Google   www kalachuvadu.com

கட்டுரை
பாடத்திட்ட நத்தை
பெருமாள்முருகன்

பிரபஞ்சனின் ‘அகல்யா’ நாடகம் ஆபாசமானது என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பவர்கள் வழக்கம்போலக் கல்வி நிறுவனம் சார்ந்தவர்களும் அரசியல் ஆதாயம் கொண்டவர்களும்தான். அவர்களோடு இயல்பாக வணிகப் பத்திரிகைகளும் இணைந்திருக்கின்றன. அகலிகை தனக்கு அழகான இரண்டு ஸ்தனங்கள் (முலை என்றால்தான் முகம் சுளிப்பார்கள். ஸ்தனம் என்றாலுமா?) இருப்பதாகச் சொல்வதையும் இந்திரனைப் பார்த்து அவள் ‘என்னைச் சுகி’ என்று சொல்வதையும் படித்தால் மனம் பதறுகிறதாம். அவையெல்லாம் மன்மத உணர்ச்சி பொங்கும் இடங்களாம். இதை எல்லாம் நாங்கள் வாய்விட்டுப் படிக்க முடியுமா என்று கேட்கிறார்களாம் மாணவர்கள். சரி, மனத்துக்குள் படித்துக்கொள்வதில் என்ன தடை இருக்கிறதோ தெரியவில்லை. நாடெங்கும் பெருகிக்கிடக்கும் இணையதள மையங்களின் அந்தரங்கக் கூண்டுகளுக்குள் புதைந்துகொண்டு பன்னாட்டு நீலப்படங்களைப் பார்த்து மகிழ்ந்து உலகமயமாக்கலில் உற்சாகமாகப் பங்குபெறும் தலைமுறைக்கா இந்தப் பிரச்சினை என்று வியப்பாக இருக்கிறது.

‘மாணவிகளுக்கு மன்மதப் பாடமா?’ என்று தலைப்பிட்டுக் காரமாகக் கேட்கிறது நக்கீரன் (24.12.08). மாணவன்களுக்கு மட்டும் மன்மதப் பாடம் நடத்தப்பட்டிருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ஆண்மை, எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம்; சீரழிந்துபோகலாம். பெண்மைதான் நம் கலாச்சாரச் சின்னம் ஆயிற்றே. அதை மாசுபடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்தப் பத்திரிகைகளின் தலைமேல் அல்லவா இருக்கிறது. பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போடலாம். கள்ளக் காதல் விஷயங்களைச் சுறுசுறுப்பாக விவரிக்கலாம். நடிகைகளின் படுக்கையறைக் கதைகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். இவற்றைப் படிப்பதால் யாருக்கும் ஒன்றும் ஆகிவிடாது. ஏனென்றால் இவற்றைப் படித்தா மாணவர்கள் தேர்வு எழுதப்போகிறார்கள்? எவற்றில் தேர்வு எழுதுவார்களோ அவை புனிதமாக இருக்க வேண்டும். பத்திரிகை தர்மம் வாழட்டும்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தோழர்கள் ‘போராட்டக் களத்தில் குதிக்க நேரும்’ என்று எச்சரிக்கிறார்கள். அந்த நாடகத் தொகுப்பை வெளியிட்டிருப்பதே அவர்களது கட்சி சார்ந்த ‘பாவை பப்ளிகேஷன்ஸ்’ நிறுவனம்தான். இதுதான் முரண்பாடுகளின் ஒற்றுமைபோலும். இன்குலாப் எழுதிய ‘ஔவை’ நாடகத்தில் ஔவை மது அருந்துவதாக வருவது பண்பாட்டுச் சீரழிவு என்று சொல்லி அந்த நாடகத்தைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் எனச் சில ஆண்டுகளுக்கு முன் மதவாதிகள் போராட்டம் நடத்தினர். ஆண்கள் மது அருந்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. சங்க கால ஔவை மது அருந்தி இருந்தால் என்ன, இப்போது அப்படி எழுதக் கூடாது என்று அவர்கள் விதிமுறை சொன்னார்கள். பெண்கள்மீதும் பண்பாட்டின் மீதும் கட்சி பேதமற்ற அக்கறை பெருகி வழிகிறது.

பிரபஞ்சனின் அகல்யா உட்பட ஐந்து நாடகங்கள் இடம்பெற்றிருக்கும் ‘தெரிவு’ நூலைத் தொகுத்துக் கொடுத்திருப்பவர்கள் நான்கு தமிழ்ப் பேராசிரியர்கள். அப்படி ஒரு நூல் வெளியாகிச் சில ஆண்டுகளாகப் பாடத்திட்டத்திலும் இருக்கிறது என்பது நாடகாசிரியர்களுக்கே தெரியாத ரகசியம். படைப்பாளர்களிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்னும் நடைமுறை பேராசிரியர்களுக்குத் தெரியவில்லை. பாவம் அவர்கள். விற்பனை உரிமைத் தொகையை நால்வர் மட்டுமே பங்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நூலை வெளியிட்ட பாவை பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் என்ன செய்யும்? பேராசிரியர்கள் அனுமதி வாங்கியிருப்பார்கள் என்று கருதிவிட்டது. விற்பனை ஒன்றைத் தவிர மற்றவற்றில் எல்லாம் கொஞ்சம் விவரக் குறைவான நிறுவனம் இது.

இப்படி நடப்பது வழக்கம்தான். பல பேருடைய கவிதைகளை எடுத்துத் தொகுத்துச் செய்யுள் திரட்டு என்னும் பெயரில் பல்கலைக்கழகங்கள் பல்லாண்டுகளாக விற்பனைசெய்து வருகின்றன. பேராசிரியர்கள் அந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். நல்லது. ‘ஸ்தனம்’ என்பதை ‘ஸ்தலம்’ என்று மாற்றியிருக்கலாம். ஸ்தலம் என்றால் கோயில். ‘என்னைச் சுகி’ என்பதை ‘என்னை விடு’ என்று மாற்றியிருக்கலாம். ‘என்னை விடு’ என்பது வில்லனைப் பார்த்துக் கதாநாயகிகள் பேசும் பிரபல வசனம். ஓரெழுத்து ஈரெழுத்து மாற்றம்தானே. பொருள் கிடக்கட்டும். பேராசிரியர்களுக்கு இப்படி மாற்றுவதில் தடை ஒன்றும் இருந்திருக்காது. ஆனால் என்ன செய்ய? நாடகத்தைப் படிக்காமலே அவர்கள் தொகுத்து விட்டார்கள். மூன்று நான்கு ஆண்டுகளாகப் பாடத்தில் இருந்தும் இதுவரை இந்த ஆபாசங்களை யாரும் கவனிக்காமல் இருந்தது என்ன மாயம்? வழக்கம்போல ‘நோட்ஸ்’ வைத்து எல்லாப் பேராசிரியர்களும் பாடம் நடத்தியிருப்பார்களோ?

இந்த ஆபாசங்கள் நவீன இலக்கியத்தில் பரவலாக வந்து தொலைக்கின்றன. பல்கலைக்கழகம் ஒன்றில் ‘தலித்தியம்’ என்று ஒரு தாள் ஆச்சர்யமாக வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த சிறுகதை, நாவல், கவிதை என்று ஒன்றுவிடாமல் ‘ஆபாசக் களஞ்சியம்’. பாடத்திட்டக் குழுவினர் படித்துப் பார்த்திருந்தால் அந்தத் தாளையே தவிர்த்திருக்கலாம். வைத்துப் பாடம் நடத்தியாக வேண்டிய சூழல் வந்தபோதுதான் ஆபாசத்தைக் கவனித்தார்கள். உறுப்புகள் இருக்கும் உணர்வே இல்லாமல் சந்ததியைப் பெருக்கிக்கொண்டிருக்கும் இனம் நாம். உறுப்புகளுக்கெல்லாம் தமிழில் பெயர் இருப்பதை இந்தப் பாட நூல்கள் மூலம்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் அறிந்துகொண்டார்கள். இது பண்பாட்டுச் சீரழிவு அல்லவா? குறிப்பாகத் தலித் பேராசிரியர்கள் இந்தப் பாடத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். ‘எங்களை இழிவுபடுத்துவதற்காகவே இந்தப் பாடத்திட்டம்’ என்றார்கள். ஆகவே இந்த ஆண்டு அந்தத் தாளையே பாடத் திட்டத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள். இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர்கள் போக மிச்ச எதிர்காலத் தலைமுறை காப்பாற்றப்பட்டுவிட்டது.

பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்? உற்சாகம் ஊட்டக் கூடாது. மகிழ்ச்சி தரக் கூடாது. சமகாலத்தை அறிவிக்கக் கூடாது. பிரித்தால் தூக்கம் வரவழைக்கும் ஒழுக்க விதிகள் அச்சிட்ட நூலாகத்தான் இருக்க வேண்டும். அதாவது மொன்னையாக இருக்க வேண்டும். சரி, அதற்கு என்ன செய்யலாம்? தன்னாட்சிக் கல்லூரி ஒன்றின் பாடத்திட்டக் குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை வந்தது. இப்போது வருகிற நாவல்கள் எல்லாம் ஆபாசக் களஞ்சியங்களாக இருக்கின்றன. ஆசிரியர்களால் சொல்லித் தர முடியாது. மாணவர்கள் படிக்கவும் கூடாது. அத்தோடு சமூக நலன் ஒன்றையே தம் நோக்கமாகக் கொண்டு பாடுபட்டு வரும் இயக்கங்கள் பிரச்சினை கிளப்ப இடம் கொடுக்கவும் கூடாது. இக்கால இலக்கியம் என்று ஒரு பாடம் இல்லை என்றாலும் பிரச்சினை. என்ன செய்யலாம்?

சரி, இருக்கவே இருக்கிறார் டாக்டர் மு.வ. அவர் நாவலைப் பாடத்திட்டத்தில் வைத்துவிடலாம். பக்கம் பக்கமாக அழகான அறிவுரைகளைச் சொல்வார். ‘இந்த நாவல் மூலமாக டாக்டர் மு.வ. கூறும் கருத்து என்ன?’ என்று கேள்வி கேட்பதும் எளிது. ஆக மு.வ.வின் கரித்துண்டுவோ மரத்துண்டுவோ பாடத்திட்டத்தில் ஏறியது. இன்னும் பல பாடத்திட்டக் குழுவினர்க்குத் தெரியவில்லை. பாடத்திட்டத்தில் வைப்பதற்கென்றே திட்டமிட்டு டாக்டர் தமிழண்ணல் (இராம. பெரியகருப்பன்) நச்சுவளையம் என்று ஒரு நாவலை எழுதியிருக்கிறார். அதைப் பாடத்திட்டத்தில் வைக்கலாம். இன்னும் மு.வ. காலத்திலேயே பாடத்திட்டம் இருக்கிறது என்னும் அபவாதத்தையும் போக்கித் தமிழண்ணல் காலத்திற்குப் பாடத்திட்ட நத்தை நகர்ந்துவிட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். தமிழரின் பண்பாட்டைத் தமிழண்ணலின் நாவல் நிச்சயம் காப்பாற்றும். தமிழையும் தமிழரையும்கூட.

உள்ளடக்கம்