|
சென்ற ஜனவரி 17ஆம் நாள் மறைந்த கமில் ஸ்வெலபில் இருபதாம் நூற்றாண்டுப்
பிற்பகுதியின் தலைசிறந்த அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல்
பிற திராவிட மொழிகளிலும் நல்ல பயிற்சி கொண்டிருந்தவர். வடமொழி, செக் மற்றும் பிற
செவ்வியல் மொழிகளும் அறிந்தவர். பெரும்பாலான பிற ஐரோப்பிய அறிஞர்கள் போலல்லாமல்
வளமான ஆங்கில எழுத்து நடை கைவரப்பெற்றவர்.
அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் நெடிய தமிழ் மரபின் இரண்டொரு கூறுகளில் மட்டுமே
பொதுவாகக் கவனம் செலுத்துவது வழக்கம். ஏ.கே. இராமாநுஜன் சங்க இலக்கியம், ஆழ்வார்
பாடல்கள், நாட்டார் இலக்கியம், மொழியியல் முதலான துறைகளில் ஆழ்ந்த கவனம்
செலுத்தினார். ஜார்ஜ் ஹார்ட் தற்கால இலக்கியத்தைக் கவனிப்பதில்லை. சங்கப் பாடல்களைச்
சிறந்த ஆங்கிலக் கவிதைகளாக உருமாற்றிய ஏ.கே. இராமாநுஜன் தற்காலத் தமிழிலக்கியத்தை
மொழிபெயர்த்தபொழுது தம்பி சீனிவாசன் கவிதையைத்தான் தேர்ந்தெடுத்தார்.
சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், தல புராணங்கள், நீதி இலக்கியம்,
பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், புதுக் கவிதை, பி.ஆர். ராஜம்
ஐயர், புதுமைப்பித்தன், விந்தன், ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா., ரகுநாதன்,
டொமினிக் ஜீவா எனப் பலரையும் செக் மொழியில் கமில் மொழிபெயர்த்தார்.
இலக்கியம் தவிர மொழியியல், இலக்கணம், யாப்பு, நாட்டார் இலக்கியம், பழங்குடி ஆய்வு,
தொல்லெழுத்தியல் எனப் பல்வேறு துறைகளில் கமில் ஈடுபாடுகொண்டிருந்தார்.
தமிழ் தவிர மலையாளத்திலிருந்தும் - முக்கியமாக வள்ளத்தோல், தகழி, பொற்றேகாட் -
கன்னடத்திலிருந்தும் மொழிபெயர்த்திருக்கிறார்.
1995இல் வெளியான Orientalia Pragensia XIII என்ற கமில் ஸ்வெலபில் பற்றி வெளியான ஒரு
சிறப்பிதழில் 1951 முதல் 1994 வரை அவர் எழுதியவற்றின் நூற்பட்டியல் உள்ளது. எனக்குத்
தெரிந்து பல விடுபடல்கள் இப்பட்டியலில் உண்டு. அப்படியும் அதில் 509 உருப்படிகள்.
கமில் ஸ்வெலபிலின் ஆய்வுப் பரப்பையும் வீச்சையும் இது காட்டும்.
1927இல் அன்றைய செக்கஸ்லோவகிய தேசத்தில் பிறந்த கமில், 1946 முதல் 1952 வரை பிராகு
நகரத்தில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலும் ஆங்கிலமும் பயின்று முனைவர்
பட்டம் பெற்றார். தமிழ் பயிலும் வாய்ப்பில்லாத ஒரு கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இந்த
அளவுக்கு ஒருவர் தமிழ் பயின்றது வியப்புக்குரியது. அண்மைக்காலம்வரைகூட இந்தியவியல்
என்றால் சமஸ்கிருதப் பனுவல்களைப் பயில்வதுதான் என்ற பின்புலத்தில் கமிலின் தமிழ்ப்
பயிற்சியை மதிப்பிட வேண்டும். 1950களில் தமிழகத்திற்கு வந்தபோதுதான் பேச்சுத் தமிழை
அல்லது தமிழ் பேசப்படுவதை முதன்முறையாகக் கேட்டாராம் கமில்.
தமிழ் ஆய்வை உலக அளவில் ஒன்றிணைத்த முன்னோடியான தனிநாயக அடிகளார் நடத்திய Tamil
Culture என்ற சீரிய இதழில் 1954இலேயே கமில் கட்டுரைகள் எழுதித் தமிழுலகுக்கு
அறிமுகமாகி விட்டார்.
வெள்ளைநிற அயலவர்கள் தமிழ் பயில்வதை எப்பொழுதுமே அங்காந்து பார்த்த தமிழர்கள்
கமிலுக்கு 1950களின் பிற்பகுதியில் பரந்த வரவேற்பளித்தார்கள். சைவ சிந்தாந்தக் கழகம்
முதல் ‘சரஸ்வதி’வரை கமிலை வரவேற்றன. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் பாடம் பயின்ற
கமில், தமிழ்ச் சித்தர்கள் பற்றி எழுதிய Poets of the Powers என்ற நூலை அவரின்
முழுப்பக்க படத்தை வெளியிட்டு அவருக்குக் காணிக்கையாக்கினார். பனிப்போர் காலத்தில்
கமில் இடதுசாரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்தார். ‘ஜனசக்தி’யும் ‘சரஸ்வதி’யும்
அவருடைய கட்டுரைகளை வெளியிட்டன. ‘சரஸ்வதி’க்காகத் தொ.மு.சி. ரகுநாதன் கமிலுடன் ஒரு
நீண்ட பேட்டியைக் கண்டார். செக்கஸ்லோவகியா எழுத்துச் சுதந்திரத்தின் உறைவிடம் என்ற
போக்கில் பேட்டி இருக்கும். ‘எழுத்து’ கவிதைகளைக் கமில் மொழிபெயர்த்தது இந்தக்
காலத்தில் அல்ல.
1968இல் பிராகு வசந்தம் சோவியத் படைகளால் நசுக்கப்பட்ட பிறகு கமில்
செக்கஸ்லோவகியாவை விட்டு வெளியேறினார். பிரான்சிலும் ஹாலந்திலும் பல்கலைக்கழகப்
பணியாற்றி 1992இல் ஓய்வுபெற்றார். கடைசிக் காலத்தில் புற்றுநோயால் அல்லலுற்றார் என
அறிய முடிகிறது.
கமில் செக்கஸ்லோவகியாவைவிட்டு வந்த பிறகு ஆங்கிலத்திலேயே அதிகம் எழுதியிருக்கிறார்.
ஜிலீமீ ஷினீவீறீமீ ஷீயீ விuக்ஷீuரீணீஸீ என்ற - தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய
ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டுரைகள் அடங்கிய - நூல் மிகப் புகழ்பெற்றது. முருக -
ஸ்கந்த இணைப்பைப் பற்றிச் சிறு நூல் ஒன்றைக் கமில் எழுதியிருந்தாலும் இது முருகனைப்
பற்றிய நூலல்ல. தமிழுக்கு ஓர் உருவகமாகவே அவர் முருகனைக் கண்டிருக்கிறார்.
நெதர்லாந்திலிருந்து வெளியான இந்திய மொழிகளின் இலக்கிய வரலாற்று வரிசையில் தமிழ்
பற்றிய நூலைக் கமில் எழுதினார்.
உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தென்னாசிய ஆய்வுத் துறைகளில் இந்நூல்கள் பெருமளவு
பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்றாலும், தமிழ் அறிவுலகில் இவை அதிகம் புழங்காததற்கு
அவற்றின் அசாத்திய விலை மட்டுமே காரணமல்ல.
1980கள், 1990களில் கமிலின் சில நூல்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல்
ஆய்வு நிறுவனம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், நியு இரா பதிப்பகம்
ஆகியவற்றின்வழி வெளிவந்தன. உ.வே.சாமிநாதையரின் சுயசரிதையின் ஆங்கில மொழியாக்கம்
இவற்றுள் தனியே சுட்டத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மேலை அறிவுலக மரபில் கமிலின் ஆய்வுகள்
காலூன்றியுள்ளன. செக்கஸ்லோவகிய நாட்டினராக இருந்தும் அவரிடம் மார்க்சியத்தின்
தாக்கம் இருக்கவில்லை. ஐரோப்பிய இந்தியவியல் கோட்பாடுகளில் அதிக ஈடுபாடு
காட்டியதில்லை என்பதோடு இதைப் பொருத்திப் பார்க்கலாம். 1979இல் எட்வர்டு சைதின்
ளிக்ஷீவீமீஸீtணீறீவீsனீ நூல் வெளிவந்த பிறகான கோட்பாட்டு விவாதங்களுக்குக் கமில்
முகங்கொடுக்கவில்லை.
பிற திராவிட மொழிகள் மற்றும் சமஸ்கிருத, பிராகிருதப் பின்புலத்தில் தமிழின்
தனித்தன்மையைக் கமில் முன்வைத்தார். புதிய ஆய்வு முடிவுகளை வெளிக்கொண்டுவந்தவர்
என்பதைவிடத் தமிழ்ப் பண்பாட்டுப் பரப்பை ஒப்பீட்டு முறையில் திறமான ஆங்கிலத்தில்
மேலையுலகுக்குக் காட்டினார். கமிலின் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள்
விஞ்சப்படுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம் என்றே தோன்றுகிறது.
பசவண்ணரின் வசனங்களைக் கன்னடத்திலிருந்து ஆங்கிலமாக்கி 1984இல் நூலாக வெளியிட்டார்
கமில். அது ஏ.கே. இராமாநுஜனைத் ‘தழுவியது’ என்பதை கிரீஷ் கர்னாட்
எடுத்துக்காட்டியிருக்கிறார். தம்முடைய ஆய்வுக்காகப் பயன்படுத்திய தகவல் அட்டைகளை
ஒன்றுகோத்து 1994இல் Lexicon of Tamil Literature என்ற ஒரு பெரிய தொகுதியை
வெளியிட்டார். பிழைகள் மலிந்த கலைக்களஞ்சியம் அது. (இவற்றில் சிலவற்றைச்
சுட்டிக்காட்டி ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த மா. மதியழகன் ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறார்.)
1812இல் எல்லிஸ் நிறுவிய சென்னைக் கல்விச் சங்கப் புலவர்கள் பற்றிக் கமில் எழுதிய
ஒரு கட்டுரை (Companion Studies to the History of Tamil Literature, E.J. Brill
வெளியீடு, 1992) மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்
இலக்கியம்’ (1962) நூற் செய்திகளை முழுவதும் எழுத்தாண்டிருப்பதைக் கண்டு சில காலம்
முன்பு திகைப்புற்றேன். மயிலை சீனி அந்த நூலைக் கமில் ஸ்வெலபிலுக்குக்
காணிக்கையாக்கியிருந்தார்!
கமில் ஸ்வெலபில் நூல்கள்
· Dravidian Linguistics: An Introduction
· Tamil Literature
· Companion Studies to the History of Tamil Literature
· The Smile of Murugan: On Tamil Literature of South India
· The Poets of the Powers: Magic, Freedom, and Renewal
· Literary Conventions in Akam Poetry
· Two Tamil Folktales
· Lexicon of Tamil Literature
· Introducing Tamil literature
· Ananda-tandava of Siva-sadanrttamurti
· Introduction to the Historical Grammar of the Tamil Language
· Irulas of the Blue Mountains |