுக்கச் செய்தாள். இது போன்ற தருணங்களில் வழக்கமாக முணுமுணுத்துக்கொள்வதைப் போல “குழந்தைதான்” என முணுமுணுத்துக் கொள்ளவுங்கூட அவள் தவறவில்லை. கட்டிலிலிருந்து இறங்கி அரையடி தள்ளி நின்று பார்த்தபோது அவளுக்குத் தன் செயல் குறித்து மிகுந்த திருப்தி உண்டாயிற்று.

இப்பொழுது, குறைந்தபட்சம் இந்த நொடிகளில் அவனைப் பார்க்க நேரும் எவரும் அவன் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருப்பதாகவே கருதுவார்கள் என அவள் கற்பனை செய்துகொண்டாள். அவன் முன்னெப்போதையும்விட அழகாகத் தோற்றமளிப்பதாக அவளுக்குத் தோன்றியது. யூடிகோலனின் வாசனை நிரம்பிய அந்த அறை முதலிரவுக்காகத் தயார்செய்யப்பட்ட ஒன்றின் நேர்த்தியுடன் மிக அழகாகத் தென்பட்டது. ரத்த நெடி வீசும் உடலுடன் தான் மட்டுமே அந்த இடத்தில் பொருத்தமற்று, அலங்கோலமாக நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தாள். பிறகு குளித்து, உடைமாற்றிக்கொள்வதற்கு அவள் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. விஸ்வத்துக்கு மிகப் பிடித்தமான, அடர் நீலப் பின்னணியில் சூரிய காந்திப் பூக்கள் மலர்ந்து கிடக்கும் சேலையொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். குளியலறையிலிருந்து வெறும் டவலைச் சுற்றியபடி திரும்பியிருந்தவளுக்கு உடை மாற்றிக்கொள்ளும் தருணத்தில் சிறிதளவு வெட்கப்படவுங்கூட முடிந்திருந்தது. மிக மிக மென்மையான அசைவுகளுடன் சிற்றடியெடுத்து நடந்து கட்டிலை அடைந்தபொழுது நம்ப முடியாதபடி அவளது கன்னக் கதுப்புகள் சிவந்துபோய்விட்டன. நீண்டு கிடந்த அவனது தொடையொன்றின் மீது முதுகைச் சாய்த்து உட்கார்ந்துகொண்டு மயிரடர்ந்த மார்பில் விரல்களை அலையவிட்டபடி கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவன் விழித்தெழும் தருணங்கள் பலவற்றின்போது இதே இடத்தில் இதேவிதமாக உட்கார்ந்தபடி இப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும் தன் வழக்கத்தை அவள் அப்போது நினைவுபடுத்திக் கொண்டாள். அவனது நாசித் துவாரங்களிலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசிந்து வருவதைக் கண்டு திடுக்கிட்டுப் போகும்வரை அவளது அந்த நிலை நீடித்துக்கொண்டிருந்தது. பிறகு மிகப் பதற்றம் கொண்டவளாக முதலுதவிப் பெட்டியில் எஞ்சியிருந்த சிறிதளவு காட்டனைச் சிறு உருண்டைகளாக உருட்டி அவனது நாசித் துவாரங்களை அடைத்ததோடு அது முற்றுப்பெற்றுவிட்டது.

ஆக இந்த உடல் கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது; உள்ளுக்குள் அழுகிக்கொண்டிருக்கிறது. என்ன ஆனான் இந்த அருண்? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பிவிடுவதாக வாக்களித்து விட்டுச் சென்றிருக்கும் அவளுடைய ரகசியக் காதலன் எங்கே? ஒருவேளை அவனால் திரும்பவர முடியாமல் போய்விட்டால்? விடைபெறும் தருணத்தில் அவன் தந்துசென்ற முத்தம் கடைசியானதாக இருந்து விட்டால்? உருக்குலைந்த அந்த வீட்டினுள் அழுகிக்கொண்டிருக்கும் இவ்வுடலோடு நிராதரவின் வெம்மைக்குள் அவளைத் தவிக்கவிட்டுவிட்டு அவன் மட்டும் தப்பிச் சென்றிருந்தால்? அவள் நிலைகுலைய இது போதுமானதாயிருந்தது. அவள் பதற்றமுற்றாள். தன்னுடல் திடீரென, சுயக் கட்டுப்பாட்டை இழந்து நடுங்குவதை உணர்ந்தாள். சரிந்துவிடுவோமோ எனப் பயந்து ஒரு பற்றுக்கோடாக விஸ்வத்தின் கையொன்றைப் பற்றிக்கொண்டாள். கெட்டுப்போய், அப்புறப்படுத்துவதற்கான ஆட்களை எதிர்பார்த்துக் கிடக்கும் ஒரு பிரேதத்தின் கையை. ஆனால் நம்ப முடியாதவகையில் அது அவளுக்கு ஆறுதலளித்தது. அருண் விடைபெற்றுக்கொண்டு போய்ச் சில நிமிடங்களே கழிந்திருக்க வேண்டுமென நினைத்தாள். பார்க்கப்போனால் அவனால் இன்னும் புறநகரைச் சென்றடைந்திருக்க முடியாது. உரிய ஆட்களைத் தொடர்புகொள்வதுங்கூட அவனே சொன்னதுபோல் அவ்வளவு சுலபமானதாயிருக்க முடியும் எனத் தோன்றவில்லை. அவளுக்குள் பதற்றத்தை மூளச்செய்தது காலத்தைக் குழப்பும் பழுதுபட்ட இக்கடிகாரமாகவே இருக்க வேண்டும். பசியும் உறக்கமின்மையும் மற்ற காரணங்கள். மிகக் களைத்துப்போயிருப்பதால்தான் தனக்கு இது போன்ற பயங்கரமான கற்பனைகள் தோன்றுவதாக நினைத்தாள்.

கொஞ்சம் பழச்சாறு அல்லது தேநீர் பருகுவதன் மூலம் இத்தகைய பலவீனங்களிலிருந்தும் பதற்றத்திலிருந்தும் விடுபட முடியும் என நினைத்தாள். ஏதாவது இருக்குமா என்பது சந்தேகம்தான் என நினைத்துக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தவளுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. உருக்குலைவின் சிறு அடையாளமுமின்றி மிக ஒழுங்காகத் தென்பட்ட அதன் அடுக்குகளுக்குள் இன்னும் திறக்கப்பட்டிருக்காத ஒரு பாட்டிலில் ததும்பத் ததும்ப நிறைந்திருந்தது அவளுக்குப் புத்துணர்வூட்டவல்ல எலுமிச்சைச் சாறு.

எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இறந்த காலத்தின் பயனற்ற கற்பனைகளுக்கு மனத்தைப் பறிகொடுத்து நேரத்தை வீணடித்துக் கொண்டிராமல் சாத்தியமான மாற்று வழிகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்தின் இருள் தன்னைச் சூழத் தொடங்கியிருப்பதாக நினைத்தாள். அழுகத் தொடங்கியிருக்கும் இச்சடலத்தை அவள் தன்னந்தனி ஆளாக அருண் கொண்டுவந்து வைத்திருக்கும் ப்ரீப் கேஸிலுள்ள கத்திகளின் உதவியோடு துண்டுகளாக வெட்டி, பாலிதீன் பைகளிலும் சாக்குகளிலும் அடைத்து ஒரு வாடகைக் காரைப் பிடித்து ஓட்டுனரின் உதவியோடு அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீசிவிட்டு வர வேண்டிய நிர்பந்தம் தன்மீது சுமத்தப்படுமானால்? அல்லது ஒரு நோயாளியைக் கொண்டுபோவதுபோல விஸ்வத்தை ஆம்புலன்சில் ஏற்றித் தொலைவிடமொன்றுக்குக் கொண்டுசென்று பெட்ரோல் ஊற்றி எரித்துப்போட்டு விட்டும் திரும்பலாம். இதற்கெல்லாம் சம்மதிக்கிற, ரகசியங்களைக் காப்பாற்றுகிற ஒரு டாக்சி அல்லது ஆம்புலன்ஸ் ஓட்டுநரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிய காரியமாக இருக்கும் என அந்தப் பதற்றமான நிலையிலும்கூட அவளால் நம்ப முடியவில்லை. எல்லாவற்றையும் அவையவற்றின் இடங்களில் அப்படியப்படியே தற்போதைய உருக்குலைவுகளோடும் துர்நாற்றத்தோடும் விட்டுவிட்டுப் பிடிபடுவதற்குச் சாத்தியமான எல்லைகளைக் கடந்து தப்பிவிடலாமா எனவும் யோசித்தாள்.

அல்லது ஒரு கதை சொல்லலாம். எல்லோராலும் நம்பத் தகுந்த, நிகழ்காலத்தின் மிகப் பொதுவான கதை.

தனித்திருக்கும் அவர்களுடைய வீட்டை நள்ளிரவில் சில கொள்ளைக்காரர்கள் முற்றுகையிட்டுவிடுகிறார்கள்; நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்க முற்படுகிறார்கள்; தடுக்கவும் கூச்சலிடவும் முயன்ற தம்பதிகளைச் சுத்தியல் முதலான பயங்கரமான ஆயுதங்களால் தாக்குகிறார்கள். கணவனின் கபாலம் பிளந்துவிடுகிறது. எங்கும் ஒரே ரத்த வெள்ளம். அங்குமிங்குமாக ஓடித் தற்காத்துக்கொள்வதற்காக அவள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடைய படுக்கையறையும் சமையலறையும் உருக்குலைந்து விடுகின்றன. தடிமனான புத்தகங்களையும் கனமான பாத்திரங்களையும் விட்டெறிந்துங்கூட அவளால் அவர்களில் யாருக்கும் எந்தக் காயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அவர்களில் ஒருவன் அல்லது வந்திருந்த எல்லோருமே-மூன்று அல்லது நான்கு பேர்- அவளைப் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்குகிறார்கள் என வைத்துக்கொண்டால்? வேண்டாம், அவர்களில் ஒருவன் மட்டும் அவளைச் சமையலறைக்கு இழுத்துச் சென்று அங்கே வைத்துப் பலாத்காரம் செய்துவிடுகிறான். அல்லது வெறுமனே தாக்கிக் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள் என்பதேகூடப் போதுமானது. பிறகு அவள் மயங்கிச் சரிகிறாள். காலையில்தான் அவளுக்கு நினைவு திரும்புகிறது. தன் கணவனைப் பார்ப்பதற்காகப் படுக்கையறைக்குள் போகிறாள். கட்டிலில் ரத்தத்தால் நனைந்து உருக்குலைந்து கிடக்கிறது விஸ்வத்தின் விறைத்த உடல்.

இந்தக் கதை பொருத்தமானதாகவும் நம்பும்படியானதாகவும் இருக்குமா என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. குவளையிலிருந்த பழச்சாறு முழுவதையும் உறிஞ்சித் தீர்த்த பிறகுங்கூட உடலின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போவதைக் குறித்து அவள் ஆச்சரியமடைந்தாள். இது போன்ற நெருக்கடியான தருணங்களின்போது மற்ற ஒவ்வொருவரும் செய்ய விரும்புவதைப் போலவே ‘குறுக்கும் நெடுக்கு’மாக நடக்க அவள் விரும்பினாள். சமையலறை, வரவேற்பறை பிறகு விசாலமான அவர்களுடைய படுக்கையறை எனப் போதுமான இட வசதி அந்த வீட்டில் இருந்ததால் முற்றாகக் களைத்துப் போகும்வரை அவளால் அப்படி நடந்துகொண்டிருக்க முடிந்தது.

பிறகு திடீரென ஞாபகம்வந்ததுபோல பழுதுபட்ட அந்தக் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது, தலைகீழாக. சீரான வேகத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது காலம். பதின்மூன்றிலிருந்து பனிரெண்டுக்கு, பனிரெண்டிலிருந்து பதினொன்றுக்கு, பிறகு பத்துக்கு, எட்டுக்கு, ஏழுக்கு, ஆறுக்கு, ஐந்துக்கு, நான்குக்கு, மூன்றுக்கு, இரண்டுக்கு, ஒன்றுக்கு. ஒன்றிலிருந்து கடைசியில் ஒன்றுமில்லாததற்கு.

அவள் திடுக்கிட்டுப்போனாள். உடலின் வெப்பம் தாள முடியாத அளவுக்கு அதிகரித்துக்கொண்டே போயிற்று. பழச்சாற்றில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கலாம் எனத் தோன்றியது. முன்யோசனையின்றி எல்லாவற்றையும் ஒரேயடியாகக் காலி செய்ததற்காகத் தன்னைக் கடிந்துகொண்டாள். வேறு ஏதாவது இருக்கிறதா எனப் பார்ப்பதற்காகக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தவள் அதனுள் பழச்சாறு நிரம்பிய புத்தம் புதிதான மற்றுமொரு பாட்டிலைக் கண்டு தாள முடியாத அதிர்ச்சிக்குள்ளானாள். ‘கடவுளே’ என வாய்விட்டுக் கத்தியபடி கதவை அறைந்து சாத்திவிட்டுப் பீதியுடன் அதன் மேல் கவிழ்ந்தாள். நான்கடி உயரமேயுடைய அந்தக் குளிர்சாதனப் பெட்டி உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தது. முனகலையொத்த சிறுசிறு சப்தங்கள் அதனுள்ளிருந்து கசிந்து கொண்டிருந்தன. நம்ப முடியாத, அசாதாரணமான, மர்மமான ஓரு சூழலுக்குள் தான் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக நினைத்தாள். திடீரென அந்த அறையினுள் ஒருவித நறுமணம் பரவிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. எங்கிருந்து பரவும் எதனின் வாசனை இது?

காற்றை ஆழமாக உள்ளிழுத்து அது எதனின் வாசனை என இனம் காண முயன்றாள்.

அடக்கடவுளே, இது அவர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்திவரும் ரூம் பிரஷ்னரின் வாசனை அல்லவா? அதை எப்படித் தன்னால் இனம் கண்டுகொள்ள முடியாமல்போனது என்பது குறித்து அவள் ஆச்சரியப்பட்டாள். ஆனால் ஒரு வகையில் அது ஆச்சரியமானதுமல்ல. கொஞ்சம் மிகையாகப் பிரயோகித்துவிட்டிருந்ததால் வேறுவிதமாகத் தென்படுகிறது. ஆனால் அந்த வீடு முன்னெப்போதையும்விடப் பரிசுத்தமாக இருந்ததைக் கண்டு அவள் உற்சாகமடைந்தாள். பரிசுத்தமாக, புத்தம்புதிதாக. பாத்திரங்கள் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தரை, சுவர்கள், ரேக்குகள், திண்டுகள் என அறையின் எல்லா இண்டு இடுக்குகளும் அப்பொழுதுதான் கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டதைப் போலப் பளபளவென்றிருந்தன. பிறகு அவள் பரிசுத்தமாகக் காட்சியளித்த வரவேற்பறைக்கும் அதைவிடவும் பரிசுத்தமாகக் காட்சியளித்த படுக்கையறைக்கும் வந்தாள்.

புத்தம் புதிதானதாகத் தோன்றினாலும் வரவேற்பறையில் சில நுட்பமான ஒழுங்கீனங்கள் தென்பட்டன. அங்கிருந்த பூஜாடிகளைக் காணவில்லை. சோபாவின் மேல் கசங்கிய நிலையில் தாறுமாறாகக் கிடந்தது ஒரு தலையணை. அவளுடைய ஒரு உள்ளாடை மிக ஆபாசமான முறையில் அங்கிருந்த பாலிமர் சேரின் கைப்பிடியில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனவள் அதை எடுத்து அழுக்குக்கூடையில் விட்டெறிந்தாள். தலையணையை அதன் கசங்கலைச் சரிசெய்து எடுத்துக்கொண்டு படுக்கையறையினுள் நுழைந்தவுடன் அவளுடைய கண்களுக்கு முதலில் தென்பட்டவை வரவேற்பறையிலிருந்து காணாமல் போயிருந்த பூஜாடிகள்தாம். ‘ஆமாம், மறந்தே போய்விட்டது’ என முணுமுணுத்துக்கொண்டாள். படுக்கையறையில் வீசிய யூடிகோலன் நெடி குமட்டிற்று. யூடிகோலனின் நெடியும் டெட்டாலின் நெடியும். இன்னும் சிறிதளவு ரூம் பிரஷ்னரைத் தெளித்தால் சரியாகிவிடும் எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல முணு முணுத்தபடி அதைத் தேடினாள். வழக்கமாகத் தென்படும் கப்போர்டில் இல்லாமல் புத்தக அலமாரியின் ஒரு விளிம்பில் கிடந்தது அது. இந்த ஒழுங்கீனம் பெருமைப்பட்டுக்கொள்ளத்தக்கதல்ல எனச் சொல்லிக்கொண்டாள். அதை எடுப்பதற்காகப் படுக்கையின் மீது மண்டியிட்டபோது குறுக்காகக்கிடந்த விஸ்வத்தைத் தொந்தரவுசெய்ய வேண்டியதாயிற்று. ‘இன்னுமா எழுந்திருக்கவில்லை, மணி என்னாகிறது தெரியுமா விஸ்வம்?’ எனக் கேட்டுக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தாள். எதிர்த்திசையில் தலைகீழாகச் சுழன்றுகொண்டிருந்த கடிகாரத்தை!

ஆனால் பழுதுபட்ட அந்தக் கடிகாரம்தான் நிகழ்காலத்தை, அதன் நெருக்கடியான நொடிகளை அவளுக்கு நினைவூட்ட உதவியது எனச் சொல்வது ஒரு அபத்தமான கூற்றாகவே இருக்கும். நாற்றமெடுக்கத் தொடங்கியிருந்த விஸ்வத்தின் உடலையும் யூடிகோலனின் வாசம் மிதந்துகொண்டிருக்கும் மிக நேர்த்தியான அறையையும் காலத்தை எதிர்த்திசைக்கு நகர்த்திச் சென்றுகொண்டிருந்த அந்தக் கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னால் இனி ஒருபோதும் கடந்த காலத்துக்குத் திரும்பிச் சென்றுவிட முடியாது என்பதைத் திட்டவட்டமாக உணர்ந்தாள். அருண் தான் வாக்களித்தது போல் ஆட்களை அழைத்துக்கொண்டு திரும்பவும் வந்துவிடுவான் என இனியும் நம்புவது பேதமையைத் தவிர வேறல்ல. அவள் கற்பனைசெய்து வைத்திருக்கும் ‘கதை’யைச் சொல்வதற்கு இனி எந்த வாய்ப்புமில்லை. எல்லாவற்றையும் முட்டாள்தனமாக அவளே உருக்குலைத்து வைத்திருக்கிறாள். புதிதாகத் திட்டமிடுவதற்கோ நடைமுறைப்படுத்துவதற்கோ எந்த அவகாசமுமற்ற நிலையில் நாளையின் முன் சரணடைவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. காலத்தின் மீதான கட்டுப்பாட்டை முற்றாக இழந்து நிற்கிறாள் அந்த பௌதீக மாணவி.

இன்னும் ஓரிரு மணி நேரங்களுக்குள், அதாவது பழுதுபட்ட கடிகாரத்தின் சிவப்பு நிற முனையுடைய மிக மெலிந்த நொடி முள் 120 முறை தலைகீழாகச் சுற்றி முடிப்பதற்குள் ‘நாளை’யின் கணக்கு தொடங்கிவிடும். சடலம் அழுகத்தொடங்கிவிடும்; நாற்றமெடுக்கத்தொடங்கிவிடும். கணவனைக் கொன்று அவனது பிரேதத்தை அலங்கரித்துப் பாதுகாத்துக்கொண்டிருந்த வினோத மனைவிக்குக் காத்திருக்கிறது கைவிலங்கு. தொடர்ந்துவரும் ஏதோ ஒரு ‘நாளை’ அவளது வாழ்வின் கணக்கை முடித்து வைத்துவிடும். அவளை ஒன்றுமில்லாதவளாக்கிவிடும். அவளுடைய நாளை ஒன்றுமில்லாதது, ஒளியற்றது, நம்பிக்கையற்றது. பார்க்கப்போனால் அவளுக்கு இனி நாளைகளே இல்லை. இருப்பது நேற்றுகள் மட்டுமே. நேற்றும், முன்தினமும் அதற்கு முந்தைய முப்பத்தியொரு வருடங்களும். ஒருவேளை காலமே பின்னோக்கி நேற்றைத் தேடிச் சுழன்று செல்கிறதோ? பழுதுபட்ட கடிகார முட்கள் காலத்தையும் பின்னகர்த்திச் சுழன்றுகொண்டிருக்கின்றனவோ? ஒரு புள்ளியில் பிரபஞ்சத்தின் இயங்குவிதியே தலைகீழாக மாறிவிட்டதோ?

இது மட்டும், ரகசியக் காதலனோடு சேர்ந்து தன் கணவனைக் கொன்று, அவனது பிரேதத்தை அப்புறப்படுத்துவதற்கும் வழி தெரியாமல், வாக்களித்துச் சென்றிருக்கும் காதலனாலும் கைவிடப்பட்ட ஒரு பௌதீக மாணவியின் அதீதக் கற்பனையாக இல்லாதிருக்குமானால்...!

அப்படியானால் வாழ்க்கை நாளையை நோக்கியல்லாமல் நேற்றை நோக்கித் திரும்பிச் செல்லப்போகிறது. நேற்றிலிருந்து நேற்று முன்தினத்துக்கும் பிறகு அதற்கு முந்தைய நேற்றுகளுக்கும். நாளை என்பது இனி அவளுக்கு இல்லை. எந்த உயிருக்குமில்லை. இருப்பவை நேற்றுகள் மட்டுமே. நேற்றென்ன நடந்ததோ அதுதான் ‘நாளை’ நடக்கப்போவதுமாயிருக்கும். நாளைய மறுநாளின் வாழ்வென்பது நேற்று முன்தினத்தின் வாழ்வு. இப்படி நாட்களும் மாதங்களும் வருடங்களும் யுகங்களுமாக மனித குலச் சரித்திரம் பின்னோக்கிப் பயணப்படப்போகிறது.

இறந்த காலத்தை நோக்கித் தலைகீழாகப் பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தின் பழுதுபட்ட கதியை எப்படி எதிர்கொள்ளப்போகிறான் மனிதன்? கைவிடப்பட்ட பாதைகளின் வழியே திரும்பிச் செல்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது அவனுக்கு? பயணம் என அதை அழைக்க முடியுமா? நிகழ்ந்து முடிந்துவிட்டவை ஒவ்வொன்றும் தலைகீழான வரிசைக்கிரமத்தில் திரும்பவும் நிகழுமென்றால்? அப்படியானால் ‘எதிர்கால’த்தில் புதிர்களுக்கோ மர்மங்களுக்கோ துளியும் இடமிருக்கப் போவதில்லை. சவால்களுக்கு, தொடை தட்டல்களுக்கு இனி எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. கனவுகளுக்கும் இனி இடமில்லை. கனவின் விளைச்சல்களான மனித குலச் சாதனைகளுக்கு எதிர்காலத்தில், சரியான அர்த்தத்தில் இறந்த காலத்தில் எந்த அவசியமும் இல்லை. அறிந்தவரை போதும் என மனிதனுக்குக் கதவைச் சாத்திக்கொண்டுவிட்டது காலம். அறியாதவற்றைத் தேடிக்கொண்டு பல யுகங்களைக் கடந்துவந்துவிட்ட மனிதன் இனி அறிந்தவற்றைக் கொண்டு காலத்தின் கிளைகளில் வௌவால்களைப் போலத் தலைகீழாகத் தொங்கிப் பிழைப்பை நடத்திக்கொள்ள வேண்டியதுதான். காலாவதியாகிப்போனதெனத் தன்னால் கைவிடப்பட்ட, பயனற்றதெனத் தூக்கியெறிந்துவிட்ட வாழ்வை அதன் உருக்குலைவுகளால் ஏற்படும் அருவருப்பைப் பொருட்படுத்தாமல் தேடியெடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வது தவிர மனிதனுக்கு வேறு வழியில்லை. மரணம்வரை வேறு வழியில்லை!

மரணம் என்ற வார்த்தையின் ஞாபகம் அவளை அதிர்ச்சியடையச் செய்தது. முன்னைவிடவும் அதிகச் சோர்வுக்குள்ளாகியிருந்தாள் அவள். இன்னும் கொஞ்சமாவது எலுமிச்சைச் சாறு இருக்கக்கூடுமென்றால்?

ஒருவேளை காலத்தின் தலைகீழான இயக்கத்தில் அது தன் முந்தைய நிலைக்குத் திரும்பியிருந்தால்? அதன் மூலக்கூறுகள் வெறும் தண்ணீராகவும் சர்க்கரையாகவும் எலுமிச்சையாகவும் பிரிந்து அவையவற்றின் கதியில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியிருந்தால்? இனி ஒருபோதும் அவளால் அந்தக் குறிப்பிட்ட எலுமிச்சையின் சாற்றைப் பருக முடியாமல் போகலாம் என நினைத்தாள். காலம் தன் கணக்கைக் கழித்துக்கொண்டு செல்லும்போது ஏதாவதொரு நொடியில் அந்த எலுமிச்சை தன் மரத்துக்கு, அதன் கிளைக்குத் திரும்பலாம். கனியிலிருந்து காயாகவும் காயிலிருந்து பிஞ்சாகவும் பிறகு பூவாகவும் அதன் பயணம் தலைகீழானதாக இருக்கும். பூ மொட்டாகும். மொட்டு அரும்பாகும். அதற்குப் பிறகு..?

அதற்குப் பிறகு அதற்கு எந்த உருவமும் இருக்கப்போவதில்லை. காலத்தின் கருந்துளைக்குள் ஒன்றுமில்லாததாக அதன் பயணம் முடிவுறும்.

பார்க்கப்போனால் இனி மரணம் என்பதற்கேகூட வாய்ப்பில்லை. மறு உயிர்ப்பு மட்டும்தான். இருக்கும் ஒவ்வொரு உயிரும் இனிப் பிறப்பை நோக்கிப் பயணப்படப்போகிறது. இறப்பைத் தழுவிப் புதையுண்டு எதுவுமற்றதாகிப்போய்விட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோவொரு நொடியில் விழித்தெழப்போகிறது. சவக்குழிகளிலிருந்தும் சாம்பல்களிலிருந்தும் நோயுற்ற, மூப்படைந்த உடல்கள் உயிர்பெற்று எழப்போகின்றன. மூப்பினதும் நோயினதும் கொடிய துன்பங்களை எல்லா உயிர்களும் மீண்டும் ஒருமுறை அனுபவிக்கப்போகின்றன. ஒவ்வொரு உயிரும் கிழப்பருவத்திலிருந்து குழந்தைமையை நோக்கித் தலைகீழான கதியில் மீண்டும் வாழப்போகிறது. முடிவு என்பது சவக்குழிக்குச் செல்வதன்று, கருப்பையை அடைவது என்றாகும். அங்கும் பத்து மாதங்கள்வரை வாழ்க்கை இருக்கிறதே! அதற்குப் பிறகும்கூடச் சில நாட்களோ சில கணங்களோ தாயின் சினைமுட்டையில் ஒரு பாதியாகவும் தகப்பனின் விந்துத் துளியில் மறு பாதியாகவும் நீடித்திருக்க முடியும்.

பிறகு . . . ?

பிறகு ஒன்றுமில்லை. மரணம் ஏற்படுத்தும் அதே விளைவு. ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததை நோக்கி. காலத்தின் கதி எப்படிப்பட்டதாயினும் வாழ்வின் மாறாத கோலத்தை நினைத்து அவள் சலிப்புற்றாள். விஸ்வத்தின் உடலில் ஏதாவது அசைவு தென்படுகிறதா எனக் கூர்ந்து பார்த்தாள். ஏதாவதொரு கணத்தில் அவனால் புரண்டு படுக்க முடிந்தால்? விழித்தெழுந்து கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்திச் சோம்பல் முறிக்கச் சாத்தியப்பட்டால்? தன்னாலுங்கூட குழந்தைப் பருவத்தை நோக்கிச் செல்ல முடியுமே! முதலில் கன்னியாகவும் பிறகு குழந்தையாகவும். இரண்டுமே குதூகலம் நிரம்பிய பருவங்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்னால்வரை விஸ்வத்துடனான வாழ்வுங்கூடக் குதூகலம் நிரம்பியதாகவே இருந்தது. அவனது காதலின், காமத்தின் கதகதப்பான தருணங்கள் அவளுக்குத் திரும்பவும் கிடைக்குமானால்? அப்படியானால் காலத்தின் கதியில் ஏற்பட்டுவிட்ட இந்தப் பழுதைக் கொண்டாடலாம்தான்!

குளிர்சாதனப் பெட்டியில் சிறிதளவு பழச்சாறு எஞ்சியிருக்கத்தான் செய்தது. ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டுக் குளியலறைக்குப் போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். விஸ்வத்தின் கட்டிலுக்குப் பக்கத்தில் பாலிமர் நாற்காலியைப் போட்டு அவனைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தாள். இன்னும் நேரம் இருக்கிறதே! சரியாகப் பதினோரு நிமிடங்களும் இருபத்து ஏழு நொடிகளும் எஞ்சியிருக்கின்றன. தன் தலைகீழான பயணத்தில் அந்தச் சின்னஞ்சிறு நொடி முள் விஸ்வம் அவளிடம் மன்னிப்புக் கேட்ட, மரணத்தைத் தழுவிய அந்த நொடியைத் தழுவும்போது அவன் விழித்தெழுவான். பிறகு அவளுக்கு அது பற்றி யோசிக்க ஒன்றுமே இல்லாமல்போனது. விழித்தெழுந்தவுடன் அவனிடம் தன் செயலுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்குமா எனக் கேட்டுக்கொண்டாள். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. புத்துயிர்ப்புக்குப் பின்பு மனிதனிடம் பழைய குரோதங்களும் அன்பும் எஞ்சியிருக்க முடியுமா என யோசித்தாள். குரோதமோ அன்போ அற்ற ஒருவனுடனான வாழ்வு எப்படியிருக்கும் என்னும் கற்பனையில் மூழ்கிப்போவதற்கும்கூட விரும்பினாள் சசி.

திடீரென ஒலித்த ஒரு முனகல் அவளைப் பதற்றமடையச் செய்தது. தான் உட்கார்ந்திருந்த பாலிமர் நாற்காலியிலிருந்து அவள் துள்ளியெழுந்தாள். உடல் நடுங்கியது. வியர்த்தது. மிகக் கவனமாக அவனை நெருங்கி, நடுங்கும் கரங்களால் போர்வையை விலக்கி அவனது முகத்தைப் பார்த்தாள். விஸ்வத்தின் நாசித் துவாரங்கள் விடைத்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. சிறிது நேரத்திற்கு முன்பு அவற்றுக்குள் அவள் திணித்திருந்த காட்டன் உருண்டைகளிலொன்று சிதறி அவனுடைய புறங்கழுத்தின் மீது விழுந்துகிடந்ததை அவளால் பார்க்க முடிந்தது. மார்புக்கூடுங்கூட மிக மிக லேசாக எழுந்து தணிந்துகொண்டிருப்பதாய் அவளுக்குத் தோன்றியது. புறங்கையை அவனது நாசித் துவாரங்களில் வைத்துச் சோதித்தாள்.

ஆனால் காலம் இன்னும் எஞ்சியிருக்கிறதே? துல்லியமாக ஐந்து நிமிடங்களும் பத்தொன்பது நொடிகளும்.

நம்ப முடியாத வேகத்தில் துடிக்கத் தொடங்கியது அவளுடைய இதயம். சட்டென்று அவள் அவனிடமிருந்து விலகினாள். வரவிருக்கும் முடிவான கணத்தை எப்படி எதிர்கொள்வது என யோசிக்க முற்பட்டாள். அந்தக் கணம் எப்படியிருக்கப்போகிறது? உயிர்ப்புற்று எழுந்தவுடன் என்ன செய்யப்போகிறான் விஸ்வம்? தான் விஸ்வம் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கப் போகிறதா? அவளை நினைவுபடுத்திக்கொள்ள, யாரென்று அறிந்துகொள்ள அவனால் முடியுமா? அருணைக் குறித்தும் அவனுடனான அவளுடைய உறவுகள் குறித்தும் அவனுக்கு என்னவெல்லாம் நினைவிலிருக்கும்? எழுந்த கசப்புகள், உருவான இடைவெளிகள், பரிமாறிக்கொண்ட வசைகள், மூண்ட சண்டைகள் இவற்றில் எவையெல்லாம் அவன் நினைவடுக்குகளில் பதுங்கியிருக்கும்? எவையெல்லாம் மேலெழுந்து தொடரும்? அதற்குள் அருண் வந்துவிட்டால்? விஸ்வத்தின் உடலை அப்புறப்படுத்துவதற்கான ஆட்களோடு வந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டால்? கடவுளே, தன் கதியை மாற்றிக்கொண்ட காலத்தின் முதல் சாட்சியாய் இருக்க நேர்வது எவ்வளவு கொடியது? அதை எதிர்கொள்வதற்கான பலத்தை அவள் எங்கிருந்து பெறப்போகிறாள்? அளிக்கப்போவது யார்?

இந்த நெருக்கடியிலிருந்து எப்படித் தப்புவது? எங்காவது ஓடிவிட்டால்? யாருமே அற்ற ஒரு இடத்துக்குப் போய் எஞ்சியுள்ள வாழ்வைக் கழித்துத் தீர்த்துவிட்டால்? ஆனால் தன் கதியைத் தலைகீழாய் மாற்றிக்கொண்டுவிட்ட காலத்தின் முன்னால் எஞ்சியுள்ள வாழ்வு என்பது என்ன?

பிறகு அவள் எழுந்தாள். அலமாரியைத் திறந்து உடைகளில் ஒன்றிரண்டை எடுத்துத் தோள் பையொன்றில் திணித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பினாள். அவனது மறு உயிர்ப்பின் விளைவுகள் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். எதிர்கொள்ளலின் வலியிலிருந்து தப்பிச் செல்வதே தான் செய்யவேண்டியது என நினைத்தாள். படுக்கையறையிலிருந்து வரவேற்பறைக்கு வந்தவள் செருப்பைத் தேட முற்பட்டபொழுது மிக மிகத் தற்செயலாக சோபாவின் மீது ஒரு கசங்கிய தலையணையையும் பாலிமர் நாற்காலியின் மீது மிக ஆபாசமான முறையில் தொங்கிக்கொண்டிருந்த தன் உள்ளாடையையும் பார்த்தாள். ஆனால் சற்று நேரத்திற்கு முன்னால் அவள் அந்த உள்ளாடையைக் கண்டுபிடித்து அழுக்குக்கூடைக்குள் விட்டெறிந்திருந்தாளே? தலையணையைக்கூடப் படுக்கையறைக்குக் கொண்டு சென்றிருந்தது நினைவுக்குவந்தது.

பிறகுதான் அந்தப் பூஜாடிகள் அவளது கண்ணில்பட்டன. அருண் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவுடன் அவற்றைப் படுக்கையறைக்குள் எடுத்துப்போனது அவளுக்கு மிகத் துல்லியமாக நினைவிலிருந்தது. சந்தேகமேயில்லை. காலம் திட்டவட்டமாக எதிர்த் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. முன்பு நிகழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் தலைகீழான கதியில் திரும்பவும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் அதன் பழைய இருப்பிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. கல்லறைகளிலிருந்து மீண்டெழுந்துகொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். சடலங்கள் உயிர்பெற்றெழுந்துகொண்டிருக்கின்றன.

பையை வீசிவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்தவளுக்கு முகம் வெளிறிவிட்டது. அவர்களுடைய அந்தப் படுக்கையறை முன்பு தென்பட்டதுபோலவே உருக்குலைந்து கிடந்தது. புத்தகங்களும் தண்ணீர் பாட்டில்களும் அறை முழுவதிலும் சிதறிக் கிடந்தன. சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகள், மேசை, நாற்காலி எனத் தென்பட்ட எல்லாவற்றின் மீதும் தெறித்து உறைந்த ரத்தம். அறை முழுவதும் அப்பொழுதுதான் நிகழ்ந்த புத்தம் புதிதான மரணத்தின் நெடி. யூடிகோலனின் வாசனையோ டெட்டாலின் நெடியோ இல்லை. விஸ்வம் அவளிடம் மன்னிப்புக் கேட்ட, அவனது உயிர் அவனிடமிருந்து பறிக்கப்பட்ட நொடிக்குப் பிந்தைய சில நிமிடங்களில் அந்த அறை அப்படித்தான் தென்பட்டிருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டாள்.

மிகத் துல்லியமாக இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு முக்கியமான அந்தக் கணம் வந்துவிடும். அவனது மறு உயிர்ப்பை நேரடியாகப் பார்த்துவிடும் பதைபதைப்போடு படுக்கையில் அவனுக்குப் பக்கத்தில் அவனது தோள்மீது சாய்ந்தபடி கிட்டத்தட்ட முத்தமிடுபவளைப் போலக் குனிந்தவாறு குருதிவற்றி கருத்துக் கிடந்த சடலத்தின் முகத்தையும் எதிர்த்திசையில் பின்னோக்கிச் சுழலும் கடிகாரத்தின் மெலிந்த நொடி முள்ளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். எஞ்சியிருந்தவை வெறும் அறுபது நொடிகள். ஒரே ஒரு நிமிடம். ஆனால் எந்தச் சலனமுமில்லாமல், உயிர்பெற்றெழுவதற்கான எந்தத் தடயமுமில்லாமல் கல்போல் இறுகிக்கிடந்தது விஸ்வத்தின் உடல். அவள் பொறுமையிழந்தவளானாள். நொடிமுள்ளின் பின்னோக்கிய நகர்வுக்கு ஒத்திசைவாகச் சொடக்குப் போட்டபடி காத்திருந்தாள். நாற்பது, முப்பத்தொன்பது, முப்பத்தெட்டு, முப்பத்தேழு... ஒரு வேளை எல்லாம் அவளது கற்பனையாக முடிந்துபோனால்?

ஆனால் கடைசி நொடிவரையிலும்கூட நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. ஒரு நொடியில் அது நிகழலாம். ஒரு நொடி என்பது எப்போதுமே அற்பமான கால அளவாக இருப்பதில்லை. சில தருணங்களில் ஒரு நொடி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும். ஓராண்டுக்கு முன்பு அவளைக் காதலிப்பதாக அருண் அவளிடம் சொன்னபோது பதில் சொல்வதற்கு அவள் ஒரே ஒரு நொடியைத்தான் செலவிட்டிருந்தாள்.

உள்ளடக்கம்