|
கடந்த சில வருடங்களில் தமிழ்ப் பதிப்புத் துறை கண்டிருக்கும் அபரிமிதமான
வளர்ச்சிக்கும் சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாக்களுக்குமிடையே
உள்ள நெருங்கிய தொடர்பை நேரடியாக அறிந்துகொள்வதற்கு, சென்னைப் புத்தகக்
கண்காட்சியைவிடப் பொருத்தமான இடம் வேறெதுவும் இருக்க முடியாது. இந்த ஆண்டு ஜனவரி 8
முதல் 18 முடிய 11 நாட்கள் நடைபெற்ற 32வது புத்தகக் காட்சியில் அதற்குப் பல
உதாரணங்கள் தென்பட்டன. பிரத்தியட்ச உதாரணம் ஜோ மல்லூரி. அவர் ஒரு கவிஞர் என்று
நினைக்கிறேன். 1500 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்த மல்லூரி, அதைக்
காட்சிக்கு வைப்பதற்காக இரண்டு கடைகள் அடங்கிய பெரிய ஸ்டால் ஒன்றை எடுத்திருந்தார்.
ஸ்டால் முழுவதையும் அவருடைய ஒரு புத்தகமும் அதை விளம்பரப்படுத்தும் பல வண்ணப்
போஸ்டர்களும் நிறைத்திருந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அவரது
புத்தகம் பல கோணங்களில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. வாழ்த்து அட்டைகளின் தரத்தில்
வழவழப்பான ஆர்ட் பேப்பரில் ‘நீ வண்டென்றால் நான் பூ, நீ பூவென்றால் நான் வண்டு’
என்பன போன்ற ‘கவிதை’ வரிகள் அச்சிடப்பட்ட ஆல்பம் அது. வாசகர்களுக்கு அந்தப்
புத்தகத்தின் மகத்துவத்தை விளக்குவதற்காக ஐம்பதுகளில் இருக்கும் நான்கைந்து
ஊக்குநர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஊக்குநர்களுக்கும் புத்தகப் பிரதிகளுக்கும்
நடுவில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த ஜோ மல்லூரியின் முகத்தில் தென்பட்ட
பெருமிதத்தையும் பூரிப்பையும் பார்த்தபொழுது தான் மல்லூரி போன்ற கவிஞர்களுக்கு
புத்தகச் சந்தைகள் அளித்திருக்கும் தன்னம்பிக்கையின் பரிமாணம் புரிந்தது.
முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு கூட்டம் அலைமோதியது. வழக்கமாகத் தென்படும்
அதிமுக்கியஸ்தர்களில் பலரை இந்தப் புத்தகச் சந்தையில் அடிக்கடி பார்க்க முடியவில்லை
என்றாலும் குடும்பத்தோடு திரண்டு வந்திருந்த வாசகர்கள் தமக்குப் பிடித்தமான
புத்தகங்களைத் தேடி உற்சாகமாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சுற்றுலாப்
பொருட்காட்சி, சென்னை சங்கமம், தைத் திருநாள் கொண்டாட்டங்களைப் போல் வெகு
மக்களுக்கான கொண்டாட்ட வெளியாக மாறியிருக்கிறது சென்னைப் புத்தகச் சந்தை. பல
பதிப்பாளர்கள் விற்பனை மந்தம் என்று சலித்துக்கொண்டதற்கான காரணத்தை ஆராய்வதற்கு ஒரு
குழு அமைக்க வேண்டியது அவசியம்.
பிரபலங்களைக் கொண்டு விமரிசையாக நடத்தப்படும் வெளியீட்டு விழாக்கள், புத்தகம்
வெளிவருவதற்கு முன்பாகவே வெளிவந்துவிடும் விமர்சனங்கள், புத்தகங்கள், எழுத்தாளர்கள்
குறித்துக் கட்டமைக்கப்படும் அதீதப் புனைவுகள் போன்றவற்றை வாசகர்கள்
பொருட்படுத்துவதே இல்லையோ என்று அவற்றைக் கேட்டபோது தோன்றியது.
mmm
காலச்சுவடு அரங்கின் புத்தக விற்பனை சென்ற ஆண்டோடு ஒப்பிடும் பொழுது 40 சதவீதம்
அளவுக்குக் கூடியிருந்தது. ஜனவரி 2008 காலச்சுவடு இதழ் 350க்கும் மேற்பட்ட பிரதிகள்
விற்பனையானது. அரங்கில் 250க்கும் மேற்பட்ட வாசகர்கள் காலச்சுவடின் சந்தாதாரர்களாகத்
தம்மைப் பதிவுசெய்துகொண்டார்கள். புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன்
படைப்புகள் தமிழ் வாசகர்களுக்குத் தீவிர வாசிப்பின் அடையாளங்களாய் மாறியிருப்பதை
நம்ப முடியாத அளவுக்குப் பெருகிவரும¢ அவற்றின் விற்பனையைக் கொண்டு உணர முடிந்தது.
அதேபோல் காலச்சுவடு வெளியிட்ட ‘கிளாசிக்’ வரிசை நூல்களும் வாசகர்களின் பெரும்
வரவேற்பைப் பெற்றன. ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், எம்.வி.
வெங்கட்ராமின் நித்ய கன்னி, க.நா. சுப்பிரமணியத்தின் பொய்த் தேவு, கி.
ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் போன்ற தமிழின் தலை சிறந்த நாவல்களின் வரிசையில்
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சா. கந்தசாமியின் சாயாவனம், நீல. பத்மநாபனின்
பள்ளிகொண்டபுரம் ஆகிய நாவல்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. வைக்கம் முகம்மது
பஷீரின் மதில்கள் குறுநாவல், (கவிஞர் சுகுமாரனின் மொழியாக்கம்), பஷீரின்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளடங்கிய உலகப் புகழ்பெற்ற மூக்கு (குளச்சல் மு.
யூசுப்பின் மொழியாக்கம்) ஆகிய இரண்டு புத்தகங்களும் விற்பனையில் வரலாறு படைத்தன.
கவிதைத் தொகுப்புகள் வாசகர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டதை இந்த ஆண்டு
காலச்சுவடு வெளியிட்டிருந்த அனைத்துக் கவிதை நூல்களும் சிறப்பாக விற்பனையானதைக்
கொண்டு உணர முடிந்தது. அவர்களில் பெரும் பாலோர் சந்தையில் அறிமுகமற்ற புதிய இளம்
கவிஞர்கள்.
பிரபலமாக்கப்பட்டுச் சந்தைப்படுத்தப்பட்ட எழுத்தாளர்களின் மீதான மயக்கங்களுக்கும்
புத்தக விற்பனைக்கும் தொடர்பு இருப்பதாகப் பரப்பப்படும் கட்டுக்கதைகளை வாசகர்கள்
இதன் மூலம் உடைத்தெறிந்திருக்கிறார்கள். இதேபோல உடைத் தெறியப்பட்ட மற்றொரு
கட்டுக்கதை புத்தக வெளியீட்டு விழாக்கள் சார்ந்தது. ஆடம்பரமான அரங்குகளில் அரசியல்,
திரையுலகப் பிரபலங்களைக் கொண்டு பகட்டாக நடத்தப்படும் விழாக்களின் வழியே
புத்தகங்களைக் கவனப்படுத்த நடத்தப்படும் முயற்சிகளைப் பொருட்படுத்தாமல், காலச்சுவடு
தன் விற்பனை அரங்கில் ஒவ்வொரு நாள் மாலையிலும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளை
நடத்தியது. அசோகமித்திரன்,
கி. ராஜநாராயணன், சா. கந்தசாமி,
கே. ஏ. குணசேகரன், திலீப்குமார் உள்ளிட்ட தமிழின் படைப்பாளுமைகள் பலர் பங்குபெற்ற
இந்நிகழ்வுகளில் வாசகர்கள் பங்கேற்றனர். மிகுந்த மன நிறைவு தந்த எளிய நிகழ்வுகள் இவை.
எழுத்தாளர்கள் நிகழ்த்திய மிகச் சுருக்கமான உரைகளை பபாசி அலுவலகத்திலிருந்து
சராசரியாக இரண்டு நிமிடங்களுக்கொருதரம் வந்துகொண்டிருந்த, “எலக்ட்ரீசியன் ஒருவர்
உடனடியாக அலுவலகத்திற்கு வரவும்” என்னும் அறிவிப்பு அவ்வப்போது தடைசெய்தது. புத்தக
அரங¢குகளின் எண்ணிக்கையை அதிகரித்த பபாசி எலக்ட்ரீசியன்களின் எண்ணிக்கையையும்
கூட்டியிருக்கலாம். எப்போதும் ஓரிரு எலக்ட்ரீசியன்கள் அலுவலகத்திலேயே
காத்திருக்குமாறு ஏற்பாடு செய்யலாம். கைபேசி என்ற உபகரணம் பரவலான புழக்கத்தில்
இருக்கிறது. புத்தகச் சந்தை எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்தித்து உரையாடுவதற்கான
மிக முக்கியமான வெளி அல்லவா? அவர்களும் கொஞ்சம் பேசிக்கொள்ளட்டுமே!
mmm
காலச்சுவடு நூல் அறிமுக விழா தொடர்பான புகைப்படங்கள், புத்தகச் சந்தையில் அடிக்கடி
தென்பட்ட கவிஞர் சுகுமாரன், கடற்கரய், பத்திரிகையாளர் கே. முரளிதரன், இளம் சிறுகதை
எழுத்தாளர் கே. என். செந்தில் ஆகியோர் இந்தப் புத்தகச் சந்தை குறித்த தம்
அனுபவங்களையும் கருத்துகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள். புத்தகச் சந்தை போன்ற
நீண்ட காலமாக நடை பெற்றுவரும் இலக்கியத் திருவிழாக்கள் குறித்த எழுத்தாளர்களின்
பதிவுகள் அவை தரும் வாசிப்பு அனுபவங்களையும் தாண்டி முக்கியமானவையாகவும்
பயனுள்ளவையாகவும் இருக்கும் என நம்புகிறோம். |