Google   www kalachuvadu.com

கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை
சுதந்திர இந்தியாவில் வேளாண்மை (1947-60)
சங்கீதா ஸ்ரீராம்

பசுமைப் புரட்சியின் கதையைப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் வங்காளப் பெரும்பஞ்சத்தைப் பற்றிக் கூறிவிட்டு உடனே PL-480க்குத் தாவிவிடுவது வழக்கம். ஒரு மாறுதலுக்கு, நான் இந்த இருநிகழ்வுகளுக்கும் இடையே நிகழ்ந்த பல முக்கியமான உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகளை, வரும் சில கட்டுரைகளில் விரிவாக விளக்கவிருக்கிறேன். அவற்றுள், சுதந்திர இந்தியாவில் முதல் பத்தாண்டுகளில் நிகழ்ந்த சில முற்போக்கான விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

சுதந்திரம் அடைந்ததும் இந்திய அரசாங்கம் முதன் முதலில் எடுத்துக்கொண்ட முக்கியமான விஷயங்களுள் ஒன்று வேளாண்மைச் சீர்திருத்தம் / வளர்ச்சி. அப்போது, நம் நாட்டில் உணவுப் பயிர்களின் விளைச்சல் மோசமாக இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உணவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர். ராஜேந்திர பிரசாத், உணவு உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்களைத் தீட்ட ஆலோசனைக் குழு ஒன்று அமைத்தார். அதில் காந்தியடிகள் உட்பட அதிகாரிகள் அல்லாத பல ஆளுமைகளும் முக்கியப் பங்கேற்றனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல், இந்தியா உணவு உற்பத்தியில் தற்சார்பு அடைய வேண்டும் என்பதுதான் இந்தக் குழுவின் நம்பிக்கையும் நோக்கமுமாக இருந்தது.

கிட்டத்தட்ட 1960 வரையில் (அதாவது இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலம்வரையில்) இயற்கையுடன் ஒன்றிய, மக்கள் சக்தியை வலுப்படுத்தும், ஜனநாயக உணர்வுடன் கூடிய பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டன. அவை அனைத்தும் நூறு சதவீதம் மக்களைச் சென்றடையவில்லை என்றாலும், உண்மையிலேயே விவசாயிகளை வலுப்படுத்த வேண்டும்; பாழ்பட்டுப் போன நிலங்களை மீட்க வேண்டும் என்கிற நோக்கம் மேலோங்கி இருந்தது.

நிலச் சீர்திருத்தங்களும் கூட்டுறவு அமைப்புகளும்

1948க்குள் விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதால், எல்லா உணவுப் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியது. பொருட்கள் ஏழை மக்கள் வாங்கக் கூடியவையாக இருந்தன. கருப்புச் சந்தை சுருங்கத் தொடங்கியது.

ஜே. சி. குமரப்பா தலைமையில் நிறுவப்பட்ட காங்கிரஸ் வேளாண்மை சீர்திருத்தக் குழு (Congress Agrarian Reforms Committee), ஜூலை 1949இல் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில் வெவ்வேறு நில உரிமை அமைப்புகளை ஆராயும்போது, “(வேளாண் துறையில்) தனிநபர் சொத்துரிமை, பெரிய இயந்திரங்களின் உபயோகத்தை ஊக்குவித்துப் பெரிய விவசாயிகளை சக்தியுள்ளவர்களாக்கி, சிறு விவசாயிகளுக்கான இடத்தைச் சுருக்கி அவர்களைக் கூலியாட்களாக மாற்றிவிடும்; கூட்டுப் பண்ணை முறையில், விவசாயிகள், தொழில்நுட்பவாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் பெரும்படைக்கு அடிமையாகிவிடுவர். ஆகையால், கிராமம் சார்ந்த கூட்டுறவு அமைப்புகளே சிறந்தவை. இவை தனிப்பட்ட விவசாயியின், விவசாயச் சமூகத்தின் நலனுக்கு உகந்தவையாகும். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கும் தங்களுடைய விளைபொருட்களை விற்பதற்கும் கிராமப் பல்நோக்குச் சேவைக் கூட்டுறவு அமைப்புகளை நிறுவ வேண்டும்” என்று பரிந்துரைத்தது.1

எனவே முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் (1950-60) நில மறுவிநியோகம், வாடகைக் குறைப்பு, குத்தகைதாரர்களின் உரிமைகள் ஆகியன முக்கியமான அம்சங்களாக இருந்தன. விவசாயிகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், சிறு சிறு திட்டங்களின் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள் பரிந்துரைக்கப்பட்டன. கிராம மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தப்படுமாறு கிராம அளவிலான கூட்டுறவு அமைப்புகளும் பஞ்சாயத்துகளும் பரிந்துரைக்கப்பட்டன. ஃபோர்டு ஃபௌண்டேஷனும் இந்தக் கொள்கையை அடியொற்றி, 1,500 கிராமங்களுக்குச் சேவை புரியும் வகையில் தான் நிறுவிய 15 சமூக மேம்பாட்டுச் செயல்திட்டங்களிலும் (community develop ment projects) இந்த அணுகுமுறையையே பின்பற்றியது.

இவை அனைத்தும் கொள்கை அளவில் சிறப்பாக இருந்தாலும், செயல்பாடாக மாறும்போது நினைத்த அளவுக்குப் பெரிய பலன்களை அளிக்கவில்லை. தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றாக இணைந்த ஜமீன்தார்கள், மாநில அரசுகள்மீது நிர்ப்பந்தம் செலுத்தியதுதான் இதற்குக் காரணம். மாநில அரசுகள்மீது செல்வாக்குச் செலுத்தி, தனி நபர் வைத்திருக்கக்கூடிய நிலத்தின் உச்சவரம்பை அதிகரிக்கச் செய்தனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வேரூன்றிய ஜமீன்தார் முறை சுதந்திர இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. ஆனால் மாநில அளவில் இந்த மாற்றம் ஆழமாக நடைபெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றிபெற்ற மேற்கு வங்காளம், கேரள மாநிலங்களில் மட்டும், நிலச்சீர்திருத்த முயற்சிகள் ஓரளவு வெற்றிகண்டன.

இயற்கை விவசாயத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள்

இந்தப் பத்தாண்டுக் காலத்தில் பிரசுரிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்ட அறிக்கைகளையும் கட்டுரைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப் புத்தகங்களையும் மற்ற ஆராய்ச்சி அறிக்கைகளையும் விவசாய மாநாடுகளில் தலைவர்கள் ஆற்றிய உரைகளையும் புரட்டிப் பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. மந்திரிகள், விவசாயிகள், விவசாயத் துறை நிபுணர்கள் இப்படி அனைவருமே இயற்கையுடன் ஒன்றிய விவசாயத்தை மேம்படுத்தும் வழிகளைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், செயற்கை விவசாயப் பாதையில் அடியெடுத்துவைக்க வேண்டாம் என்று எச்சரித்தும் இருக்கிறார்கள்.

1950இல் வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷி, வேளாண்மையை மேம்படுத்தும் திட்டங்கள் யாவும் கீழ்மட்டத்திலிருந்து, ஒவ்வொரு கிராமத்தையும் அதற்கே உரிய நீர், நிலம், பயிர்வகைகள், தட்பவெப்ப நிலைகளின் அடிப்படையில் தனித் தனியாகப் புரிந்துகொண்டு, தீட்டப்பட வேண்டும் என்று ஆணித்தரமாக நம்பினார். 1951, செப்டம்பர் 27 அன்று, வேளாண்மை அமைச்சகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் மாநில வேளாண் விரிவாக்கத் துறை இயக்குநர்கள் மத்தியில் உரையாற்று கையில் முன்ஷி இவ்வாறு கூறினார்: “உங்கள் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில் உயிர் சுழற்சியின் (life cycle) இரண்டு அம்சங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று நீர் சுழற்சி, மற்றொன்று ஊட்டச்சத்துச் சுழற்சி. இந்த இரு சுழற்சிகள் எங்கெல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து, அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளைப் பட்டியலிடுங்கள். உங்கள் கிராமங்களில் (அ) இப்போதிருக்கும் நிலை, (ஆ) நீர் சுழற்சியை முழுமையாக்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், (இ). ஊட்டச்சத்து சுழற்சியை முழுமையாக்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், (ஈ). கிராமத்தில் இந்த இருசுழற்சிகளும் முழுமையடைந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனைப் படம் ஆகிய நான்கையும் தயாரியுங்கள். உங்கள்மேல் நீங்களே நம்பிக்கைவையுங்கள். உயிர் சுழற்சியை மீட்டால்தான் நமக்கு உண்மையான சுதந்திரமும் ஆனந்தமும் கிடைக்கும். நாம் உயிர் வாழ முடியும் என்று நம்பும் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த முயற்சியும் கடினமானது அல்ல.”

1950இல் அவர் தொடங்கிவைத்த ‘வன் மஹோத்ஸவ்’ எனும் ஒரு வாரகால மரம் நடும் பண்டிகை, இன்றும் ஆண்டுதோறும் நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது.2

சுதந்திரம் அடைந்த கையோடு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மீரா பென், அனைத்திந்திய எரு மாநாடு (All India Compost Conference) ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நகரங்களில் உற்பத்தியாகும் திடக் கழிவுகள், திரவக் கழிவுகள், கசாப்புக் கடைகளின் கழிவுகள், பருத்தி, தோல், கம்பளி போன்ற தொழிற்சாலைக் கழிவுகள், கரும்புக் கழிவுகள், காய்ந்த இலைகள், நீர் நிலைகளின் மேல் மிதந்துகொண்டிருக்கும் வெங்காயத் தாமரை (water hyacinth), மற்றும் இவை போன்ற மக்கக்கூடிய, இயற்கையான பொருட்களையெல்லாம் வீணாக்காமல், சரியான முறைகளில் மக்கச்செய்து எருவாக மாற்ற வேண்டும் என்று இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.3 இதைத் தொடர்ந்து, குறைந்தது அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் இந்த யோசனைகள் செயல்படுத்தப்பட்டன என்று 1959ஆம் ஆண்டின் சென்னை விவசாய இலாகா வெளியீடு ஒன்றிலிருந்து தெரிய வருகிறது.

இந்த முன்முயற்சிகளை அடுத்து, எரு தயாரித்து உபயோகிப்பதன் முக்கியத்துவம் நாடெங்கிலும் பரவிற்று. ‘வன் மஹோத்சவ’ வாரம், ‘எரு’ வாரம் (compost week) ஆகவும் கொண்டாடப்பட்டு, மாநிலத்திலேயே அதிக எரு தயாரித்தவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. 1958இல் மதுராந்தகம் தாலுக்காவில் மருதேரி கிராமத்தைச் சேர்ந்த வி.கே. இராமசாமி முதலியார் என்பவர் சென்னை மாநிலத்திலேயே அதிகமான (86 டன்) எரு உற்பத்திசெய்து முதல் பரிசைப் பெற்றாராம். அதே விவசாயி மாநிலத்திலேயே அதிக விளைச்சலுக்கான (3.6 டன்)* பரிசையும் வென்றுள்ளார். மேலும், நாட்டின் பல நகராட்சி, ஊராட்சிகளிலும் நகரக் குப்பையோடு கொல்லைக் கழிவையும் சேர்த்து, “பெங்களூர் முறை”யில் சிறந்த எரு ஒன்று தயாரிக்கப்பட்டது. இப்படி நாடெங்கிலும் (கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும்) ஆயிரக்கணக்கான டன் எரு தயாரிக்கப்பட்டு விவசாயிகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டு வந்தது.4

ஏகாதிபத்திய வேளாண் ஆய்வுக் குழுவின் (Imperial Agricultural Research Council) முன்னாள் உதவி சேர்மன் சர். டி. விஜயராகவாச்சாரியார் முன்னுரை எழுதி, பள்ளிப் பாடப் புத்தகமாகப் பரிந்துரைக்கப்பட்டு 1949இல் வெளியான ‘தென்னிந்திய வேளாண்மை - பகுதி 1’ என்னும் நூல், முழுக்க, இன்று இயற்கை வேளாண்மை வல்லுநர்கள் அனைவரும் பிரபலப்படுத்திவரும் அத்தனை விஷயங்களையும் கொண்டுள்ளது. தழை உரம், தொழு உரம் போன்ற வகை வகையான இயற்கை உரங்கள் (அவற்றின் ஊட்டச்சத்துகள், தன்மைகள், அவற்றைத் தயாரிக்கும் முறைகள்), பயிர்களைத் தாக்கும் புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் பறவைகளைக் கவரும் வரவேற்கும் உயிர் வேலி மரவகைகள் என்று இன்று உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் இயற்கை வேளாண்மை தொடர்பான பல விஷயங்களைக் கொண்ட பொக்கிஷமாய் விளங்குகிறது அந்தக் கையேடு.5

முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்ட அறிக்கைகளும், “மண் வளப் பாதுகாப்பு” (Soil Conservation) என்கிற தலைப்பில் ஒரு முழு அத்தியாயத்தில், மேல் மண்ணின் முக்கியத்துவத்தையும் அதனை வளப்படுத்தும் வழிகளையும் தெளிவாக விளக்கியுள்ளன. இதைப் பின்பற்றி, 1953இல், ஒவ்வொரு மாநிலத்திலும் மண் வளப் பாதுகாப்பு வாரியம் (Soil Conservation Board) நிறுவப்பட்டு, அதன் கீழ்ப் பல பயிற்சி நிலையங்கள் மூலம் பல அதிகாரிகளுக்கும் மண் வளப் பாதுகாப்பு முறைகளில் பயிற்சியளிக்கப்பட்டது. மேல் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தி நீர் வளங்களையும் காடுகள் பெருக்குவதால், காடு வளர்த்தல் முக்கியமான நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது. இது தவிரப் பயிர் சுழற்சி, மூடாக்கு விவசாயம், சரியான உழவு முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. சரிவான நிலங்களில் மழைக் காலங்களில் மேல் மண் அரிப்பைத் தடுக்க, மண் அணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பாலை வனங்களில் மணற்குன்றுகளை நிலைப்படுத்துவது, மலைகளுக்கிடையே அமைந்த பள்ளத்தாக்குகளில் பழ மரங்களை வளர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நல்ல பலன்கள் கிடைத்தன.6

இந்தத் திட்டத்தின் கீழ், தழை உர (green manure) செடிகளும் மரங்களும் ஏராளமாகப் பயிரிடப்பட்டு வந்தன. கிளைரிசீடியா, கொளிஞ்சி, தக்கைப் பூண்டு, அவுரி, சணப்பு, நரிப்பயறு, செஸ்பேனியா, வேலிக் கருவேல் போன்ற இவை, நாடெங்கிலும் பயிராகி, மண்ணுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து வந்தன. இவற்றுள்ளான மர வகைகள், வன் மஹோத்ஸவ வாரத்தில் விவசாயிகளுக்கு விதைகளாகவும் நறுக்குத் துண்டுகளாகவும் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. வேகமாக வளரும் இந்த மரங்களிலிருந்து அவ்வப்போது கிடைக்கும் பசுந்தழை, மாடுகளுக்குத் தீவனமாகவும் மட்கிய பின் எருவாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த முயற்சிகளால் ஒட்டு மொத்தமாக, நாடெங்கிலும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மேல் மண் பாதுகாக்கப்பட்டு, வளப்படுத்தப்பட்டு வந்தது.

இரசாயன உரப் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு

அக்காலத்தில் இரசாயன உரங்களைப் பற்றி மக்கள் அறியாத காரணத்தால் இப்படி இயற்கை முறைகளை மட்டுமே பரிந்துரைத்து வந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதலாம். ஆனால் ‘தென்னிந்திய வேளாண்மை’ என்னும் கையேட்டின் ஆசிரியர், “செயற்கை உரங்கள்” என்கிற தலைப்பில் 1949ஆம் ஆண்டு (சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னர்) எழுதியுள்ளதைப் படித்தால் செயற்கை உரங்கள் விவகாரம் அந்தக் காலத்திலேயே இருந்துவந்தது தெரியவரும்.

“தாவரங்களுக்குச் செயற்கை உரங்கள் இடும் பழக்கம் மேல் நாடுகளிலேயே முதன்முதலில் தோன்றியது. ஆனால் அங்கே உள்ள பலர் இப்போது செயற்கை உரங்களுக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

“மனிதனுக்குப் போதை தரும் கஞ்சா, அபினி, சாராய வகைகளைப் போல இந்தச் செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள். சாராய போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால், குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால், ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும். அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை.

“இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக மேற்கே ஒரு சங்கமும் ஏற்பட்டுள்ளது. செயற்கை உரங்களின் கேட்டைப் பற்றி அச்சங்கத்தார் எழுதி வருபவை கணக்கற்றவை. அவற்றுள் ஒன்றை இங்கே காட்டுவது மிகையாகாது: ‘நம்மைக் காப்பாற்றிவரும் உணவை அளிக்கும் உயிருள்ள நிலத்தில் நாம் செயற்கை உரத்தை இடுதலையோ இரசாயன மருந்துகளைத் தெளித்தலையோ மேற்கொள்ளக் கூடாது. நம் உடல்நலத்துக்கு ஒவ்வாத பொருள்கள் அவற்றில் உள்ளன. அப்பொருள்கள் நமக்குக் கேட்டை உண்டுபண்ணும். இவற்றைப் பற்றித் தீர்க்கமாக ஆலோசிப்பீர்களானால், நீங்களும் திட்டமான இந்த முடிவுக்கே வருவீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் விளைச்சலின் அளவை உத்தேசிக்காமல், தன்மையை உத்தேசித்தே ஒன்றை விளைவிப்பேன்.’ (Anthroposophical Agricultural Foundation; Notes and Correspondence; 1944; Vol. VII, No.1, Pg.8)8”

1950இல் வெளியான ஒரு கையேட்டில், எம்.ஏ. பாலகிருஷ்னன் (L.Ag, MAS, வேளாண் துறைத் துணை இயக்குநர் (ஓய்வு)) எழுதுவது: “நம் நாட்டில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்குப் பொறுமை இருப்பதில்லை. எருக்களைப் போட்டவுடன் பயிரில் மாறுதலையும் அபிவிருத்தியையும் எதிர்ப்பார்க்கிறார்கள்... அடுத்தடுத்து சேர்க்கை எருவை நிலத்திற்குப் பயன்படுத்தினால், பயிரின் வளர்ச்சிக்குத் தேவையில்லாத திராவகம் நிலத்திலேயே தங்கிவிடுகிறது. நாளா வட்டத்தில் நிலத்தின் வளமும் கெட்டுவிடுகிறது”9

சென்னை விவசாய இலாகாவின் வெளியீட்டில் இடம்பெற்ற ஒரு சிறு விளம்பரம் இவ்வாறு கூறுகிறது: “விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி! உலக விஞ்ஞானிகள் எல்லாம் பசுந்தழை உரங்கள்தான் இரசாயன உரங்களைவிட அதிக சத்து வாய்ந்தது என்று ஒருமுகமாகக் கூறியுள்ளனர்!!” இவ்வாறு அறிவித்துவிட்டு, தன்னிடம் இருக்கும் பசுந்தாள் உரச் செடி-மர வகைகளைப் பட்டியலிட்டுள்ளார் சிவகாசியைச் சேர்ந்த பி.பி. கருப்பையா நாடார். 10

மற்றொரு கையேட்டில், சென்னை மாகாணத்தில் 25 கோடி டன் மாட்டுச் சாணம் விரட்டிகளாகத் தட்டப்பட்டு எரிக்கப்படுவதாகவும் இந்த வழக்கத்தை நிறுத்தி அந்தச் சாணத்தை எருவாக மாற்றினால் 7.2 கோடி ஏக்கர் நிலத்துக்கு உணவளிக்கலாம் என்றும் இது உணவு உற்பத்தியை 50% பெருக்கும் என்றும் விவசாயத் துறை அதிகாரிகளே கணக்கிட்டுக் காட்டியிருக்கின்றனர். 11

இவற்றைத் தவிர, பழம்பெரும் ஆராய்ச்சி நிலையங்களும் பல பரிசோதனைகளை நிகழ்த்தி இதே போன்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. 1957இல் ஜே .சி. குமரப்பா இரு நிகழ்வுகளைப் பதிவுசெய்துள்ளார். ஒரிசாவில் அமைந்த மத்திய அரிசி ஆய்வுக் கழகம் (Central Rice Research Institute - CRRI) இரசாயன உரங்களை வைத்து நிகழ்த்திய பல பரிசோதனைகளின் முடிவில், “பசுந்தழை உரங்களில் உயிர்ச் சத்துகள் இருப்பதால் அவை நைட்ரஜனைப் பெறுவதற்கு அம்மோனியம் சல்பேட்டைவிடச் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன” என்று அறிவித்தது. டிராக்டர்களைக் கொண்டு உழும்போது மாட்டு வண்டிகளைக் கொண்டு உழுவதைவிட உற்பத்தித் திறனில் வளர்ச்சி ஏற்படுகிறதா என்பதை அறிய இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம் தொடர்ச்சியாகப் பல பரிசோதனைகளைச் செய்தது. டிராக்டர்களைக் கொண்டு ஆழமாகவும் மேலோட்டமாகவும் உழும்போது மாட்டு வண்டியில் உழுவதைவிடக் குறைவான விளைச்சலே கிடைத்தது. இயந்திரம் மண்ணைப் பாழாக்கிவிடுவதுதான் இதற்குக் காரணம். இந்த நிலை கோதுமை பயிரிடுவதற்கு ஏற்றதல்ல.12

நீர்ப்பாசன மேம்பாடு

நீர்ப்பாசனம் என்பதும் கவனத்திற்குரிய ஒரு அம்சமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 1947இலிருந்து 1950க்குள், நீர்ப்பாசன வசதிகொண்ட நிலப்பரப்பு 1.89 கோடியிலிருந்து 2.02 கோடி ஏக்கராக அதிகரித்தது. இதில் பெரும்பாலும் கிணறுகள் மற்றும் சிறிய நீர்நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டது.13

புதிய பொறுக்கு ரகத் தானியங்களும் திருந்திய நெல் சாகுபடியும்

இந்தக் காலகட்டத்தில், விவசாயத் துறை பாரம்பரிய உள்நாட்டு ரகங்களைக் கொண்டே கரு இணைப்பு சேர்க்கும் முறையில் (cross breeding) பல புதிய நெல் ரகங்களையும் மற்ற உணவுப் பயிர்களையும் உருவாக்கி வந்தது. இவற்றைப் “பொறுக்குத் தினுசுகள்” என்று குறிப்பிட்டனர். விவசாய இலாகா 1958இல் வெளியிட்ட அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த நெல் ரகங்களின் பட்டியலின் படி, இவற்றைச் சரியாகப் பயிரிட்டால், சில ரகங்கள் ஏக்கருக்கு 1.4 முதல் 2.2 டன்வரை விளைச்சலைக் கொடுத்ததாக ஆராய்ச்சி நிலையங்களின் அறிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது. இத்தகைய அதிக விளைச்சலைத் தவிர, வெள்ள எதிர்ப்பு, வறட்சி எதிர்ப்பு, குறுகிய கால அறுவடை, பூச்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு போன்ற பல குணங்களைக் கொண்டிருந்தன இந்த ரகங்கள்.

விவசாயத் துறை, விளைச்சலை அதிகரிப்பதற்காக மேலும் பலதரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்தது. உதாரணத்திற்கு, “விவசாயிகள் 1 ஏக்கர் நடவுக்கு 80 ராத்தல் (36 கிலோ) நெல் விதையைப் பயன்படுத்துகிறார்கள். விவசாய இலாகா சிபாரிசு செய்யும் வழியில் 15 ராத்தலே (7 கிலோ) போதுமானது” என்று திருந்திய நெல் சாகுபடி முறையைப் பற்றிப் பரிசோதனை நிலையங்கள் பரிந்துரைத்தன. இது இன்று நாம் பரபரப்பாகப் பேசி வரும் ‘மடகாஸ்கர் முறை’யின் ஒரு முக்கியமான அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.14

உற்பத்தி அதிகரிப்பு

இந்த அனைத்து முயற்சிகளின் ஒட்டுமொத்தப் பலனாக, முதல் பத்தாண்டுகளில் பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பளவும் விளைச்சலும் படிப்படியாக அதிகரித்துவந்தன. ஐம்பதுகளில் ஒட்டுமொத்த வேளாண் பயிர் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (2.8%), மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைவிட (2.1%) வேகமாக வளர்ந்துவந்தது.15

mmm

இப்படி, ஒருபுறம் நம் உள்நாட்டுச் சிந்தனையும் செயல்பாடுகளும் இயற்கையையும் மக்கள் சக்தியையும் ஒட்டியதாக இருக்கையில், மறுபுறம் மேல் நாடுகளின் தனியார் நிறுவனங்களும், வேளாண் ஆராய்ச்சி அமைப்புகளும், அரசுகளும் முற்றிலுமாக வேறு அணுகு முறையைக் கொண்ட செயல் திட்டங்களை இந்தியாவிற்காகத் தயார் செய்து வந்தன.

* எவ்வளவு நிலப்பரப்பளவுக்கான விளைச்சல் என்று குறிப்பிடவில்லை என்றாலும், கையேட்டில் மற்ற மதிப்பீடுகள் ஒரு ஏக்கருக்காகக் கொடுக்கப்பட்டுள்ளதால், இதனையும் அவ்வாறே எடுத்துக் கொள்ளலாம். அப்படியே, ஒரு ஹெக்டேருக்கு என்று எடுத்துக் கொண்டாலும்கூட, ஒரு ஏக்கருக்கு 1.4 டன் விளைச்சல் என்றாகும். இதுவும் சாதாரணமானதல்ல.

உதவிய நூல்கள், குறிப்பேடுகள்

1. Indian National Congress; Report of the Congress Agrarian Reforms Committee; 1949;
2.Munshi, K.M. “Towards Land Transformation”, Government of India, Ministry of Food and Agriculture, undated, p.145
3. Gandhi; Harijan; New Delhi, 21-12-1947
4, 7, 10, 14. கிராமவாசியின் பஞ்சாங் கமும் விவசாய விளக்கங்களும் (1958-59); சென்னை விவசாய இலாகா வெளியீடு.
5, 8 பிக்ஷாண்டர் கோவில் பண்ணையார் - ஜி. இராஜ கோபால் பிள்ளை; ஓய்வுபெற்ற விவசாய டிப்டி டைரக்டர் - என். எஸ். குழந்தைசாமி பிள்ளை, பி.ஓ.எல். - எஸ்.ஜி. கணபது ஐயர்; தென்னிந்திய வேளாண்மை - பகுதி 1; 1949; தென்னிந்திய வேளாண்மைக் கழகம்.
6. First Five Year Plan (1950-55), Second Five Year Plan (1955-60); Planning Commission of India http://planningcommission.nic.in/plans/planrel/fiveyr
9. M.A. Balakrishnan, L.Ag, MAS, Deputy Director of Agriculture (Retd.); Elements of Agriculture - Part 1; 1950; P. Varadachary & Co., Madras
11. ப. கோதண்டராமன்; விவசாயப் பிரச்சினைகள்; (undated); பாரத தேவி காரியாலயம்; மதராஸ்.
12. Kumarappa, Joseph Cornelius; The Cow in Our Economy; 1957
13. National Council for Agricultural Research, Vol 1, p.221
15. Randhawa, M.S., A History of Agriculture in India - Volume 4, 1947-1981; ICAR, New Delhi, 1986.

உள்ளடக்கம்