|
சென்னையில் வருடாவருடம் நடக்கும் புத்தகக் கண்காட்சி பரவலான அறிமுகத்தைப்
பெற்று, சுற்றுலாப் பொருட்காட்சிக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டது என்பதற்குக்
கண்காட்சிக்கு உள்ளே இருந்த பஜ்ஜிக் கடையில் தென்பட்ட கூட்டமே சாட்சி. இத்தனைக்கும்
ஒரு பஜ்ஜியின் விலை ரூ. 7.50!
கடந்த பல வருடங்களைவிட இந்த முறை கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
குழப்பமில்லாத வடிவமைப்பு. வழக்கம்போலவே பக்தி நூல்கள் விற்கும் கடைகளில் கூட்டம்
கட்டுக்கடங்காமல் இருந்தது. இன்னொரு கடையில் கல்கி, தொல்ஸ்தோய் போன்ற பல பிரபல
எழுத்தாளர்களின் படைப்புகள் சகட்டு மேனிக்கு அடுக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்து
பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். கல்கி பெயரைச் சிறியதாகப்
போட்டு, பதிப்பாசிரியர் என்று ஏதோ ஒரு அம்மணியின் பெயரைப் பெரிதாகப்
போட்டிருந்தார்கள். புத்தகத்தைத் திறந்தவுடன் யாரோ ஒரு வயதான அம்மணியின் படம்.
பொன்னியின் செல்வன் அந்த அம்மாவுக்குச் சமர்ப் பணமாம். எல்லாம் பதிப்பாசிரிய
அம்மணியின் கைங்கர்யம். இதைப் பார்த்துக் கல்கியின் ஆவி கொதித்துப் போயிருக்கும்.
தொல்ஸ்தோய்க்கும் அதே கதிதான்.
வழக்கம்போலவே பல சீரியஸ் பதிப்பக உரிமையாளர்கள் தங்கள் ஸ்டால் வாசலில் அமர்ந்து
புத்தகம் வாங்கவருபவர்களை விரோத பாவத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக ஒரு பதிப்பாளர் தன் கடையில் புத்தகம் வாங்குபவர்களைக் “குறுகுறு”வெனப்
பார்த்துக்கொண்டிருந்தார். “கண்காட்சி வச்சாலே இதே பிரச்சினைதான். எல்லாம்
புத்தகம் வாங்குவானுக ... ” என்பதுபோல் இருந்தது அவர் பார்வை.
தமிழினி பதிப்பகத்தில் சு.வெங்கடேசனின் 1000 பக்க காவல் கோட்டம் நாவல்
வாங்கியவர்களுக்குப¢ பழைய இலக்கியவாதி மாடல் தோள் பை ஒன்று இலவசமாகக் கிடைத்தது.
புத்தகத்தின் சைஸ் அப்படி. கண்ணதாசன் பதிப்பகத்தில் அகதா கிறிஸ்டியின் பல நாவல்கள்
தமிழில் கிடைத்தன. அதிலிருந்து யாரும் காப்பி அடிக்கக் கூடாது என்று பதிப்பக
உரிமையாளர் காந்தி கண்ணதாசன் எம்.ஏ. பி. எல்லே சட்டபூர்வ எச்சரிக்கை
விடுத்திருந்தார். கவிஞர் ஒருவர் தன் பிரம்மாண்டப் படங்களுடன் இரட்டை ஸ்டால்
போட்டிருந்தார். அந்த ஸ்டாலுக்குள் நுழையும் சீரியஸ் முகத்துக்காரர்களுக்கு
கேட்லாக் ஒன்று இலவசமாகக் கிடைத்தது (காலச்சுவடு ஆசிரியர் தேவிபாரதிக்கும் ஒரு
கேட்லாக் கிடைத்தது).
முதல்முறையாகத் தமிழ் காமிக்ஸ்கள் (லயன், முத்து காமிக்ஸ்) இன்ஃபோமேப்ஸ் என்ற
கடையில் விற்பனைக்குக் கிடைத்தன. அந்தப் பக்கம் சென்றவர்கள் “நானும் சின்னப்
பிள்ளையாக இருக்கும்போது இதையெல்லாம் படித்திருக்கிறேன்” என்று சொல்லிச்
சென்றுகொண்டிருந்தார்கள். என்பிடி, சிபிடி போன்ற பதிப்பகங்களில்
குழந்தைகளுக்காகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள் குறைந்த விலையில்
கிடைத்தன. தங்கள் குழந்தைகள் கண்ணில் அந்தப் புத்தகங்கள் பட்டுவிடாமல் பெற்றோர்
பார்த்துக் கொண்டனர்.
இதெல்லாம் போக, கண்காட்சிக்கு வந்தவர்களைச் சுரண்டும் வேலையும் ஒரு பக்கம்
நடந்துகொண்டிருந்தது. ஒருவர் கண்காட்சிக்குள் நுழையவே குறைந்தது பத்து ரூபாய்
(நுழைவுக் கட்டணம் ஐந்து, கா£¢ அல்லது பைக் நிறுத்துவதற்கான கட்டணம் ஐந்து)
செலவழிக்க வேண்டிய நிலையில், உள்ளே சாப்பிடும் பொருள்கள் ஏகக்கொள்ளை. அரசுப்
பேருந்துகளில் நீண்டதூரம் சென்றால், ஒரு மோசமான உணவகத்தில் நிறுத்தி, பயணிகளின்
தாலியை அறுப்பார்களே அதுதான் ஞாபகத்திற்கு வந்தது. முதலிரண்டு நாட்கள் இரண்டு
பஜ்ஜிகளின் விலை பத்து ரூபாயாக இருந்தது, அதற்கு அடுத்த நாளே பதினைந்து ரூபாயாக
உயர்ந்தது. இவ்வளவுக்கும் நாட்டின் பணவீக்க விகிதம் அன்று சில புள்ளிகள்
குறைந்திருந்தது. அதேபோல, ஐந்து ரூபாய் பெறாத பழத்துண்டுகளை ‘ஃப்ரூட் சாலட்’
என்னும் பெயரில் பதினைந்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்தக்
கடைகளுக்கான ஏலத் தொகையை மிகக் குறைவாக நிர்ணயித்து, வாசகர்களைச் சுரண்டாமல் பபாஸி
பார்த்துக்கொண்டிருக்கலாம். வெளியில் இருந்த ஸ்வீட்ஸ் கடையில் எதையெடுத்தாலும்
இருபத்தைந்து ரூபாய் என்றார்கள். டோக்கன் வாங்குவதிலிருந்து கை கழுவுவதுவரை அங்கே
எல்லாவற்றுக்கும் அடிதடி.
இவர்களையெல்லாம் பொன்னியின் செல்வன் பதிப்பாசிரியரிடம் பிடித்துக் கொடுத்து,
யாருக்காவது சமர்ப்பணம் செய்ய வைக்க வேண்டும். |