|
நூலின் மீது ஏற்படும் கவர்ச்சியும் ஈர்ப்பும் அதன் அட்டைப் படத்திலிருந்தே
தொடங்குகிறது என எண்ணுகிறேன். தாளின் தரமும் வசீகரமிக்க நவீன மொழியில் எழுதப்பட்ட
பின்னட்டை வாசகங்களும்தான் நம்மை உசுப்பிச் சில பக்கங்களைப் புரட்டி, சில வரிகளை
மேயச் செய்கின்றன. மீளாத மயக்கத்தில், கனவிலிருந்து ஒரு பொருளைத் தூல உலகிற்கு
எடுத்துவருவது போல அவன் தனது மன அலமாரியில் அப்புத்தகத்தைக் கொண்டுசேர்க்கிறான்.
ஏறக்குறைய இரண்டரை நாட்கள் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாகப் பிரதோச கால
நந்தியைச் சுற்றுவதுபோல் புத்தகச் சந்தையைச் சுற்றித் திரிந்தேன். இலக்கியக்
கூட்டமொன்றை நினைவுபடுத்தியபடியே இருந்தது. வெவ்வேறு இடங்களில் நின்று புகைத்தவாறு
எழுத்தாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். வெகுநாட்களுக்குப் பிறகு
சந்திப்பவர்களது கண்களில் அபூர்வமான ஒளி தோன்றி மறைந்தது. கூட்டத்தில் நீண்டநாள்
கழித்துக் கண்டவர்களோடு துண்டு துண்டாகவே பேச முடிந்தது. தெரிவுசெய்தவற்றின்
விலையையும் கையிருப்பையும் ஓயாமல் கணக்கிட்டபடியேயிருந்த போது விசிலை ஊதியபடியே
காக்கிக்காரர் நுழைய கடையைக் காலிசெய்ய வேண்டியதாகிவிட்டது.
பெண்களும் குழந்தைகளும் சாரை சாரையாக வந்துகொண்டிருந்தது கண்களை நிறைக்கும்
காட்சி. வேறொரு உலகினுள் நுழைந்துவிட்ட பிரமையில் நின்றிருந்த ஆண்களை, பெண்கள்
வாங்கத் தூண்டுவதைப் பலமுறை கண்டேன். நவீன இலக்கியங்கள் விற்றுத்தீர்வதைக் காண்பது
பரவசமான அனுபவம். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து என்.பி.டி அரங்கிற்குச் சென்று
பஷீரின் பாத்துமாவின் ஆடு, இளம் பருவத்துத் தோழி இரண்டையும் கேட்டு
நச்சரித்துக்கொண்டிருக்கிறேன்; கடந்த ஓராண்டாக அக்னி நதியையும். பதில் ‘Out of
print’. இது இலக்கிய ருசி அற்றவர்களிடம் இலக்கியம் சிக்கிய அவலம்.
விடியலிருந்து கணக்கைத் துவக்கினேன். தேடிய பெட்ரோ பரோமா உடனே கிடைத்தது.
கண்காட்சியில் இருந்தும் அலட்சியத்தால் தவறவிட்ட மற்றொரு பேரிலக்கியம்
தல்ஸ்தோயின் போரும் அமைதியும். காலச்சுவடு அரங்கில் சுந்தர ராமசாமியின் பள்ளியில்
ஒரு நாய்க்குட்டி, பஷீரின் உலகப் புகழ்பெற்ற மூக்கு ஆகிய இரண்டு சிறுகதைத்
தொகுதிகளையும் வாங்கிக் கொண்டிருந்தபோது, காலச்சுவடு வெளியிட்ட ‘கிளாசிக்’ வரிசை
நூல்களுக்குப் பெரும் வரவேற்பிருப்பதைப் பார்த்தேன். அங்கு தினமும் நூல்
வெளியீட்டுக்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஜெயமோகனின் ஊமைச் செந்நாய் (உயிர்மை),
சக்கரியாவின் இரண்டாம் குடியேற்றம் (வம்சி) இரண்டும் ஆர்வத்தோடு வாங்கிய சிறுகதைத்
தொகுதிகள் (மொ-ர்-ஜெயஸ்ரீ). அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்
நாவல், நல்ல கவனம் பெற்றிருந்தது. போனமுறை விடுபட்ட நிலாக்கள் தூரதூரமாக, நாடு
விட்டு நாடு இரண்டு தன் வரலாற்று நூல்களை இம்முறை (தமிழினி) தவறவிடவில்லை.
இந்தக் கண்காட்சியின் நட்சத்திரம் சு. வெங்கடேசன். அவரது காவல் கோட்டம் (தமிழினி)
நாவல் பெரும் வரவேற்பும் கவனமும் பெற்றிருந்தது. நாவலைப் படிக்காமலேயே நண்பர்கள்
எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், நான் (அறையில்) மூவரும் அவரிடம் ஒலிப்பதிவு
செய்யப்படாத இரண்டு மணிநேர நேர்காணலை எடுத்தோம். சொல்லித் தீராத தகவல்கள்
அவரிடமிருந்தன. ஆழமாகக் கற்றபின் இப்பணியைச் செய்தால் அது தவிர்க்க முடியாத பதிவாக
இருக்கும். இந்நாவலை வாங்க முடியாமலேயே திரும்ப வேண்டியதாகிவிட்டது. வாங்கியவை
மனநிறைவு தந்தாலும், முடியாமல் விட்டுவந்தவை ஏக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
|