Google   www kalachuvadu.com

கட்டுரை
தோத்தமஸின் கனவில் ஸ்பின்க்ஸ் கூறிய வாசகம்
எகிப்துப் பயணக் கட்டுரை
பி. ஏ. கிருஷ்ணன்

கால அட்டவணைகள் தயாராகிவிட்டன, ஆனால் புகைவண்டிகளைத்தான் தேட வேண்டியிருக்கிறது.

- மார்டிமர் வீலர்,
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.

நமது பழமையின் எச்சங்களை எவ்வளவு பின்னால் தள்ள முடியுமோ அவ்வளவு பின்னால் தள்ளிவிடுவதற்கு நமக்கு இருக்கும் ஆசை பற்றி அவர் எழுதியது இது. கால ஆராய்ச்சி ஒரு வகை ஆருடம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அவர் சொன்னது பொருந்தும். உதாரணமாக, தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ‘ஐயா, அது கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் எழுதப்பட்டது’ என்று சொன்ன வையாபுரிப் பிள்ளை பெயரைக் கேட்டாலே ஆத்திரம் வந்துவிடும். நம்மாழ்வார் கலி தோன்றிச் சில நாட்களுக்குள் பிறந்தவர் (கி.மு. 3102) என்று அடித்துக் கூறுபவர்கள் என்னைச் சுற்றியிருக்கிறார்கள். ஆழ்வார் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று சொல்பவர்கள் அவர்களுக்கு வைணவ விரோதிகள். வேதங்களின் காலம் அறுதியிட முடியாதது (அநாதி) என்று நம்புகிறவர்கள், அவை கி.மு. இரண்டாயிரத்துக்குப் பின்னர் எழுதப்பட்டவை என்னும் ஆராய்ச்சியாளர்கள் கூற்றை நாத்திகப் பிரச்சாரமாக நினைக்கிறார்கள். இத்தகைய ஆராய்ச்சி ஆருடங்களுக்குப் பருப்பொருள் சான்றுகள் தேவையில்லை. அட்டவணைகளே சான்றுகள் ஆகிவிடுகின்றன.

கால அட்டவணைகளோடு புகைவண்டிகளும் இருக்கும் இடங்கள் உலகில் மிகச் சில. அவற்றில் எகிப்தும் ஒன்று.

1

கெய்ரோ நகரத்திற்கு இந்திய நகரங்களுக்கு உள்ள எல்லா அடையாளங்களும் இருக்கின்றன. சாலைகளில் அதே குழப்பம். ஒரே வித்தியாசம், இந்தியச் சாலைகளில் கழுதை சவாரி செய்பவர்களைப் பார்ப்பது சற்றுக் கடினம். நகரத்தில் பாலைவனத்தின் சாயை படர்ந்திருக்கிறது. எந்த நிறத்தைப் பார்த்தாலும் பழுப்பு நிறத்தைப் பார்ப்பது போன்ற ஒரு தோற்றம். மனிதர்களின் நிறம், உடை, வீடுகள், கல்லறைகள் எல்லாம் பழுப்பில் குளித்திருக்கின்றன. பழைய கெய்ரோவில் வீடுகளைவிடக் கல்லறைகள் அதிகம். கல்லறைகளில் இறந்தவர்களைவிட இருப்பவர்கள் அதிகம். நகரத்தில் வாழ இடமில்லாதவர்கள் கல்லறைகளில் இடம்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இங்குக் கல்லறைகள் முழுமையான கட்டடங்கள். இறந்தவர் புதைக்கப்பட்ட அறையைத் தவிர, துக்கம்காப்பவர்கள் தங்குவதற்கான அறைகள் கல்லறையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த அறைகள் இப்போது வாழிடங்களாக மாறிவிட்டன. தாழ்வான இடங்களில் இந்தக் கல்லறைகள் அமைந்திருந்தாலும், நகரத்தில் மழை என்ற பேச்சுக்கே இடமில்லாததால் (பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மழை பெய்யும் நாடு அது), தண்ணீர் மண்டும் பிரச்சினை இல்லை. கெய்ரோ நகரில் சுமார் பத்து இலட்சம் ஏழை மக்கள் இந்த இறந்தவர் நகரத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது நகரத்தின் மக்கள்தொகையில் எட்டில் ஒரு பங்கு. கல்லறைகளின் மேல் நின்றுகொண்டு மிக அழகான குழந்தைகள் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கைகளை அசைத்தது இறப்பிற்கும் இருத்தலுக்கும் இடையே இருக்கும் ஒரு பிரிக்க முடியாத சமன்பாட்டின் ஒரு அடையாளமாக எனக்குத் தோன்றியது.

இந்தச் சமன்பாட்டின் அடையாளங்கள் எகிப்து முழுவதும் இருக்கின்றன. அவற்றில் உலகப் புகழ் பெற்றவை பிரமிடுகள்.

2

பிரமிடுகள் கட்டி முடிந்து சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் அவற்றைப் பார்வையிட ஒரு கிரேக்க அறிஞர் வந்தார். கி. மு. 500 வாக்கில். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னால். ஹொரோடடஸ் என்னும் அந்த அறிஞர் ‘வரலாற்றின் தந்தை’ என அழைக்கப்படுபவர். வரலாறுகள் என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

பிரமிடை எனக்குக் காட்டியவர்கள் சொன்னது இது: கியோப்ஸ் (பிரமிடைக் கட்டியவர்) கெட்ட எண்ணத்தாலும் பணப் பற்றாக்குறையாலும், தனது மகளைத் ‘தொழில்’ செய்வதற்குப் பணித்தார். அவளிடம் வருபவர்கள் அளித்த பணம் பிரமிடு கட்டுவதற்குக் கற்கள் வாங்கப் பயன்பட்டது. கியோப்ஸின் மகள் வருபவர்களிடம் தன்னுடைய பிரமிடு கட்டுவதற்கு ஒரு ஆளுக்கு ஒரு கல் வீதம் தனியாக வாங்கிக்கொண்டார்.

இந்தக் கதை நம்ப முடியாதது என்பதற்குப் பிரமிடே அடையாளம். பிரமிடில் இருபது லட்சத்து முப்பதாயிரம் கற்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சராசரி இரண்டரை டன் எடை! மகளை ஈடுபடுத்திக் கட்டப்பட்ட காரியமல்ல இது. ஹொரோடடஸே பிரமிடைக் கட்டுவதற்கு ஒரு லட்சம் வேலையாட்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் கட்டுவதற்கு 20 ஆண்டுகள் ஆயின என்றும் பல ‘இயந்திரங்கள்’ பயன்படுத்தப்பட்டன என்றும் குறிப்பிடுகிறார். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறுகின்றனர். ஆனால் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் - வேதங்கள் தொகுக்கப்படுவதற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சங்க காலத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னால்-கட்டப்பட்ட இந்த அதிசயங்கள் பார்ப்பவர்களிடம் வியப்பை வரவழைப்பதில் ஆச்சரியமே இல்லை. இந்த வியப்பே பலரைப் பலவிதமாகப் பேச, இயங்கவைக்கிறது. பிரமிடு உலகத்தின் மையத்தில் இருக்கிறது எனச் சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அது விண்வெளி மனிதர்களால் கட்டப்பட்டவை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து, நங்கநல்லூரில் சிறிய வீடு ஒன்றில் இருந்த ஐயங்கார் ஒருவர் பிரமிடு ஜோசியம் சொல்லியே அண்ணா நகரில் ஒரு பெரிய மாளிகை வாங்கிவிட்டார்.

பிரமிடுகள் எகிப்து, சூடான், பாலைவனங்களில் பரவிக்கிடக்கின்றன. இவற்றில் மிகப் புகழ்பெற்ற மூன்று பிரமிடுகள் கீஸா (Gizeh) நகரத்தில் (நமது தாம்பரம் மாதிரி, கெய்ரோவின் புறநகரம்) இருக்கின்றன - நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்தவை. இவற்றில் பெரியது ‘மகா பிரமிடு’ என அழைக்கப்படுகிறது. 450 அடிகள் உயரம் (தஞ்சைப் பெரிய கோவில் 216 அடி உயரம்). ஒவ்வொரு பக்கமும் 756 அடிகள் நீளம். மகா பிரமிடின் அடிப்பரப்பு 13 ஏக்கருக்கும் அதிகம். ஒவ்வொரு கல்லும் துல்லியமாக ஒன்றின் மீது ஒன்றாக வைக்கப்பட்டுப் பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சுண்ணக்கற்கள் (limestones) மற்றும் கருங்கற்கள். இந்தக் கற்களின் மீது பளபளக்கும், வழவழப்பு மூடுகற்கள் (casing stones) வைக்கப்பட்டிருந்தன. இதனால் பிரமிடுகளைப் பல மைல்கள் தொலைவில் இருக்கும் இஸ்ரேல் மலைகளிலிருந்து பழைய காலத்தில் பார்க்க முடிந்தது என்று சொல்கிறார்கள். இந்த மூடுகற்களின் எச்சங்கள் இரண்டாம் பிரமிடில் இன்னும் இருக்கின்றன.

பிரமிடுகள் ஏன் கட்டப்பட்டன?

நைல் நதி எகிப்து நாகரிகத்தோடு இணைபிரியாத் தொடர்பு கொண்டது. மக்கள் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது. நைல் எகிப்தின் கொடை என்று சொல்லுவது மிகச் சாதாரணமான ஒரு கூற்று. பாலைவனத்தைப் பிளந்துகொண்டு ஓடும் நதி நைல். அதன் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டர் அளவிற்குப் பச்சை பரவியிருக்கிறது. அப்பால் மணற்கடல். நதியில் வெள்ளம் வருடம் தவறாமல் வருவதும், அந்த வெள்ள நீரால் பாசனம் செய்வதும், காலம் காலமாக நடந்துவந்திருக்கிறது. இந்த வருதல்-வற்றுதல் சுழற்சி, பகல்-இரவு சுழற்சி போன்ற தவறாத நிகழ்தல்களை மனித வாழ்வின் பிறப்பு-இறப்பு நிகழ்தலோடு தொடர்புபடுத்துவதற்குப் பெரிய தத்துவ ஞானிகள் தேவையில்லை.

ஃபாரோக்கள் என்று அழைக்கப்பட்ட எகிப்திய அரசர்கள் ஹோரஸின் (பார்க்க - எகிப்தின் கடவுள்கள்) மறுவடிவமாகக் கருதப்பட்டனர். ஹோரஸ் வானுலகை ஆள்வதுபோலவே, இந்த அரசர்கள் எகிப்தை ஆண்டனர். இவர்கள் இறந்த பிறகு ஓசிரிஸாக மாறி வாழ்வு வட்டத்தை முழுமையாக்க வேண்டும். ஆனால் இறந்த ஃபாரோவின் உடலில் கா எனப்படும் ஆத்மாவின் எச்சம் மிஞ்சிவிடுகிறது. இது இறந்தோர் உலகிற்குச் செல்லச் சரியான வழி கிடைக்காவிட்டால், ஃபாரோ ஒசிரிஸாக முடியாது. வாழ்க்கை வட்டம் முழுமை பெறாது. சுழற்சி நின்றுவிடும். எகிப்து பேரழிவிற்கு உள்ளாகிவிடும். எனவே வாழ்வில் அவனுக்குக் கிடைத்தவை அனைத்தும் அவன் மறு உலகிற்குச் செல்லும்வரை கிடைக்கும் படியாக அவனது கல்லறை விலையுயர்ந்த பொருட்களாலும் உணவு வகைகளாலும் நிரப்பப்பட்டது. கல்லறையை மறைக்க, அதன் செல்வங்களைத் திருடர்களிடமிருந்து காப்பாற்ற பிரமிடுகள் கட்டப்பட்டன.

பிரமிடின் முழுமையைச் சிதைத்து அதன் உள்ளிருக்கும் பொருட்களைத் திருட முயல்பவர்கள் பெறவிருக்கும் சாபங்களும் அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனைகளும் கல்லறைச் சுவர்களில் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. கல்லறை கட்டி முடிந்தவுடன் அது இருக்கும் இடத்தை ரகசியமாக வைக்கப் பல உத்திகளைப் பிரமிடு கட்டியவர்கள் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் திருடர்கள் திறமைமிக்கவர்கள். பிரமிடு முத்திரையிடப்பட்ட மறுநாளே அதன் உள்ளே இருப்பதைக் கவர்ந்து செல்ல முயன்றிருக்கிறார்கள். அவர்களின் நான்காயிரம் ஆண்டு முயற்சியின் விளைவு, இன்று நாம் பார்க்கும் தமது செல்வங்களை இழந்த, ஏழ்மையான பிரமிடுகள்.

செல்வங்களை இழந்த பிரமிடுகள் தரும் பிரமிப்பு உள்ளுணர வேண்டிய பிரமிப்பு. பிரமிடுகளை நாம் கெய்ரோ நகரத்திலிருந்து நைல் நதியைக் கடந்து கிஸா நகரத்தை நெருங்கும்போதே காண முடியும். வானத்தைக் குத்த முயன்று தோல்வியுற்ற முக்கோணங்களாக அவை தெரிகின்றன. அத்தனை பெரிதாகத் தெரியவில்லை. பக்கத்திலிருந்து பார்க்கும்போதுதான் அவற்றின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முடியும். அதன் முன்னால் நின்று தலையை நிமிர்த்திப் பார்க்கும் போது வாழ்வின் உச்சியில் நின்றுகொண்டிருப்பது போலத் தோன்றியது. வாழ்வு உடனே முடிந்தால் வருத்தம் ஏதும் இல்லை. இந்த உயர்ச்சி போதும். ஹொரோடடஸில் தொடங்கி, அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன் போன்றவர்கள் பார்த்துப் பிரமித்த கட்டுமானத்தைக் காணும் இந்த உயர்ச்சி போதும்.

பிரமிடின் உள்ளே செல்வது மூச்சை முட்டவைக்கும் முயற்சி. உள்ளே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்று எங்கள் கைடு கூறினாலும் பிரமிடின் வயிற்றுக்குள் சென்று மீளவேண்டும் என்ற ஆசை என்னையும் என் மனைவியையும் உள்ளே செல்ல வைத்தது. நான்கு அடிக்கும் குறைவான உயரமுள்ள பாதை. குனிந்து கொண்டே செல்ல வேண்டும். ஆக்ஸிஜன் அதிகம் இல்லாததால் இரண்டு அடிகள் எடுத்துவைத்தாலே மூச்சுவாங்கியது. பாதை ஒரு செவ்வக அறையில் - சுமார் ஐம்பது அடி நீளம் பதினைந்து அடி அகலம் - முடிந்தது. உயரம் 15 அடிக்கும் மேல் இருக்கும். சுண்ணக்கல் உத்திரங்களால் அமைக்கப்பட்ட சரிந்த மேற்கூரை (கோம்பைக் கூரை அல்லது முகட்டுக் கூரை). இந்தக் கூரையைப் பல லட்சம் டன்கள் எடை கொண்ட கற்கள் அழுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்ற நினைப்பு ஓர் அச்சத்தைத் தந்தது. ஃபாரோவின் கல்லறையில் உயிரோடு சமாதியாவது எல்லோருக்கும் அமையாது என்ற மறு எண்ணம் திடத்தைத் திரும்ப வரவழைத்தது. அறையில் சத்தியமாக ஒன்றும் இல்லை. ஒரு சிறிய, திறந்த கருங்கல் சமாதியைத் தவிர.

3

பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன?

பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் உபயோகித்தது செப்பு உளிகள். நூறு தட்டுத் தட்டினால் வளைந்துவிடும் உளிகள். அந்தக் காலத்தில் சக்கரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கற்களையும் கனமான பொருள்களையும் sledgeஇல் (சறுக்கூர்தி?) இழுத்துச்செல்ல வேண்டிய கட்டாயம்.

பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்படவில்லை என்று இன்றைய எகிப்திய வரலாற்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். வெளிநாட்டிலிருந்தும் ஆட்கள் தருவிக்கப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. கட்டியது நிச்சயமாக யூத அடிமைகள் அல்ல என்பதும் அழுத்திச் சொல்லப்படுகிறது. Limestone எனப்படும் சுண்ணக்கற்கள் கீஸாவிற்கு அருகிலேயே கிடைத்தன. சமாதிக்குப் (sarcophagus) பயன்பட்ட கருங்கற்கள் 600 மைல் தொலைவிலிருக்கும் அஸ்வானிலிருந்து படகுகளில் கொண்டுவரப்பட்டன. பல டன் எடையுள்ள இந்தக் கற்களைப் பிரமிடு கட்டப்பட்ட இடத்திற்கு எடுத்துச் செல்வதற்குச் சரிவுத் தளங்கள் மண்ணையும் சுண்ணாம்புக் கட்டிகளையும் கொண்டு அமைக்கப்பட்டன. குறைந்தது இரண்டரை டன்கள் எடை உள்ள இந்தக் கற்களை இழுத்துச்செல்வதற்கு இருநூறு பேர் தேவைப்பட்டனர். Building the Great Pyramid என்னும் புத்தகத்தை எழுதிய Gerald Fonte மகாபிரமிடைக் கட்டுவதற்குச் சுமார் 4000 பேர் தேவைப்பட்டனர் என்றும் அவர்கள் சுமார் 35 லட்சம் உழைப்பு நாட்கள் செலவழித்து நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குள் பிரமிடைக் கட்டி முடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார். கட்டுவதற்கு அதிகத் தொழில்நுட்பம் தேவையில்லை, அந்த நாட்களில் உபயோகிக்கப்பட்ட கருவிகளைக் கொண்டே கட்ட முடிந்திருக்கும், எந்தக் கடவுளும் உதவிக்கு வரவில்லை என்றும் அவர் கூறுகிறார். நைல் நதி பெருகி விளைநிலங்கள் தண்ணீரில் ஆழ்ந்திருந்த நாட்களில் பிரமிடு கட்ட உதவுவதற்குப் பலர் முன்வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீஸா பிரமிடுகளுக்கு அருகே நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் தொழிலாளிகள் வாழ்ந்த கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. National Geographic Magazine இவ்வாறு சொல்கிறது:

The builders' villages boasted bakers, butchers, brewers, granaries, houses, cemeteries, and probably even some sorts of health-care facilities -there is evidence of labourers surviving crushed or amputated limbs. Bakeries excavated near the Great Pyramids could have produced thousands of loaves of bread every week.

பிரமிடுகளைச் சுற்றி இன்றைய எகிப்தியரின் வாழ்வு நடக்கிறது. சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்த வாழ்வு. விற்கப்படுபவை நம் கோவில்களைச் சுற்றிக் கிடைக்கும் பொருட்களின் தரத்தில் இருக்கின்றன. நம்மைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், இந்தியப் பயணிகள் எளிதாக ஏமாறமாட்டார்கள் என்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. India No. China No. Russians, very very good என்று என்னிடம் சைனாவில் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பிரமிட் ஒன்றை விற்க முயன்ற வாலிபன் ஒருவன் சிரித்துக் கொண்டே சொன்னான். இந்தியர்களைப் பார்த்தால் அவர்கள் முணுமுணுக்கும் ஒரே மந்திரம் - அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன். அமிதாப் அவர்களுக்கு ஃபாரோவிற்குச் சமானம். என் மனைவியைப் பல எகிப்தியப் பெண்கள் சூழ்ந்துகொண்டனர். அவர் நெற்றியை அலங்கரித்த பொட்டின் மீது அவர்களுக்குக் கொள்ளை ஆசை. ரேவதி கொண்டு வந்திருந்த பொட்டுகள் அனைத்தும் பிரமிடின் அடிவாரத்தில் தீர்ந்துவிட்டன. ஒரு சிறுவன், அவனிடம் இருக்கும் புத்தகக் குறிப்பானைப் பண்டமாற்றுச் செய்து பொட்டை வாங்கும் முயற்சியில் என் மனைவியிடம் கெஞ்சியதை என்னால் மறக்க முடியாது. அவனுடைய தாய் சிறிது தொலைவில் நின்றுகொண்டு மகனின் வியாபாரத் திறனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ரேவதியிடம்தான் ஒரு பொட்டுக்கூட இல்லை.

4

கீஸாவில் மூன்று பிரமிடுகள் இருக்கின்றன என்று சொன்னேன். இவற்றில் பெரியது மகா பிரமிடு. இது குஃபு என்ற ஃபாரோவிற்காகக் கட்டப்பட்டது. இரண்டாம் பிரமிடு அவனுடைய மகன் காஃபிரே என்பவருக்காகக் கட்டப்பட்டது. இது மகா பிரமிடைவிடச் சிறியது என்றாலும், உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் அதைவிடப் பெரிதாகத் தெரிகிறது. இவை இரண்டைவிடச் சிறிய மூன்றாம் பிரமிடு. காஃபிரேயின் மகன் மென்கௌரே என்பவருக்காகக் கட்டப்பட்டது. இவர்களில் காஃபிரேயின் முகம் நம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனது. தமிழ் சினிமாக்களில் எகிப்திய அழகிகளின் உடைகளில் நமது செக்கு உலக்கை இடை கொண்ட நாயகிகள் ஆடுவதற்குப் பின்புலமாக அமைந்திருக்கும் ஒரு வடிவத்தின் முகம் அது. இப்படிப் பிற்காலத்தில் நடக்கும் என்று தெரிந்திருந்தால் தமது முகம் கொண்டு அந்த வடிவம் அமைவதற்கு காஃபிரே சற்று யோசித்திருப்பார். ஸ்பின்க்ஸ் (Sphinx) எனப்படும் மனித முகமும் சிங்கத்தின் உடலும் கொண்ட அந்த வடிவம் பிரமிடுகளைப் பார்க்கச் செல்பவர்களை வரவேற்பதற்காகப் (அல்லது பயமுறுத்துவதற்காகப்) படைக்கப்பட்டது. இந்த வடிவம் உலகத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட சிலைகளில் மிகப் பெரியது. இன்றைய எகிப்தியர்கள் அதற்குக் கொடுத்திருக்கும் பெயர், அபு அல் ஹுல் - பயங்கரத்தின் தந்தை. பயங்கரத்திற்கும் இந்த வடிவத்திற்கும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

காலங்காலமாக முட்டாள் மனிதர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஸ்பின்க்ஸ் இன்றுவரை இருப்பதே உலக அதிசயங்களில் ஒன்று. மூக்கில்லாத இந்த அதிசயத்தின் மூக்கு 15ஆம் நூற்றாண்டில் உடைக்கப்பட்டது என்று அரபிய வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்று அதனிடம் விவசாயிகள் வேண்டிக்கொள்வதைப் பார்த்து ஆத்திரமடைந்த சூபி ஒருவர் ஸ்பின்க்ஸின் மூக்கை வெட்டிவிட்டார். அவர் தூக்கில் போடப்பட்டாலும், மூக்கும்போனது போனதுதான். நெப்போலியனின் வீரர்கள் இதன் மூக்கை உடைத்ததாக ஒரு கதை இருந்தாலும், நெப்போலியன் காலத்திற்கு முன்னால் வரையப்பட்ட சித்திரங்களிலும் இது மூக்கில்லாமலேயே இருக்கிறது.

கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி அமைந்திருக்கும் இந்த வடிவத்திற்கும் காஃபிரே ஃபாரோவிற்கும் தொடர்பு இல்லை, இது பிரமிடுகள் கட்டப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வடிவமைக்கப்பட்டது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், இந்தச் சிலை அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் எனக் காலங்காலமாக இதைப் பார்ப்பவர்கள் விரும்பியிருக்கிறார்கள். இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னால் தோள்வரை ஸ்பின்க்ஸ் மணலில் புதையுண்டிருந்தது. இதைக் கண்ட தோத்மஸ் என்னும் அரசன் பெரிதும் முயன்று அதன் கால்கள் தெரியும்வரை மணலைத் தோண்டி எடுத்தான். அதன் கால்களுக்கு மத்தியில் அவன் வைத்திருந்த கல்வெட்டு கூறும் வாசகம் இது;

(தோத்தமஸின் கனவில் ஸ்பின்க்ஸ் கூறிய வாசகம்), தோத்மஸ், நான் உன் தந்தை. உனக்கு இந்த அரசை அளித்தவன். என் நிலையைப் பார். மணலில் புதையுண்டிருக்கும் எனது உடலை வெளியே கொண்டுவா. என்னைக் காப்பாற்று.

முப்பது அடி உயரமும் பதினைந்து அடி அகலமும் உள்ள தலை கொண்ட இந்த வடிவம் பலிக்குச் செல்லும் ஆடுபோல் வேண்டுவது காலத்தின் அடங்காத வெறியை, எல்லாத் தடங்களையும் அழிக்க முனையும் வெறியைக் காட்டுகிறது. மனிதன் ஒருவனே இந்த வெறியை வெற்றிகொள்ளத் தளராது முயல்கிறான் என்பதையும் இந்தக் கல்வெட்டு உணர்த்துகிறது.

5

Sunday, November 5.

Discovered tomb under tomb of Ramses VI

Investigated same and found seals intact.

The design was certainly of the Eighteenth Dynasty. Could it be the tomb of a noble buried here by royal consent? Was it a royal cache, a hiding-place to which a mummy and its equipment had been removed for safety? Or was it actually the tomb of the king for whom I had spent so many years in search?

ஹோவர்ட் கார்டர் டயரியிலிருந்து சில குறிப்புகள்.

கீஸாவில் நாம் பார்த்த பிரமிடுகள் (பார்க்க - எகிப்திய காலம்) பழைய அரசைச் சார்ந்தவை. லக்சார் நகரத்திற்கு எதிர்ப்புறத்தில், நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் Valley of Kings எனப்படும் அரசர்களின் பள்ளத்தாக்கு உலகின் மிகப் புகழ்பெற்ற இறந்தவர்களின் நகரம். இந்த நகரத்தில் 63 அரசர்களின் கல்லறைகள் இருக்கின்றன. எல்லோரும் புதிய அரசைச் சார்ந்தவர்கள். இந்தக் கல்லறைகள்மீது, கீஸா கல்லறைகள் போன்று பிரமிடுகள் கட்டப்படவில்லை. ஆனால் அரசர்களுடன் புதைக்கப்பட்டவை விலை மதிக்க முடியாத பொருட்களால் நிரப்பப்பட்டவை. இவையே கல்லறைத் திருடர்களைக் கவர்ந்தன. எல்லாக் கல்லறைகளும் திருடர்களால் சூறையாடப்பட்டன. இந்தக் கல்லறைகளைக் காணப் பார்வையாளர்கள் 3000 ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார்கள். நமது ஊரில் கோவில் மண்டபங்களில் வருகைதருபவர்கள் தங்கள் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த வருகையைப் பதிவுசெய்வதுபோல (தமில்செள்வன் 18.2.2002 - காஞ்சிபுரம் பரமேசுவர விண்ணகரம் வெளிச்சுவர்) இந்தக் கல்லறைகளுக்கு வந்தவர்களும் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். மிகப் பழைய பதிவின் காலம் கி. மு. 278.

அரசர்களின் பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்ட ஒரு அரசனின் பெயர் டுடன்காமன் (Tutankhamen). எட்டு வயதில் அரியணை ஏறிய இவன் பதினெட்டு வயதில் காலமானான். அரசனாக அவன் அதிகம் சாதிக்கவில்லை. ஆனால் எகிப்திய அரசர்களிலேயே இன்று மிகப் புகழ் பெற்றவன் இவன். இதற்குக் காரணம் புதைக்கப்பட்ட 63 அரசர்களில் கல்லறைகளில் கிட்டத்தட்ட முழுமையாக மீட்கப்பட்ட கல்லறை இவனுடையதுதான்.

ஹோவர்ட் கார்டர் தனது 17ஆம் வயதிலிருந்தே எகிப்து அகழ் வாராய்ச்சியில் பங்குபெற்றவர். இவர் கார்னர்வான் பிரபுவின் உதவியோடு 1917இல் டுடன்காமன் கல்லறையைத் தேடும் பணியைத் தொடங்கினார். பல ஆராய்ச்சியாளர்கள் அரசர்களின் நகரத்தில் கண்டுபிடிக்க வேண்டிய கல்லறைகள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தும் கார்டர், டுடன்காமன் கல்லறை அங்கு இருக்கிறது என்று உறுதியாக நம்பினார். நான்கு ஆண்டுகள் விடாமல் தோண்டியும் அவர் வெற்றி பெறவில்லை. கார்னர்வான் தேடுதலை நிறுத்த உத்தர விட்டார். கார்டர் அவரிடம் வாதாடி இன்னும் ஓர் ஆண்டு தோண்டுவதற்கு அனுமதி பெற்றார்.

நவம்பர் 4, 1922ஆம் ஆண்டு.

நான்காம் ராம்ஸஸ் கல்லறைக்கு நேர்கீழே தோண்டத் தொடங்கிய தொழிலாளர்கள் படி ஒன்று கீழே செல்வதைக் கண்டுபிடித்தனர். மறுநாள் தோண்டுதலைத் தீவிரப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே செல்லும் பன்னிரெண்டு படிகளைக் கண்டு பிடித்தனர். கடைசிப்படி ஒரு முத்திரையிடப்பட்டு மூடப்பட்ட கதவு ஒன்றில் முடிந்தது. கார்டர் தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்:

‘அமைப்பைப் பார்த்தால் பதினெட்டாம் வம்சத்தியது போலத் தோன்றுகிறது. ஏதாவது அரச உத்தரவைப் பெற்றுப் புதைக்கப்பட்ட அரசரல்லாதவரின் கல்லறையா? அல்லது வேறு எங்கெருந்தாவது எடுத்துவரப்பட்டு இங்கு புதைக்கப்பட்ட அரச மம்மியின் இருப்பிடமா அல்லது நான் பல ஆண்டுகள் தேடிவந்த அரசனின் கல்லறையா?’

கார்னர்வன் பிரபுவிற்கு உடனே தந்தி கொடுத்துக் கார்டர் அவரை வரவழைத்தார்.

நவம்பர் 23ஆம் தேதி கார்னர்வனுடன் கார்டர் கல்லறைக் கதவைப் பார்வையிட்டார். கதவில் டுடன்காமனின் முத்திரைகள் தெளிவாகத் தெரிந்தன. கதவு உடைக்கப்பட்டு மறுபடியும் முத்திரையிடப்பட்டிருந்தது அவருக்குத் தெரிந்தது. திருடர்கள் உடைத்த கல்லறை மறுபடியும் முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும். வெறும் கல்லறைக்கு முத்திரையிடத் தேவையில்லை என்பதால், உள்ளே பாதுகாக்கத்தக்கதாக ஏதோ இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்தது. கதவிற்குப் பின்னால் உள்ள பாதை, சுண்ணக் கற்துண்டுகளால் அடைக்கப்பட்டிருந்தது. அகழ்வாளர்கள் அவற்றை அகற்றி மற்றொரு கதவை அடைந்தனர்.

கதவிற்குப் பின்னால் என்ன இருந்தது என்பதைக் கார்டரே சொல்கிறார்:

‘நடுங்கும் கைகளோடு, கதவின் இடது மேற்பாகத்தில் ஒரு சிறிய துளையிட்டேன். உள்ளே இருட்டும் வெளியும்... (கற்களால்) நிரப்பப்பட்ட பகுதியாகத் தெரியவில்லை. மெழுகுவர்த்திகளை ஏற்றி உள்ளே விஷ வாயு ஏதும் இல்லை என்று உறுதி செய்துகொண்டோம். நான் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றித் துளையில் தலையை நுழைத்து உள்ளே பார்த்தேன். முதலில் ஏதும் தெரியவில்லை. வெப்பக்காற்று மெழுகுவர்த்தியை நடுங்க வைத்தது. கண்கள் குறைந்த வெளிச்சத்திற்குப் பழகியவுடன் அறையில் இருப்பது தெரியவந்தது. விநோதமான மிருகங்கள், சிலைகள், தங்கம் - எங்கே பார்த்தாலும் தங்கத்தின் மினுமினுப்பு. ஆச்சரியத்தில் நான் வாயடைத்துப் போனேன். “ஏதாவது தெரிகிறதா?” என்று கார்னர்வன் கேட்டார். “ஆமாம், வியப் பூட்டும் பொருள்கள்” ’.

டுடன்காமன் கல்லறைக் கண்டுபிடிப்பு, அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளிலேயே மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. கல்லறைக்குள் பல்லாயிரக்கணக்கான விலை மதிப்பற்ற பொருள்கள் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பத்திர மாக வெளியில் எடுத்து அட்டவணைப் படுத்துவதற்கே கார்டருக்குப் பத்து ஆண்டுகள் எடுத்தன.

6

அரசர்கள் பள்ளத்தாக்கிற்குச் செல்லும்போதே எனக்குப் பேச்சு நின்றுவிட்டது. மலைகள் - மரமற்ற மலைகளின் மத்தியில் அந்தப் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. 3500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த அரசர்களின் கல்லறைகளைப் பார்க்கப்போகிறோம் என்னும் எண்ணத்துடன் இறந்தவர்களின் தனிமையை இவ்வாறு பலாத்காரம் செய்வது தவறு என்ற குற்ற உணர்ச்சியும் கலந்துகொண்டது.

முதலில் நான் பார்த்த கல்லறை முதலாம் சேதி என்னும் அரசனின் கல்லறை. பள்ளத்தாக்கிலே மிக நீளமானதாகக் கருதப்படுவது. 120 மீட்டர் நீளமான கல்லறை அது. உள்ளே செல்லும் பாதையின் இருமருங்குச் சுவர்களிலெல்லாம் சித்திரங்கள். எகிப்தியக் கடவுளர்களின் சித்திரங்கள் - குரங்குக் கடவுள், முதலைக் கடவுள், பருந்துக் கடவுள், குள்ளநரிக் கடவுள் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் மனிதர்களோடு இருப்பவர்களுடனும் இறந்தவர்களுடனும் மிக நெருக்கமாக இயங்குகிறார்கள். நான் பார்த்ததிலேயே எனக்கு மிகப் பிடித்த சித்திரம் ‘வாய் திறக்கும்’ சடங்கு பற்றிய சித்திரம். பருந்துக் கடவுள் அரசர் சேதியின் கையைப் பிடித்துக்கொண்டு அவரது வாயைத் திறக்கச் சொல்கிறார். அரசர் இறந்தோர் உலகில் எப்போதும்போல இயங்குவதற்காக நடத்தப்படும் சடங்கு இது. மனிதன் இறப்பை இருப்போடு பிணைப்பதற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்பதற்கு இது ஓர் அடையாளம். 3500 ஆண்டுகளுக்கு முந்திய அடையாளம்.

டுடன்காமன் கல்லறை அரசர்கள் கல்லறைகளிலேயே மிகச் சாதாரணமான கல்லறை. அவன் மிகச் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் கல்லறை அவசர அவசரமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். சிலர் அவன் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். சிலர் அவன் விபத்து ஒன்றில் இறந்ததாகச் சொல்கிறார்கள். காலில் பட்ட அடி சரியாகாமல் சீழ்பிடித்து விஷம் உடல் எங்கும் பரவி இறந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியோ இறப்பு எதிர்பார்க்காமல் நிகழ்ந்ததால், கல்லறை கட்டுவதற்கு அதிக நேரம் கிடைத்திருக்க முடியாது. எனவே கல்லறைச் சுவர்களில் சித்திரங்கள் ஏதும் இல்லை. இறங்கிச் சில மீட்டர்கள் நடந்ததுமே புதையறை (burial chamber) வந்துவிடுகிறது. அறையின் இடப்புறத்தில் குளிர்ப் பதனப்படுத்திய பெட்டி ஒன்றில் டுடன்காமனின் மம்மி இருக்கிறது. ஐந்து அடிக்கு மேல் இருக்காது. நீள முகம். பற்கள் வரிசையாக இல்லை. மூக்கு முழுமையாக இருக்கிறது. இறந்தாலும், அவனுடைய கா என்னுடன் உரையாட முயன்றதுபோல் எனக்குத் தோன்றியது. எதைப் பற்றிப் பேசுவது? இருவருக்குமிடையே பேசுவதற்கு என்ன இருக்கிறது? முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வலப்புறம் அவனுடைய சமாதி இருக்கிறது. செவ்வரி அடர்ந்த கருங்கற் சமாதி. சமாதியைச் சுற்றிச் சித்திரங்கள். அரசனை அடுத்த உலகிற்குத் தயார் செய்வதற்காகப் பல கடவுளர்கள் அவனுக்கு உதவுகிறார்கள். தோத் எனப்படும் குரங்குக் கடவுள் - எழுத்திற்கும் அறிவிற்கும் சொந்தமான கடவுள். சமாதிக்கு இடப்புறச் சுவரெங்கும் காணப்படுகிறார். அவருக்கு மேல் அரசரை மறு உலகிற்கு அழைத்துச் செல்லும் புனிதப் படகு வரையப்பட்டிருக்கிறது. வண்ணங்கள் நேற்று வரைந்ததுபோல அலர்ந்து இருக்கின்றன.

7

ஃபாரோக்களின் உலகம் ஆண்களின் உலகம். அரசர்களின் பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்ட ஒரே அரசியின் பெயர் ஹாட்ஷெப்ஸட். 22 ஆண்டுகள் அரசாண்ட அவரது ஆட்சிக் காலத்தின் சின்னங்களை அழிக்க அவர் இறந்தவுடன் முயன்றனர். அவரது வளர்ப்பு மகனே (அவருக்குச் சக்களத்தியின் மகன்) அவருக்கு எதிராகத் திரும்பியதின் விளைவு. 3000 ஆண்டுகள் கழித்து எகிப்திய ஆய்வாளர்களால் அவரது வரலாறு மீட்டெடுக்கப்பட்டது.

அரசர் பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு மிக அழகிய கோவில் இவர் பெயரைக் கொண்டது. ஒரு அரைச் சந்திரன் வடிவில் அமைந்திருக்கும் மலைகளைப் பின்புலமாகக் கொண்ட இந்த மூன்று அடுக்குக் கோவில் சக்களத்தி மகனின் ஆத்திரத்தையும் மீறி நம்மை வந்து அடைந்திருக்கிறது. நான் போன அன்று கடும் வெயில். ஆனாலும் இந்தக் கோவில் எகிப்துக் கட்டடக் கலையில் ஒரு திருப்புமுனை என்று கருதப்படுவதால் இதை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று சென்றேன். இயற்பியல் சோதனைக் கூடங்களில் இருக்கும் சாய்தளம் (inclined plane) இராட்சத வடிவம் பெற்று வந்தாற்போல இருக்கும் சாய்தளத்தின் மேல் ஏறிக் கோவிலின் மேல் நிலைகளை அடைய வேண்டும். மக்கள் பலரும் சேர்ந்து வழிபடுவதற்குக் கட்டப்பட்ட முதல் கோவில்களில் இது ஒன்று என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். நமது கோவில்களில் புத்தபிரானின் பிறப்பு கல்லால் வடிக்கப்பட்டிருப்பதைப் போல் இந்தக் கோவிலில் பெண் ஃபாரோவின் பிறப்பும் வாழ்க்கையும் புடைச் சிற்பங்களால் வடிக்கப்பட்டிருக்கின்றன. புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

8

நைல் நதி உண்மையிலேயே நீலமானது. கண்ணனின் கருநீலம். அழுக்கு கரையோரத்தில் ஒதுங்கிவிடுகிறது. நதியின் நடுவில் ஓடும் தண்ணீர் மேகமில்லாத வானத்தின் நிறத்தை உள்வாங்கிக்கொண்டு ஓடுகிறது. நான் சென்ற படகில் (கப்பல்?) எல்லா வசதிகளும் இருந்ததால் கரையிறங்கத் தேவையில்லை. ஆனாலும் கரையருகில் இருப்பதால் தரைக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் நமக்கு வந்துவிடுகிறது.

பேரழகையும் திகட்டவைக்கும் திறன் தரைக்கு இருக்கிறது.

அஸ்வான் நகரில் நங்கூரமிட்டிருந்த கப்பலிலிருந்து இறங்க எனக்கு மற்றொரு கட்டாயம். கப்பல் ஐந்து நட்சத்திர வகையென்றாலும் மின்மடல்களைப் படிக்க வசதி கிடையாது.

கரைக்கு வந்ததுமே குதிரை வண்டிக்காரர்கள் என்னையும் என் மனைவியையும் சூழ்ந்துகொண்டனர். ஒருவருக்கு இண்டர்நெட் என்றால் என்ன என்று தெரிந்திருந்தது. என்னை நடத்தியே அழைத்துச் சென்று அருகில் இருக்கும் இண்டெர்நெட் மையத்திற்குக் கொண்டுவிட்ட பிறகு என்னிடம் சைகை மொழியில் கேட்டார்.

‘திரும்பி வரும்போது என் குதிரை வண்டியில் வருவீர்களா?’

‘Sorry. Nyet.’

‘சுக்ரான்.’

கடைக்காரரும் என்னைப் பார்த்ததும் சொன்னது ‘அமிதாப் பச்சன்’. நானும் ‘அமிதாப் பச்சன்’ என்றேன். பதிலுக்கு அவர் ‘ஷாருக்கான்’ என்றார். நான் ‘ரஜினிகாந்த்’ என்றேன். திரும்ப அவரால் பதில் சொல்ல முடியவில்லை. சிறிது ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அவரோடு உரையாட முடிந்தது.

‘ஹோஸ்னி முபாரக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

சுற்றிப் பார்த்தார். யாருக்கும் அவர் சொல்வது கேட்காதது என்று தெரிந்ததும், என்னிடம் மெதுவாகச் சொன்னார்.

‘I Bray.’

‘Bray?’

‘Bray, bray. God.’

அவர் pray என்று சொல்கிறார் என்பது எனக்கு விளங்கியது. அரபிக் மொழியில் ‘p’ கிடையாது.

‘நான் தினமும் அல்லாவிடம் கேட்கிறேன். ஹோஸ்னி முபாரக்கிற்கு 85 வயதாகிவிட்டது. எனக்கு ஐம்பதிற்கும் குறைவு.’

‘So?’

‘அவர் உலகிலிருந்து விடைபெற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. சீக்கிரம் கூப்பிட்டுக் கொள்ளுங்கள். முபாரக் இல்லாத எகிப்தில் நான் சில ஆண்டுகளாவது இருக்க விரும்புகிறேன்.’

அவரது நிறம் சிறிது மட்டாக இருந்தது. நெற்றி தலையில் ஏறிச் சுருளான கருவெள்ளை முடிக்காட்டில் அடங்கியது. கேட்கலாமா? கேட்டுவிடுவோம்.

‘நீங்கள் நியூபியாவைச் சேர்ந்தவரா?’

அவர் சிரித்தார். அவரது கையோடு எனது கையை வைத்துப் பார்த்தார்.

‘நான் நியூபியன் அல்ல. I am normal.’

அஸ்வான் பகுதி ஒரு காலத்தில் நியூபியர்கள் கைவசம் இருந்தது. நியூபிய அரசர்கள் ஒரு காலத்தில் எகிப்தின் பெரும் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களிடம் ஆப்பிரிக்கக் கருப்பினத்தின் சாயை இருப்பதால், எகிப்திய மக்கள் அவர்களை மட்டமாகக் கருதுகிறார்கள். எகிப்தியப் படங்களில் வேலைக்காரர், சமையல் செய்பவர், சிறிது மூளை குழம்பியவர், இவர்கள் அனைவரும் நியூபியர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

இவ்வளவிற்கும், நான் பார்த்த பல நியூபியர் அல்லாத எகிப்தியர்கள் தாங்கள் அரேபிய வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. தாங்கள் காப்டிக் (Coptic) வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். தங்களது நாகரிகம் உலகத்திலேயே மிகப் புராதனமானது என்பதில் அவர்களுக்கு மிகுந்த பெருமை இருக்கிறது.

இந்த மிகப் புராதனமான இடத்தில் மிகப் பெரிய அணை ஒன்று கட்டப்பட்டது. அஸ்வான் உயர் அணை என்று அழைக்கப்படும் அது, நாசர் காலத்தில், சோவியத் உதவியுடன் தொடங்கப்பட்டு, அவர் மறைவிற்குப் பின் முடிக்கப்பட்டது. இந்த அணையின் பின்னால் இருக்கும் நாசர் ஏரி மனித குலம் அமைத்த ஏரிகளிலேயே மிகப் பெரிய ஏரி. 5000 சதுரக் கிலோ மீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்ட அதன் நீளம் 550 கிலோ மீட்டர், மிக அகலமான பகுதியில் அதன் அகலம் 35 கிலோ மீட்டர்!

இந்த ஏரியை அணையின் மீதிருந்து பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஆழ்ந்து, மனிதனுக்கு அடங்கிய நதி அணைக்குப் பின்னால் பரந்து நீள்கிறது.

நைல் நதிக்கு இரு பிறப்பிடங்கள். வெள்ளை நைல் விக்டோரியா ஏரியில் பிறக்கிறது. நீல நைல் எதியோப்பியாவில் உள்ள தானா ஏரியில் பிறக்கிறது. இந்த இரண்டு நதிகளும் சூடான் நாட்டில் உள்ள கார்ட்டோம் நகரில் இணைகின்றன. 6670 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி, உலகிலேயே நீளமான நதி. எகிப்தில் நுழையும்போது, தனது பயணத்தில் சுமார் 5000 கிலோமீட்டர்களை முடித்துவிடுகிறது.

அஸ்வான் அணையைக் கட்டும்போது பல புராதனக் கோவில்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருந்தது. யுனெஸ்கோ உதவியுடன் பல கோவில்கள் பிரிக்கப்பட்டு உயரத்தில் மறுசீரமைக்கப்பட்டன. இப்படிச் சீரமைக்கப்பட்ட கோவில்களில் புகழ்பெற்றவை அபு சிம்பல் (Abu Simbel) கோவில்கள்.

இரண்டாம் ராம்ஸஸ் எகிப்தை ஆண்ட மன்னர்களிலேயே மிகச் சிறந்தவனாகக் கருதப்படுபவன். அவனது ஆட்சி 67 ஆண்டுகள் நடந்தது. 95 வயதிற்கும் மேல் அவன் வாழ்ந்தான். Ten Commandments திரைப்படத்தில் மொட்டைத்தலை யூல் பிரன்னர் வருவது இந்த அரசனாக. மோஸஸையும் யூதர்களையும் எகிப்திலிருந்து துரத்தியவன் இவனே என்று சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

அபு சிம்பல் கோவில்கள் தொழில்நுட்பம் எவ்வாறு பழமையைக் காப்பாற்ற முடியும் என்பதற்கு ஒரு சான்று. இன்று நைல் நதியின் மேற்குக் கரையில் நின்றுகொண்டு நாசர் ஏரியைப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த இரு கோவில்கள் தண்ணீருக்குள் மறைந்துபோகாமல் காப்பாற்றப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்று. ராம்ஸஸ் தன்னையே கடவுளாக ஆக்கிக்கொள்ள விருப்பப்பட்டதன் விளைவு அவன் பெயரில் இருக்கும் கோவில். அவன் மனைவிக்கு (நெப்ரடரி) அவனுக்குப் பக்கத்தில் ஒரு கோவில் இருக்கிறது.

கோவில் நுழைவாயிலில் 20 மீட்டர் உயரமுள்ள நான்கு பிரமாண்டமான இரண்டாம் ராம்ஸஸின் சிலைகள். இரண்டாம் சிலையின் தலை உடைந்து அதன் காலடியில் கிடக்கிறது. சிலைகளின் காலைச் சுற்றி அரசனின் மனைவியர், மகன்கள் சிலைகள் - அவனுக்கு நூறுக்கும் மேற்பட்ட மகன்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். கோவிலுக்கு உள்ளே அவன் போர்புரிந்த கடேஷ் யுத்தத்தின் சிற்பங்கள். இவன் காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி அவன் சண்டையிடுவது சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கிறது. உட்தூண்களில் மிகப் பெரிய ராம்ஸஸின் எட்டு சிலைகள். அவன் இறந்தபின் ஓஸிரிஸாக மாறி, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறான். (எகிப்தியச் சிற்பக்கலையில் கைகட்டிக்கொண்டு நிற்பவர்கள் இறந்தவர்களைக் குறிப்பவர்கள். கைகளை முழங்கால்களின் மீது வைத்து உட்கார்ந்திருப்பவர்கள் அல்லது கைகள் தொடைகளைத் தொட நிற்பவர்கள் இருப்பவர்களைக் குறிப்பவர்கள்). பின்சுவரில் எகிப்தியக் கடவுளர் மூவர். நான்காவதாக அரசனின் சிலை. பிப்ரவரி 22, அக்டோபர் 22 நாட்களில் சூரியனின் ஒளி 61 மீட்டர் நீளமுள்ள கோவிலின் உள் வந்து பின் சுவரில் விழுகிறது. நான்கு சிலைகளில் மூன்றின் மீது அதன் வெளிச்சம்படுகிறது. நான்காவது கடவுள் ப்டா (ஜீtணீலீ) - இருட்டின் தலைவன். அவன் மீது சூரிய ஒளிபடுவதில்லை.

அரசியின் கோவில் சிறியது. ஆனால் மிக அழகானது. சாதாரணமாக அரசிகளின் உருவம் ஃபாரோக்களின் முழங்கால் அளவிற்குத்தான் செதுக்கப்படும். இந்தக் கோவிலில் அரசி அரசனளவிற்கு உயர்ந்து நிற்கிறாள்.

9

கர்னாக் கோவில் வளாகம் உலகிலேயே மிகப் பெரியது என்று சொல்கிறார்கள். இவற்றில் ஒரு கோவிலை மட்டுமே (கதிரவன் கோவில்) பொதுமக்கள் பார்ப்பதற்காகத் திறந்துவைத்திருக்கிறார்கள். உள்ளே செல்பவர்களை வரவேற்பவை, இருமருங்கிலும் இருக்கும் ஆட்டுத்தலை ஸ்பின்க்ஸ்கள். உள்ளே பெரிய தூண்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன. இவை மனிதர்களால் கட்டப்பட்டவை அல்ல என்று நம்மை நினைக்கவைக்கின்றன. நமது திருமலை நாயக்கர் மஹாலின் கோவில் தூண்களின் உயரம் சுமார் 57 அடி; விட்டம் ஐந்து அடி. கர்னாக் தூண்களில் பல 65 அடிக்கும் மேல் உயரம்; விட்டம் 10 அடிக்கும் மேல். தூண்கள் கட்டப்பட்ட காலம் 3500 ஆண்டுகளுக்கும் முன்னால். இந்தத் தூண்கள்மீது இருந்த கூரையின் கீழ்ப்பரப்பில் பல சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

கர்னாக் கோவிலுக்குள் நுழைந்ததும் எனக்குச் சலிப்பு வந்துவிட்டது. சிலைகளைக் கண்டால் ஒரு வெறுப்பு கொப்பளித்துக்கொண்டுவந்தது. எத்தனை தரம்தான் பார்த்த மாதிரியே இருக்கும் சிலைகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது?

எகிப்தியக் கலை வடிவங்கள் அதிகம் மாற்றம் பெறாமல் ஒரே மாதிரியாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் செதுக்கிய கலைஞர்கள் தேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சலிப்பு வந்திருக்காதா? சிறிது மாற்றி அமைக்கலாம் என்ற உணர்வு இருந்திருக்காதா?

இருந்திருக்கும்.

செந்நிறக் கல்லினால் ஒரு வண்டின் வடிவத்தை அப்படியே, அதன் அளவை ஒரு முப்பது மடங்கு அதிகப்படுத்திப் படைத்திருக்கும் கலைஞனுக்கு அந்த உணர்வு நிச்சயம் இருந்திருக்கும். எப்போது பறப்போம் என்று துடித்துக்கொண்டும் இந்த வண்டே அவனது கலைத் திறனுக்கு உதாரணம். இந்த வண்டை ஏழுதரம் சுற்றி வந்தால் காதலர்கள், கணவன் மனைவி இடையே சண்டையே வராது என்று நம்பிக்கை. நான் சுற்றி வரவில்லை. மனைவியோடு சண்டை போடுவது என்பது எனக்குச் சலிக்காத சிலவற்றில் ஒன்று.

10

எகிப்தைப் பற்றி நினைக்கும்போது, அதன் நாகரிகம் ஃபாரோக்களுக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை தொடர்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நாகரிகத்தின் நாயகர்கள் கிறித்தவர்களும் இஸ்லாமியரும்.

எகிப்தின் மக்கள்தொகையில் பத்து சதவீதத்திற்கு மேல் கிறித்தவர்கள். இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் காப்டிக் கிறித்துவர்கள். காப்டிக் என்றாலே எகிப்து என்று அர்த்தம் (Copt in English - Gypt in Arabic - Egyptos in Greek). குறைந்தது 80 லட்சம் பேர் இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் அலெக் ஸாண்டிரியாவில் இருந்தாலும் கெய்ரோ நகரின் பழைய கெய்ரோ பகுதியில் பல கிறித்தவர்கள் இருக்கிறார்கள்.

என்னை அழைத்துச்சென்ற டாக்ஸி ஓட்டுநருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு அரபிக் தெரியாது. சைகையில் அவருக்கு எங்கு செல்ல வேண்டும் என்று புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நைல் நதியின் கிழக்குக்கரையில் பல காப்டிக் தேவாலயங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமானது அபு ஸெர்கா என்னும் தேவாலயம். கி. பி. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எகிப்தின் மிகப் பழைய தேவாலயம். இது கட்டப்பட்ட இடத்தில் புனிதக் குடும்பம் (The Holy Family) சில காலம் வாழ்ந்தது என்று சொல்கிறார்கள். குழந்தை ஏசு விளையாடிய இடம். மிக எளிமையான இடம். இந்தத் தேவாலயத்திற்குச் செல்லும் வழி பழைய தில்லியின் சந்துகளை நினைவுறுத்துகிறது. ஆனால் கூட்டம் அதிகம் இல்லாத சந்துகள்.

அடுத்தது தொங்கும் தேவாலயம். அது தொங்குவதாக எனக்குத் தெரியவில்லை. ரோமர்கள் கட்டிய சுவர் ஒன்றின் மீது கட்டப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதன் அருகே மிக அழகிய ஜார்ஜ் தேவாலயம் இருக்கிறது. புத்தம் புதியதாக இருக்கிறது. காரணம், இது கட்டப்பட்டு 100 ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. பழைய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டது.

கிறித்தவர்கள் எகிப்தில் ஒடுக்கப்படுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு காப்டிக் இணையதளம் ஆயிரக்கணக்கான காப்டிக் பெண்கள் கடத்தப்பட்டு இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாகக் கூறுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருக்கும் இடம் அமைதியான இடம். அதிர்ந்து பேசுவதற்கு மனம் இடம் கொடுக்காத இடம்.

மாறாக, பழைய கெய்ரோவின் இஸ்லாமியப் புனிதத் தலங்கள் நமது தலங்களைப் போல மக்கள் இயங்கும் இடங்களின் எல்லா இரைச்சல்களையும் கொண்டிருக்கின்றன. அல் ஹுஸைன் மசூதி புகழ்பெற்ற கலீலி பஜாருக்கு அருகில் இருந்தும் உள்ளே நுழைந்தால் அசாதாரணமான அமைதி நிலவுகிறது. தொழுகை இடம் முழுவதையும் மறைத்துக் கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன. பளிங்குத் தூண்கள். இந்த மசூதியில் நபிகள் நாயகம் அவர்களின் பேரரான இமாம் ஹுஸைன் அவர்களின் தலை புதைக்கப்பட்டு அதன் மீது கட்டப்பட்ட கல்லறை இருப்பதாகக் கூறுகிறார்கள். உலகிலேயே பழமையான திருக்குரானின் பிரதி இந்த மசூதியில் இருக்கிறது.

ஸலாதீன் இஸ்லாமியப் பெருவீரர்களில் ஒருவர். புனிதப் போர்களின் (The Crusades) மிகச் சிறந்த நாயகரான இவரது பேரரசு, எகிப்து, சிரியா, யேமன், இராக்வரை விரிந்திருந்தது. இவர் கட்டிய கோட்டை இன்றும் கெய்ரோ நகரில் இருக்கிறது. இந்த இடத்தை அவர் தேர்ந்தெடுத்த கதை மிகச் சுவையானது. அறுத்த மாமிசத்தைப் பல இடங்களில் தொங்கவிட்டு, எந்த இடத்தில் அது பல நாட்கள் ஆயினும் கெடாமல் இருந்ததோ, அந்த இடத்தை அவர் தேர்ந்தெடுத்தாராம். அந்த இடத்தின் காற்று அத்தனை சுத்தமாக இருந்ததாம்.

இன்றும் கெய்ரோ நகரத்தின் கூட்டத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் The Citadel என்று அழைக்கப்படும் இந்தக் கோட்டைக்குள் செல்லலாம். பச்சைப் பளிங்கு மசூதி இந்தக் கோட்டைக்குள் இருக்கிறது என்றாலும், இஸ்தான்புல் நகரத்தில் இருக்கும் ஹையா ஸோபியா மசூதியின் மறுபதிப்புப் போன்ற ஒரு மசூதி இங்கு இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் உள்ளே சென்று வானத்தின் கூரைபோல் இருக்கும் அதன் உயர்ந்த விதானத்தைப் பார்க்கும்போது அடுத்த வருடம் இஸ்தான்புல் நகரத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

11

கெய்ரோ நகரத்தின் அருங்காட்சியகம் புராதன எகிப்தின் கலைச் செல்வங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது - நமது வீட்டின் பின்னறையில் பயனற்ற பழம் பொருள்களை அடைத்துவைத்திருப்போமே அதைப் போல. இவ்வளவு செல்வங்கள் இருந்தால் என்னதான் செய்ய முடியும்? இந்த அருங்காட்சியகத்திற்கு நான் இருமுறை சென்றேன். நூற்றில் ஒரு பங்கைக்கூடச் சரியாகப் பார்வையிட முடியவில்லை.

டுடன்காமன் கல்லறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. காணக் காணத் தெவிட்டாதவை. இவற்றில் முக்கியமானது டுடன்காமனின் இறப்பு முகமூடி (death mask). தங்கத்தில் செய்யப்பட்டது; 11 கிலோகிராம் எடை. உலகக் கலைப் பொக்கிஷங்களில் மிக அரிய ஒன்றான இது ஃபாரோவின் எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது. தலையில் பாம்பு, பருந்துச் சின்னங்கள். கழுத்தையும் தலையையும் சுற்றியுள்ள அரச கிரீடம். மையிட்ட கண்கள். இவையனைத்தும் உள்ளே இருக்கும் கருத்த, பல் நீண்ட உண்மை முகத்தை மறைப்பதற்காகப் படைக்கப்பட்டவை. உண்மைக்கும் விருப்பத்திற்கும் உள்ள இடைவெளியைக் காட்டுபவை.

இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு செல்வம் அரசரின் தங்கச் சவப்பெட்டி. 110 கிலோகிராம் எடையுள்ள இந்தப் பெட்டியின் வேலைப்பாடுகள் பிரமிக்கவைப்பவை. இந்தத் தங்கப் பெட்டி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்டியில் அருமையான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று டுடன்காமன் வேட்டையாடும் ஒரு காட்சியின் சித்திரம். டுடன்காமன் ஓரத்தில் தன்னுடைய ரதத்தில் உறைந்து காணப்படுகிறான். கையில் வில்லை வளைத்துக்கொண்டு நின்றாலும் அவனிடம் துடிப்பு இல்லை. முன்னால் மான்கள், பறவைகள், மானைக் குதறும் நாய் ஒன்று. எல்லா மிருகங்களும் ஒன்றை ஒன்று மிதித்துக்கொண்டு ஓடுகின்றன, உறைந்திருக்கும் ஃபாரோவின் அம்பிற்குப் பயந்து. இந்த ஓவியம் எனக்கும் மொகலாய ஓவியங்களை நினைவுபடுத்துகிறது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் இருந்திருந்த இந்தத் தொடர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒன்று. மற்றொரு அரிய சித்திரம் டுடன்காமன் மனைவி அவனுக்கு வாசனைத் திரவியம் அளிப்பது. அரச நாற்காலி ஒன்றின் பின்னால் வரையப்பட்டிருக்கும் சித்திரம் இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை மிக அழகாக நமக்குக் கொண்டு வந்து தருகிறது. தேர்ந்த கலைஞன் ஒருவன் வரைந்ததையே திரும்பத் திரும்ப வரைந்தாலும் அதை எவ்வாறாவது உயிர்க்கச்செய்துவிடுவான் என்பதற்கு இந்தச் சித்திரம் ஒரு சான்று.

பழைய எகிப்தியர்கள் எப்போதும் மரணத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார்களா? நமக்குக் கிடைத்திருக்கும் எகிப்திய எச்சங்களில் அநேகமாக எல்லாமே மரணம் சார்ந்து இருப்பதனாலேயே நமக்கு இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது. கிடைத்ததைக் கொண்டு பழமைக்கு உருவம் அமைக்கும் வேலை, மதனகாமராஜன் கதையில் தலைமயிரைக் கொண்டு இளவரசியின் உருவச் சிலையை அமைக்க முற்படுவது போன்றது.

ஆனால் பழைய காலத்தில் வாழ்ந்தவர்களின் உருவங்களை - உயிர் பிரிந்த உருவங்களைக் காண முடிந்தால் - அது கிடைத்தற்கரிய அனுபவமாக இருக்கும். அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது.

அருங்காட்சியகத்தின் மம்மி அறையில் ஃபாரோக்கள் பலர் துயில்கிறார்கள். இரண்டாம் ராம்ஸெஸின் நூறு வயதிற்குச் சற்றுக் குறைவான, கழுத்து நீண்ட, சிவந்த தசைகள் கொண்ட மம்மியைக் காண முடியும். நமது அங்கமுத்து போன்று, பருமனான ஹாட்ஷெப்ஸட்டின் மம்மியைப் பார்க்க முடியும். மிகவும் அழகாக இருக்கும் இரண்டாம் ஸேதியின் உடலைப் பார்க்க முடியும்.

நான் எகிப்தில் இருந்தபோதுதான் மும்பைப் பயங்கரம் நடந்தது.

இரண்டாம் ராம்ஸெஸிற்குப் பிறகு ஃபாரோக்களின் அரசு வலுவிழந்துவிட்டது. ஒரு வரலாற்று ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்: இந்தக் காலத்தில் எகிப்தின் வடபகுதி எல்லைகள் முற்றிலும் மறைந்தன. இருண்ட காலத்திற்குச் சென்ற கீழைப் பகுதி பல நூற்றாண்டுகள் இருளில் உழன்றது. வரிச்சுமை - அரச மாளிகைகளையும் அவற்றின் ஒட்டுண்ணிகளையும் தாங்கிப் பிடிக்கச் சுமத்தப்பட்டது - பொருளாதார வட்டத்திலிருந்து பிரித்து, சமுதாயத்தின் விளிம்பில் தள்ளிவிட்டது. பலர் ஹபிரு என அழைக்கப்படும் விளிம்பு மனிதர்கள் ஆகிவிட்டார்கள். பாபிலோன் கடுமையான கடன் சுமையால் திண்டாடியது. ஓயாத சண்டைகளும் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அராமிய மக்கள் எகிப்திற்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்ததும் ஒரு காரணம்.

இக்காலத்தில் நடந்த வன்முறையின் அடையாளம் ராம்ஸெஸின் காலடியில் ஒரு பெட்டிக்குள் கிடக்கிறது. இளைஞர் ஒருவரது மம்மி. தலை இரண்டாகப் பிளந்திருக்கிறது. கோடாலியால் பிளந்திருக்க வேண்டும்.

எகிப்தின் வடபகுதியைப் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் ஒப்பிடலாம். கீழைப்பகுதி வங்கதேசத்தை நினைவிற்குக் கொண்டுவருகிறது. அராமியர்கள் இந்தியாவினுள் கூட்டம் கூட்டமாக வரும் வங்க அகதிகள்.

மாளிகை ஒட்டுண்ணிகள்?

நமது புகழ்பெற்ற நடுத்தர வர்க்கத்தினராக இருக்கலாம். தாஜ் ஓட்டலில் மறைந்தவர்கள்

ஹபிருக்கள்?

நமது கணக்கற்ற ஏழை மக்கள். தினமும் மரணத்தை எதிர்கொள்பவர்கள்.

மும்பை நடுத்தர மக்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கொடி பிடித்ததை அன்று காலையில்தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அரசியல்வாதிகள் இன்றைய ஃபாரோக்கள். தமிழ்நாட்டில் இருக்கும் சிலைகள் கலாச்சாரம் இதற்கு ஒரு சான்று. இவர்களுக்கு எதிராக நடுத்தர வர்க்கத்தினர் கொடி பிடிப்பது தற்கொலைக்கு நேர். இன்றைய ஃபாரோக்கள் இல்லாவிட்டால் வரக்கூடிய வன்முறை தலை பிளந்த மம்மிக்கு நேர்ந்த வன்முறையைவிடப் பயங்கரமாக இருக்கலாம்.

எனக்கும் இந்தக் கதி நேரலாம்.

மம்மிகள் அறையில் மூச்சுமுட்டிக் கொண்டுவந்தது. வேகமாக வெளியில் வந்தேன்.

மம்மிப்படுத்துதல்

1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.

2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.

6. உடல் கல் உப்பால் மூடப்படும்.

7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.

8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.

9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்.

எகிப்திய எழுத்துகள்

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் எழுத்துகளை நம்மால் படிக்க முடியாது. அவை கூறுவது என்ன என்பது நமக்கு இன்றும் புதிராகவே இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அந்த நாகரிகத்திலிருந்து நம்மிடம் சேர்ந்து வந்தடைந்திருக்கும் எழுத்துகள் மிகச் சிலவே. மாறாக எகிப்திய எழுத்துகள் திரும்பத் திரும்பச் சுவர்களிலும் கல்லறைகளிலும் பேப்பிரஸ் எனப்படும் ஏட்டிலும் எழுதப்பட்டு லட்சக்கணக்கில் நம்மை வந்தடைந்திருக் கின்றன. எனவே Hieroglyphic என அழைக்கப்படும் இந்தப் பட எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதின் திறவுகோலைத் தேடுவதில் பல ஆராய்ச்சியாளர்கள் முனைந்தனர். இந்தத் திறவு கோல் கிடைத்தது நெப்போலியன் எகிப்தைப் படையெடுக்கும் போது கிடைத்த ரோஸெட்டா கல் என்ற கல்வெட்டின் மூலமாக. இந்தக் கல்வெட்டில் மூன்று மொழிகளில் - கிரேக்க, டெமோடிக், ஹைரோகிளைஃபிக் மொழிகளில் - ஒரே செய்தி எழுதப்பட்டிருந்தது. சாம்பலயோ (Champollion) என்னும் பிரெஞ்சு அறிஞர் இந்தக் கல்வெட்டை வைத்துக்கொண்டு ஹைரோகிளைஃபிக் மொழி என்ன சொல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அவரது உழைப்பின் பயனாக எகிப்தின் ஐயாயிர ஆண்டுகளின் வரலாறு நமக்கு எழுத்து மூலமாகக் கிடைத்துள்ளது.

பட எழுத்து, படம் எதைக் குறிக்கிறதோ அதைச் சொன்னாலும், மற்ற எதையும் குறிக்கலாம். அது ஒரு தனி எழுத்தையும் குறிக்கலாம். உதாரணமாக இது வாத்தின் படம்.

இது எகிப்து மொழியில் ஒரு எழுத்தைக் குறிக்கும்.

படம் பக்கத்தில் ஒரு செங்குத்துக் கோடு போட்டால் அது வாத்தையும் ‘மகன்’ என்ற பொருளையும் குறிக்கும். ஆங்கிலத்தில் ideogram என்று அழைக்கப்படுவது.

சில எழுத்துகள் சிலவற்றின் உருவங்கள் (images). Logograms என ஆங்கிலத்தில் அழைக்கப்படுபவை.

கதிரவன்! வீடு

அரசர் அரசியரின் பெயர் ஒரு அடைப்பில் எழுதப்படும். உதாரணமாக கிளியோபாத்ராவின் பெயர் இது:

என்னுடைய பெயர்?

எகிப்திய காலம்

1. 3100 - 2950 கி.மு. - முதல் பட எழுத்துகள்

2. 2950 - 2575 கி.மு. - முதல் பிரமிடு - ஸக்காரவின் படிப் பிரமிடு.

3. 2575 - 2150 கி.மு. - பழைய அரசு - கீஸா பிரமிடுகள்

4. 2150 - 1975 கி.மு. - குழப்பமான ஆண்டுகள்

5. 1975 - 1675 கி.மு. - இடையரசு - எகிப்து ஒருங் கிணைந்தது. இலக்கிய, கலை மலர்ச்சி

6. 1675 - 1530 கி.மு. - குழப்பமான ஆண்டுகள்

7. 1530 - 1075 - புதிய அரசு - டுடன்காமன், ஹாட்ஷெப்ஸட், இரண்டாம் ராம்ஸெஸ்.

இதன் பிறகு எகிப்தின்மீது பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக, நியூபியர்கள், அசீரியர்கள், அலெக்ஸாண்டர் தலைமையில் கிரேக்கர்கள். அலெக்ஸாண்டரின் படைத் தளபதி தாலமி வழிவந்தவர்தான் கிளியோபாத்ரா - எகிப்தின் கடைசி ஃபாரோவாகக் கருதப்படுபவர். கி.மு. 30இல் தனது முப்பத்து ஒன்பதாம் வயதில் தற்கொலை செய்துகொண்ட இவரோடு எகிப்து ஃபாரோக்களின் ஆட்சி முடிவிற்கு வருகிறது.

எகிப்தியக் கடவுள்கள்

எகிப்தியர்களுக்கும் எண்ணற்ற கடவுள்கள் இருந்தார்கள். நான்காயிரம் ஆண்டுகள் நீண்ட எகிப்திய நாகரிக வெள்ளத்தில் இவர்களில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் கரை சேர்ந்தனர். பலர் உருமாற்றம்பெற்றனர். இவர்களைப் பற்றிய கதைகள் பல நம்மிடம் சேர்ந்தடைந்திருக்கின்றன. ஆனால் தலையைச் சுற்றவைக்கும் கதைகள். இவர்களில் நாம் ஐந்து கடவுள்களை நினைவு வைத்துக்கொண்டால் போதும்.

முதலாக ‘ரா’ எனப்படும் சூரியக் கடவுள். எகிப்திய ஓவியங்களில் இவனுக்குப் பருந்துத் தலை. இந்தத் தலையின் மீது செந்நிறக் கதிரவ வட்டம். இவனது இடது கையில் இருப்பது அங்க் எனப்படும் உயிர்ச்சாவி.

இரண்டாவதாக ஹோரஸ் எனப்படும் வானக் கடவுள். இவனுள் சூரியனும் சந்திரனும் அடக்கம். இவனுக்கும் பருந்துத் தலை. ஆனால் செவ்வட்டம் கிடையாது.

மூன்றாவதாக அனுபிஸ் என்று அழைக்கப்படும் கடவுள். இவன் இறந்தார் உலகத்தின் தலைவன். குள்ளநரித் தலை கொண்டவன்.

நான்காவதாகக் காலையில் சூரியனைத் தள்ளிக்கொண்டு உலகிற்குக் கொண்டுவரும் கெப்ரி எனப்படும் விடியற்கடவுள். இவன் sநீணீக்ஷீணீதீ என்று அழைக்கப்படும் சாணி உருட்டும் வண்டாகச் சித்தரிக்கப்படுகிறான். சூரியன் அவன் தள்ளும் சாணி உருண்டை. கெப்ரி என்றால் ‘தானாக முளைத்தவன்’ என்று பொருள். சாணி வண்டுகளை சுயம்புக்களாக எகிப்தியர் கருதினர்.

ஐந்தாவதாக ஒசிரிஸ் என அழைக்கப்படும் இறப்பு, மறுபிறப்பு, பிறப்பின் கடவுள். இவனுக்கு நல்ல வேளையாக மனித முகம். ஆனால் இறந்து, பதப்படுத்தப்பட்ட மம்மியின் தோற்றம் கொண்டவன்.

எகிப்தில் பெண்கள்

அன்றைய எகிப்தில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்ததாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆண்களுக்கு இணையாகப் போர்க் களத்தில் அவர்கள் எதிரிகளை அழிப்பது போன்ற பல கலைப் படைப்புகளை நாம் இன்றும் காணலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம அளவு கூலி அளிக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. ஹொரோடடஸிற்கு இந்தப் பெண்ணுரிமை மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ‘இங்கு எல்லாம் தலைகீழாக இருக்கிறது. ஆண்கள் செய்ய வேண்டியதைப் பெண்கள் செய்கிறார்கள்’ என்று அவர் வருத்தப்பட்டிருக்கிறார்.

பெண்களுக்கு அவர்கள் விருப்பப் பட்ட ஆடை அணிகலன்கள் அணியச் சுதந்திரம் இருந்தது. குடிப்பதற்கும். பெண் ஒருத்தி ‘எனக்குப் பதினெட்டு கோப்பைகள் மது வேண்டும். வைக்கோல் மாதிரி எனது வயிறு வறண்டிருக்கிறது’ என்று கூறியதாக ஒரு கல்வெட்டு பேசுகிறது.

பெண்கள் அரசில் பல பதவிகளை வகித்திருக்கிறார்கள். இரண்டு பெண்கள் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

திருமணம் என்ற ஒரு சடங்கு இருந்ததாகத் தெரியவில்லை. அரசர்கள் கூட, சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்த பெண்ணை அரசியாக்கிக்கொள்வது நடந்திருக்கிறது.

பெண்களுக்குப் படிக்கத் தெரிந்திருந்தது. பெண்கள் பல கோவில்களில் பூசாரிகளாக வேலைசெய்தனர். ஒரு எகிப்தியப் பெண்ணின் சவப்பெட்டியில் ‘தொழில் - கிரேக்க மொழி இலக்கண ஆசிரியை’ எனக் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா - அவரே ஒரு பல்மொழி வல்லுநர் - நிறுவிய புகழ்வாய்ந்த நூலகத்தில் பெண் விரிவுரையாளர்கள் பலர் இருந்தனர். இவற்றையெல்லாம் ஒரு முடிவிற்குக் கொண்டுவந்தது கிறித்தவமே என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஹைபாஷியா என்ற பெண் தத்துவ ஞானி கிறித்துவத் துறவிகளால் கொல்லப்பட்டது எகிப்தில் பெண் சுதந்திர இழப்பின் தொடக்கம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

எகிப்திய ஓவியங்கள்

(நான் ஓவியங்களைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகள்)

அன்றைய எகிப்தியர், வாழ்க்கை மரணத்திற்குப் பிறகும் வாழப்படுகிறது என நம்பினார்கள். வாழப்படும் இடமும் உலகமும் வேறு அவ்வளவுதான். அவர்கள் மிகவும் விரும்பியவை கட்டடக் கலையும் சிற்பக் கலையும்தாம். ஓவியங்கள் அவர்களுக்கு இரண்டாம்பட்சம். ஆனால் ஓவியங்களை வரைவதற்கு அதிகம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவர்கள் கல்லறைச் சுவர்களை அழகுசெய்வதற்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பணக்கார எகிப்தியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்களை வரையச் செய்தனர். ஆனால் அவற்றில் தப்பியவை மிகச் சிலவே.

எகிப்திய ஓவியங்களில் பெரும்பாலானவை திக்ஷீமீsநீஷீ ஷிமீநீநீஷீ என்ற முறையில் வரையப்பட்டிருக்கின்றன. இந்த முறையில் ஓவியம் தண்ணீரில் கலந்த வண்ணக் கலவை கொண்டு சுண்ணாம்பு பூசி நன்றாக உலர்ந்த சுவரில் தீட்டப்படுகிறது.

எகிப்தியர்கள் மனிதர்களை வரைந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களையும் ஆடைகளையும் மிகச் சிறப்பாக வரைந்தார்கள். எகிப்திய ஓவியக் கண்கள் நம்மை எப்போதும் நேராகப் பார்க்கின்றன - முகங்கள் பக்கவாட்டில் வரையப்பட்டிருந்தபோதிலும். இந்த ஓவியங்கள் காட்சியின் ‘உயிர்’ என்று எதை நினைக்கின்றனவோ அதை வலியுறுத்துகின்றன. உதாரணமாக ‘அழுகின்ற பெண்கள்’ ஓவியத்தில் அதன் உயிர் பெண்களின் கண்ணீர். எனவே ஓவியத்தில் இருக்கும் எல்லாப் பெண்கள் கண்களிலிருந்தும் மூன்று அல்லது நான்கு தாரைகளில் கண்ணீர் வெளிவந்து அவர்கள் கன்னங்களில் மூன்று அல்லது ஐந்து துளிகளாக இறங்குகிறது.

எகிப்தியர்கள் பறவைகளையும் மிருகங்களையும் வரைந்திருக்கும் விதம் அசாதாரணமானது. நெபாமன் கல்லறையில் வரையப்பட்டிருக்கும் பறவை வேட்டைக் காட்சியில் வேட்டையாடும் மனிதனும் அவன் மனைவியும் மகளும் விரைத்து நிற்பதுபோல நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதே ஓவியத்தில் பாய்ந்து பறவையைப் பிடிக்க முயலும் பூனை உயிருள்ளது. பறவைகளும் வண்ணத்துப் பூச்சியும் பறப்பது என்றால் என்ன என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் நமக்கு விளக்குபவை.

இயற்கையை அவர்கள் உன்னிப்பாகப் பார்த்து அதை வரைய முற்பட்டது அதிசயம் தருவது. ஆனால் அவர்கள் ஓவியங்களை அணுகிய விதம் வித்தியாசமானது. அவர்கள் தங்கள் நினைவின் துணைகொண்டு வரைந்தார்கள். அவ்வாறு வரைவதற்கு அவர்கள் சில மாற்ற முடியாத விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள் என்பதும் தெளிவு. (உட்கார்ந்துகொண்டிருக்கும் கடவுளர்கள் அவர்களது கைகளை முட்டுகளின் மீது வைத்திருக்க வேண்டும்; ஆண்கள் உருவங்கள் எப்போதும் பெண்ணுருவங்களைவிட நிறம் மட்டாக வரையப்பட வேண்டும்.) இந்த விதிகள் எதை வரைந்தாலும் அது தெளிவாக இருக்க வேண்டியதையும் எதைப் பார்க்கிறோம் என்பதைப் பார்ப்பவனை உணரச்செய்ய வேண்டும் என்பதையும் கோடிட்டிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

தீப்ஸ் நகரத்தில் இருந்த ஒரு கல்லறைச் சுவரில் வரையப்பட்ட ஒரு குளம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் ஓவியம். தற்போது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இந்த ஒவியத்தில் பல வகை மரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மரங்கள் ஓவியத்தின் விளிம்புகளில் ஒரு மாலை போலக் குளத்தைச் சுற்றியிருக்கின்றன. ஒரு மரத்தை அதனைத் தரையிலிருந்து பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்பதைச் சித்தரிப்பதே சரியாக இருக்கும் என்பதை இந்தக் கலைஞன் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆனால் குளத்தைத் தரையிலிருந்து பார்ப்பதுபோல வரைந்தால் குளத்தில் இருக்கும் பறவைகளை சரியாகச் சித்தரிக்க முடியாது என்று அவன் நினைத்திருக்கலாம். ஒருவேளை குளத்தை அவ்வாறு வரைவது ஒரு விதியாகக் கூட இருந்திருக்கலாம். எது எப்படியோ குளம் ஓவியத்தின் நடுவில் ஒரு செவ்வகம்போல வரையப்பட்டிருக்கிறது. வானத்திலிருந்து ஒரு குளத்தைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனால் குளத்தின் உள்ளிருக்கும் பறவைகளும் பூக்களும் குளக்கரையிலிருந்து பார்த்தால் எப்படித் தோன்றுமோ அப்படித் தோன்றுகின்றன.

எனக்கு இந்த ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையில் (ரத்தின நாயக்கர் & சன்ஸ்?) வரையப்பட்ட ஓவியங்களின் நினைவுவருகிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வெளிவந்தது சென்ற நூற்றாண்டின் முந்தைய ஆண்டுகள் என எண்ணுகிறேன். எகிப்திய ஓவியங்கள் வரையப்பட்டது ஏறத்தாழ 3400 வருடங்களுக்கு முன்னால். நமது தஞ்சாவூர் கிருஷ்ணன்போல எகிப்திய ஓவியங்களிலும் ஓவிய நாயகன் (அல்லது நாயகி) கிட்டத்தட்ட ஓவியம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். மற்றவர் அனைவரும் வாமனர்கள்.

எகிப்திய ஓவியங்களில் என்னைக் கவர்ந்த இன்னும் இரண்டு ஒவியங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.

நீர் யானை வேட்டை என்றொரு ஓவியம். இது 4500 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்டது. ஓவியத்தின் நாயகன் கல்லறையின் துயிலும் மனிதன். அவனுக்கும் மேலே பேபிரஸ் மரம் ஒன்று. மரத்தில் வேட்டையாடும் சிறிய பிராணிகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. பறவைகள் அவற்றைக் கண்டு அங்கும் இங்கும் பறக்கின்றன. நாயகன் காலடியில் படகு. முன்னால் மற்றொரு படகில் வேட்டையாடுபவர்கள். பின்னால் ஒரு படகு. படகுகளுக்குக் கீழே அல்லாடும் பல மீன்கள், நீர் யானைகள். நீர் யானைகளும் மீன்களும் ஒரே அளவு. இந்த ஓவியத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் தாங்கள் உயிர் உள்ளவை என்பதை நமக்கு அறிவுறுத்திக்கொண்டிருக்கின்றன. நாயகன் நடுவில் விரைத்து நிற்கிறான். மற்றவை அனைத்தையும்விடப் பரிமாணத்தில் பெரியவனாக. ஆனால் அவன் இந்த உலகில் இல்லாதவன் என்பது நமக்கு ஓவியத்தைப் பார்த்த உடனேயே தெரிந்துவிடுகிறது. வாழ்க்கையின் பருவ மாற்றங்களை அவன் தொடர்ந்து மரணத்திற்குப் பின்னால் பார்த்துக்கொண்டிருக்கிறான். வரைந்தவன் இங்கு உழல்பவன். அவன் தான் பார்த்தவற்றை ஓர் உயிர்ப்போடு வரைந்திருப்பதால் இந்த ஓவியம் இறவாத் தன்மை பெறுகிறது.

ஆற்றைக் கடக்கும் பசுக்கள் என்பது அடுத்த ஓவியம். இந்த ஓவியத்தில் பசுக்கள் முன்னால் மாடு மேய்ப்பவன் செல்கிறான். அவனது தோளில் ஒரு கன்றுக்குட்டி. தோளில் இருக்கும் பாரம் அவனை அழுத்துகிறது. கன்றுக்குட்டி பயத்தில் தலையைத் திருப்பித் தனது தாயைப் பார்க்கிறது. பசுக்களின் தலை அசைவுகள் அவை முன்னோக்கிச் செல்கின்றன என்பதை நமக்கு அறிவிக்கின்றன. இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு அசாதாரணத் திறமை படைத்தவன் என்பதில் ஐயம் இல்லை.

எகிப்தைப் பற்றிப் பேசும்போது நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீர் யானை வேட்டைக்கும் தீப்ஸ் நகரக் குளத்திற்கும் உள்ள இடைவெளி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள். நமக்கும் ராஜராஜ சோழனுக்கும் உள்ள இடைவேளை.

எகிப்திய இலக்கியம்

எகிப்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு இலக்கியமோ தத்துவமோ நம்மைச் சேர்ந்து வந்து அடைய வில்லை. 3500 நாகரிகத்திலிருந்து ஒரு இதிகாசம்கூட நமக்குக் கிடைக்கவில்லை. ‘ஆசிரிஸின் கதை’ என்னும் ஒரு கதைதான் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது. இது ஆசிரிஸிஸ் அவனது சகோதரன் ஸெத் என்பவனால் கொல்லப்பட்டது, அவனது மனைவி சவத்தைத் தேடி அலைந்தது, சவம் இருக்கும் பெட்டியைக் கண்டுபிடித்தது அவள் துக்கம் காத்தது, தனது மகன் ஹொரஸை வளர்த்து ஸெத்தைப் பழிவாங்கத் தூண்டுவது, அவனுக்கும் ஹொரஸுக்கும் இடையில் நடக்கும் போர்- நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர் - இன்றுவரை முடியாமல் நடப்பது போன்றவை பற்றிப் பேசுகிறது.

ஒரு பழைய எகிப்தியக் கவிதை - நமது எம்ஜியார் படப் பாடல்போல் இருக்கிறது. ஆனால் முதல் இரண்டு வரிகள் உண்மையான கவிதை வரிகள்.

நான் உனது கண்ணாடியாக இருக்க விரும்புகிறேன்

நீ என்னை எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பாய்

நான் உனது ஆடையாக இருக்க விரும்புகிறேன்

நீ என்னை எப்போதும் அணிந்துகொண்டிருப்பாய்

நான் நீராக இருக்க விரும்புகிறேன். நீ என்னில் குளிப்பாய். நான் வாசனைப் பூச்சு, அது உன் உடலில் பரவும்.

நான் மார்க்கச்சு, அது உன் மார்பை அழுத்தும்.

நான் மணிகளாவேன், அவை மாலையாய் உன் கழுத்தைச் சுற்றும்.

நான் உன் கால் செருப்புகள், என்னை நீ மிதிப்பாய்.

உள்ளடக்கம்