|
மும்பை பயங்கரவாதத்தின் பின்னணியை நான்கு கட்டுரைகளும் நுட்பமாக
வெளிக்கொணர்ந்துள்ளன. வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்தாலும், நான்குமே உண்மையானவை.
தனது வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்களைக்கூடக் கதை மாதிரிக் கேட்டுப் பழகிப்போன
சராசரி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இந்தக் கட்டுரைகளைப் படிக்க வேண்டியது
அவசியம்.
கு. பாஸ்கர், சென்னை
காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட போது ஜே. கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு அன்பர்
இவ்வாறு கேட்டார்: “காந்தியடிகளின் படுகொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்?” ஜே.கே.
சட்டென “இதற்கான காரணம் உங்களிடமே உள்ளது. ஏனெனில் நீங்களே பிரிவினைக்கு
உரியவர்களாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் வேற்றுமையை ஒரு இந்துவாக, இஸ்லாமியராக,
பார்சீயாக இன்னும் பல்வேறு வகைகளில் இருந்து ஊக்குவிக்கிறீர்கள். எனவே படு
கொலைக்கான காரணம் உங்களிடமே உள்ளது” என்றார். இன்றைய உலகம் வன்முறை செறிந்த
உலகமாகப் பரிணமித்துவருகிறது.
உயர்ந்த சிந்தனைகள், உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப் போக்கு நம்மிடையே குறைந்து
ஊழலும் சிபாரிசுகளும் வெறுப்பு உணர்வுகளுமே தலைதூக்கி நிற்கின்றன. வன்முறை எல்லா
நிலைகளிலும் பரவிக்கிடக்கின்றது. சிறு விமரிசனத்தையும் தாங்க முடியாத மனம் தரமான
நல்ல இதழ்களைத் தடைசெய்வதைப் போல, உண்மைத் தன்மையை ஒழித்துக்கட்டத்
தொடங்கிவிடுகிறது. அடிப்படையில் அச்சம்தான் காரணம். ஒவ்வொரு வன்முறையாளனும்
பயங்கரவாதியும் கோழையே.
மனித நடத்தையை மாற்றி அவனுள் இருக்கும் விலங்குமனத்தை மனிதத்துவமாக மலரச்செய்யும்
சக்தியை இன்றைய கல்வி முற்றிலும் இழந்துவிட்டது. தேவிபாரதி குறிப்பிட்டதுபோல்
“தீவிரவாதம் நீடித்தலைத் தூண்டிவிடும் அரசியல், பொருளாதார, மத, கலாச்சாரக்
காரணங்களைக் கண்டறிய வேண்டும். இது நீண்டநாள் வேலை”.
இந்த வேலையில் ஈடுபடும் மனத்திட்பம், பொறுமை, மனிதநேயம் இன்று நம்மை
வழிநடத்தக்கூடிய தலைவர்களிடம் - அவர்கள் அரசியல், சமூக, மதக் கொள்கை, கோட்பாடு
இவற்றைக் கொண்டவர்கள்- இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் தங்களைச்
சுயபரிசோதனைக்கு உட்படுத்தும் மனவலி அற்றவர்கள்.
இரா. சத்தியமூர்த்தி,
புதுக்கோட்டை
செயலூக்கமிக்க ஜனநாயகம் முதலில் நாம் நம்மைச் சுயபரிசோதனை செய்துகொள்வதன்
அவசியத்தைச் சுட்டிக்காட்டியது.
பயங்கரவாதத்தின் எளிமை காஷ்மீருக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தியது.
காஷ்மீருக்கான இந்திய அரசின் தனித்துவமும் கரிசனமும் ஏனைய மாநிலங்களை ஒப்பிடும்போது
ஏக்கத்தையும் ஒருவித மனக்கிலேசத்தையும்தான் ஏற்படுத்துகின்றன. பல்வேறு சலுகைகளை
அனுபவித்துக்கொண்டு இரட்டைவேடமிடுவது என்பது இக்கரைக்கு அக்கரைபச்சை என்பதாகத்தான்
இருக்க முடியும்.
‘ஐந்திணை வாழ்வு’ கவிதை நிகழ்கால நடப்பை நிதர்சனமாக இயம்பி நின்றது. ஈழத் தமிழர்
அழிவில் இலங்கையுடன் இந்தியா கைகோத்து நிற்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. இது
இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை நாளைய வரலாறு பதிவுசெய்யும்.
நளினி-பிரியங்கா சந்திப்புக்குப் பின்னர்தான் இந்த உக்கிரநிலை வக்கிரமடைந் ததோ
என்ற சந்தேகம் எழுவதில் தவறொன்றுமில்லை. “மிகவும் வருத்தத்திற்குரியது நல்லவர்களின்
மௌனம்தான்” என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் கருத்தை அசை போடும் அதே நேரத்தில்
ஒவ்வொரு ஆதிக்கச் சக்தியையும் நோக்கி,
“You Too?” - “You Too?” என்றே
ஈழத் தமிழ்ச் சமுதாயம் கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கிறது. மலர்மன்னன் கட்டுரை
அறியப்பட வேண்டிய அண்ணாவை அறியச் செய்தது.
கா.இர. குப்புதாசு,
செஞ்சி
தமிழகப் பொது நூலகத் துறை சார்ந்த உங்கள் கண்ணோட்டம் சிறப்பு. மக்கள் பண்பாட்டுக்
கூடங்களாகத் திகழ வேண்டிய நூலகத்திற்குப் பல விடுமுறைகள். அதற்காக நூலகங்களுக்கு
விடு முறையே வேண்டாம் என்பதல்ல நம் கருத்து. பொது விடுமுறை நாட்களில் நூலகத்தைத்
திறந்து வைத்து அதற்குப் பதிலியாக மற்றொரு நாள் விடுமுறை அளிக்கலாம். பல கிளை
நூலகங்களுக்குப் போதுமான இடவசதி இல்லை. இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
தமிழ் என்னும் அடைமொழிக்காகவே பல நூல்கள், இதழ்கள் நூலகங்களுக்கு வாங்கப்படுகின்றன.
இவ்வகை நூல்கள் தமிழ் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படுவதில்லை. பல்துறை
அறிஞர்களைக் கொண்ட அமைப்பாக நூலகத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அரசியல் தலையீடுகள்
தவிர்க்கப்பட வேண்டும்.
மலர்மன்னன், ‘அறியப்பட வேண்டிய அண்ணா’ கட்டுரையில் அண்ணாவின் பல சிந்தனைகளைச்
சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். திராவிட இயக்கத் தலைவர்களில் முதலும் கடைசியுமான
ஜனநாயகவாதியான அண்ணா தேர்தலில் முதலில் ஈடுபடாமல் இருந்த திமுக பின்னர் தேர்தலில்
ஈடுபட விரும்பியபோது, திருச்சி மாநாட்டில் தொண்டர்களிடம் ஓட்டெடுப்பு
நடத்தியபின்தான் தேர்தலில் ஈடுபடலாம் என்ற முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அண்ணா
காலத்தில் சுய கருத்துகள் கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் இருந்தனர்.
கவிதாவின் ‘உங்கள் புத்தர் இதையா சொன்னார்?’ கட்டுரை நன்று. தமிழ் ஆட்டோ
ஓட்டுநரின் நம்பிக்கைகளை நம் அரசியல்வாதிகள் எப்போது உணர்வர்? சுயலாபத்தை
முன்னிறுத்திச் செயல்படும் இவர்களைத் தண்டிக்காமல் நாம் அவர்களுக்கு உதவ முடியாது.
சா.ரு. மணிவில்லன்,
சென்னை
‘இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும்’ என்னும் பா.செயப்பிரகாசம் கட்டுரை, இன்னொரு
நாட்டின் இறையாண்மைக்குள் தலையிட முடியாதெனச் சொல்லிக்கொண்டு இந்திய அரசு
இலங்கைக்கு ஆயுதமும் இராணுவப் பயிற்சியும் நிதியும் வழங்குவது ஈழத் தமிழர்களைக்
கொல்லுவதற்குத் துணைபோவதை வெளிப்படுத்தியது. அணுகுண்டுக்கு அடுத்ததாக அதிகம் நாசம்
விளைவிக்கும் கிளஸ்டர் குண்டை சொந்த நாட்டு மக்கள்மீது வீசுவது மிகவும் கொடூரம்.
தமிழ் அகதிகளைப் பார்வையிட இலங்கை மனித உரிமை ஆணையக்குழுவிற்கு அனுமதியில்லை. அங்கு
அமைச்சர் களுக்கு அதிகாரம் இல்லை. ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்
என்று புத்தபிக்கு கூறியிருப்பதைப் படித்தபோது புத்த மதத்தின் பெயரை இவர்கள்
கெடுப்பதுபோல் தோன்றுகிறது. தமிழர்களை அழித்துச் சிங்களவர்கள் நிம்மதியாக வாழ
முடியுமா? ஈழத் தமிழரின் நலனில் இலங்கை ஆட்சியாளர்களோ இந்தியாவோ மனது வைப்பதாகத்
தெரியவில்லை.
ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
எழுத்தாளர் சமுதாயத்தின் ஆசிரியர், ஆசிரியரிடமிருந்து பாடம் கற்க மறுக்கும்,
சிந்திக்க இயலாத மக்கள் வேடிக்கை மனிதர்கள்தான். இலக்கியம் சார்ந்த வாழ்க்கை முறை
நம் வாழ்வியல் நிலை. தமிழ்ச் சமுதாயத்தில் சமூக மதிப்பு, கௌரவம், ஆதரவு,
பொருளாதாரம், வீச்சு ஆகியவை குடத்தில் இட்ட விளக்காக உள்ளது. சமுதாயமும்
அரசாங்கமும் இந்நிலை முற்றிலும் மாற உதவ வேண்டும். கவிதையின் உச்சம் மகாகவி பாரதி.
இந்திய ஒருங்கிணைப்பிற்கு இலக்கியத்தைப் பாரதிபோல் யாரும் பயன்படுத்தவில்லை. இன்று
இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்தும் அறிந்து வியக்கும் ஒரு இந்தியப் படைப்பாளி
உண்டென்றால் அது பாரதிதான். தன்னைச் சுற்றி இருப்போர் தன் மொழி, தன் மக்கள்
என்றில்லாமல் அவருடைய அக்கறை மனித சமுதாயம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.
பாரதி ஒரு போராளி; தன் கவிதைக்கும் தன் வாழ்க்கைக்கும் இடையே சுவரே
எழுப்பிக்கொள்ளாத கவிஞன். ‘எழுத்தாளனாக வாழ முற்படுவது தற்கொலைக்குச் சமம்’ என்பது
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் வருத்தம். ‘தமிழ்ச் சமுதாயத்தில், சிந்திக்கத்
தெரிந்த மனிதனே தன்னுடைய முதல் எதிரி என்று செயல்படும் இதழாளர்கள் எந்தத் திசையைப்
பார்த்துப் போகிறோம் என்று கூசும் அளவுக்கு நம் சூழல் துடித்துக்கொண்டிருக்கிறது’
என்பது சு.ரா.வின் வருத்தம். விசாலமான பார்வை. இலக்கியம் சார்ந்த ஆளுமைகள்,
எழுத்தாளர்கள் வாழும் காலத்தில் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டும். அவர்களது
நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்.
சி.எஸ்., திருநெல்வேலி
களந்தை பீர்முகம்மதின் ‘முகம் திருப்பிக்கொள்ளாத நட்பு’ கட்டுரை இந்திய
முஸ்லிம்களின் முழுமையான மனஓட்டத்தின் நிஜப் பிரதிபலிப்பு. சொந்த நாட்டில்
சந்தேகத்துடன் பிறர் பார்க்க, கூனிக் குறுகி முஸ்லிம்கள்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குண்டுவெடிக்கும் போதெல்லாம் மதக்கலவரம்
வெடித்துவிடுமோ என்று அஞ்சி வாழ்கிற நிலமை. இலங்கையில் தமிழர்கள் செத்து
மடிகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் உயிரோடு தங்களுக்குள்ளே
செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒருவகையான ‘இன ஒழிப்புதான்’.
முஸ்லிம்களுக்குப் புதைகுழி பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. இதைச் சமீபத்தில்
‘சச்சார் கமிட்டி’ தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறது. வயிற்றுப் போராட்டமே
பெரும் பிரச்சினையாக இருக்கும்போது அவர்களுக்குத் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசவும்
திட்டமிடவும் எங்கு நேரம் இருக்கிறது. பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் விசாரணையின்றியே
சட்டத்திற்குப் புறம்பாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். காவல் துறை
குண்டுவெடிக்கும்போதெல்லாம் ஒரு கதையைப் புனைந்து ஏதாவது ஒரு சலீமையோ அஃதாரையோ
நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. செய்தி ஸ்தாபனங்களும் பரபரப்பாக விற்பனைத்
தந்திரத்தோடு செய்தி வெளியிட்டு மகிழ்கின்றன. இந்தச் செய்தியின் பின்னால் எத்தனை
துயரம் அடங்கியுள்ளது என்ற அவலத்தை யாரும் உணர்வதில்லை. ‘இதுவும் கடந்து போகும்’
என்பதுபோல் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இரண்டாம் நாடான இந்தியாவில் முஸ்லிம்கள்
பிரச்சினை சிறுபான்மையினர் பிரச்சினை அல்ல. இது ஒரு பெரும்பான்மை யினர் பிரச்சினை.
இவர்களையும் சேர்த்துக் கொண்டுதான் வலிமையான பாரதத்தைப் படைத்திட முடியும் என்பதைத்
தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளார்கள் என்பதுதான் மும்பை குண்டு வெடிப்பை
வாக்காக்கப் பார்த்தவர்களுக்குத் தேர்தலில் கிடைத்திருக்கும் மரண அடி. இது
முஸ்லிம்களுக்குப் பெருவாரியான இந்துமக்கள் சமீபத்தில் வழங்கியுள்ள ஒத்தடமல்ல.
அங்கீகாரம்.
“இது எல்லோருக்குமான நாடு என்ற உணர்வை ஏற்படுத்தினால் தான் ஜனநாயகம் சத்தானது என்று
பொருளாகும். இல்லை என்றால் அது பொள்ளையான ஒன்றாகும்” என்னும் தேசப் பிதா
காந்தியின் வாக்கை எல்லோரும் நினைவில் மட்டுமின்றி, செயலிலும் காட்ட வேண்டும்.
காஜாமலை, திருச்சி
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்ற வினா சுதந்திரத்திற்கு முன்பு பாரதியிடம்
நின்றது. என்று தணியும் இந்தப் பயங்கரவாதம் என்ற வினா சுதந்திரத்திற்குப் பின்பு
அப்பாவி மக்கள்முன் நிற்கிறது. ‘இந்த முறை முடியாது’ என்ற அம்பையின் கட்டுரை உளவுத்
துறை மெத்தனப் போக்கால் விளைந்தது மும்பைமீது தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதை
விவரித்திருந்தது.
சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் இருகட்டுரைகளும் சிறப்பான முறையில் இருந்தன.
‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ முதலில் சிறுகதை நடையா, கட்டுரை நடையா என்ற ஐயத்தை
எழுப்பியது. படித்த பின்புதான் தெரிந்தது படைப்பாளியின் வெற்றி. வாழ்வின் எதார்த்தம்
இச்சிறுகதையில் வெளிப்பட்டது.
கு. காளீஸ்வரி, சிவகாசி |