|
அந்த இரண்டு நாட்களாக மாதவி கல்லூரிக்குப் போகவில்லை. என்ன நோய்
நொடியென்றாலும்
கல்லூரிக்குத் தவறாமல் போகின்றவள். கல்லூரியிலிருந்து நண்பிகள் வந்து
விசாரித்துக்கொள்கிறார்கள். குசுகுசுவென எதோ பேசிக்கொள்கிறார்கள்.. மாலையில் கூட
ரியுசன் வகுப்புகளுக்கும் போகவில்லை.
மாதவியின் நடவடிக்கைகளைச் சிவசுப்பிரமணியம் கவனித்துக்கொண்டிருந்தார். அவளில் எந்த
நோய்நொடியும் அவருக்குத் தெரியவில்லை. தாயில்லாத பிள்ளை... எதாவது தன்னிடம்
சொல்ல முடியாத... கடுமையாக யோசித்து மெதுவாகக் கேட்டேவிட்டார்.
“ஏன் மாதவி? கொலிச்சுக்குப் போகேல்லை? எக்ஸாமுக்காக ஸ்டடிலீவு விட்டிருக்குதே?”
“இல்லை! தலையிடி!”
“ரெண்டு நாளாய் தலையிடியே? இந்தத் தலையிடி காய்ச்சலை நம்பேலாது. ஆளையே முடிச்சிடும்!”
சொன்னவர் அவளின் கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தார். “காய்ச்சலில்லை... வேர்க்குது என்ன சாப்பிட்டனி?”
“மகள் இரவும் சாப்பிடேல்லை. காலையும் சாப்பிடேல்லை. சாப்பாடு அப்பிடியே இருக்குது!”
கிணற்றடியில் சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டுவந்த சமையற்காரி சொன்னாள்.
“ஏன் மாதவி? சாப்பிடேல்லை... பசியில்லையே...?”
மாதவி நிமிர்ந்தாள். கலங்கிய கண்களிலிருந்து நீர்க்கோடுகள் வழிந்தன.
சிவசுப்பிரமணியம் பயந்தேவிட்டார். மாதவியின் தோளைத் தொட்டார். அணைத்துக்கொண்டார்.
தோளில் சரிந்தவள் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்க அவர் பதறினார்.
“என்ன மாதவி? ஏன் மாதவி?
“எனக்கு வருத்தம் ஒன்றுமில்லையப்பா!”
“அப்ப ஏன் சாப்பிடேல்லை? ஏன் அழுறாய்?”
“ஆர்மிதான்!” விக்கி விக்கி அழுதாள்.
“ஆர்மி ஆர்மி என்ன செய்தவங்கள்?”
“போக வர விடுறாங்கள் இல்லை!”
கல்லூரிச் சீருடையில் போகும்போது சோதனைச் சாவடிகளில் சோதனையிடுவதில்லை. ஏறியே
சைக்கிளில் செல்லலாம். ஆனால் அவளை மட்டும் “அவன்” விடமாட்டான். மறித்துச் சிரித்தபடி
கொண்டு செல்லும் அவளின் பை முழுவதும் சோதிப்பான். ஒவ்வொரு கொப்பியாகப்
புத்தகமாக எடுத்துப் பார்ப்பான். அடையாள அட்டையைப் பார்த்து “லக்சனாய்”, “நல்ல வடிவு”
என்பான். வரிசையில் அவளுக்குப் பின்னால் வருகிறவர்களைச் சோதிக்காமல் அனுப்பிவிட்டு
அவளையே சோதித்துக்கொள்வான். மற்றவர்களும் நிம்மதியாய் எதையும் கவனிக்காத மாதிரி
போய்விடுவார்கள்.
வர வர அவன் சேட்டைகள் கூடின. இரண்டு நாட்களுக்கு முன் மாதவியின் கையைப் பிடித்து
“நான் உன்னைக் காதலிக்கிறது” என்று தட்டுத்தடுமாறி எங்கோ பொறுக்கிய தமிழ்ச்
சொற்களைச் சொன்னான். அவளுக்குப் பயத்தில் கண்கலங்கி உடம்பு நடுங்கியது. பின் கையை
ஒருமாதிரி விடுவித்துக்கொண்டு போய்விட்டாள். கல்லூரியில் இருப்புக்கொள்ளவில்லை.
மதியம் நண்பிகள் சிலரைத் துணைக்கழைத்துக்கொண்டு திரும்பினாள். சாதாரண உடையில் அவள்
வரவை எதிர்பார்த்துக் காத்திருந் தான். வந்ததும் மீண்டும் அவள் கையைப் பிடித்தான்.
நண்பிகளும் நிற்க அவர்களை முறைத்துக் கலைத்தான். அவர்கள் சற்றுத் தள்ளிப்போய்
நின்றார்கள்.
அவளது கையைவிட்டுத் தோளைப் பிடித்துக் கொண்டே சிரித்தவன் உச்சரிப்புச்
சுத்தத்துடன் அதையே திரும்பவும் சொன்னான். அவள் விறுவிறுவென வந்துவிட்டாள்.
காவற்கூண்டுக்குள் நின்றவன் “ஆதரே மகே ஆதரே” என இராகமிழுத்துப் பாடினான்.
சகலமும் கேட்ட சிவசுப்ரமணியம் பெருமூச்சு விட்டார். அவர் எதோ நடந்துவிட்டதோ எனக்
கலங்கியவர் நிம்மதியானார்.
“அவங்கள் அப்படித்தானம்மா... வடிவான பெட்டைகளென்றால் விடவேமாட்டாங்கள். நீ
பயப்பிடாதை. இனி உன்னை நான் கொண்டுபோய்ச் கொலிச்சுக்குவிடுறன்!”
அதன் பிறகு சொன்ன மாதிரி அவரே கல்லூரிக்குக் கொண்டுபோய்விட்டார். அவன்
இருவரையும் முறைத்துக்கொண்டு நின்றான். சிவசுப்ரமணியத்துக்கு மாதவியை நினைத்துக்
கவலையேற்பட்டது. நாட்டுப் பிரச்சினையில் மனைவியையும் ஒரு மகனையும் இழந்தவர்.
அதனால்தான் மூத்த மகனை அவன் விரும்பாமலும்கூட வற்புறுத்திக் கனடாவிற்கு
அனுப்பிவிட்டார். மூத்த மகனிற்குத் தொலைபேசியில் சொல்ல அவன் உடனடியாக இருவரையும்
கொழும்புக்கு வருமாறு வற்புறுத்தினான். சிவசுப்ரமணியத்துக்கும் வேறு வழி
தெரியாததால் ஒத்துக்கொண்டார். வாசலில் ஆள் அரவம் கேட்க எழுந்து வெளியே வந்தார்.
நண்பரான தம்பிதுரையும் சில இராணுவ வீரர்களும் வந்து கொண்டிருந்தனர். தம்பிதுரையின்
சிரித்த முகம் பேயறைந்ததுபோலிருந்தது.
“மிஸ்டர் சிவசுப்ரமணியம் இவர்கள் உங்களோடு முக்கிய விடயம் எதோ பேசப்போகினமாம்”
தம்பிதுரை இழுத்து இழுத்துச் சொன்னார்.
“அப்பிடி என்ன விடயம்...?” சிவசுப்ரமணியம் நெற்றியைச் சுருக்கினார்.
“நான் நேராகவே விடயத்துக்கு வாறன். இவர் பெயர் லெப்ரீனட் வினோத் மொறகொட.
கண்டியைச் சேர்ந்தவர். அப்பா ஆசிரியர். இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் இந்த
சந்திக்காம்பின் பொறுப்பதிகாரி. எ.யெல். பாஸ் பண்ணியுள்ளார். மாதவியைப் பலமுறை
பார்த்திருக்கிறாராம். அவளை விரும்புறாராம். இங்கேயே சிம்பிளாய்க் கலியாணத்தை
வைக்கலாமாம்.” தம்பிதுரை மனப்பாடமாக்கி வந்ததை ஒப்பித்துக் கொண்டிருந்தார்.
சிவசுப்ரமணியத்துக்கு எல்லாம் விளங்கியது. பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டார்.
“நாடு இருக்கிற நிலமையில இப்பிடி ஒரு கலியாணம் செய்யவே முடியாது. நான் கலப்புத்
திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனால் இனி இதெல்லாம் சரி வராது. அதோட மாதவிக்குச்
சின்ன வயது. படிக்கிறாள். எனக்கு ஒரே பெண். நான் ஒருபோதும் இதுக்குச்
சம்மதிக்கமாட்டன். இந்த எண்ணத்தோட இங்க வர வேண்டாம்.” சொல்லிக்கொண்டே எழுந்து
உள்ளே போய்விட்டார். தம்பிதுரை அவனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அவன்
கோபத்தோடு போக எழ தம்பிதுரை சமாளித்து வாயில்வரை கொண்டு போய் விட்டுவந்தார்.
திரும்பி வந்தவரில் சிவசுப்ரமணியம் பாய்ந்தார்.
“உனக்கு வேற வேலையில்லையே? புரோக்கர் வேலையே தொடங்கியிருக்கிறாய். சொல்லிச்
சமாளிக்காமல் இங்க கூட்டிக்கொண்டு வாறாய்!?”
“நான் என்ன செய்யிறது சொல்லு? சிங்களம் எனக்கு நல்லாத் தெரியுமென்று யாரோ
சொல்லீட்டாங்கள். மாட்டனென்று சொல்ல முடியுமே? பிறகென்ன கூட்டிக்கொண்டு வந்தன்.
நீ எதாவது அமைதியாய்ச் சொல்லி இருக்கலாம். வெடுக்கென்று எழும்பிப்போனது
அவனுக்குக் கோபமாயிற்று. ஆயுதம் வைச்சிருக்கிறவங்களோடு பகைக்கக் கூடாது.”
“எல்லாத்துக்கும் ஒரு அளவு வேணும். முதல்ல ரோட்டிலதான் அலுப்புக் குடுத்தான்.
பிறகு வீட்டுக்குள்ளயும் வந்திட்டான். அதுதான் எனக்குத் தாங்கேலாமல் இருக்கு.
குட்டக் குட்டக் குனியக் கூடாது.”
“சரி சிவம் ஆனா அவங்களுக்கு அடிமையாய் இருக்கிறம். வெட்டித்தாட்டுருவாங்கள்.
நடக்கிறதுகளைப் பார்க்கிறாய்தானே? எதுவும் செய்வாங்கள். தட்டிக்கேட்கிறதுக்கு
ஆளில்லை!”
“மாதவி எ.யெல். எடுத்தவுடன கொழும்போட போய் அப்படியே மகனோடக் கனடாவில
செட்டிலாகப் போறன். பிறகெதுக்கு இவங்களுக்குப் பயப்பிட வேணும்?” சிவசுப்ரமணியம்
சிரித்தார்.
“அப்படியில்லை சிவம். உனக்குக் கனடா போகிற வசதியிருக்குப் போறாய். நாங்கள் என்ன
செய்யிறது? எல்லாரும் இப்படி எடுத்ததுக்கெல்லாம் ஊரைவிட்டு ஓடினால் வசதியில்லாத
சனம் என்ன செய்யிறது? எங்கட சுயநலங்களாலதான் இன்றைக்கு இப்படி இருக்கிறம். இருபது
லட்சமாயிருந்த எங்கட சனத் தொகை இன்றைக்கு எத்தனை லட்சமாய்க் குறைஞ்சிட்டது. எங்கட
பலமே போய்விட்டது. இனி எப்படி உரிமை கேட்க முடியும்?”
“இப்படியெல்லாம் ஒருகாலம் சிந்திச்சனான்தான். அதுக்குக் கிடைச்ச பலன் என்ர
மனிசியையும் மகனையும் அநியாயமாக இழந்து நிற்கிறன். இனி மாதவியையும் இழக்க
முடியாது.”
‘பெரிய காம்பில போய் சொல்லுவம். வா!”
“போடா போ! பெரிய காம்பில சொன்னவுடன நடவடிக்கை எடுக்கப்போறாங்களே அப்படியென்ரா
இன்றைக்கு எத்தனை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேணும்? நாங்கள் அடிமையாய்
இருக்கிறதைத்தான் விரும்பிறாங்கள்.”
“இதுக்கு என்னதான் வழி?”
“எனக்குத் தெரியாது!”
விடயம் கேள்விப்பட்டு அயலவர்கள் பலர் கூடியிருந்தனர். எல்லோர் முகங்களிலும் பயமும்
சோகமும் அப்பியிருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அபிப்பிராயப்பட்டார்கள்.
“என்னதுக்குப் பயப்பிட வேணும்...?” சிவசுப்ர மணியத்துக்கு உள்ளுக்குள்
பயமாயிருந்தாலும் மாதவிக்காகப் பயமில்லாததுபோலச் சாதாரணமாய்க் கேட்டார்.
“இரவில வந்தா என்ன செய்யிறது? தனிய இருக்கிறனியள். என்ன செய்யேலும்? ஏதாவது
ஆயத்தமாய் இருக்க வேணும்!”
“நிறையப் பேர் இருந்தால் என்ன பாதுகாப்போ?” சிவசுப்ரமணியம் சிரித்தார்.
“சிரிக்கிறாய்! இனிக் கவனமாயிருக்க வேணும். இரவில நாங்கள் வயதுபோன கொஞ்ச பேர்
வந்து படுக்கப்போறம். என்ன சொல்லுறியள்?” பக்கத்து வீட்டுப் பெரியவர் சொல்லச்
சிவசுப்ரமணியம் அவரை நோக்கிக் கைகூப்பினார்.
“உங்கட அன்புக்கு நன்றி அம்மான். நீங்கள் ஏன் வீணாய்ச் சிரமப்படுறியள்? எதுவுமே
நடக்காது!”
சிவசுப்ரமணியம் சொன்னதை ஒருவரும் கேட்கவில்லை. இரவில் சில வயோதிகர்கள் வந்து
படுத்தனர். அதன் பிறகு தொந்தரவுகள் இருக்கவில்லை. மாதவியின் உயர்தரப் பரீட்சையும்
முடிவடைந்தது. மறுநாள் கொழும்புக்குப் புறப்படவிருந்தனர்.
தூரத்தில் நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. காலை கொழும்பு செல்வதற்கான
ஆயத்தங்களில் களைத்துப்போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சிவசுப்ர மணியம்
விழித்துக்கொண்டார். பக்கத்து வீட்டு முருகேசு அப்பு குறட்டை ஒலியுடன் உறங்கிக்
கொண்டிருந்தார்.
அருகிலும் வழமைக்கு மாறாய் ஆவேசமாய் நாய்கள் குரைக்கத் தொடங்க எழுந்து
உட்கார்ந்தவர் முருகேசு அப்புவைத் தட்ட அவர் பதறியடித்துக்கொண்டு எழுந்தார்.
“என்னடா தம்பி?”
“நாய் குரைக்குது அப்பு !”
“ஒன்றுக்கும் பயப்பிடாதை ஒரு நாள்தானே...? விடிஞ்சா கொழும்போட போயிடலாம்!”
கிழவர் புரண்டு படுத்தார்.
நாய்களது குரைப்பு ஆவேசம் கூடியது. படுத்த கிழவரும் எழுந்து உட்கார்ந்தார். வெளியே
ஆட்கள் நடமாடும் ஒலி கேட்டது. பின் பலர் மதிலேறிக் குதிக்கும் ஒலியும் கேட்டது.
இருவரும் ஒருவரையொருவர் பயத்துடன் பார்க்கக் கதவு பலமாய்த் தட்டப்பட்டது.
“வீடு செக் பண்ணப்போறம். கதவைத்திற!” கொச்சைத் தமிழில் கேட்டுக்கொண்டே பலமாய்த்
தட்டப்பட்டது.
“ஐயோ! ராசமார் எங்களுக்குப் பயமாயிருக்கு. தயவுசெய்து விடிய வாங்கோ!” கிழவர்
நடுக்கத்துடன் கூற, ‘இப்ப திறக்கப்போறதா... இல்லையா
... ?” கதவை உதைத்து
உடைத்தார்கள். பின்புறக் கதவையும் உடைத்து நுழைந்தார்கள்.
மாதவி திடுக்கிட்டு எழ... அவன் நமுட்டுச் சிரிப்புடன் அறைக்குள் நுழைந்தான்.
கையிலிருந்த அதைச் சுவரோரம் சாத்திவிட்டு அவள்மேல் வெறிகொண்டு பாய்ந்தான்.
அலறலுடன் விழுந்தவள் முழுப்பலத்துடன் அவனைத் தள்ளிவிட்டுத் துள்ளியெழுந்தாள்.
சுவரில் சாத்தப்பட்ட அதையெடுத்தாள். அவன் தடுமாறியெழ அதை இயக்கினாள்.
வெடியோசையோடு அவனது மரண ஓலமும் சேர்ந்துகொண்டது.
அப்பிரதேசம் வழமைபோலவே வெடியோசைகளைக் கேட்டுவிட்டுத் தூங்கியது.
நேற்றிரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.
தப்பியோட முனைந்த பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் கடும் மோதல்
ஏற்பட்டது. இம்மோதலில் பெண் பயங்கரவாதி ஒருவர் உட்பட மூவர்
சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஏனைய பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.
இத்தாக்குதலில் ஒரு இராணுவதிகாரி உயிரிழந்தார்
...
காலைச் செய்தியைக் கேட்டுவிட்டு மக்கள் அன்றாடக் கருமங்களை ஆற்றத் தொடங்கினர்.
n
தி. மயூரனின் சுமார் இருபது சிறுகதைகள் இலங்கையின் பிரபல்யமான பத்திரிகைகளான
தினகுரல், வீரகேசரி, சுடரொளி போன்றவற்றில் வெளியாகியுள்ளன. அதில் 2007 தினகுரலில்
வெளியாகிய “வைகறைமேகங்கள்” என்ற சிறுகதை தகவம் அமைப்பு வழங்கும் சிறந்த
சிறுகதைக்கான சான்றிதழையும் “கனகசெந்தி கதா” விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மயூரன் யாழ்பாணத்தில் வசிக்கிறார்
|