Google   www kalachuvadu.com

வியப்புக்குரிய பெண் மாயா ஏஞ்சலோ
குவளைக்கண்ணன்

வாயில் காக்கும் பணிசெய்த பெய்லி ஜான்சன் என்பவருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாகவும் அறுவை சிகிச்சை தாதியாகவும் இருந்த விவியன் பேக்ஸ்டர் ஜான்சன் என்பவருக்கும் ஏப்ரல் 4, 1928 அன்று மகளாகப் பிறந்த மாயாவுக்குப் பெற்றோரிட்ட பெயர் மார்கெரைட் ஆன் ஜான்சன். இவருக்கு மாயா எனப் பெயர் சூட்டியவர் இவருடைய சகோதரரான பெய்லி ஜூனியர். மாயா ஏஞ்சலோவின் வாழ்வு பற்றிய விவரங்கள் அவருடைய ஆறு சுயசரிதைத் தொடர்களிலும் எண்ணற்ற நேர்காணல்களிலும் மேடைப் பேச்சுகளிலும் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கின்றன.

ஏஞ்சலோவிற்கு மூன்று வயதும் அவரது சகோதரருக்கு நான்கு வயதாகவும் இருக்கும்போது தந்தை அவர்களுடைய தாயிடம் அனுப்புவதற்காகத் தனியாக இருவரையும் ரயிலேற்றிவிட்டதைப் பற்றி அவருடைய முதல் சுயசரிதைப் புத்தகமான கூண்டில் வைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும் என்னும் புத்தகத்தில் எழுதுகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வந்த பொருளாதார நெருக்கடியான சமயத்தில் அவரது தாய் ஆன்னி ஆண்டர்சன் அமெரிக்காவின் அர்கான்சஸ் மாநிலத்தில் உள்ள ஸ்டாம்ப்ஸ் நகரத்தில் அத்தியாவசியப் பொருட்களை விற்றுவந்ததால் பணம் சம்பாதிக்க முடிந்தது. மாயா ஏஞ்சலோவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது தனது தாயின் ஆண் நண்பரால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை மாயா தன் சகோதரனிடம் சொல்ல அவர் மூலமாக வீட்டாருக்குத் தெரிந்த அந்த நபர் ஒரு நாள் சிறைவைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட நான்கே நாட்களில் இறந்தும்போனார். இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, மாயா, “எனது குரல்தான் அவனைக் கொன்றதென்று நினைத்தேன். அவனது பெயரை வெளியில் சொன்னதன் மூலமாக, நான் அந்த மனிதனைக் கொன்றேன். எனது குரல் எவரையும் கொன்றுவிடும் என்பதால் அதற்குப் பிறகு பேசக் கூடாது என்றே நினைத்தேன்” என்று சொல்கிறார்.

தனது நண்பரும் ஆசிரியருமான பெர்கா ஃபிளவர்ஸ் என்பவரைத் தன்னை மீண்டும் பேசவைத்தவர் என்றும் தன்னை கிளாசிக்குகளைப் படிக்கவைத்தார் என்றும் மாயா குறிப்பிடுகிறார். மாயா ஏஞ்சலோ கவிஞராக இருப்பதோடு நடனமாடுபவராக, திரைப்படத் தயாரிப்பாளராக, டெலிவிஷன் தொடர் தயாரிப்பாளராக, எழுத்தாளராக, நடிகையாக இருந்துள்ளார். ஜியார்ஜிரோ எனும் திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதி இசையமைத்திருக்கிறார். அமெரிக்க வாழ்வில் ஆஃப்ரிக்க மரபுகளைப் பற்றிய தொலைக் காட்சித் தொடர்களைத் தயாரித்திருக்கிறார். தனது பிறந்த நாளன்று மார்டின் லூத்தர் கிங் ஜூனியர் மீது நடந்த கொலை முயற்சியைக் கண்டு அதிர்ச்சியுற்று 1996இல் கிங் ஜூனியர் இறக்கும்வரை தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் அவருடைய மனைவிக்குப் பூங்கொத்துகளை அனுப்பி வந்திருக்கிறார். செயின்ட் மார்க்ஸ் நாடக அரங்கில் நடத்தப்பட்ட ஜெனேயின் ‘கறுப்பர்கள்’ என்ற நாடகத்தில் நடித்திருக்கிறார். ‘விடுதலைக்கான ஆடை அவிழ்ப்பு நடனம்’ போன்ற நாடகங்களைத் தயாரித்திருக்கிறார். தனது நாடகங்களை ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பயணித்து நிகழ்த்தியிருக்கிறார்.

இவரது கவிதைகள் ஜெனட் ஜாக்சனாலும் ஜான் சிங்கில்டனாலும் ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ என்ற திரைப் படத்தில் உபயோகிக்கப்பட்டன. இவர் நாளதுவரை அமெரிக்கா முழுக்கப் பயணித்து கல்லூரி மாணவர்களிடையே உரை நிகழ்த்திக்கொண்டிருந்திருக்கிறார். மாயாவின் கவிதைகளும் அவரது மற்ற புத்தகங்களும் ஆசிரியர் கல்வியில் பல்கலாச்சார அணுகுமுறைகளைச் சொல்லித் தருவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மால்கம் ஐயைக் கானாவில் சந்தித்து அவருடைய நெருங்கிய நண்பரானார். தென் அமெரிக்க விடுதலைப் போராட்ட வீரரான உசுமி மகேயுடன் சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார்.

இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியுள்ள இவர், அமெரிக்காவின் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான முன்னணிப் போராட்டக்காரராக இருக்கிறார்.

மாயாவுக்கு இப்படிப் பல்வேறு ஆளுமைகள் இருந்தாலும் அவருடைய கவிதைகள் வெடிப்புறப் பேசுபவை, வெளிப்படையானவை, அதே சமயத்தில் நுட்பத்திலும் ஆழத்திலும் சற்றும் குறையாதவை. தனது எழுத்துக்களைப் பற்றி மாயா சொல்லி இருக்கும் வாசகத்தோடு இந்த அறிமுகக் கட்டுரையை முடித்து விடலாம்.

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க, “நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் தோற்றுவிடக் கூடாது”, என்பதைத்தான் சொல்கிறது.

உள்ளடக்கம்