Google   www kalachuvadu.com

கட்டுரை:
பிரசுரித்துப் பாழாய்ப் போனவர்களின் வரலாறு
சிவநம்பி சண்முகன்

அதிகாரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்குமான உறவு ஒருபோதும் சமாந்தரமானதாக இருந்ததில்லை. வரலாறு முழுக்க அவை எப்போதுமே நேரெதிரானவையாகவே இருந்துவந்திருக்கின்றன. ஊடக சுதந்திரம் என்பது அடிப்படை மானுட உரிமைகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது உண்மையான ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சம். ஜனநாயகத்தின் அடிப்படைப் பன்மைத்துவம். பல இன மக்கள், பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள் என அது ஆயிரம் பூக்களாய் விரியும்.

Media Protestஇந்தப் பன்மைத்துவம் எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ எங்கெல்லாம் இந்தப் பன்மைத்துவத்திற்கு எதிராக ஏகத்துவம் வலியுறுத்தப்படுகிறதோ அங்கு எல்லாவகையான சுதந்திரங்களுக்கும் நெருக்கடி வந்துவிடுகிறது. இலங்கையில் ஒற்றையாட்சியும் சிங்களவர்களுக்கு மட்டுமேயான அரசியலதிகாரம் என்ற அரசியல் வழிமுறையும் பெரும்பான்மையான ஊடகங்களை அரசே கட்டுப்படுத்தி வருவதும் பன்மைத்துவத்தை மறுதலித்துவிடுகின்றன. அரசு தனது வளர்ச்சிப்போக்கில் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் நியாயப்படுத்துவதற்கும் முதலில் கைவைப்பது ஊடக சுதந்திரத்தின் மீதுதான். இது தொடர்ச்சியாக நடந்துவருகிற ஒன்று. மறுபுறத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்துக்காகக் களமிறங்கிய அமைப்புகளும் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவும் தமது வழிமுறையை நியாயப்படுத்துவதற்காகவும் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கத் தயங்கியதில்லை. இன முரண்பாடு உக்கிரமடைந்த கடந்த மூன்று தசாப்தத்துள்ளும் ஊடகத் துறை இவ்விரண்டு தரப்பினராலுமே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுதான் வந்துள்ளது. எனினும் இன்றைய நிலையில் இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்குச் சாவுமணி அடிக்கிற வேலையை ஊக்கமுடன் செய்துவருவது மகிந்த ராஜபக்சவின் அரசாகும்.

1981இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான நாளிதழான ஈழநாடு எரிப்புடன் ஆரம்பித்த இந்த வன்முறை ஓகஸ்ட் 2006இல் நமது ஈழநாடு நாளிதழின் பணிப்பாளரான சிவமகாராஜாவின் படுகொலைவரை தொடர்வது ஒரு காலகட்டம். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு ஒரு முக்கியமான நாளிதழாகும். இலங்கையிலே யாழில் மட்டும்தான் செழிப்பான ஒரு மாநிலப் பத்திரிகை உலகு இருந்தது. ஈழநாட்டை எரித்தவர்கள் இலங்கைப் படையினர். பிற்பாடு, 1987இல் யாழில் இருந்து வெளியான சற்றர் டே ரிவியூ வார இதழின் பணிமனையின் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசியது.

இந்தியப் படை இங்கு அதிகாரத்தைத் தம் கையிலும் மக்களைத் தம் காலின் கீழும் வைத்திருந்த காலகட்டத்தில் ஐ. சண்முகலிங்கத்தை இழந்திருக்கிறோம். சண்முகலிங்கம் பண்பட்ட ஊடகவியலாளர். இந்தியப் படைகளும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கோலோச்சிய காலங்களில் ஈழநாடு நாளிதழையும் அதன் ஆசிரியர்களையும் மாதக் கணக்காகத் தடுத்துவைத்திருந்து விடிவு என்னும் பெயரில் நாளிதழ் ஒன்றை வெளியிட்டனர். தடுத்து வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்ட ஒருவர்தான் சண்முகலிங்கம். தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட போது புலிகளால் ‘அழைத்துச்’ செல்லப்பட்ட சண்முகலிங்கம் திரும்பி வரவில்லை.

ஈழமுரசு முகாமையாளர் அமிர்தலிங்கத்தை இழந்திருக்கிறோம். முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனை இந்தியப் படையினருடன் இணைந்து ‘பணி’புரிந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் கொன்றனர். 1987இல் இந்தியப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டபோது இந்தியப் படை முதலில் செய்த தாக்குதல் ஈழமுரசு மற்றும் முரசொலி அலுவலகங்களைக் குண்டு வைத்துத் தகர்த்ததுதான்.

Richard De Soysaஇந்து நாளிதழ் இதைப் பற்றிச் செய்தி எழுதிய போது பின்வருமாறு தெரிவித்திருந்தது: “புலிகளின் ஊடகங்களை இந்திய அமைதிகாக்கும் படையினர் முதலில் அமைதிப்படுத்தினர்.”

ஊடக சுதந்திரம் பற்றிய பேச்சே இல்லை!

இந்தியப் படையை வெளியேற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்குவந்த பிரேமதாசவின் காலத்தில் ஊடக சுதந்திரத்தின்மீதான சுருக்குக் கயிறு இன்னும் இறுகியது. 1971இல் அரசுக்கெதிராக நடாத்திய கிளர்ச்சியில் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி மீண்டும் ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்த காலம் இந்த 1987-1989 காலகட்டம்.) அரசுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தார்கள் என்ற காரணத்தால் ஏறத்தாழ 20ஆயிரம் சிங்கள இளைஞர்கள் காணாமல்போயினர். தெருக்கள் தோறும் கழுத்தில் ரப்பர் ட்யர் சகிதம் இளைஞர்கள் எரிந்தார்கள்; ஆறுகள் எங்கும் சடலங்களாக மிதந்தார்கள்.

இவை குறித்துக் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்கும் ஆளானார்கள். 1990இல் சிறப்பான பத்திரிகையாளரும் நடிகரும் கவிஞருமான றிச்சர்ட் டி சொய்சா சுட்டுக் கொல்லப்பட்டார். சரிநிகரின் ஆரம்பகால உறுப்பினரும் செய்தியாளருமான குகமூர்த்தி ‘காணாமல்’போகிறார். கம்யூனிச இதழான அத்தவின் கேலிச்சித்திரக்காரர் யூனுஸ் கத்திக் குத்துக்கு ஆளாகிறார். சுனந்த தேசப்ரிய ஆசிரியராக இருந்த யுக்திய என்கிற சிங்கள மாற்றுப் பத்திரிகையின் அச்சகம் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது.

ஒருவகையில் தென்னிலங்கையின் கொலையுதிர் காலமாக இருந்தது இந்தக் காலம். சிங்கள இளைஞர் மீதான படுகொலைகளால் அழிவுற்றும் நலிவுற்றும் இருந்த மக்களின் கண்ணீரும் குருதியும் 1994இல் சந்திரிகாவின் சிம்மாசனத்திற்குக் கால்களாயின. வலதுசாரிகளும் இடதுசாரிகளும் அவர் சவாரிவிட்ட குதிரைகளாயின. அவருக்கு முன்பிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மக்கள் உதிர்த்த கண்ணீரும் குருதியும் காய்வதற்குள் சந்திரிகா சாட்டையைக் கையிலெடுத்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் மிக அதிக காலத்திற்கு ஊடகங்கள்மீதான தணிக்கை அமலில் இருந்தது. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்குள்ளானார்கள். சண்டே ரைம்ஸின் பாதுகாப்புப் பத்தி எழுத்தாளரான இக்பால் அத்தாஸ் வீட்டிற்கு மரண மலர்ச்செண்டு அனுப்பியது அவருடைய அரசாங்கம். ரோகண குமார என்னும் ஊடகவியலாளரைக் கொன்றுபோட்டனர் அவரது மெய்ப் பாது காவலர்கள்.

2000ஆம் ஆண்டின் புதிய கொலையுதிர் காலம் யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளரான நிமல்ராஜன் படு கொலையுடன் ஆரம்பமானது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு அவர் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்த வேளையில் அவருடைய வீட்டிலிருந்து இருபக்கமும் கூப்பிடு தொலைவில் இராணுவக் காவலரண்கள் இருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிபிஸி, சிங்கள மாற்றுப் பத்திரிகையான ராவய ஆகியவற்றின் செய்தியாளராகவும் வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தவர் அவர்.

சர்வதேச ஊடக அமைப்புகளின் நெருக்கடியால் முன்னெடுக்கப்பட்ட இவரது படுகொலை தொடர்பாக விசாரணைகள் பின்னர் கிடப்பில் போடப்பட்டவையாகிவிட்டன. கடந்த எட்டு வருடங்களிலும் இந்தப் படுகொலை விசாரணைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் எந்தத் திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லை.

Media Protest2002இல் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான பிற்பாடு கிழக்கில் மட்டக்களப்பில் 2004 மே 31இல் வீரகேசரி பத்திரிகையின் கிழக்கு மாகாணச் செய்தியாளராக இருந்த அய்யாத்துரை நடேசன் (50) கொல்லப்பட்டார். 2005இல் தமிழ்நெற் ஆசிரிய ரான தர்மரட்ணம் சிவராம் (தராக்கி) கொல்லப் பட்டார். பம்பலப்பிட்டியில் வைத்து ஏப்ரல் 28 இரவு அவரைக் கடத்திய கொலையாளிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்குப் பின்புறமாக அன்றிரவே அவரது சடலத்தை வீசியெறிந்துவிட்டிருந்தனர். இவரது கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் பிடிபட்டது. அவர் பயன்படுத்திய தொலை பேசியின் சிம் கார்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். மூன்று வருடங்கள் கடந்தும் கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவேயில்லை.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படையினரால் படுகொலைசெய்யப்பட்டது சம்பந்தமான புகைப்படங்களையும் தகவல்களையும் அறிக்கையிட்ட சுப்பிரமணியம் சுகிர்தராஜன் ஜனவரி 2006இல் படுகொலைசெய்யப்பட்டார். இதே காலப்பகுதியில் சம்பத் லக்மால் என்ற சிங்கள ஊடகவியலாளனும் படுகொலை செய்யப்படுகிறான்.

சரிநிகர் பத்திரிகையின் ஊடகவியலாளரும் கவிஞரும் நிலம் என்கிற சஞ்சிகையின் ஆசிரியருமான சந்திரபோஸ் சுதாகர் (32), 2007இல் வவுனியாவில் அவரது வீட்டில் மகனுடன் உறங்கிக்கொண்டிருந்த போது படுகொலைசெய்யப்பட்டார். அவரது வீட்டிற்குச் செல்லும் வழியிலும் இராணுவக் காவலரண் ஒன்று இருந்தது. கொலையாளிகள் அதைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனாலும் இதுவரை கொலையாளிகள் யார் எனத் தெரியவில்லை என்று கைவிரித்துவிட்டது அரசாங்கம். இதே போன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளராக இருந்த ரஜிவர்மன் 2007 ஏப்ரல் 29இல் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சக்தி தொலைக்காட்சிச் சேவையின் செய்தியாளராக இருந்த பரநிருபசிங்கம் தேவகுமார் 2008 மே 28இல் படுகொலைசெய்யப்படுகிறார்.

ஏற்கெனவே கொல்லப்பட்ட நிமல்ராஜன், குகமூர்த்தி ஆகியோருடைய படுகொலைகளோடு வானொலி அறிவிப்பாளராக இருந்த கே. எஸ். ராஜா, தினமுரசு ஆசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அற்புதராஜா நடராஜா (அற்புதன்) ஆகியோரின் கொலைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபிமீது ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

Kuhamoorthyவானொலிக் கலைஞராக இருந்த கணேசபிள்ளை, அன்ரனி ஜேசுதாசன், ரேலங்கி செல்வராஜா, பாலநடராஜ ஐயர் (சின்ன பாலா) ஆகியோருடைய கொலைகள் தொடர்பில் விடுதலைப் புலிகள்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வருகை ஊடக சுதந்திரத்தின் மீதான நெருக்கடியைப் பயங்கரமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தியது.

ஊடக உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கடுமையான தொனியுடனான உரையாடலினூடாகத் தாம் விரும்பியவாறு ஊடகங்கள் செயல்பட நிர்ப்பந்திக்கும் போக்கு ஆரம்பித்தது. அதற்குச் சாத்தியமில்லாதபோது தமது முகவர்களின் ஊடாக அத்தகைய நிறுவனங்களை விலைகொடுத்து வாங்கிவிடுவதும் நடந்தது. நேசன் என்ற ஆங்கிலப் பத்திரிகை அவ்வாறு வாங்கப்பட்டிருந்தது. அதுவும் சாத்தியமில்லாதபோது கொலைக் குழுக்களைக் கையாண்டு எச்சரிப்பது, தாக்குவது, படுகொலை செய்வது என அது வியாபித்தது.

சண்டே ஸ்ரான்டர்ட் என்னும் ஆங்கிலப் பத்திரிகையும் மௌபிம என்னும் சிங்களப் பத்திரிகையும் மகிந்த ராஜபக்சவின் அரசு நடாத்தும் போருக்கு எதிராகவும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்பாகவும் காட்டமாக அறிக்கைகளை வெளியிட்டதோடு சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தி வந்தன. இதனால் சீற்றம் கொண்ட அரசாங்கம் அதற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. மௌபிமவின் ஊடகவியலாளராக இருந்த பரமேஸ்வரி என்பவரை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளியோடு தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டின் கீழ்க் கைதுசெய்து சிறையிலடைத்தது. அப்பத்திரிகையின் நிதி முகாமையாளரான துஸ்யந்த பஸ்நாயக்கா என்பவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் பத்திரிகையை நடாத்த முடியாமல் அவ்விரு பத்திரிகைகளையும் மூட வேண்டிய நிர்ப் பந்தத்திற்கு ஆளானது அந்நிறுவனம். பத்திரிகைகள் மூடப்பட்ட பின்னர் குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படாமலே கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இது நடந்தது 2007 மார்ச்சில். 2006 ஓகஸ்ட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளரான சிவமகாராஜா சுட்டுக்கொல்லப்பட்டதோடு அப்பத்திரிகை மூடப்பட வேண்டியதாயிற்று. அதில் கடமையாற்றிய நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டார்கள்.

K S Rajaஇதேபோல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான உதயன் பத்திரிகை பலமுறை தாக்குதலுக்கு இலக்காகியது. அதன் ஊழியர்கள், பத்திரிகை விநியோகிப்பவர்கள் என ஐந்துக்கு மேற்பட்டோர் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இரு வாரங்களுக்கு முன்னர்க் கொழும்பில் மகாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ரிவி நிறுவனத்தினுள் ஆயுததாரிகள் புகுந்து தாக்கியதுபோல, 2006 மே இரண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள்ளும் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தில் அதன் இரு ஊழியர்கள் கொல்லப்ப&title="Kuhamoorthy"alt="Kuhamoalt="Kuhamoorthy"orthy"#297 5;்டுள்ளார்கள். அலுவலகம் சேதமடைந்தது.

இது தவிரக் கொழும்பில் ஊடகவியலாளர்களான நாமல் பெரேரா, கெய்த் நொயார் போன்றோர் அரசின் கொலைக்குழுக்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியுள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது அடியாட்களுடன் நுழைந்து செய்தியாசிரியரைத் தாக்கியபோது ரூபவாஹினி ஊடகவியலாளர்கள் அமைச்சரை அறையொன்றினுள் வைத்துப் பூட்டிவிட்டனர். பின்னர் அரசத் தரப்பு அமைச்சர்கள் சமரசம்செய்து அமைச்சரும் அவரது அடியாட்களும் விடுவிக்கப்பட்டு வெளியில் அழைத்து வரப்பட்டனர். அமைச்சர் அங்கு நடந்துகொண்ட விதம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடி நிகழ்ச்சியாகக் காட்டப்பட்டது.

பின்னர் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். நீதிமன்றம் அமைச்சரையும் அவரது அடியாட்களையும் கைதுசெய்யப் பிடியாணை பிறப்பித்திருந்தும்கூட வழமைபோல அரசக் காவல் துறை முறைப்பாடுசெய்த ரூபவாஹினி ஊழியர்களையே கைதுசெய்து விசாரணை என்னும் பெயரில் நெருக்கடி கொடுத்தது.

Dharmaratnam Sivaram2008 மார்ச் ஆறாம் திகதி அவுட்றீச் என்கிற இணையதள உரிமையாளரான ஜசிதரனும் எம்ரிவி தொலைக்காட்சியில் பணியாற்றிய அவரது துணைவியாரான வளர்மதியும் கைதுசெய்யப்பட்டனர். ஜசிதரன் ஆரம்பத்தில் சரிநிகர் இதழின் மட்டக்களப்பு செய்தியாளராகக் கடமைபுரிந்தவர். ஏழாம் திகதி அதன் ஆசிரியரான ஜே. எஸ். திசநாயகம் கைதுசெய்யப்படுகிறார். எட்டாம் திகதி சரிநிகர் ஆசிரியரான சிவகுமார் விசாரணைக்கு அழைக்கப் படுகிறார். அவுட்றீச்இல் பணியாற்றிய மேலும் மூன்று ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குள்ளா கின்றனர்.

திசநாயகம், ஜசிதரன், வளர்மதி ஆகியோர்மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமலே நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இக்கால கட்டத்தில் அவர்கள் கடும் சித்திரவதைக்குள்ளானதாக ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவர்களை விடுவிக்கக் கோரி நடாத்தப்பட்ட போராட்டங்களையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் அவர்கள்மீது வழக்குத் தொடர்ந்துள்ளது அரசு.

அதேவேளை அவர்களுக்காதரவான போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையில் அவர்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகத் தொடர் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துவருகிறது.

அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்போரைப் புலிகளுடைய ஆதரவாளர்களாகச் சித்திரிக்கும் வழிமுறையினூடாக அவர்கள் தேசத் துரோகிகள் என நம்பவைக்கிற ஒரு பிரச்சாரத் தந்திரத்தை அரசாங்கம் கைக்கொள்ள ஆரம்பித்தது. போரில் கிடைக்கும் வெற்றிகள் இதற்குப் பலம் சேர்த்தன.

Sivamaharajaஇந்த வழிமுறையைத்தான் எம்ரிவி தொடர்பாகவும் அரசாங்கம் கையாண்டது. புலிகளுக்கு ஆதரவானது என்கிற ஒரு விடயமே அதன்மீதான தாக்குதலை நியாயப்படுத்திவிடும் என அது நம்புகிறது. பயங்கரவாதப் பத்திரிகை, பயங்கரவாதத் தொலைக் காட்சி என்னும் சொற்றொடர்கள் இப்போது அரசின் தாரகமந்திரங்களாகிவிட்டன. இதே வழிமுறையையே ஜனவரி எட்டாம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவைப் படுகொலை செய்யவும் அரசு பயன்படுத்தியது. கொலை நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் விசாரணைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. அது நடைபெறப் போவதும் இல்லை. படுகொலைகள் தொடரப் போவதற்கான அறிகுறிகளே எஞ்சியிருக்கின்றன.

இரண்டு தினங்களுக்கு முன்னரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பேச்சு இந்தப் படுகொலைகள் இத்துடன் நிற்கப் போவதில்லை என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. அவர் சொல்கிறார்:

“பயங்கரவாதிகளைத் தோற்கடித்தாயிற்று. இனி அவர்கள் குறித்து அஞ்சத் தேவையில்லை. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் குறித்து நாம் விழிப்பாக இருப்பது அவசியம். தேசபக்தியைவிட முக்கியமான பத்திரிகை தர்மம் எதுவுமில்லை.”

தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமல்ல; இலங்கையில் அதுதான் முதல் புகலிடம் என்று சொல்லத் தோன்றுகிறது.

புலிகள் ஒழிக்கப்படுவது மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் குறித்துப் பேசுபவர்கள் அவர்கள் தமிழராக இருந்தால் என்ன, சிங்களவராக இருந்தால் என்ன அரசு தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதை உணர்த்த மேலே எடுத்துக்காட்டிய கூற்று போதுமானது.

Tissanayagamஇதுவரையான இருபது கொலைகள் தொடர்பான எவ்விதமான விசாரணைகளும் எவ்வித உண்மைகளையும் வெளிக்கொணராததுபோல, குற்றவாளி களை இனம்காட்டாததுபோலத் தொடரப்போகும் படுகொலைகளின் சூத்திரதாரிகளும் கொல்லப்படுபவர்கள் புலி ஆதரவாளர்கள் என்கிற பிரச்சாரத்தினுள் மறைக்கப்பட்டுவிடுவார்கள்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுமணசிறி லியனகே சொல்வது போல சிறிலங்காவில் இரண்டு காரணங்களால் சுதந்திரமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நாங்கள் நம்புவதில்லை.

முதலாவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலோ உண்மைகளை மூடி மறைப்பதிலோ கடந்த காலங்களில் இந்தப் பக்கச் சார்பற்ற, சுதந்திரமான விசாரணைகள் துயரார்ந்த வகையில் தோல்வி யடைந்துள்ளன.

இரண்டாவது, சுதந்திரமான நிறுவனங்களால் பக்கச் சார்பற்ற சுதந்திரமான விசாரணைகளை நடாத்தும் ஒரு அமைப்பை நியமிக்க எங்களிடம் எந்தவகையான பொறி முறைகளும் இல்லை.

அவலம் தெறிக்கும் வகையில் முகத்தில் அறையும் உண்மைகள் இவை.

n

சிவநம்பி சண்முகன் நீண்டகாலமாக இலங்கையில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
இலங்கை அரசின் துன்புறுத்துதல்களில் இருந்து தப்பி இப்போது ஸ்விட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றிருக்கிறார்.

உள்ளடக்கம்