|
சமீபத்திய ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றதும்
வளாகத்தில் அதிக நேரத்தைச் செலவழித்ததும் இந்த முறைதான். மிகக் குறைவான
எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்கியதும் இந்தமுறைதான். இதுவே ஆரம்பத்தில் எடுத்த
தீர்மானத்துக்கு எதிரானது.
காலச்சுவடு பதிப்பித்துள்ள திருமாவளவனின் இருள் யாழி, நவாஸ் சௌபியின் எனது
நிலத்தின் பயங்கரம், தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை ஆகிய மூன்று
ஈழத்துக் கவிதைத் தொகுதிகளை வெளியிடுவது மட்டுமே புத்தகச் சந்தைக்குச் செல்வதன்
நோக்கமாக இருந்தது. எனினும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலக்கிய நண்பர்களைச்
சந்திக்கும் அரிய வாய்ப்பை முன்னிட்டு மீண்டும் செல்ல நேர்ந்தது. இலக்கியக்
கூட்டங்களைத் தவிர வெவ்வேறு நண்பர்களை ஒரே இடத்தில் சந்திக்க முடிகிற வாய்ப்புக்காக
அமைப்பாளர்களுக்கு நன்றி.
‘தமிழில் இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார்
சக்கரியா. அவருடைய இரண்டு புத்தகங்களின் வெளியீடு புத்தகச் சந்தையில் நடந்தது.
வம்சி வெளியீடான சிறுகதைத் திரட்டு இரண்டாவது குடியேற்றமும் காலச்சுவடு வெளியிட்ட
பத்திகளின் தொகுப்பான அரபிக் கடலோரமும் வெளியிடப்பட்டன. வெளியீடு முடிந்து
சக்கரியாவுடன் கைகுலுக்கிய நாலு பேரில் மூவர் எழுத்தாளர்கள். கைகுலுக்கல்கள்
முடிந்ததும் சக்கரியா சொன்னார், ‘நான் சொன்னதைக் கொஞ்சம் திருத்திக்கொள்.
தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.’
mmm
புத்தக வாசிப்பாளர்களும் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் திரண்ட சூழலில் திரை
நட்சத்திரங்கள் சிலவும் ஆங்காங்கே மின்னின. புதிய இயக்குநர்களும் தென்பட்டார்கள்.
சக்கரியாவின் புத்தகம் வெளியிடப்பட்ட காலச்சுவடு ஸ்டாலில் குள்ளமான மனிதர் ஒருவர்
கவனமாகப் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தார்.
தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்ற குறுகுறுப்பும் அவருடைய கடைக் கண்ணில்
தெரிந்தது. சக்கரியாவின் அரபிக் கடலோரம் புத்தகத்தை வெளியிட்ட ஞாநியிடம் ‘இவர்தானே
இயக்குநர் சசி?’ என்று கேட்டேன். ‘அப்படியா?’ என்று சந்தேகம் தொனிக்கக் கேட்ட
ஞாநி, அவரிடமே “நீங்க சசிதானே?” எனக் கேட்டார். சின்ன வெட்கப் புன்னகையுடனும்
அதைவிட ஒரு சுற்றுப் பெரிய சந்தோஷப் புன்னகையுடனும் ‘ஆமாம்’ என்றார். அவர் இயக்கி
வெளிவந்திருக்கும் ‘பூ’ பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார் ஞாநி. இலக்கிய
வட்டாரங்களிலும் பத்திரிகை வட்டாரங்களிலும் படத்துக்கு உடன்பாடான கருத்து. ஆனால்
வியாபார வட்டத்தில் தான் கொஞ்சம் சுணக்கம் என்றார் சசி.
“ஏன்?”
“பெண்ணை ரொம்பவே மையப் படுத்திவிட்டதாக இருக்கலாம்” என்றார் சசி.
mmm
என்னுடைய இரண்டு புத்தகங்களை உயிர்மை வெளியிடுவதாகத் திட்டம். திட்டம் பாதி வெற்றி.
ஒரு புத்தகம் வெளியாகிவிட்டது. மனுஷ்ய புத்திரனுடன் பேசிக்கொண்டு நின்ற
சந்தர்ப்பங்களில் சாரு நிவேதிதாவும் இருந்தார். பத்துப் புத்தகங்கள்
வெளியாகியிருந்தன அவருக்கு. புத்தகம் வாங்கிய வாசகர்கள் சிரத்தையாகப் புத்தகத்தை
விரித்து முதல் பக்கத்தில் கையொப்பம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம்
பொறாமையாக இருந்தது. இத்தனைக்கும் உயிர்மை பதிப்பக ஃப்ளக்சில் என்னுடைய உருவமும்
இருந்தது. என்னுடைய வாசகர் என்று யாராவது பிரத்தியட்சப்பட்டுப் புதிய புத்தகத்தை
வாங்கிவந்து கையெழுத்துக்காக நீட்டுவார் என்று காத்திருந்தேன். கால்கடுத்ததுதான்
மிச்சம். நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த வரிசையில் நடந்த போது ஓர்
இளைஞர் வழிமறித்தார்.
“நீங்க சுகுமாரன்தானே?”
“ஆமாம்.”
“கவிஞர் சுகுமாரன்?”
“ஆமாம்.”
“என் பேரு சிதம்பரம். வியாசர் பாடியிலேர்ந்து வர்றேன். கவிதைகளைப் படிச்சிருக்கேன்
ரொம்பப் பிடிக்கும்.”
“நல்லதுங்க. நன்றி” என்று நகரப் பார்த்தேன்.
“சார், ஒரு ரெண்டு நிமிஷம் நிப்பீங்களா? உங்க புத்தகம் வாங்கிட்டு வந்துடறேன்.
கையெழுத்துப் போட்டுக் குடுங்க.”
பேச்சைக் கேட்டு ஜீன்ஸ் போட்ட அழகான பெண் ஒருத்தி புரிந்துகொண்டது போலச்
சிரித்தபடி எங்களைக் கடந்தாள். எழுத்துக் கலையின் தேவதை எனக்குக் கிடைக்கும் வாசக
அங்கீகாரத்தை ஆசீர்வதித்துச் சிரிப்பதாகக் கற்பனை செய்துகொண்டேன். நின்றேன்.
சிதம்பரம் மறுபடியும் ஒருமுறை “சார், ஒரே நிமிஷம்” என்று கூட்டத்தில் கலந்தார்.
கலந்த வேகத்திலேயே கூட்டத்தைப் பிளந்துகொண்டு மீண்டும் பக்கத்தில் வந்தார்.
“சார், பில்லுக்கு கார்டைத் தேய்க்கணும். உங்க பேனாவக் குடுக்கிறீங்களா? ஒரே
நிமிஷம் வந்துடறேன்” என்றார். பேனாவைக் கொடுக்கத் தயக்கமாக இருந்தது. கொஞ்சம்
விலை அதிகமான க்ராஸ் பேனா. மூக்கால் அழுதுகொண்டு கொடுத்தேன். அவர் வாங்கிவரப்
போகும் புத்தகம் எதுவாக இருக்கும்? என்னுடைய கவிதைத் தொகுதி? கட்டுரைத்
தொகுப்பு? மொழி பெயர்ப்பு?
காகிதக் கனவுகளுக்கிடையில் நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டுப் போன
சிதம்பரத்துக்காக அதே இடத்தில் காத்திருந்தேன். மக்கள் திரள் என்னைத் தாண்டிப்
போய்க்கொண்டிருந்தது. மனத்துக்குள் ஒரு கணக் கெடுப்பும் நடந்துகொண்டிருந்தது.
ஐந்து பேர் கடந்துபோனால் இருவர் கையிலாவது கட்டாயம் புத்தகப் பைகள் இருந்தன.
இருபதில் ஒருவரிடம் சீரியஸ் இலக்கியப் பதிப்பகங்களின் காகிதப் பைகள் தென்பட்டன.
கல்வி சிறந்த தமிழ்நாடு என்று புளகாங்கிதப்பட்டுக்கொண்டே நிமிர்ந்தபோது தெரிந்த
காலியான வழியில் சிதம்பரம் வந்துகொண்டிருந்தார். அவர் கையிலும் காகிதப் பை
இருந்தது. அவர் நீட்டப்போகும் புத்தகத்தில் வெறும் கையெழுத்துப்போடுவதா, அல்லது
ஏதாவது பொன்மொழி எழுத வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள்
குறுக்கு வழியாக ஒரு கூட்டம் வந்தது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சிப் பிரபலமான
‘நீயா நானா?’ கோபிநாத் வந்துகொண்டிருந்தார். என்னை நோக்கி வந்துகொண்டிருந்த
சிதம்பரம் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்த கோபி நாத்தைப் பின்தொடர்ந்து
ஓடினார். ஓடும்போதும் மறக்காமல் “ஒரே நிமிஷம் சார்” என்றார். கோபிநாத்தை
வழிமறித்து ஏதோ புத்தகத்தில் கையெழுத்து வாங்குவதைப் பார்க்க முடிந்தது. கோபிநாத்
ஏதாவது புத்தகம் எழுதியிருக்கிறாரா என்று தெரியாது. ஆனால் சிதம்பரம் கையெழுத்து
வாங்க நீட்டியது என்னுடைய கவிதைத் தொகுப்பு என்று தெரியும். அதன் பிறகு
சிதம்பரத்தைப் பார்க்கவில்லை. க்ராஸ் பேனாவை இழந்த வருத்தத்தைவிட ஒரு வாசகரை இழந்த
வருத்தம் மிக அதிகம்.
mmm
மூன்றாம்முறை போயிருந்தபோது உடனேயே திரும்ப வேண்டிய கட்டாயம். எனினும் ஒரு மணி
நேரத்துக்குப் பின்னர்தான் வெளியே வர முடிந்தது. புதிதாக வந்திருந்த என்னுடைய
புத்தகத்தை மை வாசனை மாறாமல் கொடுத்தார் மனுஷ்ய புத்திரன். புதிய புத்தகம்
கைக்குக் கிடைத்ததும் வழக்கமாக சந்தோஷமும் அதையொட்டியே லேசான, வறுமையும்
தோன்றும். அன்றும் அப்படியே. புத்தகம் நண்பர் அன்னம் கதிருக்குச் சமர்ப்பணம்.
பிரதியை அவருக்குக் கொடுக்க அன்னம் ஸ்டால் அருகே நின்றேன். தொலைவில் மனைவி
சகிதமாகக் கி.ரா. கதிருடன் வந்துகொண்டிருந்தார். அவருடைய நாட்டுப்புறக் கதைகள்
ஆங்கிலத்தில் வெளியாகியிருப்பதாகச் சொன்னார் கதிர். புத்தகத்தை நண்பர் கையில்
சமர்ப்பித்து, ராஜநாராயணனின் கையைப் பற்றி விடையும் பெற்றுக்கொண்டு அடுத்த
வரிசையில் புகுந்ததும் ஆஜானுபாகுவான ஒருவர் தடுத்து நிறுத்தினார்.
‘நீயோ வலியச் சரணடைந்த நிலம்.
எனக்கோ வென்றவனின் மன வெறுமை’ ங்கிற
வரிகளை எழுதினது நீங்கதானே?’ என்றார். ஆசாமியின் தோற்றத்தைப் பார்த்துத் ‘தெரியாம
எழுதிட்டேங்க’ எனச் சொல்லவிருந்தேன். அவரே முந்திக்கொண்டு ‘என்னை ரொம்பவும்
பாதிச்ச வரிங்க’ என்று சொல்லி இதயத்துடிப்பைச் சமன்செய்தார்.
‘புது புத்தகம் வந்திருக்கா?’ என்றார். ‘ஆமாங்க. ரெண்டு மொழிபெயர்ப்பும் ஒரு
கட்டுரைத் தொகுப்பும் காலச்சுவடும் உயிர்மையும் போட்டிருக்காங்க. அங்கே
கிடைக்கும்’. அப்பாடி, எனக்கும் ஒரு வாசகர் இருக்கிறார் என்று மனம் கும்மாளம்
போட்டது. ‘கட்டுரையெல்லாம் வேணாங்க, கவிதைலதாங்க நம்மளுக்கு ஆர்வம். வர்றேங்க’
என்றார். விடைபெறுகிற தோரணையில் வலது கையிலிருந்த புத்தகப்பையை இடது கைக்கு மாற்றி
வலது கையை நீட்டினார். கையைக் குலுக்கிக்கொண்டே கவனித்தேன். அவர் வைத்திருந்த
புத்தகங்களில் பெரும்பான்மையும் கவிதைத் தொகுப்புகள். ‘மறுபடியும் சந்திப்போங்க’
என்று நகர்ந்தார்.
கவிதைக்கு வாசகர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அன்னாரின் பெயரைக்கூடக்
கேட்கவில்லை என்பது அவர் கூட்டத்தில் கரைந்த பிறகே உறைத்தது. எப்படியும் அடுத்தமுறை
பார்க்கலாம். அதற்குள் ஒரு தொகுப்பளவுக்கான கவிதைகளை எழுதிவிட முடியுமா?
mmm
சுகாவுடன் எனக்குள்ள நட்பு மின்னஞ்சல் மூலமாகவே. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரைப்
புத்தகக் கண்காட்சியில் நொடிநேர அறிமுகம் நிகழ்ந்தது. இரண்டு பேரும் நினைவில்
வைத்துக்கொள்ளக்கூடியதாக எதுவும் அதில் இல்லை. ஆக, அவரை நானும் என்னை அவரும்
பார்த்ததில்லை என்பதே சரி. சுகா என்னைப் பார்த்த சம்பவம்தான் இந்தப் புத்தகக்
கண்காட்சியில் என்னுடைய உச்சபட்ச சுவாரசியம்.
ஒரு ஸ்டாலில் நின்றுகொண்டிருந்த சுகுமாரனைப் பார்த்திருக்கிறார் சுகா. சந்தேகத்தை
நிவர்த்திசெய்துகொள்ள நண்பர் ஹரன் பிரசன்னாவிடம் அடையாளங்கள் சொல்லி விசாரணையும்
செய்திருக்கிறார். மேலதிக நிரூபணத்துக்கு வார்த்தை இதழின் பொறுப்பாளர்
தேவராஜனையும் தொடர்புகொண்டிருக்கிறார். பிறகு தனது நண்பருடன் சுகுமாரனை
நெருங்கியிருக்கிறார். அவரிடம் கையை நீட்ட அவரும் சிரித்தபடி குலுக்கியிருக்கிறார்.
‘கவிஞர் சுகுமாரன்?’ இது சுகாவின் கேள்வி.
‘நீங்களா?’ இது கிடைத்த பதில்.
‘நான் உங்களைக் கேட்டேன். நீங்கள் கவிஞர் சுகுமாரன்தானே?’ இது மறு கேள்வி.
‘இன்றைக்கு மட்டும் நான்கைந்து பேர் கேட்டுவிட்டார்கள். அதுல இரண்டு பேர் பெண்கள்’
இது மறுமொழி. சுகாவுக்கும் நண்பருக்கும் விபரீதம் புரிந்திருக்கிறது. போகத்
தொடங்கிய வர்களைச் சுகுமாரன் நிறுத்தி ‘நீங்களாகவே வந்து பேசியதால் என்னோட
அன்புப் பரிசு’ என்று ஒரு கவிதை நூலையும் கொடுத்திருக்கிறார். தொகுப்பின் பெயர்
இரவின் நரை. எழுதியவர் பிச்சினிக்காடு இளங்கோ. சுகாவைச் சந்தித்தால் கேட்க
வேண்டும். அந்த நான்கைந்து பேரில் இருவர் பெண்கள் என்றாரே அதை விசாரித்தீர்களா?
mmm
கிட்டத்தட்ட அறுநூறு ஸ்டால்கள். இலட்சக்கணக்கான புத்தகங்கள். கோடிக்கணக்கான
பக்கங்கள். பல கோடிச் சொற்கள். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள். பல்லாயிரக்கணக்கான
வாசகர்கள். இந்தப் பிரம்மாண்டத்திலிருந்து நான் வாங்கிய நூல்களின் பக்கங்கள்
துளியூண்டுதான் இருக்குமென்று யோசித்துக்கொண்டே இறுதி நாள் இரவு திரும்பினேன்.
சக்கரியாவிடம் சொல்ல வேண்டும் தமிழில் இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது
ஆச்சரியமல்ல. |