Google   www kalachuvadu.com

கட்டுரை:
மலேசிய அரசியல்: தவளைகள் தாவும் குளம்
சை. பீர்முகம்மது
நாடு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்ததிலிருந்து, கடந்த 51 ஆண்டுகளாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்துள்ள தேசிய முன்னணி அரசு 8 மார்ச் 2008இல் மலேசியப் பொதுத்தேர்தலில் பலத்த சரிவை எதிர்கொண்டது.

மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே எதிரணியான மக்கள் கூட்டணியின் தாரக மந்திரமாகச் சொல்லப்பட்டது. தேசிய முன்னணி தான் நினைத்த சட்டங்களையெல்லாம் இயற்ற முடியாமல் செய்யும் நிலையை ஏற்படுத்தவே எதிரணிகள் ஒன்றுசேர்ந்தன. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஒரு ‘சுனாமி’போல நாடாளுமன்றத்தில் 82 இடங்களை எதிர்க்கட்சிகள் கைப்பற்றின. தேர்தலில் பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினார்கள். மலேசியன் இந்தியக் காங்கிரசின் (ம. இ. கா.) ஒரே கேபினட் அமைச்சரான டத்தோஸ்ரீ சாமிவேலுவும் தோல்விகண்டார். மூன்று துணையமைச்சர்களையும் ம. இ. கா. இழந்ததோடு போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளில் மூன்றை மட்டுமே வென்றது.

மலேசிய நாடாளுமன்றத்தின் 222 இடங்களில் தேசிய முன்னணி 140 இடங்களை வென்று, தனது மூன்றில் இரண்டு பங்கு இடத்தைத் தற்காத்துக்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதே தேர்தலில் மிக முக்கியமான ஐந்து மாநிலங்களை எதிர்க்கட்சியினரிடம் தேசிய முன்னணி இழந்தது.

தேர்தல் முடிந்த மறுமாதமே, பேராக் மாநிலம் கைமாறும் என்று அதன் முன்னாள் முதலமைச்சர் பேச ஆரம்பித்தார். (பேராக் என்றால் வெள்ளி என்று அர்த்தம். உலகிலேயே அதிகமாக ஈயம் கிடைத்த மாஞ்சோவ் மாவட்டம் இங்கேதான் இருக்கிறது.)

மாநிலச் சட்டசபையில் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி 31 இடங்களை வென்றது. ஆளும் கட்சியான தேசிய முன்னணி 28 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. மலேசிய வரலாற்றில் முதன்முறையாகத் தமிழரான சிவகுமார் மாநிலச் சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.

மலேசியா இஸ்லாமிய நாடென்பதால் இஸ்லாமிய விவகாரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில சுல்தான்களிடமே உள்ளன. இதனால் மாநில முதலமைச்சர், அமைச்சர்களை நியமிப்பதில் மக்கள் முன்னணி சில சிக்கல்களை எதிர்கொண்டது.

இந்தியாவில் உள்ள மாநில ஆளுநர்கள்போல்தான் இந்தச் சுல்தான்கள். ஆனால் நாடு விடுதலையடைந்தபொழுதே மலாய் அரசு அரசியல் சட்டத்தில், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களில் யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பதில் தனி அதிகாரத்தைச் சுல்தான்களுக்கு வழங்கியுள்ளது. தேர்தலில் வென்ற மக்கள் முன்னணி உடனடியாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. பிறகு இஸ்லாமியக் கட்சியின் மூலமாக வென்றுவந்த முகமட் நிஸார் ஜாமலுடினை முதலமைச்சராகச் சுல்தான் நியமித்தார்.

திராங்காணு மாநிலத்தில் பெரும்பான்மையில் வெற்றிபெற்ற தேசிய முன்னணியும் இதே போன்ற சிக்கலையே எதிர்நோக்கியது.

திராங்காணு மாநில சுல்தான் பிரதமர் கொடுத்த, மாநில முதலமைச்சர் நியமனக் கடிதத்தைப் பெறாமலேயே தன் விருப்பப்படி ஒருவரை நியமித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மலேசியாவின் மற்றொரு சிறிய மாநிலமான பெர்லிங் மாநில சுல்தானும் பிரதமர் பரிந்துரைத்தவரை முதலமைச்சராக நியமிக்காமல் தான் விரும்பிய ஒருவரை நியமித்தார். இரண்டு சுல்தான்களையும் எதிர்த்து ஆளுங்கட்சியான தேசிய முன்னணியின் பிரதம மலாய்க் கட்சி அம்னோ ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. போலீஸ் இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

நாட்டின் சுல்தான்கள் ஆளும் மாநிலங்களில் ஒரு முஸ்லிம்தான் முதலமைச்சராக வர முடியுமென்று சட்டம் உள்ளது. முஸ்லிம் விவகாரங்கள் அனைத்தும் சுல்தான்கள் கையில் இருப்பதால் அதை அமல்படுத்துவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஒரு முஸ்லிம் மதத்தினரே முதலமைச்சராக இருக்க வேண்டுமென்று மாநிலச் சட்டம் கூறுகிறது. ஆனால் நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிறது சட்டம்.

இந்தியாவில் ஜனாதிபதியை மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள். மலேசியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில சுல்தான்களில் ஒருவரைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். கடந்த 52 ஆண்டுகளாக மாநில வாரியாகச் சுல்தான்களே தங்களின் மாநாட்டில் தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள்.

மக்கள் கூட்டணியில் ஜனநாயகச் செயல் கட்சி அதிக இடங்களைப் பேரக் மாநிலத்தில் வென்றிருந்தாலும் அதே கூட்டணியில் சில இடங்களை வென்ற இஸ்லாமியக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கடந்த பத்து மாதமும் யார் எங்கே தாவுவார்கள் என்று கடந்த ஆட்சியின்போது முதலமைச்சரின் அறிக்கை மக்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியது. மூன்று உறுப்பினர்களின் பெரும்பான்மையில் இருந்த இந்த மாநிலத்தை மீண்டும் தங்கள் கைவசம் கொண்டுவரத் திரைமறைவில் பல பேரங்கள் பேசப்பட்டதாக அரசல்புரசலாகச் செய்திகள் கசிய ஆரம்பித்தன.

ஒரு மாதத்திற்கு முன்பாகத் திடீரென்று முன்பு ஆளும்கட்சியாக இருந்த தேசிய முன்னணிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மக்கள் முன்னணியின் நாடாளுமன்றத் தலைவர் அன்வர் இப்ராஹிமைத் தன் மனைவியுடன் அவர் வீட்டில் சந்தித்து, அவரது நீதிக் கட்சியில் சேர்வதாகக் கடிதம் கொடுத்து இணைந்தார் (மலேசியாவில் கட்சி மாறும் தடைச் சட்டம் அமலில் இல்லை). இது மக்கள் முன்னணியின் பலத்தை 31இலிருந்து 32ஆகப் பேரக் மாநிலத்தில் கூட்டியது. ‘இது ஆபத்தின் அறிகுறி’யென்று அரசியல் பார்வையாளர்கள் நினைத்தது பின்னர் சரியாகவே அமைந்துவிட்டது.

இந்தச் சட்டமன்ற உறுப்பினரின் கட்சித் தாவலை அரசியல் ஞானமும் புத்திக்கூர்மையுமுள்ள அன்வர் இப்ராஹிம் எப்படி உடனே ஏற்றுக் கொண்டார் என்பதுதான் புரியாத புதிர். மாநிலத் தேசிய முன்னணித் தலைவர் பொறுப்பை இப்போதைய துணைப் பிரதமரும் அடுத்த மாதம் பிரதமராகப் பதவி ஏற்பவருமான டத்தோ நஜிப் அந்தச் சட்டமன்ற உறுப்பினரின் கட்சித் தாவலுக்குப் பிறகு ஏற்றுக்கொண்டார்.

பிரதமராவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும்பொழுது நஜிப் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்த நாலைந்து நாளில் இப்போதைய மக்கள் முன்னணியில் இரண்டு அமைச்சர்கள் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவரவர் மனைவியருக்கும் தெரியாமல் போனது.

சில தமிழ் சினிமாக்களில் பார்க்கும், அரசியல் அதிரடிகள்போலவே ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் செய்திகள் ‘கும்மாளம்’ போட்டன. விடுமுறையில் செல்லும் ஒருவர் மாநில முதலமைச்சருக்கோ அல்லது சபாநாயகருக்கோ அது பற்றித் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர்கள் இருவரும் அன்வர் இப்ராஹிமின் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் காணாமல்போன இரண்டு நாள்கள் கழித்துத் துணைச் சபாநாயகர் பதவியில் இருந்த ஒரு சீனப் பெண்மணியான ஹீயிட் ஃபேபில் காணாமல் போனார்.

அதுவரையில் வாய்மூடி மௌனியாக இருந்த மாநில நீதிக் கட்சியின் செயலாளர்- இவர் ஒரு வர்த்தகரும்கூட- வர்த்தகருமான திருவாய் மலர்ந்தார். ஒரு வர்த்தக விஷயமாகத் துணைப் பிரதமரைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அம்னோவின் (மலாய் தேசியக் கட்சி) பிரமுகர் மூலமாகவே அந்தச் சந்திப்பு துணைப் பிரதமரின் வீட்டில் நடைபெற்றது. அப்பொழுது ஐம்பது மில்லியன் (5 கோடி) ஒவ்வொருவருக்கும் தருகிறோம். உங்களுக்கும் இதில் தனிப் பங்கு தருகிறோம். அவர்கள் இருவரையும் தேசிய முன்னணிக்கு மாறி வந்துவிடச் சொல்லுங்கள் என்று கூறியதாகப் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட்டார்.

இந்த அறிக்கைகள் வருவதற்கு முன்பே பிரதமர் அப்துல்லா பாடாலி, விரைவில் பேரக் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்குமென்று பகிரங்கமாகவே பத்திரிகையாளர்களிடம் கூறி, அது முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகவும் வந்தது.

மாநில அமைச்சர்கள் இருவரும் அன்வரோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அந்தப் பெண் துணைச் சபாநாயகர் ஒழுங்குக்குப் பெயர்பெற்ற ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்ந்தவர். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அந்த இரண்டு அமைச்சர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தைச் சபாநாயகர் சிவகுமார் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தார்.

மூன்று உறுப்பினர்கள் பெரும்பான்மையில் இருந்ததால் பதவிப் பிரமாணம் நடப்பதற்கு முன்பே அவர்களின் ராஜினாமாக் கடிதங்கள் பெறப்பட்டிருந்தன. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது. அவர்கள் இனிச் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல என்ற நிலை வந்ததும் தேர்தல் ஆணையம் கூடியது. நாங்கள் ராஜினாமா செய்யவில்லையென்று இருவரும் ‘குகையை’ விட்டு வெளியே வந்து அறிக்கை விட்டார்கள். தாங்கள் மருத்துவமனையில் இருந்ததாகச் சொன்னார்கள். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்பதைத் தங்களின் உதவியாளர்கள் மூலமே ஊடகங்களிடம் பேசினார்கள். உண்மையில் அக்கடிதங்கள் முன்பே தேதியிடப்படாது அவர்களே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவைதான்.

தேர்தல் ஆணையம் ‘அவர்கள் இன்னமும் சட்டமன்ற உறுப்பினர்களே’ என்றும் அக்கடிதம் செல்லாது என்றும் அறிவித்தது. 4.2.09இல் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கிறேன்; மறுதேர்தலில் மக்களைச் சந்திக்கிறேன் என்று முதலமைச்சர் முகமட் நிஸார் ஜமாலுடின் அறிவித்துச் சுல்தானிடம் விவரம் கூறப் போனார்.

மாநில ஆட்சி எங்கள் கைக்கு வந்துவிட்டது என்று அதே நாளில் துணைப் பிரதமர் அறிவித்தார். அதோடு அமைச்சர்கள், துணைச் சபாநாயகர் மூவரோடு, அன்வர் இப்ராஹிம் வீட்டில் அக்கட்சியில் இணைந்து நாடகம் போட்டவரும் ஒரே வாரத்தில் தாய்க்கட்சிக்குத் திரும்ப, கட்சி தாவிய நால்வரும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

மாநிலச் சுல்தான் முதலமைச்சரைச் சந்தித்து எந்த முடிவையும் சொல்லாமல் தனக்கு அவகாசம் வேண்டுமெனக் கூறியுள்ளார். சுல்தானின் அனுமதியின்றிச் சட்டசபையைக் கலைக்க முடியாது. மறுநாள் துணைப் பிரதமர் புடைசூழப் புதிய சட்டமன்ற அடையாளத்துடன் சுல்தானைப் பேட்டிகண்டார்கள். தங்களின் ஆதரவைப் புதிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வழங்குவதாக 32 பேரும் கூறினார்கள்.

இது மிகத் தவறான முன்னுதாரணம் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகதீர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் துங்கு ரசாலியும் இவ்வகைக் கட்சி தாவும் அரசியலுக்குக் கண்டனம் தெரிவித்தார். இருவரும் அம்னோ கட்சியின் மூத்த உறுப்பினர்கள்.

இதில் மற்றொரு திருப்புமுனையான விஷயம் அந்த இரண்டு மாநில அமைச்சர்களும் ஒரு வீடமைப்பு நிறுவனத்திடம் 180 கோடி மலேசிய ரிங்கட்டை லஞ்சமாகப் பெற்றுள்ளார்கள் என லஞ்ச ஒழிப்பு நிறுவனம் வழக்குப் போட்டுள்ளது. ஆட்சிக்குவந்த 10 மாதத்திற்குள் இது நடந்துள்ளது. அந்த லஞ்ச வழக்கை மத்திய அரசே போட்டுள்ளது. அந்த வழக்கு வாபஸ் பெறப்படுமென்று துணைப் பிரதமரே அவர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாக அந்த இடைத்தரகர் கூறியுள்ளார்.

அந்தப் பெண் சபாநாயகர் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, ‘நான் ஜனநாயகச் செயல் கட்சியிலிருந்து வெளியே போகமாட்டேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் சவால் விடுவதுபோல் பேசினார். அடுத்த நாள் காலையில் தனது ராஜினாமாக் கடிதத்தைக் கட்சியிடம் ஒப்படைத்தார்.

‘தேசிய முன்னணியில் எப்படி லஞ்ச வழக்கில் மாட்டியுள்ள இருவரைச் சேர்த்தீர்கள்?’ என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகதீர் கேள்வி எழுப்பினார். இந்த இக்கட்டான நிலையில் தேர்தல் ஆணையம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று தேசிய முன்னணியின் தீவிர ஆதரவாளர்களே கூறுகிறார்கள்.

துணைப் பிரதமருடன் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த மாநிலச் சுல்தான், டத்தோ டாக்டர் ஸம்ரி அப்துல் காதீரை மாநில முதல்வராக அறிவித்தார். அதோடு நடைமுறையில் உள்ள முதலமைச்சரைப் பதவி விலகும்படியும் கூறியுள்ளார். தான் பதவி விலக முடியாது, நீதிமன்றம் யார் ஆட்சி அமைப்பது என்று தீர்மானிக்கட்டும் என்று அவர் கூறிவிட்டார். அவரது அலுவலகம் காலிசெய்யப்பட்டுவிட்டது. ஆக இப்பொழுது பேரா மாநிலத்துக்கு இரண்டு முதலமைச்சர்கள்.

இடையில் நான்கு நாட்கள் பொதுவிடுமுறை. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

அரசியல் பார்வையாளர்களும் சட்ட நிபுணர்களும் சுல்தான் சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அவர் சட்டப்படி நடந்துள்ளார். ஆனால் தர்மப்படி நடக்கவில்லையென்றும் கூறுகிறார்கள். இத்தனைக்கும் அரச வாரிசான அப்துல் அஜிஸ் அவர் சுல்தானாக முடிசூட்டும்வரையிலும் நாட்டின் பிரதம நீதிபதியாக இருந்தவர். நீதித் துறையில் அவருக்கு அனைத்து இன மக்களிடமும் பெரிய மரியாதை இருந்தது.

5 கோடி பேரம் இல்லையென்று துணைப் பிரதமர் அறிக்கைவிட்டுள்ளார். இப்பொழுது மாநிலச் சட்ட சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தினால் இருக்கும் 28 இடங்களில்கூட டிப்பாசிட் கிடைக்காது என்று அந்தந்தத் தொகுதி மக்களே சொல்கிறார்கள்.

இடைத்தேர்தலுக்கு நஜீப் துணியமாட்டார். பொதுத்தேர்தல் நடந்து பத்து மாதங்களில் நாட்டில் இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப்படி தேர்தலில் நிற்க முடியாத சூழல் அன்வர் இப்ராஹிமுக்கு. அந்தப் பொதுத்தேர்தலில் வென்ற அன்வரின் மனைவி தன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கணவருக்கு வழிவிட்டார். 2000 வாக்கு வித்தியாசத்தில் தன் மனைவி வென்ற அத்தொகுதியில் அன்வர் 15,571க்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

இரண்டு மாதங்களுக்குமுன் மாரடைப்பால் காலமான துணையமைச்சரின் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முன்னர் தேசிய முன்னணி 648 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. மறு தேர்தலில் அந்த நாடாளுமன்ற இடத்தில் 2500க்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் மக்கள் முன்னணி வெற்றிபெற்றது. அமைச்சர்கள், தேசிய முன்னணித் தலைவர்கள் என்று அங்கேயே டேரா போட்டும் அந்த 648 வாக்கு வித்தியாசத்தைப் பெற்றாலே போதுமென்று நினைத்ததும் நடக்கவில்லை. இத்தனைக்கும் அத்தொகுதி 95 சதவிகிதம் மலாய்க்காரர்கள் உள்ள தொகுதி. இந்தச் சூழலில் ஒரு இடைத்தேர்தலுக்கு நிச்சயம் துணியமாட்டார்கள்.

இதில் டாக்டர் மகாதீரின் அறிக்கைக்குப் பிறகு கட்சிமாறிய மூவரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை, அவர்கள் சுயேச்சையாக ஆதரவு தருவார்கள் எனத் துணைப் பிரதமர் அறிக்கை விட்டுள்ளார். இதற்கிடையில் அந்த மூவரும் தங்கள் தொகுதியைப் பிரதி நிதித்துவப்படுத்தக் கூடாது என்று மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் மக்கள் கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள். கையெழுத்துப் போடும் இடங்களை மக்களே தேடிப் போகிறார்கள். தைப்பூசத்தை முன்னிட்டு ஏற்கனவே உள்ள சனி, ஞாயிறு விடுமுறையோடு திங்கள்கிழமையும் விடுமுறை என்பதால் இந்தக் கையெழுத்து வேட்டையில் பெரிய அளவில் மக்களே விரும்பிவந்து கலந்துகொள்கிறார்கள்.

பேரக் மாநிலக் கல்லுமலை முருகன் தைப்பூச விழாவில் இரண்டு முதலமைச்சர்களும் நல்லவேளையாக வெவ்வேறு நேரங்களில் கலந்துகொண்டார்கள்.

சுல்தானின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்கிறது ஆளும் தரப்பு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்ற நிலையை மாற்றி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் புதிய சுல்தான்களும் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நிலைநிறுத்த நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

ஒரு மாநிலத்தின் சுல்தான் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, “ஒரு கொலைகாரர் மலேசியாவில் அரசராக வந்துள்ளார்” என்று ‘Daily Mirror’ லண்டனில் செய்தி வெளியிட்டது. கோல்ப் விளையாடும்பொழுது தாமதமாகப் பந்தைக் கொண்டுவந்த பையனைக் கோல்ப் கம்பால் சுல்தான் அடித்ததால் அந்தப் பையன் இறந்துவிட்டான். இச்சம்பவத்திற்குப் பிறகே அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும். நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரிக்க விடாமல் கதவுகளைப் பூட்டிவைத்த சம்பவங்களும் இங்கே நடந்துள்ளன.

சுல்தான்களின் கையில் ஆட்சியும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் உள்ளது. இன்டராப் பேரணியில் பங்குபெற்ற ஐவர் இன்னும் விசாரணைக்குக் கொண்டுவர முடியாத உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கிறார்கள். அதன் தலைவர் வேதமூர்த்தி லண்டனில் இருக்கிறார். இன்டராப்பைச் சட்ட விரோத அமைப்பாக அறிவித்துள்ளார்கள்.

இப்படியான சூழலில் பேரக் மாநில வழக்கு நீதிமன்றத்திற்கு வரப்போகிறது. புதிய மந்திரி சபை அமைப்பை எதிர்த்து சுல்தானின் மாளிகைமுன் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் கைதானார்கள். போலீஸ் ஏதோ ‘ரிமோட்’ கன்ட்ரோலர் மூலம் செயல்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள்.

அண்மையில் சுல்தான் தனது முடிசூட்டின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். இதையொட்டி நடக்கவிருந்த மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியொன்றை அவர் ரத்துசெய்துள்ளார். பிப்ரவரி ஒன்பது அன்று இரவு 12:30க்கு நான் என் அலுவலகம் விட்டு வெளியேறியபொழுது கைத் தொலைபேசியில் முக்கிய அரசியல் தலைவர் அழைத்தார்.

புக்கிட் கந்தான் மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்லான் ஷாஹாரும் (வயது 50) மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரது நாடாளு மன்றத் தொகுதி பேரக் மாநிலத்திலிருப்பது தேசிய முன்னணிக்குப் பெரும் அதிர்ச்சி. 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்பது சட்டம்.

கெடா மாநிலத்தில் (கடாரம்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் மாநிலத்தின் ஒரே இந்திய அமைச்சருமான வி. ஆறுமுகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் மாநில அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார் என்பது அந்த அரசியல் தலைவர் சொன்ன செய்தி.

கெடா புக்கிட் செலம்பாவ் தொகுதியில் நீதிக் கட்சியின் சார்பாக மார்ச் 8, 2008 இல் மனுத் தாக்கல் செய்தவரின் தேர்தல் மனுவில் கோளாறு காரணமாகத் தேர்தல் அதிகாரி மனுவைத் தள்ளுபடி செய்தார். மலேசிய இந்தியக் காங்கிரஸ் சார்பாகப் புதுமுகமான கிருஷ்ணன் போட்டியிட்டார். அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வி. ஆறுமுகம் இன்டராப் அலையில் வெற்றிபெற்றார். மாநில அமைச் சரவையில் எந்த இந்தியப் பிரதிநிதியும் இல்லாத நிலையில் இவர் நீதிக் கட்சியில் சேர்ந்து மாநில அமைச்சர் ஆனார்.

கடந்த ஒரு மாத காலமாகவே இவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் கொலைமிரட்டல் வருகிறது; வீட்டில் தொலைபேசியில் பெண்களை மிரட்டுகிறார்கள்; கட்சி மாறி வர 5 மில்லியன் பேரம் பேசுகிறார்கள் என்றெல்லாம் அறிக்கைவிட்டு, கடைசியில் சென்ற வாரம் போலீசில் புகார் கொடுத்தார். அண்மையில் கெடா சுல்தான் பிறந்த நாளில் இவருக்கு விருது கிடைத்தது.

இவருக்குச் சில குடும்பப் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நேர்மையான கடும் உழைப்பாளி. இரண்டு மனைவிகள். ஒருவர் அதிகாரபூர்வமானவர். மற்றவர் அப்படி அல்லவென்று சொல்லப்படுகிறது. இதையே சாக்காக வைத்து, இந்தியர்களே அரசியல்ரீதியில் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. நெருக்குதல் தாங்காமல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்பொழுது இங்கும் 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் வரப்போகிறது.

துணைப் பிரதமரின் பெயர் நஜீப். முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் காலத்தில் ஒரு ஆரூடம் வந்தது. அவரின் பெயரில் ‘ஸிகிபிவிகிழி’ என்பதில் உள்ள எழுத்துகளில் ஒன்றை முதல் எழுத்தாகக் கொண்டவர்களே அடுத்தடுத்துப் பிரதமராக வருவார்கள் என்பதே அது. குருவி உட்காரப் பழம் விழுந்த கதையாக அது சரியாகவே நடந்துவந்துள்ளது. (R) Rahman, (A) Abdul Razak, (H) Hussin Onn, (M) Mahadir, (A) Abdulla Badawi, (N) Najib. இதன் பிறகு நாட்டின் தலைவிதியே மாறுமென்பது எப்படியோ சரியாகவே வேலைசெய்கிறது என்பதையே அரசியல் கணிப்புகள் காட்டுகின்றன.

17.2.09 அன்று மற்றொரு செய்தி.

எதிர்க்கட்சிகள் வசமுள்ள 5 மாநிலங்களில் இலங்கூர் மாநிலமும் ஒன்று. ஆளுங்கட்சியின் மத்திய அமைச்சரே ‘தங்கப் புதையலை’ இழந்துவிட்டோமென்று அறிக்கைவிட்ட மாநிலம் இது.

எலிசபெத், ஒங் என்னும் மாநில அமைச்சர். இவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபொழுது இவரை நிர்வாணமாகப் படமெடுத்திருக்கின்றனர். 39 வயதாகும் இவர் மணமாகாதவர். தனிமையில் நிர்வாணமாகப் படுத்துறங்குவது இவரது வழக்கம். இவரது நிர்வாணப் படம் பரவலாக நாட்டில் உலா வருகிறது. மலேசியாவில் அரசியல் இவ்வளவு கேவலமாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. 2000இலிருந்து 2006 வரை தேசிய மனித உரிமைக் கழகத்தில் செயலாளராக இருந்த இவர் தேசிய நீச்சல் வீராங்கனையாகவும் இருந்தவர். இவருடைய முன்னாள் காதலன்தான் அவருக்குத் தெரியாமல் இந்தப் படங்களை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இப்பொழுது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மூன்று இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறப்போகிறது.

இந்த மூன்று தொகுதிகளில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்க்கட்சியின் பக்கமே நிற்கிறார்களா? தேர்தல் முடிவுகள் இதைத் தெளிவாக்கிவிடும்.

இந்த மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பணம் பாலாறாய் ஓடப்போகிறது. திராங்காணு இடைத்தேர்தலில் ஒரு பில்லியன் (100 கோடி) செலவிட்டும் ஆளும் கட்சி வெற்றிபெற முடியவில்லை. இடைத்தேர்தல் மார்ச் 27ஆம் தேதி, வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 1ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தக் கட்டுரை பிரசுரமாகும் நேரத்தில் வேறு பல அதிர்ச்சியான அரசியல் தாவுதல்கள்கூட நடைபெற வாய்ப்புண்டு.

e-mail: peershuba@gmail.com

உள்ளடக்கம்