|
“எல்லாம் முடிந்துவிட்டது!”. கடந்த வாரத்தில் சென்னைக்கு வருகைபுரிந்த இந்தியத்
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. கோபால்சாமியிடம், ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைமுறைகளையும் அவை தொடர்பாக
எழுந்துள்ள விமர்சனங்களையும் திமுகவுக்கு ‘மகத்தான வெற்றி’யை வழங்கிய அதன்
முடிவையும் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் இது.
செய்தியாளர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள். திரு. கோபால்சாமி நேர்மையான தேர்தல்
அதிகாரி எனப் பெயர் பெற்றிருப்பவர். சர்ச்சைக்கும் கண்டனத்திற்கும்
உள்ளாகியிருக்கிற ஒரு விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘முற்றும் துறந்த’
ஒருவர் சொல்வது போன்ற ஒரு பதிலை ஏன் சொல்ல வேண்டும்? ‘எல்லாம்’ என அவர்
குறிப்பிடுவது எவ்வெவற்றை?
வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் திருமங்கலத்தில் நடைபெற்ற
தேர்தல் முறைகேடுகள் குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார் தேர்தல் ஆணையர்.
ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவில் 89 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது
குறித்தும் - அவற்றில் கிட்டத்தட்ட 40 சதவிகித வாக்குகள் கடைசி ஒரு மணி
நேரத்திற்குள் பதிவானவை - தொகுதி முழுவதிலும் ஆளுங்கட்சியினரால் நடத்தப்பட்ட
பிரம்மாண்டமான அசைவ விருந்துகள் குறித்தும் அவற்றுடன் பறிமாறப்பட்ட மது வகைகள்
குறித்தும் ‘தலை’நகரிலிருந்து மூட்டை மூட்டையாய் வந்திறங்கிய கறுப்புப் பணம்
குறித்தும் ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர் தன் வாக்குரிமைக்கு விலையாக 5000 ரூபாய்
வரையில் கையூட்டுக் கொடுத்ததாகப் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் தேர்தல் ஆணையம்
செய்வதற்கு ஒன்றுமில்லை. அரசு அதிகாரிகளை இடம்மாற்ற உத்தரவிடுவது, எச்சரிக்கை
விடுப்பது, வழக்குப் பதிவுசெய்வது போன்ற சம்பிரதாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட
தமிழகத் தேர்தல் ஆணையர், நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர்போன நரேஷ் குப்தா அவர்களை
ஒழித்துக்கட்டுவதற்காகத் தமிழக அரசும் முதல்வரும் 2006ஆம் ஆண்டு முதல் எடுத்துவரும்
முயற்சிகள் தனி ஆய்வுக்கு உரியவை. தை முதல் நாளைப் புத்தாண்டாக அறிவித்த சாதனைக்காக
கருணாநிதியின் புகழ் பாட நடத்தப்பட்ட ‘கவிதை முற்றம்’ நிகழ்வில் கவிஞர் வாலி,
தேர்தல் ஆணையர் ‘டில்லி கோபால சாமியை . . . புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி’ எனக்
கலைஞரைப் புகழ்ந்ததைப் பதிவுசெய்துள்ள தினத்தந்தி கலைஞர் இந்நிகழ்வை, ‘தொடர்ந்து
21/2 மணி நேரம் ரசித்துப் பார்த்தார்’ எனத் துணைத் தலைப்பிட்டுள்ளது.
திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெற்ற அதே தருணத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்
நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பெரிய அளவிலான விதிமுறை மீறல்கள் நடைபெற்றதாகச்
செய்திகள் இல்லை. ஜார்கண்டின் தாமர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில்
போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சிபுசோரன் தோற்றுப்போனதை இதற்குச் சான்றாகச்
சொல்லலாம். கொலை, ஆள் கடத்தல் போன்ற அதிபயங்கரமான கிரிமினல் குற்றச்சாட்டுகளின்
பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சோரன் பண பலத்தாலும்
அதிகார பலத்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவந்து, தன் பதவியைத் தக்கவைத்துக்
கொள்வதற்காக இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய
கட்டாயத்திலிருந்த சோரனின் அதிகார ஆசைகளுக்குப் பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள்
வாக்காளர்கள். சோரன் போன்ற கிரிமினல் பின்னணி கொண்ட நபர்கள் அரசியலிலிருந்து
அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்னும் ஜனநாயகவாதிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு
தாமர் தொகுதி வாக்காளர்கள் செவிசாய்த்திருக்கிறார்கள். அவரை எதிர்த்து
வெற்றிபெற்றிருக்கும் கோபால் கிருஷ்ண பகதூர், ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா
உருக்காலையில் தொழிலாளியாகப் பணியாற்றியவர். பணத்துக்கோ மிரட்டலுக்கோ அடிபணியாமல்
தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருக்கிற வாக்காளர்களின் செயல் நாடெங்கிலுமுள்ள
ஜனநாயகவாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமங்கலம் தொகுதி வாக்காளர்களும் ஏறக்குறைய அதே அளவு தேசிய கவனம்
பெற்றிருக்கிறார்கள். ஆளும் கட்சியினால் அள்ளி வீசப்பட்ட பணத்துக்கும்
அதிகாரத்திற்கும் அடிபணிந்து தம் வாக்குரிமையை விலை பேசியவர்கள் என்னும் அவப்பெயர்
அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
திமுகவின் தேர்தல் பணிக்குழுத் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டதுமே சர்ச்சை உருவானது.
கட்சியிலோ அரசிலோ அவருக்கு எந்தப் பொறுப்பும் அளிக்கப்படாதபோதும் முதல்வரின்
மகன் என்னும் அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு அத்துமீறல்களில்
ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இன்றுவரையிலுங்கூட எத்தகைய
விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஒரு தருணத்தில் அவரோடு தொடர்பு வைத்துக்கொள்ள
வேண்டாம் என்று முதல்வரே கட்சியினரை வெளிப்படையாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு
அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. அவருக்குப் பின்னால் இருக்கும் அடியாள் பலம், அவரது
நிழல் உலகத் தொடர்புகள், பண பலம், அதிகார வர்க்கத்தின் துணை, அரசின்
உயர்மட்டங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக அழகிரியை
விமர்சிப்பதோ அவரது செயல்களைக் கேள்விக்குள்ளாக்குவதோ சாத்தியமற்றது என்னும் நிலை
உருவாகியிருப்பது ரகசியம் அல்ல.
இரண்டாண்டுகளுக்கு முன்பு ‘கருத்துக் கணிப்பு’ ஒன்றை வெளியிட்டதற்காகத் தினகரன்
அலுவலகத்தைத் தாக்கி அதன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அழகிரிக்கு
முக்கியப் பங்கு உள்ளதென்றும் அந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட
வேண்டியவர் அழகிரிதான் என்றும் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மக்கள்
கண்காணிப்பகம் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியது. அவரைக் கைதுசெய்யக் கோரி
ஆர்ப்பாட்டம் ஒன்றையும்கூட நடத்தியது அவ்வமைப்பு. கட்சி மற்றும் ஆட்சியில்
தனக்குள்ள நிழல் அதிகாரம் காரணமாக அந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகச்
சேர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அழகிரியால் முடிந்திருக்கிறது.
சமீபத்திய குடும்ப ஒற்றுமை ‘வைபவம்’ அந்த வழக்கை யதார்த்தத்தில் முடிவுக்குக்
கொண்டுவந்துவிட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கில்
எதிர்காலத்தில் பெறப்படும் ‘தீர்ப்பு’ எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதைக் குறித்து
விவாதிப்பதேகூடப் பேதமை. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தா. கிருஷ்ணன் கொலை
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அழகிரி, தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட முதல் ஆண்டு
நினைவு நாளில் விடுதலையானதைவிடக் கொலையுண்டவர்களுக்குக் கிடைத்த ‘கவித்து’வமான நீதி
வேறு எதுவும் இருக்க முடியாது.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஒருவரைத் திமுகவின் தேர்தல் பணிக்குழுத்
தலைவராக அதன் தலைமை நியமித்ததுமே தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. கட்சி,
ஆட்சி இரண்டுக்குமான வாரிசுப் போட்டியில் தன் ‘தகுதி’யை நிரூபிக்க முதல்வரின்
மகனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தகுதியை நிரூபிப்பதற்கு அவர் எல்லா
வழிகளையும் பிரயோகித்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே திமுக
40,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெறும் என அறிவித்தார். (எவ்வளவு தீர்க்க
தரிசனம்!) தன்னைப் பற்றி உருவாகியிருக்கும் பிம்பத்தை மாற்றுவதற்குத் தன்
‘வழக்க’மான வழிமுறைகளிலிருந்து விலகி அவர் சில மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்தார்.
திமுகவுக்கு எப்போதுமே ஜனநாயகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளிலும் வன்முறையிலும்
நம்பிக்கை இருந்ததில்லை என்று வெகுதுணிச்சலாக அறிவிப்பதற்கு அழகிரியால் முடிந்தது.
‘வன்முறையற்ற’ வழிகளில் ‘ஜனநாயக நெறிமுறை’களைப் பின்பற்றி வாக்காளர்களிடமிருந்து
எப்படி வாக்குகளை வாங்குவது என்பதைக் குறித்துப் பழம் தின்று கொட்டை போட்ட
திமுகவின் ‘தலைமை’க்குப் பாடம் நடத்துமளவுக்கு அவர் ‘பதினாறு அடி பாயும்
புலிக்குட்டி’யாயிருந்தார். அழகிரி-ஸ்டாலின் சகோதரர்களால் நடத்தப்பட்ட அசைவ
விருந்துகளில் கலந்துகொண்ட வாக்காளர்களுக்கு இலைக்கு அடியில் வைத்துப் பணப்பட்டு
வாடா செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது
அதேபோல் நடத்தப்பட்ட விருந்தில் இலைக்கு அடியில் பணம் இல்லாததைக் கண்டு
ஏமாற்றமடைந்த தொண்டர்களும் வாக்காளர்களும் தகராறு செய்ததாகவும் செய்திகள்
வந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது கோடிக்கணக்கில் நடமாடிய திமுக, அதிமுக பண
மூட்டைகளைக் கையகப்படுத்த இரு கட்சி ரௌடிகளும் பரஸ்பரம் ஆள்கடத்தல், வழிப்பறிக்
கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டதாகவும், தேள் கொட்டிய திருடர்களால் வழக்குப்
பதிவுசெய்ய முடியவில்லை எனவும் களத்தில் இருந்த ஆர்வலர்கள் தகவல் தருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சின்னக் கவுண்டர்
திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. கடன்தொல்லையால்
அவதிப்படும் கதாநாயகி அதைத் தீர்க்க அந்த ஊரின் வழக்கப்படி மொய் விருந்து வைப்பாள்.
விருந்தில் கலந்துகொள்பவர் ஒவ்வொருவரும் சாப்பிட்டுவிட்டு இலைக்கு அடியில் தமது
பங்குத் தொகையை வைத்துவிட்டுப் போவார்கள். இலையை எடுத்துப் போட்டுவிட்டுத்
தொகையை எடுத்துக்கொள்ளலாம். திருமங்கலம் தொகுதியில் நடத்தப்பட்ட கறி
விருந்துகளில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி ‘பங்குத் தொகை’ வைத்தது. அரசு
மட்டங்களில் வழமையானவையாக மாறிவிட்ட சிறிய அளவிலான சலுகைகள் முதல் ‘ஸ்பெக்ட்ரம்’
முதலான பெரிய அளவிலான பேரங்கள்வரை முறைகேடான பல்வேறு வழிகளில் ஆளுங்கட்சியின்
கருவூலத்துக்கு வந்துசேர்ந்திருக்கும் பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள தொகையில் ஒரு
அற்பமான பகுதி பங்காக வைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தைச் சுருட்டிக் குப்பைத்
தொட்டியில் போட்டுவிட்டுப் பங்குப் பணத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்கள்.
திரைப்படத்தில் மொய் விருந்தில் கலந்துகொள்ள வந்த கதாநாயகன் பணத்துக்குப் பதில்
கதாநாயகிக்குத் தாலிக் கொடியை வைத்துவிட்டுப் போவான். வாக்காளர்களுக்கு மொய்
விருந்து வைத்து ஓட்டுக்களை வாங்கிய அழகிரியின் இலைக்குக் கீழே திமுக தலைமை ‘தென்
மண்டல அமைப்பாளர்’ என்னும் ஒரு புதிய பதவியை உருவாக்கி வைத்திருந்தது. முதல்வரின்
புதல்வருக்கு இப்போது தேவையான ‘தகுதி’ வந்துவிட்டது. கட்சிக்கும் ஆட்சிக்குமான
வாரிசுகள் யார் யார் என்பதைத் திமுக தலைவர் திட்டவட்டமாக அடையாளங்காட்டிவிட்டார்.
திமுகவின் அடுத்த தேர்தல் திட்டம் தமிழகத்தைத் திருமங்கலம் ஆக்குவதுதான் என்பது
தெளிவாக்கப்பட்டுள்ளது.
திமுகவை வெற்றிபெறச் செய்ததற்காக அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நடத்தப்பட்ட பாராட்டு
விழாவில் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன்
பேசியதாகத் தினத்தந்தியில் வெளியாகியுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள். ‘அழகிரியையும்
ஸ்டாலினையும் ஒன்றாக ஒரே மேடையில் பார்த்த திருமங்கலம் வாக்காளர்கள் அதற்காகவே
ஆளுக்கு இரண்டு வாக்குகள் போட்டிருப்பார்கள்.’
திருமங்கலம் தேர்தலில் கள்ள ஓட்டுகள்தான் திமுகவின் மகத்தான வெற்றிக்குக் காரணம்
என்கிறார்கள். அன்பழகன் அதைத்தான் உயர்வு நவிற்சியாகச் சொல்லியிருக்கிறாரோ?
பேராசிரியரின் துணிச்சலை நினைத்தால் புல்லரிக்கிறது. பேராசிரியர் உள்ளிட்ட திமுகவின்
நெடுநாளைய ‘தொண்டர்’களுங்கூட ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்னும் மனநிலைக்கு
வந்துவிட்டனரோ? ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு உருவான வலுவான
எதிர்ப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழக எதிர்க்கட்சிகளுங்கூடத் தேர்தல் ஆணையரைப்
பின்பற்றி ‘எல்லாம் முடிந்துவிட்டது’ எனத் தம் கையறு நிலையை ஏற்றுக்கொண்டு
மௌனமாகியிருக்கின்றன. பணம், அதிகாரம் ஆகியவற்றில் ஆளும்கட்சிக்கு ஈடுகொடுக்க
முடியாததால் உருவான மௌனம் இது.
திமுகவின் குடும்ப அரசியல்வாதிகள் திருமங்கலத்தின் வழி இந்திய ஜனநாயகத்திற்குச்
சொல்லும் செய்தி, ஊழலில் மக்களைப் பங்காளிகளாக மாற்றுங்கள் என்பதுதான்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதைவிட ஒரு மோசமான செய்தி இருக்க முடியாது.
|