2008ஆம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் பெண்ணிய
எழுத்தாளராக அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ்
இலக்கியத் தோட்டம் அளிக்கும் தமிழ் இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனை விருது,
கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட்
சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்
போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும்
மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு
வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றிகண்டவர்.மரபார்ந்த பெண்ணுக்குக்
கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும் தன் சுதந்திரத்தைத் தானே
தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காகப் பேசினாலும் அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி
அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம்
வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி
எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல்
பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.
அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின்
மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள்
(2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006)
ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask
(1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ - ஓவியம், நாடகம், பாரம்பரிய
நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’
- சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின்
வாய்மொழி வரலாற்றுப் பதிவு. SPARROW (Sound and Picture Archives for Research on
Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். Dr.
C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political
Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது
எழுதிவருகிறார்.
விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் வழக்கம்போல வரும் மே
மாதம் நடைபெறவிருக்கிறது.
அ. முத்துலிங்கம்
திலீப்குமாருக்குச் சாரல் விருது
இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தம் பெற்றோர் பெயரில் தொடங்கியுள்ள
ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது இந்த ஆண்டு திலீப் குமாருக்கு
வழங்கப்பட்டுள்ளது. விருது ஏற்படுத்தப்பட்ட முதல் ஆண்டே திலீப்குமார் இதைப்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசுத் தொகை ரூ. 50,000. சென்னை பிலிம் சேம்பர்
அரங்கில் 6 ஜனவரி 2009 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவோடு ஜேடி-ஜெர்ரியின்
பாட்டனார் டி. எஸ். துரைசாமி எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை நூலின் இரண்டாம்
வெளியீடும் நடைபெற்றது. பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த துரைசாமி பிரபல மர்ம
நாவலாசிரியர்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறைச் செயலர் வெ. இறையன்பு விருது வழங்கிப் பாராட்டிப்
பேசினார். விழாவில் ஜெயமோகன், ரவி சுப்பிரமணியன், தேனுகா, பாலு மகேந்திரா
ஆகியோரும் பேசினர். திலீப்குமாரின் கடிதம் சிறுகதையைத் தொலைக்காட்சி
நாடகமாக்கியவர்கள் ஜேடி-ஜெர்ரி. சாரல் விருது பெற்றுள்ள திலீப்குமாரைக் காலச்சுவடு
வாழ்த்துகிறது.
லதாவுக்குச் சிங்கப்பூர் தேசிய விருது
ஈழத்தில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் வாழும் லதா (கனகலதா)வுக்கு 2008ஆம்
ஆண்டுக்கான சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. இது அவருடைய நான்
கொலை செய்யும் பெண்கள் (காலச்சுவடு பதிப்பகம் 2008) என்னும் சிறுகதைத்
தொகுதிக்காக அளிக்கப்பட்டது. லதா, இலங்கையின் மேற்குப் பகுதியில் உள்ள நெகோம்போ
என்ற இடத்தில் பிறந்தவர். 1983இல் நடைபெற்ற கலவரங்களுக்குப் பிறகு
யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்தார். பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கே குடியுரிமை
பெற்றார். தற்போது சிங்கப்பூரின் தேசிய நாளிதழான தமிழ் முரசுஇன் செய்தி ஆசிரியராகப்
பணிபுரிகிறார்.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு ஆங்கிலம், சைனீஸ், மலாய், தமிழ் ஆகிய நான்கு
மொழிகளில் வெளிவரும் கதை, கவிதை நூல்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
பரிசுத் தொகை பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள்.
லதாவின் இரண்டு கவிதைத் தொகுதிகள் - தீவெளி (2003), பாம்புக் காட்டில் ஒரு தாழை
(2004) வெளிவந்திருக்கின்றன. சிங்கப்பூரில் வெளியான பல கவிதைத் தொகுதிகளிலும்
இந்தியாவின் சாகித்ய அக்காதெமி வெளியிட்ட பெண் கவிஞர்களின் தமிழ்க் கவிதைகள் என்ற
தொகுதியிலும் (2003) லதாவின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. |