கர்நாடகாவின் மங்களூரில் ஒரு ‘பப்’இல் - பதப்படுத்தப்படாத பீர் கிடைக்குமிடம் -
இருந்த பெண்களை ஸ்ரீராம சேனை என்ற இந்துத் தீவிரவாத அமைப்பினர் இழிவுபடுத்தித்
தாக்கிய சம்பவம் ‘தேசிய’க் கவனம் பெற்றுள்ளது. ஆங்கில ஊடகங்களின் கவனத்தைக்
கவர்ந்துவிட்டால் எதுவும் ‘தேசிய’ப் பிரச்சனையாக மாறிவிடுமே! இந்திய ஆங்கில
ஊடகங்களில் பிராந்தியச் செய்திகள் அருகிவரும் காலம் இது. ‘தேசிய’ச் செய்திகளும்
உலகச் செய்திகளும் அவற்றின் முழுநேரத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன. இருப்பினும்
ஆங்கில ஊடகத் துறையினரின் வர்க்கமும் பண்பாடும் கேள்விக்குள்ளாக்கப்படும்போது
அச்சம்பவம் ‘தேசிய’க் கவனம் பெறுவது உறுதி. இது போன்ற சம்பவங்களில் ஆங்கில ஊடகங்கள்
செய்தியைப் பதிவுசெய்வதுடன் நிற்பதில்லை; செயல்பாட்டையும் தூண்டுகின்றன. ஆவேசமாகவே
தூண்டுகின்றன. பொதுநலனுக்குச் சாதகமாகவும் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும்
இவ்வாறு செயல்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள்மீது
மேற்கொள்ளப்படும் வரம்பற்ற வன்முறைக்கு எதிராக நமது ஆங்கில ஊடகத்தினர் இந்திய
அரசைச் செயல்படத் தூண்டி ஆத்திரத்துடன் இயக்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அயல்நாட்டுப் பிரச்சனைகளில் மட்டுமல்ல இந்தியாவிலேயேகூட, மீடியா வர்க்கத்தைப் போல,
நகர்ப்புற மேட்டுக்குடிப் பண்பாட்டைச் சாராத, பெண்கள்மீது வன்முறை என்பது தினசரி
நிகழ்வாக இருப்பினும் மீடியாவில் கவனம் பெறுவதில்லை. கவனம் பெறும்போது செய்தியாகப்
பதிவுபெறுவதோடு சரி; செயல்பாட்டிற்கான நெருக்கடியை ஏற்படுத்தும் ஆவேசம் அவற்றில்
இருப்பதில்லை.மேற்படித் தாக்குதல் இந்துத் தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களால்
நடத்தப்பட்டுள்ளது. இவர்களது நோக்கம் பாரம்பரிய இந்துப் பண்பாட்டைக் காப்பதாகப்
பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வு எல்லா மதத் தீவிரவாதிகளின், பண்பாட்டுக்
காவலர்களின் ஆமோதிப்பையும் பெறக்கூடியது என்றே நினைக்கிறேன். தமது பாரம்பரியப்
பண்பாட்டைக் காக்க விரும்பும் அனைவருமே முதலில் கண்காணிப்பது பெண்களில் ஏற்படும்
பண்பாட்டு மாற்றங்களைத்தான். இந்த மாற்றங்கள் இவர்களால் அத்துமீறல்களாகப்
பார்க்கப்படுகின்றன. பாரம்பரியப் பண்பாட்டுக் கட்டுப்பாடுகளை வன்முறை மூலம்
பெண்கள்மீது ஏற்படுத்தப் பண்பாட்டுக் காவலர்கள் எத்தனிக்கின்றனர். இருப்பினும்
இத்தாக்குதல்களில் ஈடுபடும் ஆண்கள் தமது அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு மாறாகப்
பாரம்பரியப் பண்பாட்டைக் காக்கும் செயல்பாடுகளில் அதிகமும் ஈடுபடுவதில்லை. தம்மை
வந்தடையும் பிற பண்பாட்டுத் தாக்கங்களை ஏற்க மறுப்பதும் இல்லை. உடை, தொழில்நுட்பம்,
உணவு, இசை, கலை போன்ற விஷயங்களில் இவர்களுடைய ரசனை பொதுரசனைக்கு உட்பட்டே
இயங்குகிறது. இவர்கள் கண்ணை எப்போதும் உறுத்துவது மேற்கத்தியவயப்பட்ட பெண்கள்தாம்.
‘நவநாகரிக’ உடையும் பண்பாடும் இவர்கள் ரத்தத்தைக் கொதிக்கவைக்கின்றன. சராசரி
ஆண்களால் அன்றாடப் பாலியல் இழிவுகளுக்கு முதலில் உட்படுத்தப்படுவதும் இத்தகைய
‘நவநாகரிக’ப் பெண்கள்தாம். இந்த ஆண்களின் மனங்களில் இந்த ‘நவநாகரிக’ப் பெண்கள்
ஏற்படுத்தும் பாலியல் பதற்றத்தையும் ஆண்மைக்குச் சவாலையும் தாழ்வுணர்ச்சியையும்
ஆராயாமல் இதற்கான காரணிகளை மதத் தீவிரவாதத்திற்குள் மட்டும் அடக்குவது ஒரு
எளிமையாக்கம்தான். தாம் அடைய முடியாதவர்களாக இந்த ஆண்கள் நினைக்கும் ‘நவநாகரிக’ப்
பெண்களை இழிவுபடுத்துவது பாலியல் பதற்றத்திற்கு வடிகாலாக அமைகிறது.
காலங்காலமாக இந்தியத் திரைப்படங்களில் கதா நாயகர்களின் ஆதாரமான குணாம்சம்
மேட்டுக்குடிப் பெண்களை வசப்படுத்தி அடக்கி, ‘இந்தியப் பண்பாட்’டிற்குள்
அடைத்துவிடுவதுதானே? திரைப்படத்தில் உதிரிகள் ‘நவநாகரிக’க் கதாநாயகியை அவரது
‘நவநாகரிக’த்தால் தூண்டப்பட்டுப் பாலியல் இழிவுக்கு உட்படுத்தும்போது நமது
கதாநாயகன் அவரைக் காப்பாற்றுவார். ஆனால், அந்த நாயகனின் நோக்கம் அந்தப் பெண்ணை
அவருடைய போக்கிலே சுதந்திரமாக விட்டுவிடுவதாக ஒருபோதும் இருப்பதில்லை. அவரைப்
பண்பாட்டுப் புனிதத்திற்குள் வரவழைத்து, உதிரிகள்கூட அவரைக் கையெடுத்துக்
கும்பிடவைக்கும் இந்தியத் தாயின் பிம்பமாக மாற்றிவிடுவதுதான் இறுதி இலக்கு. உதிரிகள்
‘நவநாகரிக’ப் பெண் ஏற்படுத்தும் பாலியல் பதற்றத்தைச் சட்டவிரோதமாக எதிர்
கொள்ளும்போது, கதாநாயகன் அதே இலக்கைச் சட்டபூர்வமாக வந்தடைகிறார். இந்த
வசப்படுத்தலை மேற்கொள்ள முடியாத உதிரிகளின் முறைமை இத்தகைய பெண்களைத் தாக்குதல்,
வசைபாடுதல், இழிவுபடுத்துதல். மதத் தீவிரவாதம் இந்தப் பாலியல் நடவடிக்கைக்குக்
கோட்பாட்டுக் கௌரவத்தையும் சமூக அங்கீகாரத்தையும் ஊடகங்களில் கவனத்தையும்
ஏற்படுத்தும் ஒரு கோஷா, அவ்வளவுதான்.
ஊடகங்களின் கவனம் என்றதும் தி இந்து நாளிதழில் (28.01.2009) வெளியான ஒரு செய்தி
நமக்குத் தரும் பல செய்திகளையும் விவாதிக்க வேண்டும். ‘பப்’பைப் புரட்டிப்போட்ட
கும்பலை நேர்கொண்ட தீரனாகப் பவன் குமார் ஷெட்டி என்ற இளைஞரை முன்னிலைப்படுத்துகிறது
செய்தி. பவன், பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினர். சம்பவம் நடந்த களத்தில் அன்று
எதேச்சையாக இருந்தார். பஜ்ரங் தள் முன்வைக்கும் இந்துத்துவப் பண்பாடு அவர்
‘பப்’பிற்குப் போவதற்குத் தடையாக இல்லை! ‘பப்’பிலிருந்த பெண்களைத் தாக்கியவர்களை
அவர் இடைமறித்ததும் கும்பலின் வெறி அவர் பக்கம் திரும்ப, பல பெண்கள்
தப்பியிருக்கின்றனர். களத்திலிருந்த பெண்கள் பவனைப் புகழ, பஜ்ரங் தள் அமைப்பைத்
துறந்துவிட்டதாகப் பவன் அறிவிக்க, பல வில்லன்களுக்கிடையில் ஹீரோவைத் தேடும்
மீடியாவின் படலம் நிறைவுபெற, நற்செய்தியுடன் கதை முடிகிறது. சுபம்.
விவாதத்திற்குரிய விஷயம் அதுவல்ல. தாக்குதலுக்கு முன்னர் பவன் ‘அம்னேஷிய பப்’பின்
பார்க்கிங் பகுதியில் நின்றார். களத்திற்கு முதலில் வந்தது தீவிரவாதிகள் அல்லர்,
தொலைக்காட்சிப் புகைப்படக்காரர்கள். தாக்கும் கும்பல் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு
முன்னரே அவர்கள் வீடியோ காமராக்களுடன் வந்துவிட்டனர். படம்பிடிக்கத் தோதான
இடங்களில் நின்று காத்திருந்தனர். சேனையினர் ‘பப்’பினுள் நுழைந்ததும் ‘ஆக்ஷன்’ என்று
ஒருவர் கத்தியிருக்கிறார். இது பவனின் வாக்குமூலம்.
நமது செக்குலர் மீடியா எந்த மதத் தீவிரவாதத்தை ‘மங்களூர் தாலிபான்’ என வாயில்
நுரைபொங்க வசைபாடியதோ அந்தத் தீவிரவாதத்திற்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் உறவை
விவரிக்கும் பதிவு இது. சேனையின் கும்பல் ஏதோ உதிரிகளின் கும்பல் அல்ல. வருவதற்கு
முன்னரே ஊடகங்களைத் திரட்டிவிடும் தொடர்புகள் கொண்டது சேனை. தாக்குதல் நடைபெற
இருக்கும் செய்தி குறைந்தது ஒரு மணி நேரம் முன்னரே ஊடகங்களுக்கு
அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் போலீசாருக்கு விஷயம் தெரியவில்லை.
‘பப்’பிலும் தெரியவில்லை.
ஊடகத் தர்மத்தின்படி, இச்செய்தியைப் போலீசுக்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடு
அவர்களுக்கு இல்லை. ‘பப்’பில் முன்னெச்சரிக்கை செய்து பெண்களைக் காப்பாற்றியிருக்க
முடியும். செய்வார்களா? அதுவும் ஊடகத் தர்மம் அல்லவே! மேலும் தாக்குதல் நடக்கும்
போது இடையிட வேண்டிய மனிதாபிமானமும் அவர்களுக்குத் தேவை இல்லை. இச்சம்பவத்தின்
அதிர்ச்சிகரமான காட்சிகள் ஊடகங்களின் வழி ‘தேசத்தை’ உலுக்கும்படி செய்வதே அவர்களின்
பிரதான நோக்கம். கோட்பாட்டுரீதியாக இதை ஏற்றுக்கொண்டாலும் ஒரு கேள்வி மனத்தை
அரிக்கிறது. நடந்த சம்பவத்தை ஊடகங்கள் பதிவுசெய்தனவா அல்லது ஊடகங்கள்
பதிவுசெய்வதற்காகச் சம்பவம் நடைபெற்றதா? பயங்கரவாதத்திற்கும் ஊடகங்களுக்கும்
இருக்கும் உறவு பற்றிய ஆய்வுகள் ஊடகங்கள் இல்லாமல் பயங்கரவாதம் சாத்தியமில்லை என
முடிவு செய்திருப்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
ஸ்ரீராம சேனையின் நோக்கம் ஒரு உள்ளூர் ‘பப்’பில் புகுந்து அடித்து மங்களூரின்
பண்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது அல்ல. மாறாக ஊடகங்களின் முன்னர் ஒரு தாக்குதலை
நிகழ்த்தி ‘தேசிய’க் கவனம் பெறுவது தான். எந்த மர்மஸ்தானத்தில் கைவைத்தால் நமது
செக்குலர் ஆங்கில ஊடகங்கள் துள்ளி எழும் என்பதும் அவர்களுக்கு அத்துப்படியாகிவிட்டது.
ஸ்ரீராம சேனை இத்தாக்குதலுக்குப் பிறகு இந்திய அளவில் கவனம் பெற்றுவிட்ட அமைப்பு.
காதலர் தினத்தன்று கர்நாடகாவில் இணைந்து காணப்படும் ஜோடிகளுக்கு வலுக்கட்டாயமாகத்
திருமணம் நடத்திவைக்கப்படும் எனப் பிரமோத் முத்தாலிக் அறிவித்தது தேசிய ஆங்கில
நாளிதழ்களில் முன்பக்கச் செய்தியாகவும் தேசிய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில்
ஙிக்ஷீமீணீளீவீஸீரீ ழிமீஷ்s ஆகவும் அறிவிக்கப்பட்டது. ‘பப்’ தாக்குதலுக்குக்
கிடைத்த ஊடக விளம்பரம் முத்தாலிக்கை உற்சாகப்படுத்தி அவர் செயல்தளத்தை
மங்களூரிலிருந்து முழுக் கர்நாடகத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. அவர்
திட்டமிட்டுள்ள நடவடிக்கையே ஆங்கில ஊடகங்கள் தரும் கவனத்தால் உருவானது என்பது என்
எண்ணம். பிப்ரவரி அன்று ஊடகங்கள் சேனையின் நடவடிக்கைக் களங்களுக்கு விரையும் என்ற
நம்பிக்கையிலேயே கட்டாயத் திருமணத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஊடகக் கவனமின்றிப்
பயங்கரவாதம் சாத்தியமில்லை என்ற கூற்றின் உண்மை நம் கண்முன் நிரூபணமாகியுள்ளது.
தேசத்திற்கு இன்னொரு பிரவீன் தொக்காடியாவை வழங்கியமைக்காக நமது தேசிய செக்குலர்
ஊடகங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பிரமோத் முத்தாலிக் இன்று இந்துத்துவத்தின்
தேசியத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார்.
மங்களூர் ‘பப்’பில் நுழைந்து ‘நவநாகரிக’ப் பெண்களை இழிவுபடுத்தியது இந்துத்
தீவிரவாதத்தின் சிறுபான்மை அமைப்பாக இருக்கலாம். ஆனால் பெண்கள் ‘பப்’பிற்குச் சென்று
பீர் குடித்தால் இந்தியப் பண்பாடு சீரழிவதாகக் கொள்கிறவர்கள் சமூகத்தில்
பெரும்பான்மையோர் என்பதை ஏற்றுக்கொண்டு எதிர்கொள்ள வேண்டும். நீதிபதிகள்,
உயரதிகாரிகள், எல்லாக் கட்சி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பெண்கள்,
சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பிலும் பண்பாட்டைப் பெண்கள் செயல்பாட்டோடு
பொருத்திப்பார்த்து மதிப்பிடுபவர்களே பெரும்பான்மை. நமது செக்குலர் ஆங்கில மீடியா
முன்வைக்கும் மதுக் கலாச் சாரத்தை, பாலியல் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் சிறுபான்மை.
எனவேதான் பிராந்திய மொழி ஊடகங்கள் இது போன்ற செய்திகளை அதிகம்
முன்னிலைப்படுத்துவதில்லை. தேசியப் பெண்கள் ஆணையம் விசாரணைக்கு வந்தபோது
பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் விசாரணைக்கு வர மறுத்துவிட்டனர். சந்தித்தவர்களும்
வெளிப்படையாக வாக்குமூலம் அளிக்கத் தயங்கியிருக்கின்றனர். பலர் மங்களூரைவிட்டு ஓடி
ஒளிந்துவிட்டதாக ஆணையத்தினர் தெரிவித்தனர். தொலைக்காட்சியில் பேசிய தாக்கப்பட்ட
பெண்கள் பலருமே தமது முகம் காட்ட விரும்பவில்லை. தாக்கிய சேனையினர் வெளிப்படையாகப்
பேசவும் செயல்படவும் முடியும்போது தாக்கப்பட்ட பெண்கள் மறைந்துதிரிய
வேண்டியிருப்பது நமது சமூகச் சூழலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த யதார்த்தத்தை
உள்வாங்காதவரையிலும் சுண்டெலி அமைப்புகளாக ஒதுக்கப்படுபவற்றின் ஆற்றல் பெருகும்.
எதிரெதிர் மதவாதங்களும் தீவிரவாதங்களும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு வளரும்
என்பது ஏற்கப்பட்ட கருத்து. இன்று மதத் தீவிரவாதிகளும் செக்குலரிஸ்டுகளும் பரஸ்பரம்
தாக்கித் தம்மை வளர்த்துக்கொள்பவர்களாக மாறிவருகின்றனர். மதத் தீவிரவாதிகள்
‘போலி’ மதச் சார்பின்மையைத் தாக்கி ஆதாயம் அடைகின்றனர். மதவாத எதிர்ப்பே நமது
செக்குலரிஸ்டுகளின் பிரதானச் செயல்பாடாகச் சுருங்கி வருகின்றது. இன்னொன்று மனித
உரிமை. செக்குலரிஸ்டுகளிடம் கல்வி நிறுவனங்கள் இல்லை. அவை மதவாதிகள் கையிலும்
சாதியவாதிகள் கையிலும் உள்ளன. பயிலரங்குகளும் சந்திப்புகளும் நடத்தும் மதச்
சார்பற்ற மையங்கள் அரிது. இத்தகைய மையங்கள் பெருவாரி, மதச் சார்புடைய தன்னார்வ
நிறுவனங்கள் கையில் உள்ளன. மதச் சார்பின்மை பற்றிய சந்திப்புகளைக்கூட மதச்
சார்புடைய நிறுவனங்களிலேயே நடத்த வேண்டியுள்ளது. இளையர்கள் இணைந்து இயங்கவும் தன்னல
மற்ற தொண்டாற்றவும் பொருத்தமான அமைப்புகள் செக்குலரிஸ்டுகளிடம் இல்லை. அவை
மதவாதிகள் கையில் உள்ளன. புயல், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்குப் பிறகு
களத்தில் இறங்கிச் செயல்படும் செக்குலர் அமைப்புகள் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவையும் மதவாதிகளின் பணியாகவே உள்ளன. சேவை மையங்கள்,
மருத்துவமனைகள், ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகள் எல்லாமே மதவாதிகளின் கையில்.
இந்நிலையில் மதவாதிகள் இல்லாத இந்தியாவை செக்குலரிஸ்டுகளால் கற்பனை செய்யவும்
முடியுமோ தெரியவில்லை.
மதச் சார்பற்ற அறிஞர்களின் முக்கியப் புகலிடமாக இன்று இருப்பது செக்குலர் ஆங்கில
ஊடகங்கள்தாம். அவற்றில் அரசையும் நிறுவனங்களையும் செயல்பட இறைஞ்சுவதும் அவர்களின்
செயல்பாடு. மாற்றுகளை அவர்கள் உருவாக்குவது இல்லை. இவர்கள் நாடாளுமன்ற நாகரிகங்கள்,
நீதிமன்றத்தின் நடுநிலை, ராணுவத்தின் புனிதம், அரச நிறுவனங்களை மேம்படுத்தல், சட்ட
ஒழுங்கின் இன்றியமையாமை, இந்திய அரசியல் அமைப்பின் மேன்மை ஆகியவற்றின் கொடியை
செக்குலர் ஊடகங்களில் நாட்டுகின்றனர். போற்றுதலுக்குரியதுதான் இச்செயலூக்கம்
எனினும், மதத் தீவிரவாத அமைப்புகளும் உடனடித் தேசியக் கவனம் பெற இதே செக்குலர்
ஊடகங்களுக்குத்தான் தமது செயல்பாடுகள் பற்றிய முன்னறிவிப்புகளைத் தந்து அவற்றின்
வருகையை எதிர்பார்த்து நிற்கின்றன. செக்குலர் ஊடகங்கள் அவர்களை வெறுத்தாலும்
விளம்பரத்தில் நல்ல விளம்பரம் கெட்ட விளம்பரம் என்ற பாகுபாடு இல்லை, விளம்பரமே
முக்கியம் என்ற புரிதல் தீவிரவாதிகளிடம் உள்ளது. செக்குலர் ஊடகங்களுக்குத்
தீவிரவாதிகள் வெளியே முள்ளென்றாலும் உள்ளே சுளை என்பது தெரியும்.
மங்களூர்த் தொலைக்காட்சி நிருபர்கள் முழுநேரப் பணியாளர்களாக இருப்பதற்கான
வாய்ப்பு குறைவு. அன்று அனுப்பிவைத்த ‘பப் ஆக்ஷன்’ காட்சிகள் அவர்களுக்கு நியாயமான
வருவாய் ஏற்படுத்தியிருக்கும். அவர்களது வருவாயை மேலும் பெருக்கும் ஆற்றல் ஸ்ரீராம
சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் கையிலிருக்கிறது. அவர்கள் அனுப்பிவைத்த காட்சிகளை
மும்பை 26/11 நிகழ்வுக்குப் பாதியளவு முக்கியத்துவத்துடன் மீண்டும் மீண்டும்
ஒளிபரப்பின ஆங்கிலத் தொலைக்காட்சிகள். பார்வையாளர் விகிதம் அவர்களுக்குக்
கூடியிருக்கும். இது அதிக விளம்பர வருமானத்தைத் தரும்.
தேசத்தில் சமாதானமும் சமத்துவமும் குடிகொண்டால் ஊடகங்களுக்கு அது கெட்ட காலம்.
இந்நிலையில் ஊடகங்கள் எதை ஆதரிக்கும் என்பது வெள்ளிடைமலை. வரையறையற்ற ஊடகச்
சுதந்திரத்தையும் நடைமுறையிலிருக்கும் செக்குலரிஸத்தின் போதாமைகளையும்
முரண்பாடுகளையும் விசாரணைக்கு உட்படுத்துவதே சமூகத்தின் நற்போக்கை வேண்டுபவர்களின்
செயல்பாடாக அமைய வேண்டும். |