|
இலங்கையில் உங்கள் பணி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
இலங்கையில் நான் ஒரு சுதந்திரமான (free lance journalist) ஊடகவியலாளராகப்
பணிபுரிந்துவருகிறேன். கடந்த 25 வருடங்களாக ஊடகத் துறையில் செயல்பட்டு வருவதோடு
சரிநிகரின் சகோதர இதழான யுக்தியா (சிங்கள நீதி)வின் ஆசிரியராகவும்
இருந்திருக்கிறேன்.
ஊடகத் துறைக்கு வருமுன் இலங்கையில் செயல்பட்டுவரும் தீவிர இடதுசாரிக் கட்சியான ஜனதா
விமுக்திப் பெரமுனாவில் (ஜே. வி. பி) செயல்பட்டு வந்தேன். 1967இல் எனது 11வது வயதில்
ஜே. வி. பியில் இணைந்தேன். நாங்கள் நடத்திய கிளர்ச்சி காரணமாகத் தேசத்துரோகக்
குற்றஞ்சாட்டப்பட்டு ஏழு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன் பிறகே ஊடகத்
துறைக்கு வந்தேன். அப்போதிருந்து மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறேன்.
ஓர் அமைப்பின் மூலம் சாதிக்க முடியாதவற்றை எழுத்தின் வழியாகச் சாதித்துவிட முடியும்
எனக் கருதினீர்களா?
சிறைக்குச் சென்ற பிறகே நாங்கள் செய்தது மக்கள் புரட்சி அல்ல என்பது எனக்குப்
புரிந்தது. உழைக்கும் வர்க்கத்தினரிடையே எங்களுக்குப் பெரிய அளவிலான ஆதரவு
இருந்திருக்கவில்லை. புரட்சி குறித்த மாற்ற முடியாத, பிடிவாதமான கருத்துகள் எங்கள்
தலைமைக்கு இருந்தன. அதை மாற்ற வாய்ப்பு இல்லை என்பது புரிந்தபோது நாங்கள்
வெளியேறினோம். ஆனால் ஜே. வி. பியில் இருந்தபோது அக்கட்சியின் ஊடகப் பிரிவில்
செயல்பட்டேன். சிறையில் இருந்தபோது தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். ஊடகத்
துறையில் பணிபுரியத் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் சென்று தகவல்களைச் சேகரித்துப்
புகைப்படங்களுடன் விரிவாகச் செய்திகளைத் தருவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
இலங்கையில் ஊடகவியலாளராகப் பணிபுரிவது எப்படிப்பட்டது? சூழலில் ஏதாவது மாற்றம்
இருப்பதாகக் கருதுகிறீர்களா?
இலங்கையின் ஊடகத் துறை இப்போது எதிர் கொண்டிருப்பது போன்ற ஒரு மோசமான சூழலை
முன்னெப்போதும் சந்தித்ததில்லை என்றுதான் கருதுகிறேன். 1981இலிருந்து போர்
தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பல சமயங்களில் தணிக்கைமுறையுங்கூட
இருந்துவந்திருக்கிறது. ஆனால் இப்போது இருப்பதைப் போன்ற அதிகாரபூர்வமற்ற ஒரு
தணிக்கை எப்போதும் இருந்ததில்லை. ஒரே ஒரு உண்மைதான் இருக்க முடியுமென்று அரசு
சொல்கிறது. முன்பு ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் பல நடவடிக்கைகள்
இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது இருப்பதைப் போல அது ஒரு போர் உத்தியாக
இருந்ததில்லை. இந்த அரசு 2005இல் பதவியேற்றவுடன் தனது முதல் உரையில் ஜனாதிபதி
“ஊடகங்கள் ‘மக்களுக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் யாரைத் ‘தேர்வுசெய்ய வேண்டும்’
என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். ‘மக்கள்’ என அவர்கள்
எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு யுத்தம்
நடந்துகொண்டிருக்கும்போது ஊடகங்கள் அரசை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென்று அரசு
விரும்புகிறது. போரின் மறுபக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது, போரின் தீவிரம்
குறைந்துவிடும் என வலியுறுத்தும் பல தலைவர்கள் அரசில் இருக்கிறார்கள். தமிழர்கள்
அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரம் என்பதே இல்லை. அங்கே பல
பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அதிகம்
விற்பனையாகும் தமிழ் நாளிதழான உதயன் முன்பு 25,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது.
இப்போது வெறும் 5,000 பிரதிகளே விற்பனையாகிறது. அங்கே பணிபுரியும் இரண்டு
ஊடகவியலாளர்களும் கடந்த இருண்டு வருடங்களாக அலுவலகத்தைவிட்டு வெளியே வருவதேயில்லை.
கடந்த பல வருடங்களில் இரு தரப்பினராலுமே ஊடகத் துறை
கடும்பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பாதிப்பை
ஏற்படுத்தியதில் அரசுக்குப் பொறுப்பு அதிகம் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் அரசு
சார்பான தொலைக்காட்சி அலைவரிசைகளோ வானொலி ஒலிபரப்புகளோ இல்லை.
கொழும்பில் என்ன நிலை?
யாழ்ப்பாணத்தின் நிலைதான் அங்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிவருகிறது. கொழும்பு
ஊடகம் மௌனம் காக்கிறது. அரசு சொல்வதைத்தான் ஊடகம் வெளியிடுகிறது. பிரபாகரனின்
மாவீரர் தின உரையை ஒரு சிங்கள ஊடகம்கூட வெளியிடவில்லை. பிரபாகரனுடன் மாற்றுக்
கருத்து இருக்கலாம், ஆனால் அதற்காக அவர் சொல்வதைக் கேட்பதற்கு மக்களுக்குள்ள
உரிமையை ஊடகம் மறுத்துவிட முடியாது.
THE SUNDAY LEADER மட்டும் அந்த உரையை வெளியிட்டது. நடேசனின்
பேட்டியையுங்கூட அது வெளியிட்டது. இப்போது அதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க
கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கையில் வாழும் எங்களுக்குக் காசாவில் என்ன நடந்து
கொண்டிருக்கிறது எனத் தெரியும். ஆனால் வன்னியில் என்ன நடக்கிறது என்பது தெரியாது.
இங்கு இதுதான் நிலமை.
லசந்த விக்ரமதுங்க கொலை ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
தி சண்டே லீடர் பத்திரிகை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது என அரசு சொல்கிறது.
சிரிசா டிவி அலுவலகத்தின் மீதான தாக்குதல்கூட அப்படிப் பட்டதுதான். லசந்தாவின்
கொலைக்குப் பிறகு ஊடகம் முற்றிலுமாக மௌனமாக்கப்பட்டுள்ளது. பலர் எழுதுவதை
விட்டுவிட்டார்கள். ஊடகவியலாளர்களில் பலர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். ஒரு
மின் ஊடகம் இனி இயங்க முடியாதென அறிவித்துவிட்டது.
ராஜபக்சே ஸ்டாலினைப் போல் செயல்படுகிறார் என்று சொல்லலாமா?
இலங்கையின் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பு ராஜபக்ச ஒரு மனித உரிமை ஆர்வலராக
இருந்தார். இடதுசாரிகள் இயக்கங்களில் களப் பணியாளராகவும் இருந்திருக்கிறார். பல
தருணங்களில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். பதவியேற்ற பிறகு அவர் ஒரு
சிங்கள தேசியவாதியாக மாறிவிட்டார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டு,
இலங்கையை மலேசியா-இந்தோனேசியாவின் கலவையான ஒரு நாடாக மாற்ற முடியுமா என்று அவர்
நினைக்கிறார். அதிகாரபூர்வமாக இரண்டு கட்சிகள் இருந்தாலும் உண்மையில் ‘பலம்
வாய்ந்த’ ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை என்னும் ஒரு சூழலை உருவாக்க வேண்டுமென
விரும்புகிறார்.
இப்படியொரு சூழல் உருவாக விடுதலைப் புலிகளும் காரணமில்லையா?
உண்மைதான். சிங்களர்களிடம் அவர்களைப் பற்றி ஓர் அச்சம் இருக்கிறது. எப்போதும்
வெடிகுண்டுகளை வீசுவதற்குத் தயாராக இருப்பவர்கள் எனக் கருதுகிறார்கள். இப்போது
அரசு விடுதலைப் புலிகளின் பிம்பமாக மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் 1980களில்
செய்ததையே இப்போது அரசு செய்து கொண்டிருக்கிறது. போரில் வெற்றிபெற வேண்டும்
என்பதற்காக விடுதலைப் புலிகள் செய்தவற்றையே இப்போது அரசும்
செய்துகொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக அல்ல, ராணுவ ரீதியாகவே வெற்றிபெற்றுக்
கொண்டிருக்கிறது தற்போதைய அரசு. அதனால்தான் விமர்சனங்களை ஒடுக்க முயல்கிறார்கள்.
அடிப்படைப் பிரச்சினை என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
அடிப்படையில் சிங்கள மக்களுக்கு நாடு பிரிந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது. அது
போலத் தமிழ் மக்களுக்குத் தங்கள் பகுதிகளை இலங்கை ராணுவம் பிடித்துவிட்டால்
தாங்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக வாழ வேண்டியிருக்குமோ என்கிற பயம் இருக்கிறது.
இரண்டாம்தரக் குடிமக்களாக வாழ வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் உண்மை இருக்கிறதா?
தமிழர்களின் பகுதிகளை ராணுவம் கைப்பற்றும் பட்சத்தில் அந்தப் பகுதிகள் கொஞ்ச
காலத்துக்காவது ராணுவத்தின் பிடியில் இருக்கும். அத்தகைய சூழலில் அவர்களுடைய பயம்
நியாயம் என்றே தோன்றுகிறது. ராஜபக்சேவின் அரசாங்கத்தில் அதிகாரப் பகிர்வைக்
கடுமையாக எதிர்க்கும் சிங்கள தேசியவாதத் தலைவர்கள் இருக்கிறார்கள். ராஜபக்சே
அதிகாரப் பகிர்வு என்று முடிவெடுக்கும் பட்சத்தில் ராணுவமே அதை எதிர்க்கக்கூடிய
நிலை உருவாகலாம். இவ்வளவு பணம் செலவழித்து, இத்தனை வீரர்களை இழந்து பெற்ற வெற்றி
தமிழர்களுக்கு அதிகாரம் கொடுக்கவா என்னும் கேள்வி எழலாம். அப்படியொரு சூழல்
அரசியல்ரீதியாகப் பிரிவுகளை ஏற்படுத்தும். அதிகாரப் பகிர்வைச் சிங்கள மக்கள்
ஏற்றுக்கொள்ளச் செய்வதே நாம் எதிர்காலத்தில் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக
இருக்கும். அரசு, அதை எப்படிக் கையாளப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
லசந்தாவின் படுகொலை குறித்த எதிர்வினைகள் எப்படி இருந்தன?
பெரும்பான்மையான மக்கள் அது குறித்து அதிர்ச்சியடைந்தார்கள் என்றுதான் சொல்ல
வேண்டும். எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அவரது மரணம் பலரையும் பாதித்தது. அவர்
கொல்லப்பட்டிருக்கக் கூடாது என அரசாங்கத்தில் சிலரே நினைத்தார்கள். ஆனால்
ஒட்டுமொத்தச் சூழலையும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால், மக்களின் எதிர்வினை
போதிய அளவு இல்லை. போர் மக்களிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலானோர்
போர் நடக்கும்போது அரசுக்கு எதிராக எழுதக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
இப்போது அமலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஊடகவியலாளர்
விடுதலைப் புலிகளின் தொடர்பு எண்ணை வைத்திருந்தால்கூடக் கைதுசெய்யப்படலாம். தனது
பணி சார்ந்து அவர் அந்த எண்களை வைத்திருக்கலாம் என்பது போன்ற புரிதல்களோ
சலுகைகளோ கிடையாது. இது குறித்து இலங்கையில் இன்று கனத்த மௌனமே நிலவுகிறது.
யுத்த பூமி என்பதால் அயல்நாட்டு ஊடகவியலாளர்களும் அங்கு இருப்பார்கள். அவர்களது
நிலை என்ன?
இங்கிருக்கும் அயல்நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் இல்லை. அவர்கள் அரசு
சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கடந்த சில வருடங்களாக யாழ்ப்பாணத்திற்குச் செல்ல
யாருக்குமே அனுமதி கிடைக்கவில்லை. யுத்தம் நடந்த பகுதிகளுக்கு அவர்கள் ராணுவத்தின்
கண்காணிப்போடுதான் சென்றுவர வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் சிங்கள
ஊடகவியலாளர்களுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை. தமிழ்ப்
பத்திரிகைகளில் சிங்களர் பணிபுரிய மாட்டார். சிங்களப் பத்திரிகைகளில் தமிழர்கள்
பணிபுரியமாட்டார்கள். செய்திகளுக்கும் இதே நிலைதான். ஒவ்வொருவரும் தங்களது
குழுவிற்கானதாக மட்டுமே ஊடகச் செயல்பாட்டை நடத்துகிறார்கள்.
இலங்கையில் நீதித் துறை எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது?
மிக நீண்ட காலமாகவே நீதித் துறை அரசியலாக்கப்பட்டு வந்திருக்கிறது. அவ்வப்போது
சுதந்திரத்தின் கூறுகள் சில தென்பட்டாலும் அவை எவ்வளவு நாள் நீடிக்குமென்று சொல்ல
முடியாது. தமிழர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் பயங்கரவாதிகளுக்காக ஆஜராகிறார்கள்
என்று மிக வெளிப்படையாக இலங்கைப் பாதுகாப்புத் துறை அறிவிக்கிறது. அதனால் நிலமைகள்
எப்படி மாறுமென்று சொல்ல முடியாது.
யுத்தம் முடிந்த பிறகு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஒருவேளை தமிழர்களுக்கு உரிமை கொடுத்து ஒரு ஜனநாயக அமைப்பாகச் செயல்பட அரசு
நினைக்கலாம். வடக்கில் எதேச்சதிகாரமும் தெற்கில் ஜனநாயகமும் என்னும் இரட்டை நிலை
நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடிக்காது. அதனால் முழு தேசமும் ஜனநாயகப் போக்கு
உருவாகலாம். இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. தற்போதைய அரசு, சிங்களப் பேரினவாத
அரசாக மாறி வலுவான ஒரு கட்சி ஆட்சியை நிறுவவும் முயலக்கூடும்.
n
சுனந்த தேசப்ரிய இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஊடகவியலாளர்களில் முதன்மையானவர். 1971
சிங்கள இளைஞர்கள் அரசுக்கெதிராகக் கிளர்ந்ததெழுந்தபோது அனுராதபுரம் மாவட்டத்தில்
கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தவர். அதன் காரணமாக ஏழு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில்
இருந்தவர். சிறை மீண்ட பின்பு ஊடகவியலாளராகவும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக
உரிமைகள் செயல்பாட்டுவாதியாகவும் இடையறாது பணிபுரிந்து வருபவர். Peace With
Democracy என்ற சமாதான முன்னணியை 1993இல் கட்டி எழுப்பியவர்.
இலங்கையின் புகழ்பெற்ற சுதந்திர ஊடக இயக்கத்தின் நிறுவநர்களில் ஒருவர். 1989இல்
சரிநிகர் இதழின் சகோதரப் பத்திரிகையாக அமைந்த யுக்திய (சமாதானம்) என்ற சிங்கள
மாற்றுப் பத்திரிகையை நிறுவி 10 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சிங்கள
மொழியின் சிறந்த பத்தி எழுத்தாளராகக் கருதப்படும் சுனந்த தேசப்ரிய சர்வதேச ஊடக
அமைப்புகள் பலவற்றின் பிரதிநிதியாகவும் பணிபுரிகிறார்.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்த,
பத்திரிகை சுதந்திரத்தின்மீது நம்பிக்கைகொண்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள் பலரையும்
போலவே சுனந்தவும் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
இந்நேர்காணல் காலச்சுவடுக்காகப் பிரத்யேகமாகப் பதிவுசெய்யப்பட்டது.
|