|
முத்துக்குமாரின் உயிர்நீத்தல் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் எதிர்கொள்ளப்பட்ட
விதத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழருக்காக உயிரை,
பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக அறிவிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும்
இதுவரை ஒரு துரும்பையும்கூடத் துறக்கவில்லை என்ற உண்மையை முத்துக்குமாரின்
தீக்குளிப்பு துலக்கமாக உணர்த்தியுள்ளது. பதவி, அரசியல், தேர்தல் கூட்டணி எனப் பல
தளங்களில் மத்திய அரசால் தமிழகத் தலைவர்களுடன் ஆடுபுலி ஆட்டம் ஆட முடிந்த காலகட்டம்
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் இருந்த பல அப்பாவிகளின்
படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழர்களுக்காக உரிமைக்குரல் கொடுப்பதில் தமிழகத்
தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த கூட்டு மனத்தடையும் சிதறிவிட்டது. இன்று தமிழக மக்களின்
கொந்தளித்த மனநிலைக்கு ஈடுசெய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களும் திக்குமுக்காடி
நிற்கின்றனர். தமிழினத் தலைவர்களால் மத்திய அரசில் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு
இளைஞனின் உயிர்நீத்தல் சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஆடையை இழந்து நிற்கும்
ராஜாக்கள் முகத்தில் தெரிவது நாணமா? அச்சமா? சிங்கள இனவாதத்தையும் தமிழர்
படுகொலையையும் பாராமுகமாக இருந்த உலகச் சூழலிலும் சலனங்கள் ஏற்படத் துவங்கியுள்ளன.
தெற்காசியாவில் இந்தியாமீது பற்றுதலும் நம்பிக்கையும் கொண்ட ஒரே இனக்குழு
ஈழத்தமிழர் மட்டும்தான் என்ற உண்மை காங்கிரஸ் தலைமைக்கு உறைப்பதே இல்லை.
தமிழகத்திற்கு அப்பாலும் இந்திய ஆங்கில ஊடகங்களிலும் ஈழப் பிரச்சனையின் தீவிரம்
பற்றி உணர்த்தப் பெரும் தடையாகவும் ஒரு சாபக்கேடாகவும் இருந்துவருவது ‘தி இந்து’வின்
நிலைப்பாடு. இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை கொழும்புவிலிருந்து வெளிவரும் அரசு
சார்பான ஆங்கில ஊடகங்களில் வெளிப்படாத ஒரு ராஜ (பக்ஷே) விசுவாசமும் கண்மூடித்தனமான
புலிகள் இயக்க வெறுப்பும் ‘தி இந்து’வில் வெளிப்பட்டு ஈழத் தமிழர் துயரங்கள் பற்றிய
இந்திய மக்களின் புரிதலை நீண்ட காலமாக மாசுபடுத்தி வருகிறது. சிங்கள இனவாதம் என்று
ஒரு வஸ்து நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவருவதையே மறுக்கும் ‘தி இந்து’வின்
மூடத்தனத்தைக் கண்டிக்கச் சொற்களே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது ஈனத்தனமான
கருத்துகளையும் பரப்பும் சுதந்திரமும்தான் என்பதை உணர்ந்து பொறுமையைக்
கடைப்பிடிக்க வேண்டிய காலகட்டம் இது.
ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி துவக்கிவைத்த
பின்னர் விரைவில் அது கலைஞரின் நாடக மேடையாக மாறியது. தீர்மானங்களும் வீரவசனங்களும்
ரகசிய பேரங்களும் கட்டாய உண்ணாவிரதங்களும் எனக் கனவுக் காட்சிகளின் புகையும்
மினுக்கும் படுகொலையின் தீவிரத்தில் மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இன்று
தியாகத்தின் ஜுவாலையில் நாடக மேடை கருகிவிட்டது. அசலான, அரசியல்வாதிகளுக்கு
அப்பாற்பட்ட இயக்கம் தமிழகத் தெருக்களில் உறுமி நடைபோடத் துவங்கியிருக்கிறது.
திமுகவின் அடிவருடிகள் சினிமா உண்ணாவிரதங்களின் முதல் கட்டத்தை இயக்கமாகவும்
முத்துக்குமாரின் உயிர்நீத்தலையும் அவர் விருப்பப்படி ‘பிணத்தை . . . ஒரு துருப்புச்
சீட்டாக வைத்து’ தீவிரமடைந்த இயக்கத்தை நாடகமாகவும் உண்மையின் தடயமற்ற சொற்களில்
துப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்றைய ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் மிக முக்கியமான இன்னொரு அம்சம் அதில்
முழுமனதாக ஈடுபட்டுவரும் எழுத்தாளர் இயக்கம். தமிழக வரலாற்றிற்கு இது புதிது.
மதுரையிலும் சென்னையிலும் இன்னும் பல பகுதிகளிலும் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து
இயங்கிவருகின்றனர். இரு குழுக்களாகத் தில்லி சென்று குரல் கொடுத்திருக்கின்றனர்.
எழுத்திற்கும் இயக்கத்திற்கும் இடையேயிருந்த கருஞ்சுவர் தகர்ந்திருப்பது மிகுந்த
வரவேற்புக்குரியது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்த இயக்கம் பெரும் வன்முறையாக
வெடித்திருக்கிறது. போராடும் வழக்கறிஞர்களே வன்முறையைத் தூண்டியதாகப் போலீசார்
குற்றஞ்சாட்டுகின்றனர். போராட்டக்காரர்கள் போலீசாரைத் தூண்டுவது அதிசயமல்ல. உலகின்
பல நாடுகளில் போராட்டக்காரர்கள் போலீசார்மீது பெட்ரோல் குண்டு வீசும்போதுகூடக்
கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கப் போலீசாருக்குப் பயிற்சியளிக்கப்பட்டு அமைதி
காக்கப்படுகிறது. நமது போலீசார் நீதிமன்ற வளாகத்தில் எந்த நாகரிகமும் கட்டுப்பாடும்
இல்லாத வன்முறையில் ஈடுபட்டது ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னரும்
போலீசார்மீது நடவடிக்கை எடுக்கும் திராணி இல்லாத தமிழக அரசு வழக்கறிஞர்களையும்
போலீசாரையும் கட்டைப் பஞ்சாயத்து நடத்த வேண்டுகோள் விடுக்கிறது.
உள் துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் அதன்மீதான கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்டம் மீறப்பட்டிருக்கிறது என்பது உறுதி. சட்டத்தை
மீறியிருப்பது வழக்கறிஞர்களும் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரும். இப்போதைய
தேவை அவர்கள்மீதான சட்டப்படியான நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைகள். பரஸ்பரம் பேசி
முடிக்க இது குடும்பப் பிரச்சனை அல்ல; ஒரு மாநிலத்தின், தேசத்தின் பொதுப் பிரச்சனை.
இந்நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் ஆற்றல் கலைஞரிடம் இன்று இல்லை என்பது
சுய பட்சாதாபத்தைத் தூண்டும் மலிவான தந்திரங்களில் அவர் இறங்கியிருப்பதிலிருந்து
உறுதிப்படுகிறது. உள் துறையை மட்டுமல்ல இந்த ஆட்சிக்குத் தலைமையேற்று முதலமைச்சராகச்
செயல்படும் தகுதிகள் பலவற்றையும் கலைஞர் இழந்துவிட்டார். உடல்நலம், தார்மீகபலம்,
நிர்வாகத்திறன், மக்கள் ஆதரவு எதுவும் இன்று கலைஞரிடம் இல்லை. ஒரு தலைவனுக்கு
எப்போது தலைமையேற்க வேண்டும் என்பது தெரிய வேண்டும். அதைவிட முக்கியமாக எப்போது
வெளியேறுவது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். |